‘மச்சான்’ என்ற வார்த்தையில் வீரபாண்டியன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, அருகில் நின்றிருந்தவர்களும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்களைக் கண்டு கொள்ளாமல் தோட்டத்தில் மலர்ந்திருந்த புத்தம் புதிய மலர்களுக்கு போட்டியாக முகமலர்ச்சியுடன் காணப்பட்டாள் தேவசேனா!
உடனே விஷ்ணு, நண்பனின் தோளில் லேசாக இடித்து, அவனை சுய உணர்வு பெற உதவினான். அவளிடமிருந்து விழிகளைத் திருப்பிய வீரபாண்டியன், அவசரமாக தன்னுடைய பேச்சை முடித்து அவர்களை அனுப்பி விட்டுத் தானும் புறப்பட்டான்.
அவளோ விடாமல், “ஏய் மச்சான்! கூப்பிட்ட பிறகும் பதில் தராம போயிட்டு இருக்கீங்க. உங்களைப் பார்க்கத் தானே நான் இம்புட்டு தூரம் ஓடி வந்தேன்” ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு, வந்த வழியை நோக்கி கை காட்டினாள்.
அவன் பதில் கூறாமல் அகன்றதும், “என்ன மச்சான் பதில் தராம போறீங்க? என்னைப் பார்த்தா அம்புட்டு பயமாவா இருக்கு?” என்றாள் தேவசேனா.
அவளது பரிகாசமான வார்த்தையில் சிரித்த விஷ்ணு, வீரபாண்டியன் தன்னை பார்ப்பதை உணர்ந்ததும் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“விஷ்ணு! யார் இவங்க? எதுக்காக நம்ம தோட்டத்துக்கு வந்து நின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை ‘மச்சான், மச்சான்’னு கூப்பிட்டுட்டு இருக்காங்க? நீ இதுக்கு முன்னே எங்கேயாவது பார்த்திருக்கறியா? எனக்கு இவங்களை யாருன்னே தெரியலயே!” என்று கூறினான்.
இப்போது விழிகளை விரிப்பது அவள் முறை ஆனது.
“என்னது, என்னைத் தெரியலையா? என்ன மச்சான் இது இப்படி சொல்லிட்டீங்க? அன்னைக்கு ரோட்டுல வழி மறிச்சதா சொல்லி கோவிச்சுட்டு பிறகு, அந்த சாரை அனுப்பி, என்னை வீட்டுல கொண்டு பத்திரமா விடச் சொன்னீங்களே” அவனிடம் விளக்கமாக கூறியதும், வீரபாண்டியன், “அப்படியா? எனக்கு சுத்தமா ஞாபகத்துக்கு வரல” அத்துடன் விஷ்ணுவைப் பார்த்து கண் காட்டி விட்டு காரை நோக்கி நடந்தான்.
“பரவாயில்லை மச்சான். அதான் இப்ப ஞாபகம் வந்துட்டுல்ல. அதுவே எனக்குப் போதும்” அவளும் அவன் பின்னே நடந்து கொண்டு கூற, அவன் திரும்பி பார்த்தான்.
“ஆமாம். ‘மச்சான், மச்சான்’னு வாய் ஓயாம சொல்லிட்டு இருக்கறியே.. உனக்கு இங்கே யாரு மச்சான்?”
அவன் இடக்காக கேட்டதும் அவள், “நீங்கதான் எனக்கு மச்சான்!” என்று கூறினாள்.
வீரபாண்டியன் “மச்சானா? யாருக்கு யார் மச்சான்? நீ என்ன எங்க அம்மாவோட கூடப்பிறந்தவரின் மகளா? இல்லை, அப்பாவின் உடன் பிறந்தவங்க பொண்ணா? ஒழுங்கா வந்தோமா, ஊரைச் சுத்திப் பார்த்தோமா, வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பினோமான்னு இரு! இல்லை…” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“இல்லைன்னா…”
“இல்லைன்னா, காலை உடைச்சு கட்டுப் போட வச்சிடுவேன்”
அவள் கலகலவென நகைப்பதைக் கண்டு, அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
“காலை உடைச்சு வீட்டுல போட்டா, அப்புறம் காலமெல்லாம் நீங்கதான் என்னை தூக்கி சுமக்கணும் மச்சான். அதுக்கு சம்மதம்னா இதோ உடையுங்க” அவனைப் பார்த்து தங்க கொலுசு சப்தமிட்ட வெண்ணிற பாதத்தை தூக்கி காட்டினாள் தேவசேனா.
வீரபாண்டியன் ‘காலையிலே இதென்னடா வம்பா போச்சு’ என்று நினைத்து, அவளிடம் நின்று வாயாட மனமின்றி பேசாமல் காரை நோக்கி நடந்தான்.
“உங்களைப் போலவே, உங்க பூந்தோட்டமும் ரொம்ப அழகா இருக்கு மச்சான்! முதன் முதலா அத்தை பொண்ணு வந்திருக்கு. ஆசையா ரெண்டு ரோசாப்பூ கொடுக்கணும்னு பார்க்காம, இப்படி சண்டைக்காரன் மாதிரி முகத்தை திருப்பிட்டு போறீங்களே”
அவள் தன்னை வம்பிற்கு இழுக்கிறாள் என்று தெரிந்ததும், யாரிடமோ பேசுகிறாள் நமக்கென்ன என்ற பாவனையில் சென்று, காரில் ஏறி அமர்ந்தான்.
தேவசேனா, “அத்தைக்கு பிறந்ததாலோ இல்லை மாமாவுக்கு பிறந்தாலோ மட்டும்தான் மச்சான்னு கூப்பிடும் அவசியமில்ல மச்சான்! உங்க அத்தைக்கு உடன் பிறவா சகோதரியின் மகளா இருந்தாலும் ‘மச்சான்’னு வாய் நிறைய கூப்பிடலாம்” என்று பதிலுரைத்ததும் அவன் முறைத்தான்.
மறுபடியும் அவள், “முறைப் பையனா இருந்தா இப்படி முறைச்சு முறைச்சு பார்க்கணும்னு அவசியமில்ல மச்சான்! கொஞ்சம் பாசமாகவும் பார்க்கலாம். இல்ல, நம்ம வயசுக்கு ஏத்த மாதிரியும் பார்க்கலாம்” அவனிடம் கூறிவிட்டு கண் சிமிட்டினாள்.
அவன் முகத்தை திருப்பிக் கொள்ள, தங்களையே பார்த்திருக்கும் விஷ்ணுவை நோக்கி, “உலகத்துல எத்தனையோ பேருக்கு ‘தாய்மாமன், அத்தை’ங்ற உறவே இல்லாம இருக்காங்க விஷ்ணு சார். அப்படிப்பட்டவங்க எல்லாரும் மச்சானுக்கு எங்கே போவாங்க?” அவள் கேட்டதும், விஷ்ணு சிரிப்பை அடக்க சிரமப்பட்டான்.
கடுப்புடன் அவளைப் பார்த்த வீரபாண்டியன், ‘தான் யாரென்று தெரிந்துகொண்டு பேசுகிறாளா? இல்லை, தெரியாமல் பேசுகிறாளா?’ என்று நினைத்து பார்வையை திரும்பி, விஷ்ணுவை அவன் பார்த்த பார்வையில் அடுத்த நிமிடம் கார் கிளம்பியது.
அவனைப் பார்த்துக் கை காட்டிய தேவசேனா, “ஓவர் அழுத்தம் உடம்புக்கு நல்லதில்ல மச்சான். ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’. அதனாலே, கொஞ்சமா சிரிச்சு பழகுங்க. பை, பை!” என்று சத்தமாக கூறியதும், விஷ்ணு பக்கென சிரித்து விட்டான்.
அவனை முறைத்தாலும், “சரியான வாயாடி! இவளை கட்டிக்கப் போற அந்த ஜீவனை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு!” என்ற வீரபாண்டியன், அதற்குப் பிறகு பூந்தோட்டத்திற்கு வந்தவர்கள் குறித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்த மகனைப் பார்த்த ஜெயக்குமாரி, அவனுக்குத் தேவையான காலை உணவை எடுத்து வைத்தார். பெரியப்பாவை பார்த்து விட்ட ஸ்ரீநிதி ஓடி வந்து அவன் மடியில் சாய்ந்தாள்.
யமுனாவின் கல்யாண வேலைகள் அதிகமாக இருப்பதால், சதா வெளி வேலைகளில் மூழ்கிவிட்டு இரவு, பகல் பாராமல் அலைந்து திரிந்து கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுத்து, ஓயாமல் சுற்றிக் கொண்டிருக்கும் அவனுக்கு, முன்பு போல தம்பி மகளைத் தூக்கி வைத்துக் கொஞ்ச முடியவில்லை. இப்போது, அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அவள் மடி சாய்ந்ததும், அப்படியே உருகி விட்டது.
“என்ன கண்ணு சாப்டியா?”
அவள் தலையாட்டிக்கொண்டே, “பெரிப்பா சாப்டல” என்றாள்.
ஒரு கவரை அவளிடம் கொடுத்தான். ஆசையுடன் வாங்கிய ஸ்ரீநிதி தன் தாய் சகுந்தலாவை நோக்கி ஓடினாள்.
அவன் புன்னகையுடன் சாப்பாட்டு அறைக்குச் சென்று, ஜெயக்குமாரியிடம் பேசிக்கொண்டே காலை உணவை சுவையுடன் உண்டான்.
ஆழ்ந்த சிகப்பு நிற ரோஜாவை தலையில் வைத்து, “பெரிப்பா…” என்று அழைத்துக்கொண்டே ஓடி வந்த தம்பி மகளை தூக்கி, மேஜையின் மீது அமர வைத்தான்.
அவள், “நல்லாக்கா.. ” என்று கேட்டதும், “ம்… என் பொண்ணு தேவதை மாதிரி இருக்கா” என பதிலுரைத்தான்.
இருவரின் சிரிப்பையும் ரசித்த ஜெயக்குமாரி, பேத்திக்கு உணவு கொடுக்க முயல, அவளோ “பெரிப்பா… ஆ!” என்று வாயைத் திறந்து காட்டினாள்.
புன்னகையுடன் அவளுக்கு கொடுத்த வீரபாண்டியன், அவள் கதை கூறுமாறு சொன்னதும், அதுபோலவே செய்தான்.
வரும் போது மகன் முகத்தில் தெரிந்த இறுக்கம், இப்போது நீங்கி புன்னகையுடன் இருப்பதைக் கண்டவரின் உள்ளம், ஏதோ நினைவில் வாடியது. பின்னர், “பாண்டி, நம்ம யமுனா கல்யாணத்துக்கு முன்னாடி, குலதெய்வம் கோவில்ல பூஜை வைக்கணும். வர்ற வெள்ளிக்கிழமை ராத்திரி பூஜைக்கு ஏற்பாடு பண்ணிடுறியா?” என்று கேட்டார்.
அவன், “கண்டிப்பா செய்றேன்மா. அதுக்கு, வேறு யாரையும் கூப்பிடணுமா?” என்றான்.
“ம்.. ஆமாம். நம்ம பெரியப்பா குடும்பம் நாளைக்கு சென்னையில இருந்து வந்துடுவதா சொல்லியிருக்காங்க. அவங்க வந்துட்டா நாம எல்லாருமா சேர்ந்து போயி வச்சிடலாம். பிறகு, ஒரு சிலருக்கு மட்டும் சொன்னா போதும். இல்லன்னா ‘அவங்களுக்கு சொன்னா.. எனக்கு சொல்லலை’னு கல்யாண நேரத்துல வீணா பிரச்சனை தான் வரும்.” என்றார்.
அவனும் புரிந்து கொண்டு தலையசைத்தான்.
அன்றொரு நாள் மகனிடம் திருமண விசயமாக பேசி அழுதவர், அதன் பிறகு அதைப் பற்றி பேசுவது இல்லை. இருந்தாலும், அவர் கண்களில் தெரியும் ஏக்கம் மறையவும் இல்லை. அதைக் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டான் வீரபாண்டியன்.
தங்கை மகளிடம் சற்று நேரம் பேசி மகிழ்ந்தான். தம்பியிடம் திருமண விசயமாக பேசிக்கொண்டு இருந்தான். மறுநாள், அவனது பெரியப்பாவின் குடும்பம் மாலையில் வந்து சேர்ந்ததில் இருந்து, மேலும் குதூகலம் அதிகரித்தது. அவர்கள் அனைவருடனும் சந்தோசமாக பொழுதைக் களித்தான். அவர்களுக்கும் வீட்டில், தோட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் புத்தாடை எடுத்து வந்தான்.
விருந்தினரின் வருகையில் வீடு திருமண களை கட்டியது. அனைவர் முகங்களும் புன்னகையுடன் காணப்பட்டன. நெருங்கிய உறவினர்கள் ஒருசிலர் விருந்து வைக்கும் விசயமாக வந்து விட்டுச் சென்றனர். அத்தனை நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த அமைதி, சோகம், கவலை அவர்களை விட்டு விலகி நிம்மதி குடியேறியது.
***
தோட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு என்று வாங்கிய புத்தாடைகளை எடுத்துக்கொண்டு அவர்களை காணச் சென்றான் வீரபாண்டியன். ஒவ்வொருவருக்கும் கொடுத்து விட்டு, அவர்களைத் ‘திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும்’ என இன்முகமாக அழைப்பு விடுத்தான். அவர்களும், அவனது நல்ல மனம், பிறருக்கு உதவும் நற்குணத்தையும் கண்டு வாயார வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
ஒவ்வொருவரும் கவருடன் போவதைப் பார்த்துக் கொண்டே அங்கு வந்தாள் தேவசேனா! அவன் பாராமுகத்துடன் நிற்பதையும் கவனத்தில் கொள்ளாமல் அருகில் நெருங்கினாள்.
அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தை கண்டதும் மெதுவாக உதடுகளை அசைத்தாள். அவளது பேச்சைக் கேட்க மனமற்று, அவன் விலகிச் சென்றதும், “உங்க சொந்தக்காரங்க, வேலைக்காரங்க எல்லாருக்கும் புது டிரெஸ் எடுத்துக் கொடுக்கறீங்களே ‘வீரா அத்தான்’! அப்படியே எனக்கும் ஒண்ணு கொடுக்கலாமில்ல?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.
“இல்ல. உங்க தோட்டத்துல வேலை பார்க்கற எல்லாருக்கும் பத்திரிகையுடன் புது துணியும் கொடுத்து கல்யாணத்துக்கு வரச் சொன்னீங்களே… அதுபோல எனக்கும் ஒண்ணு தரலாமே!”
அவன், “அவங்க எல்லாரும் எனக்கு உறவினரும், வேண்டப்பட்டவரும்! ஆனால் நீ?” என்று கேள்வியாக நிறுத்தியதும், “நான் உங்க அத்தைப் பொண்ணு!” என நிறைவு செய்தாள் தேவசேனா.
“அத்தைப் பொண்ணா? எனக்கு தான் அத்தையே இல்லையே! இதுல அத்தைப் பொண்ணு எங்கே இருந்து வந்தா?”
அவன் கிண்டலாக வினவியதும் அவளது இதழ்கள் தானாக மலர்ந்தன.
“அத்தை, அத்தை மகள் எல்லாரும் உங்களை சுற்றித் தான் இருக்காங்க வீரா அத்தான். நீங்க தான் எல்லாரையும் மறந்துட்டீங்க.”
அவன் சிரித்ததும், அவள் வியப்புடன் பார்த்தாள்.
“சுற்றிலும் இருப்பது எதிரியும் சூழ்ச்சியும்.. அதில் நீயும் உட்பட! இனியொரு முறை என்னை ‘வீரா அத்தான்’னு கூப்பிடாதே. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று எச்சரித்து விட்டு, “நீ இந்த ஊருக்கு எதுக்கு வந்தே? உங்க அண்ணன் கல்யாணத்தைப் பார்க்கவா? இல்லை, என்கிட்டே வம்பு செய்யவா?” என்று கேட்டான்.
திடீரென்று அவன் அப்படி கேட்டதும் அவளுக்குத் திக்கியது. பதில் கூற முடியாமல் நா தள்ளாடியது.
“நீ யார்? என்ன படிச்சிருக்கே? இத்தனை நாள் எங்க இருந்தே? உன் கூடவே இருப்பது யாரெல்லாம்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா? கல்யாண வீட்டுக்கு வந்தவ, வீட்டுல இருந்து அவங்களுக்கு வேண்டிய உதவியை செஞ்சுக் கொடுக்காம, இப்படி பொதுவெளியில் சதா என் பின்னேயே சுத்திட்டு இருக்கறியே.. நீ படிச்சவ தானே? இது தவறுன்னு உனக்குத் தெரியல?”
முகம் மாற அவன் கேட்டதும், தேவசேனா தோன்றிய அதிர்ச்சியை மறைத்து, “வீட்டுலயே சும்மா இருக்க போரடிச்சது. அதான், அப்படியே சுத்திப் பார்க்கலாம்னு வந்தேன்” என்று கூறினாள்.
“நீ சுத்திப் பார்க்க என் பூந்தோட்டமும், தோப்பும் தான் கிடைச்சதா? வேறு இடமே இல்லயா? இனிமேல், இப்படி வலிய வந்து வம்பு பண்ற வேலையை வச்சிக்காதே! எப்பவும், நான் இப்படி சொல்லிட்டுருக்க மாட்டேன்” அவன் கண்டிப்புடன் கூறிவிட்டு, மீத புத்தாடைகளை காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு, ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
தேவசேனா, “அத்தை மகனை ‘அத்தான்’னு கூப்பிடுவதிலும் தப்பில்ல. அவர் இருக்கும் இடம் தேடி போவதும் குத்தமில்ல. நான் இந்த ஊருக்கு இதுவரை வந்ததில்ல. இன்னும் ஒரு வாரத்துல போயிடுவேன். அதான், அதுவரை நல்லா சுத்திப் பார்த்துட்டு போகலாமேனு வந்தேன். அதிலும் குறை கண்டுபிடிக்கிறீங்களே வீரா அத்தான்!” என்றவள்,
“ஊர்ல பெரியவர். எல்லாரிடமும் பாரபட்சமின்றி பழகும் நல்ல உள்ளம் படைத்தவர். வழி தெரியாம தவிச்ச எதிரி வீட்டுப் பொண்ணான என்னைப் பாதுகாப்பா வீட்டுல கொண்டு சேர்த்தவர். வெளியே முரட்டுத்தனமா முகத்தை வச்சுட்டு, உள்ளே மென்மையான மனதை உடையவர். யார் வந்து எது கேட்டாலும் மறுக்காம செஞ்சு கொடுக்கும் தங்கமான மனசுக்காரர். அப்படிப்பட்டவர், என் அத்தானாக கிடைக்க நான் புண்ணியம் செஞ்சிருக்கணும். அதான், மறுபடியும் மறுபடியும் உங்களைத் தேடி வந்து பேசுறேன்” சாந்தமாக முகத்தை வைத்துக் கூறினாள்.
வீரபாண்டியன் சத்தமாக சிரித்தான். அவன் சிரிப்பு நிற்க சற்று நேரமாகியது.
காரை இயக்கியவன், “இதைப் போயி அப்படியே உங்க வீட்டுல சொல்லு! குறிப்பா, உங்க பெரியப்பா அருணாச்சலத்துக் கிட்டே சொல்லிப் பாரு. அதுக்கான எதிர்வினை என்னன்னு உனக்கே தெரிய வரும். மறுபடியும் சொல்றேன். இப்படியெல்லாம் பேசி என்னை ஏமாத்தலாம்னு நினைக்காதே.. நீயொரு வயசுப்பெண். என்னைப் பார்க்கற இடமெல்லாம் தேடி வந்து பேசுறதும், சிரிக்கறதும் கொஞ்சமும் நல்லா இல்லை. உன் பேருடன் எனக்கும் சேர்த்துக் கெட்டப் பெயரை ஏற்படுத்தி தராதே” என்றுரைத்து சென்று விட்டான்.
காரின் வேகத்தில் அவனது கோபத்தின் அளவு தெரிந்தது. இருந்தும், அவள் மனம் அவன் உதிர்த்துச் சென்ற வார்த்தைகளை அசை போட்டு பார்த்தது.
வீட்டிற்குச் சென்றும் வீரபாண்டியனால் தனது கோபத்தை அடக்க முடியவில்லை. வீடு முழுவதும் ஆட்கள் இருக்க அவர்கள் முன் காட்டவும் முடியவில்லை. அதனால், காரிலிருந்து இறங்க மனமற்று அப்படியே இருந்தான்.
பெரியப்பாவின் வாகன ஓசையில் ஓடி வந்த ஸ்ரீநிதி, அவனைக் காணாமல் தேடினாள். அவன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருப்பதைக் கண்டு ”பெரிப்பா…” என்று அழைத்துக் கொண்டே ஓடினாள்.
விழிகளைத் திறந்த வீரபாண்டியன், மனதை ஒருமுகப்படுத்தி விட்டு, வெளியே வந்து ஸ்ரீநிதியை தூக்கினான்.
“பெரிப்பா… அத்தை”
“அத்தைக்கு என்ன?”
“ட்ரெஸ்… ” அவள் என்ன கூற வருகிறாள் என்று தெரியாமல் வேகமாக உள்ளே சென்றான். அங்கு பட்டுப்புடவை, நகையில் கையிரண்டிலும் மெஹந்தி வைத்துக்கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் யமுனா! தங்கையின் முகத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் அரும்பியது. அருகில் சென்று ஆதூரமாக அவள் கூந்தலை வருடினான்.
“இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்கேடா! சீக்கிரமே உனக்கு கல்யாணமாகி, உன் கணவர், குழந்தையோடு சேர்ந்து நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும்” அவன் உதடுகள் துடிக்க கூறியதும், அவள் அண்ணனின் பாதங்களைப் பணிந்து வணங்கினாள்.
அவளைத் தூக்கி லேசாக அணைத்தான்.
“யமுனா, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே? அண்ணனுக்காக சரின்னு சொல்லலயே?”
அவள் இதழ்கள் புன்னகையால் மலர்ந்தன. விரல்கள் பத்தும் அவன் தோளைப் பற்றிக் கொண்டன.
“என் அண்ணன் எது செஞ்சாலும் என் நல்லதுக்கு தான் செய்வாங்கன்னு நான் நம்புறேன்.”
அவன் மனம் நிம்மதியடைந்தது. தன் மீதான தங்கையின் பாசத்தை நினைத்து உள்ளம் நெகிழ்ந்தது.
இருவரையும் பார்த்துக் கண் கலங்க நின்றார் ஜெயக்குமாரி. மகன் முகத்தில் சில நாட்களாக தெரிந்த வருத்தம், சோகம் தங்கையின் திருமண விசயத்தாலா? அல்லது, அன்று தான் கேட்ட கேள்வியினாலா? விடை தெரியா கேள்வியில் அவர் மனம் உழன்று தவிக்க, அதற்கான விடையை கொடுக்க வேண்டியவனோ, எப்போதும் போல தன் மனதை இரும்புக் கதவால் இறுக மூடியிருந்தான்.
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவு செய்யுங்கள் தோழமைகளே…