நேற்று குடும்ப கோவிலில் பூஜைகள் நடைபெறும் விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கீதா, அவரது கணவரிடம் அங்கு போகும் விசயமாக கேட்டார். அதில் சிறிதளவும் விருப்பம் இல்லா விட்டாலும், மனைவியின் மனதை வருத்த மனமின்றி அவர் அமைதியாக இருக்க, “நம்ம பையனுக்கு ஒரு நல்லது நடக்கறப்போ, குல தெய்வம் கோவிலுக்குப் போயி வழிபட்டு வருவது நல்லதுல்லயா? தேவாவும் இந்த ஊருக்கு வந்தப்பவே அந்த கோவிலுக்கு போறது பற்றி கேட்டிருந்தா. நாங்க எல்லாருமா சேர்ந்து போயிட்டு வர்றோமே?” என்று தயக்கத்துடன் வினவினார்.
அண்ணாமலை, “நீ போறதை பற்றி எனக்கு வருத்தமில்ல. அங்கே போனால் யாருமே உங்க கிட்டே பேசமாட்டாங்க. வீரபாண்டியும் உங்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டான். பிறகும் எதுக்குப் போகணும்னு ஆசைப்படறே?” என்றார்.
சங்கீதா, “மனசுக்கு ரொம்ப பாரமா இருக்குங்க. ஒரே ஊர்ல இருந்தும், அண்ணன் மகள் கல்யாணத்துல கலந்துக்க முடியாத வருத்தம், என்னை நிம்மதியில்லாம ஆக்குது. சின்ன வயசுல இருந்தே வீரபாண்டியன், ‘அத்தை.. அத்தை’ன்னு வாய் ஓயாம கூப்பிட்டு அத்தனைப் பாசமா இருப்பான். நான் என்ன சொன்னாலும் மறுக்காம செஞ்சு கொடுப்பான். அப்படிப்பட்ட தங்கமான பிள்ளை, ஊர் மெச்சும் விதமா வளர்ந்தவன் கடைசி வரை நம்ம மருமகனாவே இருக்கணும்னு ஆசையில் நான் செஞ்ச தப்பு, அவனை நம்மளை விட்டு ஒரேடியா விலக்கி நிறுத்திட்டு..
அதனால, இன்னைக்கு பெற்ற தாய் வீடு, கூடப்பிறந்தவன், பிள்ளைகள்னு யாருமே இல்லாம ஆகிடுச்சு. அவங்க நம்மளை விட்டு பிரிஞ்சு போனதால், நெருங்கிய உறவினர்களும் விலகிப் போயிட்டாங்க. எது எப்படியோ, சந்திரன் யமுனாவை மறந்து வேறு பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க தயாராகிட்டான். யமுனாவுக்கும் வேறு இடத்துல மாப்பிள்ளைப் பார்த்து முடிவாகிடுச்சு. இனிமேல், பழசை பற்றி பேசி ஆகப் போவது இல்ல. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கட்டும்.” விழிநீரை துடைத்துக்கொண்டே அவர் கூறியதைக் கேட்டு அண்ணாமலை தலையசைக்க,
“யமுனாவுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு ஆசையில, பாண்டி ஒரு நேரமும் ஓய்வில்லாம அலைகிறான். அவன் ஆசைப்படி அவன் தங்கையோட கல்யாணம் நடக்கட்டும். சந்திரனும் பழையதை மறந்துட்டு புது வாழ்க்கையை நல்ல முறையில் வாழட்டும். பிறகும் என்னங்க?” தன் மனதில் உதித்த கேள்வியை அவரிடமே விட்டார் சங்கீதா.
அதற்கு மேலும் மறுக்காமல் அவர் தலையை அசைக்க, அது மட்டுமே அவருக்கும் போதுமானதாக இருந்தது. ஆனால், அவர்களது உரையாடலைக் கேட்டு அதிருப்தியுடன் நின்றார் அருணாச்சலம். தம்பி சம்மதித்த பிறகு தான் மறுப்பது நாகரீகமாக இருக்காது என்பதால், தன்னை அமைதியாக காட்டிக் கொண்டார். இருந்தும் அவர் உள்ளம், அங்கு போவதால் அவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை அளவிட்டது.
அதற்கு முத்தாய்ப்பாக அமைந்து விட்டன வீரபாண்டியனின் சீற்றமான வார்த்தைகள்! அவனை வார்த்தைகளால் வறுத்து எடுத்தவர், தம்பியின் மகனை முழுவதுமாக தன்வசப்படுத்திக் கொண்டார்.
***
மருத்துவமனையில் இரவு முழுவதும் சுயநினைவு திரும்பாமல் இருந்தார் ஜெயக்குமாரி. விநாயகம் தன் மனைவி, குழந்தை மற்றும் தங்கையுடன் வீட்டிற்குச் சென்று, அவர்களை அங்கு விட்டு விட்டு தான் மட்டும் வந்திருந்தான். விஷ்ணுபிரியா, ஆண்கள் இருவருக்கும் ஆறுதலளித்து அன்புடன் கவனித்துக் கொண்டார்.
சங்கீதாவின் வீட்டினரை வெறுத்த வீரபாண்டியனால், ஒரு பாவமும் செய்யாதவரை வெறுக்க முடியவில்லை. நேற்று இரவு முதல் மருத்துவமனையில் இருந்து கொண்டு, தங்களை அக்கறையுடன் கவனிப்பவரை துரத்தியடிக்கவும் மனம் வரவில்லை.
ஜெயக்குமாரி மூர்ச்சையற்று கீழே சரிந்த நேரத்தில் இருந்து அவருக்குத் தேவையான முதலுதவியை செய்து வந்த தேவசேனா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், தன்னுடைய கவனிப்பை தொடர்ந்து வந்தாள். அவளைக் கண்டும் காணாதது போலிருந்த வீரபாண்டியன், அவளது தாயாரிடம் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்குமாறு கூற, அவரோ ஜெயக்குமாரி கண் திறந்த பிறகு செல்வதாக கூறிவிட்டார்.
மறுநாள் விடிந்தும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. மதியம் .. மாலை என்று நேரம் நீண்டு செல்ல, தாயாரை நினைத்துக் கண்ணீர் வடித்தான் வீரபாண்டியன். உண்ணாமல், உறங்காமல் பித்து பிடித்தவனைப் போல அவன் இருந்த தோற்றம், பார்த்திருந்தவர்களை கண் கலங்க வைத்தது.
விஷ்ணுபிரியா எப்படி எல்லாமோ சொல்லிப் பார்த்தும், அவன் அதிலிருந்து மீள்வதாக தெரியவில்லை. ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் விடுத்து, ஜெயக்குமாரி கண் திறக்கும் நாழிகைக்காக காத்திருந்தான். ஒரு வழியாக அவனது வேண்டுதலை செவி சாய்த்த இறைவன், ஜெயக்குமாரியை சுய நினைவு பெற உதவினார்.
மருத்துவ செவிலியர் மூலம் விசயத்தை அறிந்ததும், ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டு வாய் விட்டு அழுதான் வீரபாண்டியன். மகனின் பாசம் பெற்றவள் மனதைக் கரைத்தது. அவனது கண்ணீரும், சோர்ந்து வாடிய முகமும் தாயவளை கலங்க வைத்தது. அவன் விழிகளையே பார்த்து ஏதே கேட்டார். அப்போதும், அவன் மறுத்து விடவே, மீண்டும் அவரது கைகள் தொய்ந்து போயின.
நெருங்கிய உறவினர்கள், ஊர் மக்கள், தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக அவரைப் பார்க்க வர, விசயம் ஊர் முழுவதும் கசிய தொடங்கியது. இத்தனை நாட்களாக அருணாச்சலம் வீட்டினரை மறைமுகமாக இகழ்ந்து பேசியவர்கள், இப்போது வெளிப்படையாகவே தூற்றினர்.
விசயம் யார் வாயிலாகவோ பெண் வீட்டிற்கும் தெரிய வர, சந்திரனின் திருமணமும் கேள்விக்குறியானது!
அருணாச்சலம் சீண்டி விடப்பட்டவரை போல காணப்பட்டார். ‘விஷ்ணுபிரியா, தேவசேனா’ இருவரின் மீதும், கட்டுக்கடங்காத அளவிற்கு கோபம் பெருகியது. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய எதிரிக்கு துணை போனது மட்டுமின்றி, இப்போதும் மகளுடன் அங்கேயே சென்று விட்டது அவரது கோபத்தை பன்மடங்கு அதிகமாகியது. அவர்களது உடைமைகளை வீட்டை விட்டு வெளியேற்ற சொன்னதுடன், ‘இனிமேல் அவங்க யாரும் இந்த வீட்டு வாசற்படியை மிதிக்க கூடாது. மீறியும் வந்தால் நான் எங்கேயாவது போயிடுவேன்’ என்று உத்தரவிடும் த்வொனியில் கூறினார்.
ஏற்கனவே, வீரபாண்டியனை உயர்த்திப் பேசி சந்திரனை தாழ்வாக கருதியவர்கள், இப்போது அவர்களால் தான் ஜெயக்குமாரிக்கு இப்படி ஆகிவிட்டது என்று கூறியதில் இருந்து, அதிக அளவு மனஉளைச்சல், கோவிலில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட அவமானம், தேவசேனாவை வார்த்தையால் வதைத்து சுவரில் தள்ளி விட்டு காயப்படுத்தியது, தன்னை திரும்பியும் பார்க்காத யமுனாவின் இன்றைய நிலை, அருணாச்சலத்தின் கோபமான வார்த்தையில் அவன் மனம் சீற்றத்துடன் காணப்பட்டது. இதற்கு மேலும் வீரபாண்டியனை சும்மா விடக் கூடாது என்ற முடிவுடன், வீட்டில் விருந்தினர்கள் மற்றும் பணியாட்கள் இருப்பதால், பெரியப்பாவின் அழைப்பை ஏற்று அவர் கூறிய இடத்திற்குச் சென்றான்.
***
எட்டு திக்கும் இருள் பரவி கிடக்க, சரசரவென பெய்து கொண்டிருந்த கனமழை மற்றும் மின்சாரம் தொலைந்ததால், அந்த அமாவாசை இரவில் மக்கள் தங்களின் இல்லத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடைபட்டுக் கிடந்தனர்.
அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், அந்த நேரம் நிலவறையில் நால்வர் கூடி நின்று, எதையோ பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களின் பேச்சைக் கேட்டு அதிருப்தியுடன் நின்றான் அவர்களின் காவலன்!
யாரும் பார்க்காத வகையில் நடை பெற்ற அந்த சந்திப்பில், நீள தாடியும், கிடா மீசையும், நெடுநெடுவென வளர்ந்திருந்த உடல்வாகையும், இவருக்கா அறுபது வயதாக போகிறது என்ற கேள்விடன் கூடிய சரீரமும் பெற்றிருந்த அருணாச்சலம் தொண்டையை செருமினார்.
“நான் சொல்வது உங்களுக்கு புரியுது இல்லயா?”
“ஆமாம் பெரியப்பா”
“நல்லது. இன்னும் அமைதியா இருக்க முடியாது. உடனே ஏதாவது செஞ்சாகணும். என் உயிர் இந்த கூட்டை விட்டு வெளியே போகும் முன்னே அந்த ‘வீரபாண்டி’ செத்துட்டான்னு செய்தி என் செவிக்கு வரணும். அதுக்கு தக்க உங்க நடைமுறையும் இருக்கணும்” அவர் குரலில் இருந்த அழுத்தம் அருகில் நின்றவர்களை தலையசைக்க வைத்தது.
“சும்மா தலையாட்டிட்டு தப்பிட முடியாது. வரும் பெளர்ணமி இரவுக்குள் அவன் கதை முடியணும்”
“செஞ்சிடலாம் பெரியப்பா. அந்த வீரபாண்டியின் அதிகாரமும், வளர்ச்சியும், செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. அதைப் பார்த்துப் பார்த்து என் உள்ளம் வேதனையால், கோபத்தால் செய்வதறியாம துடிக்குது. என்னே ஒரு திமிர்!! என்னே ஓர் அகம்பாவம்!! ‘வீரபாண்டி’ன்னு பெயரை வச்சிட்டதால், இவன் தான் பாஞ்சாலங்குறிச்சியில் 263 வருஷங்களுக்கு முன் பிறந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’னு தன்னைத் தானே நினைச்சிக்கறான். எங்கே போனாலும் அவனோட அதிகாரமான பேச்சுக்கும், வார்த்தைக்கும் தான் மரியாதை. அவன் சொல்றதை தான் வேதவாக்காக பலரும் நினைக்கிறாங்க. உடனே இது மாறணும்… இல்லை, மாற வைக்கணும்! இதுக்கு மேலேயும் வேடிக்கைப் பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது” ஆவேசமாக பதிலுரைத்தான் அவரது தம்பியின் மூத்த மகன்.
“ஆமாம். நம்மை பார்த்தாலே எட்டப்ப இனத்தை சார்ந்தவன் போல் நடந்துக்கறான். ஏதாவது புதுசா தொழில் செய்ய நினைச்சாலும், கான்டிராக்ட் கையெழுத்து போட பார்த்தாலும், அத்தனையும் தன் வசப்படுத்திடுறான். உன் கல்யாணமும் அவனால் தான் நின்னு போயிற்று. அந்த வருத்தம் எதுவுமில்லாம, அவன் தங்கையின் கல்யாண விசயமா அலைஞ்சிட்டு இருக்கான். முதல்ல அவனை அழிக்கணும் அண்ணா. இல்லை நம்மை வளரவோ, நிம்மதியா இருக்கவோ விட மாட்டான்” அவன் தம்பி வீரராகவன் கூறினான்.
தம்பி மகன்களின் பேச்சைக் கேட்டவர் ஆமோதிப்பாக தலையாட்ட, நான்காவது நின்றவன், “வீரபாண்டி, இன்னும் கல்யாணம் செய்துக்கல. தம்பிக்கு செய்து வச்சிட்டு ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உழைப்பு’ன்னு திரியறான். அவனை இப்பவே ஒழிச்சு கட்டுவதுதான் நல்லது” என்றான்.
அவர்களை யோசனையுடன் பார்த்தார் அருணாச்சலம். பின்னர், “நாம அவனுக்கு பதிலுக்கு பதில் கொடுக்கிறது நம்மை தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. உன் கல்யாணத்தை நிறுத்திட்டு, யமுனாவையும் வேறு யாருக்கோ கட்டிக் கொடுக்க போகிற சந்தோஷத்துல கண்ணு தெரியாம வானத்துல மிதக்கிறான். அவன் தாய்க்கு ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கும் நம்மையே காரணமாக்க முயற்சிக்கிறான். அவனோட எண்ணம் நிறைவேற கூடாது. அவனும் தலைநிமிர்ந்து நடமாட கூடாது. அவன் இப்ப இருக்கற மாதிரியே செத்துப் போகணும். அவன் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அவனோட தம்பி ‘விநாயகம்’ மூலம் நம்மை அடையணும். அதுக்கு இடையூறா வர்ற அத்தனை பேரையும் பாவ, புண்ணியம் பார்க்காம போட்டுத் தள்ளிடணும்.” என்றார்.
“நம்ம கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டும் அந்த வீரபாண்டியை, விபத்தை ஏற்படுத்தி கொல்வதாலோ, உணவில் விஷத்தைக் கலந்து மரணிப்பதாலோ, இல்லை, கடத்தி வந்து பூமிக்கு அடியில் உள்ள இது போன்ற நிலவரையில், ரகசிய இடத்தில் கொன்னு குழிதோண்டி புதைப்பதாலோ நாம வெற்றி பெற்றதா அர்த்தமில்ல.. ஏன்னா, அப்படி நடந்தாலும் அவன் மேல மக்களுக்கு இன்னும் இரக்கமும், பாசமும் கூடுமே தவிர குறையாது. அதனால …”
மூவரும் “அதனாலே…” என்று கோரஸாக கேட்க,
“அதனால, அவனை அடிக்கணும்! எழும்ப முடியாத அளவுக்கு பலமா அடிக்கணும். வீட்டுல, வெளியில, வேலை பார்க்கற இடத்துல, உறவினர் முன்னிலையில், பொதுவெளின்னு அவன் எங்கே போனாலும் அவமானத்தால் தலை நிமிர்ந்து நடக்க முடியாத அளவுக்கு அடிக்கணும். அவன் அதையே நினைச்சு வேதனை தாளாம துடிக்கணும். யாரோடும் பேச முடியாம, உண்ணாம, உறங்காம நிம்மதியிழந்து தவிக்கணும். கடைசியில், நம்ம கையால உயிரையும் விடணும்”
அவர் முகம் பிரகாசமாக மாறியது.
“அருமை! அட்டகாசம்! பிரமாதம்!! நினைக்கவே அத்தனை பேரின்பமா இருக்கு. சொல்லு! இதுக்கு, நீ என்ன பண்ண போறே?” அவரது அவசரம் அவனுக்குப் புன்முறுவலை தோற்றுவித்தது.
“விவேகத்தோடு, புத்திசாலிதனத்தையும் கையாள போறேன். கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி வீராப்போடு திரிபவனை, கட்டாயப்படுத்தி அதுக்குள்ளே தள்ளி விடப் போறேன்” என்றவன், மேலும் கூறிய வார்த்தையில் அருணாச்சலம் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். ஆனால், திட்டத்தை வகுத்த சந்திரன், அதை சரியான இலக்குடன் கொண்டு செல்ல, அவருக்கே தெரியாத பல வழிமுறைகளை கையாண்டான். அது வெளியே தெரிய வரும் போது போகப் போவது யாருடைய மரியாதை, கொளரவம் என்று விரைவில் பார்க்கலாம்!
***
வீட்டினர் அனைவரையும் கதி கலங்க வைத்த ஜெயக்குமாரி, ஒரு வழியாக மறுபடியும் கண்களைத் திறந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ‘எந்த காரணத்தைக் கொண்டும் அவர் டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க. பிறகு, அவங்களுக்கு ஏதாவது ஆனால் நாங்க பொறுப்பில்ல’ என்று எச்சரித்து, அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்க, மருத்துவ செவிலியரிடம் உத்தரவிட்டார்.
ஜெயக்குமாரியின் மனம் எதனால் இப்படி நிம்மதியற்று தவிக்கிறது? ஏன் இத்தனை மனவருத்தத்தில் அவர் ஆழ்ந்துள்ளார்? என்று ஏற்கனவே தெரிந்து இருந்ததால், தன்னுடைய வைராக்கியத்தை விட்டு கொஞ்சமாக கீழே இறங்கினான் வீரபாண்டியன்.
அவன் நினைத்தது போல அவரது வலது கரம் நீண்டு அவனை நோக்கிச் சென்றது. விழிகளைத் துடைத்தவன் அதில் தனது கரத்தை வைத்தான்.
கோவிலுக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, மகள் சந்திரிகாவுடன் ஜெயக்குமாரியை பார்க்க வந்திருந்த சங்கீதா, அண்ணியின் தோற்றத்தைக் கண்டதும் ஓடோடிச் சென்று அவரது கால் பகுதியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்டார்.
விநாயகம் மூலம் எடுத்து வரப்பட்ட திருமாங்கல்யத்தை ஜெயக்குமாரியின் கையில் இருந்து பெற்றுக் கொண்ட வீரபாண்டியன், அனைவரையும் நோக்கினான். ‘தன் வாழ்வில் திருமணத்திற்கு இடமில்லை. எந்த காரணத்தைக் கொண்டும் யாரையும் மணந்து கொள்ள கூடாது’ என்று முடிவெடுத்து இருந்தவன், இப்போது தனது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தன் முடிவை மாற்றிக் கொண்டான்.
சந்திரிகாவின் கண்கள் அவனைப் பார்த்தன. தேவசேனா எதுவும் கூறாமல் விஷ்ணுபிரியாவின் அருகில் நின்றிருந்தாள்.
சங்கீதா, அன்று தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இன்று அவன் இழந்த வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரைத் திரும்பியும் பார்க்காமல், நேராக சென்று தம்பி, தம்பி மனைவியின் முன்பு நின்றான் வீரபாண்டியன்!
“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், இப்ப இருக்கிற நிலமை மாறப் போவதில்ல. நீயும், உன் மனைவியும் தான் எப்பவுமே இந்த ராஜாங்கத்தை கட்டிக் காக்க போறீங்க. உனக்கு கீழேதான் நான்! என் கல்யாணத்தால் உனக்கோ, உன் மனைவிக்கோ கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காம போகாது. இந்த குடும்பத்து வாரிசு ‘ஸ்ரீநிதி’யும் அவளோடு பிறக்கப் போறவங்களும் தான்” என்றுரைத்து, தன்னையே பார்த்து நின்ற இரு பெண்களையும் நோக்கிச் சென்றான்.
மகனது பேச்சில் அதிர்ந்தாலும், போகப் போக சரியாகி விடும் என்று நினைத்த ஜெயக்குமாரி, யமுனாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மகனது திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்.
அவனும் திரும்பி அவரைத் தான் பார்த்தான். அவர் முகத்தில் தெரிந்த நிம்மதி, புன்னகை, பரவசத்தைக் கண்ட வீரபாண்டியன், அதற்காக எதையும் செய்யலாம் என்று மனதிற்குள் தீர்மானித்து, திருமாங்கல்யத்துடன் நடந்தான்.
ஊருக்கு வந்ததில் இருந்து சதா தன் பின்னே அலைந்து வம்பு செய்தவளும், அத்தனை திட்டியும், தள்ளி விட்டு காயப்படுத்தியும் கோபப்படாமல் மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றியே வருபவளும், எதிரியின் வீடென்று தெரிந்தும் துணிச்சலுடன் வந்து உதவி செய்பவளுமாகிய அவளது விழிகளை ஆழ்ந்து நோக்கினான்.
காலையில் மருத்துவமனைக்கு வந்திருந்த அருணாச்சலத்தின் வீட்டுப் பணியாள், விஷ்ணுபிரியாவின் உடைமைகள் அனைத்தையும் கீழே வைத்து விட்டு, அவர் கூறியவற்றை அப்படியே சொல்ல, தங்களால் அவர்களுக்கு இடையே உள்ள உறவு முறை இல்லாமல் போய் விட்டதை உணர்ந்த வீரபாண்டியன், அவர்களை காக்கும் பொருட்டும், பெற்ற தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும் திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் சூட்டினான்.
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று தெரிவியுங்கள் தோழமைகளே…