“காதல்’ன்றது இரண்டு பக்க கூர்மையான கத்திம்மா, காப்பாத்திக்கிட்டாலும் இரண்டு பேரையும் ஒன்னா காப்பாத்தும், இல்லை இரண்டு பேரையும் காயப்படுத்தும். உனக்கு மட்டும் கஷ்டம்னு நினைக்கிறியா? அவனும் கஷ்டப்படுறான். என் பையனுக்கு சின்ன வயசுலயே பணக்கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டும் நான் கொடுத்துட்டேன். இனிமே அவன் சந்தோஷமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.” என்று மகேந்திரன் பேச தென்றலுக்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதால் அமைதியாக தலையசைத்தாள்.
“அன்பால காயப்படுறது ரொம்ப வலிக்கும்மா, அது ஆற ரொம்ப நாள் ஆகும்! நம்ம ஒருத்தவங்க மேல வைச்சிருக்க பிம்பம் சரியும்போது, அது தர வலி ரொம்ப பெருசு. என்னால இந்த விஷயத்துல என் பையனை புரிஞ்சிக்க முடியும்” என்றார். அவரும் நம்பி ஏமாந்தவர்தானே?
“நான் நிச்சயம் குரு பத்தி பேச வரல மாமா. எனக்கு உங்களை பார்த்து என் சைட் சொல்லணும்னு தோணுச்சு. அவர்கிட்ட சொன்னாலும் அவர் கேட்கற மாதிரி இல்ல. குரு நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா இருப்பார் மாமா. தேங்க்ஸ் மாமா என்னை தென்றலா பார்த்ததுக்கு!” என்றவள் ஆசிர்வாதம் செய்ய சொல்லி இருவர் காலிலும் விழுந்தாள்.
“நல்லா இருக்கணும், சந்தோஷமா இரும்மா” என்று கீதா, மகேந்திரன் வாழ்த்தினர். கீதாவுக்கு இப்போது தென்றல் பக்கம் மனம் சாய்ந்தது. லாவண்யாவையும் சிவாவையும் கேட்டவள், கிளம்புகிறேன் என்றாள். கீதா சாப்பிட்டு போக சொல்ல,
“இல்ல, இல்லை! குரு வரதுக்குள்ள நான் கிளம்பிடுறேன். எனக்கு உங்களை பார்த்து பேசினதே பெரிய ரிலிஃப் மா. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள் அவர் கைப்பிடித்து.
தென்றல் வெளியே வர, கீதாவும் மகேந்திரனும் அவளுடன் வாசலில் நின்றனர். லிஃப்டில் போக அவள் நிற்க, குருப்ர்சாத் லிப்ட் உள்ளிருந்து வந்தான். அவன் பார்வையில் தீ! தென்றலை கடைசியாக பார்த்து ஒரு மாதம் மேலாகிறது. அவளை பார்க்காத ஏக்கம், பார்த்த கோபம் எல்லாம் சேர
“இவ எதுக்கும்மா இங்க வந்தா?” என்று அம்மாவிடம் இரைந்தான்.
“குரு, அவ எங்களை பார்க்க வந்தா. நீ பேசாத” என்று மகேந்திரன் மகனை அடக்க, அவளுக்காக அப்பா பேசுவது பிடிக்கவில்லை.
தென்றல் பக்கம் திரும்பியவன் “ஏன் எங்கப்பா சந்தோஷமா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா?” என்று சுள்ளென கேட்க, தென்றல் பார்வையில் சொல்லமுடியாத வேதனை. பேசவே இல்லை.
‘பதில் பேச கூட முடியாதா? திமிர்!’ என குரு நினைக்க, தென்றலுக்கு மகேந்திரன் பேசிய பின் தன் தவறு உரைத்தது. வீட்டினரிடம் பேசியது போல், குருவை காதலிக்கிறேன் என்று சத்தமாக சொல்ல முடியவில்லை, தாமதமாக சொல்லப்படும் உண்மைகள் வலுவிழந்தவையே! அதுதான் தென்றல் விசயத்திலும், இப்போது எந்த காரணமும் சொல்லி காதலை நியாயப்படுத்த முடியவில்லை. அவன் எவ்வளவு தூரம் மனதை சொன்னான், தான் அப்படியில்லையே? என்ற உண்மை சுட்டது, இன்னொரு பக்கம் எப்படியிருந்தாலும் ‘நான் அவன் தென்றல் இல்லையா?’ என்று ஏக்கமும் கொண்டது.
குருவோ “கெட் லாஸ்ட்!” என்று கத்த, தென்றல் லிஃப்டினுள் புகுந்தாள். மகேந்திரன் மகனை முறைத்தவர் அவரும் படிகளில் இறங்கி கீழே சென்றார்.
தென்றல் கார் நோக்கி நடக்க, மகேந்திரன் அவளை நிறுத்தியவர்
“அவன் பேசினது தப்புமா, நீ கோச்சுக்காத” என்று ஆரம்பிக்க
“குரு எந்த எக்ஸ்ப்ளேனேஷன் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் மாமா, அவரை புரியாம எனக்கு கோவமில்லை. என்னை அவருக்கு புரியலன்றது மட்டுமே என் வருத்தம், கோவம்! எனக்கு என் குருவை புரிஞ்சிக்க முடியும்.” என்று தென்றல் சொல்ல
“என்னம்மா இன்னும் அவனை நினைக்கிறியா நீ? வீணா இரண்டு பேரும் கஷ்டப்படாதீங்க. எனக்கு என் குருவோட நிம்மதி, சந்தோஷம் முக்கியம்!” மகேந்திரன் அழுத்தமாக சொன்னார்.
“எனக்கும் என் குருவோட நிம்மதி, சந்தோஷம் முக்கியம் மாமா! அது நான் அவரோட இருக்கணும்னு அவசியம் இல்லை. அவர் என் வாழ்க்கையில இருந்தாலும் இல்லைனாலும் அவர் மேல நான் வைச்சிருக்க அன்பும், மரியாதையும் என்னைக்கும் குறையாது!” என்றவள் வேகமாக காரில் ஏறி கிளப்பினாள்.
மகேந்திரனுக்கு ‘இந்த பசங்களோட’ என்று ஆயாசமாக இருந்தது. வீட்டுக்கு வந்தவர் மகன் அறைக்குள் போனார்.
“என்ன பழக்கம் இது குரு? வாசல்ல வைச்சு இன்சல்ட் பண்ற, ஹர்ட் பண்ற? வேண்டாம்னா முழுசா விலகிடணும். இப்படி எல்லா நேரமும் பேசக்கூடாது”
குரு அமைதியாக நின்றான்.
“ஒருத்தங்களை நேசிக்கிறதோ வெறுக்கிறதோ நம்ம விருப்பம்! அதை தாண்டி அடிப்படை மனித நேயம் வேணும், யார்னாலும் ‘கைண்டா’ நடக்கணும். கர்டஸினு ஒன்னு இருக்கு! சாருக்குத் தெரியுமா தெரியாதா?” என்று அதட்ட
“அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்கப்பா, எனக்குக் கோவம் வருது” என்று குரு சொல்ல
“கோவம் யார் மேல குரு, தென்றல் மேலயா? இல்லை அவளை மறக்க முடியாம அவ பின்னாடி போற உன் மனசு மேலையா?” என்று மகேந்திரன் கேட்டுவிட, குருவுக்கு பேச்சு வரவில்லை.
“உனக்கு அவளை மறக்க முடியல, அதை ஏத்துக்க முடியாம உன் மனசு துடிக்குது! அன்னிக்கு சூழ் நிலையில ராஜரத்னத்தை எதிர்த்திருந்தா தேவராஜனுக்கும் என் கதிதான்! அதை விட்டிரு, தென்றலை மட்டும் பாருனு சொல்லிட்டேன்! இல்லையா மறந்துட்டு நாங்க வேற பொண்ணு பார்க்கிறோம். அதுக்கு ஒத்துக்கோ!” என்றார் முடிவாக.
“அப்பா!” என்று குரு அதிர
“என்ன சொல்லு?” என்று அவரும் கத்தினார்.
“நம்பிக்கை உடையற வலி என்னன்னு எனக்கும் தெரியும். ஆனா தென்றல் காதலுக்காக பொய் சொல்லியிருக்கா, காதல்’ல பொய் இல்லை! என்ன அவசியம்டா அந்த பொண்ணுக்கு உன் கிட்ட பேச்சு வாங்கணும்னு? அவ பொய் சொன்னா, நடிச்சா அதான்னே ப்ரச்சனை? போன்ல ‘மனுஷ்யபுத்திரன்’ கவிதை படிச்சேன். அன்புக்குத்தான் நடிக்கிற தேவை இருக்குமாம், வெறுப்பு பாசாங்கில்லாம தூய்மையா இருக்குனு! உன்னை காயப்படுத்திட வேண்டாம், இன்னும் கொஞ்ச நாள் உன் முகத்துல சந்தோஷம் பார்க்கணும்னு நினைச்சிருப்பா! கொஞ்சம் அதையும் யோசிக்கணும் நீ!”
“உனக்கு உன் மேல உள்ள கோவத்தையும் சேர்த்து அவ மேல காட்டுறடா நீ! முன்னாடி என் பையன் காயப்படுவானு அந்த பொண்ணு வேண்டாம்னு நினைச்சேன், இப்போ நீ அவளை ஹர்ட் பண்ணிடுவன்னு எனக்கு தோணுது! அவளை பார்க்கிற பார்வையை மாத்து, இல்லையா உன் மனசை மாத்து. நீ உனக்குனு ஒரு வாழ்க்கையை பார்த்துட்டா அந்த பொண்ணும் உன்னை மறந்துட்டு வேற வாழ்க்கையை பார்ப்பா” என்றபடி மகேந்திரன் வெளியேறிவிட, குருப்ர்சாத் மனது அப்பாவின் வார்த்தைகளில் ஆட்டம் கண்டது, மாற்றம் கொண்டது.
அடுத்த முறை தென்றலை குரு பார்த்த பார்வையில் நிச்சயம் மாற்றமே! அன்று ப்ரின்சிபால் ராஜசேகரின் மகள் திருமணம். குருப்ர்சாத் அவருக்காக சென்றிருந்தான். திருமணத்திற்கு மகாதேவன் வருவதாக இருக்க, தென்றல் காரை எடுத்துக்கொண்டு ஈசிஆர்’ரில் நடைப்பெற்ற வரவேற்பில் கலந்து கொண்டாள்.
தென்றல் குருவை பார்க்கவே இல்லை, அவ்வளவு கூட்டம். ஆனால் குருவின் பார்வையில் தென்றல் பட்டாள். பல மாதங்களுக்குப் பிறகு தென்றலை காதலாய் தழுவியது அவன் பார்வை. வெண்பட்டில் லெஹங்கா அணிந்து சின்னதாய் ஆபரணங்களோடு பார்க்க, அந்த தோற்றம் நிச்சயம் குருவை தோற்கடித்தது.
தோற்றம் மட்டுமில்லை அவன் மனதில் சில நாட்களாக உண்டான மாற்றமும் தென்றலை பார்க்க வைத்தது, நித்தமும் போராட்டம்தான். இருந்தும் தென்றலை மறக்க நினைக்கவில்லை. அப்பா பேசிய பின், வேறு பெண்ணா என்று கோபம்தான் வந்தது. இன்னும் கூட தென்றலை முழுதாக, தானும் காயப்படாமல் அவளையும் காயப்படுத்தாமல் ஏற்க முடியுமா என்ற தயக்கம், தடுமாற்றம் மனதில் உண்டு. இன்று இந்த எண்ணங்களுக்கு எல்லாம் தற்காலிகமாக, தன்னையுமறியாது விடுதலை கொடுத்தான்.
அப்பா சொன்னது போல் தென்றலை பார்த்த பார்வையில் மாற்றம். ரகசியமாய் ரசனையாக ஒரு பார்வை! ஏக்கம் தீர்க்க தீராத, தயங்காத உரிமை பார்வை! தென்றல் சிலரிடம் பேசினாள், மேடையேறி பெண்ணோடு சில நிமிடங்கள் பேசி நின்றாள். உணவு உண்டு, பத்து மணிக்கு வெளியே வந்துவிட்டாள். குரு தென்றலை பின் தொடர்ந்து வர, காரில் ஏறப்போகும் முன்
“தனியாவா வந்த?” என்ற குருவின் குரல் அவளை நிறுத்தியது. குரு இன்று க்ளீன் ஷேவ் செய்து, அடர் மெரூனில் ஷார்ட் குர்த்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தான். அவன் பிறந்த நாளுக்காக சிவா வாங்கிகொடுத்தது. இருவரின் பார்வையும் புதிய தோற்றத்தில் இருந்தவர்களை ஆராய்ந்து, அடுத்த நொடி ரசித்து, பின் அந்த ரசனையை மறைத்து வேறு பக்கம் பார்த்தது.
“தனியா வந்தியான்னு கேட்டேன் தென்றல்” குரு மீண்டும் அழுத்தி கேட்க
“ம்” என்றாள்.
“என்னையும் உன்னோட அழைச்சிட்டு போ, ட்ராப் பண்ணிடு” என்று குரு சொல்லி தென்றலை பார்க்க, அவளுக்கு இவன் மாற்றங்கள் தெரியவில்லை. அந்த பழைய பயம் பாவை மனதில் இப்போதும் மிச்சமிருந்தது. இருந்தும் குருவின் கண்கள், அதில் வழிந்த ரசனை. அது தென்றலை தடுமாற வைத்தது.
“மேடம்! உங்க கூட அழைச்சிட்டு போவீங்களா?” என்று தன் குர்த்தாவின் கையை மடக்கி விட்டபடி ஓரப்பார்வையில் அவளை பார்க்க,
“எதுவரைக்கும்?” என்றாள் தென்றல். அவளுக்கு இது வழிப்பயணமா? வாழ்க்கைப்பயணமா என்று தெரிய வேண்டி இருந்தது. தென்றலின் கேள்வியில் பல மாதங்கள் கழித்து, குருவின் மனது லேசானது. அவள் பேசினாலே கோபம் கொண்ட மனது இப்போது தணிந்தது.
“இப்போதைக்கு வீடு வரைக்கும்” என்றான் குருப்ர்சாத். அவனுக்கும் இன்னும் தெளிவு வரவில்லை. ஆனால் தென்றலுடனான அருகாமைக்கு மனம் ஏங்கியது.
“ஓகே!” என்ற தென்றல் காரில் ஏறி, முன்னால் கதவை திறக்க குருவும் ஏறிக்கொண்டான். தென்றல் பேசவில்லை. குருவுக்கு எதுவுமே நடக்காமல் தென்றல் அவன் தென்றலாக மட்டுமே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
இருந்தும் இந்த இரவும், தனிமையும் தென்றலும் மிகவும் பிடித்தது! இந்த தென்றலை தன்னோடு பிடித்து வைக்க பிடித்தது!