காலை நேரம் புளுதி பறக்க வேகமாக சென்று கொண்டிருந்த வாகனத்தில், கணவன் அருகில் அமர்ந்திருந்தாள் தேவசேனா. விஷ்ணு வாகனத்தை இயக்கி வர, அவனுடன் பேசியபடி இருந்தான் வீரபாண்டியன்.
நேற்றிரவு அவன் நடந்து கொண்ட விதமும், இப்போதைய அவனது அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது போல் தெரிந்தது.
அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் தொழில் விசயமாக பேசிக்கொண்டு இருந்தான். அவனது கம்பீரமும், ஆளுமையும் அவளின் விழியசைக்க மறுத்தன.
கண்கள் அவனையே பார்த்தன. அவனது வலது புருவம் தன்னைப் பார்த்து உயர்ந்ததும், அவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
விழிகள் சாலையில் தெரிந்தவற்றை படம் பிடிக்க, உள்ளமோ நேற்று நடந்தவற்றை அசைபோட்டது. அத்தனை நெருக்கத்தில் வீரபாண்டியனை பார்த்த தேவசேனாவிற்கு முத்து முத்தாக வியர்த்துக் கொட்டியது. அவனை திடீரென அங்கு எதிர்பாராதது மட்டுமின்றி, அவனது வார்த்தைகளும், நடைமுறையும் அவளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாகவும் இருந்தது.
அவனைத் தள்ளி விட்டு வெளியேறினால் பிறகு, கட்டாயப்படுத்தி எதுவும் செய்து விடக் கூடாதே என்ற பயமும் அவளை ஆட்டிப் படைத்தது. ஆகவே, பதற்றத்தை மறைத்துக்கொண்டு, அமைதியாக நிற்பது போல காட்டிக் கொண்டாள்.
அவனது நெருக்கமும், கூர்மையான பார்வையும் அவளை அச்சப்பட வைத்தது. வந்த நாள் முதல் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு, இப்போது அவன் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும் போது சந்தேகமாகவும் இருந்தது. அதனால், வாய் திறக்காமல் இருந்து கொண்டாள் தேவசேனா!
“பயமா இருக்கா?”
“இ.. இல்லை”
“பிறகும், எதுக்கு இத்தனை நடுக்கம்?”
அவனை நிமிர்ந்து பார்க்க மனமற்று அவள் குனிந்து கொள்ள, “வந்த நாள் முதல் பட்டாஸ் மாதிரி வெடிச்சி, எனக்காகவே பிறந்து வளர்ந்து இத்தனை வருஷமா காத்திருந்தவ மாதிரி என் பின்னாலயே அலைஞ்சிட்டு, இப்ப கட்டிக்கிட்ட பிறகு அநியாயத்துக்கு விலகி போறியே..” என்றான்.
அவன் எதற்காக அப்படி பேசுகிறான் என்று தெரியாமல் அவள் அவனைப் பார்க்க, “வாழ்க்கைன்னா ஒரு சுவராஸ்யம் இருக்கணும். ஆசைப்பட்டதெல்லாம் உடனே கிடைச்சிட்டா அதுக்கு மதிப்பில்லாம போயிடும். உன்னோட விலகலும், அமைதியும் கூட ஒரு வகையில் எனக்கு சவாலா தான் இருக்கு. ஆடு புலி ஆட்டத்துக்கு நீ ரெடியா?”
அவளது விழிகள் அங்கும் இங்குமாக அலைந்தன. உதடுகள் பற்களின் பிடியில் அகப்பட்டன. அவன் புன்னகைத்தான் அவளைப் பார்த்து..
“தேவசேனா! இந்த பெயரை உனக்கு வச்சது யாருன்னு தெரியுமா?”
அவள் மறுப்பாக தலையசைக்க, “எதனால இத்தனை வருஷமா ‘பாஞ்சாலங்குறிச்சி’க்கு வராம இருந்தே? ஏன் இப்படிப்பட்ட உறவுகள் இருந்தும் யாருமற்று தனியா இருக்க நேர்ந்ததுன்னாவது தெரியுமா?”
அவள் எல்லாவற்றிற்கும் பொதுவாக தலையை மட்டுமே அசைக்க, “ஆனாலும், இப்படி ஒரே நாளில் இத்தனை அமைதி, அடக்க ஒடுக்கத்தை நான் எதிர்பார்க்கல. ஒரு வேளை ‘புலி பதுங்குவது பாய்வதுக்கு’ இருக்குமோ?” என்றான் வீரபாண்டியன்.
அவள் சடாரென நிமிர்ந்து பார்க்க, அவன் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான். அவன் சிரித்த விதமும், பேசிய வார்த்தையும் அவளுக்கு உள்ளூர கிலியை ஏற்படுத்தியது.
“ஆனால், நான் ஒண்ணும் என்னை நோக்கி பாய்ந்தோடி வரும் பெண்புலியைக் கண்டு பயந்தோடும் சாதாரண வேங்கை இல்ல. வேட்டைக்காரன்!!
பாசமா கூப்பிட்டு பார்ப்பேன்.. வந்தா கடைசி வரை என் கூடவே வச்சு பார்த்துப்பேன். இல்ல, பொறி வச்சு தூக்கிடுவேன். அப்புறம், அந்த பெண் புலியோட நிலமை…” அவன் சிரித்த சிரிப்பு, அவளது அடி வயிற்றை ஜில்லிட செய்தது.
திருமணமான முதல் நாளே அவளை அதிகமாக மிரட்ட வேண்டாம் என்று நினைத்தான் போலும், பேச்சின் திசையை மாற்றினான்.
“சரி, போதும்! இதுக்கு மேலும், நானே சும்மா பேசிட்டு இருந்தா போர் அடிச்சிடும். நாளைக்கு ராத்திரி வச்சிக்கலாம்.” சீராக மூச்சு விட முயன்றவளை, மறுபடியும் அவனது பேச்சு கலவரப்படுத்தியது.
“நாளைக்கு காலையில கோவிலுக்குப் போயிட்டு, உன்னை ஜவுளி கடைக்கும் கூப்பிட்டு போக சொல்லியிருக்காங்க என் அம்மா. நீ புறப்பட்டு தயாரா இரு! இப்ப வந்து படு!”
அவன் படுக்கையை நோக்கி சுட்டிக் காட்டியதும், அவள் முடியாதென மறுத்தாள்.
“நான் கூட உன்னை அவசரப்பட்டு தைரியசாலின்னு நினைச்சிட்டேன். நீ பெண்புலி இல்லை, மதில் சுவர் மீதேறி ஓடும் சாதாரண பூனைன்னு தெரியாம போயிடுச்சே!”
அவனது சீண்டலில் அவள் மறு பேச்சின்றி படுக்கையின் ஓரமாக சென்று சுருண்டு கொள்ள, அவனும் மறுபக்கம் அவளை உரசாமல் படுத்துக் கொண்டான்.
வீரபாண்டியனின் அருகில் படுத்து விட்டாலும் அவளுக்கு உறக்கம் என்பது வர மறுக்க, விழிகள் மட்டும் இறுக்கமாக மூடியிருந்தன. அவனது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிய பேச்சுக்கள் யாவும் அவளுக்கு புதிராக இருந்தன. பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் அவனுக்கு, தன்னைப் பற்றிய விபரங்கள் எப்படி தெரிய வந்தன? யார் கூறியிருப்பார்கள்? அப்படியானால் சந்திரனை… என்று எண்ணியவளுக்கு தூக்கம் தொலைதூரம் சென்று விட்டது.
மறுநாள் காலையில் எழுந்து குளியலை முடித்து வெளியே வந்து, ஜெயக்குமாரி மற்றும் பெற்றவளை பார்த்ததும் முகம் மலர அருகில் சென்றாள். மூன்று நாட்களாக மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்திருப்பதால் அவரது உடல்நிலையை ஆராய்ந்தாள்.
உறக்கம் கலைந்து வெளியே வந்த கணவனின் கண்கள், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல், அவருக்கு வேண்டியவற்றை செய்து கொண்டு இருந்தாள் தேவசேனா.
உதட்டில் உறைந்த புன்னகையுடன் அங்கு சென்ற வீரபாண்டியன், ஜெயக்குமாரியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, மாடிப் பகுதியில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான்.
மருமகளின் அக்கறையான பேச்சிலும், அவள் அறையில் இருந்து புன்னகையுடன் வெளியே வந்த மகனையும் பார்த்த, ஜெயக்குமாரியின் முகமெல்லாம் பூரிப்பில் மிதந்தது. அவர்களுக்கு இடையே எதுவும் நடந்திருக்காது என்று தெரிந்தாலும், விரைவில் மகன் மனம் மாறி விடுவான் என அந்த தாயுள்ளம் நம்பியது.
உணவு முடிந்ததும் அவளை அழைத்துக் கொண்டு இதோ புறப்பட்டு விட்டான். இரவில் தெரிந்த கடுமையும் இல்லை. ஆழ்ந்த பார்வையால் தன்னைத் துளைத்தெடுக்கவும் இல்லை. சாந்தமான முகத்துடன் தொழில் விசயமாக பேசும் முதலாளியாக மட்டுமே தெரிந்தான். முதலில் சிவபெருமானின் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றான். பின்னர், அவளுக்குத் தேவையான உடைகளை எடுப்பதற்கு அசோகாவிற்கு சென்றனர்.
அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்த கடை ஊழியர்கள் மரியாதையுடன் அழைத்துச் சென்று அவன் கூறியதை செவி சாய்க்க, விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் அவர்கள் முன்பு விதவிதமாக அடுக்கப்பட்டன.
விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தரமும், பளபளப்பும் கூடி தனி அழகுடன் மிளிர்ந்தன. அதை கைகளால் தொட்டுப் பார்த்தாள் தேவசேனா. விழிகளில் ஒருவித மகிழ்ச்சி படர்ந்தது. எந்தப் புடவையை தேர்வு செய்வதென தெரியாமல் மலைப்புடன் நின்றிருந்தாள்.
அவள் முகத்தை பார்த்தே அவளது விருப்பத்தை அறிந்து, அத்தனை புடவைகளையும் தேர்வு செய்தான் வீரபாண்டியன்.
அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும், “நீ கேட்டுத்தான் வாங்கி தரணும்னு எனக்கு அவசியமில்ல. உன் மனசுல இருப்பதை அறிஞ்சாலே நான் செஞ்சு தருவேன்” அந்த வார்த்தைகள் அவளை எங்கோ அழைத்துச் சென்றன.
அவள் மறுக்க மறுக்க கேட்காமல் அவள் அம்மாவிற்கும், அவளுக்கும் ஐந்தாரு பட்டுப் புடவைகள், விலை உயர்ந்த புடவைகள், அதற்கு தேவையான உள்ளாடைகள் அனைத்தும் வாங்கச் செய்தான். அப்படியே பிரீஃப்கேஸ், சப்பல், பேக் முதல் என்னவெல்லாம் அவளுக்குத் தேவையானதோ அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.
“நீ இப்ப சாதாரணமானவள் கிடையாது. என் மனைவி! யமுனா கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தப் போறவ. போறதுக்கும், பார்க்கறதுக்கும் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு. உன் அண்ணன் கல்யாணத்துக்கு வந்திருப்பதால் அதிகமா உடைகள் எதுவும் கொண்டு வந்திருக்க மாட்டேல்ல! அதான்…”
அவள் கேட்காமலேயே விளக்கமளிக்க, அவனது பதிலில் அவளுக்குத் தொண்டை உலர்ந்து போனது. பதில் கூற நா எழ மறுத்தது. அதைக் கண்டு கொள்ளாமல் அழைத்துச் சென்றான் வீரபாண்டியன்.
அப்போது, தங்கையின் திருமண விசயமாக அவன் தெரிந்தவரிடம் பேசிக்கொண்டு இருக்க, விஷ்ணுவின் அருகில் அவசரமாக சென்றாள் தேவசேனா.
அவனது புன்னகையை சிறு தலையசைப்புடன் ஏற்று சற்று நேரம் பேசினாள். சந்திரனின் திருமண விசயம், வீட்டார் பற்றிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
“பாவம் சந்திரன், யமுனா மேல ரொம்ப பாசம் வச்சிருந்தான். குடும்ப பிரச்சனையில் அவங்க கல்யாணம் நின்னு போயிடுச்சு.. இருந்தும், அவளை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறான். வீட்டுல பார்த்த பெண்ணை அவன் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டாலும், இன்னைக்கு வரை அந்த பெண்ணை அவன் நேர்ல பார்த்ததும் இல்ல, பேசியதும் கிடையாது”
“ம்… எனக்கும் தெரியும். சங்கீதா சித்தி சொன்னாங்க”
“அவங்க பெரியப்பா பேச்சை சந்திரன் அப்பா முதல் யாரும் மீற மாட்டாங்க. அதான், அவனும் அப்படி இருக்கான். வாய் தான் பிறர் கூற்றை ஆதரிக்குமே தவிர, மனம்!! அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கட்டுப்படாது. யமுனாவை மறந்துட்டு அவன் எப்படி வேறு பெண்ணை மணந்துட்டு வாழப் போறானோ தெரியல.”
“சந்திரன் அண்ணா, யமுனா அண்ணி மேல இத்தனை பாசத்தை வச்சிருந்தும், ஏன் அதை இத்தனை நாளா மறைச்சிட்டு இருந்தாங்க? அவர் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லயே? சித்தப்பா, சித்தி கிட்டே அது விசயமா பேசி இருக்கலாம். இல்ல, யமுனா அண்ணியை ஒரு முறை நேர்ல பார்த்து அவர் மனசைப் புரிய வச்சிருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கூறினாள்.
“ம்கும்.. என்ற பெருமூச்சுடன், இனி பார்க்கவும், பேசவும் நேரம் இல்லயே.. உங்க கல்யாணமும் இத்தனை அவசரமா நடக்கும்னு எதிர்பார்க்கல! இப்ப ஏதாவது அவசரப்பட்டு செய்ய போயி, அதனால் பாதிக்கப்படுவது உங்க வாழ்க்கையும் இல்லயா?” அவன் கைகளைப் பிசைந்தபடி கூற,
“ஆமாம். ஆனால், அதைப் பார்த்தா ரெண்டு பேரோட எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகிடும். முதல்ல எப்படியாவது அவங்க கல்யாணத்தை நடத்தப் பார்க்கணும். அப்புறம், பிரச்சனை ஏதாவது வந்தா சமாளிச்சுக்கலாம்” என்றாள் தேவசேனா.
விஷ்ணு, “அன்னைக்கே உங்களுக்கு உதவியதால தான் சார் கோவிச்சுக்கிட்டார். இப்ப நாம ஏதாவது பண்ண போயி, அவரோட மொத்த கோபமும் நம்ம மேல திரும்பிட்டா என்ன பண்றது? அதிலும், யமுனாவே சந்திரனை திரும்பி பார்க்காமல், அவள் அண்ணன் பேச்சை கேட்டுட்டு இருக்க, நம்மால என்ன செய்ய முடியும்?” என்று வருத்தத்துடன் வினவினான்.
“உண்மைதான்! முதல்ல நான் யமுனா அண்ணிகிட்டே பேசிப் பார்க்கறேன். அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கலாம்”
“அப்படியே ஆகட்டும். நீங்க நினைக்கிற மாதிரி சார் ஒண்ணும் சாதாரணமானவர் கிடையாது. புத்திசாலி! அன்னைக்கு கோவில்ல வச்சு எப்படி பேசினார் பார்த்தீங்கல்ல.. சொடக்கு போடுகிற நேரத்துல எதிராளியை தூக்கிடுவார். எதுக்கும் கவனமா இருங்க” அவளை எச்சரித்து விட்டு, வேகமாக அங்கிருந்து அகன்றான்.
மறுபடியும் கார் பயணம் ஆரம்பமாகியது. தேவசேனா, சந்திரனையும், சந்திரிகாவின் எதிர்காலத்தையும் பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தாள். அங்கிருந்து அவளை நகைக்கடைக்கு அழைத்துச் சென்றான் வீரபாண்டியன். அவளுக்குப் பொருத்தமான வகையில் தேர்வு செய்தான். அவளுக்கு தேவையான அனைத்தும் வாங்கியதும், தரமான உணவுவிடுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.
நேற்றிரவு சரியாக உறங்காதது, இன்றைய அலைச்சல், நிம்மதியற்ற மனநிலை, ஜன்னல் புறமாக வீசிய தென்றலின் குழுமையில் அவளது கண்கள் உறக்கத்துக்கு கெஞ்சின.
அவளது வாடிய வதனத்தைக் கண்ட வீரபாண்டியன், “முதலிரவு முடிஞ்ச சோர்வு, இரவு உறக்கம் தொலைஞ்சதால் ஏற்பட்ட அசதியா இருக்கா?” என்று செவியருகில் கிசுகிசுக்க, விஷ்ணு அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தான்.
அடுத்த நிமிடம், வாகனம் சாலையில் லேசாக தடுமாறியது.
“விஷ்ணு! பாதையை பார்த்து காரை ஓட்டு. ரிவர்வியூ மிரரை மாத்தி வை!” என்ற அதட்டலில் அவன் அவசரமாக செயல்பட்டான்.
இருக்கையின் முன்பும், ஜன்னல் புறமும் உள்ள வெண்ணிற திரைச்சீலையை இழுத்து விட்டான் வீரபாண்டியன். தேவசேனாவைப் பற்றி தன் அருகில் அமர வைத்தான்.
அவள் அவசரமாக விலக முயன்றும் விடாமல், தோளோடு பற்றிக் கொண்டான்.
“தூக்கம் வந்தால் தூங்கு. நான் வீடு வந்ததும் சொல்றேன்”
அவன் அருகில் அமர முடியாமல் தடுமாறுபவளா அவன் மீது சாய்ந்து உறங்குவாள். உறக்கம், மயக்கம் எல்லாம் அவளை விட்டு காத தூரம் ஓடி விட்டது.
அவளது விலகலில் அவள் மனதைப் புரிந்து கொண்டு, அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
வீட்டிற்கு வந்ததும் எதிர்ப்பட்டவர்களிடம் சற்று நேரம் பேசினான். தேவசேனா அறைக்குள் புகுந்து கொள்ள, அவன் மாடியறைக்குச் சென்று விட்டான்.
***
அருணாச்சலம், பெண் வீட்டாரிடம் சென்று பேசி சரி செய்துவிட்டு வந்திருந்தார். வீட்டில் திருமண வேலைகள் மளமளவென நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சந்திரனை அழைத்த அருணாச்சலம், அன்று அவன் கூறிய விசயமாக கேட்டார்.
அவன், “பெரியப்பா, இத்தனை அவசரமா கல்யாணம் நடக்கும்னு நானே எதிர்பார்க்கல! நாம வேற ஏதாவது முயற்சி பண்ணலாம்” அவரது பதிலையும் எதிர்பாராமல் சென்று விட, அவர் உள்ளம் நிம்மதியற்று தவித்தது.
எதிரியை தோற்கடித்து அழிக்க வேண்டும். தான் இன்று குடும்பத்தை இழந்து அனாதையாக தவிப்பது போல, அவனையும் அழித்து அவன் குடும்பத்தையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்க, தன்னுடைய திட்டத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டதை அவரால் தாங்க முடியவில்லை. அதிலும் தேவசேனாவை பார்த்த பிறகு அவரால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை!!
***
ஜெயக்குமாரிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதில் இருந்தே, யமுனா வீட்டில் தான் இருந்து வருகிறாள். இனி திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு போனால் போதும் என்று சொல்லி விட்டான் வீரபாண்டியன். அவளும் சரி என்று சம்மதித்து, அம்மாவிடம் பேசுவது, பரத நாட்டியம் ஆடி மற்றவர்களை மகிழ்விப்பது, திருமணத்திற்கென்று தனக்கு வாங்கியவற்றை சரி பார்ப்பது, வீட்டிற்கு வருகின்ற உறவினர்களை கவனிப்பது என்று இருக்கிறாள்.
அன்று வீரபாண்டியன் வீட்டில் இருந்தான். இன்னும் விரல் விட்டு எண்ணும் நாள் மட்டுமே தங்கை வீட்டில் இருப்பாள் என்பதால், அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான். ஸ்ரீநிதி அவன் மடியில் அமர்ந்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, தேவசேனா அவர்களுக்கு உண்பதற்கு தேவையானவற்றை எடுத்து வந்தாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே, “யமுனா உனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் தானே?” என்று கேட்டான்.
தேவசேனாவின் கவனம் தங்களது பேச்சில் இருப்பதையும், மனதில் குறித்துக் கொண்டான்.
“என்ன அண்ணா, இதுபோல இன்னும் எத்தனை நேரம்தான் கேட்டுட்டு இருப்பீங்க?”
“உன் கல்யாணம் முடியும் வரை கேட்பேன். பிறகு ‘உன் கணவர் எப்படிப்பட்டவர்? உன் மனசைப் புரிஞ்சு நடந்துக்கிறாரா? இல்லை, உன்னைக் கஷ்டப்படுத்துகிறாரா? உன் வாழ்க்கை எப்படி போகுது? அண்ணன் தவறான ஆளை தேர்வு செஞ்சிடலயே’ன்னு கேட்பேன்.”
அண்ணனின் வார்த்தைகளில் சிலிர்த்துப் போனாள் யமுனா.
“அண்ணா! ஒவ்வொரு வீட்டுலயும் உங்களை மாதிரி ஒரு பாசமான அண்ணன் இருந்தா, எந்த பெண்ணுக்கும் புகுந்த வீட்டில் பிரச்சனை வராது”
அவள் கண் கலங்க கூறுவதைக் கேட்டு, தங்கையை அணைத்தான் வீரபாண்டியன்.
“சின்ன வயசுல இருந்தே எனக்குத் தேவையான ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செய்யும் உங்களுக்கு, இப்பவும், எனக்குப் பொறுத்தமானது எதுன்னு தெரியாதா? நீங்க யாரைப் பார்த்து கட்டி வச்சாலும் நான் கல்யாணம் செஞ்சுப்பேன். ஒரு நாளும் நீங்க தந்த வாழ்க்கையை சுமையா நினைச்சு வெறுக்க மாட்டேன்”
“யமுனா! நான் யாரை கட்டிக்க சொன்னாலும் செய்வியா? உனக்குன்னு விருப்பு, வெறுப்பு எதுவுமில்லயா? என்ன தான் அண்ணன் சொன்னேன்னு நீ சம்மதிச்சாலும், நாளைக்கு கணவர் வீட்டுல போயி, அவரோடு சேர்ந்து வாழப் போறது நீ இல்லயா? அதான்மா கேட்கிறேன்” மறுபடியும் அவன் கேட்க,
“உங்க தங்கை ‘பிடிக்கலை’ன்னு சொன்னா? நீங்க என்ன செய்வீங்க?”