குருப்ரசாத் வேலை பார்ப்பது ஒன்றும் பெரிய கல்லூரி இல்லை. புற நகரில் உள்ள ஒரு சாதாரண இருபாலர் படிக்கும் தனியார் கல்லூரி. பி.எச்.டி முடித்தவர்களுக்கே சம்பளம் குறைவாக இருக்க, இவனுக்கு இன்னும் குறைவு. அதனால் மாலையில் கல்லூரி தாளாளர் மகனுக்கு கணக்கு வகுப்புகள் எடுக்கிறான், கூடவே அலுவலக வேலையும் கல்லூரியில் பார்த்து கொடுப்பான். எப்படி சேர்த்தாலும் பணக்கஷ்டமே! இதில் தங்கைக்கு, தம்பிக்கு ஃபீஸ், வாடகை, வீட்டு செலவு என்று பட்டியல் மிக நீளம். வேறு கல்லூரி மாற நினைத்தாலும் வேலை வாய்ப்பு ஒன்றும் இல்லை, அதைவிட பி.எச்.டி முடித்தால் மட்டுமே ஓரளவு வருமானத்தை நினைக்க முடியும். அப்போதும் கூட கடினம்தான்.
இதையெல்லாம் சொல்லி சிவா வருந்த, தென்றல் உடனே
“ஏன் உன் அண்ணா மேத்ஸ் ஆர்ட்ஸ் காலேஜ்ல சொல்லித்தராம எஞ்சினியரிங் காலேஜ்ல சொல்லித்தர கூடாது? அங்க இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகம் வரும்ல?” என்று கேட்டாள்.
“ட்ரை பண்ணினான். ஆனா இவனை விட நல்ல குவாலிஃபிகேஷன்ல உள்ளவங்க, இவனை விட எக்ஸ்பிரியண்ஸ் உள்ளவங்களை தான் எடுக்கிறாங்க. ஒன்னும் செட் ஆகல” என்றதும் தென்றலிடம் சட்டென ஒரு யோசனை. மின்னலாய் வந்த யோசனையின் விளைவாக முகத்தில் ப்ரகாசம்.
“என் ப்ரண்ட்க்கு தெரிஞ்ச காலேஜ் ஒன்னு இருக்கு, டீம்ட் யுனிவர்சிட்டி. அங்க வேகன்சி இருந்தா கேக்கவா? உன் அண்ணாவ அப்ளை பண்ண சொல்றியா?” என்று தென்றல் கேட்க சிவாவுக்கு அந்த பல்கலைகழகத்தின் பெயரைக் கேட்டதும் பிரமிப்பாக இருந்தது.
“நிஜமா அங்க கிடைக்குமா? அங்க நல்ல சேலரி, ஃபசிலிட்டி எல்லாம் கேள்விப்பட்டிருக்கேங்கா.” என்று உற்சாகத்துடன் சொன்னவன்
“ஆனா, ரெகமண்ட் பண்ணி வாங்கணும்னா அண்ணா ஒத்துக்கமாட்டான்.” என்றபடி தாடையைத் தடவி யோசித்தான்.
“என்ன சிவா? இதுல என்ன இருக்கு? நான் வேகன்சி இருந்தா சொல்றேன், அவரை இண்டர்வியு அட்டெண்ட் பண்ண சொல்லு. நான் சொன்னா உடனே தந்திருவாங்களா? இவர் இண்டர்வியுல நல்லா பண்ணீனா தருவாங்க. அப்போ உங்கண்ணாவோட எஃபர்ட்தானே?” என்று தென்றல் எப்படியாவது சம்மதிக்க வைக்கும் நோக்கில் பேசினாள்.
“எல்லாம் ஒகே கா, ஆனா இதுக்கே ஏன் வீட்டு விஷயத்தை அடுத்தவங்க கிட்ட பேசினேன்னு என்னை திட்டுவான்.” என்று வேகத்தில் சொன்ன சிவா தென்றல் தப்பாக எடுப்பாளோ என்று நினைத்து,
“அவன் ரொம்ப ரிசர்வ்ட்கா” என்றான் சிவப்ரசாத். தென்றலும் யோசனையாக அப்படியே சுற்றி பார்க்க கண்ணில் பட்டான் கருணாகரன்.
“உனக்கு உன் அண்ணாவுக்கு அந்த யுனிவர்சிட்டில வேலை கிடைச்சா சந்தோஷம்தானே?”
“அப்போ செங்கல், சிமெண்ட் எல்லாம் வாங்கி ரெடி பண்ணிடு” என்று புன்னகையுடன் சொன்னவள் மேலிருந்தே
“கருணா’ண்ணா, கொஞ்சம் மேல வாங்களேன்” என்று அவனை அழைத்தாள்.
“அவர் எதுக்கு?”
“உங்கண்ணாவை பார்த்து பயப்படாத ஆள் அவர்தான். நீ என்னோட பேசி இதை சொன்னாதானே உனக்கு திட்டு விழும். நான் பார்த்துக்கிறேன்” என்றவள் கருணாகரன் வரவும், சிவாவும் அவளும் பேசியதை சொல்ல
“சரிம்மா, எங்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்ற?” என்று கேட்டான் கருணாகரன்.
“நீங்கதானே அவர்கிட்ட சகஜமா பேசுறீங்க. நான் கேசுவலா அங்க இருக்க வேகன்சி பத்தி சொன்னேன், நீங்க குரு ஞாபகம் வந்து அதை அவர்கிட்ட சொல்ற மாதிரி சொல்லிடுங்கண்ணா” என்ற தென்றலின் கண்களை ஆழ்ந்து பார்த்தான் கருணா.
“என்ன ண்ணா?”
“இல்லை, குரு கொஞ்சமும் யாரையும் கண்டுக்க மாட்டான். அவன் மேல ஏன் உனக்கு இவ்வளவு அக்கறை?” என்றதும்
“இதுல என்ன இருக்குண்ணா? எனக்கு தெரிஞ்ச இடத்துல வேகன்சி இருக்கு, அவருக்கு அது தேவைப்படுது. அதைவிட குரு மேல உள்ள அக்கறையெல்லாம் ஒன்னுமில்லை, சிவாக்காகவும் லாவண்யாகாவும் இதை சொல்றேன். உங்களுக்கே அவ்வளவு வேலை இருந்தாலும், நான் கஷ்டப்படக்கூடாதுனு உங்க நேரத்தை ஒதுக்கி தண்ணி தூக்கி தந்திருக்கீங்க, அது மாதிரி என்னால முடிஞ்சது!” என்றதும் கருணாவின் மனமும் அதை ஒத்துக்கொண்டது.
“சரிம்மா, அவன்கிட்ட பேசுறேன்” என்று கருணாகரன் சொல்லி யுனிவர்சிட்டி பெயரைக் கேட்டான். கேட்டவனுக்கும் மகிழ்ச்சி.
“இந்த குரு பய நல்ல வேலை கிடைச்சாலாச்சும் சிரிக்கிறானா பார்ப்போம்.” என்றபடி கருணாகரன் போய்விட்டான்.
இரவு குருப்ரசாத் வீடு வந்தபோது அவன் முகத்தில் களைப்பு. சாப்பிட்டு முடித்து உறங்கும் முன் பாத்ரூம் சென்று வர, படிகளில் யாரோ வரும் சத்தம். அது வீட்டுக்குள் இருந்த தென்றலுக்கும் நன்றாக கேட்டது.
“ஏண்டா பார்த்தும் பார்க்காம போற?” என்று கருணா கேட்க, குருப்ரசாத் அப்போதுதான் பக்கவாட்டில் பார்த்தான். இருவரும் தாழ்வாரத்தில் நின்றனர்.
“நான் உன்னை பார்க்கவே இல்லையே” என்று குரு சொல்லவும்
“சரிடா, இப்போ பார்த்துட்ட இல்லை. ஒரு விஷயம் பேசணும்” என்றான் கருணா.
குரு தலையசைக்க, “இந்த மாதிரி ஒரு வேகன்சி இருக்கு. நீயும் எத்தனை நாள் அந்த டப்பா காலேஜ்ல குப்ப கொட்டுவ, இதுல ட்ரை பண்ணி பாரு” என்றதும் கருணாவை கோபமாக பார்த்த குரு
“சாதாரண இடத்துலயே இப்போ வேலை கிடைக்கிறது இல்லை. அங்க எல்லாம் கஷ்டம், வெல் குவாலிஃபைடா பார்ப்பாங்க. நான் தூங்கணும்” என்றதுடன் பேச்சை முடித்து அவன் போனான்.
“டேய் குரு” என்று முன்னால் போய் நின்ற கருணா, சுவரில் கை வைத்து சாய்ந்து நின்றபடி
“சார், நீங்க ரொம்ப பிஸீனு தெரியும். ஆனா சொல்றதை முழுசா கேளுங்க” என்று குருவை நிறுத்தினான்.
“அங்க இண்டர்வியு வைச்சுதான் செலக்ட் பண்ணுவாங்களாம், உன்னோட குவாலிஃபிகேஷனுக்கு நீ அப்ளை பண்ணு, செலெக்ட் பண்ணினா சந்தோஷம்தானே? நான் ஒன்னும் அந்த காலேஜ் பத்தி தெரியாம பேசல. அங்க இருக்கவங்களை நம்ம தென்றலுக்கு தெரியும். நீ மெயில் மட்டும் போடு” என்றதும்
“யார் தென்றல்?” என்று கேட்டதும் கருணாகரனுக்கு அதிர்ச்சி. தென்றலுக்கு இந்த பேச்சுவார்த்தையெல்லாம் தெளிவாகவே காதில் விழுந்தது.
‘இவனுக்கு என் பெயர் தெரிஞ்சாதானே அதிசயம்? பக்கத்து வீட்ல இவனுக்குப் பொண்ணு இருக்குனு தெரியறதே பெரிய விசயம்’. தென்றல் எண்ணம் இதுதான்.
“எப்பா! சாமி! செவ்வாய்க்கிரகத்துலயா இருக்க? இந்தா இங்க இருக்க உன் பக்கத்து வீட்டு பொண்ணுடா!” என்றதும் பெயர் தெரியவில்லை என்ற பாவனை இரு நொடிகளில் போய், குருவின் முகம் இறுக்கமானது.
“என்னை பத்தி தெரியாதவங்ககிட்ட ஏன் பேசுற? உன் லிமிட்ல இருந்துக்க கருணா” என்று பல்லைக் கடித்தான். உதவி செய்ய நினைப்பவனை எப்படி பேசுகிறான் என்று தென்றலுக்குக் கோபம். இதற்குத்தான் சிவா அப்படி பயந்தான் போல. ஆனால் கருணா அலட்டிக்கொள்ளவில்லை.
“நீ பெரிய இவன் உன்னை பத்தி பெருமையா சொல்ல? அந்த பொண்ணூ எதார்த்தமா எங்கிட்ட இப்படி வேகன்சி இருக்குனு சொல்லுச்சு. உனக்கு உதவியா இருக்குமேனு சொன்னேன். வேண்டாட்டி போடா” என்று கருணாகரன் கத்திவிட்டு படிகளில் வேகமாக இறங்கிப்போன சத்தம் தென்றல் செவி தீண்டியது.
குரு அதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. கருணாகரனிடம் ஒரு மன்னிப்போ போகாதே என்ற வார்த்தையோ இல்லை. குரு வீட்டினுள் செல்லும் சத்தம் கேட்டது
“ரியாஷனே காட்டாம இருக்கான், சரியான ஈ பவர் எக்ஸ் ( ex)” என்று திட்டிய தென்றல் அவள் வேலையை முடித்துவிட்டு உறங்கிப்போனாள்.