அடுத்த நாள் காலை ஹோட்டலில் இருந்து வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சென்றார்கள்..
அங்கிருந்து அடுத்து சுற்றுலா தளங்களுக்கு சென்று போகும் இடங்களில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் அடுத்த இடத்திற்கு சுற்றுலா செல்வார்கள்.. அப்படியே திட்டமிட்ட மூன்று நாட்களும் முடிந்தது..
நாலாவது நாள் காலை விடிந்தது..
அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அவளை பிரிந்து அவன் செல்ல வேண்டும்..
கல்யாண நேரம் அதைத் தொடர்ந்து அவன் திட்டமிட்டபடியே ஹனிமூன் போன்று சின்ன சின்ன இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முன்பே திட்டமிட்டு வந்தபடியால் அவன் வெளிநாடு செல்வதற்கான அனைத்து வேலைகளும் முன்பே பார்த்து வைத்திருந்தான்..
இதோ வீட்டுக்கு போனால் அவளை அங்கே விட்டுவிட்டு 5:00 மணிக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி வர வேண்டியது தான்.. அப்படி ஆயத்தமாக இருந்தான்..
அங்கிருந்து டாக்ஸியில் மீனாட்சி வீட்டிற்கு வந்தார்கள்..
மகளை விட்டு மருமகன் பிரிந்து செல்ல போகிறார்.. என்று கவலை இருந்தாலும் நல்லபடியாக வழி அனுப்பி வைக்க வேண்டும் என்று கோமதி அன்று விருந்து வைத்தார்..
தாயின் கைப்பகுதத்தில் அருமையான விருந்து உண்டாள் மீனாட்சி…. அவளை அழைத்து செல்வதற்கு முன்பு கோமதியுடன் பேசினான் பாண்டி..
“ அத்தை நீங்களாவது மீனம்மா கிட்ட சொல்லுங்களேன்.. இங்க உங்க கூடவே இருக்கட்டும்.. தேவையான நேரம் பணத்தை மட்டும் கொண்டு கொடுக்கட்டும்.. அங்க போனா அவங்க எப்படி அவளை நடத்துவாங்கன்னு என்னால சொல்ல முடியல.. உங்க மக அத்தை இப்ப என்னோட பொண்டாட்டி.. நீங்க தான் கொஞ்சம் கவனமா பார்த்துக் கொள்ளணும் ப்ளீஸ்.. உங்களுக்கு நான் சொல்லனும் இல்ல.. முழுக்க முழுக்க உங்களை மட்டும் தான் நான் நம்பி விட்டுட்டு போறேன்.. மீனம்மா இங்க வரலன்னாலும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது அங்க போய் பார்த்துக் கொள்ளுங்க.. ” என்றான்..
பாண்டி கேட்டதற்கு “ நான் இங்கேயே இருக்கிறதா இருந்தா ஏன் கல்யாணம் பண்ணனும்.. நான் அங்க போறேன்.. என்னால சமாளிக்க முடியும்.. எல்லா வகைகளையும் எனக்கு துணையாக லதா இருக்கா.. அங்க இருக்கிறவங்களும் மனுசங்க தானே என்னை கடிச்சா திண்ணுற போறாங்க..?.. ” கணவனிடம் கூறிவிட்டு அம்மா பாட்டி மாலதி என அனைவரிடமும் கண்ணீரோடு கூறி விடை பெற்றாள்..
அன்பழகன் கையைப் பிடித்த பாண்டி “ நீங்கதான் மச்சான்.. இனி இந்த வீட்டுக்கு எல்லாமே.. நீங்க தான் இங்கேயும் பார்த்து உங்க தங்கச்சி மீனாட்சியையும் அங்க போய் பார்த்துக் கொள்ளணும்.. ” என்றான்..
அவனைத் தொடர்ந்து மீனாட்சி பேசினாள்..
“ அண்ணா அம்மா பாட்டியை பார்த்துக்கோ.. அம்மா கிட்ட சொல்லி இருக்கேன்.. கூடிய சீக்கிரம் அண்ணாக்கு பொண்ணு பார்க்க சொல்லி.. அடுத்து நான் இங்க வருவது உனக்கு பொண்ணு பாக்குற ஃபங்ஷன் அடுத்த கல்யாணம் பண்ற பங்ஷனுக்குமா தான் இருக்கணும்.. நீயும் கவனமா இரு உன்னையும் பாத்துக்கோ எல்லாரையும் பார்த்துக்கோ.. ” என்றாள்..
கண்ணில் கண்ணீர் அருவியாக கொட்டியது..
அன்பழகன் இந்த வீட்டில் ஒரு மூத்த ஆண் பிள்ளை போலவே அனைவரும் அவனை நடத்தினார்கள்..
அவளும் எந்த பாகுபாடும் இன்றி அண்ணா என்று அழைப்பாள்..
அவள் கண்ணை துடைத்து விட்டு “ என்ன பாப்பா நீ இதை சொல்லனுமா?.. எதுனாலும் அண்ணாக்கு ஒரு போன் போட்டு.. உடனே வந்து அங்க இருக்கிறவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.. உனக்கு அங்க இருக்க கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றால் நீ சொல்லு நான் வந்து இங்கே அழைச்சிட்டு வந்துடுவேன்.. ” என்று தங்கையிடம் பேசிவிட்டு பாண்டி பக்கம் திரும்பினான்..
“ இங்க பாருங்க மாப்பிள்ளை.. நீங்களா வந்து பொண்ணு கேட்டீங்க.. நீங்களா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறீங்க.. எங்க மீனு குட்டிக்கு சின்னதா ஏதாவது ஒரு வருத்தம் மாதிரி ஒரு சம்பவம் உங்க வீட்டுல நடந்தாலும் அங்க யாரையும் நான் விடமாட்டேன்.. நீங்க தினமும் மீனாட்சிக்கு பேசணும் கால் பண்ணனும்.. மீனாட்சி நல்லபடியா நீங்க பார்த்துக் கொள்ளணும்.. சந்தோசமா போய்ட்டு வாங்க.. ” என்றான்..
சொந்தங்கள் இல்லாதவர்களுக்கு தான் ஒரு சொந்தம் கிடைத்தால் அதன் அருமை தெரியும்..
அன்புக்கும் அப்படித்தான்.. இவர்கள் கிடைத்தவுடன் அம்மா அப்பா பாட்டி தங்கை என சொந்தத்தை அவனே உருவாக்கிக் கொண்டான்..
அனைவருக்கும் கை காட்டி விட்டு டாக்ஸியில் ஏறி இருவரும் புறப்பட்டார்கள்..
கல்யாணம் நடந்த அன்று அங்கே சென்று விளக்கேற்றியது.. உடனே அவளை அழைத்து கொண்டு திரும்பி வந்து விட்டான்.. அதனால் மீண்டும் அந்த வீட்டிற்கு செல்ல நினைத்தால் அவள் மனதிற்குள் ஏதோ பட படவென்று இருந்தது..
இந்த சின்ன வயதில் சொந்தத்தை பிரிந்து மீண்டும் புது சொந்தத்தை உருவாக்குவது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை…
அனைவரும் அவளை நம்புவது போன்று அவளும் அவளை நம்பினாள்..
அவர்களை அவர்கள் நம்பினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்..
அரை மணி நேரத்தில் அவர்களது வீட்டின் முன்பு டாக்ஸியை நிறுத்தினான் பாண்டி..
லதா மீண்டும் இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்..
பாண்டிக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளதால் அவர்கள் வந்ததும் அந்த சிறு ஹாலில் நின்ற அனைவர் முன்பும் மீனாட்சி நிறுத்தி “ இவங்கதான் என்னோட மனைவி மீனாட்சி செந்தூரபாண்டியன்.. அம்மா இவளை நீங்க நல்லபடியா பார்த்துக் கொள்ளணும்..
இந்த வீட்ல உன்ன நம்பி தான் மீனாட்சியை விட்டுட்டு போறேன்.. அவ கண்கலங்குற மாதிரி மன வருத்தப்படுற மாதிரி இந்த வீட்ல எது நடந்தாலும் எனக்கு உடனே அது எந்த நேரமா இருந்தாலும் தகவல் உன்கிட்ட இருந்து வரணும் லதா.. சொன்னது புரிஞ்சு தானே..
நீங்க உடம்பு நோகாம சந்தோஷமா சாப்பிட்டு ஊருக்குள்ள நல்லபடியா இருக்கணும்னா இங்கே என் மீனாட்சி நல்லபடியா இருக்கணும்.. அப்புறம் உங்க கைல முடிவு.. ” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்து கொண்டு பண்ணையாரை பார்க்க சென்றான்..
அங்கே சென்று அவர்களிடம் ஆசி பெற்று அவரிடமும் இன்று தான் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதை பற்றி கூறிவிட்டு.. அவனை இந்த அளவிற்கு உழைப்பதற்காக உதவி செய்து டாக்ஸியும் கொடுத்து தற்போது வெளிநாட்டிற்கும் அனுப்ப உதவி செய்த அவருக்கு நன்றி கூறினான்..
வாடகை டாக்ஸிக்கான திறப்பை அவரது கையில் ஒப்படைத்தான்..
அங்கிருந்து அவர் இன்னும் ஒரு டிரைவர் மூலம் அவர்களை டாக்ஸியில் ஏற்றி அனுப்பி விட்டு பாண்டியை அழைத்துக்கொண்டு மதுரை ஏர்போர்ட்டில் விட்டு விட்டு வரும்படி அனுப்பி வைத்தார்..
வீட்டுக்கு வந்து அங்கே இருந்த ஓர் அறையில் அவளுடன் அருகே அமர்ந்து அவளது கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அவளை தோளில் சாய்த்துக் கொண்டான்..
“ என் கண்ண பாருடி மீனம்மா.. நான் உன் கூட இப்படி நெருக்கமா இருக்க போறது கொஞ்ச நேரம் தான்.. ரொம்ப கவனமா இருக்கணும்.. அவங்களுக்கு தனியா உனக்கு தனியா பணம் போடுவேன்.. உனக்கு போடுற பணத்துல உனக்கு தேவையானது எல்லாம் வாங்கி உனக்கு என்ன பிடிக்குதோ அதை சாப்பிட்டு உனக்கு படிப்புக்கு தேவையானதை வாங்கி நல்லபடியா சந்தோசமா இருக்கணும்.. எனக்கு எப்ப வேலை டைம் எப்ப ஃப்ரீ டைம் என்று பார்த்து பிரீ டைம்ல நான் உனக்கு கால் பண்ணுவேன். அந்த டைம் நீ ஃப்ரீயா இருந்தா கட்டாயம் என்னோட தினமும் பேசணும்.. அழக்கூடாது உனக்கு இங்க என்ன கஷ்டம் என்றாலும் உடனே எனக்கு தெரியப்படுத்தணும். மறைக்கணும்னு நினைச்சா என்னோட இன்னொரு பொல்லாத கோபமான முகத்தை நீ பார்க்க வேண்டி வரும்… உனக்கு மட்டும் தான் இந்த பாண்டி ரொம்ப சாதாரண அமைதியான ஆள்.. அதுவும் நீ என்கிட்ட ஏதும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லும் வரைதான்..” என்று கூறி அவளது நெற்றியில் முத்தம் வைத்து குளிப்பதற்காக துண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்..
நேரமும் காலமும் ஓடி மறைந்தது போன்று இருந்தது இதோ அவன் தயாராகி பெட்டியுடன் டாக்ஸியில் ஏறினான்..
தன்னிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று அவன் கூறியதை அவள் காதில் கேட்டாளா?..இல்லையா..? என்று தெரியாது..
அவன் பிரிவை நினைத்து கவலைப்படாமல் அவன் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு இருந்தால் எதிர்காலத்தில் அவளுக்கு நடக்க இருக்கும் அனைத்தையும் அவனிடம் கூறி இருப்பாள்…
அதனால் அவளுக்கு வரும் துன்பத்தை எதிர் நோக்க கூடிய சக்தியோடு இருந்திருப்பாள்…
அவளிடம் ஆயிரம் பேசினான்.. அதில் ஒரு வார்த்தையாகத்தான் அவள் எடுத்துக் கொண்டாள்.. அதை முக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை…
அவளுக்கு கையை ஆட்டிவிட்டு அவள் கையில் ஒரு மாதத்திற்கான பணத்தினையும் நேரத்தோடு ஒப்படைத்து விட்டு வீட்டிலும் அனைவரிடமும் சொல்லி டாக்ஸியில் ஏறி சென்று விட்டான்..
அவள் அருகே வந்து நின்ற லதா “ அழாதடி அண்ணா போய் கால் பண்ணும்…நீ அழுதா அவன் எப்படி நல்லபடியா போய் சேருவான்…. வா உள்ள போகலாம்.. ” என்று தோழியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்…
அவன் மனம் மிகவும் ரணமாக வலித்தது..
ஏன் தான் அவளை திருமணம் செய்து கொண்டோம்.. இப்பொழுது அவளின் பிரிவு தன்னை வாட்டுகிறது..
அவன் படும் கஷ்டமும் வலியும் அவளுக்கும் இருக்குமா?.. என்று அவனுக்கு தெரியாது ஏனென்றால் பத்து நாட்களாக தான் அவளுக்கு தன்னை தெரியும்..
எத்தனை வருடங்களாக அவனது மனதில் அவளை சுமக்கிறான்.. என்று அவனுக்கு தான் தெரியும்..
மதியை அழைத்து ஏர்போர்ட்டுக்கு வரும்படி கூறினான்..
பாண்டியும் போய் சேர மதியழகன் அங்கே காத்திருந்தான்..
“ வா மச்சான்.. எல்லாம் ரெடியா இருக்கா?..” என்றான் மதி..
“ எல்லாம் ரெடியா இருக்குடா..”
“ என்ன மச்சி முகமும் வாடி இருக்கு.. குரல் சோர்வா இருக்கு.. புது மாப்பிள்ளைக்கு தங்கச்சியை விட்டுட்டு போக கஷ்டமா இருக்கோ?. ” என்றான்..
“ மச்சான் கடுப்ப கிளப்புற?.. ஆமா எனக்கு அவள விட்டுட்டு போக விருப்பமே இல்ல… ஆனா கடமை என்னை அழைக்குது..அதனால போறேன்.. இது தானே இந்த வாயால சொல்லணும் நீ எதிர் பார்த்த.. நானே சொல்லிட்டேன்.. கேட்டுக்கோ என் பொண்டாட்டிய விட்டுட்டு போக எனக்கு விருப்பமே இல்ல மச்சான்… அவ கூடையே ஒட்டிக்கிட்டு அவளை தூக்கி மடியில வச்சிக்கிட்டு கொஞ்சிக்கிட்டே இருக்கணும் போல ஆசையா இருக்கு. என் பொண்டாட்டிய புடிச்சிருக்கு அவளை விட்டுப் போக விருப்பம் இல்லைன்னு வாயை விட்டு சொல்றதுக்கு எனக்கு என்னடா வெட்கம்… ” என்றான்..
“ நீ தான் டா மச்சான் யூத்… அப்படியே காதல் ரசத்தை முகத்தில் புழிய விடுற பாரு… அங்க நிக்கிற டா மச்சான் நீ.. “என்றான். மதி..
“ போடா டேய்.. இப்ப நீ அடி வாங்க போற பாரு.. நேரம் இருக்கும்போது வீட்டுக்கு கொஞ்சம் போய் மீனாட்சியை பாத்துக்கோ.. பிரிய மனசு இல்ல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆனா பிரிய வேண்டிய சூழ்நிலை.. எல்லாரையும் நம்பிதான் டா நான் அவளை விட்டுட்டு போறேன்.. என்னை யாரும் ஏமாத்திடாதீங்க..” என்று விமானத்திற்கான செக்கிங் அழைப்பு வந்ததும் நண்பனை கட்டி தழுவி விட்டு இருவரும் பிரிந்து பாண்டி உள்ளேயும் மதி வெளியையும் சென்றார்கள்..
லதா வின் அருகில் அந்த அறையில் அமர்ந்திருந்தாள் மீனாட்சி..
நண்பனை மாமியாரை தங்கையை என அனைவரையும் நம்பி தனது மனைவியை விட்டுச் சென்றவன் அந்த இறைவனிடம் ஒரு முறை வேண்டிக் கொள்ளவில்லை..
நான் வரும் வரை நீ எனது மனைவிக்கு துணையாக இரு.. என்று ஒரு வேண்டுதல் வைத்திருந்தால் ஒரு வேலை அந்த மீனாட்சி தேவி இந்த மீனாட்சியை பார்த்திருப்பாரோ என்னவோ..
சிலர் இறைவனை அதிகமாக நம்புவர்.. மனிதர்களை நம்ப மறுப்பர்.. சிலர் மனிதர்களை அதிகமாக நம்புவர்.. இறைவனை நம்ப மறுப்பர்..
அப்படி தான் பாண்டியும்..இரண்டாம் வகை..
மனைவியை இப்படி சிறு பெண்ணாக திருமணம் முடித்து மூன்று நாட்களில் விட்டுச் செல்கிறான்..
குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்று தன் மனைவி தான் வரும்பொழுது திக்கற்ற திசையில் இருப்பாள் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை கடமையாவது மண்ணாவது தானும் தன் மனைவியும் என்று சுயநலமாக வாழ்ந்திருப்பானோ என்னவோ…
யாருக்காக உழைக்க வேண்டும்.. என்று தன் சொந்த நாடு மற்றும் காதல் மனைவியை விட்டு பிரிந்தானோ அவர்கள் அவனுக்கு உண்மையாக இருக்க போவதில்லை..
பார்க்க முடியாத கோலத்தில் தோற்றத்தில் தன் மனைவியை பார்க்க போகிறோம்.. அதன் பிறகு தான் இந்த உலகில் வாழவே தகுதி இல்லை.. என்று தன்னை தானே வெறுப்போம் என்று அவனுக்கு தற்பொழுது தெரியவில்லை..
இதோ செக்கிங் அனைத்தையும் முடித்துவிட்டு அவனது இடத்தில் போய் பிளைட்டில் அமர்ந்தான்..
இயந்திர பறவையும் பறக்க ஆரம்பித்தது வானில்..
அதே போன்று அவனது வாழ்க்கையும் கேட்பார் இல்லாமல் திக்கற்ற வானில் பறக்குமோ..!
“ ஏய் இந்தாடி மினுக்கி.. என் மூத்த பொண்ண விட வயசு கம்மி உனக்கு… இந்த வயசுல வெட்கங்கெட்ட தனமா கல்யாணம் கேக்குதோ?.. அவன் தான் வெக்கமில்லாம கல்யாணத்துக்கு கேட்கிறான்னா நீயும் பல் இளிச்சுக்கிட்டு சம்மதம் சொன்னியாக்கும்..
அவனையே சம்பளம் இல்லாம உழைச்சு போடுற ஒரு வேலைக்காரனாக தான் நான் பார்க்கிறேன்.. இதுல மருமக தான் ஒரு கேடு.. போ போய் நைட்டுக்கு எனக்கு சப்பாத்தி பண்ணிடு.. என் பொண்ணுங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு அவங்களுக்கு புடிச்சதை பண்ணி கொடு..
மெஸ்காரி தானே நீ.. வித விதமா சமைக்க தெரிந்திருக்குமே.. அந்த கை வித்தையை எங்க கிட்ட காட்டி நல்ல பேர் எடுக்க பார்..” என்று கூறி விட்டு மாலை நேர சீரியல் பார்க்க ஆரம்பித்தார் லட்சுமி..
லலிதா பாண்டி தனக்கு பூரியும்..
லீலா பாண்டி தனக்கு தோசையும்..
வேண்டும் என கேட்டார்கள்..
அவள் சமைக்கப் போகிறாள் என்று தெரிந்ததும் கேஸ் அடுப்பை கேஸ் வராத அளவு லலிதா பாண்டி செய்து விட்டாள்..
லதா பாண்டி தாயை தற்பொழுது எதிர்த்து பேசினால் அதுவும் மீனாட்சி தலையில்தான் போய் முடியும் என்று தாயின் குணத்தை தெரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்..
கணவன் விட்டுச் சென்ற முதல் நாளே மீனாட்சிக்கு அமோகமாக இருந்தது..
அவன் மீண்டும் வரும் போது.. அத்தனை வருடங்களில் அவளது வாழ்க்கை இதை விட பிரகாசமாக இருக்குமோ யார் அறிவர்..