யமுனாவை பார்த்து விட்டு அதிலிருந்து மீள முடியாமல் அவதியுற்ற சந்திரன், வேறு எங்கும் போகாமல் வீட்டிற்கு வந்து விட்டான். மகனின் முகத்தில் தெரிந்த சோகமும், கவலையும் சங்கீதாவை பெரும் கவலையில் ஆழ்த்தியது.
அவள் மீதான மகனின் நேசம் தெரிந்ததால் அல்லவா, உடன் பிறந்தவனிடம் கூறி திருமண ஏற்பாடுகளையும் செய்வதற்கு முன் வந்தார். ஆனால், அத்துடன் நிறுத்தியிருந்தால் இன்று அவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளேனும் பிறந்திருக்கலாம். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட அவரும் காரணமாகி, மகனின் காதலும் கை கூடாமல் போய் விட்டது.
நேற்று ஜெயக்குமாரியிடம் பேசும் போது, ‘அவர்களை சேர்த்து வைத்து விடலாம் அண்ணி. உண்மையாக நேசித்த இரண்டு ஜீவன்களை பிரித்து வைத்த பாவம் நமக்கு வேண்டாம்’ என்று கூறி விட நா துடித்தது. இருந்தும் ஏனோ வார்த்தைகள் வெளியே வர மறுத்து விட்டன. இப்போது, அவன் படுகின்ற கஷ்டத்தைப் பார்க்கும் போது பெற்ற மனம் பரிதவித்தது.
அவனது முகத்தைப் பார்த்து நடந்த விசயங்களை தெரிந்து கொண்ட அருணாச்சலம், வீரபாண்டியன், தனது வீட்டு நபர்களைத் தவிர சுற்றிலும் உள்ள அனைவரையும் அழைத்த கோபம், தங்கையின் திருமணத்திற்கு விலை உயர்ந்த வைரம், தங்க ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள், கார், மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்திருக்கும் ரொக்க பணம், தான் வாங்க ஆசைப்பட்ட நிலங்களில் சிலவற்றையும் சீர் வரிசையாக கொடுக்க முன் வந்ததை அறிந்து வெகுண்டு போயிருந்தார்.
இந்த திருமணம் நடக்க கூடாது. அவனும் தலை நிமிர்ந்து வெளியே நடமாட கூடாது என்று மனதில் வஞ்சகமாக எண்ணியவர், சந்திரனிடம் அது விசயமாக பேச முயன்றார். ஆனால், மகன் நேற்றும் இன்றும் இருந்த நிலையை நேரில் பார்த்து தெரிந்து கொண்ட சங்கீதா, அவனை இயல்பாக மாற்றும் பொருட்டு கனிவுடன் பேசி, அருணாச்சலத்தின் அருகில் போக விடாமல் பார்த்துக் கொண்டார்.
அவர் எதற்காக அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்ததால், அவனும் மனகவலைகள் அகலும் பொருட்டு, அவரது பேச்சைக் கேட்டு வந்தான். இந்நிலையில் மறுபடியும் யமுனாவிற்கும் மாப்பிள்ளைக்கும் தேவையான நகை வாங்கப் போவது, உடை தேர்வு செய்வது, புதிய காருக்கான மாடல் பார்ப்பது என்று வீரபாண்டியன் நடந்து கொள்வதை அறிந்த நேரத்தில் இருந்து அவன் இரத்தமே கொதித்தது. அதை மேலும் வலுவாக்கும் பொருட்டு அருணாச்சலத்தின் நடவடிக்கைகளும் அமைந்தன.
காலை நேரம் மகனை அழைத்த அண்ணாமலை, “பெரியம்மாவோட சொந்தக்காரங்களுக்கு பத்திரிகை வைக்க ஏன் இத்தனை தாமதம்? உடனே போயி வச்சிட்டு, அவங்க அத்தனை பேரையும் கட்டாயம் வரச் சொல்லு!” என்று கூறினார்.
அவனும் மனதில் இருப்பதை முகத்தில் காட்டாமல் மறைத்து, அவர்களுக்காக வாங்கிய அனைத்து சாதனங்களுடன் இராமேஸ்வரத்துக்கு பயணப்பட்டான்.
வெகு நாட்களுக்குப் பிறகு, உடன் பிறந்தவளின் கணவர் வழி உறவினரை சந்தித்த விஷ்ணுபிரியா, அவனை அன்புடன் வரவேற்றார். புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்து, சில நிமிடங்கள் இயல்பாக பேசிக்கொண்டு இருந்தான் சந்திரன். அப்போது, சுவரில் இருந்த ஒரே போன்ற தோற்றமுடைய இரு பெண்களின் புகைப்படத்தையும் ஆச்சர்யத்துடன் பார்த்தான். விஷ்ணுபிரியா, “அது நானும் என் அக்கா தேவிபிரியாவும்” என்றார்.
தனது பெரியப்பா அருணாச்சலத்தின் மனைவியை சிறு வயது முதல் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்தவனுக்கு, அவரது சகோதரியும் அப்படியே உருவ ஒற்றுமையுடன் இருப்பதைக் காணவும் அத்தனை வியப்பாக இருந்தது. சிறிது நேரம் அவனது பெரியம்மாவை பற்றிய பேச்சு நடந்தது. அப்போது, அவர்களின் மகள் ‘தேவசேனா’ வந்தாள். அவளும் தன்னுடைய அம்மாவின் ஜாடையை ஒத்துக் காணப்பட்டாள்.
சந்திரன் அவளிடம் சகோதர பாசத்துடன் நடந்து கொண்டான். அனைவரும் சற்று நேரம் அமர்ந்து குடும்ப விசயமாக பேசினார்கள். விஷ்ணுபிரியா, “என் அக்கா எங்களை விட்டுப் போயிட்டாலும், எப்பவும் எங்க கூடவே இருக்கணும்னு ஆசையில, அவள் ஞாபகமா ‘தேவசேனா’ன்னு பெயர் வச்சிருக்கோம். அக்கா இறந்த பிறகு ஊருக்கு வர மனசு வரல. அத்தோடு, இராமேஸ்வரத்துக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இடையே உள்ள தொலைவு, உறவினர்கள்னு சொல்லிக்க வேறு யாரும் இல்லாததால், பேச்சு வார்த்தையும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு அப்படியே நின்னுட்டு” என்று கூறியதும், அவன் ஒப்புதலாக தலையசைத்தான்.
“உன்னை நான் சின்ன குழந்தையா இருக்கறப்போ பார்த்தது. இப்போ, பெரிய ஆளா வளர்ந்து அழகா இருக்கே!” என்றார்.
அவன் உதடுகள் வெட்கப் புன்னகையை உதிர்த்தன.
“ஆமாம், உங்க தாய் மாமன் வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? வீரா, வீராவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? அவர் இப்போ என்ன பண்றார்?” உதடுகளில் புன்னகை மலர அவர் கேட்க, புருவம் முடிச்சிட அவரைப் பார்த்தான் சந்திரன்.
“என்ன சந்திரா அப்படி பார்க்கறே? உங்க அம்மா கல்யாணத்துக்கு வீராவோட அப்பா சந்தானபாரதி தானே வீட்டுக்குப் பெரியவரா முன்னே நின்னு கல்யாணத்தை நடத்தி வச்சிருந்தார். ரொம்ப நல்ல குடும்பம். அருமையா பழகும் மனுஷங்க. அப்படிப்பட்டவர்களோட பழக்கம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். எப்ப பார்த்தாலும் அன்பா பேசுவாங்க. இப்போ, அவங்களைப் பார்த்தும் வருஷக்கணக்கு ஆகிடுச்சு” என்று வருத்தத்துடன் கூறினார்.
அவன் மனம், ‘எல்லாரையும் தன் வசப்படுத்துவதில் கெட்டிக்காரர்களாக தான் குடும்பமே இருக்கிறது’ என்று எண்ணியது.
பின்னர், அவன் வந்த விசயமாக பேசினார்கள். பத்திரிகை, புத்தாடைகளை பார்த்ததும் நெகிழ்ந்து போனார்கள். அவனது உடன்பிறப்பு, பெற்றாேர் என அனைவரையும் பற்றி விசாரித்தார்கள். தேவசேனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. பாஞ்சாலங்குறிச்சியில் தங்களுக்கு இத்தனை உறவினர்கள் இருக்கிறார்களே என அதிசயமாக நோக்கினாள். அவர்கள் அனைவரையும் நேரில் காணும் ஆவலில் அங்கு போவதற்கு கேட்டாள்.
அவர் பதில் கூற தடுமாறியதும், “ப்ளீஸ்மா… அவங்க யாரையும் நான் இதுவரை பார்த்ததுல்ல. இப்ப எல்லாரையும் பார்க்கணும்னு ஆசையா இருக்கும்மா. அண்ணன் கல்யாணத்துக்கு போயிட்டு, அப்படியே, அவங்க எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்” என்று கேட்டாள்.
மகளின் அன்பான கோரிக்கையை மறுக்க மனம் இல்லாமல், அவர் புன்னகையுடன் பார்த்தார்.
சந்திரன், “தேவசேனாவையும் கூப்பிட்டு நீங்க எல்லாருமா சேர்ந்து வாங்க பெரியம்மா. வந்து… ஒரு மாசம் நம்ம வீட்டுல தங்கிட்டு நிதானமா போகலாம்” என்றான்.
விஷ்ணுபிரியா சற்று நிதானித்தார். பின்னர், “திருமணத்துக்கு முன் கண்டிப்பா வந்துடுவோம்” என்று பதிலுரைத்தார்.
அன்று முழுவதும் அங்கேயே தங்கி இருந்த சந்திரன், மறுநாள் காலையில் ‘அனைவரும் கட்டாயம் வர வேண்டும்’ என்று சொல்லிவிட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு புறப்பட்டான்.
***
யமுனாவின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று திட்டமிட்டு வைத்திருந்த அருணாச்சலம், அது விசயமாக தம்பி மகனிடம் பேசுவதற்கு பல வழிகளில் முயற்சித்தார். ஆனால், அவனோ இராமேஸ்வரத்திற்கு சென்று வந்த நேரத்தில் இருந்து அவர்களின் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறான்.
எரிச்சலாக வந்தது அவருக்கு. அவர்கள் யாருக்கும் அழைப்பு வைக்க வேண்டாம் என்றும் கேட்காமல் அவன் மகனை அனுப்பி விட்ட தம்பியை நினைக்கும் போது. அவர்களை ஒரு நாள் பார்க்கும் முன்பே இப்படி இருப்பவன், வந்த பிறகு எப்படி நடந்து கொள்வானோ என்று சலிப்பாகவும் இருந்தது. அதை மேலும் அதிகமாக்கும் பொருட்டு, திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தேவசேனா, தன் குடும்பத்தினருடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்திருந்தாள். அவர்களை எதிர்கொள்ள விரும்பாமல் தன் அறையில் அடைந்து கொண்டார் அருணாச்சலம். அவர்களும் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, வலிய பேச மனமில்லாமல் அமைதியாக இருந்து கொண்டார்கள்.
தேவசேனா, அவரைத் தவிர்த்து மீத அனைவரிடமும் நன்றாக பேசினாள். அந்த ஊரை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு, சந்திரனையும் அவன் தங்கை ‘சந்திரிகா’வையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று வந்தாள்.
ஆறுகள், ஏரிகள், சுற்றுலா இடங்கள், ‘வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை’, கோவில்கள் என்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டாள். சித்தி மகள் சந்திரிகாவுடன் நிறைய நேரம் செலவிட்டாள். அப்படி பேசும் போது ஒரு சில விசயங்களையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது. வீட்டில் இருக்கும் நேரத்தில் கலாட்டா பேச்சுக்களை சிதற விட்டாள். சந்திரனுடன் சேர்ந்து கொண்டு வீட்டாரை ஒரு வழி பண்ணினாள்.
ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தனியாக உலாவினாள். அப்படி ஒரு முறை வெளியே சென்று மறுபடியும் வீட்டிற்கு திரும்பி வரும் போது, வழிப்பாதையை மறந்து விட்டாள். அச்சத்துடன், சாலையில் நின்று உதவிக்கு யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது, அவள் முன் வேகமாக வந்த கார் பிரேக்கடித்து நின்றது. அவள் கீழே விழச் சென்று லாவகமாக தன்னுடைய ஸ்கூட்டியை தரையில் விழாமல் பற்றினாள்.
விஷ்ணு மற்றும் வீரபாண்டியன் இருவரும் புதியதாக தெரியும் அவளை கேள்வியுடன் பார்க்க, ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அவர்களை நோக்கிச் சென்றாள் ‘தேவசேனா!’
“இப்படிதான் வழிப்பாதையில் வண்டியை நிறுத்தி, வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கிறதா?” அவளிடம் கேட்ட வீரபாண்டியன், “வண்டியை எடு விஷ்ணு!” என்று உத்தரவிட்டான்.
அவள் விரைந்து வந்து வழியை மறித்தாள்.
“யாரு விஷ்ணு இது? எதுக்காக இப்படி வம்பு பண்றாங்கன்னு கேளு!”
தலையசைத்துக் கொண்டு வெளியே பார்த்த விஷ்ணு, அவளிடம் யார், எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்று வினவ, அவளோ “நான் தேவசேனா! இராமேஸ்வரத்தில் இருந்து வந்திருக்கேன்” என்று பதிலுரைத்தாள்.
வீரபாண்டியன் ஒரு முறை அவளைப் பார்த்து விட்டு, புருவத்தை சுருக்கினான்.
“தேவசேனா! ம்ம்… பெயரை சொன்னதும் தெரிஞ்சுக்க இதென்ன சி.எம். பெயரா? இல்லை பி.எம் பெயரா? ஏன் விஷ்ணு, ஒருவேளை இவங்க பெயர் தான் புதுசா வந்திருக்கும் தொழிலதிபரின் பெயரோ?” அவன் நாடியை தேய்த்துக் கொண்டே கிண்டலாக வினவியதும், அவள் உதட்டைக் கடித்து சிரிப்பை மென்றாள்.
“அதொண்ணும் இல்ல சார். நான் இந்த ஊருக்கு புதுசு. ஸ்கூட்டியில் வந்துட்டு இருக்கறப்போ வழிப்பாதையை மறந்துட்டேன். ப்ளீஸ்.. எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா?”
“ஊருக்குப் புதுசா இருந்தா இப்படியா வழியை மறிச்சிட்டு நிற்கிறது? பார்த்து சூதானமா நடந்துக்க தெரியாது. நீ வண்டியை எடு விஷ்ணு! அவங்க கொஞ்ச நேரம் இருந்து, நல்லா ஊரை சுத்திப் பார்த்துட்டு மெதுவாகவே போகட்டும்”
வீரபாண்டியன் அமர்ந்திருக்கும் பக்கமாக சென்ற தேவசேனா, “சார், சார், சார் ப்ளீஸ் சார்! இப்படி கோபப்பட்டு என்னை தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க சார். நான் ஒண்ணும் வேணும்னு வந்து வழியை மறிக்கல சார். தனியா வெளியே போயிட்டு வந்ததில் வழித்தடத்தை மறந்துட்டேன். கொஞ்சம் என் வீட்டுப் பக்கமா கொண்டு விட்டா புண்ணியமா போகும்” என்று கெஞ்சுதலாக கேட்டாள்.
விஷ்ணுவிற்கு கேட்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. வீரபாண்டியன் கேட்ட உடனே தேவசேனா பதிலுரைக்க தயாராகி விட்டாள்.
“நான் சந்திரன் அண்ணா வீட்டுக்கு வந்திருக்கேன் சார்”
“சந்திரனா?”
“ம்.. ஆமாம். சந்திரசேனன்!” அவ்வளவு தான் அடுத்த நிமிடம் வீரபாண்டியனின் முகம் கடுமையை தத்தெடுத்தது.
“விஷ்ணு காரை எடு!” அவனது கோபமான குரலில், அவள் மறுபடியும் வழியை மறித்து நின்றாள். அவனது சீற்றமான பார்வையை கண்டு கொள்ளாமல், “எதிரியா இருந்தாலும் உதவி கேட்டு வருபவருக்கு ‘இல்லை’ன்னு சொல்லாம செஞ்சு கொடுக்கும் தமிழ் பண்பாட்டில் பிறந்த நீங்க, ஊருக்குப் புதுசான என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாம, இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போக பார்க்கறீங்களே சார்! ப்ளீஸ் சார்… கொஞ்சம் மனசு வச்சு உதவி பண்ணுங்க சார்” என்று மூச்சு வாங்க பேசினாள்.
“ம்ப்ச்.. சலிப்பாக உணர்ந்த வீரபாண்டியன், விஷ்ணு! நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீ அவங்களை அவங்க சொந்தக்காரங்க வீட்டுப் பக்கத்துல விட்டுட்டு உடனே வந்துடு!” உத்தரவு போல கூறியவன் அவன் இறங்கிச் செல்ல காத்திருக்க, “ஆமாம். ஏன் சார் அவங்க இத்தனை கோபமா இருக்காங்க? நான் என்ன அவரைப் பார்த்து ‘என்னைக் கட்டிக்கோங்க’ன்னா கேட்டேன். சரியான சிடுமூஞ்சி. கஞ்சி பாத்திரத்தில் முக்கிய சட்டையை மாதிரி விறைப்பா தெரிகிறார்.” அவள் கூறியதைக் கேட்ட விஷ்ணு சிரிப்பை அடக்க சிரமப்பட, வீரபாண்டியன் அவளை கடுமையாக முறைத்தான்.
“நீங்க வாங்க சார் நாம பேசிட்டே போகலாம். அவருக்குப் பிடிக்கலன்னா போகட்டும்” அவனைத் திரும்பி பார்க்காமல் தேவசேனா, விஷ்ணுவிடம் பேசிக்கொண்டே நடக்க, பல்லைக் கடித்தபடி காரின் வேகத்தை அதிகப்படுத்தினான் வீரபாண்டியன்.
“நீங்க இந்த ஊருக்குப் புதுசா இருப்பதால், அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியல. இனிமேல் இப்படி பேசாதீங்க. அப்புறம், அவர் ஏதாவது சொல்லிடுவார். “
விஷ்ணுவின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல், “அப்படி கோபப்படும் அளவுக்கு நான் எதுவும் சொல்லலயே சார்… பிறகும், ஏன் அவர் அப்படி ‘முறைப்பையன்’ மாதிரி முறைச்சிக்கிட்டு போறார்?” என்றாள் தேவசேனா.
விஷ்ணு, சிரித்துக்கொண்டே தன்னுடைய நண்பனும், முதலாளியுமாகிய வீரபாண்டியனை பற்றி பெருமிதமாக கூறியதைக் கேட்ட தேவசேனா, ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.
“அவ்வளவு பெரிய ஆளா இவர்? எனக்கு அவரைப் பற்றி தெரியாததால் தான் அப்படி பேசிட்டேன். மறுபடியும் அந்த சாரை பார்க்கறப்போ மன்னிப்பு கேட்கறேன் சார்” என்று முறுவலித்தாள்.
சந்திரனின் வீட்டிற்குச் சற்று தொலைவில் அவளை விட்டு விட்டு வீட்டை நோக்கி நடந்தான் விஷ்ணு. உதடுகள் புன்னகை வசப்பட்டன. மனமோ நண்பனின் முறைப்பையும், அவளது பேச்சையும் அசை போட்டது.
வீட்டிற்கு வந்த தேவசேனா, நேராக விஷ்ணுபிரியாவிடம் சென்று நடந்ததை கூறினாள். அவரோ, சற்று நேரம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்.
“அவர் நிஜமாவே உனக்கும் முறைப் பையன்தான். அதான், முறைப்பெண்ணை முதன் முறையா பார்த்ததும் அப்படி முறைச்சு முறைச்சு பார்த்திருப்பார்”
விஷ்ணுபிரியா கூறியதும், அவர்களின் உரையாடலை கேட்டிருந்த சங்கீதாவும் சத்தமாக சிரித்தார். அவர் மகள் ‘சந்திரிகா’ மட்டும் அமைதியாக இருந்தாள்.
அவள் அருகில் சென்ற தேவசேனா, “உங்க அழகுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஏற்றவர் இவர் இல்ல. பேசாம, சித்தப்பா சொல்ற மாதிரி வேறு யாரையாவது கட்டிக்கிட்டு வெளியூர்ல போயி சந்தோஷமா இருங்க” என்றாள்.
அவளது கண்கள் ஏதோ நினைவில் கலங்கின. பின்னர், சித்தியின் கைப்பக்குவத்தை சுவை பார்த்த தேவசேனா, அவர்கள் குடும்ப கோவிலைப் பற்றி சந்திரன் கூறிய விசயமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. அவரும், அது விசயமாக பேசிவிட்டு, கண்டிப்பாக ஒரு நாள் தானே அழைத்துச் செல்வதாக சொன்னார்.
அன்று முதல் அவளது கண்கள் வீரபாண்டியனை காணும் ஆவலில் தேடி அலைந்தன. அவனோ, இவள் நிற்கும் திசைக்கே போகாமல் திருமண வேலையில் கவனத்தைப் பதித்தான். அப்படியும், அன்று சாலையோரம் நின்று பூ வியாபாரம் விசயமாக பேசிக்கொண்டு இருக்கும் போது, அவனைப் பார்த்ததும் மூச்சு வாங்க ஓடிச் சென்றாள்.
அருகில் நின்ற ஆட்கள் அவளை யோசனையுடன் பார்க்க, தெரியாதவன் போல முகத்தை திருப்பிக் கொண்டான் வீரபாண்டியன்!
அவளோ, போகாமல் அங்கேயே நிற்பதைக் கண்டு, “விஷ்ணு அவங்க என்ன விசயமா வந்திருக்காங்கன்னு கேட்டு அனுப்பு” அவனிடம் கூறுவது போல சொன்னான்.
அவள், “நான் உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கேன் மச்சான்!” என்று உச்சரித்த வார்த்தையில், அவன் விழிகள் வெளியே தெறித்து விடுவதைப் போல விரிந்தன.
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள் தோழமைகளே…