எட்டு திக்கும் இருள் பரவி கிடக்க, சரசரவென பெய்து கொண்டிருந்த கனமழை மற்றும் மின்சாரம் தொலைந்ததால், அந்த அமாவாசை இரவில் மக்கள் தங்களின் இல்லத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடைபட்டுக் கிடந்தனர்.
அவர்களை ஒரு பொருட்டாக கருதாமல், அந்த நேரம் நிலவறையில் நால்வர் கூடி நின்று எதையோ பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களின் பேச்சைக் கேட்டு அதிருப்தியுடன் நின்றான் அவர்களின் காவலன்!
யாரும் பார்க்காத வகையில் நடந்த அந்த சந்திப்பில், நீள தாடியும், கிடா மீசையும், நெடுநெடுவென வளர்ந்திருந்த உடல்வாகையும், இவருக்கா அறுபது வயதாக போகிறது என்ற கேள்விடன் கூடிய சரீரமும் பெற்றிருக்கும் அவர் தொண்டையை செருமினார்.
“நான் சொல்வது உங்களுக்கு புரியுது இல்லயா?”
“ஆமாம் பெரியப்பா”
“நல்லது. இன்னும் அமைதியா இருக்க முடியாது. உடனே ஏதாவது செஞ்சாகணும். என் உயிர் இந்த கூட்டை விட்டு வெளியே போகும் முன்னே அந்த வீரபாண்டி செத்துட்டான்னு செய்தி என் செவிக்கு வரணும். அதுக்கு தக்க உங்க நடைமுறையும் இருக்கணும்” அவர் குரலில் இருந்த அழுத்தம் அருகில் நின்றவர்களை தலையசைக்க வைத்தது.
“சும்மா தலையாட்டிட்டு தப்பிட முடியாது. வரும் பெளர்ணமி ராத்திரிக்குள் அவன் கதை முடியணும்”
“செஞ்சுடலாம் பெரியப்பா. அந்த வீரபாண்டியின் அதிகாரமும், வளர்ச்சியும், செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. அதை பார்த்துப் பார்த்து என் உள்ளம் வேதனையால், கோபத்தால் செய்வதறியாம துடிக்குது. என்னே ஒரு திமிர்!! என்னே ஓர் அகம்பாவம்!! ‘வீரபாண்டி’ன்னு பெயரை வச்சுட்டதால், இவன் தான் பாஞ்சாலங்குறிச்சியில் 263 வருஷங்களுக்கு முன்னாடி பிறந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’னு தன்னைத் தானே நினைச்சுக்கறான். எங்கே போனாலும் அவனோட அதிகாரமான பேச்சுக்கும், வார்த்தைக்கும் தான் மரியாதை. அவன் சொல்றதை தான் வேதவாக்கா பலரும் நினைக்கிறாங்க. உடனே இது மாறணும்… இல்லை, மாற வைக்கணும்! இதுக்கு மேலேயும் வேடிக்கைப் பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது” ஆவேசமாக பதிலுரைத்தான் அவரது தம்பியின் மூத்த மகன்.
“ஆமாம். நம்மை பார்த்தாலே எட்டப்ப இனத்தை சார்ந்தவன் போல் நடந்துக்கறான். ஏதாவது புதுசா தொழில் செய்ய நினைச்சாலும், கான்டிராக்ட் கையெழுத்து போட பார்த்தாலும், அத்தனையும் தன் வசப்படுத்திடுறான். இவனை அழிக்கணும் அண்ணா. இல்லை நம்மை வளரவோ, நிம்மதியா இருக்கவோ விட மாட்டான்” என்று அவன் தம்பி கூறினான்.
தம்பி மகன்களின் பேச்சைக் கேட்டவர் ஆமோதிப்பாக தலையாட்ட, நான்காவது நின்றவன், “வீரபாண்டி, இன்னும் கல்யாணம் செய்துக்கல. தம்பிக்கு செய்து வச்சுட்டு ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உழைப்பு’ன்னு திரியறான். அவனை இப்பவே ஒழிச்சு கட்டுவதுதான் நல்லது” என்றான்.
‘பெரியப்பா’ என்று அழைக்கப்பட்டவர் யோசனையுடன் பார்த்தார். பின்னர், “நாம அவனுக்கு பதிலுக்கு பதில் கொடுக்கிறது நம்மை தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. அதேநேரம், அவன் கல்யாணமும் நடக்க கூடாது. அவன் இப்ப இருக்கற மாதிரியே செத்துப் போகணும். அவன் சம்பாதித்த சொத்துக்கள் அவனோட தம்பி ‘விநாயகம்’ மூலம் நம்மை அடையணும். அதுக்கு இடையூறா வர்ற அத்தனை பேரையும் பாவ, புண்ணியம் பார்க்காம போட்டுத் தள்ளிடணும்.” என்றார்.
உடனே இடையிட்டான் மூத்தவன்.
“ஆனால், பெரியப்பா எனக்கு ஒரு எண்ணம்”
“ம்.. சொல்லு!”
“வந்து , வீரபாண்டியை இப்படியே தோற்கடித்து அழிப்பதை விட, அவனை வலுக்கட்டாயமா கல்யாண வாழ்க்கையில் திணித்து அப்புறமா கொன்னா என்ன?”
அவர் புரியாமல் பார்த்து நின்றார்.
“நீ என்ன சொல்ல வர்றே?”
“நம்ம கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டும் அந்த வீரபாண்டியை, விபத்தை ஏற்படுத்தி கொல்வதாலோ, உணவில் விசத்தைக் கலந்து மரணிப்பதாலோ, இல்லை கடத்தி வந்து பூமிக்கு அடியில் உள்ள இது போன்ற நிலவரையில், ரகசிய இடத்தில் கொன்னு குழிதோண்டி புதைப்பதாலோ நாம வெற்றி பெற்றதா அர்த்தமில்ல.. ஏன்னா, அப்படி நடந்தாலும் அவன் மேல மக்களுக்கு இன்னும் இரக்கமும், பாசமும் கூடுமே தவிர குறையாது. அதனால …”
மூவரும் “அதனாலே…” என்று கோரஸாக கேட்க,
“அதனால, அவனை அடிக்கணும்! எழும்ப முடியாத அளவுக்கு பலமா அடிக்கணும். வீட்டுல, வெளியில, வேலை பார்க்கற இடத்துல, உறவினர் முன்னிலையில், பொதுவெளின்னு அவன் எங்கே போனாலும் அவமானத்தால் தலை நிமிர்ந்து நடக்க முடியாத அளவுக்கு அடிக்கணும். அதையே நினைச்சுக்கிட்டு வேதனை தாளாம துடிக்கணும். யார் கிட்டேயும் பேச முடியாம, உண்ணாம, உறங்காம நிம்மதியிளந்து தவிக்கணும். கடைசியில், நம்ம கையால உயிரையும் விடணும்”
அவர் முகம் பிரகாசமாக மாறியது.
“அருமை! அட்டகாசம்! பிரமாதம்!! நினைக்கவே அத்தனை பேரின்பமா இருக்கு. சொல்லு! இதுக்கு, நீ என்ன பண்ண போறே?” அவரது அவசரம் அவனுக்கு புன்முறுவலை தோற்றுவித்தது.
“விவேகத்தோடு, புத்திசாலித்தனத்தையும் கையாள போறேன். கல்யாணம் பண்ண மாட்டேன்னு வீராப்புடன் திரிபவனை, அதுக்குள்ளே தள்ளி விடப் போறேன். அவனை கட்டிக்கப் போறவ மூலம் அவனை அடியோடு சாய்க்கப் போறேன். அவள் யார்? எங்கே இருக்கா? எப்படி என் திட்டத்தை செயல்படுத்த போறேன்? அவள் மனம் மாறி அவனை ஏற்பாளா? இல்லை வெறுத்து அவனை நிம்மதியில்லாம ஆக்கிட்டுப் போவாளா? ஒரு வேளை மனம் மாறினா அவளோட கதி… இதெல்லாம் இப்ப நான் சொல்ல மாட்டேன். போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. ஆட்டம் அதிரடியாய் ஆரம்பமாகிடுச்சு” என்று கண்களில் கனலை கக்கியபடி கூறினான்.
ஹாய் டியர்ஸ்,
மேல உள்ள பதில் தான் உங்களுக்கும். வீரபாண்டி யார்? அவன் தான் நாயகனா? அவனை மணக்கப் போவது யார்? இவர்கள் இப்படி திட்டம் தீட்டும் அளவுக்கு அவர்களுக்கு இடையில் நடந்ததென்ன? வீரபாண்டி ஏன் கல்யாணம் பண்ணாம தம்பிக்கு பண்ணி வச்சான்? அவன் மனைவியாக வரப் போவது யார்?…. இன்னும் பலவிதமான கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள நவம்பர்- 1 முதல் வரப் போகும் “அக்னி தீர்த்தம்” தொடரை வாசியுங்கள்.