எப்போதும் போல “படுத்தே கிடக்காத செல்வி, கொஞ்சம் தோட்டத்துல நட”, என்று அக்கறையாக விரட்டினார் மரகதம்.
“இந்தா செல்வி, கல்கியோட நாவல். நல்லா இருக்கும். என் பேரப் பிள்ளையும் தைரியசாலியா வரட்டும்”, என்று புத்தகத்தைக் கொடுத்தார் சேகர்.
“அண்ணி, இன்னைக்கு சிங்கம் படம் டிவில போடுறான் வாங்க பாக்கலாம்”, என்று அழைத்தாள் சிவானி.
“நீ வந்தது அவ்வளவு ஹேப்பியா இருக்கு டி”, என்று கொஞ்சினான் செந்தில். எல்லாம் நல்ல படியாக தான் போனது. ஆனால் மனதுக்குள் தவறு செய்த உறுத்தல் தான் செல்வியை ஆட்டிப் படைத்தது.
ஒரு வாரம் கழித்து செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். மயக்கத்தில் இருந்து கண் விழித்த செல்வி “எங்க வீட்டுக்கு சொன்னீங்களா?”, என்று கேட்டாள்.
“இன்னும் இல்லை டா. நீ என்ன மன நிலைல இருக்கேன்னு தெரியாம அவங்களை வரச் சொல்லி உன்னையும் கஷ்டப் படுத்தி அவங்களையும் கஷ்டப் படுத்த நான் விரும்பலை”, என்றான் செந்தில்.
“அண்ணனுக்கு கால் பண்ணிக் கொடுங்க. நான் பேசுறேன்”, என்று சொல்ல சந்தோஷமாக போனைப் போட்டு அவள் கையில் கொடுத்தான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க? செல்வி எப்படி இருக்கா? அன்னைக்கு பிள்ளையை அனுப்பிட்டோமேன்னு இப்ப வரைக்கும் நெஞ்சை அறுக்குது”, என்று சொன்ன சிவன் அதற்கு பிறகும் அந்த பக்கம் அமைதியாக இருக்கவும் “ஹலோ மாப்பிள்ளை, கேக்குதா?”, என்று கேட்டான்.
அவன் பேச்சில் நெகிழ்ந்து போய் இருந்த செல்வி “அண்ணே”, என்று அழைத்தாள்.
“செல்வி… செல்வி மா…”
“உனக்கு… உனக்கு மருமகன் பிறந்திருக்கான்”
“நிஜமாவா மா? ரொம்ப சந்தோஷமா இருக்கு டா ம்மா. நீ எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன். நீ எல்லாரையும் கூட்டிட்டு ஆஸ்பஸ்த்திரிக்கு வா”
“வரேன் டா. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்போம்”
“வரும் போது கண்மணி அண்ணியையும் அழைச்சிட்டு வா”, என்று சொல்லி விட்டு வைக்க இப்போது சிவன் கண்களில் கண்ணீர் வந்தது. செல்வியின் மாற்றம் புரிந்தது. இது ஒன்று போதுமே அவனுடைய குடும்ப ஒற்றுமைக்கு.
“யாரு சிவா போன்ல? எதுக்கு கண் கலங்கிட்டு இருக்க?”, என்று கேட்டாள் பார்வதி.
செல்விக்கு குழந்தை பிறந்ததைச் சொன்னவன் அனைவரையும் கிளம்பச் சொன்னான். கண்மணியையும் தான்.
“நான் வரலை. நான் வந்தா செல்வி டென்ஷன் ஆவா சிவா. வேண்டாம்”, என்று மறுத்தாள் கண்மணி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ வா”, என்று அவளையும் கிளம்பச் சொன்னான்.
பின் கருப்பட்டிக்கு அழைத்தான். “சொல்லு மச்சான்”, என்று கருப்பட்டி கேட்க “ஆட்டோ இருக்கா டா ஸ்டாண்ட்ல?”, என்று கேட்டான் சிவன்.
“இல்லை மச்சான், ஏதோ ஸ்ட்ரைக்காம். யாருமே இல்லை”
“அப்படின்னா நீ வண்டியை எடுத்துட்டு வா”
“எங்க டா?”
“வீட்டுக்கு தான். செல்விக்கு ஆம்பளைப் பையன் பிறந்திருக்கான் டா. எல்லாரும் போய் பாத்துட்டு வந்துருவோம்”, என்று சொல்ல சரி என்று சொல்லி கடையை அடைத்து விட்டு வந்தான் கருப்பட்டி.
அவன் வரும் போது அனைவரும் கிளம்பி இருந்தார்கள். வெண்ணிலா டியூஷன் முடிந்து ஏழு மணிக்கு தான் வருவாள் என்பதால் பார்வதி, கண்மணி, மதி மூவரும் கிளம்பி இருந்தார்கள். இரண்டு வண்டியில் மூன்று பெண்கள் எப்படி போவது என்று குழப்பமாக இருந்தது. ஒரு நொடி யோசித்த சிவன் தான் அதற்கு வழி சொன்னான்.
“மதி நீ என் பின்னாடி ரெண்டு பக்கம் கால் போட்டு உக்காரு. அம்மா உன் பின்னாடி உக்காரட்டும். டேய் மாப்பிள்ளை நீ கண்மணியை அழைச்சிட்டு வா”, என்று சொன்னதும் மதி மற்றும் பார்வதி இருவரும் சிவன் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.
வண்டியைக் கிளப்பி விட்டு “டேய் சீக்கிரம் கூட்டிட்டு வா டா. நிலா வரதுக்குள்ள வந்துரணும். அப்புறம் பாத்து மெல்லமா வண்டியை ஓட்டிட்டு வா. கண்மணியும் குழந்தையும் கவனம்”, என்று சொல்லிச் சென்றான் சிவன்.
அவன் போன பின்பு இருவரும் தயக்கமாக நின்றார்கள். கருப்பட்டி கண்மணியை ஏறுங்க என்று சொல்ல வில்லை. அமைதியாக இருந்தான்.
“போகலாமா?”, என்று கேட்டாள் கண்மணி.
“ஒரே ஒரு நிமிஷம். அம்மாவைப் பாத்துட்டு வந்துரட்டுமா? நாம வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை”
“சரி”, என்று சொல்ல அவன் அவனது வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆகியும் அவன் வராததால் கண்மணியும் அங்கே சென்றாள். இப்போது தான் முதல் முறை அவன் வீட்டுக்கு செல்கிறாள். அவனுடைய அன்னைக்கு உடல் நிலை சரி இல்லை என்று தெரியும். உணவு கூட பார்வதி தான் சமைத்துக் கொடுக்கிறாள் என்றும் தெரியும். ஆனால் அடுத்த வீட்டுக்குள் செல்லக் கூடாது என்று தான் இது வரை சென்றதில்லை.
வீட்டுக்குள் சென்ற பின்னரும் எந்த சத்தமும் இல்லாமல் இருக்க ஒவ்வொரு அறையாக தேடியவள் கடைசியாக அந்த அறைக்கு வர அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து வெளியே வந்து விட்டாள்.
கருப்பட்டி தான் அவனுடைய அன்னையை சுத்தம் செய்து கொண்டிருந்தான். சுந்தரி கண்களில் நீர் வழிய கண்களை மூடி இருக்க கருப்பட்டியும் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியதால் இருவரும் அவளைக் கவனிக்க வில்லை.
வெளியே வந்த கண்மணியின் நெஞ்செமெல்லாம் அதிர்ந்தது. இப்படி ஒரு காட்சியை முதல் முறையாக அவள் பார்க்கிறாள். அங்கேயே நின்றிருந்தால் அவளைக் கண்டதும் இருவருக்கும் தர்மசங்கடமான நிலை வரும் என்பதால் தான் வெளியே வந்து நின்று கொண்டாள். ஆனாலும் அவள் மனது அதிர்ந்து போய் தான் இருந்தது.
கருப்பட்டி செய்தது ஒரு தாய்க்கு ஒரு மகன் செய்யும் கடமை தான். அது இயல்பான காரியமும் கூட. ஆனால் அதை கண்மணியால் தான் ஜீரணிக்க முடிய வில்லை.
அவள் எதை எதையோ யோசித்த படி இருக்க “போகலாமா கண்மணி. சாரி நேரம் ஆகிருச்சா? அம்மா பாத்ரூம் போயிட்டாங்க. அப்படியே விட்டுருந்தா நாம வர வரைக்கும் கஷ்டப் பட்டிருப்பாங்க. அதான்”, என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க “பிளீஸ் எதுவும் பேச வேண்டாம். வண்டியை எடுங்க”, என்று சொன்னாள் கண்மணி.
அவனுக்கு அவள் பேச்சை எந்த கணக்கில் எடுக்க என்று அவனுக்கு தெரிய வில்லை. அதனால் பேசாமல் வண்டியை எடுத்தான். அவளும் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். இப்போது சிறு தயக்கம் கூட அவளுக்கு இல்லை. மெதுவாக மிக மெதுவாக வண்டியை செலுத்தினான். ஒரு குலுங்கள் இல்லை, சுமூத்தாக வண்டி சென்றது. ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.
இது வரை கண்மணி அவனிடம் அதிகம் பேசியது இல்லை என்பதால் அவனும் அவளிடம் பேச வில்லை.
“நல்லா புடிச்சிக்கோங்க கண்மணி”, என்று மட்டும் அவ்வப்போது சொன்னான்.
மருத்துவமனை சென்றதும் செல்வி அனைவரிடமும் நன்கு பேசினாள். “உன் மருமகனைப் பாருண்ணே. அம்மா உன் பேரனைப் பாத்தியா? அப்படியே அப்பா மாதிரி இருக்கான்ல?”, என்று கேட்டாள் செல்வி.
அவர்கள் குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான் கருப்பட்டியும் கண்மணியும் உள்ளே சென்றார்கள்.
“வாண்ணே”, என்று கருப்பட்டியை வரவேற்ற செல்வி “வாங்க அண்ணி, வந்து உங்க மருமகனைப் பாருங்க”, என்று சொன்னாள்.
அவள் பேச்சைக் கேட்டு கலங்கிய கண்களுடன் தடுமாறி விழப் போனாள் கண்மணி. இது வரை செல்வி அவளிடம் இவ்வளவு பாசமாக எல்லாம் பேசியதில்லை. அவளுக்கு இந்த உறவு பாசம் எல்லாம் கொஞ்சம் புதியது. அவள் விழப் போவதைப் புரிந்து கருப்பட்டி தான் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
“என்ன ஆச்சு?”, என்று அனைவரும் பதற “இவ பண்ணுற வேலைக்கு ஏதாவது ஆகாம இருந்தா தான் அதிசயம்”, என்றான் கருப்பட்டி.
“நான் என்ன பண்ணினேன்?”, என்று பாவமாக கேட்டாள் செல்வி.
“பின்ன இவ்வளவு நாள், ஏல கருப்பா, கருப்பண்ண சாமி, டேய் கருப்பா இப்படின்னு கூப்பிட்டுட்டு இருந்தவ திடீர்னு அண்ணான்னு கூப்பிட்ட உடனே எனக்கே மயக்கம் வந்துச்சு. பின்ன கண்மணிக்கு வராதா? அதான் அதிர்ச்சில மயக்கம் வந்துருச்சு. இப்படியா செல்வி எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்குறது?”, என்று அவன் கேட்க செல்வி அவனை முறைக்க அனைவரும் சிரித்தார்கள்.
“ஏன் நான் எல்லாம் திருந்தக் கூடாதா? எங்க அண்ணன் அண்ணியை நான் அப்படி தான் கூப்பிடுவேன். மயங்கி விழுறவங்க தாராளமா மயங்கி விழுந்துக்கோங்க”, என்று செல்வி சொல்ல மற்றவர்கள் சிரிக்க சிவன் மட்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.
செல்வி ‘அண்ணன் அண்ணி’ என்று இயல்பாக கருப்பட்டி மற்றும் கண்மணியை தனித் தனியாக தான் சொன்னாள். ஆனால் அந்த அண்ணன் அண்ணி சிவாவுக்கு மட்டும் அவர்கள் இருவரும் ஒன்று என்பது போல பட்டது.