“நீ முதல்ல சாப்பிடு. நான் ஆல்பம் ரெடி பண்ணுறேன்”, என்று சொல்லி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தான் சிவன். தான் இருக்கும் போது உமா வரவில்லை என்று நிம்மதியாகவும் இருந்தது. அவன் அப்படி நினைத்ததற்கு இரண்டு காரணம் உண்டு.
ஒன்று அவனுக்கு உமாவை பார்க்க சுத்தமாக விருப்பம் இல்லை. இன்னொன்று அவள் தந்தை கண் முன் வந்தால் கண்மணிக்காக அவரையும் கடிந்து கொண்டு விடுவோம் என்று அவனுக்கே தெரிந்தது. அவனை அறியாமலே அவன் உண்மையைச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் அப்படி எண்ணினான்.
வீட்டுக்குச் சென்ற உமாவோ அழுத படியே தான் இருந்தாள். ராதாகிருஷ்ணன் எவ்வளவோ சமாதானப் படுத்தினாலும் அவளால் அதைக் கடந்து வர முடிய வில்லை.
“அவளே அழுதுட்டு இருக்கா? கூட கொஞ்சம் கடுப்பேத்தாம போ கோதை இங்க இருந்து”, என்று எரிந்து விழுந்தார் ராதாகிருஷ்ணன்.
“என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்? அதைக் கூட நான் தெரிஞ்சிக்க கூடாதா?”, என்று அவள் கேட்க ராதாகிருஷ்ணன் நடந்ததைச் சொன்னார்.
“எல்லாம் திமிர், நீங்க கொடுக்குற செல்லம் தான் காரணம். அதான் இவ இந்த ஆட்டம் ஆடுறா. அந்த பையன் அமைதியா போனதுனால சரியாப் போச்சு. வேற மாதிரி நடந்துருந்ததுன்னா?”, என்று கோதை கேட்க “நான் செல்லம் கொடுக்குறேன் தான். ஆனா இந்த திமிர் எல்லாம் உன் கிட்ட இருந்து தான் அவளுக்கு வந்துருக்கு”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“என்னங்க?”, என்று அவள் அதிர்வாக கேட்க “வாயை மூடு. நீ யாரையும் மதிக்கிறது இல்லை. அதான் உமாவும் அப்படியே இருக்கா. வீட்ல வேலை பாக்குற வேலைக்காரங்களை மதிச்சிருக்கியா நீ? நம்ம வீட்டுத் தோட்டக்காரருக்கு வயசு அறுபது. அவரை கந்தான்னு பேர் சொல்லிக் கூப்பிடுற? நீயெல்லாம் திமிரை பத்தி பேசாதே”, என்று வெகு நாட்கள் மனதில் இருந்ததைச் சொல்லி விட்டார்.
டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அருண் “அப்பா, இப்ப அம்மா என்ன சொல்லிட்டாங்கன்னு அவங்க மேல பாயுறீங்க? உமா பண்ணினது தப்பு தானே? அவ செஞ்சது கிரிமினல் குற்றம்”, என்று சண்டைக்கு வந்தான்.
“ரெண்டு பேரும் போங்க இங்க இருந்து. என் பொண்ணை நானே சமாதானப் படுத்திக்கிறேன். நீ ரூமுக்கு வா உமா”, என்று அழைத்துச் சென்றார்.
“இதுக்கே இப்படி? இவ வேற ஏதாவது பெரிய வினையை இழுத்துட்டு வரப் போறா. அப்ப இன்னும் அவஸ்தைப் படப் போறீங்க, பாருங்க”, என்று கத்தினான் அருண். அது கேட்டாலும் ராதாகிருஷ்ணன் எதுவும் சொல்ல வில்லை.
அறைக்குள் வந்ததும் “உமா, நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு. இப்ப எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?”, சற்று கடினமாக கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“என்னால அதை தாங்கவே முடியலை பா. அவங்களை பழி வாங்கணும்னு நினைச்சேனே தவிர அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு எனக்கு தெரியாது”
“நீ தெரியாம தானே டா பண்ணின? உன் தப்பையும் நீ உணர்ந்துட்ட? இன்னும் அதையே நினைச்சிட்டு இருந்தா ஆச்சா? பர்ஸையும் கொடுத்துட்டு வந்துட்டோம் தானே?”
“எனக்கு கஷ்டமா இருக்கு பா. என்னால ஒரு உயிர் போச்சு”
“அப்படி நினைக்கிறதை முதல்ல நிறுத்து உமா. உன்னால ஒரு உயிர் போகலை”, என்று அவர் அரட்டல் போட இன்னும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
அவளை சமாதானம் செய்ய முடியாமல் அவர் தான் எழுந்து போக வேண்டியது இருந்தது. அவளது தோழிகள் அழைப்பையும் அவள் எடுக்க வில்லை. யாரிடமும் அவளால் பேச முடிய வில்லை. அழுத படியே உறங்கிப் போனாள். மனக் கவலையா, உடல் சோர்வா எதுவென்று தெரியாமலே அன்று இரவு காச்சலில் விழுந்தாள். இரவு ஆபீஸில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன் மனைவியிடம் “உமா சாப்பிட்டாளா?”, என்று கேட்டார்.
“எங்க? ரூமுக்கு போனேன். நல்லா தூங்கிட்டு இருந்தா. வந்துட்டேன்”, என்று சொல்ல “சரி நீ சாப்பாடு எடுத்து வை. நான் அவளை எழுப்பிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றார்.
“உமா, சாப்பிட வா”, என்று அழைக்க அவளிடம் இருந்து அசைவே இல்லை. “உமா குட்டி, என்ன டா இப்படி பண்ணுற?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தவர் அவள் நெற்றியை வருட அடுத்த நொடி துடித்துப் போனார்.
“இது என்ன இப்படி காச்சல் அடிக்குது?”, என்று மகளைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தார்.
“என்னங்க அவளை தூக்கிட்டு வரீங்க?”, என்று கோதை கேட்க “பிள்ளைக்கு காச்சல் வந்தது கூட தெரியாம நீ வீட்ல இருக்க? உன்னை வந்து வச்சிக்கிறேன்”, என்று சொன்னவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
காச்சலுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் அவளை நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணனிடம் சொல்லி அனுப்பினார்.
இரவு வீட்டுக்கு வந்ததும் கோதை மகள் அருகில் வர அவளை பார்வையாலே தள்ளி நிறுத்தினார் ராதாகிருஷ்ணன். “தூங்குறான்னு நினைச்சேன். காச்சல் வரும்னு தெரியாதுங்க”, என்று அவள் குற்ற உணர்வுடன் கோதை சொல்ல அதை எல்லாம் கவனிக்காமல் இரவு உணவை அவரே உமாவுக்கு கொடுத்து மாத்திரையையும் கொடுத்து அவளை உறங்க வைத்தார்.
அடுத்த நாள் காச்சல் கொஞ்சம் குறைந்திருந்தாலும் முழுதாக விட வில்லை. மீண்டும் அவளுக்கு உணவு கொடுத்து மருந்து கொடுத்து விட்டு அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவர் அலுவலகம் சென்று விட்டார்.
அப்போது அவளது தோழிகள் மாற்றி மாற்றி அழைக்க நிஷாவின் அழைப்பை மட்டும் ஏற்ற உமா “பிளீஸ் நிஷா, என்னை யாரும் கொஞ்ச நாளைக்கு தொந்தரவு செய்யாதீங்க. நானே கூப்பிடுற வரைக்கும் எனக்கு கால் பண்ணாதீங்க. மத்தவங்க கிட்ட நீயே சொல்லிரு”,. என்று சொல்லி விட்டு போனைக் கட் பண்ணி விட்டாள்.
அவள் மனது முழுக்க பாரம் ஏறி அமர்ந்தது போல இருந்தது. அவளுக்கு சிவனைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது.
அவளது தந்தை விட்டுவிடு என்று சொன்னாலும் அவளால் அது முடிய வில்லை. போகலாமா வேண்டாமா என்ற யோசித்த படியே நேரத்தைக் கடத்தினாள். அவனிடம் பேசினால் தான் மனது சரியாகும் என்று அவளுக்கு புரிந்தது. அவன் அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு கூட அவள் வந்து விட்டாள்.
மணியைப் பார்த்தாள். மணி மதியம் மூன்று என்று காட்டியது. இந்த நேரம் கோதை தூங்கிக் கொண்டிருப்பாள் என்பதால் குளிக்க கூட செய்யாமல் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு கீழே வந்தாள். வீடே நிசப்தமாக இருந்தது.
வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கோதைக்கு அவள் போனது கூட தெரியாது. வாட்ச்மேன் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் எப்போதும் உமாவை அதிகம் கேட்டது இல்லை என்பதால் அவரும் கதவை திறந்ததோடு சரி.
அவள் ஸ்டுடியோக்கு போன போது கருப்பட்டி சிவன் இருவரும் கடையில் தான் இருந்தார்கள். கருப்பட்டி உள் அறையில் இருக்க சிவன் மட்டுமே வெளியில் அமர்ந்திருந்தான். அப்போது கண்ணுக்கு முன் எதுவோ நிழலாட யாரென்று நிமிர்ந்து பார்த்தான்.
பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். சட்டென்று அவள் மேல் கோபம் பொங்கியது. ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டான். மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் கொஞ்சம் நிதானம் இருந்தது. அது மட்டும் இல்லை.
இளவரசன் இறந்து ஒரு மாதம் முடிந்து விட்டதால் உமா செய்த செயலின் வீரியமும் கோபமும் கொஞ்சம் குறைந்திருந்து. இன்னொரு காரணம் கண்மணி. என்ன தான் கோப தாபம் இருந்தாலும் இவள் கண்மணியின் குடும்பம் அல்லவா என்ற எண்ணம்.
அவன் நிதானத்தின் இன்னொரு காரணம் கசங்கிய பூ போல இருந்த உமாவின் தோற்றம். உடை நல்ல விதமாக இருந்தாலும் தலை கலைந்து, முகத்தில் ஒரு பொட்டு கூட இல்லாமல் பார்த்தாலே உடல் நிலை சரி இல்லை என்று சொல்லலாம் அப்படி ஒரு தோற்றத்தில் இருந்தாள் உமா. ஆனாலும் ஏனோ அவளிடத்தில் ஒரு வசீகரம் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.
அவள் கண்களோ குற்ற உணர்வுடன் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன தான் நிதானம் இருந்தாலும் வாயைத் திறந்தால் ஏதாவது பேசி விடுவோம் என்று புரிய அவன் அவள் ஒருத்தி அங்கே இல்லாத படி அவனுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவன் கோபத்தையும் வெறுப்பையும் காண்பித்திருந்தால் அவள் சாதாரணமாகி இருப்பாளோ என்னவோ? ஆனால் அவன் உதாசீனத்தை அவளால் தாங்க முடிய வில்லை. தவிப்பும் கெஞ்சலுமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது “வேலை முடிஞ்சிருச்சு மச்சான்”, என்ற படி உள் அறையில் இருந்து வெளிய வந்த கருப்பட்டி அங்கு நின்ற அவளைக் கண்டதும் அதிர்ந்து “ஏய் நீயா? நீ இங்க என்ன பண்ணுற? கிளம்பு போ”, என்று கத்தியவன் நண்பனைப் பார்த்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.