கருப்பட்டியின் வியப்பான பார்வையைக் கண்ட பிறகு தான் அவனிடம் தேவையில்லாமல் கோபப் பட்டது புரிய “சாரி டா மாப்பிள்ளை”, என்றான்.
“சாரி எல்லாம் வேண்டாம். ஆனா ஏன் இவ்வளவு கோபம்? நான் கடைக்கு வரலைன்னா கூட நீ ஒண்ணுமே சொல்ல மாட்ட. நிறைய வேலை இருக்கும் போது நான் படம் பாத்துட்டு இருந்தா கூட ஒண்ணும் சொல்ல மாட்ட. இன்னைக்கு என்ன?”
“அந்த லூசு கடுப்பேத்திட்டு போயிட்டா டா”
“நீ திட்டினதுக்கு அவளுக்கு தானே கோபம் வரணும்? ஆனா உனக்கு கோவம் வந்திருக்கு. என்ன ஆச்சு?”
“நான் கேவலமா திட்டிட்டு இருக்கேன். ஆனா அவ ஐ லவ் யுன்னு சொல்லிட்டு போரா”
“என்னது லவ்வா? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு?”
“தெரியலை. சரியான லூசா இருக்கும் போல? கேவலமா திட்டுறேன், எல்லாத்தையும் வாங்கிக் கிட்டு ஐ லவ் யுன்னு சொல்லிட்டு போறா? நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு”, என்று எரிச்சலுடன் சொன்னான் சிவன்.
உமா திமிர் பிடித்தவள் என்பது தான் சிவனின் எண்ணம். ஏனெனில் அனிதாவின் திருமணத்தில் வைத்து அவள் அப்படி தான் நடந்து கொண்டாள்.
“எல்லாம் பணம் கொடுக்குற திமிரு. தப்பான தொழில்ல பணத்தை சேத்து வச்சு பிள்ளைகளை இப்படி தருதலையா அலைய விடுற அப்பனுக்களை முதல்ல தூக்கணும்”, என்று கூட அவன் மனதில் ஒரு எண்ணம் வந்தது. ஆனால் இதில் எங்கிருந்து காதல் என்ற வார்த்தை வந்தது என்று அவனுக்கு புரிய வில்லை.
இன்னும் சொல்லப் போனால் முதல் முறை பார்த்த போதே அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது தான். ஆனால் அப்போது கூட அவளைக் காதலிக்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.
கருப்பட்டிக்கும் ஒன்றும் புரிய வில்லை. இருவரும் அவளைப் பற்றிய யோசனையில் இருக்க அப்போது சிவனின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ யாருங்க?”, என்று கேட்டான்.
“ஹாய் அத்தான், நான் தான் உங்க பொண்டாட்டி. இது தான் என்னோட நம்பர். ஷேவ் பண்ணிக்கோங்க”, என்று அட்டகாசமாக பேசினாள் உமா.
“என்னது அத்தானா?”, என்று அதிர்ந்து போய் நின்றான் சிவன்.
“ஆமா என்னோட ஆசை அத்தான் தான். அப்புறம் இது தானே உங்க நம்பர்? கன்பார்ம் பண்ண தான் கேட்டேன். வைக்கிறேன், அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு அவள் போனை வைக்க திகைப்புடன் நின்றான் சிவன்.
“என்ன டா?”, என்று கருப்பட்டி கேட்க “அத்தான்னு சொல்லி பேசுறா டா. என் நம்பரை எப்படி கண்டு பிடிச்சா?”, என்று குழப்பத்துடன் கேட்டான் சிவன்.
“கடை பேருக்கு கீழ இருக்குல்ல? அதை பாத்துருப்பா? ஆனா எனக்கு என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலை”, என்று சொல்லி விட்டு தன் வேலையைப் பார்த்தான்.
ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வருவதற்கு முன்பே உமா வந்து விட்டாள். ஆனாலும் அவர் வந்த உடனே மனைவியிடம் “உமா வெளியே போனாளா?”, என்று கேட்க தான் செய்தார்.
அவரை வியப்பாக பார்த்தாள் கோதை. இத்தனை நாள் அவர் அப்படி கேட்டது இல்லை. அவருக்குமே உமா நேற்று பொய் சொன்னதால் தான் இப்படி எல்லாம் கேட்கிறோம் என்று புரிந்து தான் இருந்தது.
அவள் வெளியே போனாள் என்று சொன்னால் தனக்கு திட்டு விழும் என்று எண்ணிய கோதை “இல்லைங்க, ரூம்ல தான் இருக்கா”, என்றாள்.
ஆனால் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த அருண் “எங்க அவ?”, என்று கேட்டான்.
“என்ன டா?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“உங்க பொண்ணு இன்னைக்கு அந்த ஸ்டூடியோக்கு போயிட்டு வந்தா. அதை நானே பாத்தேன். எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னீங்க? இவ எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கிறா?”, என்று அவன் கேட்க ராதாகிருஷ்ணன் மனைவியை முறைத்தார். அதைப் பார்த்த அருண் “அப்பா உங்க பொண்ணு பண்ணின தப்புக்கு அம்மாவை ஏன் முறைக்கிறீங்க?”, என்று கேட்டான்.
“இல்லை அவ ஃபிரண்ட்ஸைப் பாக்க போறேன்னு சந்தோஷமா கிளம்பி வந்தா. அதான் அவ ஆசையைக் கெடுக்க மனசில்லை. அப்பா கிட்ட சொல்லாதீங்கமான்னு அவ சொன்னதும் எனக்கும் இவர் திட்டுவாரோன்னு தோணுச்சு. அதான் உண்மையை மறைச்சேன்”, என்று கோதை சொல்ல “அப்பா அம்மா வெகுளியா பொய் சொல்லிருக்காங்க. நீங்க அவளைக் கண்டிங்க”, என்றான் அருண்.
“யாரு உங்க அம்மாவா வெகுளி? அவளைப் பத்தி எனக்கு தான் முழுசா தெரியும்”, என்று அவர் சொல்ல அவள் தலை குனிந்தாள்.
“இப்ப அம்மாவை விடுங்க. அவ கிட்ட கேளுங்க. நீங்க கேக்குறீங்களா, இல்லை நான் கேக்கவா?”
“நீயே கேளு”, என்று கழண்டு கொண்டார் ராதாகிருஷ்ணன்.
“ஆமா பொண்ணைக் கண்டிக்க மட்டும் மனசு வராதே”, என்று முனங்கிக் கொண்டு “உமா உமா”, என்று அழைத்தான்.
“என்ன அண்ணா?”, என்ற படி அங்கே வந்தாள் உமா.
“இன்னைக்கு எங்க போன?”, என்று அவன் கேட்டதும் அன்னை தந்தையை ஒரு முறை பார்த்தவள் “நிஷா கூட வெளிய போனேன்”, என்றாள்.
“வெளியன்னா எங்க?”
“டிநகர்க்கு”
“நேத்தும் டிநகர்க்கு தானே மா போன?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“அப்பா”, என்று அவள் அதிர்வாக அழைக்க “என் கண்ணைப் பாத்து உண்மையைச் சொல்லு உமா”, என்றார் அவர். அவள் தலை குனிந்து நின்றாள். அவரிடம் எப்படி அவளால் பொய் சொல்ல முடியும்?
“நீ தலை குனிஞ்சு நிக்குறதே உன் தப்பை உணர்ந்துட்டேனு எனக்கு சொல்லுது. இனி இப்படி நடக்காம பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு அவர் செல்ல “இது தான் இவரோட கண்டிப்பா?”, என்று எண்ணிய அருண் தங்கையை முறைத்து விட்டுச் சென்றான்.
“ஏன் மா போட்டுக் கொடுத்த?”, என்று அன்னையிடம் கேட்டாள் உமா.
“நான் ஒண்ணும் சொல்லலை. நீ ஸ்டூடியோக்கு போனதை அருண் பாத்துட்டான். ஆமா நீ எதுக்கு அங்க போன? அதுவும் பிரண்டை பாக்க போறேன்னு பொய் சொல்லிட்டு. இது சரி இல்லை உமா. உன்னை ஏதாவது சொன்னா உன் அப்பாவுக்கு கோபம் வரும். அதனால அமைதியா இருக்கேன். பாத்து நடந்துக்கோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“ஒரு நாள்ளே மாட்டிக் கிட்டோமே? சில பேர் பத்து வருஷம் கூட வெளிய தெரியாம எப்படி லவ் பண்ணுறாங்க?”, என்று எண்ணியவளுக்கு அவர்களின் கண்டிப்பெல்லாம் பெரியதாகவே தெரிய வில்லை.
அவள் என்ன சொன்னாலும் ராதாகிருஷ்ணன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருந்ததால் அவ்வளவு தைரியமாக இருந்தாளோ என்னவோ?
அன்றைய நாள் அப்படியே கடக்க அடுத்த நாள் காலையில் “குட் மார்னிங் மை ஸ்வீட் அத்தான்”, என்று அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள். அது மட்டுமில்லாமல் “இன்னைக்கு உங்களைப் பாக்க வரணும்னு நினைச்சேன். ஆனா நாம லவ் பண்ணுறோம்னு வீட்ல டவுட் வந்துருச்சு. அதான் வெளிய வர முடியலை”, என்று வேறு அனுப்பி வைத்திருந்தாள்.
அதைப் பார்த்து விட்டு “இவ என்ன லூசா?”, என்று தான் சிவனுக்கு தோன்றியது.
இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று கோதை ஒரு திருமண விழா என்று சென்றிருந்தாள். அன்னை அந்த பக்கம் நகர்ந்ததும் இவள் இந்த பக்கம் கிளம்பி விட்டாள்.
சீக்கிரமே கடையை திறந்து வைத்திருந்த கருப்பட்டி அவளைக் கண்டதும் திகைத்து “நீ என்ன மா காலைல இங்க வந்துருக்க?”, என்று கேட்டான்.
“உங்க பிரண்டைப் பாக்க தான் வந்தேன். அவரைப் பக்காம ஒரே அவஸ்தையா இருக்கு”, என்று வெளிப்படையாகவே அவள் சொல்ல “என்னது?”, என்று திகைத்து போனான்.
“இல்லை ஒரு போட்டோ எடுக்கணும்., அதான் அவரை நினைச்சேன்”, என்று அவள் சமாளிக்க அவன் அவளை நம்பாத பார்வை பார்த்தான்.
அதனால் “சரி உள்ள வா. நான் எடுக்குறேன். எத்தனை காப்பி வேணும்?”, என்று கேட்டான்.