முதல் நாள் வகுப்பிற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் மாணவர்கள் அனைவரும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் அன்று வகுப்புகள் ஆரம்பிக்க பட்டிருந்தது.
காலையிலேயே எழுந்து, குளித்து, அழகாக உடுத்தி, புதிதாக வாங்கிய புத்தக பையை தோளில் சுமந்து கொண்டே கல்லூரிக்கும் வந்து விட்டார்கள்.
பல கனவுகளோடு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க தயாராக இருந்தது இளம் கன்றுகள். புதிதாக ரெக்கை முளைத்த உணர்வு. புதிதாக கிடைக்கும் நட்பு வட்டங்கள், தவறே செய்தாலும் சரி என்று துணிந்து போராடும் வயது.
கனவுகளை துரத்தி சிலர் பாட பிரிவை தேர்ந்தெடுத்தால், பெற்றோர்களின் கைப்பாவையாக விரும்பமின்றி சிலருக்கு திணிக்கப்படுகிறது இந்த கல்வி.
ஏது எப்படியோ கல்லூரி என்றாலே குதுகளம் தானே. கொண்டாடி தீர்க்கும் பேரானந்தத்தோடு இதோ நம் தோழிகளும் வகுப்பறையில் இடம் தேடி பிடித்து, பல ஆராய்ச்சிகள் நடத்தியே நடு வரிசையில், ஒரே பெஞ்சில் நால்வரும் அமர்ந்து இருக்கிறார்கள்.
முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தால், வாத்தியார் முகத்தை மிக மிக அருகில் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கூட முதுகு பின்னால் மறைந்து கொள்ளும் வாய்ப்பே கிடைக்காது.
கடைசி பெஞ்சு என்றால், கேடி கும்பல் என்று முத்திரையே குத்தி விடுவார்கள். வகுப்பில் யார் எந்த தவறு செய்தாலும், முதல் பலிகிடா கடைசி பெஞ்சு மாணவர்கள் தானே. அத்தனை அடிகளையும், பழி சொற்களையும் தாங்கவே உறுதியான இதயம் வேண்டுமே.
இதையெல்லாம் கலந்தாலோசனை செய்து தான் நிலா கேங் நடுவில் கிடந்த நாலாவது பெஞ்சில் இடம் பிடித்து கொண்டார்கள்.
மாணவர்களின் சிநேக புன்னகையுடன் அறிமுக படலம் நிகழ்ந்து, நட்பு கொடி வளர, எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளோ இயல்பாக மற்றவர்களுடன் பேசி சிரித்தாலும், தங்கள் கூட்டணியில் யாருக்கும் இடம் கொடுக்க போவதில்லை என்பதில் தெளிவாக தான் இருக்கிறார்கள்.
முதலாம் பாட வேலைக்கான மணி அடிக்க, டிபார்ட்மென்ட் ஹச் ஓ டி (HOD – Head of the Department) ஆறுமுகம் வகுப்பிற்குள் நுழைந்தார்.
அவர் உள்ளே வந்ததும் மாணவர்கள் அனைவரும் எழுந்து “குட் மாஆஆர்னிங் சார்” என்று ராகம் இழுக்க,
“குட் மார்னிங்… எல்லாரும் உட்காருங்க” என்று சொன்னவர் முகத்தில் அத்தனை வருட அனுபவமும், பூரிப்பும் இருந்தது.
“என் பேரு ஆறுமுகம். உங்களுக்கு பிஸினஸ் மேனேஜ்மென்ட் சொல்லிக் கொடுக்க போற வாத்தியார். கூடுதலா இந்த டிபார்ட்மெண்ட் ஹச் ஓ டி பொறுப்பும் இருக்கு” என்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டவர்,
மாணவர்களையும் சுய அறிமுகம் செய்து கொள்ள சொல்ல,
வரிசையாக ஒவ்வொருவரும் தங்கள் பெயர், ஊர், தாங்கள் படித்த பள்ளியின் பெயர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு மணி நேரம் வகுப்பு. அரை மணி நேரத்திலேயே அறிமுகம் முடிந்து இருக்க, பேராசிரியர் ஆறுமுகமோ,
“இவ்வளவு நாள் ஸ்கூல்ல விளையாட்டு தனமா இருந்தது போல இனி இருக்க கூடாது. காலேஜ் வந்தாச்சி, நல்லா படிக்கணும். நல்லா படிச்சா தான் நல்ல நிலைமைக்கு போக முடியும். படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒழுக்கம் முக்கியம். ஒருத்தன் எவ்வளவு தான் அறிவாளியா? புத்திசாலியா, பெரிய பதவியில இருந்தாலும், ஒழுக்கம் இல்லைனா அவனுக்கு மதிப்பு இல்ல. இந்த காலேஜ் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குதோ அதே அளவு ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்.
பெரிய பணக்கார வீட்டு பிள்ளைங்கலாம் இங்க யாரும் இல்ல. எல்லாரும் மிடில் கிளாஸ் பிள்ளைங்க தான். அதுக்கும் கீழ அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்ட படுற பிள்ளைங்க தான் இருக்கீங்க. உங்க அப்பா, அம்மா எவ்வளவு கஷ்டபட்டு உங்களை படிக்க வைக்கிறாங்க? அதெல்லாம் மனசுல வச்சி நல்ல பிள்ளைங்களா படிச்சு முடிச்சு வெளிய போகணும்.” என்று சில அறிவுரைகள் கூறியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்.
இதே வார்த்தைகளை தான் முதல் நாள் மீட்டிங்கிலும் முதல்வர் சொன்னார். இப்போதும் அதையே கேட்க அறுவை தான். அறிவுரை சொன்னால் யாருக்கு தான் பிடிக்கும்? ஆனாலும் அமைதியாக அவரை தான் கவனித்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள் அனைவரும்.
முதல் நாளே பாடம் எடுக்கிறேன் என்று உயிரை எடுப்பதற்கு, இந்த அறுவை எவ்வளவோ மேல் என்று தான் நல்ல பிள்ளைகளாக இருக்கிறார்கள்.
பள்ளியில் ஒரு பாடத்திற்கான வகுப்பு நேரம் அரை மணி நேரம் தான். ஒரு சில பீரியட்ஸ் மட்டும் அதிக பட்சம் முக்கால் மணி நேரம் போகும். இங்கே ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம். அதை எண்ணி வருத்தமெல்லாம் இல்லை.
ஏழு மணி நேரத்தை விட ஐந்து மணி நேரம் எவ்வளவோ தேவலமே.
அங்கே ஆறுமுகம் ஐயா, தம் கட்டி அறிவுரை மழையை பொழிந்துக் கொண்டிருக்க, இரண்டு கன்னங்களுக்கும் கையை முட்டுக் கொடுத்து ஒரே பொசிசனில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள் நிலா அண்ட் கோஸ்.
நடுவில் அமர்ந்திருந்த செண்பகவள்ளியோ, “நேத்து வி-லைவ் ல ஜேகே லைவ் வந்தான் பார்த்தீங்களா?” என்று ஹஸ்கி குரலில் கேட்க,
நிலா, “ஹ்ம்ம் பார்த்தேன்… பார்த்தேன்… நான் நிறைய ஹார்ட் விட்டேன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
நந்தினியோ, “லைவ்ல ஃபேன்ஸ்க்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்கும் போதே தூங்கிட்டான்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
“ஆமா மச்சி… அவன் நாற்பது நிமிஷமா தூங்குனத கூட நான் வாயை பிளந்து பார்த்துட்டு இருந்தேன்” என்றாள் கல்பனா.
“நானும்… நானும்…” என்றார்கள் மற்ற மூவரும்.
“ஆவ்வ்… எவ்வளவு அழகா இருந்தான். அப்படியே தொக்கா என் ஹார்ட்ட கொத்திட்டு போய்ட்டான்.
என் லட்சியம், கனவு எல்லாம் ஒன்னே ஒன்னு தான் மச்சி. கொரியா போகணும், பி டி எஸ்ஸ பார்க்கணும், அவங்க கான்செப்ட்க்கு போய் அந்த லைட் ஸ்டிக் கையில வச்சிட்டு ஆர்மி கூட்டத்துல இருந்து கத்தனும்” என்று கல்பனா சிலாகித்தபடி சொல்லி முடிக்க,
“கல்ப்… இப்பவே நான் உன்ன அவங்க கான்செப்ட்க்கு கூட்டிட்டு போறேன்” என்ற நிலாவோ,
“ஜஸ்ட் இமாஜின்… நாம எல்லாம் இப்போ பி டி எஸ் கான்செப்ட் நடக்கிற ஆடிட்டோரியத்துல உட்கார்ந்து இருக்கோம்.” என்றதும் அந்த வகுப்பறை மொத்தமும் ஸ்பாட் லைட்டால் ஒளி பெறும் பெரிய அரங்காக மாறியது.
முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும், மேற்பகுதி உருண்டு ஒளிவீசும் லைட் ஸ்டிக்கை கையில் பிடித்து, உற்சாகமாக கூச்சலிடும் ரசிகர்களாக மாறினார்கள்.
“ஆ ஆ… கோல்டே ஒரு பொண்ணு மேல வந்து இடிக்குது” என்று நந்தினி கூட்ட நெரிசலை கற்பனையில் கலக்க,
“அவ தாடையிலயே ஒரு குத்து விட்டு பின்னாடி தள்ளு நண்டு” என்றாள் கல்பனா.
“ஏய்… அமைதியா இருங்க … நம்ம ஆளுங்க வரப் போறாங்க” நிலா அனைவரையும் அமைதிப் படுத்த, நால்வரும் எந்த பாவணையையும் முகத்தில் காட்டாது, விழிகளை கூட அகற்றாது முன்னால் நின்றிருந்த ஆறுமுகத்தை பார்த்திருந்தாலும், சிந்தனை முழுவதும் அவர்கள் மாய உலகில் தான் இருந்தது.
“இப்போ பி டி எஸ்ஸ பார்க்க போறோம்.” என்று நிலா கமெண்டரி போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“முன்னாடி பெரிய ஸ்டேஜ்… ரொம்ப இருட்டா இருக்கு. துளி கூட வெளிச்சம் இல்ல. ஆனா ஃபுல் கிரவுட். அவங்க சவுண்ட் தான் அதிகமா இருக்கு.
சடனா ஸ்பீக்கர் அட்ஜஸ்ட் சவுண்ட்… க்கொயிங் னு கேட்குது. மொத்த கூட்டமும் அமைதி ஆகிடுச்சு. இப்போ ஸ்டேஜ்ல மட்டும் சின்ன வெளிச்சம். நாலா பக்கமும் இருந்து புகை வருது, அதுக்கு நடுவுல ஸ்டேஜ் புளோர் ஓபன் ஆகுது, அதுல தான் தனி லிஃப்ட்ல ஜின், ஆர்.எம்., ஜங்கூக், ஜே-ஹோப், சுகா, வி, ஜிமின் எல்லாரும் மெது மெதுவாக மேல வர்றாங்க” என்று அவள் சொல்லி முடிக்க முன்,
“ஹே… வீவீவீ…” என்று உற்சாக மிகுதியில் எழுந்து நின்று கையை தூக்கி கத்தியே விட்டாள் செண்பகா.
காலியான அறைக்குள் எதிரொலிக்கும் குரல் போல் ஆறுமுகம் குரல் மட்டும் அந்த அறை முழுவதும் கேட்டுக் கொண்டிருக்க, அவர் குரலுக்கு போட்டியாக இவள் குரல் மிகுந்து ஒலித்ததில் மொத்த வகுப்பும் விசித்திரமாக தான் செண்பகாவை திரும்பிப் பார்த்தது.
முன்னால் நின்று தொண்ட தண்ணி வத்த வாழ்க்கை பாடம் எடுத்துக் கொண்டிருந்த அந்த மனிதரோ இவள் கூச்சலில் ஒரு நொடி அரண்டு தான் போனார்.
சுகர் பேசண்ட் மா? ஏன் இப்படி கத்தி ஹார்ட் அட்டாக் வர வைக்கிற? என்பது போல் இருந்தது அவர் பார்வை.
மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த தோழிகள், அவள் கூச்சலில் ஜர்க்காகி அதிர்ந்து, அய்யோ! என்று தலையில் அடித்துக் கொண்டு, தலையை கவிழ்ந்தபடி எழுந்து நின்ற செண்பாகாவை விழியால் கடிந்து கொண்டிருந்தார்கள்.
செண்பகாவுக்கோ என்ன செய்வது என்று தெரியா நிலை. மேலே உயர்த்திய கையை ஆசிரியரை பார்த்து திரு திருவென விழித்தபடியே மெதுவாக கீழே இறக்கினாள்.
அவளையே ஆறுமுகம் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, பயதில் கை, கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது செண்பகாவுக்கு.
“என்னாச்சு மா? ஏன் கத்தின?” என்று அவர் கேட்க,
பயத்தில் இதயம் வெளியே எம்பி குதித்தது அவளுக்கு.
விட்டால் அழுது விடும் ரேஞ்சில் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சாதாரணமாகவே அவள் மூளை தாமதமாக தான் வேலை செய்யும். இப்போது மொத்தமாக வேலை நிறுத்தமே செய்து விட்டது போல. ஆள் வாயே திறக்கவில்லை. திருவிழா கூட்டத்தில் தொலைந்து விட்ட சிறு பிள்ளை போல பாவமாக விழித்துக் கொண்டே நின்றிருந்தாள்.
அவள் நிலை உணர்ந்த நிலா தான், “வீ…வீ… வீ ஆர் சோ லக்கி சார். இந்த காலேஜ்ல சீட் கிடைச்சு, உங்கள போல ஃப்ரண்ட்லி அண்ட் குட் லுக்கிங் டீச்சர் வேற கிடைச்சு இருக்கீங்கல்ல… அந்த எக்ஸைட்மெண்ட்ல தான் வீ ஆர் சோ லக்கினு சொல்றதுக்கு வீஈஈஈ னு கத்திட்டா”
என்று தண்டவாளத்தில் போய் தலை வைத்து மாட்டிக் கொள்ள இருந்த தோழியை காப்பாற்றி விட்டாள்.
செண்பகாவும், “ஹி ஹி… ஆமா சார்” என்று பல்லை இழித்து சமாளிக்க முயல, அது வந்தால் தானே.
சமாளிப்பு என்பது சுட்டு போட்டாலும் அவளுக்கு வராத ஒன்று. இதய துடிப்பு இன்னும் இயல்பாகது வேகமாக துடிக்க ஆரம்பித்தது, ஆறுமுகம் ஐயாவின் நம்பிக்கையில்லா ஆராயும் பார்வையில்.
அவர்களின் நல்ல நேரத்துக்கு பெல் அடிக்க, முதல் ஆளாக எழுந்து “தாங்க் யூயூயூ சார்” என்று கல்பனாவும், நந்தினியும் ராகம் இசைக்க, மற்ற மாணவர்களும் வேறு வழியில்லாமல் எழுந்து ஒத்து ஊத வேண்டியதாயிற்று.
அடுத்த வகுப்பிற்காக ஜெயஶ்ரீ வாசலில் வந்து நிற்க, ஆறுமுகமும் வேறு வழியில்லாமல் நால்வரையும் பார்த்த படியே வெளியேறினார்.
மெல்லிய புன்னகையோடு உள்ளே வந்த ஜெயஶ்ரீக்கும் அதே குட் மாஆஆஆர்னிங்கே பார்சல் செய்ய,
அவளும் “குட் மார்னிங் ஸ்டூடண்ட் ஸ்… சிட்” என்றவள் இயல்பான அறிமுகத்தோடு ஆரம்பித்து, “உங்கள பத்தி நீங்களே ஒரு செல்ஃப் இன்ரோடக்ஷன் எழுதுங்க” என்று சொல்லி விட,
‘எத செல்ஃப் இன்ரோடக்ஷனா? அப்படினா?’ என்ற தொனியில் தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே பையில் இருந்து லாங் சைஸ் நோட் ஒன்றை எடுத்து கடைசி பக்கத்தில் செல்ஃப் இன்ரோடக்ஷன் என்று தலைப்பு போட்டு விட்டு அருகே இருந்தவர்கள் பேப்பரை பார்க்க,
அவள் இவளுக்கு மேல் போல, அந்த
செல்ஃப் இன்ரோடக்ஷனுக்கே ஸ்பெல்லிங் இவளை தான் பார்த்து எழுதிக் கொண்டிருந்தாள்.
யாராவது எழுதுவார்கள் என்று முன்னால், பின்னால் நோட்டம் விட்டபடி அனைவரும் உருட்டி கொண்டிருக்க, கொஞ்ச நேரம் பொறுமை காத்த ஜெயஶ்ரீயோ, “சாதாரண சுயவிவரம் கூட யாருக்கும் தெரியல” என்று சொன்னபடி அவளே போர்டில் மாதிரி படிவம் எழுதி, “இந்த மாதிரி ஃபார்மெட்ல உங்களோட டீட்டில்ஸ் ஃபில் பண்ணுங்க” என்றாள்.
அதையும் யார் முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைப்பது என்று சுய விவர படிவமே பொது அலசலாக மாறியது.
தோழிகள் குழுவில் தங்கநிலா தான் முதலில் எழுத தொடங்கினாள். அவள் அருகே இருந்த செண்பகாவோ, அவள் பேப்பரை பார்த்து அப்படியே எழுதி வைக்க,
நங்கென்று அவள் தலையில் ஒரு கரம் கொட்டு வைத்தது.
வேறு யார் நந்தினி தான்.
“எருமை… அவ பேர எழுதி வைக்கிற. உன் பேர எழுது. அய்யோ இவளை எப்படி கரை சேர்க்க போறோம்னு தெரிலையே. பாவம் டி உன்ன கட்டிக்க போறவன்” என்று கேலி, கிண்டல்கள், செண்பகாவின் அசட்டு சிரிப்பு நடுவே சுய விவர படிவம் பூர்த்தி செய்து பேப்பரையும் கிழித்து கொடுக்க அந்த வகுப்பும் முடிந்தது.
அடுத்து பத்து நிமிட இடைவேளை…
ஒரு சிலர் வெளியே உலாத்த, சிலர் ஹப்பாடா என்று பெஞ்சிலே சாய்ந்து விட்டார்கள். இன்னும் சிலர் செல்பி, ரீல்ஸ் என்று போனோடு ஐக்கியம் ஆகிவிட்டார்கள்.
“மச்சி… நான் அடுத்த ஹவர்க்காக ரொம்ப ஈகரா வெயிட் பண்றேன். ஏன்னு சொல்லு?” என்று கல்பனா கேட்க,
“இல்ல… இருக்கிற நாலு வாத்தில ரெண்டு டிக்கெட் வந்துட்டு போயாச்சு. அடுத்து சத்யன் சார் இல்லனா விக்ரம் சார், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து தானே ஆகனும்” என்று அவள் சந்திராயன் 3யை வெற்றிகரமாக நிலாவுக்கு அனுப்பிய விஞ்ஞானி போல் குதுகளமாக சொல்ல,
அவளை முறைத்தாள் நிலா.
கல்பனா அருகே இருந்த நந்தினியோ, “அப்போ ஃபர்ஸ்ட் பெஞ்சுக்கு போய்டலாமா?” என்று வாயெல்லாம் பல்லாக கேட்க,
“எல்லாரும் செத்துடலாமா?” என்று மொத்தமாக வாரி விட்டிருந்தாள் நிலா.
“ஏன் டி?” என்று முகம் சுருங்கி போனது கல்பனாவுக்கும், நந்தினிக்கும்.
“மச்சீஸ்… பார்க்க அழகா இருந்தாலும், அவங்க எல்லாம் ஆபத்தானவங்க தூரத்துல இருந்து ரசிக்கிறதோட நிறுத்திக்கணும். பக்கத்துல போனோம் அப்புறம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பிக் பாஸ் வீடு போல ஆகிடும்.
இந்த வாத்தீஸ்லாம் தூங்கி வழியிற கடைசி பெஞ்சை விட, ஃபர்ஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கிறவங்களை பார்த்து தான் பாடம் எடுப்பாங்க, கொட்டாவி கூட விட முடியாது பார்த்துக்க” என்று பயம் காட்ட,
அவர்களும் “இல்ல இல்ல வேணாம். நாங்க எட்ட நின்னே எட்டி பார்த்துக்கிறோம்” என்று அடங்கி விட்டார்கள்.
வாத்திய சைட் அடிக்க கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன் என்ற கொள்கையில் தீர்க்கமாக இருந்த செண்பகாவோ அவர்கள் உரையாடலில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.
பத்து நிமிட இடைவேளை முடிந்து மணியும் அடித்தது.
நிலா, கல்பனா, நந்தினி மட்டுமின்றி மற்ற மாணவிகள் கூட ஆர்வமாக வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை பேரும் ஆர்வமாக இருக்க, அவர்கள் ஆர்வத்திற்கு ஆப்பு வைத்து, அனைவர் கனவிலும் ஆசிடை பீய்ச்சி அடித்தது போல் வந்து சேர்ந்தார் தமிழ் ஐயா.
முதல் வருடத்திற்கு மட்டும் மொழி பாடம் உண்டு.
ஐம்பது வயதை கடந்த ஒருவர். அளவான உடல்வாகு தான். ஆனால் அவர் அணிந்திருந்த உடை அவர் அளவுக்கு சற்று பெரிதாக இருக்க, காற்றில் பறந்து கொண்டிருந்தது.
முன் தலை வழுக்கையோ என்னவோ, பின்னால் இருந்த முடிகளை முன்னால் கொண்டு வந்து ஓட்ட வைத்தது போல தலை முடிகள் இருக்க,
செண்பகா வெகு நேரமாக அதை தான் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.
அந்த ஆராய்ச்சிக்கு முடிவு தெரியாமலே அவர் வகுப்பும் முடிந்து இருந்தது.
அடுத்து நாற்பத்தைந்து நிமிடம் மதிய உணவு இடைவேளை.
காலேஜ் கேண்டீனில் இருந்து நிலா பார்சல் வாங்கி வர, மற்ற மூவரும் வீட்டு உணவை அவளுடன் பகிர்ந்து பல அரட்டைகள் நடுவே வயிற்றை நிரப்பினார்கள்.
சாப்பிட்டு முடிய, ரெஸ்ட் ரூம், வெயிட்டிங் ஹால், மற்ற வகுப்புகள் என காலேஜ் ஓனர் ரேஞ்சில் நால்வரும் சுத்தி விட்டு, மணி அடித்த பிறகே அரக்க பறக்க ஓடி வந்தார்கள்.
வந்த பத்தாவது நிமிடமே அவளை வெளியே விரட்டி இருந்தான் விக்ரமன்.