“சைலென்ஸ்!” தென்றலின் அதட்டலில் அந்த எட்டாம் வகுப்பு ‘பி‘ பிரிவு அடங்கிப்போனது.
“பத்து நிமிஷத்துல டெஸ்ட், எல்லாரும் 10 மார்க்ஸ் அபவ் வாங்கணும்” என்ற தென்றலின் பார்வை மாணவர்கள் படிக்கவும்வெளியே வட்டமிட்டது.
லேசான மழை. மழைத்தூறல் ஜன்னலில் பட்டுத் தெறித்து துளியாக தேங்கிக் கொண்டிருந்தது. மழையின் ஈரத்தை சுமந்து இன்னும் பசுமையாக காட்சி தந்தது அந்த பள்ளிக்கூடத்தில் உயர்ந்து நின்ற பூவரச மரம். தெருவில் சத்தம் கேட்க, பார்த்தால் கீரை விற்கும் அக்கா. இவள் பேசுவது வகுப்புக்கு கேட்கவே அத்தனை சிரமம். இதில் அவரோ மிகவும் அனாயசமாக தெருவுக்கே குரல் கொடுத்தார்.
“அறைக்கிற, சிரிக்கிற, முறைக்கிற…” என்று அவர் சத்தம் போட, அவர் வேகத்தில் சொல்லும் அரைக்கீரை, சிறு கிரை, முளை கீரை எல்லாம் இப்படித்தான் தென்றல் காதில் கேட்கும்.
வீட்டில் சமைக்க ஒன்றுமே இல்லை. கீரை வாங்கி நாளாகிற்று, வாங்கலாம் என்று பார்த்தால் வகுப்பு இருக்கிறது. இவள் ஜன்னல் அருகே நிற்க, அதை கீரை விற்பவர் பார்த்துவிட,
“என்ன டீச்சரம்மா? கீர வோணுமா?” என்று அவர் கத்தினார்.
கீதாம்மா அவள் பக்கத்து வீடு. வண்ணாரப்பேட்டையில் இருக்கிறது தென்றல் வாடகைக்கு இருக்கும் வீடு. மெட்ராஸின் பழைய காலத்து வீடு. இரண்டு மாடிகள். ஒரே வரிசையில் மூன்று வீடுகள் உண்டு.தெருவை வேடிக்கைப் பார்த்த தென்றல் மாணவர்கள் கத்தியதில் வகுப்பில் கவனம் வைத்தாள்.
தென்றல், வீட்டு பக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். எட்டாம் வகுப்புக்கு இரண்டு பாடங்கள் எடுக்கிறாள். மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்குள் நுழைந்தவள் உடை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள். அவள் இருப்பது இரண்டாவது மாடி, ஒரு மாடிக்கு ஒரு பாத்ரூம், டாய்லெட் என்று பொது. மூன்று குடும்பங்களும் அதைதான் உபயோகம் செய்ய வேண்டும். கீதா இருப்பதும், இன்னொரு வீடும் இரண்டு படுக்கையறை கொண்டது. தென்றல் வீடு ஒற்றை படுக்கையறை. இங்கு வந்த புதிதில் தென்றல் மிகவும் சிரமப்பட்டாள், ஆனால் பழகிக்கொண்டாள்.
தென்றல் குளித்து உடை மாற்றி, பாத்ரூம் விட்டு வெளியே வந்தாள்.அவள் வரும் நேரம் பாத்ரூம் காலியாகவே இருக்கும். அந்த நேரம் தொந்தரவு இருக்காது. மழை காலத்தில் துணி காய வைக்க கயிறு கட்டியிருக்க, அதில் காயவைத்த துணியை அங்கேயே நின்றபடி மடித்துக்கொண்டிருந்தார் கீதாஞ்சலி. தென்றலை பார்க்கவும்,
“சீக்கிரம் வந்துட்ட போலம்மா?” என்றவர்
“பத்மா கீரை கொடுத்துட்டு போனா, எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கீரைக்கட்டை எடுத்துவந்து கொடுத்தார்.
தென்றல், “தேங்க்ஸ்ம்மா” என்று சொல்லி பத்மாவிடம் கொடுக்க பணம் கொடுத்தாள்.
கீதாஞ்சலி, “மழையில நைட் இந்த கீரை சாப்பிடாதம்மா, சளி பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு துணியை மடித்து ஒரு நாற்காலியில் வைத்தார். பாத்ரூம் பக்கத்தில் ஒரு வீடு உண்டு. அடுத்து மாடிக்கு செல்லும் படி, கீழிருந்து மேல் வரும் படிக்கட்டு பக்கத்தில் தென்றல் வீடு. அடுத்து கீதா வீடு.
நீண்ட தாழ்வாரத்தில் நின்றபடி வெளியே வேடிக்கைப் பார்த்தாள் தென்றல். அந்த இடம் வெட்டவெளிச்சமாக இருக்காது. கிரில் கம்பிகள் வைத்து இடைவெளி விட்டு விட்டு அடைத்து இருக்கும். இரு கையை மட்டுமே அந்த இடைவெளியில் நீட்டலாம்.
கீதா துணி மடிப்பதையே பார்த்தாள் தென்றல். படிக்கும்போது தென்றல் ஹாஸ்டலில் இருந்தாள், அப்போது இந்த வேலையெல்லாம் செய்ததில்லை. அப்படியே எல்லாவற்றையும் லாண்டரி பேஸ்கெட்டில் போட்டு விடுவாள். கீதா வீட்டில் மொத்தம்நான்கு பேர் என்பதை அவர் மடிக்கும் துணிகள் வைத்தே கணித்துவிடலாம். இரண்டு பெண்கள் ஒன்று கீதா இன்னொன்று அவர் மகள் லாவண்யா, அடுத்து அவரின் இரண்டு மகன்கள்.
லாவண்யா அவர் சொந்த மகள் இல்லை, தங்கையின் மகள். லாவண்யாவின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பதால் பெரியம்மா வீட்டில் வளர்கிறாள்.
“அம்மா! அக்கா வந்துட்டாங்களா?” என்று கேட்டபடி வந்த லாவண்யா தென்றலை பார்த்ததும்
“அக்கா, மேத்ஸ்ல நிறைய டவுட்கா. ஃபீரியா இருந்தா சொல்லித் தரீங்களா?” என்று கேட்க
“வாடா, நான் ஃபீரிதான்” என்றதும் லாவண்யா தென்றல் வீட்டுக்குள் போனாள். தென்றல் வீட்டுக்குள் வரும் ஒரே ஆள் லாவண்யா மட்டுமே. தென்றல் கீதா வீட்டுக்கு சென்றதில்லை. அவர் அழைக்கவும் மாட்டார். ஒரு நாள் வீட்டு வாசலில் நின்று கீதா தென்றலிடம் பேசியதற்கே அவரின் பெரிய மகன் அவரைக் கத்தினான். சிறிய வீடு என்பதால் அவர்கள் வீட்டு ஹாலில் நின்று பேசினாலே இங்கு தென்றலுக்கு நன்றாக கேட்கும்.
சில நேரம் கேட்காவிட்டாலும் சுவர் பக்கம் சாய்ந்து என்ன பேசுகிறார்கள் என்று ஆர்வமாக கேட்பாள். அது அவளுக்கு ஒரு அற்ப பொழுதுபோக்கு!
ஆனால் பெரிய பேச்சுகளே இருக்காது. ஒற்றை ஆள் இருக்கும் இவள் வீடும் அமைதிதான்! நாலு பேர் இருக்கும் அந்த வீடும் அமைதிதான்! அதுவும் சில நேரம் லாவண்யாவும் அவள் சின்ன அண்ணன் சிவப்ரசாத் பேச்சு கூட கேட்கும். பெரியவன் வந்துவிட்டால் அதுவும் கூட கிடையாது. டீவி சத்தம் மட்டும், இல்லை கீதாவின் வாத்தியங்களான மிக்ஸீ, கிரைண்டர் சத்தம் அவ்வளவுதான்.
“என்னக்கா இந்த மேத்ஸ் இவ்வளவு கஷ்டமா இருக்கு? நான் எப்படி கட் ஆஃப் வாங்குறது?” என்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் லாவண்யா அழுகுரலில் வருந்தி கேட்க
“என்னம்மா நீ? மேத்ஸ் தானே? போட்டா வந்துடும். ரிலாக்ஸ்” என்று முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“போங்க க்கா, உங்களுக்கு எங்கண்ணாவுக்கு எல்லாம் மேத்ஸ் ஈசி. எனக்குத்தான் வரல.”
சிறு பெண் புலம்ப, “உங்கண்ணா காலேஜ் ப்ரோபஸர் ஆச்சே, என்னை விட நல்லா சொல்லித்தருவார்ல. அவர்கிட்ட கத்துக்கலாமில்லை, ஏன் அவர்கிட்ட படிக்க மாட்டேங்குற நீ?” என்று தென்றல் கேட்க
“ஏன் கா நான் உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?” என்று லாவண்யா மெல்ல கேட்டாள்.
“அய்யோ அப்படி இல்லை லாவண்யா, உங்க அண்ணா நிறைய படிச்சவங்க அவருக்கு என்னை விட டிரிக்ஸ் தெரிஞ்சிருக்கலாம். ஒரு வேளை நான் உங்க அண்ணா விட புத்திசாலியோனு ஒரு டவுட்” கண்ணடித்து தென்றல் சொல்லவும் லாவண்யா முகத்திலும் புன்னகையின் சாயல்.
“உங்களுக்கு பொறுமை இருக்கு கா. எங்கண்ணா கிட்ட சின்ன டவுட்ஸ் கேட்டா இது கூட கவனிக்காம க்ளாஸ்ல என்ன செய்றேனு திட்டுவார். சரியான ஸ்ட்ரீக்ட் டீச்சர்”
“நாளைக்கு டெஸ்ட் இருக்கு கா அண்ணன் வரதுக்குள்ள சொல்லிடுங்க, இல்லை அதுக்கும் பேசுவார்” என்றாள் பயத்துடன்.
லாவண்யாவின் பயம் தென்றலுக்கும் புரிந்தது. ஏன் அவனை ஆறு மாதமாகத்தான் பார்க்கிறாள். அவன் குரல் கேட்டாலே தென்றலுக்கும் ஒரு அச்சம் உண்டு. பேசாதவன் தான்! ஆனால் பேசினால் யாரையாவது திட்டவே இருக்கும். சிவா கூட படியில் இறங்கும்போதோ இல்லை பால்கனியில் நிற்கும்போதோ பார்த்தால் புன்னகைப்பான். இயல்பாக பேசுவான், ஆனால் குரு?
இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவன் முசுடு என்று லாவண்யா சொல்ல, அவன் மனிதர்களைத் தவிர்ப்பவன் என்பது தென்றல் கண்டது. இரவானால் அந்த சின்ன காம்பவுண்ட் சுவரில் வீட்டில் இருக்கும் நிறைய பேர் உட்கார்ந்து கதையடிப்பார்கள். பெரியவனை பார்க்கவே முடியாது. எதற்கு அவனை பற்றிய ஆராய்ச்சி என்று கணக்கில் கவனம் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தாள் தென்றல்.
லாவண்யா இருக்கும்வரை தென்றலின் பொழுது வேகமாக போனது. அவள் போனதும் கோதுமை மாவைக் கரைத்து, சின்ன வெங்காயமும் மிளகும் இடித்துப்போட்டவள் தோசை ஊற்றி உண்டாள். பக்கத்து வீடு இப்போது ‘144’ இல் இருக்கவுமே கண்டுகொண்டாள் யார் வந்துவிட்டது என்று.
கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டவள் போனில் வீடியோ பார்த்தபடி உறங்கிப்போனாள்.
அடுத்த நாள் காலையில் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க வேண்டி ஐந்தரைக்கெல்லாம் எழுந்துவிட்டாள். கீழே இருக்கும் சம்ப்’பில் ஒரு குடம் தண்ணீர் எடுத்தவள், மிகுந்த சிரமத்துடன் மாடியேறி வீட்டில் வைத்து விட்டு இறங்கும்போது, வியர்வையால் அந்த ஈரமான அதிகாலை நேரத்திலும் நனைந்துவிட்டாள்.
கீழ் வீட்டில் இருக்கும் கருணாகரன், அவன் ஆட்டோவைத் துடைத்தபடி
“ஏன்மா தென்றல்? கஷ்டமா இருந்தா என்னைக் கூப்பிடலாம்ல. இரண்டு மாடிக்கு ஏன் சிரமப்படுற?” என்று கேட்டான்.
“ஒரே குடம்தான்’ண்ணா. முடிஞ்சது” என்றபடி அடுத்த குடம் எடுத்து தென்றல் மாடியேற,
“பார்த்து போம்மா” என்று சொல்லவும், நாலு படி ஏறியவள் திரும்பி “சரிண்ணா” என்று சொல்லி ஏற, தீடீரென்று குரு ப்ரசாத் இறங்கினான் படிகளில். அவனை தீடீரென கண்ட அதிர்ச்சியில் கால் தவறி படியில் விழ போனவள் முயன்று முன்னால் சமாளித்து நிற்க நினைக்க, பேலென்ஸ் தவறி குடத்தில் இருந்த தண்ணீர் மொத்தமும் முன்னால் கொட்டியது.
குடம் விழுந்த வேகத்திற்கு, கல்லூரிக்கு கிளம்பி ஃபார்மல் உடையில் இருந்த குரு ப்ரசாத் சட்டையெல்லாம் நனைந்துவிட பயத்தில் தென்றலுக்குப் பேச்சே வரவில்லை.
சத்தம் கேட்டு கருணா “அய்யோ என்னம்மா ஆச்சு?” என்று வந்தவன் குரு ப்ரசாத்தின் ஈர தோற்றத்தில் சிரித்துவிட்டான்.
“தென்றல் வந்துதான் இந்த சூடான மீட்டரை கூலாக்கனும்னு இருந்திருக்கு” என்று முணுமுணுத்த கருணா,
“என்ன வாத்தீ? காலையிலேயே குற்றால குளியலா?” என்று குருவிடம் கிண்டல் பேசினான்.
குரு கோபத்தில் பல்லைக் கடித்தவன் ஒரு வார்த்தை கூட பேசாது மீண்டும் மாடியேறி வீட்டுக்குப்போனான்.
“என்ன கருணா’ண்ணா நீங்க? அவர் என்னை முறைச்சிட்டு போறார்”
“அவன் என்னை முறைச்சிட்டு போறான்மா. என்னமோ இன்னிக்குத்தான் முறைக்கிறான் நினைக்கிறியா? அவன் காலேஜ் ஸ்டுடண்டா இருந்ததுல இருந்து இன்னிக்கு வாத்தியாரா மாறின வரை அவன் மாற்றத்தை பார்க்கிறேன். குரு சிரிச்சதே இல்லை, ரொம்ப ரொம்ப ரேர்! அப்ப கூட வாயைத் திறக்க மாட்டான். இவனுக்கு பல் இருக்கிறதே இப்படி பல்லைக் கடிக்கிறப்பதான் தெரியும்” என்ற கருணா தென்றலிடம் இருந்து குடத்தை வாங்கி
“அடுத்த ரவுண்ட் அபிஷேகம் பண்ணிடாத. நானே தூக்கி தரேன்” என்று சொல்லி தண்ணீர் பிடித்தவுடன் மாடியேறினான். குரு உடைமாற்றி வர, தென்றல் அவன் இறங்கும்போது “சாரி” என்று சொல்ல, குரு கண்டுகொள்ளவே இல்லை.
தென்றலின் முகம் மாறிவிட, “அவன் உன் சாரியை கவனிச்சிருக்க மாட்டான்மா. ட்ரயின் போயிடும்னு டென்ஷன்ல இருப்பான், நீ ஃபீலிங்க்ஸை வுடு” என்றான் கருணாகரன்.
தென்றல் போகும் குருவையே பார்க்க, தென்றலின் பார்வை குருவைத் தீண்டவில்லை.