“என்னாச்சு சார் அவசரமா வர சொன்னீங்க” என்று பள்ளி முதல்வரிடம் அயவந்திநாதன் கேட்க அடுத்த சில நிமிடங்களில் அட்டெண்டரோடு உள்ளே வந்த கதிரை பார்த்து அதிர்ந்து போனார்.
கால்கள் தள்ளாட நிற்க முடியாமல் இருந்தவனை அவர் கைத்தாங்கலாக பிடித்து இருக்க தலை கலைந்து, கண்கள் சொருக மாய லோகத்தில் சஞ்சரித்தவாறு நின்றிருந்தான் கதிர்.
“என்னாச்சு சர் என் பையனுக்கு ஏன் இப்படி இருக்கான்..?”
‘அதை நான் உங்க கிட்ட கேட்கணும் மிஸ்டர் அயவந்திநாதன்..’
‘என்ன சர் சொல்றீங்க புரியலை’
‘மிஸ்டர் நாதன் உங்க பையன் ஸ்கூல்ல போதை மருந்து எடுத்ததோடு இல்லாம ஸ்கூல்ல பசங்களுக்கும் சப்ளை பண்ணி இருக்கான். இன்னிக்கு எக்ஸாம் கூட எழுதாம இவனோட சேர்ந்து ஏழு பசங்க பாத்ரூம் பக்கத்துல போதையில் இருந்திருக்காங்க” என்றதும் முகம் செந்தணலாய் சிவக்க நாற்காலியை விட்டு எழுந்தவர் பளார் என கதிரை அறைந்திருந்தார்.
ஏற்கனவே போதையில் தள்ளாடி கொண்டிருந்தவன் விழுந்த அடியில் அறை மூலையில் சுருண்டு விழுந்திருந்தான்.
“இருங்க மிஸ்டர் நாதன் அவசரப்படாதிங்க பொறுமையா கேளுங்க.. உங்க பையன் இன்னிக்கி ஸ்கூல்ல ட்ரக்ஸ் எடுத்திருக்கான் ஆனா விசாரிச்சப்போ தான் தெரிஞ்சது அவனுக்கு ரொம்ப நாளாவே இந்த பழக்கம் இருந்திருக்குன்னும் பலருக்கு அறிமுகபடுத்தி விற்பனையும் பண்ணி இருக்கான். உங்களுக்கு தெரியாமல் எப்படி இது நிகழ்ந்தது அவன்கிட்ட ஏற்பட்ட மாற்றங்கள் எதையும் நீங்க கவனிக்கலையா..? என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேள்வி எழுப்பினார்.
நாதனோ முதல்வரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மகனையே வெறித்திருந்தார்.
“மிஸ்டர் நாதன் ட்ரக்ஸ் சாதாரண விஷயம் இல்லை இன்னைக்கு ஸ்கூல் வரை வந்திருக்கு ஆனா இவ்வளவு நாட்களாய் பள்ளி தவிர்த்து அவன் பயன்படுத்திய இடங்கள் எவை, முதலில் இது அவனுக்கு எங்கிருந்து கிடைச்சது,கிடைத்ததை வாங்க அவனுக்கு பணம் ஏது..? விஷயம் வெளியில் கசிந்தால் ஸ்கூல் பேர், மதிப்பு பாதிக்க வாய்ப்பிருக்கு அதனால உங்க பையனோட சேர்த்து எல்லாரையும் சஸ்பெண்ட் பண்றோம்“ என்றார்.
“சர் எதுவா இருந்தாலும் நான் அப்புறம் வந்து பேசுறேன்” என்றவர் கதிரை இழுத்து காரில் போட்டு கொண்டு வீட்டிற்கு சென்றார்.
‘வளர்ர்ர்ர்‘ என்ற கர்ஜனையில் வந்து நின்ற வளர்மதியை நாதன் ஓங்கி அறையவும், ‘என்னங்க ஆச்சு..? எதுக்கு அடிக்கறீங்க..?’ என்று கேட்க நாதனோ பெல்ட்டை கழட்டி வாசற்படியில் விழுந்து கிடந்த கதிரிடம் சென்றவர்..,
“ச்சீய்ய் எனக்கு பொறந்தவனாடா நீ..? சொல்லு நாயே எங்கிருந்து இதை பழகின..? என் மானத்தை வாங்கவே பிறப்பெடுத்து இருக்கியா..?” என்று அவனை விலாச துவங்கினார்.வளர்மதி தடுக்கவும் அவரை உதறி தள்ளி கதிரின் ‘ஆ.. ஆ.. வலிக்குது.. வேண்டாம்ப்பா..’ என்ற கதறலையும் வளரின் ‘என்ன ஆச்சுங்க எதுக்கு பிள்ளையை அடிக்கிறீங்க..? தயவுசெஞ்சி அவனை விடுங்கஅவன் அடி தாங்கமாட்டான்’என்ற கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்த பின்பே ஓய்ந்து அமர்ந்தார்.
அழுதவாறு கோழிக்குஞ்சாய் தன்னிடம் அடைக்கலமாகிய பிள்ளையை மடி தாங்கிய வளர்மதிகணவனின் வெறிச்செயலால் உடல் முழுக்க வரி வரியாக சிவந்து போயிருந்த பெல்ட் தடத்தை கண்டு துடி துடித்து போனார். போதையின் பிடியில் இருந்தவனுக்கு தந்தையை எதிர்க்க கூட பலமில்லாது உருக்குலைந்து கிடந்தான். வலியை தவிர வேறு எதையும் அவனால் உணரமுடியவில்லை, தாயின் கண்ணீரோ தந்தையின் கோபமோ அவனை சென்றடையவில்லை.
கதிர் நீயாவது சொல்லுப்பா..எனவும் கண்கள் சொருக தாயை ஏறிட்டவனின் பார்வை தாயை அன்றி வேறெங்கோ வெறித்தது.
மீண்டும் அவன் கன்னம் தட்டி ‘என்ன ஆச்சுப்பா..?’ எனவும் கண்களில் கண்ணீர் உடைப்பெடுக்க வாய் குழற திக்கி திணறியவாறு ‘வ..வல்..வலிக்கிதுமா‘ என்றவாறு தரையில் விழுந்தான்.
காலை தன்னிடம் சிரித்து பேசி மகிழ்ச்சியுடன் காலை உணவை முடித்து பள்ளிக்கு கிளம்பிய பிள்ளையின் தற்போதைய நிலையை எண்ணி பதறி போனது வளர்மதிக்கு.
கீழே கவிழ்ந்து கிடந்த பிள்ளையை கண்டு அவனுக்கு என்னவாகிற்று என்று தவித்தவர் ஏறிட்டு கணவனை பார்க்க அங்கு நாற்காலில் முகம் சிவக்க நாதன் ருத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தார்.
அவரை காணவுமே உடல் முழுக்க அச்சம் பரவ கன்னத்தில் கோலமிட்டிருந்த கண்ணீர் கோடுகளை புடவை முந்தானையால் அழுந்த துடைத்தவாறே உள்ளே சென்று தலையணை கொண்டு வந்து கதிருக்கு வைத்தவர் பிள்ளையை பற்றி தெரிந்து கொள்ள அவர் கோபம் அறிந்தும் அயவந்திநாதனை நெருங்கினார்.
“ஏங்க என்ன ஆச்சு..?” என்ற வளரை மீண்டும் ஓங்கி அறைந்தவர், “என்னடி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா..? இப்படி கொஞ்சிகொஞ்சிசெல்லம் குடுத்து பிள்ளையை கெடுத்து என் மானத்தை வாங்கிட்டுஇப்போ ஒன்னும் தெரியாத மாதிரி என்னையே கேக்குறியா தொலச்சு கட்டிடுவேன் பார்த்துக்கோ எங்க இருந்துடி வந்து சேருறிங்க எனக்குன்னு ?என் மானமே போச்சு பிரின்சிபால் அந்த கேள்வி கேக்குறான்“
‘ஏங்க கதிர்க்கு என்னாச்சு சொல்லுங்க’ என்று வளர் கெஞ்ச,
“ஏய் நீ பெத்து வச்சிருக்கறது பல நாளா போதை மருந்து எடுத்திருக்கான் வீட்ல இருக்குற பொம்பளைக்குபிள்ளை என்ன பன்றான்ஏது பன்றானுகூட தெரியாம வேற என்ன கிழிச்சி கத்தைக்கட்டற வேலை..?அவனை பொறுப்பா வளர்க்க வேண்டியது யார் கடமை ? பிள்ளையை வளர்க்க துப்பில்லை கேள்வி கேட்க வந்துட்டா கேள்வி” என்று பற்களை கடித்தவர்,
‘இப்போ உன்னால தாண்டி கெட்டு குட்டிச்சுவராகி இருக்கான்’என்று மீண்டும் அவரை அடிக்க நெருங்கவும் பயந்து பின் வாங்கிய வளர்மதி “ஏங்க பிள்ளை ஏன் மயங்கி கிடக்குறான்..? யாராவது அவனை எதாவது பண்ணிட்டாங்களா..? மொதல்ல அதை சொல்லுங்க அப்புறம் கூட என்னை அடிக்கலாம்” என்றார்.
“எது இவனை எதோ பண்ணிட்டாங்களா..?இந்த பரதேசி தான் மத்தவங்களுக்கு போதை மருந்து சப்ளை பண்ணி கெடுத்திருக்கு. ஸ்கூல்ல எக்ஸாம் கூட எழுதாம போதைல மெதந்திருக்கான் சொல்லுடி அவனுக்கு அதை வாங்க காசு எங்க இருந்து வந்தது..? என் பாக்கெட்ல இருந்து எடுத்து குடுத்தியா..?” என்று வளரின் கழுத்தை நெறிக்கவும் அசைவற்று நின்றிருந்த வளர்மதியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
“என் மானம் மரியாதையே போச்சுஇனி எப்படி நான் அந்த ஸ்கூல்ல காலடி எடுத்து வைப்பேன் எல்லாம் இளக்காரமா பார்ப்பானே..! கௌரவத்தோட வாழறவன்டி நான் !ஆனா எனக்கு பிறந்ததுச்சை..” என்றவாறு வளர்மதியை உதறியவர் அவர் கீழே சுருண்டு விழவும் ,
“நான் திரும்ப வரும்போது அந்த நாய் தெளிஞ்சிருக்கணும் இல்லை அம்மா, பையன் ரெண்டு பேரையும் பொலி போட்டுடுவேன்” என்றவாறே வாயிற்கதவை அறைந்து சாற்றிவிட்டு கடைக்கு கிளம்பினார்.
அலை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது வளர்மதிக்கு. கடந்த ஐந்து வருடங்களாய் மாறிவிட்டதாய் எண்ணிக்கொண்டிருந்த தன் கணவனின் ருத்ரதாண்டவத்தில் அதிர்ந்திருந்த வளர்மதியின் செவிகளை சென்று சேரவில்லை நாதனின் வார்த்தைகள்.கதிரை எப்படி மீட்பது என்பதிலேயே அவர் மூளை ஸ்தம்பித்து போய் இருந்தது.
அன்று காலை குளித்து உடை மாற்றி கொண்டிருந்த எழில் சார்ஜில் இருந்த கைபேசி ஒளிரவும் ஒரு கையால் சட்டை பொத்தான்களை போட்டவாறு அழைப்பை ஏற்றான்.மறுபுறம் பேசிய நீலாவின் குரலில் மகிழ்ந்தவனுக்கு அவர் கூறிய செய்தியில் ரத்த அழுத்தம் உயர்ந்தது. அனைத்தையும் இறுகிய முகத்துடன் கேட்டவன்..
இறுதியாய் “நானே பார்த்துக்கறேன்” என்றவாறு அணைத்து மீண்டும் சார்ஜரில் இணைத்தவன் அவர் பேசியதை அசைபோட்டவாறே நாற்காலியில் அமர்ந்திருந்தான். சில கணங்களுக்கு பின் தலையை அழுந்த கோதியவாறு அடுத்து செய்ய வேண்டியவற்றை திட்டமிட துவங்கி பின்வந்த நாட்களில் அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் துவக்கி இருந்தான்.
குடோனில் புது துணிகளை தரம் பிரிப்பதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த அயவந்திநாதன் கைபேசி ஒலி எழுப்பவும் அதை உயிர்ப்பித்து காதில் வைத்தார்.
மறுபுறம் வளர்மதியிடம் இருந்து கிடைத்த செய்தியில் முகம் சிவக்கசம்பத்தை அழைத்தவர் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பினார். வீடு வந்து சேர்ந்தவர் கண்டதென்னவோ அழுது சிவந்த முகத்துடன்பதட்டமாக கைகளை பிசைந்தவாறு நாதனின் வரவிற்காக வாயிலில் நின்றிருந்த வளர்மதியை தான்.
வாகனத்தை நிறுத்தியவர் “வாசல்ல நின்னு எல்லோருக்கும் தண்டோரா போடுறியா..? உள்ள போடி” என்றார்.
வளர்மதியோ ‘என்னங்க கதிர்..‘ என்று தொடங்கவும்
‘மொதல்ல உள்ள போடி‘
வீட்டினுள் சென்றதும்‘அவனை தனியா விட்டுட்டு எங்கடி போன..?’ என்று கர்ஜித்தார்.
“அவளை திட்டாதப்பாபிள்ளைக்கு எது கொடுத்தாலும் வயித்துல தங்கலைமொத்தத்தையும் வாந்தி எடுத்துட்டான்ஏதேதோ உளறவும் என் சாமியை ஏதோ காத்து கருப்பு அடிச்சிடுச்சுன்னு பயந்து போய் நான் தான் மேற்கு தெரு பூசாரியை கூட்டிட்டு வர சொன்னேன்” என்றார் தாயம்மாள்.
“என்னம்மா இதுஇதுக்கு பூசாரியை கூட்டிட்டு வந்தா சரியாகிடுமா..? சரி அவதான் வெளியே போய்ட்டாநீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க..?” என்றார்.
“வளர் கிளம்பின அப்புறம் பிள்ளை உள்ளுக்கும் வெளிக்கும் அல்லாடிகிட்டு இருந்தான் ஒரு இடத்துல உக்காரு சாமின்னு சொன்னாலும் கேட்கலைதலை வலிக்குது ஆயான்னு சொன்னான் சரின்னு கஷாயம் வைக்க அடுப்படிக்கு போனேன்வந்து பார்த்தா பிள்ளையை காணோம்” என்றார்கண்ணீருடன்.
‘ஸ்கூல்ல என் மானத்தை வாங்குனது பத்தாதுன்னு ஊர்லயும் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டானா..?? பெத்து வெச்சிருக்கா பாரு பிள்ளைக்கு பதில் தொல்லையை’ என்று வளரை திட்டிய பின்பேகதிரை தேடி சென்றார்.
இரவு மணி பத்தை நெருங்கவும்சோர்ந்து போய் வீடு திரும்பினார் நாதனுடன் கதிர் வராததை கண்ட வளர்மதி, “என்னங்க கதிர் எங்க..” எனவும் கிடைக்கலை என்பதாய் உதட்டை பிதுக்கியவர் அடுத்து என்ன என்று சிந்திக்க துவங்கினார்.
அடுத்தநாள் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த நாதன் அழைப்பு ஓசை கேட்கவும் வாசலுக்கு சென்றார் அங்கு அகனெழிலனை கண்டவர் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றார்.
“உள்ளே வரலாமா..?” என்றவன் அவரின் அனுமதிக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தான்.
சமையலறையில் இருந்து குழம்பு கிண்ணத்தோடு வந்த வளர்மதி எழிலை கண்டதும்எங்கே மகள் குறித்து கணவரிடம் பேசிவிடுவானோஎன்று அஞ்சியவர் பதற்றத்தில் பாத்திரத்தை தவற விட்டார்.
பின்னே கணவனின் குணம் நன்கு அறிந்த வளர்மதி அன்று எழிலன் அலர்விழியை சந்தித்தது குறித்து நாதனிடம் தெரிவிக்கவில்லை.
‘ஒழுங்கா ஒரு வேலை கூட செய்ய தெரியாதா..?’ என்று வளரை கடிந்தவர் எழிலிடம் திரும்பி ‘எங்க வந்த..?’ என்றார் அதே கடின குரலில்.
“ஹ்ம் மாமனார் வீட்டுல வசதி எப்படி இருக்குன்னு பார்க்க வந்தேன்” என்றான் வீட்டை சுற்றி கண்களை சுழல விட்டவாறே.
அதற்குள் அங்கே வந்த தாயம்மாள், “அய்யா எழிலு எப்படி ராசா இருக்க..?” எனவும்
“நல்லா இருக்கேன் ஆயாநீ எப்படி இருக்க..?”
“யாருக்கு யார்ரா மாமனார்..? என்னை மிருகமாக்காம மரியாதையா வெளில போ” என்று கர்ஜித்தார்.
“ச்சை நீங்க மனுஷனா இருந்தா தான் ஆச்சரியம்..” என்று அவர் முகம் காண பிடிக்காமல் அங்கிருந்த தாயம்மாளிடம் திரும்பினான்.
“டேய்ய்…என் வீட்டுக்கு வந்து என்னையே மனுஷனான்னு கேட்பியா..? போடா மொதல்ல வெளில” என்று அவன் சட்டையை பிடிக்கவும்..,
“நான் போய்ட்டா கதிரை எப்படி பார்ப்பீங்க” என்றான் எள்ளலாக.
எழிலின் வார்த்தைகள் கொடுத்த உயர் மின் அழுத்தத்தில் நாதனின் கரங்கள் அவன் சட்டையில் இருந்து தாமாக விலகியது.
அதுவரை விலகி நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வளர்மதிகதிர் என்னும் வார்த்தையில் துணுக்குற்று, “உனக்கு எப்படிப்பா தெரியும் இப்போ கதிர் எங்க..??கூட்டிட்டு வந்திருக்கியாஎன் பிள்ளைக்கு ஒன்னும் இல்லையேஅவன் நல்லா தானே இருக்கான் சொல்லுப்பா” என்றவர் விழிகளில் கண்ணீர் திரண்டுவிட்டது.
“ராசா சொல்லுய்யா.. என் சாமி எங்க..? நேத்து இருந்து நாங்க தேடாத இடமில்லைராத்திரி பூரா பிள்ளையை காணாம தவிச்சிருக்கோம். இப்போதான் உன் மாமன் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கான்உனக்கு கதிரு எங்க இருக்கான்னு தெரிஞ்சா சொல்லுய்யா” என்றார்
அவர்கள் இருவரின் பரிதவிப்பும் புரிந்தவன் சொல்றேன் ஆயா.. என்று நாதனை அழுத்தமாய் பார்த்தவாறே நேற்றைய நிகழ்வை விவரிக்க ஆரம்பித்தான்.
நேற்று நீலாவிடம் பேசியபின் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தவன் ஆட்களை சந்தித்த பின் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். முக்கிய சாலையில் இருந்து கிளை சாலைக்கு பிரிந்தவன் காதில் “விட்டுடுங்கண்ணா..” என்ற குரலும் “திருட்டு நாயே.. பட்டப்பகல்லையே திருடுறியா..? என்ற குரல்களும் கேட்க அத்திசையை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.
அங்கு கூட்டமாக சிலர் யாரையோ அடிப்பதை கண்டு ‘ஏன் அடிக்குறிங்க..?’ என்றவாறே கீழே இருந்த கதிரை பார்த்த எழில் திடுக்கிட்டான். ‘கதிர் என்னடா ஆச்சு?’ என்று அவனை எழுப்பி நிறுத்தியவன் அவன் வாயோரம் கசிந்த செங்குருதியை துடைத்தவாறு
‘என்ன கதிர் ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பண்ற? யார் இவங்க எல்லாம்’ என்றிட
“அது.. வந்து.. மாமா.. என்று அவன் தடுமாறவும்.., “என்னடா மாமா.., மச்சான்னுட்டு திருட்டு நாயே..,” என்று ஒருவன் கதிரை அடிக்க வரவும் அவன் கரத்தை தடுத்து பிடித்த எழில் அதை பின்னால் வளைத்து பிடித்தபடி.. ‘பேசிகிட்டு இருக்கும் போது கை ஓங்குற’ என்றவாறே அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அதற்குள் மற்றொருவன் எழிலை தாக்க முற்பட தன் தலையை அவன் பின்னால் சரிக்கவும்.. தாக்க வந்தவனின் கைகள் காற்றில் மிதக்க அதை லாவகமாக பிடித்த எழில் பின்னால் வளைத்து ஓங்கி அறையவும் சுருண்டு விழ அவன் மூக்கிலும் கடைவாயிலிருந்தும் இரத்தம் கசிந்தது. முகத்தில் குத்து வாங்கியவன் மீண்டும் தாக்க வர எழில் அவனின் வயிற்றில் ஓங்கி தன் காலால் எட்டி உதைக்க வலியில் அலறியவாறு கீழே சரிந்தான்.
மீதமிருந்த இருவரும் அவனை அடிக்க வரசட்டையை முழங்கை வரை ஏற்றியவாறே “வாங்கடா” என்று எழில் அழைக்கும் தோரணையிலேயே இருவரும் ஓடி மறைந்தனர். உடனே கீழே கிடந்தவர்களிடம் “சொல்லுங்கடா எதுக்கு அவனை அடிச்சீங்க..?? அவன் அப்படி என்ன திருடினான்” என்று கேட்க,
“அது.. அது.. என்று தங்கியவர்கள் ஒருவர் முகம் மற்றொருவர் பார்க்க.. “சொல்லமாட்டீங்க..!” என்றபடியே எழிலன் மீண்டும் தன் கை முஷ்டியை இறுக்கி ஓங்கவும் மற்றொருவன் ட்ரக்ஸ் என்று அவசரமாக சொல்லி தன் கூட்டாளியை இழுத்துக்கொண்டு வேகமாக ஓட்டம் எடுத்தான்.
அவர்கள் செல்லவும் ஒரு ஓரத்தில் உடல் நடுங்க பார்த்துக்கொண்டிருந்த கதிரிடம் சென்ற எழில், “அவங்க சொன்னது உண்மையா..?” என்றான்.
இல்.. மா..ம்ம்.. என்று கண்களில் பயத்தோடுவியர்வையில் குளித்திருந்த கதிரின் வார்த்தைகள் தந்தியடிக்கஅவன் நிலையை புரிந்து கொண்டவன்தன் கைக்குட்டையால் அவன் வியர்வையை துடைத்து, கலைந்திருந்த சிகையை சரிப்படுத்தி, சட்டையில் இருந்த மண்ணை தட்டி சரி செய்தான்.
பின் வண்டியை எடுத்து வந்தவன் ஏறு.. என்று அருகே இருந்த கடைக்கு அழைத்து சென்று குளிர்ச்சியான பழச்சாறு வாங்கி அவனை பருக வைத்து பேண்ட் எயிட் வாங்கி உதட்டின் ஓரம் கிழிந்திருந்த இடத்தில் ஒட்டி விட்டான்.
“வா.. வீட்டுக்கு போகலாம்” என்று எழில் அவன் கை பிடிக்கவும் ஈரடி பின்னால் நகர்ந்தவன் “ப்ளீஸ்.. ப்ளீஸ் மாமா.. வேண்டாம், தயவு செஞ்சு என்னை திரும்ப அங்க கூட்டிட்டு போய்டாதீங்கஎன்னை விட்டுடுங்கநான் எங்கேயாவது போறேன்” என்றான் கெஞ்சலாய்.
“சரி.. ஏறு..!” என்று அருகே இருந்த பூங்காவிற்கு அவனை அழைத்து சென்று மரத்தடி நிழலில் அமர்த்திய எழில் நேரடியாக, “ஏன் கதிர் என்ன நடந்ததுஎப்படி நீ இதுல சிக்கின..?” என்று ஆரம்பிக்கவும் சில நொடிகள் அமைதியாய் தலைகுனிந்திருந்தவன் உடல் மெல்ல குலுங்கியது.
“டேய்ய் கதிர்.. ஏன் அழற..” என்று அவன் முகம் நிமிர்த்தவும்,
“நீங்களாவது ஏன்னு கேட்டிங்களே மாமா..!” என்று கதறியவன் எழிலை இறுக அணைத்துக்கொண்டுதிக்கி திணறியவாறு அனைத்தையும் சொல்லி முடித்தான்.
கதிர் பேசுவதை கேட்ட எழிலின் முகம் மெல்ல மெல்ல சிவந்து ஒருகட்டத்தில் கல்லாய் இறுகியது, தன் மடியில் கிடந்தவனின் தலையை கோதியவாறு அமர்ந்திருந்தவன் அவன் கண்களை துடைத்து கேசத்தை சரி செய்து ‘வா போகலாம்’ என்றழைக்கவும்,
‘எங்க மாமா..?’ என்று அச்சத்துடனே வந்தது கதிரின் வார்த்தைகள்.
‘உங்க வீட்டுக்கு இல்லை தைரியமா என் கூட வா’ என்றவன் அவனை சமாதானபடுத்தி சுடரின் வீட்டிற்கு அழைத்து சென்றான். ஓரளவு அவன் பயத்தை போக்கி தன்னோடு தங்க வைத்தவன் அன்று இரவு தூங்க முடியாமல் மீண்டும் அவன் போதைக்காக படும்பாட்டை கண்டு மறுநாள் நகரில் பிரசித்தி பெற்ற மருத்துவரிடம் அழைத்து சென்றான்.
அனைத்தையும் கவனமாக கேட்டவாறுஎழிலின் முகத்தையே பார்த்திருந்த தாயம்மாளும் வளர்மதியும் குறையாத கண்ணீரோடு, “டாக்டர் என்னப்பா சொன்னார்..? என் பிள்ளை பழையபடி எனக்கு திரும்ப கிடைப்பானா” என்றனர் ஒரு சேர.
அயவந்திநாதனையே அழுத்தமாய் பார்த்திருந்த எழில் அவரை நெருங்கி, “இப்படி நிக்கறீங்களேஉங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலை” என்றான்.
“ஏய் என்னடா பேசற..?” என்று நாதன் குரல் உயர்த்தவும்
“ஷ்ஷ்..” என்று அவரை அடக்கியவன்பாவம் அந்த சின்ன பையன் உன்னால எவ்வளவு கஷ்டபட்டிருக்கான் தெரியுமா..? ஒரு அப்பாவா எதுக்கெடுத்தாலும் அடிச்சதை தவிர அவனுக்கு நீ பெருசா என்ன செஞ்சுட்ட..? அந்த பையனோட பிரச்சனை என்னனு கூட கேட்காம காட்டுத்தனமா போட்டு அடிச்சிருக்க இங்க வரவே பயப்படுறான் என்னை விட்டுடுங்க எங்கயாவது போறேன்னு சொல்றான்.., சொந்த வீட்ல அப்பா அம்மா கூட இருக்க முடியாதுங்கிற அளவுக்கு அவனை நோகடிச்சிருக்க.. (ausoma.org) இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் அடிச்சா பசங்க திருந்திடுவாங்கன்னு யாருயா உனக்கு சொன்னா..? என்றவனின் விளிப்பில் மரியாதை மறைந்திருந்தது.
‘இந்த வயசுல வரக்கூடிய பருவ மாற்றங்களையும் அது பற்றிய சந்தேகங்களை அப்பாவை விட வேற யாருஒரு பையனுக்கு புரிய வைக்கமுடியும்னு நினைக்குற,எப்பவும் அவன் சொல்றதை காது கொடுத்து கேட்காம போகவும் அவனோட நிலையை அம்மாகிட்டவும் சொல்லமுடியாம தவிச்சுஅப்படியும் ரெண்டு முறை உன்னை நெருங்கி இருக்கான்… ஆனா அப்பவும் நீ அவனை பேச விடாம விரட்டி அடிச்சிருக்க’ என்றிட நாதன் அதிர்ந்து நின்றார்.
எப்பவும் பசங்களுக்கு அப்பாவை பார்த்தா மரியாதை தான் வரணும்ஆனா உன்னை பார்த்து பயந்துபயந்துஅந்த பையன் எங்க போய் தன்னோட கஷ்டத்தை சொல்றதுன்னு தெரியாம தவிச்சுகடைசியா கூட படிக்கிற பசங்க கிட்ட அதை பகிர்ந்து அவங்க தப்பா வழிநடத்தவும் இப்போ இந்த நிலைல இருக்கான்.. பிள்ளையை பெத்துட்டா மட்டும் போதுமா அவனை சரியா வழி நடத்த வேண்டியது யார் பொறுப்பு..?? என்று கேட்க நாதனிடம் பதிலில்லை.
‘நிச்சயம் அவனோட நிலைக்கு அந்த பசங்க காரணம் இல்லை நீ மட்டும் தான்’ என்றான் வெறுமையான குரலில்.
“நான்.. நான் என்ன..’ என்றவரை நெருங்கியவன்..,
“உன் பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்கான் அது தெரியுமாய்யா உனக்கு..! அவன் வயசை கடந்து தானே வந்திருப்பீங்க அப்படி இருக்கும் போது அவங்க கூட இருந்து, அவங்களுக்கான நேரம் ஒதுக்கி, பசங்களோட பாதை மாறிடாம காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா..? பசங்க உங்களை நெருங்க முடியாத இடத்துல இருக்குறது தான் பெருமையாஅதைத்தான் ஆளுமைன்னு நினைக்கறீங்களா..? அவன் மார்க் குறைஞ்சதும் ஏன்.. எப்படின்னு விசாரிச்சிருந்தேன்னா இன்னிக்கு இந்த நிலை வந்திருக்காது” என்றவனை நெருங்கிய வளர்மதி,
“தம்பிஎன் பிள்ளை இப்போ எங்க இருக்கான் சொல்லுங்க” என்றதும்,
‘கதிரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கேன்என் அக்கா கூட இருக்காங்கபத்திரமா இருக்கான் மாமிமுதல் நிலைல இருக்குறதால சீக்கிரம் குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க’ என்றான்.
“ராசா ஒரு முறை என் சாமியை கண்ணுல காட்டுப்பா” என்று தாயம்மாள் கேட்க..,
“சிகிச்சையின் முதல் நிலையில அவனை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை ஆயா டாக்டர் சொல்லும் போதுதான் பார்க்க முடியும்அப்போ வாங்க..” என்றவன்,
‘நீங்க மட்டும்’ என்று அழுத்தி கூறி கிளம்பி சென்றான்.