யமுனாவின் திருமண விசயமும், வீரபாண்டியன் புகழும் பாஞ்சாலங்குறிச்சி ஊர் முழுவதும் பேசப்பட, அதைக் கேட்டு வெறுப்பும் கோபமும் மேலோங்க காணப்பட்டார் அருணாச்சலம். இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி அவனை அவமானப்படுத்த வேண்டும் என்ற வெறி அவருக்கு நாளாக நாளாக அதிகரித்தது.
சந்திரனை அழைத்து அது விசயமாக பேசலாம் என்றால், அவனோ சதா திருமண வேலையாக அலைவது, புதியதாக வந்திருக்கும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது என்று இருக்கிறான். அவன் முகத்தில் இருந்த புன்னகையும், மகிழ்ச்சியும் திருமணத்திற்கு தயாராகி விட்டதை அறிவுறுத்தியது. அப்படிப்பட்டவன் முன்பு எப்படி யமுனாவின் திருமணத்தை நிறுத்துவது குறித்துப் பேசுவது? அதனால், அவன் தன்னை தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது? என்று யோசனையில் ஆழ்ந்தார்.
***
அன்றைய தினம் இறந்து போன சந்தானபாரதி மற்றும் அவரது அப்பா, தாத்தா அனைவரது சமாதியின் முன்பும் படையல் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அவற்றை பார்த்துக்கொண்டே இருந்த நெருங்கிய உறவினர் ஒருவர், “எப்படி வாழ வேண்டிய மனுஷன் இப்படி நம்ம எல்லாரையும் விட்டுப் போயிட்டார். அப்பா இறந்த வருத்தத்தில் பாண்டியும் கல்யாணம் செய்யாமலே இருக்கான். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்? அவனுக்கும் வயசாகுதே…” என்று பரிதாபத்துடன் கூறினார்.
உடனே மற்றொருவர், “நடந்ததை நினைச்சு வருந்துவதை விட, இனிமேல் நடக்கப் போறதைப் பற்றி பார்க்கறது தான் நல்லது. பாண்டியோட அப்பாவின் இறப்பு துரதிர்ஷ்டவசமானது. அதுக்காக, திருமணம் செய்யாமல் இருந்தா எல்லாம் சரியாகிடுமா?” என்றார்.
“உண்மைதான். ஆனால், நமக்கு இருக்கிற அக்கறை கூட அவனோடு பிறந்தவனுக்கோ, பெத்த தாய்க்கோ இல்லயே.. இப்பவே, வேண்டாம்னு மறுத்து ஒண்டிக்கட்டையா இருக்கிறவன், ஆயுசுக்கும் இருக்க முடியுமா? அவனும் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டி, பிள்ளையோடு இருந்தா தானே நாமும், அவனைப் பற்றி வருத்தப்படாம இருக்க முடியும். இது ஏன், அவங்க வீட்டுல உள்ளவங்களுக்குப் புரியல?”
“புரியாம என்ன, அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைக்க, தம்பி ஆடாம அசையாம உட்கார்ந்து நிம்மதியா சாப்பிட்டுட்டு இருக்கான். அவனோட மனைவிதான் அந்த குடும்பத்து மகாராணியாட்டம் நடந்துக்கிறா. நாளைக்கு பாண்டிக்கு கல்யாணமாகி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, இப்படி நடந்துக்க முடியுமா? அதிலும், சொத்து பத்து கோடிக் கணக்கா இல்ல இருக்கு! அத்தனையும் இப்ப ஒத்தைக்கு அனுபவிக்கிற மாதிரி நாளைக்கு முடியுமா? அத்தோடு, பாண்டியோட பொண்டாட்டி, பிள்ளைக்கு தான் எங்கே போனாலும் முதல் மரியாதையும் கிடைக்கும். அதான், வாய் திறக்காம இருக்காங்க போல …” என்றார்.
இப்படி அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, அந்த பக்கமாக வந்த ஜெயக்குமாரியின் செவியில் அவர்கள் பேசிய வார்த்தைகள் அழகாக விழுந்தன. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவர், இப்படி தானே எல்லோரும் பேசுவார்கள் என்று நினைத்தாலும், அவர்களின் வார்த்தையில் உள்ள உண்மை சுட்டது.
எத்தனையோ முறை திருமண விசயமாக அவனிடம் பேசிப் பார்த்தும் பலனின்றி அவர் நிம்மதியற்று தவிக்க, இப்போது கேட்ட வார்த்தைகள் அவரது உயிரையும் உலுக்கி விட்டது. மகனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று அவர் வேண்டாத நாளில்லை. ஆனால், அதற்குரியவன் செவியில் விழுந்தால் அல்லவே!
கண்களில் பெருக்கெடுத்த நீருடன் அங்கிருந்து அகன்றவர், நேராக கணவரின் சமாதியின் முன்பு சென்று நின்றார்.
விழிகளில் வழிந்த நீருடன் தன் மனதில் இருப்பதை அவரிடம் எடுத்துரைத்தார். மகனது வாழ்க்கை அழிந்து விடாமல் காப்பாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். முகத்தில் தெரிந்த சோகம், விழிகளில் வழிந்த கண்ணீர், ஏக்கம் நிறைந்த மனதுடன் காணப்பட்டார் ஜெயக்குமாரி!
அன்றிரவு உறக்கம் தொலைந்து போனது. யாரிடமும் வாய் விட்டுப் பேச மனமின்றி, கணவர் இறக்கும் போது நடந்த அனைத்தும் கண்களுக்குள் மாறி மாறி வந்து இம்சித்தது. அதற்கு ஒரு முடிவு தெரியாமல் கலங்கியவர் உள்ளம், மகனுக்கான துணையை நினைத்து ஏக்கத்தால் வாடியது.
அன்று முதல் அவரது உடலில் ஒருவித தள்ளாட்டம், நிம்மதியற்ற தன்மை, பெரும் சுமை மனதை அழுத்தியது. அது தெரியாமல், எப்போதும் போல தங்கையின் கல்யாண வேலையில் மூழ்கியிருந்தான் வீரபாண்டியன்!
***
வெள்ளிக்கிழமை மாலையன்று குலதெய்வ கோவிலில் பூஜை வழிபாடு செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
மாலை நேரம் வீட்டில் இருந்து புறப்பட்டான். ஆறு மணிக்குப் பிறகு பெண்கள் அனைவரையும் வரச் சொன்னான். சமையல், பொங்கல் வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நின்று, பூக்களை இறைவனுக்கு சாற்றுவதற்கு எடுத்து வைத்தபடி இருந்தான் வீரபாண்டியன்.
திடீரென்று கொலுசு சப்தம் அவனது செவியில் மோதியது. ‘வீட்டில் உள்ளவர்கள் இத்தனை சீக்கிரம் வந்து விட்டார்களா?’ என்று நினைத்துக், குறுநகையுடன் நின்றிருந்தவன் அருகில், நீல நிறப் புடவை அசைந்து ஆடியது. அவன் லேசாக திரும்பி பார்த்தான். அடுத்த நிமிடம், விழிகள் வெளியே தெறித்து விடுவதைப் போல விரிந்தன.
சில நாட்களாக அவன் கண்களில் படாமல் இருந்த தேவசேனா, அத்தனை நெருக்கத்தில் அவனையே பார்த்து நின்றாள். ஒரு நிமிடம் அசைவற்றுக் காணப்பட்ட வீரபாண்டியன், மறுநிமிடம் கடுமையை, கோபத்தை தத்தெடுத்தான்.
அத்தனை முறை சொல்லியும் கேட்காமல் மறுபடியும் வந்து விட்டாளே! அதுவும், குலதெய்வ கோவிலுக்கு… வீட்டில் உள்ள அனைவரும் வந்து விட்டால் என்ன செய்வது? இவளைத் தேடி சந்திரன் வீட்டினர் வந்தால் பிரச்சனையாகி விடுமே… இவள் ஏன், புரிந்து கொள்ளாமல் நடக்கிறாள்? அப்படி தன்னிடம் என்ன உள்ளதென்று இப்படி தொடர்ந்து வருகிறாள்? என்று எண்ணியவன் உள்ளம் அக்னியாக தகித்தது.
அவளது வலது புஜத்தை பற்றியிழுத்து சுவரில் சாய்த்தான். அவள் மீதான கோபம் முழுவதையும் இரு விழிகளுக்கும் கடத்தினான்.
வீரபாண்டியனின் கைபற்றியிருந்த அழுத்தத்தில், அவளது வலது புஜம் பிய்ந்து வந்து விடும் போலிருந்தது. வலி தாளாமல் விழிகளில் நீர் பனித்தன; உதடுகள் துடித்தன; கண்கள் ஏக்கமாக அவனைப் பார்த்தன.
“வலிக்குது வீரா அத்தான்!” என்ற குரலில், மேலும் அவனது அழுத்தம் அதிகரித்தது.
“உன்கிட்டே நான் இனிமேல் என் கண்முன்னே வரக்கூடாது. ‘அத்தான்’னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேனா இல்லயா? பிறகும், எதுக்குடி வந்து என் உயிரை எடுக்கிறே?”
அவனது சீற்றம் கலந்த வார்த்தையில் அவளது உடல் லேசாக அதிர்ந்தது.
உதடுகள், “யமுனா அண்ணிக்கும், சந்திரன் அண்ணனுக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுல்ல.. அதான், குடும்ப கோவில்ல வந்து வேண்டிக்கிட்டா அவங்க ரெண்டு பேருக்கும் நல்லதுன்னு..” அடுத்த வார்த்தையை உச்சரிக்கும் முன்பு, அவளது நாடியை பற்றி அழுத்தினான்.
“என் தங்கையின் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு, நீ வேண்டிக்க வந்தியா? அதை நான் நம்பணுமா? ஏய்!! நீ இங்க வந்திருப்பதை உன் வீட்டுல உள்ளவங்க அறிஞ்சா, இன்னும் பிரச்சனை தான்டி அதிகமாகும். அது தெரிஞ்சும் ஏண்டி வந்து வம்பு பண்றே? மரியாதையா இங்கே இருந்து போயிடு” என்று கூறினான்.
அப்படியும் அவள் அசையாமல் நிற்பதைக் கண்டு, “என் தங்கைக்கு ஒரு நல்லது நடக்கணும். அவள் நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு புதுவாழ்க்கையை தேர்ந்தெடுக்கணும். கணவர், குழந்தைகளோடு சேர்ந்து நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. யாரு செஞ்ச புண்ணியமோ, என் தங்கை கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா. அவள் மனசு மாறி ‘கல்யாணமே வேணாம்’னு சொல்லிடக் கூடாதுன்னு பயத்துல, நான் அவசர அவசரமா கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டு இருக்கேன். இந்த நேரத்துல வந்து ஏதேதோ பேசி, எல்லாத்தையும் அழிச்சிடுவே போலிருக்கே…” ஆற்றாமையுடன் கூறினான் வீரபாண்டியன்.
அவள் வலி தாளாமல் உதட்டைக் கடித்தாள்.
“வலிக்குதா? இப்படித்தான் என் மனசும் வேதனை தாளாம வலிக்குது. நடந்த எதையும் மறக்க முடியாம துடிக்குது. போயிடு, இப்பவே இங்கே இருந்து போயிடு. இல்லை, நான் கொலைகாரன் ஆனாலும் ஆகிடுவேன் என்ற வீரபாண்டியன், என்ன எண்ணத்துல இப்படியெல்லாம் நடந்துக்கிறேன்னு எனக்குத் தெரியும். நீ நினைப்பது ஒரு போதும் நடக்காது” என்று முடிவாக கூறினான்.
அத்தனை நேரமாக தங்களையே பார்த்து நின்ற விஷ்ணுவின் விழிகளில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு, அவனுக்கு எதுவோ புலப்பட்டது.
“இவளுக்கு நீ.. நீதான் ஒவ்வொரு முறையும் நான் இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் கொடுப்பதா?”
அவன் முழி பிதுங்கி நிற்பதைக் கண்டு, “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? முட்டாள்! இவள் யாருன்னு உனக்குத் தெரியாதா? தெரிஞ்சும் இதென்ன விளையாட்டு? எனக்குத் தான் கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டனே! பிறகும், நீ என்ன செஞ்சு வச்சிருக்கே? யமுனா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நான் இரவு பகலா தூக்கத்தை தொலைச்சு, நிம்மதியில்லாம அலைஞ்சிட்டு இருக்கேன். இந்த நேரத்துல விளையாட்டு காட்டுறியா? இவளுக்கு மட்டும்தான் உதவுறியா இல்லை, இவள் அண்ணனுக்கும்…” அப்படியே வார்த்தையை நிறுத்தி விட்டு, அவனைப் பார்த்த பார்வையில், வெலவெலத்துப் போனான் விஷ்ணு.
“இனியொரு முறை இதே தவறு நடந்தது. அப்புறம், நீ என் முகத்திலே ஆயுசுக்கும் முழிக்க முடியாம போயிடும்!” சீறி விழுந்த வார்த்தைகள் அவன் சிந்தனையை தடை போட்டன.
“டேய் விஷ்ணு! இதுக்கு மேலும் இவள் இந்த இடத்துல இருக்க கூடாது. உடனே போயாகணும். இல்லை, நடப்பதே வேறு”
அவனை எச்சரித்து, கைகளை விலக்காமலே அவளை தள்ளி விட, வேகமாக சென்ற தேவசேனா சுவரில் மோதிக் கொண்டாள்.
அப்போது, வந்த ஜெயக்குமாரியின் கண்கள் மகன் முகத்தில் தெரிந்த ருத்ர தாண்டவத்தை கண்ணுற்றது. இதற்கு முன் அவர் மகன் முகத்தில் தெரிந்த கோபத்தை, ஆக்ரோஷத்தை நேரில் பார்த்தது இல்லை. பார்த்ததும் பெற்ற மனம் வேதனைப்பட்டது.
‘எதற்கு இத்தனை கோபம்? ஏன் இப்படி உன்னையே வதைத்துக் கொள்கிறாய்? இப்படியே இருந்தால் உன் எதிர்கால வாழ்க்கையே அழிந்து போயிடுமே!” என்று கெஞ்சுதலாக கூறினார்.
அவன் ‘முடியாது’ என்று வீம்புடன் தலையசைக்க, அதற்கு மேல் அவராலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
அந்த நேரம், நெற்றியில் பட்ட காயத்துடன் அங்கு வந்த தேவசேனாவை பார்த்தார். பார்த்தவர் விதிர் விதிர்த்துப் போனார் என்றால், ஜெயக்குமாரியின் பின்புறமாக வந்து கொண்டிருந்த சந்திரன், அவனது தாய், சந்திரிகா, விஷ்ணுபிரியா அனைவரையும் கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகினான் வீரபாண்டியன்!
விழிகள் விஷ்ணுவை எரித்தன. அவன் எச்சிலை கூட்டி விழுங்கியபடி நிற்க, தேவசேனா தனது தாயாரை நோக்கி நடந்தாள்.
அத்தனை பேரையும் வெளியே துரத்தியடிக்க எழுந்த ஆவேசத்தை, ஜெயக்குமாரியின் யாசிப்பான பார்வைகள் தடுத்து நிறுத்தின. அந்த நேரம் பார்த்து மணியோசை கேட்டதும், பூஜைக்கு நேரமாகி விட்டதை உணர்ந்து, தங்கையை தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
மகனின் கோபமும், விழிகளில் தெரிந்த சீற்றமும் தாயவளை நிம்மதியிழக்க செய்தன. கண்கள், சந்திரிகா மற்றும் தேவசேனா நிற்கும் பக்கமாக சென்று நிலைத்து நின்றன. இருவரையும் பார்த்தவரால் தனது மகன் எதிர்காலத்தை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
சந்தனபாண்டியனின் மகன் மாதவனின் கண்கள் பெண்கள் நிற்கும் பக்கமாக பாய்ந்தன. சந்திரிகாவின் கண்கள் வீரபாண்டியனை நோக்கின. தேவசேனா, கண்களை மூடி கரம் குவித்து இறைவனை வழிபட்டாள்.
அனைத்தும் கண்களின் வழியாக சென்று மனதிற்குள் தாக்க, அத்தனை நாட்களாக இருந்த இரத்த அழுத்தம் எகிறியது. குப்பென்று மேனியெங்கும் வியர்த்துக் கொட்டியது. கண்கள் இருண்டன. கைகள் அருகில் நிற்பவரை துணையாக பற்ற முடியாமல் காற்றில் துழாவின. உதடு உலர்ந்து போனது. கால்கள் வலுவிழந்து தடுமாறின. மார்பு வலி லேசாக எடுக்க, நிற்க முடியாமல் கீழ் நோக்கி சரிந்தவரை நோக்கி ஓடி வந்தாள் சந்திரிகா!
சந்திரனின் பார்வையில் இருந்து தங்கையை காப்பாற்ற அவளுக்கு அரணாக விளங்கிய வீரபாண்டியன், அடுத்த நிமிடம் ஜெயக்குமாரியை நோக்கிச் சென்றான்.
பெற்று வளர்த்து தங்களை இந்த நிலமைக்கு ஆளாகி விட்ட தாயவள், படுகின்ற கஷ்டத்தைப் பார்க்க முடியாமல் அவரது வாரிசுகள் கண்ணீர் விட்டன. தண்ணீரை எடுத்து வந்த தேவசேனா, அவரது முகத்தில் தெளித்து விட்டு அவருக்குப் புகட்டினாள். முந்தானையால் முகத்தில் படிந்திருந்த வியர்வை துளிகளை துடைத்தாள். அவரது கை, கால்களை லேசாக நீவி விட்டு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள்.
அவரை நோக்கி ஓடி வந்த சங்கீதாவை வீரபாண்டியனின் பார்வை விலக்கி நிறுத்தியது. மருத்துவமனைக்குச் செல்ல புறப்பட்டவனின் கண்கள், யமுனா மற்றும் கோவிலில் பூஜை நடந்து கொண்டிருப்பதை கண்டு சிந்தனை வயப்பட்டது.
தங்கையின் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று அவன் குலதெய்வ கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். இப்போது, இடையில் அவளை அழைத்துச் சென்றால் பிறகு, ஏதாவது சாமி குற்றம் ஆகிவிடாக் கூடாதே என்ற அச்சத்தில், தம்பி விநாயகத்துடன் அவரையும் மருத்துவமனைக்கு செல்ல காரில் அமர வைத்தான்.
விஷ்ணுபிரியா மகளின் கைப்பற்றி இழுத்துச் சென்று தாங்களும் காரில் ஏறிக் கொள்ள, பெற்ற தாயை நினைத்துக் கலங்கியவன் உள்ளம், அருகில் நின்று கண்ணீர் வடிக்கும் தங்கையை ஆதரவாக அணைத்துக் கொண்டது.
நேரம் கடந்தது. பூஜைகள் யாவும் நிறைவு பெற்றன. அவனது முழு கோபமும் சந்திரன் குடும்பத்தார் மீது திரும்பியது. ‘இவர்களால் தான் தன்னுடைய தாயாருக்கு அப்படி ஆகி விட்டது. இவர்கள் மட்டும் வராமல் இருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும்’ என்று எண்ணியவன் உள்ளம் எரிமலையாக கொதித்தது.
சங்கீதாவை அவன் பார்த்த பார்வையில் அவர் அரண்டு போனார். ‘என்னை மன்னித்து விடு’ என்ற யாசிப்பான பார்வையை அவன் கண்டு கொள்வதாக இல்லை. ”வந்த வேலையை சிறப்பா செஞ்சாச்சு. இன்னும் என்ன மிச்சமிருக்கு? என் தங்கையை தூக்கிட்டுப் போயி உங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும். அடுத்து, உங்க மகளுக்கும் என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும். எங்க மூலமா ஒட்டு மொத்த சொத்தையும் நீங்க எல்லாரும் அனுபவிக்கணும். அப்படித் தானே?”
அவர் மறுப்பாக தலையசைத்தார்.
“பிறகு எதுக்கு இங்கே வந்தீங்க? உங்களால தான் என் அப்பாவை பறிகொடுத்து, நிச்சயிக்கப்பட்ட என் தங்கையின் கல்யாணமும் நின்னு, நானும் தனிமரமா ஆகிட்டேன். இதுக்கு மேலும் என்ன வேணும்? என் உயிர் போனால் தான் உங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குமா?”
அவனது கர்ஜனையில் அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர்.
“இந்த வீரபாண்டியன் வாழ்க்கையில் எந்தவொரு பெண்ணுக்கும் இடம் கிடையாது. அவன் கடைசி வரை இப்படியே தனியா தான் இருப்பான். அவனை அசைக்கவோ, அழிக்கவோ நினைச்சா அவங்க அத்தனை பேரையும் கூண்டோடு அழிச்சிடுவான். மரியாதையா எல்லாரும் இங்கே இருந்து வெளியே போங்க!”
சங்கீதா அவனிடம் ஏதோ பேச முயன்றார். அவன் கேட்காமல் காவலரைப் பார்த்துக் கண் காட்டினான். அவர்கள் அனைவரும் வெளியேறியதும், பூசாரி மற்றும் அங்கு இருந்தவர்களிடம் பேசிவிட்டு, பிரசாதத்தையும் உண்ண மனமற்று தங்கையை அழைத்துச் சென்று விட்டான்.
இரவு நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் உணர்வுகளை தொலைத்த நிலையில் இருந்தார் ஜெயக்குமாரி. அறைக்கு வெளியே பீதி அப்பிய கண்களுடன், மருத்துவரின் வரவை எதிர்பார்த்து நின்றான் விநாயகம். விஷ்ணுபிரியா, அவன் அருகில் நின்று ஆறுதலாக பேசிக்கொண்டு இருக்க, அவர்களை நோக்கி விரைந்து வந்தான் வீரபாண்டியன்!
நேராக தம்பியின் அருகில் சென்று விசாரித்து விட்டு, மருத்துவரை காணச் சென்றான். ஏற்கனவே, அவனைப் பற்றி நன்கு அறிந்தவர் ஆதலால் அவர், ஜெயக்குமாரியின் நிலையை தெளிவாக கூறிவிட்டு, அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
அவரது கைகளைப் பற்றிய வீரபாண்டியன், “எங்க அம்மாவுக்கு எதுவும் ஆகிடாம பத்திரமா பார்த்துங்கோ டாக்டர். அவங்களுக்கு ஏதாவது ஆனால் என்னால தாங்க முடியாது” என்று தழுதழுத்த குரலில் கூறினான்.
“மிஸ்டர் வீரபாண்டியன்! எங்களால் முடிஞ்ச வரை முயற்சிக்கிறோம். நீங்க கவலைப்படாம இருங்க!”
அவனது கண்கள் கலங்கி வழிந்தன. பெற்றவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பயம், அவனை நிலை கொள்ள விடாமல் செய்தன.
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவு செய்யுங்கள் தோழமைகளே…