தமிழ் மாதப்படி எட்டு முடிந்து ஒன்பதாம் மாதம் தொடங்கிய இரண்டாம் நாளே அலருக்கு வளைகாப்பு செய்யப்பட்டு அவளை ஆரணிக்கு அழைத்து செல்ல வேண்டிநாதன், நந்தன், நீலா முதலானோர்ஹாலில் காத்திருக்க.., தங்கள் அறைக்கு சென்ற அலர் விசேஷத்திற்காக கட்டியிருந்த பட்டுப்புடவையை களைந்துபயணத்திற்கு ஏதுவாக இலகுவான உடைக்கு மாறி நகைகளை கழற்றி பத்திரபடுத்தியவள் தலை அலங்காரத்தை பிரித்து விட்டு கன்னத்தில் வைக்கபட்டிருந்த சந்தனத்தை துடைக்க முற்ப்பட அவள் கரத்தை பற்றி நிறுத்திபின்னிருந்து அணைத்து நிறைமாத வயிற்றை தழுவியவாறே அவள் தோளில் முகம் பதித்து ரசித்திருந்த அகனெழிலன்…..
“துடைக்காதடி குள்ளச்சி உன்னை இப்படி பார்க்க ரொம்ப அழகாயிருக்கு இப்படியே இரு..!!”என்று அவள் கரத்தில் அடுக்கப்பட்ட வளையல்களை வருடியவன் அவள் மெளனமாக இருக்கவும்“என்னடி ஆச்சு அமைதியா இருக்க” என்றவாறே கையோடு கொண்டு வந்திருந்த பழச்சாறை அவளுக்குபுகட்ட அலரோ கலங்கிய விழிகளுடன் அவன் கொடுத்ததை குடிக்காமல்,
“கண்டிப்பா இப்பவே போகனுமா மாமா..!!வேணும்னா நான் உங்ககூடவே அடுத்த வாரம் ஊருக்கு போகட்டா…” என்று எதிர்பார்ப்புடன் கணவனை பார்த்தாள்.
எழிலோபதில் ஏதும் கூறாமல் அவள் முன் பழச்சாறை நீட்டியபடி அழுத்தமாக பார்க்க, ‘ஸாரி மாமா‘ என்று உடனே அவசரமாக பருகினாள்.
‘மெதுவாடி‘ என்றவாறே தானே புகட்டியவன் குடித்து முடித்ததும் அவள் இதழ்களை துடைத்து விட்டு, “இப்போ சொல்லு” என்றான்.
“நீங்க எப்போ வருவீங்க கன்ஃபார்மா சொல்லுங்க, இல்லாட்டிநாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாமா..?? இல்லஇப்பவேநீங்களும் என் கூட வரணும்”
“இதை தானேடி நான் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் அங்கவிட சென்னையில ஃபெசிலிட்டி அதிகம் இங்கயே பார்த்துக்கலாம்னு ஆனா உங்கப்பா எங்க கேட்கிறார்.., நான் சொல்றதை கேட்க கூடாதுங்கிறதுக்காகவே ஆரணில தான் பிரசவம்னு பிடிவாதமா இருக்கார்.நல்லவேளை நீலாம்மா ரெண்டு மாசத்துக்கு முந்தி நாள் நல்லா இல்லைன்னு சொன்னாங்க இல்லாட்டி ஏழாம் மாசமே உன்னை கூட்டிட்டு கிளம்பி இருப்பார்…, நீ ஓகே சொல்லு போதும் அவர் என்ன சொன்னாலும் சரி நாம இங்கயே டெலிவரி பார்த்துக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கேட்க..,
‘இல்லை மாமா..‘ என்று அதை மறுத்து அலர் ஏதோ கூற வரவும், வயிற்றில் பதிந்திருந்த அவன்கரங்கள் மகனை உணரஷ்ஷ்ஷ் பேசாதடி என்றவன் அவள் முன்பாக வந்து மண்டியிட்டு, மகனின் பாதம் எழுந்த இடத்தில் முத்தம் வைக்க, தந்தையை உணர்ந்த குழந்தையும்மீண்டும்பலமாக உதைத்துதன் இருப்பை உணர்த்த அதில் எழிலின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
“என்னடி வேணும் உனக்கு..!! என் பையன் கிட்ட பேசகூட விடமாட்டேன்கிற” என்று சலித்து கொண்டவன் அருகே வைத்திருந்த ஃப்ரூட் சாலடை கொடுத்து என் பையனுக்கு பசிக்குதாம் இதை சாப்பிடு அதுவரைக்கும் அவன்கிட்ட பேசிட்டு வரேன் என்று மீண்டும் மகனிடம் கதையளக்க ஆரம்பித்தான்.
‘இப்போ தானே ஜூஸ் குடிச்சேன்‘ என்று முகம் சுருக்கிய அலர்விழிமீண்டும் அவன் முகம் நிமிர்த்தி, “மாமாஅப்பா, அம்மா எல்லாரும் வைட் பண்ணிட்டு இருக்காங்க.., எப்ப வரீங்க சொல்லுங்க இல்லாட்டி நான் கிளம்புறேன்” என்று எழ முற்ப்பட..,
‘ஏய் உட்காருடி’ என்று அவள் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு அவளை எழவிடாமல் செய்தவன் சுடருக்கு அழைத்து “அக்கா ஒரு பத்து நிமிஷம் வைட் பண்ணுங்க நாங்க வந்துடுறோம்” என்று கூறஅலர்விழியால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது..,
அவளின் முறைப்பை சட்டை செய்யாதவன் மீண்டும் மகனிடம் பேசியவாறே முத்தம் பதிக்கவும்..
எனக்குகூட இவ்வளவு கொடுக்கலை என்று முனுமுனுத்தவள், “நீங்க மட்டும் அவனுக்கு முத்தம் கொடுக்குறீங்க ஆனா எனக்குள்ள இருந்தாலும் என் பையனுக்கு என்னால கொடுக்க முடியலை” என்று முகத்தை சுருக்க..,
“ஏன்டி இப்போ நான் அவனுக்கு கொடுக்குறது உன் பிரச்சனையா..?? இல்லை உனக்கு அந்த அளவு கொடுக்கலைங்கிறது பிரச்சனையா..?? என்று அவளை சரியாக கண்டு கொண்டு கேட்க..,
“ரெண்டுமே தான்” என்று இதழ்களை சுழித்தாள்.
“இதான் உன் பிரச்சனையா..??” என்றவாறே அவள் முகம் முழுக்க முத்திரை பதித்தவன், “இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்க நீயும் அவனுக்கு கொடுப்ப” என்றிட..,
“ஏன் மாமா இந்த குழந்தை நீ எதிர்பார்த்தபடி பொண்ணு இல்லைங்கிறது உனக்கு கஷ்டமா இல்லையா..??”
“கஷ்டமா..?? எதுக்கு” என்று புரியாமல் அவளை பார்த்தவன்,
“ப்ச்அமுலு குழந்தையில என்னடி பேதம்..!! நம்மோட முதல் குழந்தை அது பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் கணவன் மனைவியா இருக்க நம்மளை அப்பா அம்மாவா உயர்த்த போற குழந்தை எப்பவும் ஸ்பெஷல் தானே..!! என் பையன்டி அவன்..!! என் பொண்ணுங்களுக்கு முன்னாடி அவன் வரப்போறதுக்கு நான் எதுக்கு கஷ்டபடனும்” என்று அவன் கூறவுமே..,
பொண்ணுங்களா..??? என்று குழப்பத்துடன் அலர்,
“ஆமா அமுலு இவன் நல்லபடியா நம்ம கைக்கு வந்த அப்புறம் எனக்கு ஒன்னு இல்லை ரெண்டு பொண்ணு பெத்து கொடுத்துடு போதும்” என்றான்.
“ரெண்டா..??” என்று அலர் வாயில் கரம் பதிக்க,
“ஏன்டி நான் எப்போ உன்கிட்ட ஒரே குழந்தை போதும்னு சொன்னேன்..??” என்று அவள் நெற்றியில் முட்டியவாறே “அடுத்து எனக்கு கண்டிப்பா பொண்ணு தான் வேணும் அதுவும் உன்னை மாதிரியே…”
என்னை மாதிரியா..??
“ஏன் உங்கப்பாக்கு மட்டும்தான் எல்லா நேரமும் அவரை கொண்டாடுற பொண்ணு இருக்கனுமா எங்களுக்கு எல்லாம் அந்த ஆசை இருக்ககூடாதா..??”
“மா..மா” என்று வியப்புடன் அலர் அவனை பார்க்க..,
“ஆமா என்னோட ரொம்ப நாள் ஆசை இது..!! அதுவும் அன்னைக்கு காலேஜ் ரோட்ல என்னை அடிச்சிட்டு எங்கப்பா என்னை இப்படிதான் வளர்த்தாருன்னு சொன்ன பாத்தியா..!!! அப்போ அந்த ஆசை இன்னும் அதிகமாச்சு.. எனக்கு எல்லா விதத்துலையும் உன்னை மாதிரியே முக்கியமா எப்பவும் அப்பாவை கொண்டாடுற ஒரு பொண்ணு இல்லல்ல ரெண்டு பொண்ணுங்க வேணும்..!!”
ஒருநொடி அவன் விழியில் வழிந்த ஏக்கத்தில் ஸ்தம்பித்தவள் “எனக்கு டீல் டபுள் ஓகே மாமா..!!” என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் நீ என் கூட இருந்தா எத்தனை வேணும்னாலும் பெத்து கொடுக்குறேன் ஆனா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுங்க மாமா.. அப்பு ரொம்ப தேடுவான்” என்றவளின் குரலே அவனைவிட நான் உன்னை அதிகமாக தேடுவேன் என்ற செய்தி உரைத்த அதேநேரம் அவர்கள் அறை கதவு பலமாக தட்டப்பட,
‘நீ இரு‘ என்ற எழில் சென்று கதவை திறக்க சுடர்க்கொடி தான் நின்றிருந்தார்.
“டேய் டைம் ஆச்சுடா, நல்ல நேரத்துல கிளம்பனும் இன்னும் இருபது நிமிஷம் தான் அப்புறம் ராகுகாலம் ஆரம்பிச்சிடும் நாங்க வேளையோட ஊர் போய் சேர வேண்டாமா..?? மாமா வேற லேட் ஆகுதுன்னு ஏற்கனவே மாமியை முறைக்க ஆரம்பிச்சிட்டாரு”
அவளை முறைத்தவாறே “ஏய் நீ தானேடி..” என்று எழில் ஆரம்பிக்கவுமே..,
“ஷ்ஷ் போதும் உங்க சண்டையை அப்புறம் வச்சிகோங்க… அலர் இப்போ உனக்கு கிளம்புற எண்ணம் இருக்கா..?? இல்லையா..??”என்றார்.
“நான் எப்பவோ ரெடி அண்ணி ஆனா மாமா தான் வரமாட்டேன்னு சொல்றாரு”
“அமுலு இன்னும் எத்தனைமுறை தான் இதையே சொல்லிட்டு இருப்ப..? அவன் தான் மூணு மணிக்கு மீட்டிங் இருக்கு இல்லாட்டிகூட வந்திருப்பேன்னு சொன்னானே, முக்கியமான வேலை இருக்கிறதால தான் ஒரு வாரம் கழிச்சு வரேன் சொல்றானே.., ஏன் எங்களை பார்த்தா மனுஷங்க மாதிரி தெரியலையா உனக்கு..??? இதென்ன சின்ன குழந்தை மாதிரி அடம்! டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்கே புரிஞ்சிக்க மாட்டியா..!! ” என்று சலித்து கொள்ள..,
அலரோ கலங்க முற்பட்ட விழிகளை இமைசிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டு எழிலை பார்த்தவாறே, “அது… அப்..அப்படி இல்லை அண்ணி, அது வந்து”என்று தயங்கி நிற்க,
சுடரிடம் கூடையை கொடுத்த எழில் “அக்கா இதுல இவளுக்கு தேவையானஎல்லாமே வச்சிருக்கேன் போகும் போது சாப்பிட கொடுங்க, நான் வரவரைக்கும் கொஞ்சம் இவளை வாட்ச் பண்ணு மாமியை நீலாம்மாவை ஏமாத்திடுவா.., டெய்லி காலையில எக்சர்சைஸ், யோகா சாயாங்கால வாக்கிங் எல்லாமே பண்ண வச்சிடு.., முக்கியமா சாயந்தரத்துலவாக்கிங் முடிச்சிட்டு வந்து கால் வலியை சாக்கா வச்சிட்டு காஃபி கேட்பா குடுக்கவேகுடுக்காதிங்க…, இந்தமாதிரி நேரத்துல ஆசை பட்டதெல்லாம் சாப்பிடலாம்ன்னு நீலாம்மா சொன்னதை வச்சே தேவை இல்லாததையெல்லாம் இழுத்துவிட்டுக்குவா…”
“இல்லை இல்லை அண்ணி அப்படி எல்லாம் இல்லை, மாமா சொல்றதை நம்பாதீங்க”என்று அப்பாவியாக அவள் பார்க்க..,
“என்னடி இல்லை” என்று முறைத்தவன்
“முக்கியமா ஐஸ்க்ரீம் கேட்பா அப்படி கேட்டா அதை வாங்கிட்டு வந்து ஃபுல்லா மெல்ட் ஆனதுக்கு அப்புறம் ஊட்டி விடுங்க”
“ஏதே ஊட்டி விடணுமா..?? ஏன்டா உன் பொண்டாட்டிக்கு கை இல்லையா..?? “என்று சுடர் விசித்திரமாக தம்பியை பார்க்க..,
“ஆமாக்கா அப்படிதான் இல்லாட்டி அன்னைக்கு முழுக்க இது ஒத்துக்கலை அது ஒத்துக்கலைன்னு எதையும் சாப்பிட முடியலைன்னு சுத்தவிட்டு நம்மளை ஒருவழி ஆக்கிடுவா..” என்றிட..,
“அப்போ இப்படிதான் நீ என் தம்பியை சுத்தவிடறியா..?? என்று சுடர் முறைக்கவும்.,
இல்ல அண்ணி மாமா ஏதோ.. என்று அசட்டு சிரிப்போடு எழிலிடம் நகர்ந்தவள், ‘டேய் மாமா இப்படிதான் என்னை போட்டு கொடுப்பியா நான் உன் பொண்டாட்டி அதை மறந்துடாதே” என்று அவனிடம் கிசுகிசுக்க..,
‘எங்கக்கா ஏற்கனவே பசங்க பின்னாடி சுத்தறாங்கடி..’ என்றவன் மேலும் சில நிமிடங்கள் செலவழித்து சுடரிடம் மனைவியை எவ்வாறு பார்த்துகொள்ள வேண்டும் என்னென்ன எந்தெந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை வாசிக்க..,
“ஏன்டா அவ்ளோதானா முடிஞ்சதா..? இல்லாட்டியும்போதும் நிறுத்து..!! நானும் ரெண்டு குழந்தை பெத்திருக்கேன் கர்ப்பிணி பெண்ணை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்கும் தெரியும் ஆனா ஒன்னு நீ சொல்றதை கேட்கிற எனக்கே தலை சுத்துதே, பாவம்டா இவ..!!” என்று அலரை பார்க்க..,
“அக்கா மத்தவங்க எப்படியோ எனக்கு தெரியாது ஆனா இவளை இந்த நேரத்துல கவனிச்சிக்கிறது ரொம்பவே சேலேஞ்சிங் அதெல்லாம் உனக்கு புரியாதுக்கா”
அலர்விழியோ, “இப்போ தெரியுதா அண்ணி மாமா என்னை எப்படி டார்ச்சர் பண்றாங்கன்னு” என்று கேட்க..,
அலரின் காதைபிடித்திழுத்த சுடர், “இல்லை..!! நீ என் தம்பியை எப்படி எல்லாம் படுத்துறன்னு புரியுது” என்று புன்னகையுடன் கூற..,
அசடு வழிய நின்றிருந்த அலரை, ‘அமுலு‘ என்ற நாதனின் குரல் எட்டிய நொடி “இதோ வந்துட்டேன்ப்பா” என்று அவசரமாக குரல் கொடுத்தவள் நாதனின் குரலுக்கு கட்டுப்பட்டு விரைவாக செல்ல முயன்றவளின் கரத்தை பற்றி தடுத்து நிறுத்திய எழில்,
“எத்தனை முறை தான்டி சொல்றது இப்படி அவசரமா கிளம்பாதன்னு.., உங்க அப்பா கூப்பிட்டாருன்னா எந்த நேரத்துல எப்படி இருக்கனும்னு கூடவா தெரியாது உனக்கு ..?? எப்பவுமே ஓட்டம்”என்று கடிய…,
“எதுக்குடா இப்ப அவளை திட்டுற மாமா கூப்பிட்டதும் ஓடற பழக்கம் இப்ப வரை மாறலை…, இன்னும் குழந்தையாவே இருக்கா அவளை போய் எதுக்கு இப்படி பேசுற” என்று சுடர் தம்பியை கண்டிக்க
“ஹ்ம்ம் இப்ப சொன்ன பாத்தியா ‘குழந்தை‘ அதுக்குதான்..!! நான் சொன்னேன், இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு முடியிற வரை இந்த குழந்தைக்கு குழந்தை வேண்டாம்னு ஆனா கேட்டாளாக்கா இவ..!! அன்னைக்கு இவளை விட்டுட்டு மதுரைக்கு ட்ரைனிங் போயிருந்தப்போ அவங்க அப்பா கேட்டுட்டாராம் உடனே குழந்தை வேணும்னு ஒரே அடம்… அப்போதான் அப்படின்னு பார்த்தா இப்போ இந்த நிலையிலும் இவங்கப்பா கூப்பிட்ட மறுநிமிஷமே முன்னாடி போய் நிற்ப்பேன்னு ஓடுறா, நீயே சொல்லு இவ பண்றது சரியா..?? குழந்தையை பத்தின நினைப்பு கொஞ்சமாவது இருக்காடி உனக்கு” என்று சுடரிடம் ஆரம்பித்து அலரிடம் முடிக்க.
“ஸாரி மாமா, இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் கேர்ஃபுல்லா இருக்கேன்”
‘உன் ஸாரியை கொண்டு போய் குப்பைதொட்டியில போடுடி‘ என்று எழில் சீறவும்..,
“டேய் என்னடா இது போதும் நிறுத்து..!! கிளம்புற நேரத்துல விட்டா அவ அழுதிடுவா போல” என்று அலரின் வாடிய முகத்தை பார்த்தவாறே சுடர் கூறவும்..,
அப்போதுதான் அலரின் கசங்கிய முகத்தைகண்டவன் “ப்ச் ஸாரிடி குள்ளச்சி, மெதுவா நடன்னு எத்தனைமுறை உனக்கு சொல்லி இருக்கேன், யார் கூப்பிட்டாலும் என்ன அவசரமா இருந்தாலும் வரேன்னு குரல் கொடுத்துட்டு மெதுவா போகணும் சரியா..??” எனவும் பேறுகாலத்தில் கணவனாக மட்டுமின்றி தாயாய் தன்னை மடிதாங்கும் எழிலின் சிறு சுணக்கத்தையும் எப்போதுமே தாள முடியாதவளுக்கு இப்போதைய அவன் பேச்சில் கண்கள் கலங்கிவிட்டிருக்க இதழ்களை கடித்த வண்ணம் கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள்.
‘ப்ச் ஸாரிடி, ப்ளீஸ்‘ என்று விழவிருந்த அவள் நீர்மணியை துடைத்தவன், ‘குள்ளச்சி உன்கூட வரணும்னு நானும் எவ்ளோ ட்ரை பண்ணேன் ஆனா இம்பார்டன்ட் மீட் அவாய்ட் பண்ணமுடியாது.‘ என்றவன் அவள் உச்சியில் முத்தமிட்டு ‘ப்ளீஸ் சிரிடி‘ என்றிட..,
அப்போது தான் முகம் தெளிந்தவள் இதழ்கள் விரிய எழிலை அணைத்துகொண்டு “கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி கேட்கிறேன் மாமா ஆனா சீக்கிரம் வந்துடனும்” என்று அவனிடம் உறுதி பெற்ற பின்னரே கிளம்பினாள்.
அலரின் உடல்நிலை காரணமாக ஆங்காங்கே நிறுத்தி நான்கு மணி நேர பயணத்திற்கு பின் மாலை ஐந்து மணியளவில் அனைவரும் ஆரணி வந்து சேர.., ஆலம் சுற்றிய பின் உள்ளே நுழைந்த அலர் பயணகளைப்பின் காரணமாக ஹாலில் சோபாவிலேயே தளர்ந்து அமர்ந்து கண்மூட..,
மகளின் பின்னே வந்த நாதன் அலரின் தோய்ந்த தோற்றத்தை கண்டதும், ” என்ன ஆச்சு அமுலு..?? ஏன் இப்படி உட்காந்திருக்க…??” என்று பதட்டத்துடன் கேட்கவும்..,
“ஒண்ணுமில்லைப்பா”
“ஏன்டா ஏதாவது தொந்தரவா இருக்கா திரும்ப வாமிட் வர மாதிரி இருக்கா நாம வேணும்னா டாக்டர்கிட்ட போகலாமா..??”
“அப்போ தூங்குறியா ரூம்க்கு கூட்டிட்டு போகட்டா..??” என்று அவள் கரம் பற்ற முனைய..,
“இல்லைப்பா கார்லயே கொஞ்சநேரம் தூங்கிட்டேன்.., நான் இங்கயே உங்ககூட இருக்கேன்” என்று சகஜமாக அவர் மடியில் தலைவைத்து படுக்க…,
அதை கண்ட நாதனின் கண்கள் நொடியில் பணிந்து போனது… பின்னே அன்று தன் தவறுகளை சுட்டிகாட்டி அதன் பின்னர் தொடர்ந்த மகளின் பாராமுகம் அவரை வெகுவாக பாதித்திருந்த நிலையில் தற்போதைய அவளின் இயல்பு அவரை முற்றிலுமாக நெகிழ்த்தி இருந்தது. அதிலும் திருமணத்திற்கு பின் மகள் முழுதாக எழில் வசம் ஆகியிருப்பதை அவளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உணர்ந்தியிருக்க எங்கே மகளுக்கு இனி தான் வேண்டாதவனாகி போனோமோ என்ற கவலையே அவரை அரித்து கொண்டிருக்க இப்போது மகள் பழைய நிலைக்கு திரும்பி இருப்பதில் நாதனின் மகிழ்ச்சியை வார்த்தையை கொண்டு வடிக்கவும் வேண்டுமோ…!!
மகளின் தலையை வருடி, “அமுலு மதியம் சாப்பிட்டது எல்லாம் வாமிட் பண்ணிட்டியே உனக்கு பசிக்கலையா எதாவது குடிக்கிறியா..??” என்றார்.
“இல்லை வேண்டாம்ப்பா, மாமா எனக்கு தேவையான எல்லாமே பேக் பண்ணி கொடுத்துவிட்டாங்க, அண்ணியும் கார்லயே சரியான நேரத்துக்கு கொடுத்தாங்க அதுவே போதும் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சி சாப்பாடே சாப்பிடுறேன்”
மகளிடம் ஏதோ அசௌகரியம் தென்படுவதை உணர்ந்த நாதன், “அமுலு உனக்கு இதுல வசதியா இருக்கா இல்லாட்டி ரூம்க்கு கூட்டிட்டு போறேன் பெட்ல படுத்துக்கோ வா” என்று அழைக்கவும்..,
“இல்ல பரவால்லபா எனக்கு இங்கயே ஓகே தான்.., ஆனா ரொம்ப நேரம் உட்காந்துட்டே வந்ததுல கால்வலி மட்டும் அதிகமா இருக்கு” என்றவாறே கால்களை சோபாவில் நீட்ட முற்ப்பட..,
‘ஒரு நிமிஷம் இருடா‘ ..,
“ஏன்ப்பா, என்ன” என்று அலர் அவர் முகம் காண..
‘வளர் ஒரு தலைகாணி எடுத்துட்டு வா..!!‘ என்று குரல் கொடுத்தவர் மகளின் தலையை தன் மடியில் இருந்து தலையணைக்கு மாற்றியவர் அலரின் கால்களை பிடித்தார்.
அதில் பதறிய அலர், “என்னப்பா இது..!! என்ன பண்றீங்க” என்று எழுந்துகொள்ள.,
“அதுக்கு நீங்க எதுக்குப்பா என் காலை பிடிச்சிட்டு..” என்று அலர் அவரிடம் இருந்து பாதங்களை அகற்ற முயன்றாள்.
“ஏன் நான் பிடிக்ககூடாதா..??” என்று மகளின் பாதங்களை இதமாக பிடித்து விட்டவாறே,
“இதுல என்ன இருக்கு..?? இந்த நேரத்துல என் பெண்ணை நான் பார்த்துக்காம வேற யார் பார்த்துப்பா..!! ஏன் குழந்தையா இருக்கும் போதும் சரி வளர்ந்த அப்புறம் நீ டான்ஸ் கிளாஸ் போயிட்டு வரும்போது எல்லாம் நான் தானே பிடிச்சி விடுவேன், இப்ப மட்டும் என்ன..??? ” என்று கேட்கவும்..,
“அது குழந்தையா இருக்கும் போதுப்பா இப்ப எப்படி..??”
“இப்போ என்ன..??எனக்கு நீ எப்பவும் குழந்தை தானேமா” என்றவாறே மகளின் பாதங்களை பற்றி இதமாக பிடித்து விட தொடங்கினார்.
தந்தையின் மெய்யன்பில் சிலிர்த்தவளுக்கு தந்தையின் தற்போதைய மாற்றம் அத்தனை நிறைவாக இருந்தது.
“ஆம் வளர்மதியிடம் இப்போதெல்லாம் எந்நேரமும் சிடுசிடுக்காமல் சிரித்த முகத்துடன் பேசுபவர் பல நேரங்களில் வளர்மதியின் ஆலோசனையை பின்பற்றுவதை அலர்விழியோ கண்டிருக்கிறாள் அதேபோல கதிரிடமும் தன் நிலை விட்டு இறங்கி இவரே பேச்சை முன்னெடுப்பதை காண்பவளுக்கு பலநேரங்களில் தந்தையை நிராகரித்து மெளனமாக செல்லும் தம்பியின் மீது கோபம் வரத்தான் செய்யும்.
ஆனால் எழில் கூறியது போல அவனது காயம் ஆற சிலகாலம் எடுக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறாள்.
“போதும்பா வாங்க, எனக்கு தூக்கம் வருது உங்க மடியில படுத்துக்குனும் போல இருக்கு” எனவும் தலையணையில் இருந்து மகளை தன் மடிக்கு இடம் மாற்றியவர், “சரிடா இப்போ என்ன வேணும் சொல்லு அம்மாவை சமைக்க சொல்றேன்” என்றார்.
அலரும் தனக்கு தேவையானதை கூற வளர்மதியை அழைத்து பட்டியலிட்டவர் மகளிடம் அவளின் அன்றாட நாளை குறித்து கேட்க தொடங்கினார்.
அலரும் மடை திறந்த வெள்ளமென காலை எழில் கொடுக்கும் மிதமான சூட்டுடன் கூடிய பசும்பாலில் ஆரம்பிக்கும் அவள் நாள் அதன் பின்பான வாக்கிங், உடற்பயிற்சி, காலை உணவு, யோகா, மதியநேர குட்டி தூக்கம், சாலட், காலை மாலை உட்கொள்ளும் கஞ்சி, இருவேளை கேட்கும் சஷ்டி கவசம் முதற்கொண்டு மீண்டும் இரவு எழில் அளிக்கும் மிதமான சூட்டில் பனங்கற்கண்டு குங்கும பூவுடன் கூடிய பால்வரை தந்தையிடம் பகிர அனைத்தையும் மனதினுள் குறித்து கொண்ட நாதனுக்கு வார்த்தைக்கு வார்த்தை மகள் எழிலின் பெயரை உச்சரிப்பதை கண்டு உள்ளுக்குள் காந்தினாலும் இனி மகள் இங்கிருக்கும் நாட்கள் வரை எழிலை விடவும் சிறப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதினுள் உறுதி பூண்டார்.
“அமுலு அக்கா கூட வரும்போது சொன்னாங்க இந்தமாதிரி நேரத்துல திடீர்னு ஏதாவது சாப்பிடனும்னு தோனுமாமே..!! காரமா புளிப்பா இந்த மாதிரி அப்படி உனக்கு எதாவது இருந்தா அப்பாக்கிட்ட சொல்லு வாங்கிட்டு வரேன்”
“இப்ப எதுவும் தோனலையேப்பா..” என்றவள் ஆவலுடன் தன் பதிலுக்காக காத்திருந்த நாதனின் முகம் வாடுவதை கண்டு, ‘ஹான் இருக்குப்பா ஆனா..‘ என்று சிறு இடைவெளி விட்டு தயக்கத்துடனே,
‘அவன் யாரு உன்னை சாப்பிடகூடாதுன்னு சொல்ல‘ என்று பல்லை கடித்தவர்,
“இதோ நான் இப்பவே வாங்கிட்டு வர சொல்றேன், நீ சாப்பிடு.. யார் தடுக்குறா பார்க்கலாம்” என்றவர் உடனே டிரைவரை அழைத்து அனைத்து ஃப்ளேவர்களிலும் ஐஸ்க்ரீம் வாங்கி வர சொன்னார்.
“அச்சோ இல்லைப்பா வேண்டாம், ஒன்னு சாபிட்டாலே மாமா திட்டுவாங்க இதெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்” என்று கலக்கத்துடனே அவரை தடுக்க..
நாதனோ எழில் மறுக்கும் காரணத்திற்காகவே அதை செய்ய முடிவு செய்தவர் பணத்தை கொடுத்துவிட்டு “அதெல்லாம் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க நான் பார்த்துக்குறேன் நீ எதுக்கு இப்படி பயப்படுற..??”
தந்தையிடம் மறுக்க முடியாது என்பது புரிபடவும் ‘சரிப்பா‘ என்றவள் மனக்கண்ணில் எழில் முகம் தோன்றவும் கண்களை இறுக மூடிக்கொள்ள அவளையும் அறியாமலே சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றிருந்தாள்.
பேசிக்கொண்டே மடியில் உறங்கி விட்ட மகளை கண்ட வளர்மதி தலையணை கொண்டு வர, ‘வேண்டாம்‘ என்ற நாதன் அவள் விழிக்கும் வரை மகளை விட்டு அசையவில்லை.
கண்விழித்த அலர்விழியோ அப்போதும் நாதன் தலையை வருடி கொண்டிருப்பதை கண்டவள் எத்தனை நேரமாக இப்படி இருக்கிறாரோ என்று மணியை பார்க்க அது இரவு ஒன்பதை காட்டவும் சிறு பதட்டத்துடன் எழ முற்பட…,
‘பார்த்து அமுலு, மெதுவா‘ என்று அவள் தோள்களை பற்றி அமர்த்தினார்.
“என்னப்பா இது இவ்ளோ நேரம் இங்கே வா இருந்தீங்க நான் வேற நல்லா தூங்கிட்டேன்”
“ஏன் என் பொண்ணு கூட நான் இருக்க கூடாதா..?? நீ வா முதல்ல சாப்பிடுவ..”என்றவர் தானே சமயலறைக்கு சென்று மகளுக்கான உணவை பரிமாறிக்கொண்டு வந்து அவளுக்கு ஊட்ட.., அலருமே தந்தையின் அன்பில் நெகிழ்ந்த வண்ணமே உண்டு முடிக்க.., அவளுக்கு குடிக்க நீரை அளித்த நாதன் மகள் குடித்து முடித்த மறுநொடி அனைத்து ப்ளேவர்களையும் அழகாக அடுக்கி அவள் முன் நீட்டினார்.
‘அப்பா‘ என்று திகைப்புடன் அலர்..
“என்ன அப்பா எதுவும் யோசிக்காம சாப்பிடு”
‘இப்போவா..!!‘ என்று விழித்தவள் முன் இருந்த ஜன்னல் வழியே வழிந்த கும்மியிருட்டு தென்படவும்பகல் நேரத்திலேயே அவளை அனுமதிக்காத எழிலுக்கு அவள் இரவில் உண்பது தெரிந்தால் நிச்சயம் தன்னை ஒருவழி ஆக்கிவிடுவான் என்பதால்,
“இப்போ வேண்டாமேப்பா நான் நாளைக்கு சாப்பிடுறேன்” என்று மறுக்கும் முன்னமே நாதன் அவளுக்கு ஊட்டுவதற்காக ஐஸ்க்ரீமை ஸ்பூனில் எடுத்து நீட்ட பாதி வழியிலேயே அவர் கரம் தடைபட்டு போனது.
“யார் அது தன்னை தடுப்பது” என்று சீற்றத்துடன் நாதன் நிமிர..,
அங்கு அவருக்கு மேலான சீற்றத்துடன் எழில் நின்றிருந்தான்.
‘என்ன பண்ணிட்டு இருக்கீங்க..??’ என்று நாதன் கரத்தை விடுவித்தவன்,
“என்னடி இது..?? அதுவும் இந்நேரத்துல” என்று அலரிடம் கேட்க அங்கே தன்னை கண்டதும் அவள் முகத்தில் எல்லை இல்லா மகிழ்ச்சி தென்பட்டாலும் அதற்கு நடுவே தவறு செய்த குழந்தையாய் அவள் விழிகளில் சிறு கலக்கமும் படர்ந்திருப்பதை கண்டவன்தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து வளர்மதியிடம்,
“மாமி இதெல்லாம் எடுத்துட்டு போங்க இன்னொருமுறை எதையும் நான் பார்க்ககூடாது” என்று கடுமையாக உரைத்தவன்கடிகாரத்தை பார்த்தவாறே அலரிடம், ‘எப்போ சாப்பிட்ட..??‘ என்றான்.
“இப்போ தான் மாமா அப்பா ஊட்டிவிட்டாங்க” என்றுவிழிகளில் அகலாத அச்சத்துடன் மெல்லிய குரலில் கூறவும்..,
“இதுதான் சாப்பிடற டைமா..??” என்று பல்லை கடித்தவன் ‘சரி வா‘ என்று அவளுடன் வெளியில் செல்ல முற்பட..,
“தம்பி மணி பத்து ஆக போகுது சாப்டுட்டு போவீங்க இருங்க” என்று வளர்மதி அழைக்கவும்,
“இருக்கட்டும் மாமி இவ்ளோ லேட்டா சாப்ட்டிருக்காடைஜஸ்ட் ஆகாது ஸோ ஒரு வாக் கூட்டிட்டு போயிட்டு வந்து சாப்பிடுறேன் நீங்க குங்குமப்பூ போட்டு பால் மட்டும் எடுத்துவைங்க” என்றவாறே அவளை அழைத்து செல்ல இதை கண்ட நாதனின் அகமெல்லாம் தீப்பற்ற தொடங்கியது..
“என்னடி இது என் பெண்ணை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியாதா..?? இவன் யாரு வந்து இங்க அதிகாரம் பண்ண, என் பெண்ணை எப்படி பயமுறுத்தி வச்சிருக்கான் பாரு அமுலுக்குபிடிச்சதை சாப்பிடுற சுதந்திரம்கூட இல்லை” என்று மனைவியிடம் அங்கலாய்த்தார்.
“போதும் நிறுத்துங்க..!!! அப்போவே சொன்னேன் அவளுக்கு ஐஸ்க்ரீம் சேராது அதுவும் இந்நேரத்துல குடுக்காதீங்கன்னு கொஞ்சமாவது சொன்னதை கேட்டீங்களா…? வயசானா புத்தியுமா மழுங்கிடும்ஞாபகம் இல்லையா உங்களுக்கு..!! அமுலு உண்டான புதுசுல ஆசைப்பட்டதெல்லாம் கொடுக்க சொல்லி அத்தையும் நீலா அம்மாவும் சொன்னதை வச்சு உங்க பொண்ணு கேட்டான்னு தம்பியும் எல்லா ஃப்ளேவர் வாங்கி கொடுத்தாங்க ஆனாஇவ அதை வச்சு தினமும் ஒன்னு சாப்பிடாம கொடுத்த அன்னைக்கே மொத்தத்தையும் சாப்பிட்டு அடுத்தநாளே படுத்துட்டா…!!”
“ஏற்கனவே மசக்கையில கஷ்டபட்டுட்டு இருந்தவ சளி, இருமல், ஜுரம்னு அவஸ்தைபட்டதுல தம்பி தான் ரொம்ப பதறி போயிட்டார். அந்த ஒருவாரம் சரியான தூக்கம்கூட இல்லாம உங்க மகளை பார்த்துகிட்டு மீட்டு எடுத்தாரு தெரியுமா..? என்று கேட்கவும்
மெளனமாக நின்ற நாதன் குரலை செருமிக்கொண்டே, “அதான் வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு வந்துட்டோமே இனி என் பொண்ணு என் பொறுப்புன்னு தானே சொன்ன இப்போ எதுக்கு அவன் வந்து நிக்கிறான்…. என்மேல நம்பிக்கை இல்லையா போய் அவன் வேலையை பார்க்க சொல்லு..!! அவனுக்கு வேற வேலையே கிடையாதா எப்போ பாரு என் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்கான் ” என்றார் எரிச்சலுடன்..,
“ஏங்க கொஞ்சமாவது புத்தியோட பேசுங்க வளைகாப்பு பண்ணி அனுப்பிட்டா அவர் மனைவி குழந்தையைபார்க்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா.., உங்க பொண்ணு பின்னாடி இல்லை அவர் பொண்டாட்டி பின்னாடி சுத்துறாரு இதுல என்ன தப்பு”
“சொல்லபோனா நீங்க அப்போ எனக்கு பண்ணாததை இப்போ தம்பி உங்க பொண்ணுக்கு பண்றாரே அதை நெனச்சி சந்தோஷப்படுங்க” என்று முறைக்கவும்..
வளர்மதியையே அழுத்தமாக பார்த்து கொண்டிருந்த நாதன் கமரிய குரலில் “என்னை மன்னிச்சிடு வளர்” என்று அவர் கரத்தை பிடிக்கவும்..,
‘என்னங்க இது அதுதான் ஏற்கனவே கேட்டுடீங்களே அப்புறம் இது என்ன..??’ என்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே அவரிடம் இருந்து கரத்தை உருவமுயல..,
அவரோ விடாமல் அழுத்தமாக பற்றிக்கொண்டே, “அது நான் உனக்கு பண்ணின தப்புக்கு” என்று மீண்டும் மன்னிப்பை யாசித்தவர், “சொல்ல போனா இத்தனை வருஷத்தை நான் திரும்பி பார்க்கும் போது நீ இல்லைன்னா எதுவுமே இல்லைன்னுபுரியுது.., ஆனா அப்போ அமுலு, கதிர் உன் வயித்துல இருந்தப்போ தொழில்ல மும்முரமா ஓடிட்டு இருந்த சமயம் எனக்கு தெரியலடி அம்மா அக்கா எல்லாம் பார்த்துபாங்கன்னு இருந்துட்டேன்”
ஆனா குழந்தையா இருந்த என் பெண்ணுக்கு ஒரு குழந்தை வர போவதை பார்க்கும் போது தான்… என்றவரின் குரலும் முகமுமே அவரின் தவிப்பையும் சிலிர்ப்பையும் எடுத்துரைக்க ஒரு நொடி இமை மூடி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவர் தொடர்ந்து,
“அதான் இப்போ என் பெண்ணுக்கு செய்யணும்னு நினைக்குறேன் அது தப்பா..??” என்று கேட்கவும் கடந்த சில மாதங்களாகவே கணவனின் மாற்றம் அவர் மனதிலும் மத்தாப்பாக மகிழ்வித்திருந்தாலும் இப்போது அவரின் ஏக்கத்தை கேட்கவும் உருகிபோய்விட்டது வளர்மதிக்கு..
“ஒன்னும் தப்பில்லை தாராளமா செய்ங்க”
“அப்போ அமுலு காலைல ஆறு மணிக்கு வாக்கிங் போவேன்னு சொன்னா இல்லை நான் தான் கூட்டிட்டு போவேன்” என்றவர் மகளுடனான அடுத்த நாளை குறித்து மனைவியிடம் பகிர்ந்து கொண்டு சீக்கிரம் எழ வேண்டி படுக்க சென்றுவிட்டார்.
********************************************
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.