அன்றைய காலை பரபரப்புடனே விடிய சுடரும் அவள் குடும்பமும் எழிலின் வீட்டில் குவிந்திருந்தனர்.
அலரும் சுடரும் சமயலறையில் மும்முரமாக இறுதிகட்ட வேளையில் ஈடுபட்டிருக்க, வேதா அவர்கள் சமைத்தவைகள் அனைத்தையும் கொண்டு வந்து கூடத்தில் அடுக்க தொடங்கியிருந்தாள். வாழை இலை மற்றும் பூஜை பொருட்களுடன் உள்ளே நுழைந்த பாலன் அவற்றை கூடத்தில் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர் தண்ணீரோடு வந்த மகளிடம், “சமையல் முடிஞ்சதாடாம்மா”
“எல்லாம் முடிஞ்சதுப்பா.., மாமி அப்பளம் பொரிச்சிட்டு இருக்காங்க வந்துடுவாங்க, அம்மாவை கூப்பிடட்டா..??” என்று கேட்க வேண்டாம் என்றவர் அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.
கடந்த ஒரு வாரமாக வெளியூர் சென்றிருந்த எழில் அன்று காலை தான் வீடு திரும்பி இருக்க முந்தைய நாளே மனைவி அனைத்து ஏற்பாடுகளையும் குறையின்றி செய்து வைத்திருப்பதை கண்டு அகம் மகிழ்ந்தவன் சர்வேஷும் அவிரனும் உதவ தாய் தந்தையரின் புகைப்படங்களை அலங்கரித்து கொண்டிருந்தான்.
அன்று தந்தைக்கும் தனக்குமான வாக்குவாதத்தையும், சுடரின் ஆதங்கத்தையும், ஏற்கனவே சரசுவிற்கு தான் செய்தது மனிதாபிமான செயல் இல்லையோ என்ற குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருந்த நந்தனிடம் அன்று பிள்ளைகள் இருவரும் அது மாபாவம் என்று சுட்டி காட்ட.., அதன்பின் அவரின் மனஉளைச்சல் அதிகரித்து பின் வந்த நாட்களில் தன்னையே வெறுத்து படுக்கையில் வீழ்ந்தவருக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு என்று அனைத்தையும் எண்ணி பார்த்தவாறே தந்தையின் புகைப்படத்தை துடைத்து கொண்டிருந்த எழில் அவிரனின் குரலில் தான் சிந்தை கலைந்தான்.
“ஆமாடா, நான் சரியா கவனிக்கலைமாலை எடு” என்றான் ஸ்டூலில் ஏறிக்கொண்டே..,
அதற்குள், “இந்தாங்க மாமா” என்று சர்வேஷ் கீழே இருந்த மாலையை எடுத்து நீட்ட அதை வாங்கி சரசுவின் புகைப்படத்திற்கு சூட்டினான் எழில்.
மாலையிடும் சமயம் சரசுவின் புகைப்படத்தை கண்டவனின் விழிகளின் வலி அதிகரிக்க அவன் மனம் மீண்டும் பழைய நினைவுகளை அசைபோட தொடங்கியது.
அன்று சரசு வீட்டை விட்டு காணாமல் போன போது முதலில் நந்தனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சில மாதங்கள் எழில் அமைதி காத்தாலும் அதற்கு மேலும் பெற்ற தாயின் நிலை என்னவென்று அறியாமல் எழிலால் இருப்பு கொள்ள முடியவில்லை.
சூழல் காரணமாக முதலில் தாயை விட்டு ஒதுங்கி இருந்து பின்னர் அவர் செயலால் காயப்பட்டு தாயை ஒதுக்கி வைத்தவன் தான் எழில் மறுப்பதற்கில்லை.., ஆனால் அப்போது சரசு அவர் வீட்டில் சகலவிதமான வசதிகளுடன் நலமாக இருந்தார் ஆனால் தற்போதைய நிலை நேர்மாறானது அல்லவா..!! நந்தன் அவனை எத்தனை கட்டுபடுத்திய போதும் காணாமல் போய் முகவரி அற்று இருக்கும் தாயின் நலன் என்னவென்று கூட அறியாமல் அவனால் இருக்க முடியவில்லை.
மகனின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் சரசு அலரை மறுத்து கீர்த்தியை தேர்ந்தெடுத்ததில் தான் தாய்க்கும் மகனுக்குமான விரிசலின் முதல் படி.
பின்னே வசதி வாய்ப்பு, பொருளாதாரம், பேர், புகழ் என்று அனைத்திலும் நாதனை காட்டிலும் பிரகாசம் ஒரு படி மேலே எனும்போது சரசுவின் இயல்பான பேராசை குணம் மகனுக்கு கீர்த்தியை மணமுடிக்க எண்ணியது. ஆனால் மகன் அதை மறுத்து கீர்த்தி மூலமாகவே மறுப்பை தெரிவிக்க வைத்து அலரை மணமுடிப்பதில் எழில் காட்டிய தீவிரமே சரசுவின் குணத்தை மேலும் மூர்க்கமாக்கியது.
அதுவே மனித நிலையில் இருந்து சரசு பிறழ்ந்து அரக்க நிலைக்கு செல்ல காரணமாக அமைந்து போனது. அத்தகைய குணம் கொண்ட தாயின் அருகில் அலர் இருப்பது என்றுமே அவளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதாலேயே அவன் திருமணம் முடிந்ததும் சென்னைக்கு அழைத்து சென்றது… தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பொறுமை காத்தது.
ஆனால் காலம் அனைத்தையும் மாற்றும் அருமருந்தல்லவா..!! திருமணத்திற்கு பின் வாழ்வில் அவன் கடந்த வந்த நிகழ்வுகளின் தாக்கம் அதிகரித்து தாயின் நினைவை புரட்டி போட சரசுவை தீவிரமாக தேட துவங்கியவன் காவல் துறையிலும் புகார் அளித்திருந்தான்.
அதிலும் திருமணமான புதிதில் பல நேரங்கள் அலர் “நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கிறதுரொம்ப போர் அடிக்குது மாமா லைப்ல ஒரு த்ரில்லே இல்ல, கல்யாணம் ஆனா லைஃப்ல எவ்ளோ சேலஞ்சஸ் இருக்கும்..!!! ஹஸ்பன்ட்ல தொடங்கி மாமனார் மாமியார்னு மத்த உறவுகள் வரை எல்லார் கூடவும் பழகி அவங்களை புரிஞ்சிக்கிறது அவங்க மனசுலயும் இடம் பிடிக்கிறது எவ்ளோ பெரிய விஷயம், ஆனா எனக்கு அப்படி எந்த ஒரு டாஸ்க்கும் இல்லை என்று சலித்து கொண்ட மனைவியை எழில் விசித்திரமாக பார்க்க.
அவன் பார்வையை கண்டுகொண்டவள், “ஆமா மாமா அண்ணாவும் அண்ணியும் ரொம்ப ஸ்வீட்..!! குட்டீஸ் ரெண்டும் அதுக்கு மேல செம கியூட், இங்க வரும் போதுஅண்ணியே எல்லாம் செஞ்சிடுறாங்க நான் செய்றதுல ஏதாவது கூட, குறைய இருந்தாலும் அதை பெருசு பண்ணாம அவங்களே அதை சரி பண்ணிடுறாங்க… அண்ணியை கம்பேர் பண்ணும் போது எங்க அம்மாவே பரவால்ல மாமா.., லீவ்ல வரும்போது எல்லாம் கட்டாய படுத்தி என்னைசமையல் ரூம்க்கு கூட்டிட்டுபோகும் போது எல்லாம் வீரத்தழும்போட தான் வெளியே வருவேன்” என்றிட அவள் கூறிய விதத்தில் எழிலன் முகத்தில் அரும்பிய புன்னகையுடன் தன் வேலையை தொடர..,
நிஜமாதான் மாமா..!! எங்கம்மாவே நான் பண்றதுல ரொம்ப டென்ஷன் ஆகிடுவாங்க, அப்போ எல்லாம் எங்க வீட்ல கரண்டி பறக்காத நாளே இல்லை தெரியுமா..!! ஆனா உங்க அக்கா என்னை ஒரு கேள்விகூட கேட்கிறது இல்லை. இவங்க எல்லாம் என்ன நாத்தனாரோ..??? கொஞ்சமாவது புதுசா வந்திருக்க தம்பி பொண்டாட்டிகிட்ட குறை கண்டுபிடிக்க வேண்டாம்..?? எவ்ளோ பேர் இதையே வேலையா வச்சிருக்காங்க தெரியுமா..?? ஆனா இவங்க நாத்தனார் மாதிரியா நடந்துக்குறாங்க..???” என்று கேட்க,
குறிப்பெடுத்துக்கொண்டு இருந்த எழில் தலையை நிமிர்த்தாமல், “ஏன்டி எங்க அக்கா என்ன உன்னை இன்னைக்கு நேத்தா பார்க்குறாங்க நீ பிறந்ததுல இருந்தே உன்னை அவங்களுக்கு தெரியும்… அப்புறம் எப்படி உன்கிட்ட நல்ல சமையலை எதிர்பார்ப்பாங்க அதைவிட அவங்களுக்கு அவங்க உசுரு ரொம்ப முக்கியம்.., அதுவும் எங்க அக்காவை நம்பி பல ஜீவன் இருக்கு அவங்களை குறை சொல்லும் முன்ன அதையும் கொஞ்சம் யோசிச்சு பாருடி” என்று மிகத்தீவிரமான குரலில் கூற..,
அவன் கேலியை உணராத அலர் தொடர்ந்து, “அடுத்து மாமா, அவரும் எப்போவாவது தான் இங்க வராரு ரெண்டு நாள் கூட இருக்கிறது இல்லை என்று அவன் தந்தையின் வரவு குறித்து குறைபட்டவள்.., அதுவும் அவர் வரும்போது எல்லாம் பல நேரம் நீங்க தான் சமைக்கிறீங்க அதை பார்த்தும் அவர் ஒரு வார்த்தை என்னை எதுவும் கேட்கிறது இல்லை” என்று முகம் சுருக்கிட,
“அடியேய் எங்கப்பா உசுரு எனக்கு முக்கியம்டி” என்று அவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற..,
“மாமாஆஆ என்று முறைத்தவள் அப்போ நான் என்ன அவ்ளோ மோசமாவா சமைக்கிறேன்” என்றாள்.
“அப்படி எல்லாம் இல்லடி பட்டு… என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து நீ எதோ முக்கியமா சொல்லிட்டு இருந்தியே கண்டினியூ பண்ணு”எனவும் அவன் புறம் திரும்பி சம்மணமிட்டு அமர்ந்தவள் உற்சாக குரலில்,
“இதே உங்க அம்மா மட்டும் நம்ம கூட இருந்திருந்தா நான் செய்றதுல எவ்ளோ குறை கண்டு பிடிச்சிருப்பாங்க..?? என்னை எவ்ளோ கேள்வி கேட்டிருப்பாங்க..?? தினமும் எனக்கும் அவங்களுக்கு எத்தனை டிஷ்யூம் டிஷ்யூம் நடந்திருக்கும்.., அது மட்டுமா உங்களுக்கு நியாபகம் இருக்கா ஒருமுறை உங்க அம்மா ‘எனக்கு இருக்கிற வாய்க்கு நான் கல்யாணமாகி வெள்ளிக்கிழமை போய் சனிக்கிழமை வந்துடுவேன்னு சொன்னாங்களே..!!‘ என்று கேட்க,
எழிலுக்கும் அன்னை கூறியது நன்றாக நினைவிருக்க, ‘ஆம்‘ எனும் விதமாக தலை அசைத்தவன் “எதுக்குடி இப்போ அதை சொல்ற..?” என்றிட,
“எதுக்காஆஅ..?? அது எப்படி உங்கம்மாவை நான் சும்மா விட!அதெல்லாம் முடியாது அவங்க இதுவரை பேசின பேச்சுக்கு எல்லாம்நான் கொடுக்குற பதில்ல இனி அவங்க வாயே திறக்க கூடாது.., அதுமட்டுமா அவங்களை எப்படி எல்லாம் டிசைன் டிசைனா வச்சி செய்யணும்ன்னு எவ்ளோ ப்ளான் பண்ணி இருக்கேன், மொதல்ல அவங்களை கூட்டிட்டு வாங்க எனக்கு இனி என்டர்டைன்மென்ட்டே உங்க அம்மா தான்”என்றிட,
அதுவரை கையில் இருந்த கோப்பில் விழிகளை ஓடவிட்டவாறே அவளுக்கு செவி சாய்த்திருந்தவன் அவளின் இறுதி வரிகளில் சட்டென தலை நிமிர்த்தி, “அடிப்பாவி நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா..? என் நிம்மதியை கெடுக்க பாக்குறியாடி…!!” என்று அவள் காதை பிடித்து திருக,
“ஸ்ஸ்ஆஆ இல்லை மாமா அப்படி எல்லாம் இல்லை..” என்றவளின் முகத்தை தன் அருகே இழுத்து அவள் இதழ்களை நெருங்க அவன் செய்கையில் அலரின் பேச்சு நொடிக்கும் குறைவான நேரத்தில் தடைபட்டு தான் போனது.
காந்தமென ஈர்க்கும் அவன் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒருவித தவிப்புடன் இமைகள் படபடக்க தடதடக்கும்மனதை கண்களை இறுக மூடி கட்டுபடுத்தியவாறு அலர் இருக்க, எழிலோ கையில் ஏந்திய அவள் வதனத்தில் மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் நர்த்தனமாடுவதையும் இதழ்களின் துடிப்பையும் திடீரென படர்ந்த வெட்க சிவப்பையும் ரசித்துகொண்டே அவன் அதரங்கள் கொண்டு சில நொடிகள் அவள் இதழ்களை உரசி அவற்றுடன் உறவாடியவன் அவை தீப்பற்றும் முன் சட்டென அவள் கீழிதழை பற்களால் இழுத்து கடித்து வைக்க..,
அவன் இதழ் தீண்டலில் லயித்து போயிருந்தவள் அவன் திடீரென கடிக்கவும்இதை எதிர்பாராதவள் சட்டென விழி மலர்த்தி, ‘ஆஆஅ… என்ன மாமா இது..!! எதுக்கு கடிச்சிங்க‘ என்று ஏமாற்றத்துடன் கேட்க,
அவள் இதழ்களை வருடியவாறே ‘பின்னே கொஞ்ச நஞ்ச பேச்சாடி இது பேசுது..!!‘ என்றவன் அவள் கீழிதழை அழுத்தமாக பற்றி “ஏன்டி, எங்க நீ என் அம்மா கூட இருந்தா தினமும் உனக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துட்டு உன்னை கஷ்டபடுத்தி குறை சொல்லி உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டங்களோன்னு அவங்க கண்ணுலையே மண்ணை தூவி ட்ரான்ஸ்பர் வாங்கி, அவங்களுக்கு தெரியாம இங்க உனக்காக வீட்டை வாங்கி, அவங்களை எதிர்த்துட்டு எவ்ளோ கஷ்டபட்டு உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன், நீ என்னடான்னா எங்க அம்மாவை கூட்டிட்டு வர சொல்ற..??? என்டர்டைன்மென்ட் வேணும்ங்கிற..!! ஒன்னும் முடியலையாடிஉனக்கு..???? என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் தொடர்ந்து,
“ஏன் அன்னைக்கு எங்க அம்மா அடிச்ச அடி பத்தலையா..?? இன்னும் வேணுமா..??” என்று சீறியவன் அன்னைக்கு அவங்க அடிச்சப்ப மட்டும் பம்மிட்டு நடுங்கி போய் என் கையை பிடிச்சிட்டு நின்ன, இப்ப இவ்ளோ பேச்சு பேசி அவங்களைகூட்டிட்டு வர சொல்ற..!! என்ன குளிர் விட்டு போச்சா..?? சரசுவ கூட்டிட்டு வரட்டா..?? என்று புருவம் உயர்த்தி கேட்க தன் இதழ்களை விடுவித்து கொண்டவள் , ‘கூட்டிட்டு வாங்கன்னு தான் நானும் சொல்றேன்‘ என்றாள்.
“ஏய் விளையாடாதடி”
“விளையாடலை மாமா ஐ ஆம் வெரி சீரியஸ் அண்ட் ஐ ரியலி மீன் இட்… அன்னைக்கு நான் உங்க கையை பிடிச்சதுக்கு தானே என்னை அப்படி பேசினாங்க, இப்போ அவங்க எதிரல்ல உங்க கையை பிடிக்கிறது மட்டும் இல்லை அதுக்கும் மேல போய் உங்களை கட்டிப்பிடிப்பேன், மடியில் உட்காருவேன், முத்தம் கொடுப்பேன் என்று அவன் கையில் இருந்த கோப்பை பிடுங்கி மேஜையில் வைத்தவள் சொன்னவைகள் ஒவ்வொன்றையும் செயலிலும் செய்து இறுதியாக அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து, அப்போ என்ன பேசுவாங்க பண்ணுவாங்கன்னு நானும் பார்த்துடுறேன்” என்று கடுமையான குரலில் கூற திகைத்து தான் போனான் எழில்..,
இதுநேரம் பேசிக்கொண்டிருந்தவள் ஏதோ விளையாட்டிற்கு சொல்கிறாள் என்று புன்னகையோடு கடந்திருந்தவனுக்கு இப்போது அவள் பேச்சு மாறுபட்டிருக்க அதை உறுதிபடுத்த வேண்டி அவளை ஆராய அவள் பார்வையே அவளின் திடத்தை எடுத்துரைக்க..,
“ஏய் ரௌடி பேபி என்னடி இது..!!!வேண்டாம் அவங்களை பத்தி உனக்கு சரியா தெரியாது…,அவங்ககிட்ட இருந்து தள்ளி இருக்கிறதுதான் உனக்கு நல்லது, நான் ஏற்கனவே அவங்களை தேட எல்லா பக்கமும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன் ஆனா அவங்க கிடைச்ச அப்புறம் அவங்களை இங்க கூட்டிட்டு வர எண்ணம் எனக்கு நிச்சயமா இல்லை.., சோ இதோட இந்த பேச்சை விடு” என்று அவளை தன் மடியில் இருந்து அருகே அமர்த்த,
அலரோ அதை மறுத்து மீண்டும் அவன் மடியில் அமர்ந்து.. வலி இழையோடும் விழிகள் கொண்டு அவனை பார்த்தவள், “முடியாது மாமா.., அம்மாவையும் என்ன எல்லாம் பேசினாங்க அதுக்கெல்லாம் நான் திருப்பி கொடுக்க வேண்டாமா ..!! அப்போ நான் அண்ணன் பொண்ணு ஆனா இப்போ மருமகள்.., மருமகளோட பவர் என்னன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க.., இதுவரை மாமியார் கொடுமை பார்த்திருப்பிங்க அவங்களை கூட்டிட்டு வாங்க மருமகள் கொடுமைன்னா என்னன்னுகாட்டு காட்டுன்னு காட்டுறேன்” என்று கட்டுக்கடங்காத கோபத்துடன் கூறியவள்,
“வரைமுறை இல்லாம பேசின பேச்சுக்கு அவங்க அனுபவிக்க வேண்டாம்.., தப்பு பண்ணிட்டு ஓடி ஒளிஞ்சிகிட்டா சரியா போயிடுமா..?? தப்பா பேச தைரியம் இருக்கும் போது அதை அடுத்தவங்க தட்டி கேட்டா அதை எதிர்கொள்ளவும் தைரியம் இருக்கனும்” என்றவள் எழில் அவள் மீதான பார்வையை அகற்றாமல் போக அவன் விழிகளை சந்திக்க முடியாதுதலை குனிந்து சிலநொடிகள் மௌனமாகிட ‘என்னடி அமைதி ஆகிட்ட‘ என்றான் கணவன்.
விழிகளில் திரண்டிருந்த நீருடன் அவனை பார்த்தவள் மெல்லிய குரலில், “அவங்களால தானே நான் உங்களை தப்பா நென..ச்சிட்டு முட்.. முட்டாள்தனமா பேசி உங்களை கஷ்டபடுத்தி…” என்று குற்ற உணர்வின் தவிப்பில் மேலும் பேச முடியாமல் போனவளின்விழியில் இருந்து வழிந்த நீர் உருண்டு அவன் நெஞ்சை தொட,
‘ப்ச் என்னடி இது..?? எதுக்கு இப்போ இதையெல்லாம் பேசிட்டு இருக்க… விடு‘ என்று அவள் கண்களை துடைத்து விட அவளோ அவனை இறுக்கமாககட்டிக்கொண்டு,
“ப்ளீஸ் மாமா எப்படியாவது கண்டு பிடிச்சி கூட்டிட்டு வாங்க, உங்க அம்மாகிட்ட நான் கேட்க வேண்டியது நிறைய இருக்கு” என்று கேட்க..,
அலர் தன் உணர்வுகளின் பிடியில் சரசுவின் வரவில் ஏற்பட போகும் மாற்றம் பற்றி யோசியாமல் பேசினாலும் தாயை இங்கு கொண்டு வருவதில் எழிலுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.., ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம் எனும்போது.., இங்கு அலர்விழி மீது அவன் அன்னைக்கு இருக்கும் வன்மத்தை நன்கு அறிந்தவன், அதனால் என்றுமே அவன் அத்தகைய அபாயத்தில் அவளை நிறுத்த தயாராக இல்லை.
ஆனால் அந்நேரம் அவளை சமாளிக்க வேண்டிசரி என்று தலை அசைத்தான்.அதிலும் இவள் கேட்பதற்காக அன்னையை அவன் அழைத்து வந்தால் அதற்கான நாதனின் எதிர்வினை மிக மிக மோசமானதாக அமைந்து அவர்களிடையே விரிசலை அதிகரிக்கும் என்பது அவனுக்கு நன்கு தெரியும்.
அலரின் பிரசவத்தின் போது தாய்மையின் மகத்துவத்தை உணர்ந்தவனுக்கு அதற்கு மேலும் சரசுவை ஒதுக்கி வைப்பதில் விருப்பமில்லை..
பின்னே எத்தகைய கொடூர மனம் படைத்தவராக இருந்தாலும் தன்னை ஈன்ற கடனை மகனாக செலுத்த வேண்டிய கடமையை உணர்ந்தவன் தாயை தேடும் பணியை தீவிரமாக்கினான். அவனது கைவிடாத தேடலின் பலனாக பல மாதங்கள் கழித்து தூரத்து சொந்தமான மஞ்சுளாவை சந்திக்க நேரிட அவரே சரசு சிலமாதங்கள் அவர்பாதுகாப்பில் இருந்ததையும் அதன்பின் ஒரு நாள் நள்ளிரவில் இவர்களை தேடி சென்னைக்கு கிளம்பி சென்றதையும் குறிப்பிட, அவரிடம் அன்றைய விவரங்களை பெற்றவன் ரயில்வே போலீசிடமும் புகார் அளித்திருந்தான்.
ஆனால் மாதங்கள் பல கடந்தும் அவரை பற்றிய எந்த தகவலும் எழிலால் பெரிதாக பெற முடியவில்லை. அப்போது தான் ஒரு நாள் ரயில்வேயில் பணிபுரியும் நந்தனின் நண்பரான செல்வத்தை சந்திக்க நேர்ந்திட எழில் அவரிடமும் தாயை தேடுவதாகவும் அவர் பற்றிய தகவல் தெரிந்தால் தனக்கு தெரிவிக்குமாறு கூற.., சரி என்றவாறு அவனை அனுப்பி வைத்தவர் அதன் பின்பும் வாரம் ஒருமுறை என்று இரு மாதங்களாக எழில் அவரை தொடர்பு கொண்டு சரசுவை பற்றி விசாரிக்க, எழிலன் படும்பாட்டை உணர்ந்தவர் அதற்க்கு மேலும் உண்மையை மறைக்க முடியாமல் அவனை வீட்டிற்கு அழைத்து அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார்.
அதுநாள் வரை நந்தனின் மனம் மாற்றம் பெற்று என்றேனும் ஒருநாள் அவரிடம் அளிக்க வேண்டி செல்வம் பாதுகாத்து வந்த சரசுவின் அஸ்தியை எழிலிடம் அளிக்க.., ஈரம் கசியும் விழிகளுடன் அதை பெற்றுகொண்டவன் சுடருக்கு தகவல் தெரிவித்து விட்டு தந்தையை தேடி சென்று அவர் முன் அதை வைத்து ஆதங்கத்துடன் அவரிடம் கேள்வி எழுப்ப..,
முதலில் நந்தன் பிள்ளைகளின் நன்மை என்று வாதிட தந்தை மகனுக்கு இடையில் மிகபெரிய வாக்குவாதம் ஏற்பட்டு போனதுஅப்போது அங்கு வந்து சேர்ந்த சுடர்கொடியும் அவரிடம், “அவங்க எவ்ளோ தப்பு பண்ணி இருந்தாலும் எங்களுக்கு அம்மா, இதோஇவன் கீர்த்தியை வேண்டாம்ன்னு சொல்லவும் அவங்களோட இயல்பான பிடிவாதம் அதிகமாகி கீர்த்தியை கல்யாணம் பண்ணாதவன் அலரையும் பண்ணகூடாதுன்னு தான் தரம் தாழ்ந்து போனாங்க…, யாரும் மறுக்கலை ஆனா அதுக்காக பெத்த பிள்ளைகளை கடைசியா கூட அம்மாவோட முகத்தை பார்க்க விடாம நீங்க பண்ணினதுக்கு பேர் என்னப்பா..??” என்று மனமுடைந்து கேட்க ஏற்கனவே தான் செய்தது மனிதமற்ற செயல் என்பதை உணர்ந்து தனக்குள் மனம் வெதும்பி தினமும் கண்ணீர் வடித்து கொண்டிருந்த நந்தன் இப்போது பெற்ற பிள்ளைகளின் கேள்வியிலும் ஒதுக்கத்தில் மேலும் மனமுடைந்து போனார்.
அலர்விழியும் அவரிடம், பிறக்கும் ஒவ்வொரு உயிரும் எவ்ளோ தூய்மையானதோ அதேபோல இறந்தவங்களும் தூய்மையானவங்க தான் மாமா… அவங்களுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை கூட செய்ய விடாம அவங்க மேல நம்மளோட வெறுப்பை காட்டுறது நிச்சயமா மனிதாபிமான செயல் இல்லை. அவங்க உயிரோட இருந்தப்போ அவங்களோட தப்பை கண்டிச்சி திருத்தாம இறந்தப்புறம் உங்களோட வன்மத்தை தீர்த்துக்கிறது எந்த விதத்துல நியாயம்” என்று கேட்க.., நந்தனால் பதில் அளிக்க முடியவில்லை.
“அவங்க உங்க மனைவி மட்டும் இல்ல மாமாக்கும் அண்ணிக்கும் அம்மா, சர்வேஷ், வேதா, அவிரனுக்கு பாட்டியும் கூட.., உங்களுக்கு நல்ல மனைவியா இல்லாம இருந்திருக்கலாம் இவங்களுக்கு நல்ல அம்மாவா இல்லாம போயிருக்கலாம் ஆனா இவங்களுக்கெல்லாம் நல்ல பாட்டியா தானே இருந்தாங்க… சர்வேஷ்க்கு அவங்களை ரொம்ப பிடிக்குமே அப்படி இருக்கும் போது அந்த குழந்தையைகூட கடைசியா அவங்களை பார்க்க முடியாம செஞ்சது ரொம்ப தப்பு மாமா” என்று கூற நந்தன் தன்னையே வெறுத்து போனார்.
அதன் பின் எழில் சரசுவின் அஸ்தியை கொண்டு புனித நீரில் கரைத்து பித்ருக்களுக்கான தர்ப்பணம் அளித்து அவருக்கு இறுதி மரியாதை செய்திருந்தான். நந்தனும் கனத்த மனதோடு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தார் ஆனாலும் பிள்ளைகள் இருவரும் அவரின் செயலால் பெரிதாக காயப்பட்டு தான் போயிருந்தனர்.
நினைவில் இருந்து மீண்டவன் அங்கு தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு முன் அலர்விழி அனைத்தையும் தயாராக வைத்து இருக்க எழில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அவர்களை வழிபட மற்றவர்களும் அவனை பின்பற்றி இருந்தனர்.