மகனது திருமணத்தை நேரில் கண்டுகளித்த ஜெயக்குமாரி, எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். திருமாங்கல்யத்தை ‘தேவசேனா’வின் கழுத்தில் சூட்டிய வீரபாண்டியன், அவளது கரம் பற்றி அழைத்து வந்து, தன் தாயின் பாதங்களை தொட்டு வணங்கினான்.
பெற்ற மனம் குளிர்ந்து போனது. அவர்கள் இருவரின் தலை மீது கரம் பதித்து, இறந்து விட்ட கணவர் சந்தானபாரதி மற்றும் மகன் மீது மிகுந்த பாசமுடைய மாமனார் இருவரிடமும் ‘அவர்களது வாழ்க்கையில் எந்தவொரு குறையும் இல்லாமல், பதினாறு வகையான செளபாக்கியங்களையும் பெற்று நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டார்.
புன்னகையுடன் அவர்களை எழச் செய்த ஜெயக்குமாரி, இருவரையும் அணைத்து உச்சி முகர்ந்தார்.
விஷ்ணுபிரியா, மகளுக்கு ஒரு நல்லது நடந்து விட்ட மகிழ்ச்சியில் கண்களில் நீர் தழும்ப நின்றிருந்தார். அவரிடமும் ஆசி பெற்று விட்டு, தங்கை யமுனாவை அணைத்தான் வீரபாண்டியன்.
தேவசேனா, சித்தி சங்கீதாவிடம் ஆசி பெற்று வந்தாள்.
“பெரிப்பா..” என்று அழைத்த, தம்பி மகளை தூக்கிப் போட்டு பிடித்தான். அவள் கலகலவென நகைக்க, அத்தனை நேரமிருந்த இறுக்கமான சூழ்நிலை மாறியது.
“பெரிப்பா அது..” தேவசேனாவைப் பார்த்து அவள் யாரென்று வினவ, அவன், “உங்க பெரியம்மா. இனிமேல் எப்பவும் உங்க கூடவே இருப்பாங்க” என்றான்.
அவளுக்கு புரியா விட்டாலும் தலையாட்டி வைத்தாள். பின்னர், “அம்மா, நீங்க சொன்ன மாதிரி நான் கேட்டுட்டேன். இனி நீங்க உங்களோட உடல்நிலையில் கவனமா இருக்கணும். யமுனா கல்யாணத்துக்கு நாள் அதிகமில்ல. இப்படி ஆஸ்பிட்டல்லயே இருந்தா முடியாது” என்றான்.
அவரும் புரிந்தவர் போல, “நீதான் என் ஆசைப்படி கல்யாணம் பண்ணிட்டியே! இனியும் எனக்கு என்ன வருத்தம்? எமன் வந்து என்னை அழைச்சிட்டு போற வரைக்கும் நான் நிம்மதியா இருப்பேன்” என்று கூறினார்.
“அவ்வளவு சீக்கிரம் எமன் உங்க பக்கத்துல வந்துட முடியாது. நான் இருக்கிற வரை நீங்களும் இருப்பீங்க” மகனது பாசத்தில் மனம் நிறைந்தது.
விநாயகம், “அது மட்டும் போதாது அண்ணா. வீரபாண்டியன் கோட்டைக்கு மகாராணியார் எழுந்தருளியுள்ளார். அவருடனான வாழ்க்கையில் எங்க வம்சத்துக்கு விடிவிளக்காய் அவர் வாரிசு பிறக்கணும். வீட்டுக்குப் போனதும் உங்களுக்கு…” என்று கூறியதும், அவன் அவசரமாக இடைமறிக்க,
“அண்ணா! உங்களுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நாங்க அத்தனை பேரும் ஆசைபட்டுட்டு இருந்தோம். கடவுள் அருளால் இப்ப அது நிறைவேறிடுச்சு.. இனி உங்க மகனோ, மகளோ அவங்களையும் தூக்கி கொஞ்சுற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கணும்” என்றான்.
வீரபாண்டியன் மறுப்பாக தலையசைத்தான்.
சகுந்தலா, “அத்தான்! நான் ஏழ்மையான வீட்டுல பிறந்தாலும் உங்க தம்பியை விரும்பும் விசயத்தை அறிஞ்சதும், என்னை மிரட்டவோ, துரத்தி விடவோ, வேறு பெண் பார்த்து உங்க தம்பிக்கு மணமுடித்து வைக்கவோ நினைக்காம, ‘கட்டுன புடவையோடு வந்தா போதும். கண் கலங்காம வச்சு எம் தம்பி பார்த்துக்குவான்’னு நம்பிக்கையளித்து, என் பெற்றோரிடம் பேசி முடித்து, சொன்ன வாக்குக்கு கட்டுப்பட்டு எங்க கல்யாணத்தையும் நடத்தி வச்சிட்டு, அன்னையில இருந்து இப்ப வரை, கூடப் பிறந்த பிறப்பா பாசத்தைக் கொட்டி யாரும் என்னைத் தவறா பேசக் கூடாது; தாழ்வாக கருத கூடாதுன்னு ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்றீங்க. நிதுக்குட்டியை உங்க சொந்த மகள் போல பாசத்தைக் கொட்டி பார்த்துக்கறீங்க.. அப்படிப்பட்ட நீங்க, உங்க மனைவி வந்த பிறகும் என்னைக் கீழ விழாம தாங்குறீங்களே! அதுக்கு, நாங்க என்ன புண்ணியம் செஞ்சோம் அத்தான்?” என்று நெகிழ்ந்து போய் கேட்டாள்.
வீரபாண்டியன், “நீ இந்த வீட்டு மகாலட்சுமி. என் உடன் பிறவா சகோதரி. இனியொரு தரம் இப்படி பேசாதே!” என்று கண்டிப்புடன் கூறினான்.
“இனிமேல் பேசல அத்தான். இத்தனை நாளாய் வீட்டுக்கு மூத்த மருமகளா எல்லா விசயத்தையும் முன்னே நின்னு செஞ்சிட்டு உங்க மனைவி வந்ததும், நான் பின்னே போயிட்டதா நினைச்சு வருத்தப்படுவேன். அதனால, குடும்பத்துல சண்டை, சச்சரவு வந்திரும்னு நீங்க யோசிச்சு பேசுவது எனக்கும் புரியுது. ஆனால், அந்த அளவுக்கு மோசமானவ நான் இல்ல அத்தான். அக்காவுக்கு உள்ள இடம் எது? எனக்குரியது எதுன்னு நல்லாவே தெரியும்! எங்களுக்கு இடையே போட்டி, பொறாமை வராம நான் பார்த்துக்கறேன்.
ஸ்ரீநிதியும், அவளுக்கு பிறகு பிறக்கும் குழந்தையும் தான் ‘இந்த குடும்பத்து வாரிசு’ன்னு சொல்வதையும் நாங்க ஏத்துக்க மாட்டோம். நீங்க சொன்ன வார்த்தையை நாங்க கேட்கல.. உங்க நாக்கு அப்படியொரு வார்த்தையை உச்சரிக்கவும் இல்ல. உங்க கல்யாணம் மட்டும் நடந்திடுச்சு. எத்தனையோ பேருக்கு நல்லது நினைக்கும் என் அத்தான், கட்டுன மனைவிக்கு கட்டுப்பாடு விதிப்பவராகவோ, அவங்களை விலக்கி வச்சு நடத்துபவராகவோ, கல்யாணம் செஞ்சும் பிரம்மச்சாரியா இருப்பவராகவோ இருக்க கூடாது. அவர் எப்பவும் எல்லாரிடமும் ஒரே மாதிரி அன்பை, பாகுபாடு பாராம வழங்குபவரா இருக்கணும்” என்றாள்.
சகுந்தலாவின் பேச்சைக் கேட்ட அனைவருக்கும், அவளது உண்மையான குணமும், வீரபாண்டியன் மீது அவள் வைத்திருக்கும் மரியாதையும், பாசமும் புரிந்தது. மனைவியின் கைப்பற்றி தட்டிக் கொடுத்தான் விநாயகம். உதடுகள் புன்னகை வசப்பட்டன.
“அதான், பெரிய இடமே சொல்லியாச்சுல்ல… இனி மறு அப்பீலே கிடையாது. நானும் அவள் பேச்சை முழு மனதோடு ஆதரிக்கிறேன். நீங்க எங்க கிட்டே எதுவுமே சொல்லல” என்றான். அறை முழுவதும் சிரிப்பு சத்தம் எதிரொலித்தது.
“பொண்டாட்டிக்கு நல்லாவே ஜால்ரா போட கத்துக்கிட்டே! பொழைச்சுக்குவே” அவன் சத்தமாக சிரிக்க, தேவசேனாவை திரும்பி பார்த்தான் வீரபாண்டியன். அந்தப் பார்வையில் ஏதோ இருந்தது. அவளுக்கு புரிந்ததோ இல்லயோ அவளது பார்வை இடம் மாறியது.
மகன்கள் இருவரின் ஒற்றுமையும், மருமகளின் நற்குணமும் பெற்றவளுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியது. கண்களில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டார் ஜெயக்குமாரி.
அதன் பிறகு, அவரது உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் வர துவங்கியது. வீட்டிற்குப் போகலாம் என்று கூறியவரிடம், “மூணு நாளா மூச்சு பேச்சில்லாம இருந்துட்டு சுயநினைவு திரும்பியதும், வீட்டுக்குப் போகலாம்னு சொல்றீங்களே… ரெண்டு நாள் இருந்து பார்த்துட்டு மெதுவா போகலாம்” என்றான் வீரபாண்டியன்.
“ஏற்கனவே வந்து மூணு நாளாகுது. இதுல இன்னும் ரெண்டு நாளா? வீட்டுல கல்யாணத்தை வச்சிட்டு இப்படி ஆஸ்பிட்டல்ல படுத்திருந்தா, அப்புறம், வீட்டை யார் பார்த்துக்கறது? நான் இப்ப நல்லாதான் இருக்கேன் பாண்டி. என்னை நினைச்சு பயப்படும் அவசியமில்ல. அதான் தேவசேனா இருக்கிறாளே..” என்றார்.
‘கல்யாணம்’ என்ற வார்த்தையும், மனைவி ஒரு ‘மருத்துவ செவிலியர்’ என்பதும் தெரிந்ததால், அவனும் ‘சரி’ என்று சொல்லி விட்டான். உடனடியாக மருத்துவரை காணச் சென்று சற்று நேரம் பேசிவிட்டு வந்தான்.
மகள் கழுத்தில் வீரபாண்டியன் தாலி கட்டவில்லை என்ற முக சுணக்கம், வருத்தம் எதுவுமின்றி சங்கீதா புன்னகையுடன் அமர்ந்திருக்க, அவரது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பது, ஜெயக்குமாரிக்கு கவலையை அளித்தது.
மூன்று வருடமாக பேச்சற்று இருந்தும், ஜவுளி கடை, கோவில், இன்று மருத்துவமனை என்று அவர், மாறி மாறி வருவதைப் பார்க்கும் போது சங்கடமாக இருந்தது. பிரதிபலன் எதிர்பாராமல் புன்னகையுடன் அவர் வந்து செல்வதை பார்க்கும் போது மனதிற்குள் வலித்தது. தங்கையின் திருமண ஏற்பாட்டை துடிப்புடன் செய்து வரும் வீரபாண்டியன், அதற்கு ஒரு தடை ஏற்பட்டால், அது யாராக இருந்தாலும் நிச்சயம் சும்மா விடமாட்டான். அதனால், தனது மனவோட்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல், உள்ளேயே மறைத்துக்கொண்டு மகன், மருமகளை ஒன்று சேர வைப்பதற்கான வழிமுறைகளை கையாள முயன்றார்.
மதிய நேரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீரபாண்டியன் அருகில் தேவசேனாவை நிற்க வைத்து, இருவருக்கும் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
சற்று நேரம், பொதுவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
வீரபாண்டியன், விஷ்ணுபிரியா மற்றும் தேவசேனாவை கீழ் பகுதியில் உள்ள அறையில் ஓய்வெடுக்க சொன்னான். உடனே, அவனது தாயார் மறுத்து, தேவசேனாவை அவனுடன் மாடியறைக்கு அழைத்துச் செல்ல கூறினார்.
தாயின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவன் ஒன்றும் சாமான்ய மனிதன் இல்லயே!
“முதல்ல நம்ம யமுனாவோட கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். பிறகு, மற்றதை பார்த்துக்கலாம்” அவன் கூறிவிட்டு, மாடியில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான். அதன் பிறகு, வேலைகள் அவனை அப்படியே இழுத்துக் கொண்டன.
***
சங்கீதாவின் மூலம் நடந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சந்திரனுக்கு, மனதில் இருப்பதை வெளிகாட்டாமல் மறைக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது. அருணாச்சலம் யோசனை வயப்பட்டு இருந்தார். அடிக்கடி அவரது கண்கள் தம்பியின் மகனைத் தொட்டு மீண்டன.
சங்கீதா, “ஆண்டவனுக்கு என்மேல எந்த கோபமும் இல்லை. அதனால தான் அப்படியொரு பாக்கியத்தை காணும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. என் மருமகன், தேவாவோடு சேர்ந்து நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும்” என்று மனதார ஆசிர்வதித்தார்.
“சங்கீதா! உன் மகளை அவன் கட்டிக்கிறதா வாக்கு கொடுத்து, உன் மகனுக்கும் தன் தங்கையை தருவதா சொல்லி சொன்ன எதையுமே செய்யாம, தகப்பன் இறந்துட்ட காரணத்தால் பேசிய எதையும் முடிக்காம போனவனை போயி நீ வாழ்த்துறியே! உன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் பற்றிய கவலை உனக்கு இல்லயா?”
அருணாச்சலம் அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, “இதுல கோபப்படவோ, பொறாமைப்படவோ, ஆத்திரப்படவோ எதுவும் இருப்பதா எனக்குத் தோணல. என் மகளை கட்டிக்கிறதா பாண்டி யாரிடமும், எப்பவுமே வாக்கு தரவும் இல்லை. ஆசைப்பட்டது நான்! அது நடக்காம போனதால் பாண்டியை எப்படி எதிரியா நினைக்க முடியும்?” அவரிடம் எதிர் கேள்வியை முன் வைத்தார் சங்கீதா.
“உன் அண்ணன் மகனுக்கு சாதகமா பேசும் நீ, உன் வயித்துல பிறந்த ரெண்டு பேரையும் மறந்துட்டியா? யமுனாவை மறக்க முடியாம சந்திரன் பட்ட அவதி, சந்திரிகாவின் எதிர்காலம்…”
ஒரு சந்தோசமான செய்தியைக் கூட, பூரணமாக ஏற்று அனுபவிக்க விடாமல் செய்யும் இவரை என்ன செய்வது? என்று வெம்பிய சங்கீதா, ஒரு சில விசயங்களை வாய் திறந்து கூற முடியாமல் தடுமாறினார். அதையே தனக்கு வாய்ப்பாக எண்ணிக்கொண்டு விருப்பம் போல நடந்து வருகிறார் அருணாச்சலம்!
மனைவியின் வாடிய முகத்தைப் பார்த்த அண்ணாமலை, “அண்ணா! வீராவுக்கு ஒரு நல்லது நடந்து இருக்கிறப்போ ஏன் இப்படி குதர்க்கமா யோசிக்கிறீங்க? அவனும், நாம தூக்கி வளர்த்த பிள்ளை தானே?” என்று கேட்க, “அதான் ‘வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துடுச்சே!’ ” என முடித்து விட்டார் அருணாச்சலம்.
இவர் திருந்த மாட்டார். அருகில் இருப்பவர்களை நிம்மதியாகவும் இருக்க விட மாட்டார் என்று நினைத்து, அங்கிருந்து அகல முயன்றார் சங்கீதா.
“அண்ணாமலை, அவன் கல்யாணம் செஞ்சிருப்பது யாரைன்னு பார்த்தியா? அவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி பண்ணியிருப்பான்” தம்பியிடம் சீறியவரால், அவன் தேவசேனாவை மணந்து கொண்டதை ஏற்க முடியவில்லை.
“அண்ணியோட தங்கை மகளை தான் கல்யாணம் செய்யணும்னு விதியிருந்தா, அதை மாத்த யாராலும் முடியாது. உங்களுக்கு தான் அவங்களைப் பிடிக்காதே! பிறகு, எதுக்கு அதைப் பற்றி பேசி வீணா உங்க உடல் நலத்தைக் கெடுத்துக்கறீங்க? இதை விட்டுட்டுப் போயி நல்லா தூங்கி ஓய்வெடுங்க” அண்ணாமலை, மகனை அழைத்து ஏதோ பேசியபடி வெளியே சென்று விட, அவரோ ஆத்திரத்தை அடக்க முடியாமல் இருந்தார்.
அவன் மறுத்ததும், “அவள் இப்ப உன் பொண்டாட்டி. ஒரே அறையில் இருந்தாலும் சேர்ந்து வாழ்வதும், விலகி இருப்பதும் உங்க விருப்பம். அதுக்கு இப்படி விலக்கி வச்சு நடத்தணும்னு அவசியமில்ல. உங்க கல்யாணம் நடந்த விசயத்தை அறிஞ்ச உறவுக்காரங்களும், ஊர்காரங்களும் உங்களைப் பார்க்க வர்றப்போ, இப்படி தனித் தனியே இருப்பது நல்லதல்ல. அப்புறம், ஏதாவது இட்டுக்கட்டி பேசுவாங்க. உன் அறைக்கு அவள் வந்தாலும், அவள் அறைக்கு நீ போனாலும் ஒண்ணு தான். கட்டுன புருஷன் தன்னை விலக்கி வச்சிருப்பதா நினைச்சு, அவள் வருத்தப்படக் கூடாது பாரு.. அதான் சொல்றேன்”
அவன் தலையசைத்துக்கொண்டு நகர்ந்து சென்றான்.
உணவை முடித்த அனைவரும் தத்தம் அறையில் ஓய்வெடுக்க செல்ல, உடல்நிலை சரியில்லாத ஜெயக்குமாரியை கவனிக்கும் பொருட்டும், மகளுக்கு தனிமையை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டும், விஷ்ணுபிரியா அவரது அறையில் இடப்பட்ட வேறு கட்டிலில் படுத்துக் கொண்டார்.
மூன்று நாட்களாக மருத்துவமனை, வீட்டு மனிதர்கள் சூழ இருந்தவளால் தனிமை என்பது கிடைக்காமல் போக, தாயார் வெளியேறியதும் அவசரமாக கதவைத் தாளிட்டு, கைப்பேசியை கையில் எடுத்தாள் தேவசேனா.
சந்திரனின் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது, வெளியே காலடி ஓசையும், அதைத் தொடர்ந்து கதவைத் தட்டும் ஒலியும் கேட்டது. கைப்பேசியின் இணைப்பை துண்டித்து விட்டு, ‘யாராக இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்…’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தாள்.
அங்கு அவன்!!
வீரபாண்டியனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராமல் திடுக்கிட்டாள் தேவசேனா!
அவளை சற்று நகர்த்தி விட்டு உள்ளே வந்து கதவைத் தாளிட்டான். மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே, “எதுக்கு இத்தனை அதிர்ச்சி? நான் ஒண்ணும் வேற யாரோட அறைக்கு உள்ளேயும் வந்துடலயே?” சிறு கிண்டலுடன் அவன் வினவ, அவள் அவசரமாக மறுத்தாள்.
“இல்லயா? பிறகும் எதுக்கு இப்படி பயந்து போயிருக்கே? ஆமாம். அத்தை எங்கே? நீ தனியாகவா இருக்கே?”
திடீரென்று வந்ததும் அல்லாமல் அவன் ஏதேதோ கேட்க, திக்கென்றது அவளுக்கு. வார்த்தைகள் வெளியே வராமல் தொண்டைக்குள் முட்டி மோதின.
“அப்ப சரிதான்.” என்று கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான். “ரெண்டு நாளாகுது சரியா தூங்கி. கொஞ்சம் நகரு!” அவளை விலக்கி விட்டு படுக்கையில் சென்று அமர்ந்தான்.
“என்ன, ‘மந்திரிச்சு விட்ட கோழி’ மாதிரி அசையாம இருக்கே? உடம்பெல்லாம் ஒரே அசதியா இருக்கு. வந்து, கொஞ்ச நேரம் என் கை, காலை பிடிச்சு விடு”
அவன் படுக்கையில் சரிவதைக் கண்டு, அவள் அவசரமாக பின் வாங்கினாள்.
“அட! ஊருக்கு வந்ததுல இருந்து சதா என் பின்னாடியே சுத்திட்டு இருந்தே! ‘மச்சான், அத்தான், முறைப்பையன்’னு வீம்பு பேசி என்னை சீண்டி விட்டுட்டு, இப்ப பயந்து போனால் எப்படி? வா, வந்து பிடிச்சு விடு!”
அவனுக்கு என்ன ஆயிற்று? என்பது போல் அவள் பார்த்து நிற்க, “ஒருவேளை நர்ஸம்மா பொதுவெளியில், அதுவும் அவங்களோட விஷ்ணு சார் துணையிருந்தா மட்டும்தான் வீரமா பேசுவாங்களோ?” அவளுக்குத் தொண்டை அடைத்து இருமல் வந்தது. அவன் எழுந்து வந்து அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பாட்டிலை எடுத்து, அவள் உதட்டருகில் கொண்டு சென்றான்.
அவளுக்கு பதற்றம் அதிகரிக்க, அவசரமாக விலக முயன்றும் முடியாமல், மொத்த நீரும் புடவையில் கொட்டி விட்டது.
“அடடா!! என்ன இது? ஏன் இப்படி பதட்டப்படுறே? பாரு, புடவையெல்லாம் நனைஞ்சுட்டு, இப்ப நீ என்ன பண்றே…”
அவள் அவசரமாக அங்கிருந்து வெளியேற முயல, “நில்லு!” என்ற வார்த்தை அவளை தடுத்து நிறுத்தியது.
திரும்பி பார்க்காமல் நிற்பதைக் கண்டு அவள் அருகில் சென்றான். அவளது இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.
வீரபாண்டியனின் கை விரல்கள், நீண்டு சென்று அவள் தோளில் அழுத்தமாக பதிந்தன. உள்ளுக்குள் உதறலெடுக்க அங்கிருந்து போக முடியாமல், அச்சம் கலந்த பதற்றத்துடன் நின்றிருந்தாள் தேவசேனா!
“இன்னைக்கு நம்ம முதல் இரவு. அதான், உன் கூடவே இருக்கலாம்னு வந்தேன். நீயானால், என்கிட்டே பேசாம தனியா விட்டுட்டு ஓடப் பார்க்கறியே!”
தேவசேனாவின் உடல் லேசாக நடுங்கியது.
“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்கு முன்னே இத்தனை பயமா?”
அவள் மிடறு விழுங்குவதில் தொண்டைக் குழி அசைந்தது. அவனது கண்கள் அதன் மீது நிலைத்து நின்றன. கால்கள் அவளை நெருங்கின. தேவசேனா பின்னோக்கி நகர்ந்து சென்று சுவரில் மோதினாள்.
இரு கரங்களையும் சுவரில் வைத்து அவளை அசைய விடாமல் செய்தான் வீரபாண்டியன்.
தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவு செய்யுங்கள் தோழமைகளே…