“ஏன் அப்படிச் சொல்ற?”, என்று அவன் கேட்டதும் அவர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். அதைக் கேட்டு அவனுக்கு மனதே பாராமாகிப் போன உணர்வு.
“எங்க அம்மாவுக்கு இந்த போட்டோ மட்டும் தான் ஆறுதல். அவங்க சோர்ந்து போகும் போதெல்லாம் இந்த போட்டோவை தான் மடியில எடுத்து வச்சிட்டு உக்காந்துருப்பாங்க”, என்று அன்னையின் நினைவில் கலங்கினாள் கண்மணி.
“அவங்க உன் கூட தான் இருப்பாங்க கண்மணி. கவலைப்படாதே”, என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவன் “உங்க அம்மாவை வஞ்சித்த கடவுள் எங்க அண்ணனையும் சீக்கிரம் எடுத்து உன்னையும் வஞ்சித்திருக்க வேண்டாம்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
கூடவே அவளது தந்தை மேல் அவனுக்கு ஒரு கோபமும் வெறுப்பும் உண்டானது. அந்த ஆள் அவர்கள் இருக்கும் அதே சென்னையில் தான் இருக்கிறான் என்று அவள் சொன்னதும் அவனுக்கு அந்த ஆளைக் கொல்ல வேண்டும் போல கூட இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய நகைகளை பார்வதியிடம் நீட்டினாள் கண்மணி. “இந்தாங்க அத்தை. இதை நீங்களே வச்சிக்கோங்க”, என்றாள்.
“அது உன்னோடது மா”
“நான் இதை வச்சி இனி என்ன செய்யப் போறேன்?”, என்று கேட்டவள் இளாவின் பேங்க் பாஸ் புக்கையும் அவளது பேங்க் பாஸ் புக்கையும் சிவனிடம் நீட்டினாள்.
“இந்த பணம் எல்லாம் உங்க அண்ணன் சம்பாதிச்சது சிவா. நீ வீட்டு செலவுக்கும் உன் தங்கச்சிகளுக்கும் யூஸ் பண்ணிக்கோ”, என்றாள்.
அதை கையில் வாங்கிய சிவன் “அண்ணன் இந்த வீட்டுக்கு செய்ய கடமை பட்டவன். அதனால அவன் பணத்தை மட்டும் யூஸ் பண்ணிக்குவேன். அதுவும் தங்கச்சிகளுக்காக. ஆனா உன் பேர்ல இருக்குற பணம் அது உனக்கு தான் கண்மணி. அது நாள பின்ன உன் குழந்தைக்கும் உன் வாழ்க்கைக்கு உதவும். அண்ணன் ஆபீஸ்ல இருந்து வர செட்டில்மெண்ட் பணமும் பிஏப் பணமும் வந்தா கூட அதை உன்னோட அக்கவுண்ட்ல தான் போடுவேன். உன்னோட நகை உன்னோட அம்மா உனக்கு போட்டது. அது உன் கிட்ட உன் பீரோல இருக்கட்டும். அது உனக்கு சொந்தமானது”, என்று சொல்லிக் கொடுத்தவன் இளாவின் பேங்க் பாஸ் புக்கை மட்டும் அன்னையிடம் கொடுத்தான்.
அதை கையில் வாங்கும் போதே பார்வதி மகனை நினைத்து அழுது விட்டாள். “ஏன் டா உங்க அண்ணன் இப்படி பண்ணினான்? கொஞ்சம் பொறுமையா இருந்துருக்க கூடாதா? நான் என்ன இவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா வேண்டாம்னா சொல்லப் போறேன்? அப்படி அவன் போன்ல தகவல் சொல்லாம வீட்டுக்கு வந்திருந்தா உங்க அப்பாவோட உயிரும் போயிருக்காதே டா. அவர் போன துக்கத்துல நானே அவனுக்கு சாபமா அள்ளி வீசிட்டேனே? என் சாபம் தான் அவனைக் கொன்னுருச்சு”, என்று அழுது புலம்பினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. அவன் விதி முடிஞ்சிருச்சு. அதான் அவன் நினைவா அவன் மகன் வரப் போறானே? பாட்டி அழுதேன்னா உன்னைக் கடிச்சு வச்சிருவேன்னு உன் பேரன் வந்து உன்னை மிரட்டப் போறான் பாரு?”, என்று சிவன் சொல்ல அனைவர் முகத்திலும் சிறு சிரிப்பு எட்டிப் பார்த்தது.
பின் அன்னை மற்றும் தங்கைகளிடம் கண்மணி குடும்பத்தைப் பற்றியும் கண்மணி இளவரசன் திருமணம் நடந்ததைப் பற்றியும் விரிவாக சொன்னான். அதைக் கேட்டு அனைவருக்கும் பாரமானது.
வெண்ணிலாவும் மதியும் கண்மணியை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்கள். செல்வி எந்த உணர்வையும் வெளிப்படையாக காட்ட வில்லை என்றாலும் கண்மணியை நினைத்து அவளுக்கும் கவலையாக தான் இருந்தது.
அன்று இரவு செல்வியின் கணவன் செந்தில் அவளை அழைக்கும் போது கூட சாதாரணமாக பேசிவிட்டு “சரிங்க நான் வைக்கிறேன்”, என்று சொன்னாள் செல்வி.
“என்ன டி அதிசயமா இருக்கு?”, என்று கேட்டான் அவன்.
“என்னங்க?”
“இல்லை, வழக்கமா கண்மணியை அப்படி கரிச்சு கொட்டுவ? இன்னைக்கு ஒண்ணும் சொல்லலை?”
“சொல்ல ஒண்ணும் இல்லைங்க. அவங்களும் பாவம் தான்”
“என்ன சொல்ற நீ?”, என்று கேட்க கண்மணி வாழ்வில் நடந்த அனைத்தையும் அவள் சொல்ல செந்திலுக்கே அதைக் கேட்டு கஷ்டமாக தான் இருந்தது.
“நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல? அந்த பொண்ணைப் பாத்தா பாவமா இருக்குனு. முதல சட்டு சட்டுன்னு ஒரு விஷயத்தை முடிவு பண்ணுறதை நிறுத்து செல்வி”, என்று மனைவிக்கு அறிவுரை கூறினான்.
“சரிங்க, இனி அவங்களை கஷ்டப் படுத்துற மாதிரி நடந்துக்க மாட்டேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
கண்மணி பற்றி செந்தில் அவனது வீட்டினரிடம் சொல்ல அனைவருமே கண்மணிக்காக பரிதாபப் பட்டார்கள். அடுத்து வந்த நாட்களில் அனைவருமே அவளை நன்கு பார்த்துக் கொண்டார்கள். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கவலையில் இருந்து மீண்டு அந்த குடும்பத்தில் ஒன்றிப் போனாள். வெண்ணிலாவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது கூட கண்மணியின் வேலை தான். மதி செல்வி வெண்ணிலா மூவருமே அவளை அந்த வீட்டில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டு அண்ணி அண்ணி என்று பாசமாக இருந்தார்கள்.
இளவரசன் இறந்து இன்றோடு பதினாறு நாட்கள் ஆகி விட்டதால் அவனுக்கு காரியம் செய்தார்கள். சிவாவே எல்லாம் பார்த்துக் கொண்டான்.
பெண்கள் அனைவரும் அழுது கொண்டிருக்க அவர்களைத் தேற்றவே அவனுக்கு போதும் போதும் என்று ஆனது. கருப்பட்டி உடன் இருந்ததால் கொஞ்சம் சமாளித்தான்.
அதே நேரம் தன்னுடைய வீட்டில் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா. அப்போது அவளை அழைத்தாள் அனிதா.
சிறு சிரிப்புடன் அதை எடுத்த உமா “என்ன கல்யாணப் பொண்ணு அதிசயமாக கால் பண்ணிருக்க? அதுவும் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வாரத்துல? நாங்க கூட ஹனிமூன் கொண்டாடிட்டு ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் எங்களை எல்லாம் நினைச்சு பாப்பேன்னு பேசினோம்?”, என்று அவளை சீண்டினாள்.
“என்ன டி கிண்டலா? நாலு நாள் தான் ஹனிமூன் டிரிப். அப்புறம் சென்னை வந்தாச்சு. ஆனா இத்தனை நாளும் அவங்களோட அக்கா அவங்க குழந்தைகள்னு வீட்ல ஆளா இருந்தாங்க. அதான் உங்க யார்க் கிட்டயும் பேச முடியலை. இப்ப தான் பிரியா ஆகிருக்கேன். அதான் உன்னைக் கூப்பிட்டேன். இனி தான் ஒவ்வொருத்தருக்கா பேசணும்”
“சரி டி, அப்புறம் எப்படி இருக்க? மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது?”
“நல்லா போகுது டி”
“அண்ணா உன்னை நல்லா வச்சிருக்காங்களா? எங்க அவங்க?”
“டியூட்டிக்கு போயிட்டாங்க டி. லைப் எல்லாம் சூப்பரா தான் இருக்கு. ஆனா போக போகத் தான் தெரியும்”
“அதெல்லாம் எப்படி இருந்தாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணிப்ப? சரி பர்ஸ்ட் நைட் எல்லாம் ஓகே தானே? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டாள் உமா.
“நீ சொன்ன உடனே தான் அந்த நினைவே வருது. எருமைங்களா என் முதல் ராத்திரியைக் கெடுக்கணும்னு தான் அப்படி பண்ணினீங்களா? அதெல்லாம் ஒரு கிஃப்டா டி? து”
“ஹா ஹா, நாங்க கொடுத்த கிஃப்ட் உனக்கு பிடிக்கலையா? எல்லாரும் சேந்து தங்க வளையல் தானே டி போட்டோம்? அன்னைக்கு மேடைல வச்சு போடும் போது சிரிச்ச?”
“நான் சொன்னது அந்த கிஃப்ட்டை இல்லை. பார்சல் பண்ணி கொடுத்தீங்களே? அதைச் சொல்றேன்”
“அப்படி ஒரு கிஃப்ட்டா? எனக்கு தெரியாதே? நீ கனவு கண்டியா அனிதா?”
“நடிக்காத உமா. இதெல்லாம் உங்க நாலு பேரோட கூட்டுச் சதின்னு எனக்கு தெரியும். நேர்ல பாக்கும் போது உங்களை வச்சிக்கிறேன்”
“சரி விடு. என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லு”, என்று கேட்கும் போதே உமாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“சிரிக்காத உமா. அவர் முன்னாடி அதை பிரிச்சிட்டேன் டி”, என்று சங்கடமாக சொன்னாள்.
“ஹா ஹா, செம காமெடி. லூசு உன் கிட்ட சொல்லிட்டு தானே வந்தோம், தனியா இருக்கும் போது பிரிச்சு பாருன்னு”
“நீங்க என் கிட்ட குசுகுசுன்னு பேசினதை அவர் பாத்துருக்கார் டி. என்னன்னு கேட்டார். நானும் லூசு மாதிரி, ஒரு கிஃப்ட் கொடுத்தாங்கன்னு சொன்னேன். அவர் அதைக் காட்ட சொன்னார். முடியாதுன்னு எவ்வளவோ சொன்னேன். கடைசில அவர் முன்னாடி தான் பிரிச்சேன். என் மானமே போச்சு”
“உன் மானம் போகலை டி. எங்க நாலு பேர் மானமும் தான் போச்சு. அண்ணா இனி எங்களைப் பாக்கும் போதெல்லாம் அதை தான் நினைப்பாங்க. உனக்கு எல்லாம் சர்பிரைஸ் கிஃப்ட் பிளான் பண்ணினோம் பாரு. எங்களைச் சொல்லணும்?”, என்று சலித்துக் கொண்டாள் உமா.
“அதெல்லாம் பெருசா ஒண்ணும் சொல்லலை. அவங்க ஃபிரண்ட்ஸும் இப்படி தான் ஜாலியா இருப்பாங்கன்னு சொல்லி பேச்சை மாத்திட்டார். ஆனா ஒரே ஒரு கேள்வி கேட்டார் பாரு, எனக்கே சிரிப்பு வந்துருச்சு”
“என்ன டி?”
“இத்தனை கலர் வாங்க எத்தனை கடை ஏறி இறங்கினாங்கன்னு கேட்டார். அசிங்கமா போச்சு. இப்படியா டி கலர் கலரா இன்னர் வாங்கிக் கொடுத்து என்னை அசிங்கப் படுத்துவீங்க?”
“சரி விடு. எப்படியும் ஒரு வருசத்துக்கு நீ வாங்க வேண்டாம்ல?”, என்று உமா சொல்ல தலையில் அடித்துக் கொண்டாள் அனிதா.
“சரி கல்யாண ஆல்பம் வாங்கியாச்சா? வீடியோ கேசட் வந்துருச்சா?”, என்று கேட்டாள் உமா.
“இன்னைக்கு தான் வாங்கிட்டு வந்தாங்க டி. இரு என் மொபைல்ல போட்டோ எடுத்து அனுப்புறேன். வீடியோவையும் கொஞ்சம் கொஞ்சமா கட் பண்ணி எல்லாருக்கும் அனுப்புறேன்”
“சரி டி”, என்று சொல்லி போனை வைத்தாள் உமா.
சிறிது நேரத்தில் அவள் புகைப்படங்களை அனுப்ப ஒவ்வொன்றாக பார்த்த படி இருந்தாள் உமா. அதற்கு பின் வீடியோ பார்த்தாள்.
கடைசியாக இவர்கள் கேங்கை மட்டும் தனியே எடுத்த போட்டோக்களை சிவன் கொடுத்திருந்ததால் அதையும் அனுப்பி வைத்தாள்.
அவள் ஒரு போஸ் கொடுத்து அவன் எடுக்க வில்லை என்று தான் அவன் மீது கோபப் பட்டாள் உமா. ஆனால் அந்த புகைப்படமும் அதில் இருந்தது.
அதைப் பார்த்து அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. சட்டென்று சிவனின் நினைவு வந்தது. அவனுடைய பர்சை எடுத்ததும் நினைவில் வந்தது. சட்டென்று எழுந்து அமர்ந்து அதை தேடினாள்.
அவள் கொண்டு சென்ற பேகில் சைட் ஜிப்பில் இருந்தது அவனுடைய பர்ஸ். “அவசரப் பட்டு இதை எடுத்துட்டோமோ?”, என்று எண்ணிக் கொண்டே அதை எடுத்து விரித்து பார்த்தாள். அதில் அவன் அன்னை தந்தையின் படம், தங்கைகளின் படம், எட்டாயிரம் ரூபாய் பணம், ஸ்டூடியோ கார்ட், ஏடிஎம் கார்ட் என அனைத்தும் இருந்தது. அதைப் பார்த்து தான் அவன் பெயரே அவளுக்கு தெரிந்தது.