குரு வேலை முடிந்து வந்தான். கதவு திறந்திருக்க, மகேந்திரன் அவரின் ஐந்து மாத பேத்தி அருவியோடு திளைத்திருந்தார். எப்போது மகன் வந்தாலும் வரவேற்பாய்ப் பார்த்து நாலு வார்த்தை பேசுவார். பேத்தி வந்த பின் கவனமெல்லாம் அவளிடம். குரு கொஞ்சம் புகைந்தபடியே அறைக்குள் போனான்.
“பின்ன, இன்னும் மாமா உங்களையே கொஞ்சிட்டு இருப்பாரா?” கிண்டலாகக் கேட்டாள் தென்றல்.
தென்றலை முறைத்தவன், உடையை மாற்றிவிட்டு அவளருகே படுத்துக் கொண்டான்.
“தூக்கமா வருது தென்றல். ஒரு டூ ஹவர்ஸ் அப்புறம் எழுப்பு” என்று சொல்லியவன் சில நிமிடங்களில் தூங்கிவிட்டான். காலையில் ஐந்து மணிக்கே எழுபவன், இரவிலும் தொடர்ந்த தூக்கம் கிடையாது. அவர்களின் ஆனந்த அருவி இரவுகளை திருடிக்கொள்வாள். மாலை வந்ததும் குழந்தையை கொஞ்ச நேரம் வைத்துக்கொள்பவன், அவனின் பி.எச்.டி வேலையில் மூழ்கி போவான்.
தென்றலுக்கு அவன் களைப்பினை பார்த்து கோபம் வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்வரை அவள் வீட்டில் இருந்தாள் தென்றல். குரு தனியாக இருக்கிறேன், வா என்று அழைத்து வந்துவிட்டான். குருவும் அம்மாவுக்கு வயதானதால் வேலைக்கு ஆள் வைத்தான். இருந்தும் இரவில் மகள் அழுதால், தென்றல் முழித்து கவனித்தாலும் இவனும் எழுந்துவிடுவான். சம உரிமையோடு சம பொறுப்பு என்பதும் கலந்து விடுகிறதே!
தென்றல், “நானாச்சும் வீட்ல தூங்கிடுவேன். உங்களுக்கு காலேஜ் சீக்கிரம் போகணும். இப்போ தூங்குங்க, அவளை என் கையில கொடுங்க” என்று அதட்டினாலும் கேட்க மாட்டான்.
குரு குழந்தையை அத்தனை அன்பாய் ஏந்தி உட்கார்ந்திருப்பான். இருகரத்தாலும் அணைத்துப் பிடித்துப் பொக்கை வாய் திறந்து சிரிக்கும் அவன் மகளை பார்த்து பார்த்து பூரிப்பான். அதுவும் குருவின் பேச்சுகள் குறைவல்லவா? குழந்தையின் மௌனத்தோடு பேச அவனுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தையின் நெற்றியோடு செல்லமாக முட்டி விளையாடிக் கொண்டிருப்பான். இவன் இப்படி என்றால், மகன் மகளை ரசிப்பதை பார்த்து பார்த்து மகேந்திரன் பூரிப்பார். இதில் மனைவியிடம்,
“பாரேன், நம்ம குருவுக்கு ஒரு குழந்தை!” அதிசயம் போல் சொல்லுவார். இதையெல்லாம் தென்றலும் கீதாவும் புன்னகையுடன் கடந்து விடுவார்கள்.
இப்போது களைத்து உறங்குபவனை பார்த்தபடியே அவள் லேப்டாப்பை சார்ஜில் போட்டுவிட்டு, அறைக்கதவை சாற்றி வெளியே வந்தாள். கீதா கிச்சனில் இருந்தார்.
“சிவா வரானாம் தென்றல். குருவுக்கும் மாமாவுக்கும் டீ கொடு” என்று அவர் நீட்ட
“அவர் தூங்கிட்டார் மா” என்று சொல்லி மகேந்திரனுக்கு டீ கொண்டு சென்றாள்.
“அவளை கொடுங்க மாமா, தூங்கிட்டாளா?” என்று குழந்தைக்கு கை நீட்ட
“இல்ல இல்ல அம்முக்குட்டி இன்னும் தூங்கல” என்று முகம் பிரகாசிக்க சொன்னவர், “அப்புறம் குடிக்கிறேன், நான் விட்டா அழுவா” என்றதும் இந்த பேச்சைக் கேட்ட கீதா கணவரை முறைத்தார்.
“அப்பாவும் புள்ளையும் தூக்கியே வைச்சிருந்தா அவ அதையே எதிர்ப்பார்ப்பா. கொடுங்க நீங்க இப்போ டீ குடிக்காம ஏழு மணிக்குக் குடிச்சிட்டு விடி விடிய பேத்திக்குத் துணையா உட்கார்ந்து கலாட்டா பண்ணுவீங்க, அப்புறம் சூடு பத்தலனு வேற பேச்சு வரும்” என்று திட்ட மனைவியை முறைத்தபடி குழந்தையைக் கொடுத்து விட்டு, மருமகள் கையில் இருந்து டீயை வாங்கி கொண்டார்.
கீதாஞ்சலி குழந்தையை தரையில் போட்டிருந்த மெத்தையில் படுக்க வைத்து விட்டு, “தூக்காம பார்த்துக்கங்க” என்றார். தென்றலும் கீதாவுக்கு உதவ கிச்சன் சென்றாள். சிறிது நேரத்தில் சிவா வந்துவிட, குழந்தையைத் தூக்க போக
“டேய் டேய்! குளிச்சிட்டு தூக்கணும்.” என்று மகனை விரட்டினார். சிவா குளித்து குழந்தையைத் தூக்கி வைத்து விளையாட்டு காட்டினான்.
“லாவண்யா வந்திருந்தா நல்லாயிருக்கும் இல்ல” என்று சிவா சொல்ல, அவளுக்குத் தேர்வுகள் என்பதால் வர முடியவில்லை. இரவு உணவுக்குத்தான் குருவை எழுப்பினாள் தென்றல். எல்லாரும் உண்டு முடித்து ஹாலில் உட்கார, சிவா எம்.எஸ் படிக்க விருப்பம் என்று சொன்னான்.
“லோன் போட்டுக்கலாம்ப்பா, யூஸ் இல்லை கனடா போனா நல்லா ஆஃபர், படிச்சிட்டு அங்கேயே வேலை பார்க்கலாம்” என்று கனவோடு சொல்ல, குருவும்
“சரிடா! என்ன ப்ரோசீஜர் பார்த்து அப்ளை பண்ணு” என்றான்.
“உனக்கு நம்பிக்கை இருந்தா படிடா. பணம் பார்த்துக்கலாம்” என்றார் மகேந்திரன். அவர்களுக்கென்று இருந்த நிலம் ஒன்ற குருவின் திருமண சமயத்தில் விற்றுவிட்டார். குருவின் அத்தனை வருட சம்பாத்தியம் அடிப்படை செலவுகளுக்கு சரியாக இருந்தது. அதனால் நிலம் விற்று திருமணம் முடிந்து, இன்னுமிருந்த பணத்தை தென்றலிடம் கேட்டு முதலீடு செய்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையைக் கேட்ட தென்றல், “லோன் வேண்டாம் சிவா, நம்ம கிட்ட பணமிருக்கு” என்றாள். எல்லாம் சரியாக இருந்தாலும் இந்த பணப்பிரச்சனை குருவுக்கும் தென்றலுக்கும் முட்டிக்கொள்ளும் ஒன்று. அவனின் வருமானம் வீட்டு செலவுகளுக்கு, சிவா லாவண்யாவின் செலவுகளைப் பார்ப்பான். தென்றலின் பணத்தை மகள் பெயரில் வங்கியில் போட சொல்லிவிட்டான். அது தென்றலுக்கு சில சமயம் கோபம் கொடுக்கும், இருந்தும் பெரிதாக கேட்கமாட்டாள்.
“இல்லை அண்ணி, லோன் போறேன்” என்றான் சிவா. தென்றல் முகம் வாடியது.
“ஏன் சிவா? அண்ணா, அப்பா கொடுத்தா வாங்கிப்ப, நான் யாரோவா?” என்று கேட்டாள். சிவா அண்ணனின் முகம் பார்க்க, அதனை தென்றலும் பார்த்தாள். குரு பதில் சொல்லாமல் இருக்க, தென்றல் பேசாமல் அறைக்குள் போய்விட்டாள்.
“டேய்! அவளும் இந்த வீட்ல ஒருத்திதானே? அவ செஞ்ச என்ன?” கீதா நியாயமாகப் பேசினார். குரு மனைவி போகவும், அவளை சமாதானம் செய்ய போனாள்.
தென்றல் கண்களை மூடி மெல்ல அழுதுகொண்டிருந்தாள். அப்பா நினைவு! கோபமாக இல்லை, ஏக்கமாக.. தீடீரென்று இப்படி தோன்றும். எப்படி மறந்திட முடியும்? இப்படி எதாவது தன்னை ஒதுக்கி பேசினால், சட்டென்று அவர்களின் நினைவு வந்துவிடும். கூடவே குரு மீது கோபம். ஆனால் காதல் அதனை காட்டவிடாது!
குரு தென்றலிடம் வந்தவன், அவளின் கையைப் பிடித்து தூக்கி உட்கார வைத்தான்.
“ஏன் அழற?” என்றதும் முறைத்தாள்.
“நீங்க சிவா கிட்ட சொல்லலாமில்ல, ஏன் நான் வேறயா? இன்னும் தேவராஜன் பொண்ணா பார்க்கிறீங்களா?” என்று கோபத்துடன் கேட்க,
தென்றலின் தலையைப் பிடித்து தோளோடு அழுத்தியவன், “நீ மிஸஸ். குருப்ர்சாத்” என்றான் அழுத்தமாக.
குரு தன்னையே பார்க்க, “தேவராஜன் பொண்ணைத்தான் குருப்ர்சாத் கல்யாணம் பண்ணியிருக்கார்” தென்றல் இன்னும் அழுத்தி சொல்ல, மீண்டும் அவளை உட்கார்ந்தபடி தோளில் அழுத்தமாய் சாய்த்துக் கொண்டான்.
குருவுக்கு தேவராஜன் மீதிருக்கும் வெறுப்பு ஜென்மத்துக்கும் மாறாது. தென்றல் தேவராஜனின் மகள், இவன் மனைவி! இதுவும் மாற்றமில்லாத நிஜம்! தென்றலுக்கு அவர் மிகவும் நல்ல அப்பா, அவனின் மனைவியின் உணர்வுகளை மதித்தான். தென்றல் குருவுக்கு பிடிக்காது என்பதால் அவரை பற்றி ஏக்கம், வருத்தம் எதையும் பகிர மாட்டாள். ஆனால் அந்த சுதந்திரமும் வேண்டும் தானே?
குரு பொறுமையாகவே, “எஸ், நீ குருவோட மனைவி, அருவி அம்மா, தேவராஜன் பொண்ணு” என்று ஆரம்பிக்க, தென்றல் முறைத்தாள். ‘என் தென்றல்’ என்ற அவன் எண்ணம் என்றைக்கும் மாறாது!
“சிவா என்ன சொன்னான் தெரியுமா? அவன் இன்வெஸ்ட் பண்ணின அப்பா பணம் கூட வேண்டாம் சொல்லிட்டான். லோன் வாங்கினா ஒரு அழுத்தமிருக்கும், அது படிக்க ஒரு வேகம் கொடுக்கும்னு சொல்றான். அதான் உன் பணம் வேண்டாம் சொல்றான். அதுக்காக உன்னை வேறயா பார்க்கிறோம் சொல்வியா?” என்றதும்
“கோவத்துல சொல்லிட்டேன்” என்ற தென்றல் “ஆனா பேங்க்ல லோன் போட்டா கஷ்டம் குரு, அதை அடைக்கிறதுக்குள்ள பாஹ்.. வேண்டாம். அவனுக்கு ஒரு பொறுப்பு வேணும் அதானே? நான் என்னோட நகை தரேன், ப்ளெட்ஜ் பண்ணிக்கலாம்… அப்படியே முடியாம போனாலும் ஒன்னுமில்லை நகை தானே? படிச்சி ஜாப் போய் எனக்கு வாங்கி தர சொல்லுங்க” என்றாள்.
“இல்லை தென்றல்! அப்பாவை பார்த்தேன். அவருக்கு சிவாவுக்கு ஒன்னுமே செய்யலனு எண்ணம். அந்த லேண்ட் அப்பா சம்பாத்யம். அது இப்போ எவ்வளவு இருக்கு பாரு, அதை வைச்சு அவன் படிக்கட்டும். அப்பா சந்தோஷப்படுவார் தென்றல்.” என்றதும்
“அது வீடு கட்டலாம் ப்ளான் வைச்சிருந்தோமே?” தென்றல் இழுக்க,
“உன் சேலரி சேவ் பண்றியே அதை எடுத்துப்போம், ஏன் என் பொண்டாட்டி எனக்கு வீடு கட்டித் தர மாட்டாளா?” என்று குரு கேட்க, தென்றலுக்கு புன்னகை பெரிதாக விரிய, கணவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். குரு மகளுக்கு சேமிப்பாக இருக்க வேண்டுமென மனைவியின் பணத்தை வீட்டின் தேவைகளுக்கு எடுக்கவில்லை. மற்றபடி தென்றலின் திறமை, உழைப்பு எல்லாம் மதித்தான்.
“நான் வீடு கட்ட சொன்னேன், என்னை கட்டிக்க இல்லை” குரு தென்றலை சீண்ட, தென்றல் இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள். தென்றல் இப்படி செய்ய, குரு சிரித்தான். அவளை வெளியே அழைத்து வர, கீதாஞ்சலி மகனை முறைத்தார்.
“என்னடா அவளை திட்டினியா? பாருங்க உங்க புள்ளையை” என்று மகேந்திரனுக்கும் சேர்ந்து திட்டு விழ
“இதுக்குத்தான் தனிக்குடுத்தனம் போடானு சொன்னேன் கேட்டியா.. நானெல்லாம் போயிடுவேன்பா. இந்த அம்மாவை பாரு உன்னை மாட்டிவிடுறதை.. ” என்று சிவா வம்பிழுத்தான். மகேந்திரன் மகனின் தோளில் அடி போட, அருவியின் அழுகை சத்தத்தில் அவளிடம் கவனம் வைத்தனர்.