அவர்கள் சென்றதும் மகேந்திரன் மகனை, “கல்யாணம் நம்ம செலவு, நம்ம இஷ்டப்படி பண்றோம், அவன் ஒன்னுமே சொல்லலயே. ரிசப்ஷனுக்கு ஒத்துக்கிட்டா என்னடா, அவனை கெஞ்ச விடுற” என்று திட்டினார்.
குரு அமைதியாக இருந்தான்.
கீதா மகனிடம் “அவர் உன் மாமனார்டா, என்னமோ சார்னு அவ்வளவு ஸ்டீரிக்டா பேசுற?” என்று கேட்க, அவரை முறைத்தான்.
“என் முன்னாடி அம்மாவை முறைப்பியா நீ?” என்று மகேந்திரன் கேட்க
“அப்பா! எனக்கு அப்படி அவர்கிட்ட டக்குனு பேச வரல, அவரே அதை கண்டுக்கல” என்றவன்
“நீங்க என்ன அவருக்கு அவ்வளவு சப்போர்ட் பண்றீங்க? இஷ்டமில்லன்னா விடுங்களேன். எனக்கு தென்றல் மட்டும் போதும், அவ வீட்ல இருந்து வர இந்த பணம், அந்தஸ்து ஒன்னும் வேண்டாம்” என்றான் அழுத்தமாக.
“இவனை நீங்களே பேசிக்கோங்க” என்று கீதா நகர்ந்து விட,
மகேந்திரன் மகனிடம், “உனக்கு தென்றல் போதும், ஒகே. ஆனா தென்றலுக்கு? அவ படிச்ச ப்ரண்ட்ஸ் கூப்பிடணும் நினைப்பா, பிஸினஸ் பண்றவங்க எல்லாரையும் கூப்பிடணும் நினைப்பாங்க. இது உங்க கல்யாணம் உன் இஷ்டம், அதே மாதிரி தென்றலையும் கேட்டு முடிவெடு” என்றவர் மெல்ல குரலைத் தாழ்த்தி
“அப்பா செஞ்ச தப்பை நீ செய்யாத! கல்யாணம்ன்றது இரண்டு பேர் ஓட்ட வேண்டிய படகு! நீ ஒரு பக்கம் தென்றல் ஒரு பக்கம் இழுக்கக் கூடாது.” என்று சொல்ல குருவும் தலையசைத்தவன் அறைக்குள் போனான்.
தென்றலுக்கு அப்போதே அழைத்தான். தென்றலுக்கு அவன் அழைப்பில் வழக்கம்போல் புன்னகை பூத்தது. இப்போதெல்லாம் இரவில் சிறிது நேரம் அழைக்கிறான், பேசுகிறான். காதல் செய்கிறான்! தென்றலுக்கு சிறிது சிறிது காதல் சாரல் தெளித்தான்.
“சொல்லுங்க சர்” தென்றல் ஆவல் குரலில் வெளிப்பட, குருவோ அதெல்லாம் இல்லாமல்
“எனக்கு இதுக்கு பதில் சொல்லு” என்று கேட்டவன் வரவேற்பு பற்றி நடந்ததை சொல்ல, தென்றலிடம் அமைதி.
“பதில் சொல்லு தென்றல்”
“குரு, இது நம்ம இரண்டு பேர் இஷ்டப்பட்ட விஷயம் மட்டுமில்ல. எனக்கு நீங்க முக்கியம் குரு, உங்க விருப்பம் முக்கியம்! அதே நேரம் என் சித்தப்பா கேட்கிறது நியாயமான விஷயம். என்னோட அப்பா, அம்மா இல்லைனு என்னை விட்டுட்டாங்கனு அவங்களை எல்லாரும் பேசுவாங்க, அதை விட அவங்களால சந்தோஷமா இருக்க முடியாது.” என்று தென்றல் சொல்ல குரு அமைதியாக இருந்தான்.
“எனக்காகனு நான் கேட்க மாட்டேன் குரு, இது நியாயமா இல்லையானு நீங்களே யோசிங்க. இல்லை வேண்டாம்னு சொல்ல நியாயமா காரணம் சொல்லுங்க, நான் சித்தப்பாவை கன்வீன்ஸ் பண்றேன்” என்றாள் பொறுமையாக.
“சரி, பார்க்கிறேன். அப்புறம் கூப்பிடுறேன்” என்று வைத்துவிட்டான். தென்றல் அதன்பின் அதைப் பற்றி பேசவில்லை. குருவும் வேண்டாம் என்று மறுக்கவில்லை.
குருப்ரசாத்திற்கு தென்றல் மட்டும் போதும்! அவள் வீட்டின் பணம், அந்தஸ்து, பகட்டு ஒன்றும் தேவையில்லை. எல்லாம் தேவராஜன் என்ற மனிதனின் பணம் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது. அதனாலே பணம் தொட்டு வரும் ஒன்றையும் வேண்டாம் என்றான்.
அந்த வாரம் புடவை எடுக்க போக, குரு அப்பா அம்மா லாவண்யா மூவரும் சென்றனர். தென்றல் வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருந்தனர். நிச்சயம் என்று ஒன்றும் செய்யவில்லை, மகாதேவன் கிருஷ்ணகுமார் தம்பதிகள் மட்டுமே மகேந்திரன் வீட்டில் பேசியிருக்க, இப்போது கைலாஷ், கிருஷ்ணகுமாரின் மகன் ஹர்ஷா, சுகன்யா, அவள் கணவன் ஷ்ரவன், அவன் தம்பி வருண் என்று எல்லாரும் வந்திருந்தனர்.
சுகன்யாவின் மகள் ஷ்ரவந்தி குருவை கண்டுவிட்டு, அன்று போலவே “குட் மார்னிங் சர்” என்று சொன்னாள். அவள் அப்பாவோடு கல்லூரி செல்ல, எல்லாருக்கும் சொல்லி, அது அவளுக்கு மிகவும் பிடித்த வழக்கம் என்பதால் ஆசிரியர்களை கண்டால் தானாகவே சென்று பேசுவாள்.
தென்றல் குருவை பார்த்து அதிசயித்து நின்றாள், ரகசிய ரசனை பெண்ணிடம்! ஜீன்ஸ், டீஷர்ட்டில் இருந்தான், சிவா அண்ணனுக்கு வாங்கி கொடுத்திருந்தான். இல்லாவிட்டால் ப்ரோபஸர் எப்போதும் ஃபார்மல்ஸ்தானே. ஷ்ரவந்தியின் கன்னத்தில் தட்டிய குரு
“குட் மார்னிங் பேபி!” என்றான் வாஞ்சையாக.
“சர் இல்லை சித்தப்பா” என்று தென்றல் ஷ்ரவந்தியிடம் சொல்லிக் கொடுக்க,
“வருண் சித்தப்பா?” என்று குழந்தை கேட்க
“இவரும் சித்தப்பா, தென்றல் சித்தி ஹஸ்பண்ட்” என்று குருவை பார்வையால் வருடி சொன்னாள் வஞ்சி. அதில் இருவரின் பார்வையும் பேசிட, கைலாஷ் அங்கே வந்தவன்
“அப்படியே சித்தப்பாவுக்கும் நாங்க என்ன முறை வேணும்னு சொல்லிக்கொடு தென்றல்” என்றான். வந்தவுடனே கைலாஷ் சென்று பேச, குருவோ “ஹலோ சர்” என்று சொல்லிவிட்டான். அந்த கோபம் கைலாஷுக்கு.
தென்றல் குருவை பார்க்க, குரு புன்னகைத்தானே தவிர பேசவில்லை. அவன் வேண்டுமென்றே செய்யவில்லையே. அவனுக்கு பழக நாள் எடுக்கும். அது அவன் இயல்பு.
“என்ன தென்றல் நீ உன் ஆள்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டியா?” கைலாஷ் தாங்கலாக தங்கையிடம் கேட்க
“அவர் உங்கிட்ட பேசினாதான் கோவப்படுவேன்” என்று தென்றல் சொல்ல, குருவும் கைலாஷும் புரியாமல் பார்க்க
“இவர் எங்கிட்ட முதல் தடவ பேசவே பல மாசம் ஆச்சு. உங்கிட்ட மட்டும் பார்த்ததும் பேசினா நான் கடுப்பாக மாட்டேனா.” என்று தென்றல் கேட்க குருவிடம் சின்னதாக சிரிப்பு. மெதுவே நகர்ந்துவிட, கைலாஷிடம்
“அவர் இன்ட்ரோவெர்ட்’ணா. அவரால சட்டுனு க்ளோஸா பேச முடியாது” என்று சொன்னாள். பின் பெண்கள் எல்லாம் புடவைகள் பார்த்தனர். ஷ்ரவன் வந்து குருவின் அருகே இருந்த சேரில் உட்கார்ந்து, “என்ன குரு சைட்டா?” என்று தென்றலை பாராமல் பார்த்தபடி இருந்தவனிடம் கேட்டான்.
“இல்ல சர்” என்று குரு புன்னகை செய்ய
ஷ்ரவன் அவன் தோளில் கைப்போட்டவன், “என்ன சார்? சார் எல்லாம் காலேஜ் கேம்பஸ்ல மட்டும்தான். அங்க உங்க பாலிசி கரெக்ட், நானும் மதிக்கிறேன். இங்க நானும் நீங்களும் ஒன்னுதான், அண்ணானு கூப்பிடு குரு!” என்றான் உரிமையாக. ஷ்ரவனை தினமும் கல்லூரியில் பார்க்கிறானே குரு. நல்ல மனிதன், பண்பானவன், இருவரும் உறவுகள் ஆனபோதும் எல்லைகள் இருக்கும், இப்போது அவன் பேசியதும் சரி எனப்பட,
“சரிங்கண்ணா” என்றான்.
“சைட் தானே அடிச்சா?” மீண்டும் குருவிடம் கிண்டலாகக் கேட்க குரு அப்போதும் அமைதியாக இருக்க,
“தென்றல் உன்னை பார்க்கிறா, போ” என்றான். குரு தயங்கி நிற்க, ஷ்ரவன் எழுந்தவன் குருவை தோளோடு நகர்த்திக் கொண்டு தென்றல் அருகே போனவன்
“என்ன கல்யாண பொண்ணே, என் தம்பியைக் கேட்டு புடவை எடுக்க மாட்டீங்களா?” என்று வம்பிழுக்க,
சுகன்யா கணவனிடம் “கட்டப்போறது அவ, அதுக்கு ஏன் உங்க தம்பியைக் கேட்கணும்?” என்று கேட்டாள்.
“பார்க்க போறது என் தம்பி மா” என்றான் மனைவியிடம். கூடவே அவளிடம் வா என்று ஜாடை காட்ட, தென்றலையும் குருவையும் தனியே விட்டு எல்லாரும் வேறு பிரிவுக்கு சென்றனர். மகேந்திரன் வெகு வருடங்கள் கழித்து மனைவிக்கு புடவை பார்த்து கொண்டிருந்தார்.
தென்றல் குருவிடம், “பட்ஜெட் என்ன குரு?” என்று கேட்டாள். அவர்கள் வீட்டில் எடுப்பது அல்லவா?
தென்றல் புடவையை பார்த்தாள். அருகே இடைவெளி இன்றி நின்ற குருவை பார்த்தாள். குழப்பங்கள் எல்லாம் அவன் அருகே இருக்கும்போது இருப்பதே இல்லை. இன்று வேறு அதிகமாய் அவளை ஈர்த்தான். தடுமாற்றம் கண்டது தத்தை மனது!
“என்னாச்சு தென்றல்? பிடிச்சதை எடு” என்று சொல்ல
“ஏன் இன்னிக்கு இவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கீங்க?” என்றாள் கொஞ்சம் முகத்தை சுருக்கி.
“அடிப்பாவி! இதை இப்படியா சொல்லுவாங்க” என்று குரு சிரிப்புடன் கேட்க
“எல்லாரும் இருக்கும்போது பார்க்க கஷ்டமா இருக்கு” என்றாள்.
“தீரவே தீராது!” என்று காதலாய் சொன்னவள் புடவையைப் பார்க்க
“பிடிச்சதா மட்டும் பாரு, ப்ரைஸ் பார்ககாத” என்றான். தென்றல் புடவையைப் பார்க்க, குரு தென்றலை பார்த்தவனுக்கு பழைய நினைவில் சிரிப்பு. முயன்று சிரிப்பை அடக்கினான்.
“என்ன சிரிப்பு?” தென்றல் கேட்க
“இல்ல முன்னாடி சாப்பிட கேட்டப்ப, என்னை பிடிக்கும் சொன்ன. இப்போ கட்டுறதுக்குப் புடவை பார்க்க சொன்னா என்னையே பார்க்கிற. சீக்கிரமே என்னையும் புடவை மாதிரி கட்டிக்கலாம்” என்று குரு சாதாரணமாக சரசம் பேச, தென்றலுக்குள் சட்டென்று ஒரு பனி மழை!
விழிகள் விரிய அவனை பார்த்தாள். ‘நீயா பேசியது?’ என்று நாணத்துடன் கேட்டது அவள் விழிகள். நொடியில் இந்திரஜாலம் செய்கிறான் என்று குருவை கொஞ்சியது தென்றல் மனது!