“எந்திரி கண்மணி”, என்று சொன்னவன் அவள் எழுந்து அமர்ந்ததும் அவள் காலை பிடித்தான்.
“ஐயோ, என்ன பண்ணுறீங்க? விடுங்க”, என்று பதட்டத்துடன் மறுத்தாள்.
“நீ பேசாம இரு”, என்று சொன்னவன் வெந்நீரில் அவள் பாதம் மூழ்கும் படி வைத்து அவள் கால்களை லேசாக மசாஜ் செய்வது போல பிடித்து விட்டான்.
“ஐயோ, நீங்க ஏன் இதையெல்லாம் பண்ணுறீங்க? விடுங்க”
“உனக்கு இதைச் செய்ய எனக்கு உரிமை இல்லையா கண்மணி? இல்லைன்னு சொல்லு. போய் பார்வதி அம்மாவை வரச் சொல்றேன்”, என்றான்.
அவள் எப்படி உரிமை இல்லை என்று சொல்வாள்? இனி அவள் வாழ்வே அவன் என்னும் போது அவனுக்கு உரிமை இல்லாமல் போகுமா? இவனை விட ஒரு நல்லவன் தனக்கு கிடைப்பானா என்று எண்ணி அவள் கண்கள் கலங்கியது.
அவள் அமைதியாக இருக்க அவன் கடமையே கண்ணாக அவளுக்கு காலை பிடித்து விட்டான். ஆனால் அவன் முகம் மட்டும் உர்ரென்று இருந்தது. தான் மறுத்ததால் தான் அந்த சிணுங்கல் என்று புரிந்தது அவளுக்கு.
அதை சரி செய்ய அவளால் தான் முடியும்? அவனது முக வாட்டத்தை போக்குவது அவளது கடமை என்று புரிந்தது.
அவள் அவன் காலைப் பிடித்துக் கொண்டிருக்க அவள் கைகள் உயர்ந்து அவன் சிகையை முதல் முறையாக தொட்டது. அவன் அதிர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்க்க சிறு தயக்கம் இருந்தாலும் அவள் கைகள் அவன் சிகையை வருடி விட்டது.
அவன் ஆச்சர்யம் மற்றும் திகைப்புடன் அவளைப் பார்க்க “சாரி”, என்று சொல்லி கையை எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அவனிடம் என்ன விளக்கம் கொடுக்க என்று தெரிய வில்லை.
“நான் ஒண்ணும் அதைச் செய்யாத இதைச் செய்யாதேன்னு சொல்ல மாட்டேன்”, என்று சொன்னவன் அவள் கையை எடுத்து தன்னுடைய தலையில் வைத்தவன் மீண்டும் அவள் காலை பிடித்து விட ஆரம்பித்தான். சிறு சிரிப்புடன் அவளும் வருடலைத் தொடர்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து பார்வதி மூவருக்கும் உணவு எடுத்து வர அவன் உண்டு விட்டு கடைக்கு கிளம்பினான். போகும் போது “கடைக்கு போயிட்டு வரேன் கண்மணி. ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
கடைக்கு வந்தவனின் முகம் பிரைட்டாக இருக்க “என்ன டா முகம் டால் அடிக்குது?”, என்று கேட்டான் சிவன்.
“இல்லையே?”, என்று வெட்கப் பட்டான்.
“ஆமாவா இல்லையான்னு கேக்கலை? ஏன்னு கேட்டேன்”
“அது… “
“வெக்கப் படாம சொல்லு டா”
“கண்மணிக்கு கால் பிடிச்சு விட்டுட்டு இருந்தேனா?”
“சரி”
“அப்ப அவ வேண்டாம்னு சொன்னாளா? எனக்கு கோபம் வந்துருச்சு”
“உனக்கு கோபம் எல்லாம் வருமா? சரி மேல சொல்லு”
“நான் கோபமா இருக்கேன்னு என்னை சமாதானப் படுத்த என்னோட தலையை கோதி விட்டா. அதான்”, என்று சிறு வெட்கத்துடன் சொல்ல சிவனுக்கும் சந்தோஷமாக இருந்தது. இந்த புரிதல் அவர்களை வழி நடத்தும் என்று எண்ணிக் கொண்டான். இப்படியே நாட்கள் நகர்ந்தது.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை கருப்பட்டி அறைக்குள் வரும் போது கண்மணி முகம் ஒரு மாதிரி இருந்தது. “என்ன ஆச்சு கண்மணி?”, என்ற படி அவன் அவளை நெருங்க அவள் சட்டென்று வாந்தி எடுக்கப் போனாள். கருப்பட்டி அதை தன்னுடைய கைகளில் வாங்கிக் கொண்டான்.
அவள் அதிர்ந்து போய் நிற்க “அப்படியே உக்காரு கண்மணி. நான் கிளீன் பண்ணுறேன்”, என்று சொன்னவன் அதை சுத்தம் செய்ய அப்படியே அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்தது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாம் சுத்தம் செய்து முடித்தவன் சிறிதளவு தண்ணீர் எடுத்து வந்து அவள் வாயைத் துடைத்தான். அது வரை அவன் மனதில் எதுவும் இல்லை.
அந்த செந்நிற உதடுகளைத் தொட்டதும் அதுவும் அவள் தன்னையே பார்ப்பதும் அவனுக்குள் சிறு சலனத்தை விதைத்தது.
முதல் முறையாக இவ்வளவு நெருக்கத்தில் அவளைப் பார்க்கிறான். கருமையான கூந்தல், பிறை போல நெற்றி, அதில் சின்னதாக ஒரு பொட்டு, கூர்மையான நாசி என அழகாக இருந்தாள் கண்மணி.
ஏனோ இன்று கணவனாக ஒரு உரிமை உணர்வு அவனுக்குள் எழுந்தது. அவளை இறுக கட்டிக் கொண்டு முத்த மிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது.
அவனும் தன்னை மறந்து அவளைப் பார்க்க அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று என்ன நினைத்தானோ? அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் நெற்றியில் தயக்கத்துடன் இதழ் பதித்தான். அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிந்தது. அடுத்து ஒரு நொடி இளவரசன் அவள் நினைப்பில் வந்தான். அவனை எண்ணி அவள் கண்கள் கலங்க கருப்பட்டி அதிர்ந்து போனான்.
“சாரி கண்மணி, உன்னோட மன உணர்வுகள் புரியாம தப்பு பண்ணிட்டேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் போன பிறகு தான் அவனுடைய உணர்வுகளே அவளுக்கு புரிந்தது. இளவரசன் அவள் வாழ்வில் முடிந்து போன அத்தியாயம். கருப்பட்டியை அவள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற எதார்த்தம் புரிந்தது.
அன்று இரவு அறைக்குள் வரும் போது அவள் ஏதோ யோசனையில் இருந்தாள். எப்போதும் அவளிடம் ஏதாவது பேசுபவன் இன்று அமைதியாக தரையில் படுத்துக் கொள்ள “நான் உங்க கிட்ட பேசணும்”, என்றாள் கண்மணி.
“அப்ப நடந்ததைப் பத்தியா?”
“ஆமா”
“அதான் சாரின்னு சொல்லிட்டேனே? என்னையே அறியாம அப்படி நடந்துருச்சு. உனக்கு அது பிடிக்காம தானே அழுத? இனி அப்படி பண்ண மாட்டேன்”
“நீங்க சாரி எல்லாம் கேட்க வேண்டாம். நான் தான் சாரி கேக்கணும். இங்க வாங்க. கொஞ்சம் பேசணும்”, என்று சொல்ல அவன் எழுந்து அவள் அருகே அமர்ந்தான்.
அவன் முகம் பார்த்தவள் “நான் அழுதது நீங்க முத்தம் கொடுத்தது பிடிக்காம இல்லை. சட்டுன்னு பழைய நினைவு வந்துருச்சு. மறக்க நினைச்சாலும் மறக்க முடியாது தானே?”, என்று கேட்டாள்.
“ஆமா, என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியுது. நான் அவசரப் பட்டுட்டேன். சாரி”
“பரவால்ல. நாம சில விஷயங்களை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இந்த ஜென்மத்துல நம்ம ரெண்டு பேருக்கும் தான் முடிச்சு போட்டுருக்கார் போல? எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. அதுவும் நீங்க சுந்தரி அத்தையை பாத்துக்குறது எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு. அதனால இனிமே என் கிட்ட எந்த தயக்கமும் இல்லாம பழகுங்க. நானும் இனி அழ மாட்டேன்”
“சரி, தூங்கு”, என்று சொன்னவன் எழுந்து கொண்டான்.
“இப்ப தானே சொன்னேன்? எங்க எந்திக்கிறீங்க?”
“தூங்க தான்”
“நீங்க என்னோட புருஷன் தானே? அப்புறம் எதுக்கு கீழே? கட்டில்ல தான் இவ்வளவு இடம் இருக்கே? மேலயே படுங்க”, என்று சொல்லி அவள் இடம் கொடுக்க சிறு சிரிப்புடன் மீண்டும் அமர்ந்தான்.
அவன் அவளையே பார்க்க “என்ன?”, என்று கேட்டாள்.
“இல்லை, அப்ப நடந்ததுக்கு உனக்கு கோபம் இல்லை தானே?”
“கோபம் இல்லை”
“திருப்பியும் நடந்தா அழுவியா?”
“வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருங்க”, என்று சொல்லி தலை குனிய அவள் அருகே சென்று அதே போல அவள் நெற்றியில் இதழ் பதித்தான். இப்போது அவளது முகத்தில் கண்ணீர் இல்லை. சிறு வெட்கம் மட்டுமே இருந்தது.
அவளிடம் மறுப்பு இருந்திருந்தால் உடனே விலகி இருப்பானோ என்னவோ? அவளோ வெட்கத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ள அவன் இதழ்கள் தயக்கம் இன்றி அவளுடைய இரண்டு கன்னங்களிலும் பதிந்தது.
அப்போதும் அவள் கண்களை மூடி அவன் முத்தத்தில் திழைத்திருக்க அதற்கு மேல் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அவள் இதழ்களை முத்தமிட்டான்.
சிறிது நேரம் கழித்து விலகி அவன் அவளையே பார்க்க தயக்கத்துடன் கண்களை திறந்து பார்த்தவளின் முகம் அந்திவானமாக சிவந்திருந்தது.
சந்தோசத்துடன் அவன் மீண்டும் அவள் முகம் நோக்கி குனிய அவன் இதழ்களை தன்னுடைய விரலால் பிடித்தவள் “இப்ப போதும், தூங்கலாம்”, என்று சிரித்தாள்.
“ஹி ஹி, ஒரு தடவை நடந்ததை நம்ப முடியலையா? அதான் திருப்பி திருப்பி உண்மையான்னு செக் பண்ணேன்”, என்று அசடு வழிந்தான். சிறு புன்னகையுடன் கண்மணி படுத்துக் கொள்ள அவள் அருகே படுத்த கருப்பட்டி அவளை இழுத்து தன்னுடைய கைக்குள் வைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள். சற்று நேரத்தில் இருவரும் உறங்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள் காலை அழகாக விடித்தது கருப்பட்டிக்கு. தன்னை அணைத்த படி தூங்கும் மனைவியை ரசித்தான். அவன் கரம் உயர்ந்து அவளது மேடிட்ட வயிறை வருடி விட்டது. சிறு சிரிப்புடன் குளிக்கச் சென்றான்.