அடுத்தநாள் அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்த நாதன் வளர்மதியையும் எழுப்பி மகளுடன் வாக்கிங் செல்லும்போது குடிக்க என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டு அனைத்தையும் ஒரு கூடையில் அடுக்கி எடுத்துகொண்டு வெளியில் வர அங்கே அகனெழிலன் அவருக்கு முன்பாக தயாராக இருந்தவன் வாக்கிங் செல்ல ஏதுவாக அலர்விழியை நாற்காலியில் அமர வைத்து அவளுக்கு ஷூவை மாட்டிக்கொண்டிருந்தான்.
இதை கண்ட நாதன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு வளரை பார்க்க.., அவருக்குமே என்ன சொல்லி நாதனை சமாதனபடுத்துவது என்று புரியாமல் மகளையும் மருமகனையும் பார்த்துகொண்டு நிற்க.., அதற்குள் எழிலும் அலரும் வாசலை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
“என்னடி நெனச்சிட்டு இருக்கான்” என்று தன் மகளுடன் செலவிட கூடிய நிமிடங்களை களவாடி கொண்டிருப்பவனை கண்டு ஆற்றாமையில் நாதன் வெதும்ப..,
வளருக்கும் அவரின் ஏமாற்றம் வருத்தம் அளித்தாலும் அவரை தேற்றும் விதமாக, ‘சரி விடுங்க இன்னும் ரெண்டு ஒரு நாளல்ல தம்பி கிளம்பிடுவாங்க அப்புறம் நீங்களே அமுலுவை கூட்டிட்டு போவீங்க” என்று கூறிய வளர்மதிக்குமே தெரியவில்லை இன்னும் மூன்று மாதத்திற்கு எழிலின் வாசம் இங்கே தான் என்பது..!!
வளர்மதி கூறியது அவரை சென்று சேர்ந்தாலும் மனமே இல்லாமல் அறைக்கு திரும்பியிருந்தார் நாதன்.
ஆனால் அறையினுள் சென்று படுத்தவருக்கு உறக்கம் தூர போயிருக்க மகள் பட்டியலிட்டவைகளை மனதினுள் அசைபோட உடனே சமயலறைக்கு சென்று வளரிடம் மகளுக்கு பிடித்தவைகளை கூறி வளர்மதியின் மறுப்பையும் மீறி அவருடன் இணைத்து சமையலில் எடுபட தொடங்கினார்.
அவ்வப்போது வாசலில் பார்வை பதித்திருந்தவர் அலர் வீட்டினுள் நுழையவுமே அவளுக்காக தயாராக வைத்திருந்த டேட்ஸ் மற்றும் பாலுடன் அவளை நெருங்கியவர்அகனெழிலனின் கரத்துடன் பிணைந்திருந்த மகளின் கரத்தை பார்த்தவாறே ‘அமுலு வா‘ என்று அழைக்க..,
அவளும் மறுக்க முடியாது நாதனுடன் செல்ல மகளை தன்னருகே அமர்த்தியவர் தோளில் கிடந்த துண்டை கொண்டு வியர்த்திருந்த அவள் முகத்தை துடைத்து பாலை அருந்த செய்ய.., எழில் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே அறையினுள் நுழைந்திருந்தான்.
அடுத்து காலை உணவின் போதும் மகளை தன்னருகே இருக்கும் படி பார்த்துகொண்டவர் தானே அவளுக்கு காலை உணவையும் ஊட்ட.., அப்போதும் எழிலின் பார்வை அவர்கள் விட்டுஅகலவில்லை.
*****************************************
அகனெழிலன்மடியில்அமர்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கழுத்தை கட்டிக்கொண்டு இருந்தவள் “போதும் மாமா” என்று சோர்வாக மறுக்க..,
“உனக்கு போதும் ஆனா என் பையனுக்கு போதாதே..!!! எப்பவும் சாப்பிடுற அளவுதானேடி செஞ்சிட்டு வந்தேன் இப்போ என்ன வேண்டாம் சொல்ற…, இன்னும் கொஞ்சம் தான் ‘ஆ‘ சொல்லுடி என் பட்டு, தங்கம், என் செல்லம் தானே..” என்று மீண்டும் கஞ்சியை நீட்ட,
‘உஃப்ப்ப்‘ என்று மூச்சை இழுத்து விட்டவள்
“இல்ல மாமா முடியலை ப்ளீஸ்..!! இப்போ சாப்பிட்டது எல்லாம் இங்கயே இருக்கு என்று நெஞ்சை சுட்டி காட்டியவள், சீக்கிரம் டைஜெஸ்ட் ஆக மாட்டேங்குது என்னால முன்ன மாதிரி சாப்பிட முடியலை” என்று கலக்கத்துடன்கூற,
“எப்படிடி ஆகும்..! அதான் எப்போ சாப்பிட்டாலும் கொஞ்சமும் நடக்காம உடனே படுத்துக்குற, எதோ நைட்ல நான் கூட இருக்கிறதால அப்ப மட்டும் ஒழுங்கா நடக்குற மத்த நேரம் எல்லாம் நீலம்மாவையும் மாமியையும் ஏமாத்திடுற அப்புறம் எப்படி டைஜெஸ்ட் ஆகும்” என்று அவள் கன்னத்தை மென்மையாக கடித்து வைக்க..,
அதைகூட தாங்கமுடியாத அலர், “ஸ்ஆஅமாமா கடிக்காதீங்க, வலிக்குது ” என்று கன்னத்தை தேய்த்துகொண்டே அவன் கரத்தை விலக்கிமெல்ல அவன் மீதிருந்து இறங்க பார்க்க..,
‘அமுலு‘ என்று அழைத்தவாறே நாதன் கதவை தட்டுவது கேட்க..,
“ஐயோ மாமா..!! அப்பா” என்று அவள் மீண்டும் அவசரமாக இறங்க பார்க்க,
“ஏய் அடங்குடி.. சொன்னது மறந்துடுச்சா..? உங்கப்பா வந்தா ஒரு ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண மாட்டாரா அப்படியே குதிச்சிட்டு ஒடுவ போல…” என்று அவளை மெல்லமாக தன் மீதிருந்து இறக்கி கட்டிலில் அமர்த்தியவன் அவளுக்கு சாய்வாகதலையணையை வைத்து விட்டு, ‘இங்க இருந்து அசையகூடாது புரியுதா..??’ என்று எச்சரித்துவிட்டே சென்று கதவை திறக்க..,
‘அமுலு‘ என்று மீண்டும் கதவை தட்டும்முன் அது திறக்கபட அங்கு எழிலை கண்டவர் ஒரு நொடி திகைத்து போனார்.
ஆம் நேற்று இரவு வந்தவன் இன்று வேலைக்கு சென்றிருப்பான் என்று அவர் நினைத்திருக்க அவனோ இங்கேயே தங்கி விடுவான் என்று அவர் எண்ணவில்லை.
கதவை திறந்து அவர் வருவதற்காக வழி விட்டு நின்ற எழிலை முறைத்துகொண்டே உள்ளே நுழைந்தவர் மகள் அருகே அமர்ந்து, “அமுலு நேத்தே இந்நேரத்துக்கு கஞ்சி குடிப்பேன்னு நீ சொன்னப்பவே அம்மாகிட்ட சொல்லிட்டேன்டாஆனா அவ கோவிலுக்கு போயிட்டு வர லேட் ஆகிடுச்சு அதான் நானே அவளை கூட்டிட்டு வந்து உடனே செஞ்சி கொடுக்க சொல்லி எடுத்துட்டு வந்துட்டேன்”என்று மகளுக்காக கடையை விட்டுவிட்டு ஓடி வந்திருந்த தந்தையை பார்க்க அவரோ புன்னகை முகமாக வாஞ்சையுடன் மகளுக்கு கஞ்சியை புகட்ட முயல..,
“ரொம்ப சீக்கிரம் வந்துடீங்க ஆனா அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சது” என்றவாறே அலரின் அருகே வந்தமர்ந்த எழில் கூறவும்..,
மேஜையில் காஞ்சி பாத்திரத்தை கண்ட நாதனின் முகம் சுருங்கி போக அதையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தார்.
இருக்காதா பின்னே..!! மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவளை எப்படி எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் பிரசவத்தை சிறப்பாக முடித்து அனுப்ப வேண்டும் என்று அவர் பல கனவுகளுடன் இருக்க அனைத்தையும் இடையிட்டு எழில் முறியடித்து கொண்டிருக்கிறானே..!!
அதிலும் முதல்நாளே மகளுக்கு பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்பது அவரை மேலும் காயபடுத்தி இருக்க..,
“ஆமாப்பா அம்மா வீட்ல இல்லைன்னதும் மாமா அப்போவே செஞ்சி கொண்டு வந்துட்டாங்க” என்றிட..,
மனம் கனக்க அமர்ந்திருந்தவர், ‘ஓஓ‘ என்றவாறே எழிலை பார்த்து கொண்டே ‘சரிம்மா‘ என்று எழ முயல..,
தந்தையின் முகத்தை காண சகியாதவள் அவர் கரத்தை பற்றி,” ஆனா அது கொஞ்சமா தான் இருந்தது எனக்கு இன்னும் பசிக்குது நீங்க கொடுங்கப்பா” என்றாள்.
அவள் அருகே அமர்ந்து நீரை குடித்து கொண்டிருந்த எழிலுக்கு புரைக்கேற இருமிக்கொண்டே அவளை பார்க்க “ப்ளீஸ் மாமா, அப்பா பாவம்” என்று சைகை செய்தாள்.
“இல்லை முடியவே முடியாது” என்பதாக தலை அசைத்த எழில் இதுக்கு மேல எடுத்துகிட்டன்னா கண்டிப்பா வாமிட் பண்ணுவ வேண்டாம்…என்று கண்டிக்க..,
இதை கண்ட நாதனுக்கு ரத்த அழுத்தம் கூடியது…!
‘அமுலு‘ என்று அழுத்தமாக அழைக்க,
‘ப்ளீஸ்‘ என்றவாறே எழிலிடம் இருந்து பார்வை திருப்பியவள் நாதன் கொடுத்த கஞ்சியையும் எடுத்துகொள்ள எழில் அவளை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
நாதன் நான்கு முறை ஊட்டவுமே ‘போதும், இதுக்கு மேல வேண்டாம்‘ என்று நாதனை தடுக்க.., அலரோ கண்களால் எழிலிடம் கெஞ்சியவாறே ‘பரவாயில்லைப்பா ஊட்டுங்க‘ எனவும்எழிலுக்கு தன்னை கட்டுபடுத்துவது மிகவும் கடினமாகி போனது,
“முட்டாள்தனத்திற்கு அளவில்லையா..??” என்று எண்ணியவாறே இருவரையும் வெறித்து கொண்டிருந்தான்.
கொண்டு வந்ததை மிச்சம் இன்றி மகளுக்கு ஊட்டிவிட்டவர் இறுதியாக அவள் வாயை துடைத்து விட்டு, “மதியத்துக்கு உனக்கு என்னடா வேணும் சொல்லு” என்று கேட்க..,
அவளோ கழுத்து வரை கஞ்சியை நிறைத்து வைத்திருக்க இப்போது அவளை விட்டாலே போதும் என்ற நிலையில் இருந்தவள்,‘எதுவா இருந்தாலும் பரவால்லாப்பா..‘ என்று கூற அவரோ விடாமல்,
“என்ன வேணும் சொல்லு” என்று அங்கேயே நிற்க..,
இரு கரங்களாலும் இடுப்பை பிடித்துக்கொண்டே மூச்சை இழுத்து விட்டவாறே “மாமா கிட்ட கேட்டுக்கோங்கபா அவருக்கு தெரியும்…” என்று அலர் நிமிர்ந்து அமர..,
இதை கேட்ட நாதனுக்கு மேலும் சினம் துளிர்க்க, ‘ஒன்னும் தேவை இல்ல நானே பார்த்துக்குறேன்‘ என்று கிளம்பினார்.
எழிலோ அவள் அவஸ்தையை கண்டு மெல்லமாக கீழே இறக்கியவன் அவளை பாத்ரூமிற்கு அழைத்து செல்ல மறுநொடியே ஓங்கரித்து கொண்டு குடித்த மொத்த கஞ்சியையும் வாந்தி எடுத்திருந்தாள் அலர்.
அதுவரை அவள் தலையை பிடித்து கொண்டு நின்றவன் தண்ணீர் கொடுத்து அவள் வாயை கொப்பளித்து முடிக்கவும் கையோடு கொண்டு வந்திருந்த துவாலையால் அவள் முகத்தை துடைத்துவிட்டு அழைத்து வந்து அமர்த்தியவன் மீண்டும் பாத்ரூமிற்கு சென்று அங்கு சுத்தபடுத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவள் அருகே வந்து அமர அடுத்தநொடியே அவன் மடியில் தலைவைத்து அலர்விழி படுத்துக்கொண்டாள்.
“மொதல்ல எந்திரிடி”எனவும் அவளோ சோர்வுடன் அவன் தோள் சாய்ந்திருந்தாள்.
‘ஸாரி மாமா, அப்பா முகம் எப்படி வாடி போயிடுச்சு தெரியுமா..?? பாவம் அவர் எனக்காக கடையை விட்டுட்டு வந்து சமைக்க சொல்லி எடுத்துட்டு வந்தார் அதை எப்படி வேண்டாம் சொல்றது‘ என்று கலங்கிய விழிகளுடன் கூற,
“அறிவுகெட்டவளே அதுக்கு உன்னை கஷ்டபடுத்திப்பியாடி…, இப்போ இல்லாட்டி என்ன நாளைக்கு சீக்கிரம் எடுத்துட்டு வந்து கொடுக்க சொல்லி குடிக்க வேண்டியதுதானே யார் வேண்டாம் சொன்னா…?? ஏற்கனவே முடியலை இதுல தேவை இல்லாம இழுத்து விட்டுக்குற..!! ஏன்டி உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லை..!! நீ தான் இப்படி இருக்கன்னா உங்கப்பா உனக்கு மேல.., இப்படியே பண்ணிட்டு இருந்தேன்னா இங்கவிட மாட்டேன் கண்டிப்பா சென்னை கூட்டிட்டு போயிடுவேன் பார்த்துக்க”
அவன் குரலின் உறுதியில் பதறியவள், “நோ நோ மாமா ப்ளீஸ், இனி இப்படி பண்ணமாட்டேன் ப்ராமிஸ்.. தொண்டை ரொம்ப எரியுது மாமா எல்லாமே இங்கயே நின்னுட்டு இருக்கு” என்று கழுத்தை நீவியவள் மூச்சை இழுத்து விட்டவாறே “இன்னும் வாமிட் வர மாதிரியே இருக்கு” என்று சோர்வுடன் கூற..,
“சரி வா கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம் பெட்டரா இருக்கும் அப்புறம் ஜூஸ் குடிப்ப.. எரிச்சல் கொஞ்சம் அடங்கும்” என்றவாறே அறையில் இருந்து அவளை கூடத்திற்கு அழைத்து வந்தவன் மெல்லமாக அவளை நடக்க வைக்க இருபது நிமிடம் கழித்து அவளே, “போதும் மாமா முடியல” என்றிட அவள் முகம் பார்த்தவன் அதில் வியர்வை துளிகள் அரும்பி முகம் களைப்பில் தோய்ந்திருப்பதை கண்டு அலரை சாய்வு நாற்காலியில் அமர்த்தி கைக்குட்டையால் வியர்வையை துடைத்தவன் அவள் பாதங்களை பற்றி மடியில் வைத்து பிடித்து விடவும் சில நிமிடங்களிலேயே நாதன் அவளுக்கான மாதுளைசாறுடன் வந்தார்.
அவரை கண்ட எழிலோ அமைதியாக விலகி சென்று மற்றொரு இருக்கையில் அமர்ந்து மீண்டும்இருவரையும் பார்க்க துவங்கினான்.
நாதனோ அவன் பார்வையை அலட்சியம் செய்து, “அமுலு இது நீ ஜூஸ் குடிக்கிற டைம் சரியா..?” என்று கேட்டவாறே மிதப்பாக எழிலை பார்த்தவர் “ஒருமுறை நேரம் தவறலாம் அதற்காக என் மகளை நான் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்திட மாட்டேன்” என்பதாக அவர் பார்வை அமைய…, எழிலோ அவர்களை கண்டுகொள்ளாமல் தொலைகாட்சியை உயிர்பித்து பார்க்க தொடங்கிவிட்டான்.
அலர் மாதுளைசாறை குடித்து முடிக்கவும் “வா அமுலு இப்போ நீ சஷ்டி கவசம் கேட்கிற டைம் தானே..!!” என்றவாறே அவளை அழைத்து சென்று அறையில் அமர்த்தி சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டவர் அவள் அருகேயே அமர்ந்து விட்டார். அலர்விழியோ என்றும் இல்லாத திருநாளாய் தந்தை கடைக்கு செல்லாமல் இருப்பதை கண்டு
“என்னப்பா கடைக்கு போகலையா..??” என்று கேட்க..,
அப்போது அறை வாயிலில் நிழலாடுவதை கண்டவர், “உன்னை விட எனக்கு கடை முக்கியம் இல்லடா என்று அவள் தலையை வருடியவர்என் பொண்ணோட ஒவ்வொரு நிமிஷமும் நானும் அனுபவிக்கனும். அதனால சுபாஷ்கிட்ட கடையை பார்த்துக்க சொல்லிட்டேன் நீ தூங்குற நேரம் போய் பார்த்துப்பேன் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூறியவருக்கு மட்டுமே தெரியும் இரண்டாம் வாய்ப்பாக மீண்டும் தன் மகள் கை சேர்ந்திருக்கும் நிலையில் அவளை எந்த நேரத்திலும் விட்டு கொடுத்திட கூடாது அதேசமயம் எழிலிடம் எப்போதுமே தோற்றுவிட கூடாது என்பதற்காகவே இங்கு அமர்ந்திருக்கிறார் என்பது..!!
******************************************
மேலும் ஒரு வாரம் கழிந்த நிலையில் ஆரணியில் புகழ்பெற்ற மருத்துவமனையின் வளாகத்தினுள் மனைவியுடன் நுழைந்த எழில் இரண்டாம் தளத்தில் மருத்துவரை பார்த்துவிட்டு ஊடுகதிர் சோதனை செய்யவேண்டி முதல் தளத்தில் காத்திருக்க..,
“ஹல்லோ மிஸ்டர் அகனெழிலன்” என்று அவன்முன் தன் கரத்தை நீட்டி இருந்தார் காவல் துறை ஆய்வாளர் சஞ்சீவ் அருகே நிறைமாத நிலவான அவர் மனைவியுடன்..,
“ஹாய் மிஸ்டர் சஞ்சீவ்” என்று அவருடன் கை குலுக்கியவன் அவருடன் பேசவேண்டி எழுந்து செல்ல… அவர்களை பார்த்தவாறே அலர் அருகே அமர்ந்த சஞ்சீவின் மனைவி மைதிலி “எப்போ டேட் குடுத்திருக்காங்க அலர்” என்று கேட்கவும்..,
அலர் தன்னுடைய பிரசவ தேதியை கூறவும்.., “வாவ் எனக்கு ரெண்டு நாள் முன்னாடி சொல்லி இருக்காங்க நீங்க எப்போ வந்து அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க” என்றவாறு அவர்களின் பேச்சு நீள, அதற்குள் அலரை செவிலியர் அழைக்க, எழிலும் அலருடன் அறைக்குள் நுழைந்தான்.
ஸ்கேன் செய்து முடித்த மருத்துவர் குழந்தையின் பொசிஷன் நார்மலாக இருப்பதாகவும் எப்படியும் இன்னும் இருவாரத்தில் குழந்தையின் தலை திரும்பிவிடும் என்று கூறி இன்னும் பத்து நாட்கள் கழித்து வருமாறு கூற மீண்டும் இரண்டாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கு மருத்துவர் சுசீலாவிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டை அளிக்க,
“என்ன அலர் பையன் என்ன சொல்றான் சமத்தா இருக்கானா..?? இல்லை உன்னை மாதிரியே சேட்டையா.???” என்று கேட்க..,
அலரோ, “இல்லை ஆன்ட்டி, ரொம்ப கஷ்டமா இருக்கு சரியா சாப்பிட முடியலை…, ரொம்ப நேரம் வாக் பண்ண முடியலை, டீப் ஸ்லீப் எல்லாம் ரொம்ப நாளாச்சு” என்று கூறவும்..,
“இதெல்லாம் தேர்ட் ட்ரைமெஸ்ட்டர்ல வரகூடியது தான். இன்னும் கொஞ்சநாள் அப்படி தான் இருக்கும்நைட் ஸ்லீப் இல்லாட்டி மார்னிங் எப்போ முடியுதோ அப்போ தூங்கி எந்திரி பெட்டரா இருக்கும்” என்றவாறே ரிப்போர்ட்டை பார்த்து கொண்டிருந்த சுசீலா எழிலிடம்,
“எவரிதிங் இஸ் பைன் நோ நீட் டூ வொரி.., டெலிவரி டேட்க்கு ஒரு நாள் முன்னமே கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணிடுங்க எழில் டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும், இன்கேஸ் அதுக்குமுன்ன பெயின் இருந்தா நீங்க டிரெக்ட்டா லேபர் வார்ட் போயிடுங்க டிலே பண்ண வேண்டாம்” என்று கூற..,
சரி என்ற எழிலைஇடையிட்ட அலர், “ஆன்ட்டி நான் சொன்னது உங்களுக்கு ஓகேதானே..!!” என்று கேட்கவும்
சில நொடிகள் யோசித்தவர் ‘எதுக்கும் நீங்க வீட்ல பேசிட்டு வந்து கன்பார்ம் பண்ணுங்க‘ =
‘சரி ஆன்ட்டி‘ என்று விடைபெற்று கிளம்பி சென்றனர்.
டாக்டரிடம் விடை பெற்றவர்கள் இன்ஜெக்ஷன் போடவேண்டி செவிலியருடன் அடுத்த அறைக்கு செல்ல அங்கு ஏற்கனவே மூன்று பேர் வரிசையில் இருப்பதை கண்டு அவர்களுக்கு அடுத்து அமர்ந்து இவர்களும் காத்திருக்க தொடங்கினர்.
அவன் குரல் செவியை எட்டினாலும் பலவித எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் பதில் அளிக்காமல்இருந்தவளிடம் ஒருவித அச்சம் படர்ந்து முகம் நிறமிழந்து காணப்படுவதை கண்டவனுக்கு அவள் நிலை நன்கு புரிபட அவளை தன்புறம் திருப்பி தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்கு புகட்ட தொடங்கினான்.
நீரை குடித்து முடித்தவள் விழிகளில் கலக்கமும் அச்சமும் போட்டிபோட அவன் கரங்களை இறுக்கமாக பிடித்துகொண்டு தோள் சாய்ந்தவள்மெல்லிய குரலில் “பயமா இருக்கு மாமா இதுதானே லாஸ்ட்” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,
எழிலோ அவள் இதழில் இருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டே, “ஆமாடி பட்டு அவ்ளோதான்..!! நான் விசாரிச்சிட்டேன் இதுதான் லாஸ்ட் இனி டெலிவரி அப்போ தான்”
“எப்போதான் மாமா இந்த இன்ஜெக்ஷன், டேப்லெட், டானிக், ப்ளட் டெஸ்ட், சுகர் டெஸ்ட் கொடுமையில இருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்” என்று கேட்கவும்,
எழில் ஆதூரமாக அவள் முதுகை வருடியவன், “இன்னும் கொஞ்ச நாள் குழந்தை பிறக்கிற வரை தான்டி குள்ளச்சி, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றிட…,
‘போடா, நானெல்லாம் குளிர் ஜூரம் வந்தாகூட ஊசி போடாத ஆளு‘ என்று கையை தட்டி விட்டவள்
“டேய் லூசு ஊசி போடும்போது எப்படி வலிக்கும் தெரியுமாடா ..??? பெருசா பேச வந்துட்டான்” என்று விலகி அமர அதை கண்ட எழில் அவள் புறம் நகர்ந்து அமரவும், “டேய் மாமா அப்பத்தா சொன்னங்க அவங்க ஆறு குழந்தை பெத்தபோதும் ஒரு ஊசிகூட போட்டு கிட்டது இல்லையாம் எந்த டெஸ்ட்டும் எடுத்தது இல்லையாம் எனக்கு மட்டும் ஏன் இத்தனை ஊசி போடுறீங்க டெஸ்ட் எடுக்குறீங்க..?? என்று கேட்க,
“அப்படி எதுவும் இல்லாமையே பெரியப்பா, சித்தப்பா, அத்தை எல்லாருமே ஆரோக்கியமா தானேடா இருக்காங்க” என்று நாதனின் வார்த்தைக்காக எழிலின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் குழந்தை கொண்டவள், உடலளவிலும் மனதளவிலும் அதற்க்குதயாராகாமல் இருந்ததால் சிறு வலியையும் தாங்கும் சக்தி இல்லாமல் போக அவை அனைத்துமே கோபமாக உருமாறி எழிலிடம் காய தொடங்கி இருந்தாள்.
“நல்லவேளை ஸ்கேன் பண்ணும்போது ப்ளாடர் ஃபுல் ஆகுற வரை தண்ணி குடின்னுஇப்போ யாரும் சொல்றது இல்லை அதனால தப்பிச்சேன்” என்று பெருமூச்சுவிட்டவள் அவன் பார்வை தன் மீது படிந்திருப்பதை கண்டு,
“ஏன்டா எப்போபாரு பொறுத்துக்கோன்னு இதே டைலாக் சொல்ற.. உனக்கு ஊசி போட்டா தெரியும்..!!” என்று உரத்த குரலில் கூற அவள் அருகே அமர்ந்திருந்த இரு பெண்மணிகளின் பார்வை இவர்கள் புறம் திரும்பியது.
அதை கண்ட எழில் அவள் கரத்தை எடுத்து வருடிகொண்டே, “அப்படி எல்லாம் இல்லடி செல்லம், நான் உன்கூட தானே இருக்கேன் எனக்கு தெரியாத உனக்கு எப்படி வலிக்கும்னு..!!” என்று சொல்லும்போதே ஒவ்வொருமுறை அவளின் அச்சமும் அந்நேரங்களில் எல்லாம் தாயை தேடும் கன்றாய் தன்னிடம் தஞ்சம் புகுந்து தைரியமாக வலியை எதிர்கொள்வதையும் எண்ணி பார்த்தவன்,
“வேணும்னா சொல்லு இந்தமுறை நானும் உன்கூட சேர்ந்து ஊசி போட்டுக்குறேன், உன்னோட வலியை நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்று கூறவும்,
‘நிஜமாவா மாமா‘ என்றவாறே அவன் தோளில் தஞ்சம் புகுந்தவள், “உனக்கும் வலிக்கும் தானே..!! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ என் கூட இருந்தா போதும்” என்று மெல்லிய குரலில் கூற,
எழிலும் புன்னைகையுடனே அவள் தலையை வருடி, “கண்டிப்பாடி..!! என் குள்ளச்சிகூட நான் இல்லாம வேற யார் இருப்பா” என்றவன் சாக்லெட்டை எடுத்து அவளிடம் அளித்தான்.
இதை கவனித்து கொண்டிருந்த பெண்மணிகளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
‘லவ் யு டா மாமா‘ என்று அவன் காதில் கிசுகிசுத்தவள்சாக்லேட்டை சாப்பிட ஆரம்பிக்க எழிலோ அலரின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து கொண்டிருந்தான்.
கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனமாற்றத்தின் தாக்கத்தில் பல நேரங்கள் அலர் எழிலை படுத்தி எடுத்தாலும் அனைத்தையும் புன்னகை முகத்தோடு எதிர்கொள்பவன் அவள் விருப்பத்திருக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அவளை அந்நொடிகளை கடக்க செய்திடுவான்.
சென்னைக்கு செல்லும் வளர்மதியும் நீலாவுமே பலநேரங்கள் அவளை கையாள திண்டாடி போகயில் எழில் மிகவும் எளிதாக, பொறுமையாக அவள் எண்ணம் அறிந்து செயல்பட்டுஅவளுக்கு ஆறுதல் அளிப்பான். அதனாலேயே எப்போது அவளுக்கு வெறுமை, அயர்ச்சி, அழுத்தம், சோர்வு ஏற்பட்டாலும் அவள் தேடுவது எழிலின் மடியையே…!!!
கர்ப்ப காலத்தில் மனைவியிடம் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சரியாக புரிந்து கொண்டு அவளை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளவும் ஒரு முதிர்ச்சி வேண்டும், அதுவே அப்பெண்ணின் பேறுகாலத்தை எளிதாக பயமின்றி கடக்க உதவும். எழில் தன் கோபதாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கே அவளை சரியாக கையாண்டு கொண்டிருப்பதாலேயே அலரால் தன் குழந்தையை மகிழ்வுடன் சுமக்க முடிகிறது.
அதையும் மீறிய நேரங்களில் வலி மிகுதியில் எழிலை அடிப்பதையோ பேசுவதையோ என்றுமே அவன் பெரிதாக எடுத்து கொண்டதில்லை…குழந்தை சுமப்பதிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்ற புரிதல் கொண்டிருப்பவனுக்கு குழந்தையை தாங்கும் அலரை தாங்குவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.
அலருக்கே பல நேரங்களில் எழில் அவளிடம் பொறுத்து போவதை கண்டு பிரமிப்பாக இருக்கும்.
பின்னே இரவு உறங்கும் முன் அடுத்தநாள் காலையே திரைப்படத்திற்கு போக வேண்டும் என்பவள் எழில் அதற்கு ஏற்ப டிக்கெட் புக் செய்துவிட்டு அடுத்தநாள் அழைத்தால் “இல்லை வேண்டாம் மாமா, கோவிலுக்கு போகலாம்” என்பாள்.
அலுவலகத்தில் இருந்து வருபவன் அவள் விருப்பபட்டு கேட்டதன் பேரில் உயர்தர உணவகத்தில் இருந்து உணவை வாங்கி கொண்டு வந்தால் அதன் வாசமே குமட்ட செய்ய வாயை பொத்திக்கொண்டு அதை தொட்டுகூட பார்க்காமல் சைகையாலேயே மறுத்து விடுபவள் இரவு அவன் கையால் கிச்சடி வேண்டும் என்பாள்.
அத்தோடு நில்லாமல் உணவு வீணாகி விடுமே என்று எழில் அதை சாப்பிட நினைத்தால் அவன் கையை பிடித்துகொண்டு, “நான் கிச்சடி சாப்பிடறேன் ஆனா நீஎன்னை விட்டுட்டு நாண், பூரிமஷ்ரூம், பன்னீர் எல்லாம் சாப்பிடுற… அப்போ உனக்குநாண் தான் முக்கியமா நான் முக்கியம் இல்லையா மாமா..??” என்று கசங்கிய விழிகளுடன் அவள் கேட்கும் அழகிலேயே அவள் மனம் வாடிடகூடாது என்று எதுவும் பேசாமல் அதை மூடி வைப்பவன் தட்டில் கிச்சடி போட்டு கொண்டு அவளுக்கு ஊட்டி விட்டவாறே தானும் உண்டு முடிப்பான்.
சாக்லேட்டை உண்டு முடித்தவள் மீண்டும் ஊசியை நினைத்து அச்சத்துடன் அவன் கரங்களோட கோர்த்துக்கொண்டு, ‘லாஸ்ட் டைம் போட்டது ரொம்ப வலிச்சது மாமா‘ என்று கூற
“உன்னோட வலியை நான் எப்படி வாங்கிகிறதுன்னு தெரியலை அமுலு, குழந்தையை சுமக்கிற பாக்கியம் எங்களுக்கு இல்ல, நிஜமா அப்படி ஒரு வரம் கிடைச்சா கண்டிப்பா உன்ன சுமக்க விட்டிருக்கமாட்டேன்டி …”என்று கூறிக்கொண்டிருக்கும் போதே ‘மிசர்ஸ் அலர்விழி அகனெழிலன்‘ என்ற பெயர் கேட்கவும் இந்த முறை மெதுவா போட சொல்றேன்டிஎன்றவாறே அவளுடன் அறையினுள் சென்றான்.
‘அதுவாஆஆஅ‘ என்றவாறேதிரும்பியவள் அவன் நெரித்த புருவங்களின் கீழ் இருந்த அவனது விழிகளின் ஈர்ப்பு விசையில் மெல்ல மெல்லதன்னை தொலைத்து உலகம் மறந்து அமர்ந்திருந்தாள்.
பின்னே காற்றில் அலையென தவழ்ந்த அவன் கேசமும்ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசைக்கிடையில் அவனின் அழுத்தமான ஆதாரங்களின் அவளுக்கேயான பிரத்யேக புன்னகையுடன்அவளுக்கு மிகவும் பிடித்த சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டு ஸ்டேரிங்கை அலட்சியமாக அவன் பற்றியிருந்த விதமும், ஒருபக்கமாக திரும்பியவன் பார்வையும்எப்போதும்போல அவளை வசீகரிக்க உலகம் மறந்து அவனில் மூழ்கி போனாள்.
சாலையில் கவனம் பதித்து கொண்டிருந்தவன்நெடுநேரமாக அவளிடம் இருந்து பதில் வராமல் இருப்பதை உணர்ந்து திரும்பியவன் “ஏய் பார்த்தது போதும் இழுக்காம என்னன்னு சொல்லுடி” என்றான்.
“அது என்னன்னா மாமா நாம ரெண்டுநாள் முன்ன தாமரையையும் குட்டி பையனையும் பார்க்க போனோமே நியாபகம் இருக்கா..? அப்போ தாமரை என்னை திட்டிட்டா மாமா ..??”
“ஏன்டி நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற..???”
“ப்ச் அதுதான் சொல்ல வரேன், குறுக்க பேசாம சொல்றதை முழுசா கேளுடா”
“சரி சரி , இதுக்கெல்லாம் ஏன்டி செல்லம் டென்ஷன் ஆகுறநான் எதுவும் பேசலை, நீ சொல்லு கேட்கிறேன்”
“தாமரை என்ன சொல்றா தெரியுமா மாமா..??”
“என்ன..??”
“நான் நினைக்கிற இடத்துக்கு எல்லாம்உன்னைகூட்டிட்டு போக கூடாதாம்..?? பெரியவங்க சொல் பேச்சு கேட்டு நடக்கனுமாம் நான் சொன்னதுக்காக நான் கூப்பிட்டா நீயும் வரக்கூடாதாம்” என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூறவும்,
“என் பொண்டாட்டி கூப்பிட்டா நான் எங்கயும் போவேன் அவ யாருடி போககூடாதுன்னு சொல்ல..?? சரி நீ சொல்லு எதுக்கு அப்படி சொன்னா, எங்க போகணும் சொல்லுடி நான் கூட்டிட்டு போறேன்… நான் வராம வேற யார் கூடவருவா..??”
எழிலின் பதிலில் அலரின் முகம் சட்டென ஒளி பெற்று உயிர்த்திட “அப்படி சொல்லுடா என் செல்லகுட்டி”என்று நெட்டி முறித்து,
“இதேதான் மாமா நானும் அவகிட்ட சொன்னேன் ஆனா அப்பவும் அவ அதை ஏத்துக்கலை, உன்னை கூட்டிட்டு போககூடாதுன்னு ஆர்டர் போடுறா” என்று திரும்பவும் விஷயத்தை கூறாமல் பேசிக்கொண்டிருப்பவளை கண்டு அவன் பொறுமை காற்றில் பறக்க,
“ஹே எதுக்குடி சுத்தி வளைச்சிட்டு இருக்க முதல்ல எங்க போகணும் அதை சொல்லு” என்று குரலை உயர்த்திட..,
ஏற்கனவே தாமரையால் எங்கே அவள் எண்ணியது போல எழிலை உடன் அழைத்து செல்ல முடியாதோஎன்று சஞ்சலம் கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனது சிறு அதட்டல்கூட பூதாகரமாக தெரிய சட்டென அலரின் விழிகளில் நீர் திரண்டு விட்டது.. அழுகையை கட்டுபடுத்தியவாறே ஜன்னல் வழியே பார்வையை திருப்ப.,
வளைவில் திருப்பி கொண்டே ‘சொல்லுடி‘ என்றவன் அவளிடம் பதிலில்லை என்றதும் ‘அமுலு‘ என்றழைக்க அப்போதும் அவள் திரும்பினாள் இல்லை.
பலமுறை அழைத்த பிறகு அவளிடம் இருந்து சிறு விசும்பல் வெளிப்பட பதறிக்கொண்டு காரை ஓரமாக நிறுத்தியவன் அதே வேகத்தில் அவள்புறம் வந்து கதவை திறந்தவனுக்கு அவளின் அழுது சிவந்த முகமே காட்சியளிக்க திகைத்து போனான்.
அமுலு என்னடா ஆச்சு..?? எதுக்காக இப்போ அழுற என்றவன் அவள் முகத்தின் களைப்பை கண்டு பசிக்குதா, வயிறு வலிக்குதா, இல்லை வாந்தி வர மாதிரி இருக்கா என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல இவளோ பதிலேதும் அளிக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் இல்லைஎன்ற பதிலையே தலையசைப்பின் மூலம் அளித்தாள்
“அப்புறம் ஏன்டி குள்ளச்சி அழற..?
அவன் சட்டையை பிடித்து தன்புறம் இழுத்தவள், “நீ எப்பவும் என்கூட இருப்ப தானே மாமா” என்று ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் கேட்க,
எதற்கு என்று புரியாவிட்டாலும், “இதுல என்னடி சந்தேகம், எங்கயும் எப்பவும் உன்கூடவே இருப்பேன்” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.