இளவரசனின் சாவுக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் “இது தான் இளவரசன் கல்யாணம் பண்ணின பொண்ணு போல? பொண்ணு அழகா இருக்கால்ல? அதான் மயங்கி இழுத்துட்டு போய்ட்டான்? இனி பார்வதி இந்த பிள்ளையை ஏத்துக்குவாளா?”, என்று பல பேச்சுகள் கண்மணியைப் பற்றி பேசினார்கள்.
கொடி இடையோடு ஐந்தடிக்கும் குறையாத உயரத்தில் அறிவுக் களையுடன் வெண்மையான தேகத்தோடு இருந்த அவளின் அழகு அனைவரும் பேசும் படி தான் இருந்தது. ஆனால் வீட்டில் இருந்த யாரும் அவளை கண்டு கொள்ள வில்லை.
“அண்ணா அண்ணா”, என்று மூன்று தங்கைகளும் இளவரசன் மேல் விழுந்து கதறினார்கள். “எங்கயாவது நல்லா இருப்பேன்னு நினைச்சேனே டா?”, என்று கதறிய பார்வதிக்கு அந்த நிமிடம் மகனுக்கு கொடுத்த சாபங்கள் எல்லாம் மறந்து போனது.
ஏற்கனவே மதியிடம் கேட்டு கருப்பட்டி சொந்தபந்தங்களுக்கு சொல்லி இருந்ததால் அனைவரும் வந்திருந்தார்கள். மதியம் மூன்று மணி ஆனதும் இறுதிச் சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பித்தது. எல்லாவற்றையும் கருப்பட்டி பொறுப்பாக பார்த்துக் கொண்டான். அவனுடைய தந்தை, சிவனின் தந்தை இருவரும் இறந்த போது அவன் எல்லாம் பார்த்திருந்ததால் அவனாகவே அனைத்தையும் பார்த்துக் கொண்டான்.
ஒரு மனைவியாக கண்மணிக்கு சில சடங்குகள் செய்யப் பட்டது. அதற்கு பின் இளவரசனின் இறுதிப் பயணம் ஆரம்பித்தது.
சிவா தான் அண்ணனுக்கு எல்லாக் காரியங்களையும் செய்தான். இடுகாட்டில் எல்லாம் முடிந்து அவன் கருப்பட்டியுடன் வீட்டுக்கு வரும் போது வீடு கழுவி விடப் பட்டிருந்தது.
அவனுடைய மூன்று தங்கைகளும் அன்னையும் குளித்து வேறு உடை அணிந்து வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். பார்வதி அழுது கொண்டிருக்க அவனுடைய தங்கைகளும் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்து அழுது கொண்டிருந்தார்கள்.
அப்போது தான் அவனுக்கு கண்மணியின் நினைவு வந்தது. அவசரமாக அவளைத் தேடினான். வீட்டின் உள்ளே அவளைக் காண வில்லை. வீட்டின் பின் பக்கம் தேடிச் சென்றான். அங்கே இருந்த பாத்ரூமுக்கு வெளியே இருந்த திண்ணையில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் கண்மணி.
உறவுக்காரப் பெண்கள் அவள் தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி அவளை ஈரமாக்கி விட்டு அவள் கையில் ஒரு வெள்ளைப் புடவையைக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தனர்.
அது ஒரு ஓரத்தில் கவரில் இருக்க அவளோ எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். யாரும் இல்லாத சூனியத்தில் மாட்டியது போல எதிர்காலம் அவளை பயமுறுத்தியது.
சிவனைத் தவிர இந்த வீட்டில் இத்தனை பெண்கள் இருந்தும் யாரும் அவளைக் கண்டு கொள்ள வில்லை. இந்த நிலையில் தன்னை அவர்கள் வாவென்று வரவேற்க வேண்டும் என்று அவள் எதிர் பார்க்க வில்லை தான். ஆனாலும் ஏதோ தெரியாதவர்கள் வீட்டில் இருப்பது போல இருந்தது அவளுக்கு.
இளவரசன் உயிரோடு இருந்தால் இவள் தான் என் மனைவி என்று சொல்லி இருப்பான். இப்போது யார் அவளை இந்த வீட்டில் மதிப்பார்கள்? அவள் நிலையை விட வரப் போகும் குழந்தையின் நிலை தான் அவளுக்கு பூதாகரமாக இருந்தது.
“இங்க என்ன பண்ணுறீங்க?”, என்ற சிவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தாள். என்ன சொல்ல என்று தெரியாததால் அவனே பேசட்டும் என்று காத்திருந்தாள்.
“ஈரத்தோட இருந்தா உடம்பு என்ன ஆகும்? டிரஸ் மாத்திக்கோங்க”, என்று சொல்ல அவள் அந்த புடவையைப் பார்த்தாள். அவன் பார்வையும் அங்கே பதிந்தது. பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். “இந்த வயதில் இவளுக்கு வெள்ளைப் புடவையா?”, என்று அவன் மனம் அவனைச் சாட அதை கையில் எடுத்தவன் “ஒரு நிமிஷம் இருங்க வரேன்”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான்.
அவன் வந்ததைக் கூட யாரும் உணர வில்லை. பீரோவைத் திறந்து அன்னை எங்காவது வெளியே சென்றால் கட்டிக் கொள்ளும் ஒரு புடவையைக் கையில் எடுத்தான்.
“அறிவு கெட்டவனே, புடவையை கையில் எடுக்குறியே? இதுக்கான சட்டை அவளுக்கு எப்படிக் கிடைக்கும்?”, என்று அவன் மூளை எடுத்துரைக்க மதியின் ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
“இப்போதைக்கு இதைப் போட்டுக்கோங்க. இன்னைக்கு கடைக்கு போகக் கூடாது. அதனால தான்”, என்றான். மூன்று தங்கைகளுடன் பிறந்தவனுக்கு அவளுக்கு என்று உள்ளாடை தேவை என்று புரிந்தது. ஆனால் அதை எப்படி அவளிடம் கொடுக்க என்றும் எங்கிருந்து இப்போதைக்கு வாங்க என்றும் தான் தெரிய வில்லை.
மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்று “இப்ப எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க? போனவன் தான் போய் சேந்துட்டானே? இதுக்கு மேல திரும்பியா வரப் போறான்?”, என்று ஒரு கத்து கத்தினான். அண்ணனின் சத்தத்தில் மூன்று தங்கைகளும் அவன் தாயும் அவனை திரும்பிப் பார்த்தார்கள்.
“ஏன் டா என் பிள்ளை செத்ததுக்கு நாங்க அழக் கூட கூடாதா?”, என்று கோபமாக கேட்டாள் பார்வதி.
“தினம் தினம் அவன் நல்லா இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு இப்ப என்ன அழுகை வேண்டி கிடக்கு? வீட்டுக்கு பெரிய மனுஷி தானே நீ? மூணு தங்கச்சிகளும் பட்டினியா கிடக்குதுங்க. சரி அவங்களை விடு. உன் மகனைக் கல்யாணம் பண்ணிட்டு வந்த அந்த பொண்ணைப் பத்தி யோசிச்சியா? அதுக்கு நாலு ஆறுதல் சொன்னா நீ குறைஞ்சா போயிருவ?”
“நான் எதுக்கு டா கண்டவளுக்கும் ஆறுதல் சொல்லணும்? அவளால தான் என் பிள்ளை வீட்டை விட்டுப் போனான். அவ மட்டும் அவனை மயக்காம இருந்திருந்தா என் பிள்ளை இன்னைக்கு உயிரோட இருந்திருப்பான்”
“அம்மா இது தப்பு மா. அவ உன் மகனை நம்பி வந்த பொண்ணு. அவளை நாம தான் பாத்துக்கணும். அப்படிச் செய்யலைன்னா நம்ம இளாவோட ஆத்மா கூட நம்மளை மன்னிக்காது”, என்று அன்னைக்கு புரிய வைக்க முயன்றான்.
“என்னால முடியாது. அவளைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை. முதல்ல அவளை இங்க இருந்து போகச் சொல்லு”, என்றாள் பார்வதி.
“என்னால அப்படிச் செய்ய முடியாது மா. நான் அவங்களைப் பாத்துக்குவேன். அண்ணன் என் கிட்ட அப்படித் தான் சொன்னான். இன்னைல இருந்து அந்த பொண்ணும் நம்ம வீட்ல ஒருத்தி தான்”, என்று அன்னையிடம் சொன்னவன் மூன்று தங்கைகளிடம் திரும்பி “என் மேல பாசம் இருக்குறவங்க அவங்களைப் பாத்துக்கோங்க. என்ன பாத்துக்குவீங்களா?”, என்று கேட்டான்.
மதியும் வெண்ணிலாவும் சரி என்று சொல்ல “நாம எதுக்கு அவங்களைப் பாக்கணும்? அவங்க என்ன நம்ம அண்ணனை முறையா கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு வந்தாங்களா?”, என்று கேட்டாள் செல்வி.
சட்டென்று அவளை அடிக்க கை ஓங்கி விட்டான் சிவன். அடுத்த நொடி தன்னை அடக்கிக் கொண்டு “மாசமா இருக்கேன்னு பாக்குறேன். இல்லை ஒரு வப்பு வச்சிருவேன்”, என்று மிரட்ட செல்வி வாயை மூடிக் கொண்டாள்.
“மதி நிலா, நீங்க ரெண்டு பேரும் இந்த அண்ணன் சொன்னா கேப்பீங்களா மாட்டீங்களா?”, என்று கேட்டான்.
“கேப்போம்”, என்றனர் இருவரும். “அப்படின்னா இனி நீங்க ரெண்டு பேரும் தான் அவங்களைப் பாத்துக்கணும். என்ன தான் இருந்தாலும் அவங்க நமக்கு அண்ணி”, என்றான்.
“சரிண்ணா”, என்று சொன்னார்கள் இருவரும்.
“சரி அவங்க கிட்ட போய் என்ன வேணும்னு கேட்டு எடுத்துக் கொடுங்க. மதி உன்னோட டிரஸ் எல்லாம் அவங்களுக்கு சரியா இருக்கும். கொஞ்சம் கொடு. அப்புறம் புதுசு வாங்கிக் கொடுக்கலாம்”, என்று அவன் சொன்னதும் இருவரும் அவளைத் தேடிச் சென்றார்கள்.
செல்வியும் பார்வதியும் அப்படியே அமர்ந்திருக்க தன்னுடைய அன்னையை முறைத்துப் பார்த்து “உன் மேல இருந்த மரியாதையே எனக்கு போச்சு மா”, என்று சொல்லி விட்டுச் சென்றான் சிவன்.
“பாத்தியாமா அண்ணன் பேசினதை? எல்லாம் அவளால தான். காதல்னு சொல்லி முதல்ல நம்ம இளா அண்ணனை இழுத்துட்டு போனா. இப்ப சிவா அண்ணன் கிட்டயும் என்னல்லாமோ சொல்லி நம்ம கிட்ட இருந்து அண்ணனைப் பிரிக்கப் பாக்குறா. ஏதாவது பண்ணு மா”, என்று போட்டுக் கொடுத்தாள் செல்வி.
பார்வதி ஏதோ யோசனையில் இருந்தாளே தவிர மகளை கண்டிக்கவும் இல்லை. அவள் பேச்சுக்கு ஒத்து ஊதவும் இல்லை. அதைப் பார்த்து விட்டு “என்ன மா, நான் சொல்றது கேக்குதா இல்லையா?”, என்று கேட்டு அன்னையை பேச வைக்க முயன்றாள் செல்வி.
“தேவையில்லாம பேசிட்டு இருக்காத செல்வி”, என்று பார்வதி ஒரு அதட்டல் போட அன்னையின் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரிய வில்லை.
அன்றைய இரவும் வந்தது. கருப்பட்டி தான் அனைவருக்கும் ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வந்தான். சிவன் அனைவரையும் சாப்பிட அழைத்தான்.
பார்வதி எனக்கு வேண்டாம் என்று மறுக்க மற்ற தங்கைகளைச் சாப்பிடச் சொன்னவன் கண்மணியையும் அழைத்தான். செல்வியும் பார்வதியும் தங்கி இருந்த அறையில் தான் கண்மணியை மதி படுக்க வைத்திருந்தாள். அதுவே செல்விக்கு பொசுபொசுவேன்று தான் இருந்தது.
“சாப்பிட வாங்க”, என்று சிவன் அழைத்ததும் “எனக்கு வேண்டாம் சிவா. பசிக்கலை”, என்றாள் கண்மணி.
“சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகும்? இன்னைக்கு முழுக்க நீங்க சாப்பிடலை. நேத்தும் நீங்க சாப்பிட்ட மாதிரி தெரியலை. வாங்க”, என்று வற்புறுத்தி அழைத்தான்.
அவளுக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தை நினைவுக்கு வர எழுந்து அவனுடன் சென்றாள். மதியும் வெண்ணிலாவும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்கள் அருகே சென்று கருப்பட்டி வாங்கி வந்திருந்த இட்லியை உண்டாள்.
அப்போது தான் வயிற்றின் பசியே அவளுக்கு உரைத்தது. அதுவும் குழந்தையும் இருப்பதால் நன்றாகவே சாப்பிட்டாள்.
நான்கு இட்லியை விழுங்கி விட்டு அன்னை அருகில் அமர்ந்த செல்வி “பாத்தியா மா புருஷன் இறந்த அன்னைக்கு என்ன வெட்டு வெட்டுறான்னு?”, என்று போட்டுக் கொடுத்தாள்.
“நீயும் சாப்பிட்டுட்டு தானே வந்த? உனக்கு இருக்குற வயிறு தானே அவளுக்கும் இருக்கு? உனக்கு திருப்பியும் சொல்றேன், தேவையில்லாம பேசிட்டு இருக்குற வேலையை விடு. இல்லை இப்படி தான் இருப்பேன்னா மாப்பிள்ளையை கூப்பிட்டு அவர் கூட உன்னை அனுப்பிருவேன்”, என்று சொன்னாள் பார்வதி. அடுத்து செல்வி எதுவுமே பேச வில்லை.
அன்றைய நாள் அப்படியே கழிந்தது. அடுத்த நாளும் சில சடங்குகள் இருந்தது. அதற்கு அடுத்த நாள் காலை கண்மணிக்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான் சிவன். அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் சோர்வாக இருந்த அவளைப் பார்த்தவனுக்கு அவளை அலைக்களிக்க மனதில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.