பகலவன் தன் பணியை முடித்து ஓய்வெடுக்க சென்றிருக்கும் அந்தி மாலைப் பொழுதினிலே, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி மக்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும், புன்னகையும் பரவி கிடந்தது. எப்போதடா இரவு நேரம் நெருங்கும் என்று ஒவ்வொருவர் முகத்திலும் எதிர்பார்ப்புகள் நிறைந்து இருக்க, அவர்கள் எதிர்பார்த்த தருணமும் வந்தது. அனைவர் முகங்களும் அத்தனை பேருவகையுடன் காணப்பட்டது.
ஊரின் நடுவில் அமைக்கப்பட்ட பெரிய மேடையின் முன்பு அனைவரும் ஒன்று திரண்டு குவிந்தனர். விழிகள் எதிர்பார்ப்புடன் மேடையையும், அதில் வரப்போகும் நபரையும் பார்த்துக் கொண்டிருந்தன.
நேரம் சரியாக இரவு எழு மணி ஆகியது. ஊர் மக்கள் அனைவரும் பேராவலுடன் அமர்ந்திருக்க, அவர்கள் முன்பு தோன்றினான் ‘வீரபாண்டியன்’ சாட்சாத் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே!
அவரது பிறந்த நாளான இன்று, அவர் புகழ்பாடும் வகையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு நாடகமாக சித்தரிக்கப்பட்டது. அதில் நாயகனாக நம் ‘வீரபாண்டியன்’ அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக நடித்துக்கொண்டு இருந்தான்.
அதைப் பார்த்திருந்த அனைவரின் முகத்திலும் ஆச்சர்யமும், வியப்பும், பரவசமும் நிலைத்திருந்தது.
‘நிஜத்தில் அவர் இப்படித்தான் இருந்தாரா? இப்படி எல்லாமா வாழ்ந்திருந்தார்? இத்தகைய நல்ல மனிதனையா நாம் இழந்து விட்டோம்? அடடா!! எத்தனை அருமையாக கம்பீரமாக காட்சியளிக்கிறார். எந்தவொரு அச்சமும் இன்றி எத்தனை துணிச்சலுடன் பேசுகிறார். அடேயப்பா!! என்ன மாதிரி வார்த்தையால் எதிரிகளை மிரட்டி பணிய வைக்கிறார். அந்த வார்த்தை… வசன உச்சரிப்பை நாளெல்லாம் கேட்கலாம் போலிருக்கிறதே’ என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணம் தோன்றியிருக்க, அவர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் அவனும் தன்னுடைய நாவன்மையையும், நடிப்புத் திறமையையும் அவர்கள் முன்னிலையில் நிரூபித்துக் கொண்டிருந்தான்.
நாடகத்தின் ஒரு கட்டமாக, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை, கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, அவரைக் கண்டு கடும் கோபமடைந்த வீரபாண்டியன், “நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?” என்றார்.
அவர் “ஆம்” என்று கூறியதும்,
“வரி, வட்டி, திறை, கிஸ்தி… எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் பணிபுரிந்தாயா? மாமனா அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி? எவரைக் கேட்கிறாய் வட்டி?” என்றதும் தான் தாமதம், ஹோவென்ற சப்தமும், சிரிப்பு ஒலியும் அந்த பகுதி முழுவதையும் நிறைத்தது.
அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், “சத்தம் போடாம இருங்கல. வீரபாண்டியோட வசனம் ஒண்ணும் சரியா காதுல விழ மாட்டேங்குது” என்று கடிந்ததும், “போய்யா பெருசு. அதான் அம்பது நேரம் கேட்டிருப்பல்ல. பிறகும் என்னவாம்? சும்மா கம்முனு கெட” என்று பதிலுரைத்தான் விஷ்ணு.
“அம்பது நேரம் என்னடா, ஆயிரம் தடவைக் கேட்டாலும் அலுக்காது. ஏன்னா, நம்ம தலைவன் உச்சரித்த வார்த்தைகள் அவை, ‘வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உமக்கு ஏன் கொடுக்க வேண்டும் திறை? இனாமாக வேண்டுமானால் உடல் வளைந்து கேள் தருகிறேன். இல்லாவிட்டால் உயிர் பிச்சை தருகிறேன் ஓடி விடு!’ இப்படி வீரத்தோடு கூக்குரலிட்டு எதிரிகளின் சிம்மாசனமா விளங்கியவர் அவருன்னு மறந்துடாதே” என்றதும், விஷ்ணு அவரைக் கட்டிக் கொண்டான்.
“சரி, சரி! நம்ம பேச்சை பிறகு வச்சிக்கலாம். முதல்ல நாடகத்தை பார்ப்போம்” என்றதும் இருவரும் மறுபடியும் மேடையில் கவனத்தைப் பதித்தனர்.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரிடைஞ்சலாக இருப்பதாக கருதியதால் அவரைப் பிடிப்பதற்காக, பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயர் படைகள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையெடுத்து வந்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதும் அவர்களை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலக்குறிச்சி கோட்டை, ஆறு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வசமாகியது. அவர்களிடமிருந்து தப்பித்து வெவ்வேறு இடங்களுக்கு சென்ற கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானிடம் உதவி கேட்க, அந்த நேரத்தில் ஆங்கில படைகள் அவரை சுற்றி வளைத்தது.
“பார்த்தியா எட்டப்ப இனம்னு நிரூபிச்சுட்டானுக. கூடவே இருந்து நல்லா பழகிட்டு எப்படி காட்டி கொடுத்துட்டானுக. இப்படிப்பட்ட பாவிங்க அந்த நாள்ல இருந்து இப்ப வரை இருந்துட்டுதான் இருக்காங்க. சுயநலப் பிசாசுங்க” அப்பெரியவர் கண்ணீர் மல்க கூறியதும், விஷ்ணுவும் தலையசைத்தான்.
“எப்படி வாழ்ந்த மகராசனுக்கு இந்த நிலைமைன்னு பார்த்தியா விஷ்ணு. அத்தனை கம்பீரம், தைரியத்தோடு வாழ்ந்தவர் கடைசி வரை தன் துணிச்சலை விட்டுடல. மரணத்தைக் கண்டும் பயப்படல. தானே தூக்கு கயித்துல தலையை மாட்டுறார் பாரு. ஐயோ!! இந்த கொடுமையை கண்ணால பார்க்க முடியலயே… அப்போ, உண்மையில் அனுபவிச்ச அவருக்கும், அவங்க குடும்பத்துக்கும் எத்தனை கஷ்டமா இருந்திருக்கும். எத்தனை பெரிய இழப்பு நேர்ந்துடுச்சு” என்று கண் கலங்கினார்.
“ஆமாம் தாத்தா. இவரைப் போல எத்தனையோ மாமனிதர்கள் சுதந்திர போட்டத்தில் கலந்து, வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக போராடி தன் உயிரையும் இழந்துட்டாங்க. அவங்க எல்லாரும் பட்ட கஷ்டம் வீண் போகல. நம்ம நாடு சுதந்திர நாடாக தான் விளங்குது. அது எப்பவும் அப்படியே தான் இருக்கணும். அதுதான் இரத்தத்தையும், உயிரையும், குடும்பத்தையும் பார்க்காம தங்களோட வாழ்க்கையைப் பணயமாக வச்சு போராடியவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு. துரோகத்தை துரோகத்தால் தான் வெல்லணும்” விஷ்ணு உறுதியாக கூறியதும் அருகில் அமர்ந்திருந்தவர் அவன் செவியோரம் மெதுவாக கிசுகிசுத்தார்.
அவனும் புரிந்து கொண்டு தலையசைத்தார்.
நாடகம் நிறைவு பெற்றதை அறிவுறுத்தும் பொருட்டு கரவோசம் எழுந்து அந்தப் பகுதியெங்கும் எதிரொலித்தது. விஷ்ணு எழுந்து சென்று நண்பனை அணைத்தான். இருவரின் பாசமும், நட்பும் ஒரு சிலருக்கு பொறாமையை தோற்றுவித்தது. வீட்டிற்குச் செல்ல புறப்பட்ட அனைவரின் நாவிலும் வீரபாண்டியின் பேச்சு அன்று மட்டுமல்ல சில நாட்களுக்கு தொடர்ந்து வரப் போவதை உணர்ந்து எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தான் சந்திரசேனன்!
***
வீட்டு நபர்கள் அனைவரும் அமர்ந்திருந்தும் அந்த பங்களா அத்தனை அமைதியுடன் காணப்பட்டது. சந்திரசேனனின் மூலம் நடந்த விசயங்களை கேள்விப்பட்டு அமைதியாக இருந்தார் அவனது அப்பா அண்ணாமலை. எவ்வளவு தான் அமைதியுடன் காட்டிக் கொண்டாலும், மனதில் சீறி எழும் உணர்வுகளை அவரால் அடக்க முடியவில்லை. சிறு வயது முதலே நினைத்த அனைத்தையும் நடத்தி வந்தவருக்கு பெரும் சவாலாக இருந்தவர் வீரமாணிக்கம் மற்றும் அவரது மகன்கள் சந்தனபாண்டியனும், சந்தானபாரதியும்!
ஊரெங்கும் அவர்களின் பேச்சும், புகழும் தான் ஒங்கி இருந்தது. அப்படிப்பட்ட வீட்டிற்கு மருமகனாக சென்ற அண்ணாமலை, தன் வாரிசுகளுக்கு அவர்களின் பிள்ளைகளை மணமுடிக்க ஆசைப்பட்ட மனைவியின் கோரிக்கையை ஏற்று செவி சாய்க்க, பிரச்சனை வீரபாண்டியன் மூலம் வெடித்தது. அத்துடன் சில வருடங்களாக இருந்து வந்த உறவு முறை, இலை மேல் ஒட்டிய பனித்துளியின் நிலையில் ஆகிவிட்டது.
வீரபாண்டியிடம் மறுபடியும் பேச முடியாத அளவிற்கு அவனது கடுமையும், சீற்றமும் அவரை விலக்கி நிறுத்தியது. மகளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. மகனோ, ‘யமுனா’வை தவிர வேறு யாரையும் மணக்க தயாராகவும் இல்லை. ஒரு வீட்டில் கொடுத்து வாங்கும் விதமாக பேசி முடித்து விட்டு, இப்போது எப்படி ஒன்றிற்காக மட்டும் சென்று கேட்க முடியும்? அத்தோடு அருணாச்சலத்தை மீறி அவரால் செயல்படவும் முடியாது. வருடங்கள் கடந்து செல்வதை யாரும் கவனத்தில் கொள்வதாகவும் இல்லை. அவரது பேச்சுக்கள் யாருடைய செவியிலும் விழுவதில்லை. வீரபாண்டியனின் புகழ் எட்டுத்திக்கும் பரவ, நாளடைவில் அவரது குடும்பத்து மீதான நற்பெயர் சுருங்கி குறைவது புரிந்தது.
வீரபாண்டியன் மற்றும் அவனது குடும்பமே அவர்களை வெறுத்து ஒதுக்க அந்த குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு போதுமானதாக இருந்தது. மனைவியின் அழுகையும், ஏக்கமும் அவரை உயிரோடு வதைத்தது. ஆனால், “யாரும் முடிந்து போன உறவைப் புதுப்பிக்க நினைக்க வேண்டாம். இந்த நடை வாசலையும் மிதிக்க கூடாது” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டதால், அதற்குப் பிறகு அங்கு செல்ல அவரது தன்மானம் இடம் தரவில்லை. அதனால், இரண்டு குடும்பத்திற்கும் இடையே உள்ள பேச்சு வார்த்தைகள், போக்குவரத்துகள் படிப்படியாக நின்று விட்டன. மீண்டும் புதுப்பிக்க யாரும் எண்ணவில்லை.
பழைய நினைவுகளில் அவர் மூழ்கியிருக்க, அவர்களை நோக்கி வந்த அருணாச்சலம், அனைவரின் முகத்தையும் கண்ணுற்றார். சந்திரசேனன் மற்றும் அவன் தம்பி வீரராகவன் அருகில் சென்று புன்னகைத்தார்.
“என்னப்பா வெளியே போயிட்டு வந்த நேரத்துல இருந்து இத்தனை அமைதி? போன இடத்துல வரவேற்பு எல்லாம் தடா புடலா இருந்ததா?” அவரது குரலில் இருந்தது என்னவென்று புரியாமல் அனைவரும் புருவம் உயர்த்திப் பார்த்தனர்.
அதைப் புரிந்து கொண்டவர் போல, “இன்னைக்கு உன் மாமன் மகனோட பிறந்த நாள் ஆயிற்றே … பரிசு பொருளோடு போய் வாழ்த்திட்டு வந்தியா?” என்று கேட்டுக்கொண்டே நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
முகம் இறுக நின்றிருந்தார்கள் அண்ணனும் தம்பியும்.
“மனசுல இருப்பதை வெளியே காட்டாம நடந்துக்கணும் சந்திரா. அப்பதான் உன் ஆசைகள் நிறைவேறும்” அவர் குறிப்பாக கூறியதும் அவன் முகம் சிவந்தது.
“பழையதை மறந்துட்டு புதுசா நடந்துக்க பழகு. அப்புறம், நீ அசைப்படுவது உன் கையருகில். உன் எதிரிகூட நண்பனா மாறிடுவான்” அவரது உபதேசத்தில் மகிழ்ந்த அண்ணாமலை எழுந்து நின்று புன்னகைத்தார்.
“அவங்களுக்கு கொஞ்சம் புரியும் விதமா சொல்லுங்க அண்ணா”
அங்கிருந்து அவர் வெளியேறி சென்றதும், “என்ன, போன இடத்துல நடந்ததை சகிச்சுக்க முடியலயா? இல்ல, அவனுக்கு கிடைச்ச பாராட்டை பார்த்து மனம் வெதும்பி போயிட்டீங்களா?” என்றார் அருணாச்சலம்.
“பெரியப்பா, நீங்க அந்த இடத்துல இருந்தா…”
“இருந்தா…”
“இருந்தா, எப்படி இருப்பீங்களோ அப்படியே தான் நாங்களும்” சாதுர்யமாக பதிலளித்து நிற்கும் தம்பி மகனைப் பார்த்தவரின் கண்கள் பளபளத்தன.
“சந்திரா உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீ கூடிய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுட்டு நம்ம இனத்தை விருத்தி செய்யணும். நான் சொல்றது புரியுதா?”
அவன் அமைதியாக நின்றான். விழிகளில் ‘யமுனா’ வந்து சென்றாள்.
“நீ யாரை மனசுல நினைச்சிட்டு கல்யாணம் வேண்டாம்னு மறுக்கறியோ, அதுக்கு சொந்தக்காரி தன் அண்ணன் பார்க்கற மாப்பிள்ளையை கட்டிக்க சம்மதம் சொல்லிட்டா. இதுக்கு மேலும் நீ அமைதியா இருக்கப் போறியா?”
அருணாச்சலத்தின் வார்த்தையில் அவன் முகம் அப்படியே மாறிவிட்டது.
***
நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்த மகன் வீரபாண்டியனின் அழகை ரசித்துக் கொண்டே ஆரத்தி கரைத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் அவனது தாயார் ஜெயக்குமாரி. கண்கள் இரண்டும் கலங்கி வழிந்தன. மனதில் ஏக்கமும், கவலையும் பெருக்கெடுத்து ஓடியது. இத்தனை அழகும், அன்பும் உடையவன் வாழ்க்கை, குடும்பம் குழந்தை என்று இல்லாமல், வெறும் இயந்திரத்தனமாக இருக்கிறதே என்று வேதனை அடைந்தார். கண்கள் சுவரில் இருந்த கணவரின் புகைப்படத்தில் நிலைத்தன. மனமோ, எப்போதும் போல பழைய நிகழ்வுகளில் மூழ்கி தவித்தது.
வீரபாண்டியன், ‘ஜனவரி 3 -ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் அன்று பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்திருந்ததால், அவர் பெயரையே அவனுக்கு சூட்டியிருந்தார் அவனது பூட்டன் வீரமாணிக்கம்!
அன்று முதல் அவனை அனைவரும் ‘பாண்டி, வீரபாண்டி, வீரா’ என்று அழைத்து வந்தனர். சிறு வயதில் இருந்தே தாத்தாவின் அன்பில், அக்கறையில், கண்காணிப்பில் வளர்ந்து வந்தவனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பாஞ்சாலங்குறிச்சி மக்களின் முந்தைய நிலை, இப்போதைய கோட்டையின் நிலை, மன்னராட்சி காலத்தில் நடந்த அடக்குமுறைகள், சுதந்திர பூமி என்று பலவற்றையும் கூறி அவனையும் ஆளுமையுடன், தனித்தன்மையோடு விளங்க வைத்தார்.
மதுரையில் அரசாட்சி புரிந்த பாண்டிய மன்னனின் பெயரும், பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மாமனிதனின் பெயரையும் தான் பெற்றிருந்த காரணத்தால், தன்னையும் ஒரு கண்ணியவானாக, கம்பீரம் பொருந்தியவனாக அவன் மாற்றிக் கொண்டான். சிறு வயது முதலே புத்திசாலியாகவும், அறிவு கூர்மை நிறைந்தவனாகவும் திகழ்ந்து வந்தான்.
படிப்பு போக மீத நேரத்தில் தகப்பனார் சந்தானபாரதியிடம் வியாபார நுணுக்கத்தையும், பூ விற்பனை மற்றும் தொழில் விரிவாக்கத்தையும் கற்றுக் கொண்டான். கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தியை பெருக்கி வந்தான்.
பாஞ்சாலங்குறிச்சியில் மட்டுமல்லாமல் தோவாளைப் பகுதியிலும் புதியதாக இடம் வாங்கி பூ வியாபாரத்தை ஆரம்பித்தான். பிச்சி, மல்லிகை, ரோஜா மற்றும் மலர் மாலை செய்வதற்கு ஏற்ற வகையில் பூந்தோட்டத்தை உருவாக்கினான். அவற்றுடன், வேறு தோட்டத்தில் உள்ள பூக்களையும் மொத்தமாக கொள்முதல் செய்து கோவில்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், தங்களது தேவைக்கும் பயன்படுத்தி வருகிறான்.
விழா மேடைகள், வைபோகங்கள், கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தும் பூமாலைகள், பூ அலங்காரம், பூச்செண்டுகள், அபிஷேக பன்னீர், நறுமண திரவியம் போன்றவற்றை தயாரித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறான். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உத்தரவிடுவதும், தொழில் போட்டியாளர்களை துரத்தி அடிப்பதும், தரமான விற்பனையை அதிகரிப்பதையும் அவன் இலக்காக வைத்து உள்ளான்.
வீரபாண்டியனின் தம்பி ‘விநாயகம்’ அவனை விட ஒரு வயது இளையவன். படிப்பு முடிந்ததும் அவன் வெளியூருக்குச் சென்று விட தீர்மானிக்க, தம்பியை தங்களை விட்டு வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க ஆவன செய்தான் வீரபாண்டி.
பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தன் வீட்டில் இருந்து கொண்டே, அவனது மொத்த தொழில்களையும் நிர்வகிக்கும் உரிமையை வழங்கினான். நறுமண திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்குரிய பன்னீர் தயாரிப்பது, பூ வியாபாரத்தில் தொடர்புடைய பெரிய நபர்கள், விற்பனை பற்றிய தகவல்கள், பணபரிவர்த்தனை, நிலபுலன்கள் அனைத்தும் அவனுக்கும் தெரியும் விதமாக பார்த்துக் கொண்டதுடன், தம்பியை முதலாளியாக அமர வைத்து, தொழிலாளியாகவும் நடந்து வருகிறான் வீரபாண்டி!
தம்பி ஆசைப்பட்ட பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைத்து, பெற்ற தாயின் ஏக்கத்தை அதிகரிக்க செய்தான். தம்பி மனைவி ‘சகுந்தலா’வுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்து, அவளை குடும்ப தலைவியாக அங்கீகரித்தான். ‘அத்தான்’ என்று அழைத்து அவள் இடும் உத்தரவுகளையும், வார்த்தைகளையும் இன்முகமாக ஏற்று செவிசாய்த்தான்.
அவர்களின் மகள் ‘ஸ்ரீநிதி’ ஒன்றரை வயது சீமாட்டி. வீரபாண்டியன் மீது அளவு கடந்த பாசத்தைக் கொண்டிருப்பவள். வீரபாண்டியனின் வாகன ஓசை கேட்டதும் வாசலை நோக்கி ஓடி விடுவாள். ‘அப்பா.. அப்பா’ என்று அழைத்தவளை ‘பெரியப்பான்னு கூப்பிடு கண்ணு’ என்று பாசமாக கொஞ்சுவான். அவளோ மறுப்பாக தலையசைத்து ‘அப்பா’ என்றே அழைக்க, அவளை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர மிகவும் சிரமப்பட்டான்.
தற்சமயம் ‘பெரிப்பா’ என்ற அவளது குரலை கேட்டதும் ஓடோடி வந்து அடுத்த நிமிடம் அவள் முன்பு நின்று விடுவான். அவனைப் பார்த்து விட்டால் அவளும் மற்ற யாரையும் கவனத்தில் கொள்ள மாட்டாள். அவனிடம் பேசுவாள். சிரிப்பாள். அடிப்பாள். உணவு ஊட்டி அவனை மகிழ்விப்பாள். அவனுடன் ஓடி விளையாடுவாள். இதற்கு மேலும் தனக்கென்று என்ன வேண்டும் என்று நினைத்து நெகிழ்ந்து போய், ‘பெரியப்பா மேல அம்புட்டு பாசமா கண்ணு?’ என கேட்பான் வீரபாண்டி. தம்பி மகளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி வந்து கொடுத்து, தன் மகளை போலவே பார்த்துக் கொண்டான்.
முப்பதை எட்டப் போகும் வயதில் உள்ள பெரிய மகனுக்கு தான் ஆசைபட்டது போல திருமணம் நடத்திப் பார்க்க முடியாத வருத்தம் தாயவளை கலங்கச் செய்தது. அது தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்வது அவன் வாடிக்கையாகி விட்டது.
வீரபாண்டி, தன் தாயிடம் சற்று நேரம் பேசி விட்டு உறங்க சென்று விட்டான். ஆனால், உறக்கம் வராமல் கலங்கி தவித்தது அந்த தாயுள்ளம் மட்டும்தான்!
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவு செய்யுங்கள் தோழமைகளே…