தீவிர சிந்தனையில் இருந்தவன், “என்னை லேபர் வார்ட் உள்ளேவிடுவாங்களாடி..??” என்று நெற்றியை நீவிக்கொண்டவன்,
“ஏன் கேட்கிறேன்னா எங்க அக்கா டெலிவரி அப்போ எங்கம்மா தான்கூடஇருந்தாங்க.., மாமாகூட போனதா எனக்கு நினைவு இல்லை”
“நிச்சயமா விடுவாங்க மாமா, ஆனா அப்பத்தா தான் அம்மாவோ இல்லை அத்தையோ கூட வருவாங்க அப்படின்னு சொன்னங்க.., அன்னைக்கு தாமரையும் நீலா அத்தையை கூட்டிட்டு போக சொல்றா உன்னை கூடாதாம், ஆனா எனக்கு நீதான் வரணும் அதான்போன முறை வந்த அப்பவே சுசீலா ஆன்டி கிட்ட கேட்டுட்டேன் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க பட் வீட்ல பேசிட்டு வந்து கன்பார்ம் பண்ண சொன்னங்க” என்றிட,
“நான் அங்க வரதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காதேடி..?? அங்க என்ன பண்ணனும், எப்படி நடந்துக்கணும்ன்னு எனக்கு எதுவும் தெரியாதே, மாமிக்கு நீலாம்மாக்கு அனுபவம் இருக்கு உன்னை எப்படி பாத்துக்கனும் கைட் பண்ணனும்ன்னு அவங்களுக்கு தெரியும்” என்றவனின் முகம் யோசனையுடன் இருப்பதை கண்டவள்,
“உன்னை விடயாரும் என்னைநல்லா பாத்துக்க முடியாது மாமா, என்னோட தைரியமே நீதான், எனக்கு என்னோட எல்லா நிலைகளிலும் உன்னோட துணை வேணும்..!! உன்னோட சேர்ந்து எல்லாத்தையும் அனுபவிச்சி நான் கடக்கணும்.. ஊசி போடும்போது எவ்வளவு பயமா இருந்தாலும் நீ என் பக்கத்துல இருக்க, உன்னோட கையை நான் கெட்டியா பிடிச்சிருக்கும் போது ஊசியோட வலி தெரிஞ்சது இல்லை மாமா…, ஆனா பிரசவ வலி வேற மாதிரி இருக்குமாம், ரொம்ப வலிக்குமாம் தாமரை சொன்னா..!! ஆனா அடுத்தவங்க அனுபவிச்சதை கேட்கிறது வேற நாம அனுபவிக்கறது வேற இல்லையா..??? நீ என் கூட இருந்தா எந்த வலியும் எனக்கு பெருசா தெரியாது மாமா, அதுலயும் நம்மோட முதல் குழந்தை அவன் வரும்போது அப்பா அம்மா ரெண்டு பேரும் கூட இருக்கனும்னு நினைக்கிறது தப்பா மாமா..??” என்ற கேள்வியுடன் அவனை பார்க்க,
“தப்பில்லைடி பட்டு.. நான் கண்டிப்பா வரேன் நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பையனை வரவேற்போம்” எனவும் சந்தோஷ கண்ணீர் கன்னத்தை நனைக்க அப்படி ஒரு நிம்மதி அலரின் மனதினுள் பரவ தொடங்கியது.
***********************************************
எழில் காரை கிளப்பவுமே வீட்டிற்கு செல்லும் பாதை அல்லாது வேறு பாதையில் பயணிப்பதை கண்டு, “எங்க மாமா போறோம்”
‘இதோ இப்போ தெரிஞ்சிடும்‘ என்றவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து சென்றவன் திரும்பும்போது நீலாவுடன் வருவதை கண்டு அவள் காரில் இருந்து இறங்க முற்பட..,
அவளை நெருங்கிய நீலாவை அலர் கட்டிகொள்ள , அவளை நெட்டி முறித்த நீலா எப்படிடா செல்லம் இருக்க, டாக்டர் என்ன சொன்னங்க என்று கேட்டுகொண்டே அலருடன் பின்னே அமர அடுத்த இருபது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வழியிலேயே எழில் தன் முடிவை நீலாவிடம் தெரிவித்திருக்க யோசனையுடனே பயணித்தவர் வீட்டிற்கு வந்ததும் அலரை தன் அருகே அமர வைத்து, “செல்லம் என்ன பயம் உனக்கு..!! நான் தான்கூட வரேனே நான் நல்லபடியா பார்த்துபேன்னுஉனக்கு என்மேலநம்பிக்கை இல்லையா..??”
“அப்படி இல்லை அத்தை” என்று சுரத்தே இல்லாமல் அலரிடம் பதில் வர,
“அப்புறம் எதுக்குடா இப்ப என் பிள்ளையை உன்கூட இருக்க சொல்ற, தலபிரசவங்கிறது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு… என்னதான் பெண்கள் உடளவில் பலவீனமானவன்களா இருந்தாலும் பிரசவம்ன்னு வரும் போது அந்த வலியை தாங்குற சக்தி இயற்க்கையாவே நமக்கு வந்துடும்…, ரத்தம், வலி, வேதனை எல்லாம் நமக்கு புதுசு இல்லை அதனால முதல் முறையா பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்ணோடுஅம்மாவோ வேற யாராவது அனுபவம் இருக்க பெண்கள் கூட இருந்தா உன்னோட மனநிலையை புரிஞ்சிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடந்துப்பாங்க”
“செல்லம் கர்ப்ப காலத்துல என் பையன் உன்கூட இருக்கிறது வேற பிரசவ அறை என்பது வேற புரிஞ்சிக்கோடா..!!” என்று அவள் முகத்தை பார்த்தவருக்கு அது இன்னும் தெளியாமல் குழப்பத்துடன் இருப்பதை கண்டு, “சரியா சொல்லனும்ன்னா குழந்தை பிறப்பு மிக பெரிய போராட்ட களம் அங்கஎல்லா கட்ட வலிகளையும் வேதனையையும் கடந்து கிட்டத்தட்ட நம்ம உயிரை பணயம் வச்சி தான் நாம ஒரு உயிரை ஜனிக்கிறோம்.ஆனா அந்த பொறுமை, நிதானம், வலி அதன் வெளிபாடுஎல்லாம் ஆம்பளைங்களுக்கு புதுசு அவங்களுக்கு புரியாது, அந்த நேரத்துல அவங்க பதட்டமாகி உன்னையும் பதட்டபட வைக்க வாய்ப்பு இருக்கு, நீ பயந்தா அது..” என்று நிறுத்தியவர் இதற்குமேல் கூறினால் அவள் மிகவும் பயந்து விடக்கூடும் என்பதால் ஆதூரமாக அவள் தலையை வருடியவர்,
“நான்கூட இருந்தேன்னா பக்குவமா உன்னை வழிநடத்தி உனக்கு துணை இருந்து தாயையும் சேயையும் நல்லபடியா பிரிச்சி என் பையன்கிட்ட சேர்த்திடுவேன், நம்புடா”
“ஆனா அத்தை எனக்கு…”
“இது என்னடி புதுபழக்கம் தம்பியை பிரசவ அறைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றது, உன்னோட புதுமை, கொள்கை எல்லாம் குழந்தை விஷயத்துல கொண்டு வராத.., கொஞ்சமாவது அம்மா சொல்ற பேச்சை கேட்டு நட” என்றார் வளர்மதி.
“இப்போ நீ பேசிட்டு இருக்கிறதுக்கு என்ன அர்த்தம் உன்னோட விருப்பத்தை விட நீ முக்கியம் அதை புரிஞ்சிக்க” என்று மகளை கண்டிக்க,
“ஏன்டி என் மக நீ பிறக்கும் போதே உங்க அம்மாகூட இருந்து உன்னை முதல்ல பார்த்தவஅவளுக்கு தெரியாதா..?? ஒழுங்கா நீலாவை கூட்டிட்டு கிளம்புற வழியை பாரு” என்று அதட்டியவர் “ஏன் என் ராசா உனக்கு இங்க சேவகம் செய்யறது பத்தலையா அங்கயும் வரணுமா..?” இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் அங்க ராசாக்கு என்ன வேலை என்று கேட்க,
“அதேதான் அத்தை குழந்தை உண்டாகியும் இவ திருந்தலை பழைய மாதரியே தான் இருக்கா, ஒழுங்கா சாபிட்றது இல்லை, ஒரு வேலை செய்றது இல்லை தம்பி கூட இருக்கிறதால அவளை சமாளிக்கறாங்க, நாம இவ்ளோ சொல்லியும் அவரைஇப்ப அங்கயும் கூட்டிட்டு போவேன்னு என்ன பிடிவாதம்… இது மட்டும் அவ அப்பாக்கு தெரிஞ்சது அவ்வளோதான்” என்று மகளை முறைக்க,
யாருமே தன்னை புரிந்து கொள்ளாமல் அனைத்து புறமிருந்தும் அவள் விருப்பத்திற்கு எதிர்ப்பு கிளம்ப அலரோ ஏமாற்றத்துடன் விழிகளில் நிறைந்த நீருடன் எழிலை தான்பார்த்து கொண்டிருந்தாள். “எப்படியாவது காப்பாத்து மாமா..!!” என்ற மன்றாடலோடு..
அது சரியாக எழிலை சென்று சேர, அதுவரை அனைத்தையும் கேட்டுகொண்டிருந்தவன் ஆழ்ந்த மூச்செடுத்தவாறுஅலரருகே வந்தமர்ந்து அவளை தோளோடு அணைத்து கொண்டு மறுபுறம் இருந்த நீலாவிடம், “நீங்க சொல்றது புரியுது நீலாம்மா ஆனா இந்த நிலையில எனக்கு இவ முக்கியம், இவளோட நான் கூட இருந்தா எதையும் சுலபமா கடக்க முடியும்ன்னு சொல்றா, என்னை நம்புங்க நான் அவளுக்கான மாரல் சப்போர்ட்டா இருப்பேன் என்றிட,
அங்கு வந்த நாதன் “இது என்ன புதுசா..??? நமக்கு இதெல்லாம் வழக்கம் இல்லைடா அமுலு, உன்கூட அக்கா வருவாங்க” என்று மகளை கடிந்தபோது அலர் தந்தையிடம் மறுத்து பேச முடியாமல் அமைதியாக இருக்க, மனைவியின் உணர்வுகளை அவதானித்த எழில் அவள் விருப்பமே பிரதானம் என்று நாதனுக்கு எதிராக தன் முடிவை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டான்.
நீலாவும் நாதனிடம் எழிலின் விருப்பத்தை மதிக்குமாறு கூற நாதன் பற்களை கடித்து தன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்றார்.
நாட்கள் வேகமாக நகர்ந்துஅலரின் பிரசவ தேதிக்கு ஒரு வாரமே என்ற நிலையில் குழந்தையின் அசைவு நாளுக்கு நாள் அதிகரித்ததில் பல நேரங்கள் தூக்கமின்றி தவித்திருந்தவள் இன்று உள்ளே மகன் இடவலமென போய்க்கொண்டும் கை கால்களை அசைத்து கொண்டும் இருந்ததில் தூக்கம் கலைந்தவள் இருகரங்களையும் வயிற்றோடு அணைத்து பிடித்துமகனுடன் பேச ஆரம்பித்தாள்.
அரைமணி நேரத்திற்கு பிறகு ஒருவழியாக அவனை உறங்க வைத்தவள் இடப்புறமிருந்து வலப்புறம் திரும்பி படுக்க மெல்லிய விளக்கொளியில் தன் அருகே உறங்கி கொண்டிருந்தவனை கண்ட அலரின் மலரிதழ்கள் புன்னகையை தத்தெடுத்தது.
உறங்கி கொண்டிருந்த கணவனின் தலைமுடியை மெல்ல கோதி கொடுத்திருந்தவள் அவனை மேலும் நெருங்கி முகத்தோடு முகம் வைத்து இழைந்தவாறே தன் இதழ்களை அவன் செவியில் பொருத்தி மெல்லிய குரலில் ‘மாமா‘ என்றழைத்தாள்.
மனைவியின் பிரசவ தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் எந்நேரமானாலும் அவளுக்கு வலி வர வாய்ப்பு இருக்கும் நிலையில் எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆழ்ந்த தூக்கமாக அல்லாமல் அவள் அழைக்கும் போது உடனே எழ வேண்டி கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கோழி தூக்கம் தூங்க கற்று கொண்டிருந்தான்.
இப்போது அலர் மெல்லமாக அழைத்தபோதும் உறக்கத்திலும் அவளை உணர்ந்தவனிடம் ‘ஹ்ம்ம்‘ என்றவாறே அசைவு தென்பட்டது.
அதை கண்டதும் சற்று பலமாக ‘மாமா‘ என்று அலர் அழைத்திருக்க உடனே அடித்து பிடித்து கொண்டு எழுந்தவன் அவள் விழித்து கொண்டிருப்பதை கண்டு, “செல்லம் என்னடிஆச்சுவலிக்குதா..?? ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணட்ட..?? இரு கார் எடுக்குறேன்”என்று கண்களை கசக்கி கொண்டு எழ முற்பட..,
‘மாமா‘ என்று அவனை தடுக்க எண்ணியவளின் குரலை கவனிக்காமல் அவன் படுக்கையில் இருந்து இறங்கவும் அவன் பனியனை பிடித்து இழுத்தவள் “டேய் மாமா வலி எல்லாம் ஒன்னும் இல்லை…, எங்கயும் கிளம்பிடாத” என்றவாறே படுக்கையில் கை ஊணி எழுந்து அமர முற்பட அதை கண்டவன் ‘இருடி‘ என்றுவிட்டு அவளை தோளோடு அணைத்து பிடித்துஅமர்த்தினான்.
அவள் முகத்தின் சோர்வை கண்டு“வேற என்னடி தூங்க முடியலையா..?? கால் வலிக்குதா..??” என்றவாறே அவள் கால்களை பிடித்து மடியில் வைத்து மென்மையாக பிடித்துவிடவும்..,
“அச்சோ இல்லை மாமா” என்று கால்களை விலக்கியவாறே “இவ்ளோநேரம் அப்புகிட்ட பேசிட்டு இருந்தேன் இப்போபசிக்குது”
“அமைதியா இருடி” என்று அவள் பாதங்களைமென்மையாக பற்றிகொண்டேஎட்டி விளக்கை போட்டவன் சைடு டேபிளை திறந்துஅவளுக்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கெட்டை எடுத்து பிரித்துநீட்டினான்.
“நீயே ஊட்டு மாமா” என்றவாறே அவனை நெருங்கி அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு அவன் தோள் சாய்ந்து அமர்ந்து கொள்ள,
எழிலும் அவளுக்கு ஊட்டியவாறே, “போதுமா இல்லை வேற ஏதாச்சும் வேணுமா..?? பால் கொண்டு வரட்டாடி” என்று கேட்க,
“இல்லை மாமா போதும்” என்றவளுக்கு தண்ணீரை புகட்டியவன், அவள் உடனே படுப்பதை கண்டு தடுத்து பிடித்தவன்,
“உடனே படுக்காத எழுந்து வா” என்றவாறே அவளை கை பிடித்துநடக்க வைக்கவும் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
இந்நேரத்திற்கு யாராக இருக்ககூடும் என்ற யோசனையுடனே அவளை தன் கைவளைவில் நிறுத்தி கதவை திறக்க வெளியில் சட்டையை அணிந்தவாறே நாதன் நின்று கொண்டிருந்தார்.
பதட்டத்துடன்உள்ளே வந்த நாதன், “அமுலு டிரைவருக்கு சொல்லிட்டேன் வந்துட்டு இருக்கான்.. ரொம்ப வலிக்குதாடா ..??? கிளம்பலாமா..??” என்றவாறு கதவிற்கு பின்புறம்எப்போதும் மருத்துவமனை செல்ல ஏதுவாக பேக் செய்யபட்டு வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டே அவள் கரத்தை பிடிக்க,
உள்ளே நுழைந்ததில் இருந்து நாதனையே புரியாத பாவத்துடன் பார்த்து கொண்டிருந்த எழில் அவர் கரத்தில் இருந்த பையை வாங்கியவாறே ‘எதுக்கு‘ என்றான்.
அவன் பையை வாங்கவுமே சினம் துளிர்க்க பற்களுக்கிடையில் ‘டேய்..‘ என்று அழுத்தமாக உறுமியவர் ஏதோ கூற தொடங்கும் முன் ‘அப்பா‘ என்ற அலரின் குரல் இடையிட்ட அவரை தடை செய்திருந்தது.
“அப்பா..” என்ற மகளின் குரலில் பல்லை கடித்து தன்னை கட்டுபடுத்தியவர் எழிலை முறைத்துக்கொண்டே, “மணி மூணு ஆகுதேடா இந்நேரம் லைட் எரியவும் எங்க உனக்கு வலி வந்துடுச்சோன்னு நினைச்சு டிரைவருக்கு கால் பண்ணிட்டு, அம்மாவையும் எழுப்பி விட்டுட்டு, உன்னை கூட்டிட்டு போக வந்தேன்” என்றார்.
அவர் முகத்தில் தென்பட்ட பதட்டமும் குரலில் வழிந்த அக்கறையிலும் மனம் நெகிழ்ந்தவள், “என்.. என்னப்பா இது இன்னும் நீங்க தூங்கலையா..??” என்று கேட்கவும்,
“இல்லைடா நேத்து அக்காகிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்கதான் சொன்னங்க டாக்டர் கொடுத்த தேதியில தான் குழந்தை பிறக்கனும்னு அவசியம் இல்லையாம்ஒரு வாரம் முன்ன பின்ன இருக்குமாம்..உனக்கு அடுத்த வாரம்தானே டேட் கொடுத்தாங்க அதனால உனக்கு எப்பவும் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்குல்ல.. அதான் நான்ரூம்ல இருந்தா நீ கூப்பிடும் போது உடனே வர முடியாதேன்னு ஹால்லையே படுத்துட்டு அப்பப்போ முழிச்சி பார்த்துட்டு இருந்தேன்.. திடீர்ன்னு லைட் எரியவும் ஒருவேளை வலி வந்துடுச்சி போலன்னு வந்தேன்டா”
வயதான காலத்தில் அதிலும் மருத்துவமனை வாசம் பெற்ற பின்பும் அவர்நலன் மீது அக்கறை கொள்ளாது தனக்காக தூக்கத்தை துறந்து காவல் காக்கும் தந்தையின் அன்பில் நெக்குருகி போன அலரின் விழிகளில் சட்டென நீர் திரண்டுவிட்டது.
தந்தையின் அளப்பறியா பேரன்பின் கனம் தாளாமல் பொங்கி எழும் உணர்வுகளை கட்டுபடுத்த கீழிதழை அழுத்தமாக பற்றிக்கொண்டவளுக்குதொண்டை அடைக்க கண்களில் இருந்து கரகரவென இறங்கிய நீரோடு பதிலளிக்க முடியாமல் தந்தையையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
ஆனால் அதற்கு நேர்மாறாக நாதனின் செயலையும் அதற்கு அலரின் எதிர்வினையும் கண்ட எழிலுக்கு உள்ளுக்குள் காந்தியது.
பின்னே பிரசவ நேரத்தில் உணர்ச்சி வசப்படுதலோ மன சஞ்சலம் கொள்ளுதலோ அலரின் உடல் நிலையை பாதித்து பிரசவத்தை சிக்கலாக்க கூடும் என்பதால் எப்போதும் அவளை சமநிலையுடன் வைத்து கொள்ளுதல் அவசியம் என்று மருத்துவர் கூறி இருக்க, எழில் மிக கவனமாக அதை பின்பற்றி மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள அரும்பாடு பட்டு கொண்டிருக்க இங்கு அதற்கு நேர்மாறாக நாதன் பாசத்தை காட்டுகிறேன் எனும் பெயரில்மனைவியை உணர்ச்சி வசப்பட வைத்து அழ வைத்து கொண்டிருப்பதை கண்டவனுக்கு தாள முடியவில்லை.
அலரை அணைத்து தேற்ற முற்பட்ட போதும் நாதனை பார்த்தவாறே அவளின் அழுகை அதிகரிப்பதைகண்டவனின் பொறுமை காற்றில் கலக்கவும் என்னதான் பேசக்கூடாது என்று தன்னை கட்டுபடுத்த முயன்றாலும் இறுதியில் முடியாமல் போக அவனின் உள்ளகொதிப்புக்கு வடிவம் கொடுக்க தொடங்கினான்.
“பசிக்குதுன்னு எழுந்தா அதுகூட கூடாதா..,அதுக்குள்ளே எதுக்கு இப்படி ஆர்பாட்டம் பண்றீங்க…??” என்று கடுப்புடன் கேட்டவன், “நான்கூட தானே இருக்கேன் வலி வந்தா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக மாட்டேனா…?? இல்லை உங்களுக்கு எல்லாம் தகவல் கொடுக்காம விட்டுடுவேனா..??” என்றான் ஆதங்கத்துடன்..
‘மாமா..‘ என்று அலர் அவன் கரம் பிடிக்கவும்,
“என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியாதா..??அப்படி என்ன என்மேல நம்பிக்கை இல்ல.. இந்நேரம் வரை யாரு உங்களை தூங்காமமுழிச்சிட்டு இருக்க சொன்னா..??” என்று ஆற்றாமையுடன் கேட்ட எழிலின் வார்த்தைகள் நாதனுக்கு சர்வாதிகாரமாக பட சிவந்த விழிகளுடன், “என் பொண்ணு, நான் … ” என்று தொடங்கிய நாதன்மகளின் கேவலை கண்டுதன் பேச்சை நிறுத்தியவர், எங்கே அவளுக்கு வலி ஆரம்பித்து விட்டதோ என்று மருகியவராக அவளை நெருங்கி தலையை வருடிக்கொண்டே, “இப்ப வலி வந்துடுச்சாடா அமுலு..??” என்று கேட்க
நெஞ்சம் நிறைந்த நேசத்துடன் மெளனமாக அவரையே பார்த்து கொண்டிருந்தவள் ‘இல்லை‘ என்றாள்.
“அப்போ பசிக்குதுன்னு சொன்னானே” என்று எழிலை பார்த்தவர்
“ரொம்ப பசிக்குதாடா..?? என்ன வேணும் சொல்லுநான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சாவியை எடுக்க நாதன் திரும்பவும், இந்த வயதிலும் தனக்காக துடிக்கும் மனிதரை கண்ட அலர் கலங்கிய விழிகளை துடைத்துகொண்டே “அ..ப்..பா”என்ற கதறலுடன் அவர் நெஞ்சில் சாய்ந்தாள்.
மகளின் கண்ணீரும் கதறலும் எதனால் என்று புரியாத போதும் தன்னிடம் தஞ்சமடைந்த மகளை அணைத்து கொண்டவர் கண்களும் கலங்கிவிட்டது.
ஆனால் இங்கு தந்தை மகளின் பாச போராட்டத்தை கண்ட எழிலுக்கு எரிச்சல் மேலும் அதிகரித்தது.
ஆம் பிரசவ காலத்தில் பெண்ணின் மனநிலை முக்கிய பங்கு வகிக்கிறது, அவளின் அதீத உணர்ச்சிகள் குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும் என்ற மருத்துவரின் வார்த்தைகளே காதில் ரீங்காரமிட எங்கேமனைவியின் கதறல்அவளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சியவன்,
“சரி போதும்டி அவர் போய் தூங்கட்டும்.., நீயும் வா வந்து படு ” என்று கையை பிடிக்க முயல,
கண்களை துடைத்து கொண்டு தந்தையின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்து கொண்டவள், “இல்ல நான் அப்பாகூட தூங்குறேன் மாமா” என்றுவிட்டுஅவன் பதிலையும் எதிர்பார்க்காமல் நாதனுடன் ஹாலிற்கு சென்றவள் சோபாவில் அவர் மடியில் தலை வைத்து உறங்க தொடங்கினாள்.
சில நிமிடங்கள் செல்லும் இருவரையும் விசித்திரமாக பார்த்து கொண்டிருந்த எழிலுக்கு நன்கு புரிந்து போனது என்ன சொன்னாலும் இருவரும் கேட்க மாட்டார்கள் என்று..!!இவர்களை எவ்வாறு திருத்துவது என்று புரியாமல் தலையை அழுந்த கோதி பெருமூச்செறிந்தவன்தானும் ஒரு பாயை கொண்டு வந்து ஹாலில் விரித்து அவர்களை பார்த்தவாறே படுத்துவிட்டான்.
மேலும் சில நாட்கள் கழிந்த நிலையில் தந்தையை சந்திக்க அவர்கள் வீட்டிற்குசென்றிருந்தவன் அப்போது தான் வீடு திரும்ப அங்கே கூடத்தில் நாதன் அருகே அவர் அணைப்பில் இடுப்பை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவளின் முகமே ரத்தபசை இழந்திருக்க மேலிதழை பற்களால் அழுத்தி கொண்டு கண்களை சுருக்கி வலியை கட்டுபடுத்த போராடி கொண்டிருந்தாள் அலர்விழி.
“அமுலு என்னடி ஆச்சு எதுக்கு இப்படி கஷ்டப்படற..?? வலிக்குதா..?? ஏன் இங்கயே உட்காந்து இருக்க.., எனக்கு கால் பண்ணி இருக்கலாமே..?? என்று பதட்டத்துடன் கேட்டவன் கைக்குட்டையை எடுத்து அவள் முகத்தில் அரும்பி இருந்த வியர்வையையும் இமையோரம் கசிந்திருந்த நீரையும் துடைத்தவன், கிளம்பு ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்..??” என்று அவளை தூக்க முற்பட,
அலர்விழியோ கண்களை அழுந்த மூடி மூச்சை நன்கு இழுத்து விட்டவள் ‘இல்லை‘ என்பதாக தலையசைத்து கொண்டே எழிலின் கரத்தை அகற்ற முற்ப்பட,
அந்தோ பரிதாபம் அவனின் வலியஉடும்பு பிடியை சிறிதும் அசைக்க முடியாதவள் சோர்ந்த முகத்துடன் ‘மா.. மா..‘ என்ற சொல்லை உதிர்க்கவும் திராணி அற்று போக மெல்ல தலை சாய்த்து பின்னால் அமர அதேநேரம் இறுக்கி பிடித்து பளீரென்ற வலி பரவ ஆரம்பிக்க “ஆஆஆஅப்ப்பாஆஆ‘ என்று சத்தமாக முனங்கியவள்,
மீண்டும் எழில் தன்னை தூக்க முற்படுவதை கண்டு ஆழ்ந்த மூச்சை எடுத்து மெல்ல தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி “கையை எடுடா..” என்று உரக்க கத்தி இருந்தாள்.
அவள் படும் அவஸ்தையை காண சகியாமல் அவளுக்கு உதவ முயன்றவனை அவள் கத்திவிடவும் முயற்சியை கைவிட்டவனுக்கு அவள் நிலை புரிய அமைதியாக அவளருகே அமர்ந்து அவள் முதுகை நீவி விட்டு தோள்களுக்கு மசாஜ் செய்ய தொடங்கினான்.
வலி மட்டுப்படாமல் தொடர்ந்திருப்பதை கண்டவன் “கஷ்டபட்டுட்டு இருக்கியேடி.. ஹாஸ்பிட்டல் கிளம்பலாம்” என்று கூற,
அவன் கூறிய எதுவுமே அவள் சிந்தையை சென்றடையாது போக வலியின் மிகுதியில் முக சுணக்கத்துடன் இருந்த அலர் வளைந்து, நிமிர்ந்து, குனிந்து என்று பலநிலைகளில் மாறி மாறி அமர்ந்தும் முடியாது போக இதழ்களை குவித்து காற்றை வெளியேற்றியவள்இறுதியாக நாதன் மீது சாய்ந்து கடினப்பட்டு கால்களை உயர்த்தி எதிரே இருந்த எழில்மீது நீட்டி அமர்ந்தவள் இடுப்பை பிடித்துகொண்டு கண்களை மூடியவாறே “கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து தொலையேன்டா” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தாள்.
அவள் அவ்வாறு கூறவும் தன்னவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளையும் அதை கட்டுபடுத்த அவள் மேற்கொள்ளும் போராட்டத்தையும் உள்வாங்கியவன் ஏதும் பேசி அவளை வருத்தாமல் அமைதியாக கால்களை பிடித்துவிட தொடங்கினான். ஆம் கடந்த மூன்று மாதங்களாகவே குழந்தையின் எடை கூட கூடகால்களில் வீக்கம் அதிகரித்துஅலருக்கு சிறிது தூரம் சேர்ந்தாற்போல நடப்பதே சிரமமாகி போனது.
“அமுலுவெதுவெதுப்பாதண்ணி கொண்டு வரேன்கொஞ்ச நேரம் காலை அதுல வச்சி இருடி, யு ஃபீல் பெட்டர்” என்றவாறு அவள் பாதங்களை மென்மையாக பற்றி சோபாவில் வைத்துவிட்டு அவன் எழ முற்பட,
மறுபுறம் அமர்ந்திருந்த நாதனோ மகள் எழிலை அழைத்த விதத்தில் அதிர்ந்து போனவராக, “அமுலு என்ன பழக்கம் இது…?? இப்படிதான் மரியாதை இல்லாம பேசுவியா..?? என்றார்.
‘என்ன பேசிட்டு இருக்கீங்க..?? இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியமா..?? என் பொண்டாட்டி என்னை பேசுறா உங்களுக்கு என்ன வந்தது…?? இப்ப அவ பட்டுட்டு இருக்க கஷ்டத்துல இது ரொம்ப முக்கியமா…? அவ அவஸ்த்தையைபுரிஞ்சிக்காம இந்த நேரத்திலும் மரியாதையை பத்தி பேச வந்துடீங்க..” என்று சீறீயவனுக்கு எங்கே இன்றும் நாதன் அவளை உணர்ச்சி வசப்பட வைத்துவிடுவாரோ என்ற அச்சம் மேலோங்கிட என்றுமில்லாத நாளாய் இன்று அவரை சற்று அதிகமாகவே கடிந்து கொண்டான்.
“தேவை இல்லாததை தேவையில்லாத நேரத்துல பேசுறதே உங்களுக்கு வேலையா போச்சு” என்று சிடுசிடுத்தவன் “உங்களை யாராவது கேட்டாங்களா..? கொஞ்ச நேரம் அமைதியா உட்காறீங்களா..?? அவ என்னைதானே பேசினா…? உங்களையா பேசினா..?” என்று எழில் எரிந்து விழ,
வளர்மதியும் “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க அவளே வலில இருக்கிறா.. என்ன பேசறோம் ஏது பேசுறோம்னுகூட புரியாது இந்நேரத்துல யார் என்னன்னு பார்த்தா மரியாதை கொடுப்பா.. அவ வலியை நீங்க அனுபவிச்சு பாருங்க அப்ப புரியும்” எனவும் நாதன் வாயை மூடிக்கொண்டார்.
வலியில் துடித்து கொண்டிருப்பவளின் செவியை தந்தை மற்றும் கணவனின்சொற்கள் சென்று சேர்ந்தாலும் அதற்கு பதில் கூற முடியாமல் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு மெல்ல அடி எடுத்து வைத்தவளுக்கு வலி இன்னும் அதிகரித்த அதேவேளை சற்று முன் நாதன் ஊட்டிவிட்ட இட்லியும் சாம்பாரும் ஜீரணமாகாமல் போக வயிற்றை பிடித்துகொண்டுமொத்தமாக வாந்தி எடுத்துவிட்டாள்.
மேலும் அவளுக்கு குமட்டுவதை கண்ட எழில்உடனே நாதனிடம் ஒரு நாற்காலியை கொண்டு வர சொல்லி அவளை அமர்த்தி தலையை பிடித்து கொள்ள குடலே வெளிவருமளவு அடுத்த சிலநிமிடங்களில் வயிற்றில் இருந்தவை அனைத்தும் வெளியேறி இருந்தது.
“நான் சுத்தபடுத்துறேன் நீங்க அவளை கூட்டிட்டு போய் ட்ரெஸ் மாத்துங்க தம்பி” என்று அலரின்நைட்டியிலும் அங்கங்கு தெறித்திருந்ததை சுட்டிகாட்டிவளர் கூறவும் அவளை அழைத்து கொண்டு எழில் அவர்கள் அறைக்கு திரும்ப சக்தி அனைத்தும் வடிந்த நிலையில் அவன் தோள் சாய்ந்தவளுக்கு தொண்டை முழுக்க ரணமாகியிருந்ததில் உணவுடன் சேர்த்து நீரும் வெளியேறிய நிலையில் அலருக்குநா வறண்டு போனது.
அதற்குமேல் அடி எடுத்து வைக்க சிரமபட்டவளுக்கு ஏதேனும் குடித்தாலாவது தன்னால் நடக்க முடியுமா..?? என்ற எண்ணம் தோன்ற எழிலின் கரத்தை அழுத்தி கொடுத்து “மா…மா…” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தவள் அதற்கு மேல் முடியாமல் போக ‘தண்ணீர்‘ என்று எழிலிடம் சைகை செய்தாள்.
“செல்லம் தண்ணி வேண்டாம், இதை குடி” என்று நீலா அவர் தயாரித்து வந்த கஷாயத்தை கொடுத்தார்.
“என்னதிது நீலாம்மா..??” என்றவாறு எழில் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள,
“கஷாயம் எழிலு..!! பிரசவவலி எப்பவும் குறிப்பிட்ட கால இடைவெளில விட்டு விட்டு வரும் ஆனா செல்லத்துக்கு அப்படி இல்லை அதோட இன்னும் வயிறு வேற கீழ இறங்கலை அதனால சிலநேரத்துல அது சூட்டு வலியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு அதை உறுதிபடுத்த தான் கஷாயம்”
“ஃபால்ஸ் பெயினா நீலாம்மா..??” என்று எழில் மருத்துவர் கூறியதை நினைவுபடுத்தி கேட்க,
‘ஆமாப்பா’
அலரை அழைத்து சென்று அமர்த்திய எழில் அவளுக்கு புகட்ட ஒருவாய் அருந்தியவளின் முகம் அஷ்ட கோணலானது.
“கசக்கும் செல்லம் அதை குடிச்சிட்டு இதோ இந்த பனைவெல்லத்தை வாயில போட்டுக்கோ..” என்றிடமுகத்தை சுருக்கியவாறே எழில் புகட்டியதை கண்களை மூடிக்கொண்டு அலர் கசப்பாக விழுங்க மறுநொடியே அவளுக்கு குமட்ட தொடங்கியதுஅதை கண்ட எழில் எப்போதும் தயாராக தன் சட்டைபையில் வைத்திருக்கும் புளிப்புமிட்டாயை அவள் வாயில் போட அலருக்கு குமட்டல் சில நொடிகளில் மட்டுபட்டது.
“கொஞ்சம் காத்தாட வெளில கூட்டிட்டு நடக்கவை சரியாகிடும் நான் குடிக்க ஏதாவது கொடுத்து விடுறேன்” என்று நீலா செல்லவும் அலரின் உடையை மாற்றியவன் பின் மனைவியை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.