பார்த்து ரசித்து நின்றவள் லாவண்யாவின் குரலில் கலைந்தாள்.
“அக்கா! அக்கா!” என்று லாவண்யா சத்தமாகக் கூப்பிட, சட்டென திரும்பினாள்.
தென்றல் “என்னாச்சு டா?” என்று கேட்க
“இந்த சம்ல ஆன்சர் வரவே மாட்டேங்குதுகா, என்ன தப்பு பண்ணியிருக்கேன் கொஞ்சம் பார்க்குறீங்களா?” என்றாள் லாவண்யா டென்ஷனாக.
“சொல்றேன் வா” என்று தென்றல் கதவை திறந்து வீட்டுக்குள் போனாள். லாவண்யாவின் பாடத்தில் கவனம் வைத்து தன்னை அதில் மறந்தாள். அவள் சென்ற பின்னும் குருவின் புன்னகை மனதை நிறைத்து, தென்றலை அசைத்தது.
கண்ட காட்சி பிழை என்பது மனதுக்கும் அறிவுக்கும் அப்பட்டமாக தெரிந்தது. எல்லாரும் அவளிடம் அன்பு காட்டினாலும், கண்டுகொள்ளாமல் இருந்தவனைதான் தான் அதிகம் கண் கொண்டு பார்க்கிறோம், அதனால் ஈர்க்கப்படுகிறோம் என்று புரிய, இங்கிருந்து சீக்கிரமே போக வேண்டும் என்று முடிவில் இன்னும் திடமாக இருந்தாள் தென்றல்.
முடிவினை எடுக்க முடிந்தவளால் செயல்படுத்த முடியவில்லை. லாவண்யாவுக்கு தேர்வுகள் இருந்தன, இவள் உதவியை எதிர்ப்பார்த்தாள். தென்றலால் மறுக்க முடியவில்லை, சிவாவுக்கும் தேர்வுகள் இருக்க அவனுக்கும் உதவினாள். அப்படியே இருவாரங்கள் ஓடிவிட்டன. தென்றல் நாளை நாளை என்று நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள்.
இந்த இடைப்பட்ட சமயத்தில் குரு, கருணாகரன், சிவா எல்லாரும் சபரிமலை செல்ல மாலை போட்டிருந்தனர். சிவாவின் தேர்வுகள் முடிந்த பின் மலைக்கு செல்ல இருந்தனர்.
அவர்கள் மலைக்கு செல்ல இருந்த அன்று காலையில் பாத்ரூம் சென்றுவிட்டு வெளியே வந்த கீதாஞ்சலி பாத்ரூம் படியில் வழுக்கி விழ, கால் சுளுக்கிவிட்டது. நகர முடியாத நிலையில் அப்படியே வலியில் உட்கார்ந்துவிட்டார். வாசலில் நின்ற தென்றல் பார்வையில் வலியில் உட்கார்ந்திருந்த கீதா பட, பதறி ஓடினாள்.
இவளை பார்த்த கீதா,
“விழுந்துட்டேன்மா தென்றல், கால் சுளுக்கிடுச்சு போல. வலிக்குது” என்றார் கண்ணீருடன்.
“அச்சோ! வாங்கம்மா” என்று அவள் மெல்ல தூக்கிவிட, அவரால் முடியவில்லை.
தென்றலுக்கு அவரை அப்படி பார்க்க கஷ்டமாக இருக்க வேகமாக வீட்டு வாசலில் நின்று, “சிவா சிவா” என்று கத்தினாள். சிவா அறையில் இருக்க அவனுக்கு கேட்கவில்லை. குரு எட்டிப்பார்த்தான்.
“அம்மா கீழ விழுந்துட்டாங்க” என்றதும் வாசலைப் பார்த்தவன் வேகமாக அம்மாவிடம் போனான். மெல்ல அவரை தூக்கி பிடிக்க, தென்றலும் ஒரு பக்கம் பிடித்துக்கொண்டாள். இருவரும் அவரை கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தனர்.
சிவாவும் லாவண்யாவும் பதறி வந்து பார்க்க, குரு “பார்த்துக்க சிவா” என்று சொல்லி ஏரியா மருத்துவரை அழைக்க சென்றான். அவர் வந்து பார்த்து விட்டு தசைப்பிடிப்பு என்றார். வலிக்கு ஊசி, மருந்தெல்லாம் கொடுத்து சென்றார். லாவண்யாவும் சிவாவும் பள்ளி கல்லூரிக்குச் சென்றுவிட்டனர், குரு அம்மாவை பார்த்துக்கொள்ள விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தான். அவனே சமைத்தான்.
பதினொரு மணி போல் வெளியே நின்று குரு கருணாவோடு பேசிக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட பத்து வயதில் இருந்து குரு மலைக்கு செல்கிறான். எத்தனை துன்பம் வந்தபோதும் மனிதரை நம்பாமல் இருந்தபோதும் அவன் ஐயனை மறந்தது இல்லை. அவனுக்கு அவர் மட்டுமே துணை!!
“மனசே சரியில்லடா, அம்மாவை எப்படி தனியா விட்டு வரது?” குரு கவலையுடன் கருணாவிடம் சொல்ல
“எங்கம்மா இருக்குலடா பார்த்துக்கும் விடு” கருணாகரன் தேற்றினான். குருவுக்கு லாவண்யாவை மட்டும் அம்மாவுடன் தனியே விட்டு செல்ல மனமில்லை. கருணாகரனின் அம்மாவும் வயதானவர், அவருக்கு மாடியேறவே சிரமம். அவரை எப்படி அம்மாவை பார்க்க சொல்வது, பேசாமல் இன்னும் கூடுதலாக சில நாள் மாலையோடு இருக்கலாம் என்றாலும் வீட்டு சூழ்நிலை எப்படி இருக்குமோ என்ற கவலை.
“இங்க பாருங்க சாமி! போகணும்னு முடிவு பண்ணிட்டா கண்டிப்பா போயிடணும். எல்லாம் அவர் பார்த்துப்பார். எதாவதுன்னா அப்பா வாங்கி தருவார். அம்மாவை சமைச்சு தர சொல்றேன்” என்றான் கருணாகரன்.
குரு அமைதியாகவே இருந்தான். உணவு கூட பிரச்சனையில்லை, அம்மாவை அருகே இருந்து நான்கு நாட்கள் கவனிக்க வேண்டும். அவனுக்கு மனது சரியில்லை, வேண்டுதலையும் விட முடியவில்லை. தென்றல் இதனை கவனித்தவள் ஒரு முடிவோடு குருவின் முன் வந்து நின்றாள். இத்தனை நாள் அவனை பார்ப்பதை தவிர்த்தவள் இன்று அவன் கலங்கிய குரல் கேட்டு அப்படியே இருக்க முடியாமல் வந்துவிட்டாள்.
“என்னம்மா?” கருணாதான் பேசினான். குரு வழக்கம்போல் அமைதி.
“நான் பக்கத்துல இருந்து அம்மாவை பார்த்துக்கிறேன் குரு” என்றாள் தென்றல்.
“அவ்வளவுதான், தென்றல் பக்கத்துலயே இருக்கு. அம்மாவை பார்த்துக்கும். என்னடா?” என்று குருவைப் பார்க்க அவனுக்கு அதில் விருப்பமில்லை.
“உங்களுக்கு ஏன் கஷ்டம் தென்றல்? நீங்க ஸ்கூல் போகணும்” என்ற குருவை முறைத்தாள் தென்றல்.
“எனக்கு கஷ்டமா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் குரு” என்ற தென்றல் குரல் கமற “என்னோட அம்மாவை நான் நினைச்சாலும் பார்த்துக்க முடியாது, அவங்க இல்லை! என் அம்மாவை பார்த்துக்கிற மாதிரி அவங்களை பார்த்துப்பேன் ட்ரஸ்ட் மீ!” என்ற தென்றலின் வார்த்தையை நம்பினான் குருப்ர்சாத்.
“பார்த்துக்கோங்க தென்றல், தேங்க்ஸ் யூ” என்றான் மனதார. குருவின் முகம் அப்போது கொஞ்சம் தெளிவை காட்ட, தென்றல் மனமும் தெளிந்தது. குருவின் கலக்கம் அவளை வெகுவாக பாதித்தது.
“அம்மாவை பார்த்துக்க தேங்க்ஸ்லாம் வேண்டாம்” என்றாள் தென்றல் கண்டிப்புடன். குரு இமை மூடி தலையசைக்க, அவன் சின்ன சின்ன அசைவும் கூட தென்றலை அசைத்துப் பார்த்தது. அடக்கிவைத்தாலும் அவன்பால் சரியும் மனதினை தடுக்க முடியவில்லை. இருந்தும் அவள் அறிவு இதெல்லாம் ஈர்ப்பு, ‘உன்னை கவனிக்காதவன் என்பதால் அவன் உன் கவனத்தை அதிகம் ஈர்க்கிறான்’ என்று சொன்னது. போகும்போது இதெல்லாம் மறந்துவிடுவாய், பார்க்காதே! பழகாதே! என்று கட்டளை இட்டு தன்னை கட்டுப்படுத்தியிருந்தவள் எல்லாம் மறந்து குருவுக்காக பார்த்தாள்.
ஒருவழியாக குரு, சிவா, கருணாகரன் எல்லாம் அன்று மாலை இரயிலில் புறப்பட்டனர். தென்றல் ஆத்மார்த்தமாக அந்த நான்கு நாட்களும் கீதாஞ்சலியைப் பார்த்துக் கொண்டாள். குரு அடிக்கடி போன் செய்து லாவண்யாவிடம் அம்மாவின் நலன் கேட்டான். அதுவரை அடுத்த வீட்டுப்பெண்ணாய் இருந்த தென்றல் அந்த குறுகிய நாட்களில் அவர்கள் வீட்டுப்பெண்ணாக மாறியிருந்தாள்.
பிரியமானவர்களுக்கு பிரியத்தை, பிரியத்தை காட்டும் நேரத்தை தவிர வேறென்ன கொடுக்க முடியும்?? பிரிய போகிறோம் என்பதால் அதிகமாகவே தென்றல் கீதாவை பார்த்துக்கொண்டாள். குருவிடம் சொன்னது போல் அவள் அம்மாவைப் போல் கீதாவுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்தாள். அவள் சித்திகள் ராதாவும் மஹிமாவும் தென்றலை நன்றாகவே கவனிப்பார்கள், ஆனால் இவள் எதுவும் அவர்களுக்கு செய்ய முடியாது. தென்றலையும் சுகன்யாவையும் வேலை வாங்க கிருஷ்ணகுமார் விடவே மாட்டார்.
பெரிதாக சமையல் தெரியாத தென்றல், கீதா சொல்ல சொல்ல கேட்டு சமைத்தாள். கீதாஞ்சலியை தான் மிகவும் மிஸ் செய்வோம் என்று புரிய, அவளுக்கு ஏக்கத்தில் மனம் வலித்தது. கீதாஞ்சலிக்கும் லாவண்யாவுக்கும் தென்றலை இன்னும் அதிகமாக பிடித்தது. பிரிய நினைத்தவள் பிரியத்தால் அவர்களுடன் இன்னும் நெருக்கமாக பிணைந்து போனாள். இது பின்னாளில் வலிக்கும் என்று தெரிந்தாலும் அந்த அன்பினை பற்றிக்கொண்டாள் பாவை.
இதோ அடுத்த நாள் காலையில் குருவும் சிவாவும் வந்துவிடுவார்கள். தென்றல் இரவில் இத்தனை நாளும் அங்குதான் தங்கினாள். அன்றைய இரவு தென்றலுக்கு தூங்கா இரவு. லாவண்யாவும் கீதாவும் உறங்கிவிட, தென்றல் அடுத்த நாள் குரு வருவதற்கு முன் சென்றுவிட நினைத்தாள். ஹாலில் உட்கார்ந்தவள் அங்கிருந்த அவர்கள் குடும்ப படத்தை பார்த்தாள். குருவின் புன்னகை நிறைந்த முகம், அதிலும் எல்லாவற்றிலும் மகேந்திரன் மகனின் தோளில் கைப்போட்டு இருந்தார். இந்த நிறைவான புன்னகை இப்போது அவனிடம் இல்லை. தன் அப்பா நட்புக்கு துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரு குடும்பத்தை அல்லவா நொறுக்கிவிட்டார்.. குருவின் புன்னகை முகம் வெகுவாக ஈர்க்க, அந்த தடுமாற்றம் கூட தென்றலுக்கு பிடிக்கவில்லை. இதனை நினைத்து நிந்தித்தபடியே உறங்கினாள்.
அடுத்த நாள் குரு வந்தபோது தென்றல் அவன் வீட்டிலும் இல்லை, அவள் வீட்டிலும் இல்லை!!