“எது! யாரு என்னனே தெரியாத ஒருத்தன் கிட்ட வம்பு வளர்த்துட்டு வந்து இருக்கிறதுக்கு பெயர் தைரியமா!”
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
“அதாவது!”
“அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சும் அறிவாளி தான் நான்னு சொல்றேன்”
சம்ருதிகா முறைக்க,
“நிஜமா தான் சொல்றேன் சமி.. எதிரில் இருப்பவன் எப்படினு கணிச்ச பிறகு தான் எப்படி நடந்துக்கணும்னு யோசிப்பேன்.. ஒருவேளை அவன் பொறுக்கியா இருந்து இருந்தா எதுக்கு வம்புனு போனை கொடுத்துட்டு வந்து இருப்பேன்” என்றாள்.
“ரொம்ப கணிக்க தெரிஞ்சவ தான் நீ” என்று முறைப்புடனே கூறியவள், “எதுக்குடி இந்த வேண்டாத வேலை.. ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்காது” என்று அக்கறையுடன் கூறி, தமக்கையாக, “இனி இப்படி செய்யாத” என்று அறிவுரை வழங்கினாள்.
“அவன் பக்கா ஜென்டில் மேன்.. அவன் பார்வை என் முகத்தில், அதுவும் கண்ணில் தான் இருந்தது.. சாவியை கொடுக்கும் போது, எப்படி ஜாக்கிரதையா அவன் விரல் நுனி கூட என்னோட உள்ளங்கையில் படாம கொடுத்தான் தெரியுமா!
அவன் அப்படி அதிகமா பேசியது கூட, அந்த பெண்ணை தன்னோட தம்பியை விட்டு விலக்கத் தான் இருக்கும்” என்று மிக சரியாகவே ஜெயதேவை கணித்து கூறினாள்.
“என்ன இருந்தாலும் அவன் அப்படி பேசியது தப்பு தான்.. அதுவும் உன் கிட்ட சாரி கூட கேட்கலை”
“அதான் அவன் சொன்னதை அவனுக்கே திருப்பி கொடுத்துட்டேனே! அண்ட் அதனால் தான் போனை அவன் கிட்ட கொடுக்காம அவனோட தம்பியை நாளைக்கு வந்து வாங்கிக்கச் சொன்னேன்”
“என்னவோ போ.. எனக்கு என்னவோ நீ செய்தது சரியா படலை.. போனை அங்கேயே நீ கொடுத்துட்டு வந்து இருக்கணும்.. எதுக்கு இழுத்தடிச்சு இந்த தேவை இல்லாத சந்திப்பு?”
“ஒரு பொண்ணு துரத்தி துரத்தி காதலிக்கிற அளவுக்கு அந்த தம்பி தங்க கம்பி எப்படி இருக்கான்னு தான் பார்ப்போமே!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“அவன் எப்படி இருந்தா உனக்கு என்னடி?” என்று சம்ருதிகா கோபத்துடனே கேட்டாள்.
“ஹே சமி ரிலாக்ஸ்.. அவன் கிட்ட போனை கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை.. மே பி அவன் பேசியதுக்கு சாரி கேட்டு இருந்தா கொடுத்து இருப்பேனோ என்னவோ! விடு பார்த்துக்கலாம்”
“ப்ச்.. எனக்கு என்னவோ இது சரியா படலை”
“ஒரு பிரச்சனையும் வராது.. ப்ரீயா விடு”
“நாளைக்கு அவன் தம்பி வராம அவனே வந்தா?”
“வந்தா! தம்பி கிட்ட தான் போனை தருவேன்னு சொல்லி அனுப்பிடுவேன்”
“நீ ஆணியே பிடுங்க வேணாம்.. அவனே வந்தாலும் ஒழுங்கு மரியாதையை போனை கொடுத்துட்டு வர.. அண்ணனோ தம்பியோ! எவன் வந்தாலும் நாளையோட இந்த பிரச்சனையை முடிக்கிற”
“எங்க சோடா! எங்க சோடா!”
சம்ருதிகா கடுமையாக முறைக்க,
ஆத்மிகா, “நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு இது பெரிய விஷயமே இல்லை” என்றாள்.
“ஒருவேளை இந்த ஜெயதேவ் உன்னோட வண்டி நம்பரை நோட் செய்து நம்ம வீட்டை கண்டுபிடித்து அப்பா கிட்ட வந்து பேசினா என்ன செய்வ?”
“வந்தா வரட்டும்.. எனக்கென்ன பயம்!”
“நீ செய்து இருக்கும் காரியத்துக்கு அப்பா உன் தோலை உரிச்சிடுவார்”
“அவன் பேசியதை சொன்னா, அவனை உண்டு இல்லைனு ஆக்கிடுவார்”
“அவன் போனதுக்கு அப்புறம்?”
“அப்பா எப்பவாது அடிச்சு இருக்காங்களா? சும்மா சின்னதில் இருந்து நீ தான் தேவை இல்லாம பயப்படுற”
“அப்பா கோபத்தை எப்படி தான் பயமே இல்லாம சமாளிக்கிறியோ!”
“நீ அப்பாவோட கோபத்தை மட்டும் பார்க்கிற.. நான் அந்த கோபத்துக்கு பின்னாடி இருக்கும் பாசத்தையும் பார்க்கிறேன்”
“நீ தான் இப்படி சொல்ற.. நான் இதுவரை அப்பாவோட கோபத்தை மட்டும் தான் பீல் செய்து இருக்கிறேன்” என்றபோது சித்ரா அவர்களை அழைக்கும் குரல் கேட்கவும்,
“எதுக்கும் கவனமா இரு.. நாளைக்கு அவனை தனியா சந்திக்காத.. உன் பிரெண்ட்ஸ் கூட வச்சுக்கோ” என்று கூறியபடி சம்ருதிகா படிகளில் இறங்க,
“சரீங்க அப்பத்தா” என்றபடி ஆத்மிகாவும் இறங்கினாள்.
“ஆத்மி இது விளையாட்டு இல்லை” என்று சிறு கவலையுடன் கூடிய எச்சரிக்கும் குரலில் கூறிய சம்ருதிகா,
ஆத்மிகா, “சரி.. சரி.. நோ டென்ஷன்.. நான் கவனமா இருந்துப்பேன்” என்றதும் தான் விட்டாள்.
அதே நேரத்தில் வீட்டில் ஜெயதேவ் நடந்ததை கூறி முடித்து இருக்க, சத்யதேவ் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
ஜெயதேவ் கடுப்புடன் முறைத்தபடி, “இப்போ எதுக்குடா இப்படி சிரிக்கிற?” என்று கேட்டான்.
அவன் சிரிப்புடன், “மங்கூஸ் மண்டையா!” என்று சொல்லியபடி இன்னும் அதிகமாக சிரிக்க,
“டேய் வேணாம்” என்று எச்சரிக்கும் குரலில் கூறிய ஜெயதேவ் சிரிப்பை அடக்கியபடி அமர்ந்து இருந்த மீனாட்சியையும் முறைத்தான்.
மீனாட்சி, “இருந்தாலும் நீ பேசியது தப்பு” என்றார்.
அவன் தோளை குலுக்க, அவர் சிறு கவலையுடன், “எல்லா பொண்ணுங்களும் கெட்டவங்க இல்லைப்பா” என்றார்.
லேசாக சிரித்தபடி, “ரேஷ்மினு நினைச்சு தான் அப்படி பேசினேன்.. என்னோட பேச்சிலேயே அவளை துரத்த நினைத்தேன்” என்றவன், “ஆனா இந்த காலத்து பொண்ணுங்க..” என்று நிறுத்தி உதட்டை வளைக்க,
‘இதற்கு மேல் நாம என்ன சொன்னாலும் பொண்ணுங்க மேல இருக்க கருத்தை இவன் மாற்ற போறது இல்லை’ என்ற எண்ணத்தில் அவர் அமைதியானார்.
ஆனால் ஆத்மிகாவுடன் நிகழ்ந்த உரையாடல்களை நினைத்துப் பார்த்தவனுக்கு அவளை தவறாக நினைக்க தோன்றவில்லையோ!
‘அவ கொஞ்சம் வித்தியாசமானவ தானோ! ஹ்ம்ம்.. அவ எங்க என்னை பேச விட்டா! படபடனு பேசிட்டு கிளம்பி போயிட்டா’ என்று மனதினுள் நினைத்தவன் அன்னையைப் பார்த்து,
“மே பி அவ நான் போனை கேட்டதும் கொடுத்து இருந்தா, வேற பொண்ணுன்னு நினைத்து பேசிட்டேன்னு சொல்லி சாரி கேட்டு இருப்பேனோ என்னவோ! ஆனா அவ அடுத்து அடுத்து செய்ததில் பேசியதில் கோபத்துடன் நின்னுட்டேன்” என்றபடி தோளை குலுக்கினான்.
பின், “அதான் நான் பேசியதை எனக்கே திருப்பி கொடுத்துட்டாளே.. ஸோ சரியா போச்சு” என்று அன்னையிடம் சமாதானம் கூறினான். தனக்கும் சேர்த்தே சமாதானம் கூறி கொண்டானோ!
சத்யதேவ், “நிஜமாவே அந்த பொண்ணு செமடா.. எல்லோரையும் அலற விடுற உனக்கே டஃப் கொடுத்து அலற விட்டு இருக்கா பாரேன்!” என்றான்.
ஜெயதேவ் முறைக்க,
சத்யதேவ் புன்னகையுடன், “அதுவும் உன் கோபத்துக்கு கொஞ்சமும் பயப்படாம உன்னை கலாய்ச்சு, கடைசியில் நீ சொன்னதை உனக்கே திருப்பி வேற கொடுத்து இருக்கா பாரேன்” என்றவன், “என்ன இருந்தாலும் ஹை லைட் அந்த மங்கூஸ் மண்டையா தான்” என்று மீண்டும் வயிற்றை பிடித்துக் கொண்டு சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க, பொறுமை இழந்த ஜெயதேவ் அவன் மீது பாய்ந்துவிட்டான்.
“டேய்” என்றபடி சத்யதேவ் அவனை தடுக்க, அவன் இவனது கையை இறுக்கி பிடிக்க, இவன் தனது கையை உருவியபடி அவன் மீது பாய என்று மாற்றி மாற்றி இருவரும் செயல் பட்டதில் சிறு தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருந்தது.
சிறு பிள்ளைகள் போல் சண்டை போட்டு கொண்டிருந்த மகன்களை தடுக்காமல் மென்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் கண்ணோரம் கண்ணீர் துளிர்த்தது. பல வருடங்கள் கழித்து பெரிய மகனை இப்படி இயல்பாக பார்த்ததில் துளிர்த்த நெகிழ்ச்சியுடன் கூடிய ஆனந்த கண்ணீர் அது.