இதனால் வீடே போர்களமானது !! பிறந்த வீட்டிற்கு அடிக்கடி வந்தவள் சந்துருவுடனான நட்பை புதுப்பிக்க துவங்கினாள். வீடு திரும்பிய சரசுவிடம் விசாரிக்க நந்தனின் எந்த கேள்விகளையும் பொருட்படுத்தாத சரசு அலட்சியமாய் பதில் அளிக்க நந்தனுக்கும் சரசுவுக்கும் இடையில் வார்த்தை தடித்து பேச்சு முற்றியதில் நந்தன் சரசுவை அறைந்துவிட்டார்.
என்னையே அடிப்பியா..? என்று சிலிர்த்தெழுந்தவள் வீட்டின் முன்பு கூடிய கூட்டத்தை கண்டதும் உக்கிர காளியாக மாறி அனைவரையும் சுழற்றி அடித்தாள்.
“ஏன்டா உங்கிட்ட கண்டிச்சு வைக்க சொன்னா.. கை ஓங்குறஎங்கிருந்து கத்துகிட்ட..?” என்று கண்டித்த ராஜி மருமகளிடம்,
“அம்மாடி சரசு அந்த பையன் யாரா இருந்தாலும் சரி அவனோடு பொது இடத்துல பேச வேண்டாம்அது நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது..” என்றவரை மாமனார் என்றும் பாராமல் அவர் வயதை மதிக்காமல் வரம்பு மீறி பேச துவங்கவும்,
“இங்க பாருமா நீ பேசினதை நான் தப்புன்னு சொல்லலை யாராக இருந்தாலும் இங்க நம்ம வீட்டுக்கு வரச்சொல்லுஏதாவது உதவின்னா கூட நான் செய்றேன்னு தான் சொல்ல வந்தேன்..” என்றவரிடம்,
‘நீ சொல்ற கதையை கேட்க எவளாவது கேணைச்சி இருப்பா அவகிட்ட சொல்லு ஆனா உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன்’ என்று சொடகிட்டு கிளம்பினாள்.
“அம்மாடி சரசு உங்க மாமா தப்பா எதுவும் சொல்லலை, யாரும் உன்னை வித்தியாசமா பார்த்துட கூடாதுன்னு தான் சொல்றாருஉன் பெயர் கெடக்கூடாதுன்னு அவர் பேசினார்இதை ஏன் பெருசு படுத்துற..” என்று கூற இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சுடரும் எழிலும் பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுது கொண்டிருந்தனர்.
“என்ன கிழவி புருஷனை நியாயப்படுத்த பாக்கறியா..? உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்” என்று ரத்தினம்மாள் தடுக்க தடுக்க விரித்த கூந்தலும் சிவந்த முகமும் கலங்கிய கண்களுமாக அண்ணன்கள் முன் சென்று ராஜி அவளின் நடத்தையின் மீது கேள்வி எழுப்பியதாய் கூறி தேம்பி அழவும்.., தங்கை மீது இருந்த கண்மூடித்தனமான பாசம் எதையும் விசாரிக்க விடாமல்அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனிடம் கேள்வி கேட்க வைத்தது.
ராஜேந்திரனோ ஏற்கனவே மருமகளால் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாதவர் தற்போது அவள் அண்ணன்களின் வாக்குவாதத்தில், “அப்படி உன் தங்கச்சிக்கு இங்க கொடுமை நடக்குதுன்னு நெனைச்சேன்னா கூட்டிட்டு கிளம்புங்கப்பா எங்களை மரியாதையோடு வாழவிடுங்க” என்றார்.
“நாங்களும் ஒன்னும் எங்க தங்கச்சிக்கு வாழ்க்கைப்பிச்சை போடுங்கன்னு கேட்க வரலை. நீங்க எப்படி அவளோட நடத்தையை தப்பா பேசி கழுத்தை பிடிச்சி தள்ளுனீங்கன்னு தான் கேட்க வந்தோம்” என்றனர்.
அவர்களின் குற்றச்சாட்டில் திகைத்துபோன ராஜி, “நீங்க கேக்குறதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எங்களுக்கு அவசியமில்லை இடத்தை காலி பண்ணுங்க”
‘உடனே யோவ்வ்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுயா..? என்று பிரகாசம் அவர் பின்னே செல்லவும் பிரகாசத்திடம் கை கூப்பிய ரத்தினம்மாள், “எங்க மருமகளை நாங்களே அசிங்க படுத்துவோமா..? நாங்க அப்படி எதுவும் சொல்லலைப்பா” என்றார்.
பிரகாசமோ அப்போ என் தங்கச்சி பொய் சொல்றாளா..? நீங்க பண்ணின கொடுமைக்கு போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தா வருஷக்கணக்கா உள்ள உட்காரனும். என்ன உட்கார வைக்கட்டா..?’ என்று மிரட்ட,
“இவங்களால நான் பட்டது போதுண்ணா என் தலை எழுத்து எப்படியோ நான் அப்படியே இருந்துட்டு போறேன் என்னை அந்தாளு அடிச்சுபோட்டாலும் ஏன்னு கேட்க நாதி இல்லை” என்று தேம்பி அழவும்..,
“அப்போ நாங்க எல்லாம் எதுக்கும்மா இருக்கோம் அப்படி ஒன்னும் நீ இங்க கஷ்டப்படனும்னு அவசியமில்லை” என்றவர்கள் குழந்தைகளோடு தங்கையை அழைத்து செல்ல ஆயத்தமாயினர்.
‘உங்க தங்கச்சியை கூட்டிட்டு போகலாம் ஆனா என் பிள்ளைகளை இல்லை..‘ என்று எழிலையும் சுடரையும் தன் வசம் நிறுத்திக்கொண்டார் நந்தன்.
பிள்ளைகளுக்காக நந்தனிடம் அண்ணன்கள் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட அது ஒரு கட்டத்தில் கைகலப்பாகியது. ரத்தினம்மாள் அனைவரையும் விலக்கி நிறுத்தவும் அவருடன் மேலும் வாதிடாமல் தங்கையோடு வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்த மகளால் மிகவும் மனமுடைந்து போன சுப்பிரமணியின் உயிர் ஒரு நாள் அவர் உறக்கத்திலேயே பிரிந்தது.
பிள்ளைகளை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் பிறந்த வீட்டில் இருப்போரின் நிம்மதியை குலைத்து கொண்டிருந்தவளுக்கு தீபிகா மற்றும் வளர்மதியின் வரவு சலங்கை கட்டி விட்டது போல் ஆனது. தான் வீட்டோடு வந்து அமர்ந்திருப்பதை அவர்கள் கேள்வி எழுப்பாதவாறு அவர்களுக்கு குடைச்சல் கொடுத்தாள். தனக்கு பணிவிடை செய்வதையே அவர்களின் அன்றாட பணி ஆக்கினாள்.
அண்ணன்களின் முன் பாசப்பறவையாய் நடிப்பவள் அண்ணிகளிடம் அதிகாரம் செலுத்தினாள்.தீபிகா ஒன்றும் வளர்மதி அல்லவே நாதனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சரசுவை அனுசரிக்கமுதலில் நம்பாத பிரகாசமும் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பளித்து தங்கையின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவர் அன்றிலிருந்து கண்மூடித்தனமாக அவளை ஆதரிப்பதை நிறுத்தி கொண்டார்.
ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் நாதனுக்கு தங்கையின் நடிப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை வீடு திரும்பியதை அறிந்த நீலா பிள்ளைகளை எண்ணி மனம் வெதும்பி போனார். ராஜியிடம் சென்று பேசிப்பார்த்தார் அவர் தம் முடிவில் உறுதியாய் இருக்கவும் சுடரையும் எழிலையும் சில காலம் தன் பொறுப்பில் எடுத்து பார்த்துக்கொண்டவர் பிள்ளைகளின் தாய் ஏக்கத்தை தீர்த்திருந்தார்.
வளர்மதி மிகப்பெரிய பின்புலம் இல்லாமல் இருந்ததில் சரசுவிடம் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல பலநேரம் அவர்கொடிய நாக்கிற்கு இரையாகி இருக்கிறார். இதை கண்ட தாயம்மாள் மகளை கணவனுடன் சேர்த்துவிடுமாறு நாதனிடம் வேண்டினார். நாதனும் ராஜியிடம் மன்னிப்பு கேட்க மனம் இறங்காதவர் ‘எங்களுக்கு கௌரவம் முக்கியம் என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ண போறேன்பா’ என்றுவிட்டார்.
எங்கே மகளின் வாழ்வு பறிபோய் விடுமோ என்று அஞ்சிய தாயம்மாள் பிள்ளைகள் அனைவரையும் அழைத்து எப்பாடுபட்டாவது மகளை புகுந்த வீட்டில் வாழ வைக்குமாறு மன்றாடிட நீலா மனம் வெறுத்து போனவராய் தம்பிகளை சாடி விட்டு கிளம்பிவிட்டார்.
குமாரசாமியோ இவ மேலதான் தப்பிருக்கும் இவளுக்காக அங்க போய் அசிங்கப்பட நான் விரும்பல என்று தன் முடிவில் உறுதியாய் நின்றார். முதலில் மறுத்த ராஜனும் நண்பனுக்காக செல்ல சம்மதித்தார், அயவந்திநாதன் பிரகாசத்திடம் பேசி சம்மதிக்க வைத்து இன்னும் சில பெரிய தலைகளுடன் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டார்.
“ராஜி நீயே ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பண்றவன் ஆனா இப்படி உன் குடும்ப பிரச்சனையை பஞ்சாயத்து வைக்கிற அளவுக்காப்பா வளர விடுவ..! உன் குடும்பமே இங்க நிக்குறத பார்க்க கொஞ்சம் சங்கடமாக இருக்குப்பா” என்றார் பஞ்சாயத்தாரில் ஒருவர்.
அதற்கு ராஜேந்திரன், “மாமா, தலைக்கு மேல வெள்ளம் போனப்புறம் ஜான் போனா என்ன முழம் போனா என்ன..?” நான் எப்போவோ இந்த பொண்ணு வேண்டாம்னு தீர்த்து கட்டிட்டேன் ஆனா அண்ணனுங்க விடாப்பிடியா அவளை வாழவச்சு தீருவோம்னு இருக்காங்க.. என்றவர் மகனிடம் திரும்பி, “டேய் உன்னோட முடிவு என்னனு எல்லாருக்கும் சொல்லு” என்றார்.
‘எனக்கு இவ கூட வாழ விருப்பம் இல்லைங்கஎன்னை பெத்தவங்க கூட ஒத்திட்டு போக மாட்டேங்குறா இன்னொருத்தன் கூட என்ன பேச்சுங்க இவளுக்கு அதை கண்டிச்சா ஊரை கூட்டி ஒப்பாரி வைக்குறா..! எப்பவுமே ஓயாத சண்டை.., சண்டைன்னு இருந்தா ஒரு மனுஷன் எப்படிங்க நிம்மதியா இருக்க முடியும்’ என்றார் நந்தன்.
“இதோபாரு நான் கட்டிக்கிட்டது உன்னை தான் உன்னை பெத்தவங்களை இல்லைஅந்த வீட்ல மொதல்ல எனக்கு நிம்மதி இருக்கா..? அம்மா முந்தானையை பிடிச்சிட்டு திரியிறியே வெட்கமா இல்லை உனக்கு..? உங்கப்பா நான் இன்னொருத்தன் கூட பேசினேன்னு சொன்னதும் என்னை பஞ்சாயத்துல நிற்க வச்சிருக்கியே இதையே நான் சொல்லி இருந்தாலும் இப்படித்தான் பண்ணிருப்பியா..?” என்றவள் அதாவது உங்கம்மா.. என்று ஆரம்பித்த சரசுவின் கன்னத்தில் இடியென கரம் இறங்கவும் கண்களில் பொறி பறக்க விக்கித்து போய் நின்றாள் சரஸ்வதி.
அங்கே ரத்தினம்மாளோ கண்களில் கனலோடு, “நரம்பில்லாத நாக்கு என்னானாலும் பேசுமா..? இத்தனை வருஷமா மான மரியாதைக்கு கட்டுப்பட்டு குடும்ப கௌரவத்துக்காக உன்னோட அக்கிரமங்களை பொறுத்துட்டு போனேன்ஆனா எப்போ நீ என்னையே அசிங்கப்படுத்த துணிஞ்சிட்டியோஇனி உனக்கு என் வீட்ல இடமில்லை போடி“
‘என்னையே அடிப்பியா..’ என்று ஆரம்பித்த சரசுவின் கன்னத்தில் திரும்பவும் தன் கைத்தடத்தை அழுத்தமாய் பதித்தவர், “இன்னொரு வார்த்தை உன் வாயில இருந்து வந்தது வெட்டி போட்டுடுவேன்..!” என்று அவளை எச்சரித்தவர் பஞ்சாயத்தாரிடம் இத்தோட எங்களுக்கும் இவளுக்குமான சம்பந்தம் முடிஞ்சதுங்க எனவும்
“அத்தை.. வேண்டாம் அத்தை அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதிங்கஅது சின்ன புள்ள செல்லமா வளர்த்துட்டோம் என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு புரியாம பேசுது, பாப்பாக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அப்படி பேசி இருக்க கூடாது” என்றார் நாதன்.
‘மரியாதையா அவங்க கிட்ட மன்னிப்பு கேளு இல்லை இத்தோட உன் உறவை முறிச்சிட்டு நாங்க கிளம்பிடுவோம்’ என்றார் ராஜன். அண்ணனின் வார்த்தைகள் அவளிடம் பேரதிர்வுகளை கிளப்ப உடனே பஞ்சாயத்தாரிடம்,
‘எனக்கு அவர் கூட தான் வாழனும் எனக்கு என் பிள்ளைங்க வேணும் அவங்க இல்லாம என்னால வாழ முடியாது’ என்று கதற ஆரம்பித்தாள்
“ராஜி அம்மா அப்பா ரெண்டு பேரும் முக்கியமில்லையாபிள்ளைங்களுக்காக கொஞ்சம் யோசிப்பா..??தாய் இல்லாத பிள்ளைகளா உன் பேரபசங்க வளரணும்னு நெனைக்குறியா..?” என்ற பஞ்சாயத்தாரிடம்,
ராஜியோ ‘அவங்க ஏன் தாய் இல்லாம வளருறாங்க.. என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ணி மருமகளை கூட்டிட்டு வருவேன்’ என்றார்.
‘என்ன ராஜி நீயே இப்படி பேசுற சித்தி என்னைக்கு இருந்தாலும் அம்மா ஆக முடியாது. பொண்ணு வேற இன்னும் ரெண்டொரு வருஷத்துல சமைஞ்சு நிக்கும் அம்மா கூட இருக்குறது தான் சரிப்பா’
நாதன் ராஜியிடம் நேரடியாக “மாமா இனிமேல் இப்படி நடக்காது அதுக்கு நாங்க பொறுப்பு தயவுசெய்து எல்லாத்தையும் மறந்து பாப்பாவை ஏத்துக்கோங்க” என்று பலநிமிடங்களுக்கு அவர் பேசிய விதத்தில் அசைந்த ராஜேந்திரன் பஞ்சாயத்தாரிடம்,
‘சரிங்க என் மகன் சம்மதிச்சா பேரபுள்ளைங்களுக்காக நாங்க ஏத்துக்குறோம். ஆனா எங்க கூட வச்சுக்க மாட்டோம் என் மகன் நல்லா சம்பாதிக்குறான் தங்கச்சியை வாழ வைக்கணும்னு இங்க வந்தவங்க கூடவே அனுப்பிடுங்க வாழ வைக்கட்டும்’ என்று இத்தோடு முடிந்தது போல் அவர் எழுந்து கொள்ள பஞ்சாயத்தாரும் நந்தனிடம் குழந்தைகளுக்காக சேர்ந்திருக்குமாறு கூறஅதை ஏற்றுக்கொண்டு சரசு குழந்தைகளோடு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
அதாவது பெண் பிள்ளையைகருத்தில் கொண்டு பேயோடு குடித்தனம் நடத்த கிளம்பிவிட்டார்.
ஆனால் தனிக்குடித்தனம் சென்ற பின்னர் தான் கண்டிக்க யாருமில்லாது போக சரசுவின் ஆட்டம் அதிகமாயிற்று. ஒரு கட்டத்தில் நந்தனால் அவளை கட்டுப்படுத்த முடியாமல் போக பெண்பிள்ளையின் நலனுக்காகவே பொறுமை காத்தார்.பிள்ளைகளுக்காக பிள்ளைகளுடன் தன் நாட்களை நகர்த்த துவங்கினார்.
கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதுநாளடைவில் வாடிக்கையாகிவிட ஒரு கட்டத்தில் சம்பளப்பணம் முழுவதும் வட்டிக்கே சென்றுவிடும். அது போன்ற நேரங்களில் சிறிதும் மனம் இறங்காமல் போனார் ராஜி, அயவந்திநாதன் தான் தாயின் வார்த்தைக்காக ஓடி சென்று உதவுவார்.
தினமும் நந்தன் நாதன் வீட்டுக்கு பிள்ளைகளை அழைத்து வர வளர்மதியும் எவ்வித முகசுழிப்பும் இல்லாமல் நாத்தனார் பிள்ளைகளுக்கு உணவளிப்பார் .மாமி என்று பிள்ளைகளும் வளர்மதியை சுற்றிவர ஆரம்பித்தனர் சுடர்கொடி சமைக்க கற்றுக்கொண்டதே வளர்மதியிடம் தான். நாதனே அவளுக்கு வரன் பார்த்து பாதி செலவை ஏற்று திருமணம் செய்து வைத்தார்.
எழிலும் பள்ளி முடிந்து மாலை வேளைகளை நாதனுடனே கழிப்பான். அத்தகைய கால கட்டங்களில் சரசு நிறம் மாறும் பச்சோந்தியாய்வாய் நிறைய அண்ணா என்றும் வளர் என்றும் ஓயாமல் துதிப்பாள். மெல்ல மெல்ல அண்ணனின் தயவால் தங்களுக்கென சொந்த வீட்டை அமைத்து கொண்டாள். அதே சமயத்தில் மற்ற அண்ணங்களுடன் தனக்கான உறவை புதுப்பிக்க துவங்கினாள்.
தேளின் குணம் கொட்டுவது.. பாம்பின் இயல்பு கடிப்பது.. இது தெரியாமல் அயவந்திநாதன் அதற்கு பால் வார்த்து கொண்டிருந்தார்அவர் எவ்வளவுதான் பார்த்து பார்த்து செய்தாலும் அது ஒரு நாள் அவரை கடிக்கவே செய்தது. ஆனால் அதன் வீரியம் அவரின் குடும்பத்தையே நிலை குலைய செய்தது.
தங்கையின் கடந்த காலம் நீலாவின் மனதில் பாரம் ஏற்றியது. நினைவுகளை விரட்டியவர் அலர் எழிலின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று யோசனையில் அமிழ்ந்தார்.