பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டாலும் சில நேரம் கஷ்டமாக தான் இருந்தது. தோட்டத்தில் போதிய வருமானம் வந்ததால் ஓரளவுக்கு சமாளித்தார்கள். ஆனாலும் சில நேரம் பஸ்ஸுக்கு கூட காசு கையில் இருக்காது. அங்கே இங்கே என்று கடன் வாங்கி அதை அடைத்து என்று சமாளித்தாள் பார்வதி. பிள்ளைகளும் வயல் மற்றும் தோட்டத்தில் பார்வதிக்கு உதவினார்கள்.
சிவன் தன்னுடைய கனவு படிப்பை விட்டுவிட்டு ஆர்ட்ஸ் காலேஜில் கணிதப் பிரிவு எடுத்துப் படித்தான். பார்வதி பணப் பிரச்சனையில் கஷ்டப் பட்டாலும் மனதளவில் மிகவும் கஷ்டப் பட்டது சிவன் தான். இளா ஓடிப் போனதில் இருந்து பார்வதி அடிக்கடி “நீயும் என்னையும் என் பிள்ளைகளையும் அவனை மாதிரியே விட்டுட்டு போய்ருவியா டா?”, என்று கேட்கும் போது அவனுக்கு உயிரே போவது போல இருக்கும். அடிக்கடி அந்த சித்திரவதையை அனுபவித்திருக்கிறான். அன்னையை சமாதானம் செய்வதற்குள் வெகுவாக திணறிப் போவான். பார்வதியை சமாதானம் செய்பவனின் மனதில் பாரம் ஏறிக் கொள்ளும்.
அன்னையின் பேச்சில் திருமணம், பெண், காதல் என்ற எண்ணங்களை முற்றிலும் தவிர்த்தான். கல்லூரியில் அவனிடம் வழியும் பெண்களை ஒரு முறைப்பிலே தள்ளி நிற்க வைக்க பழகிக் கொண்டான்.
சில நேரம் அன்னையின் பேச்சு, மூன்று தங்கைகளை எப்படி கரை சேர்க்க என்ற கவலை, எதிர்காலத்தில் என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி என அனைத்தும் சேர்ந்து அவனை சோர்ந்து போக வைக்கும். அப்போதெல்லாம் அவனுக்கு பக்கபலமாக நின்றது அவனது நண்பன் கருப்பசாமி தான். அவனது பட்டப் பெயர் கருப்பட்டி.
சிவனின் எதிர் வீடு தான் கருப்பட்டியின் வீடு. இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் பள்ளியில் கல்லூரியில் ஒன்றாக தான் படித்தார்கள். வயது ஏற ஏற அவர்களின் நட்பு இன்னும் இறுகிப் போனது.
கருப்பட்டியின் தந்தை அவன் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார். அவனது தாய் சுந்தரி தான் அவனை வளர்த்தாள். கணவன் இறந்த போது பார்வதிக்கு உறுதுணையாக இருந்தது சுந்தரி தான். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சுந்தரி பக்கவாதத்தில் படுத்து விட்டாள். அவளை கருப்பட்டி தான் பார்த்துக் கொள்கிறான். எல்லாமே படுக்கையில் தான் என்று ஆன பிறகு மகனுக்கு பாரமாக இருக்கிறோம் என்ற பரிதவிப்பில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள்.
சிவன் வீட்டில் இருந்து தான் கருப்பட்டிக்கும் அவனது அம்மாவுக்கும் உணவு போகும். இரவில் சுந்தரியை கருப்பட்டி பார்த்துக் கொண்டாலும் பகலில் பார்வதியும் சிவனின் தங்கைகளும் அவளைக் கவனித்துக் கொள்வார்கள்.
சிவனுக்கு பிலிம் டெக்னாலஜி படித்து திரைப்படத் துறையில் பெரிய டேரெக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் கனவு அப்படியே சிதைந்தது. கருப்பட்டியும் சிவனும் டிகிரியை நல்ல படியாக முடித்தார்கள். இருவருக்கும் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்க வில்லை. நொந்து போனார்கள். அப்போது பார்வதி அவர்களை ஏதாவது தொழில் செய்யச் சொன்னாள்.
தொடங்குறதே தொடங்குறோம் தனக்கு பிடித்ததாக செய்வோமே என்று எண்ணிய சிவன் நண்பனிடம் அது பற்றி கேட்டான். கருப்பட்டியும் சரி என்று சொல்லவே பார்வதி மற்றும் சுந்தரியின் நகைகளை அடகு வைத்து ஒரு ஸ்டூடியோவை அவர்கள் ஊரில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆரம்பித்தார்கள்.
மச்சான் மாப்பிள்ளை என்று பேசிக் கொண்டாலும் அந்த ஸ்டூடியோ அவர்கள் இருவர் பெயரில் தான் இருக்கிறது. வரும் லாபத்தை சரி பாதியாக பங்கு போட்டுக் கொள்வார்கள். சிவன் தன்னுடைய வருமானத்தை பார்வதியிடம் மொத்தமாக கொடுப்பான். கருப்பட்டி தன்னுடைய வருமானத்தை சுந்தரி மற்றும் பார்வதிக்கு சரியாக பிரித்துக் கொடுப்பான்.
பார்வதி மறுக்க தான் செய்வாள். ஆனால் “நீங்க இந்த பணத்தை வாங்கலைன்னா நாங்க உங்க வீட்டு சாப்பாடை சாப்பிட மாட்டோம்”, என்று சொல்லி அவளை சரிக் கட்டி இருந்தான் கருப்பட்டி. அது மட்டும் அல்ல செல்வி, மதி, வெண்ணிலா மூவரும் நோட், புக் என்று எது கேட்டாலும் சிவன் மற்றும் கருப்பட்டி இருவருமே வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் மூவருக்கும் கருப்பட்டியும் ஒரு அண்ணன் தான்.
அந்த ஊர் மற்றும் சுற்றி இருந்த ஊர்களில் நடக்கும் விசேசங்களில் அவர்களை தான் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அழைப்பார்கள் என்பதால் அவர்கள் வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்தது.
பழைய விஷயங்களை எண்ணிய படியே தோட்ட வேலைகளை முடித்திருந்தான் சிவன். பின் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்து முடித்து வீட்டைப் பார்த்து நடந்தான். அவன் வீட்டுக்கு வந்த போது அவன் கண்கள் எதிர் வீட்டின் மீது விழுந்தது. சுந்தரிக்கு எழுந்து நடக்க முடியாததால் பார்வதி தான் அவர்களின் வீட்டுக்கும் முத்தம் தெளித்துக் கொண்டிருந்தாள்.
கருப்பட்டியின் வண்டி வெளியே இல்லை என்பதைக் கண்டவன் “ஸ்டூடியோவை திறக்க போய்ட்டான் போல?”, என்று எண்ணிக் கொண்டு அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடைய வீட்டுக்குள் சென்றான்.
அவர்களின் வீடு மூன்று அறைகள், ஒரு சமையல் அறை, நடுவே வானவெளி அதைச் சுற்றி வாரண்டா என்ற படி அழகாக இருந்தது. முன்பு அனைவருக்கும் பொதுவாக வீட்டின் பின் பக்கம் தான் பாத்ரூம் இருந்தது. ஆனால் ஒரு வருடத்துக்கு முன்பு தான் பின் பக்க வீட்டுச் சுவரை இடித்து மூன்று அறைகளுக்கும் தனித் தனியாக பாத்ரூம் கட்டி இருந்தான் சிவன்.
பார்க்க சிறிய வீடு போல இருந்தாலும் அங்கே எல்லா வசதிகளும் இருந்தது. மூன்று அறைகளில் ஒன்று சிவனின் அறை. இன்னொரு அறையில் மதியும் வெண்ணிலாவும் இருப்பார்கள். மூணாவது அறை செல்வியுடையது. அங்கே தான் பார்வதியும் படுத்துக் கொள்வாள். மதியும் வெண்ணிலாவும் ஒற்றுமையாக இருப்பார்கள். செல்வி வேண்டும் என்றே பிடிவாதம் பிடிப்பாள் என்பதால் அவளுக்கு தனியறை.
ஒரு வருடம் முன்பே செல்விக்கு பக்கத்து ஊரில் உள்ள செந்தில் என்பவனுடன் திருமணம் முடிந்திருந்தது. சிவன் தான் திருமணத்தை நல்ல படியாக நடத்தி முடித்திருந்தான். அந்த திருமணத்துக்கு கருப்பட்டி தான் வீடியோ கிராபர். இப்போது செல்வியை வளைகாப்புக்காக பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். பூட்டி இருந்த இரண்டு அறைகளையும் பார்த்து விட்டு சிறு சிரிப்புடன் தன்னுடைய அறைக்குச் சென்றான் சிவன்.
ஒரு பையை எடுத்து ஒரு செட் உடை, மற்ற தேவையான பொருள்கள் எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான். “இவ்வளவு சீக்கிரம் கிளம்பனுமா சிவா?”, என்று புன்னகையுடன் கேட்ட படி அவன் அறைக்குள் வந்தாள் பார்வதி.
தாயின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தான். சாதாரண காட்டன் புடவையில் தெய்வீக அழகுடன் நின்ற தாயைக் கண்டு புன்னகைத்த சிவன் “ஆமா மா, மதுரைல ஒரு கல்யாணம்னு சொல்லிருந்தேன்ல? வீடியோ கவரேஜ் பண்ண அட்வான்ஸ் கொடுத்திருந்தாங்க. மதியம் ரெண்டு மணிக்கு அங்க இருக்கணும் மா. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்”, என்றான்.
“வேண்டாம் மா, மதியம் அங்கயே போய்ச் சாப்பிட்டுக்குறேன். இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டு போனா டிராவல் பண்ண ஒரு மாதிரி இருக்கும்”
“வெறும் வயிறாவா போவ?”
“வேணும்னா ஒரு டீ மட்டும் போட்டுத் தாங்க”
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குச் சென்ற பார்வதி அப்போது தான் பால்காரன் ஊத்தி விட்டு போன பாலைக் காய்ச்சி அவனுக்கு டீ போட்டு எடுத்து வந்தாள். கிளம்பி முடித்து பேகை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்த சிவன் நேராக சாமி ரூமுக்கு சென்று விழுந்து வணங்கினான். நெற்றியில் சிறு கீற்றாய் திருநீரை பூசி விட்டு வெளியே வந்தான். ஒரு ஓரத்தில் மாட்டி இருந்த அவனது தந்தை கிருஷ்ணன் புகைப்படத்தையும் வேண்டிக் கொண்டான்.
“இந்தா பா”, என்று அவன் கையில் டீ டம்ளரைக் கொடுத்தாள் பார்வதி.
அதை வாங்கிக் கொண்டு “அம்மா செடிகளுக்கு தண்ணி பாச்சிட்டேன். அறுப்புக்கு ஆள் சொல்லிட்டேன். நீங்க வேலை செய்ய வேண்டாம். வேலை ஏவினா போதும். என் ஃபிரண்ட் வாசுவை வரச் சொல்லிருக்கேன். அவன் எல்லாம் பாத்துக்குவான். நீங்க சம்பளம் மட்டும் எல்லாருக்கும் கொடுத்துருங்க. பணம் பீரோல இருக்கு. இப்ப போல உங்களை தனியா விட்டுட்டு போக தான் கஷ்டமா இருக்கு”, என்றான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.