சென்னையின் சுற்று வட்டாரத்தில் அமைந்த பூவிளை என்ற அழகாக கிராமம். அதிகாலை ஐந்து மணி…… என்ன தான் சூரியனை மேகம் மறைக்க முயன்று கொண்டிருந்தாலும் வெற்றி பெற்ற சூரியன் மெதுவாக மேலே எழும்பினான்.
பறவைகள் தங்களின் கூட்டணியோடு இறை தேடப் பறந்தன. புல் வெளிகள் மேலே பாரமாய் இருந்த பனித்துளிகள் மிக மெதுவாக விடை பெற ஆரம்பித்தன. யாவரும் விரும்பும் இத்தகைய அழகான காலைப் பொழுதில் காதலனைக் கண்ட காதலியின் முகம் போல வானம் சிவந்து போய் இருந்தது.
தன்னுடைய பட்டன் செல்லில் இருந்து வந்த அலாரம் சத்தத்தில் கண் விழித்தான் சிவன். எழுந்து அமர்ந்தவன் விடிந்தும் விடியாமல் இருந்த அந்த காலை வேளையை ஒரு நொடி ரசித்துப் பார்த்தான். இது அறுவடை காலம் என்பதால் தோட்ட வீட்டில் தான் காவலுக்கு படுத்திருந்தான்.
மெதுவாக தோட்டத்தில் இறங்கியவன் அங்கே இருந்த வேலைகளைக் செய்ய ஆரம்பித்தான். அவனது கரங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் நினைவுகள் என்னமோ வீட்டைப் பற்றியே இருந்தது.
பார்வதி கிருஷ்ணன் தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் இளவரசன், அவனுக்கு அடுத்து சிவன், அதற்கு அடுத்து செல்வி, மதியழகி, வெண்ணிலா என்ற மூன்று தங்கைகள். இப்போது சிவன் தான் இந்த குடும்பத்தை தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இப்போது இருபத்தி ஏழு வயது.
பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிவன் மற்ற அனைவரையும் போல சுற்றித் திரியும் பட்டாம் பூச்சி. ஆனால் எப்போது அவனது அண்ணனும் தந்தையும் அவர்களை விட்டுச் சென்றார்களோ அப்போதில் இருந்து சிவனுக்கு பொறுப்பு வந்து விட்டது. அப்போதில் இருந்தே அவன் கனவுகளும் சந்தோசங்களும் அவனை விட்டுச் சென்று விட்டது.
ஆறு வருடங்களுக்கு முன்பு….. சிவனின் அண்ணன் இளவரசன் சென்னையில் அமைந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். படிக்கும் போதே அவன் ஒரு பெண்ணை விரும்பினான். குடும்ப சூழ்நிலை காரணமாக அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தான்.
தந்தை விவசாயம் செய்து கொண்டிருக்க தம்பி தங்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு வீட்டின் பொறுப்பு புரிந்தது தான். ஆனால் காதல் என்ற வியாதி அவனைத் தாக்குகையில் அவனால் மாட்டிக் கொள்ளத் தான் முடிந்தது. காதல் ஒரு புறம் இருந்தாலும் குடும்பத் தரத்தை உயர்த்த நன்றாக படித்தான். படிக்கும் போதே கவர்ன்மெண்ட் பரீட்சைகளுக்கும் படித்துக் கொண்டிருந்தான்.
கல்லூரிப் படிப்பு முடித்ததும் பேங்ளூரில் அவனுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி இருந்த போது ஒரு நாள் ஊருக்கு வந்தவன் அவனது இரண்டு மாத சம்பளப் பணத்தை அப்படியே அவனுடைய தாய் தந்தையிடம் கொடுத்தான். அதில் பெற்றவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அது தான் முதலும் கடைசியுமாக அவன் அவர்களுக்கு கொடுத்த பணம்.
அவன் தான் இந்த குடும்பத்தையும் தம்பி தங்கைகளையும் தாங்குவான் என்று பார்வதி மற்றும் கிருஷ்ணன் இருவரும் முழுவதுமாக நம்பி இருந்தார்கள். அதை அவனிடம் சொல்லவும் செய்தார்கள். அப்போது சிவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தான்.
“உன்னைத் தான் பா மலை போல நம்பி இருக்கிறோம். நீ தான் உன் தம்பி தங்கைகளை பாத்துக்கணும்”, என்று இளவரசனிடம் சொன்னார் கிருஷ்ணன். அவனுடைய காதலி பற்றி வீட்டில் சொல்ல எண்ணியவன் தந்தை அவ்வாறு சொல்லவும் அதைச் சொல்லாமல் “நான் உழைக்கிறதே உங்களுக்காக தானேப்பா? கண்டிப்பா எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன்”, என்றான்.
ஆனால் அடுத்த நாள் அவனுக்கு ஒரு போன் வந்தது. உடனே வீட்டில் இருந்து கிளம்பி விட்டான். நண்பனின் திருமணத்துக்கு சென்று விட்டு அப்படியே பேங்ளூருக்கு சென்று விடுவேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பியவன் அடுத்த நாள் வீட்டுக்கு போனில் அழைத்தான்.
சிவன் தான் போனை எடுத்து “சொல்லு இளா”, என்றான். அவன் அப்படிச் சொன்னால் “அண்ணான்னு சொல்லு டா”, என்று சண்டைக்கு வருவான் இளவரசன். இன்றும் அதை எதிர் பார்த்து சிவன் அமைதியாக இருக்க இளாவின் அமைதி சிவனுக்கு வியப்பாக இருந்தது.
“இளா லைன்ல இருக்கியா?”, என்று மீண்டும் கேட்டான்.
“அம்மா அப்பா இல்லையா டா?”
“அப்பா இப்ப தான் வயல்ல இருந்து வந்தாங்க. அம்மா டீ போடுறாங்க. ஏன் அம்மா அப்பா கிட்ட பேசணுமா?”
“ஆமா சிவா, அப்பா கிட்ட போனைக் கொடு”, என்று சீரியஸான குரலில் சொல்ல உடனே கிருஷ்ணனிடம் சென்று “அண்ணா உங்க கிட்ட பேசணுமாம் பா”, என்று நீட்டினான். அதை வாங்கி “சொல்லு இளவரசா, பத்திரமா பேங்ளூர் போய்ட்டியா கண்ணு?”, என்று கேட்டார்.
“ஆமா பா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“என்ன பா? சொல்லு”
“அது வந்து பா….”
“அப்பா கிட்ட என்ன தயக்கம்?”
“எனக்கு…. நான் ஒரு பொண்ணை…. அப்பா நான் கண்மணின்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பா…. அவளுக்கு…..”, என்று அவன் சொல்லும் போதே போனை கட் செய்த கிருஷ்ணன் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார்.
“அப்பா… என்ன ஆச்சு?”, என்று சிவன் அலறிய அலறலில் மொத்த குடும்பமுமே அங்கு வந்து விட்டது.
“ஏங்க என்ன ஆச்சு? சிவா ஒரு ஆட்டோவை வரச் சொல்லு. ஆஸ்பத்திரி போகலாம்”, என்று சொன்ன பார்வதி கணவரை தாங்கிக் கொண்டாள்.
“நாம மோசம் போய்ட்டோம் பார்வதி. இளா ஏதோ ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். நம்ம பையன் இனி நமக்கு இல்லை. உங்க எல்லாரையும் அவன் நல்லா பாத்துக்குவான்னு மலை போல நம்பி இருந்தேனே? ஆனா இப்படி மோசம் பண்ணிட்டு போய்ட்டானே? ஐயோ நான் மூணு பொம்பளை பிள்ளைகளை வச்சிருக்கேனே? அவங்களை எப்படிக் கரையேத்தப் போறேன்?”, என்று கதறும் போதே அவர் கண்கள் சிவனைப் பார்த்தது.
அவன் ஓடி வந்து அவரது கரங்களைப் பற்றிக் கொண்டான். அடுத்த நொடி கண்களை மூடிக் கொண்டவர் தான், அதன் பிறகு விழிக்கவே இல்லை. சிவனின் பொறுப்பில் குடும்பத்தை விட்டுவிட்டுச் சென்று விட்டார். செல்வி, மதி, வெண்ணிலா மூவரும் தந்தையைக் கட்டிக் கொண்டு கதறி அழுதார்கள். சிவன் தான் மூவரையும் அணைத்துக் கொண்டான்.
மூத்த மகனின் திருமணம், கணவரின் இறப்பு என பார்வதி துவண்டு போனாலும் கணவனின் இறப்புக்கு காரணமாக இருந்த இளவரசனுக்கு தந்தை இறந்ததைப் பற்றிச் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டாள்.
அன்னையை மீறி யாரும் அவனுக்குச் சொல்ல வில்லை. இளா மீண்டும் மீண்டும் வீட்டுக்கு அழைக்க போனோ அனைத்து வைக்கப் பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் கோபத்தில் பேசாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிய இளாவும் ஒரு வாரம் கழித்து நேரில் சென்று சமாதானம் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் அவன் ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு போன போது வீடு பூட்டி இருந்தது. நேராக எதிர் வீட்டுக் கதவைத் தட்டினான். சுந்தரி தான் வந்து கதவைத் திறந்தாள். இரண்டு குடும்பமும் மிகவும் நெருக்கம்.
அவனைக் கண்டதும் அவள் முறைத்துப் பார்க்க “சுந்தரி மா, வீட்ல யாரையும் காணும்? எங்க போனாங்க?”, என்று கேட்டான் இளவரசன்.
“மனுசனா டா நீ? இப்படி உன் குடும்பத்தையே சிதைச்சிட்டியே? என் முன்னால நிக்காத. போடா இங்க இருந்து”
“மா”
“என்னை அப்படிக் கூப்பிடாதே? உன்னை கிருஷ்ணன் மாமா எப்படி நம்பினார்? இப்படி அவர் உயிரை காவு வாங்கிட்டியே?”
“என்ன சொல்றீங்க?”
“மாமா செத்துட்டார் டா. இப்ப உனக்கு சந்தோஷம் தானே? எல்லாரும் உன் அப்பாவுக்கு காரியம் பண்ண போயிருக்காங்க. ஆமா இப்ப நீ எதுக்கு வந்த? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே? பார்வதி உன் முகத்துல கூட முழிக்க மாட்டா. எனக்கே உன்னைப் பாக்கப் பிடிக்கலை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
உடைந்து போய் திண்ணையில் அமர்ந்தான் இளவரசன். தந்தை இறந்தது அவனுக்கு பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் இறந்தது தன்னால் தான் என்று தெரிந்ததில் அவன் நிம்மதி அவனை விட்டுச் சென்றிருந்தது.
தவறு செய்து விட்டோம் என்ற உறுத்தலின் காரணமாக யாரையும் பார்க்காமல் திரும்பி ஊருக்கு போனவனை அவன் மனைவி தான் தாங்கிக் கொண்டாள். அதற்கு பின்னர் அவன் ஊர் பக்கமே செல்ல வில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவானாம்? அவர்களுக்கு உதவ அவனுக்கு ஆசை தான். ஆனால் அதை பார்வதி ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று அவனுக்கு தெரியுமே?
வீட்டில் உள்ளவர்களும் அவனை மறந்தே போனார்கள். ஆனால் மனதுக்குள் அவன் மீது அனைவருக்கும் இப்போது வரைக்கும் கோபம் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இளவரன் எங்கு இருக்கிறான், அவன் விரும்பிய பெண் யார்? அவனுக்கு எத்தனை பிள்ளைகள் என்று எல்லாம் தெரியாது.
மூத்த மகனும் ஓடிப் போய், கணவனும் இறந்து மூன்று பெண் பிள்ளைகளையும் பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி இருந்த சிவனையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று வெகுவாக தடுமாறினாள் பார்வதி.