சென்னையின் ஒரு பகுதியில் வரிசையாக குடியிருப்புகள் அணிவகுத்து நின்றன.அது நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பகுதி.அந்த பகுதியை சுற்றி பெரிய கட்டிடங்களும்,பள்ளி வளாகங்களும் இருந்தன.அந்த பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.
இரவு ஏழு மணி தனது அலுவலக வாகனத்தில் இருந்து இறங்கினாள் கயல்விழி.ஐந்தரையடி உயரம்,மாநிறம் கலையான முகம் ஆனால் இன்று பணி சுமையின் காரணமாக சற்று சோர்ந்து போய் இருந்தது.வாகனத்தில் இருந்து இறங்கியவள் நேராக பக்கத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் சென்று தனக்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தாள்.அவளது வீடு ஒரு சிறிய படுக்கை அறை மட்டுமே கொண்டது.அதில் ஒரு பக்கம் கட்டில்,அதன் அருகிலேயே சிறிய டேபிளில் மின்னடுப்பு ஒன்று இருக்கும்.
வீட்டில் நுழைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தனக்கு ஒரு காப்பியை போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.டீவியை ஆன் செய்ய அதில்,
“ப்பா…நியூஸ் சேனலை பார்த்தாலே பயமா இருக்கு இப்பெல்லாம்…யார் யாரை வெட்டுனாங்களோ,இல்லை வேறு எதாவது இருக்குமோனு….ச்சை…”என்று தனக்குள் புலம்பிக் கொண்டு சேனலை மாத்தி ஒரு பாட்டு சேனலை வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.
கயல்விழி பொதுவாக பயப்படும் ரகம் இல்லை ஆனால் இந்த இரண்டு வருடங்களாக அனைத்திற்கும் பயம் தான் அது தான் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதினால் மட்டும் வந்தது கிடையாது தான் செய்த மன்னிக்க முடியாத பல தவறுகளின் காரணத்தாலும் வந்தது.
தவறுகள் இழைப்பது மனித இயல்பு ஆனால் தெரிந்தே செய்யும் சில தவறுகள் காலத்தால் கூட அழியாதது.அந்த இடத்தில் தான் இருந்தாள் கயல்விழி.
“ப்ச்…கயல் இப்ப எதுக்கு பழசை நினைக்குற….அதனால உனக்கு வலி மட்டும் தான் கிடைக்கும்…வேண்டாம்…”என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.ஆனால் எதை நினையாதே என்று மூளை கூறினாலும் மனது அதையே சுற்றி வரும் இது மனத இயல்பு அதே போல் தான் கயலுக்கும் எதை மறக்க வேண்டும் என்று நினைத்தாளோ வழக்கம் போல் அதுவே நினைவடுக்குகளில் வந்து அவளை அலைக்கழிக்க தொடங்கியது.
குருநாதன்,பார்வதி தம்பதியருக்கு மூன்று மகள்கள்.வனிதா மூத்தமகள் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது.இரண்டாவது மகள் கயல்விழி.நந்திதா வீட்டின் கடைக்குட்டி.மூன்று மகள்களில் கயல்விழி தான் சற்று செல்லம் அதிகம்.குறைபிரசவத்தில் பிறந்ததினால் கயல் குழந்தையாக இருக்கும் போது அவள் பிழைப்பதே அரிது என்று மருத்துவர்கள் கூறிவிட குருநாதனும்,பார்வதியும் பல தெய்வங்களை வேண்டி தான் அவள் பிழைத்தாள் அதனால் வீட்டில் கயல் என்றால் அனைவருக்குமே சற்று பிடித்தம் அதிகம் தான் அதிலும் குருநாதன் மகளை ஒன்றும் கூறிவிடமாட்டார்.
கயல்விழி அனைத்து சுட்டி தனங்களும் மிகுந்தவள்.எப்போதும் ஏதாவது வேண்டாத வேலைகள் செய்துவிட்டு வந்து பார்வதியிடம் திட்டுவாங்குவாள்.ஆனால் குருநாதன் அவளை ஒன்றும் கூறவிட மாட்டார் அதுவே பின்நாளில் அவளை முற்றிலுமாக வெறுக்க காரணமாகிவிட்டது.
“ப்பா….சாரிப்பா….என்கிட்ட பேசுங்கப்பா….ப்ளீஸ்….”என்று கயலின் வாய் தன்னாக புலம்ப தொடங்கியது.இது இந்த இரண்டு வருடங்களாக நடக்கும் ஒன்று தான்.குடும்பத்தை விட்டு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது வீட்டில் உள்ளவர்கள் யாரும் இவளிடம் பேசுவதில்லை.இவளே பல முறை நேரிலும்,கைபேசியிலும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டாள் ஆனால் யாரும் இவளின் தவறை மன்னிக்கவில்லை.எந்த தந்தையின் செல்ல பெண்ணாக இருந்தாளோ அவர் இவளின் முகம் பார்த்தே இருவருடங்கள் ஆகிறது.
கயல்விழி வீட்டில் எப்போதும் சேட்டை தான் அதே சேட்டை வெளியிடங்களிலும் சில நேரங்களில் தொடரும்.அதனால் வரும் விளைவுகளை பற்றி பெரிதாக அவள் கவலைப்பட்டதும் கிடையாது.பார்வதி தான் வீட்டில் அவளை சற்று அடக்குவது அதுவும் சில நேரங்களில் குருநாதனால் தடைப்பட்டுவிடும்.இவ்வாறு இருக்க பெரிய மகளுக்கு திருமணம் நிச்சியமானது ஒரு பெரிய இடத்தில்.
வனிதா பார்பதற்கு அழகு,கலை அனைத்தும் நிறைந்து இருப்பவள்.அதனாலே அவள் படித்து முடித்தவுடன் அவளுக்கு திருமணம் கூடிவிட்டது. அப்போது கயல்விழி தனது பொறியியல் படிப்பை முடித்து ஒரு மென்பொருள் நிறுவனதில் வேலையில் இருந்தாள்.
குருநாதனிற்கு முதலில் பெண்ணை சிறு வயதில் மணம் முடிக்க விருப்பமில்லை ஆனால் ராகவ் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க பார்வதி தான் கணவரிடம் பேசி சம்மதம் வாங்கினார்.திருமணமும் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
கயலும்,நந்தனாவும் தேவதைகள் போலவே இருந்தனர்.ராகவ்வின் தம்பி அஷ்வத்தின் கண்கள் அவ்வபோது கயலை வட்டமடித்தது.ஆனால் அது வெறும் பருவ ஈர்ப்பு தான் அதாவது அழகாக இருக்கும் பெண்கள் பார்த்தால் திருப்பி பார்க்கும் பார்வை மட்டுமே.ஆனால் அது புரியாத கயலுக்கு அஷ்வத்தின் பார்வை காதல் பார்வையாகவே தெரிந்தது.
திருமணம் முடிந்து மணமக்கள் வர போக இருந்த போது அஷ்வத்தும்,கயலும் பேச தொடங்கினர்.அஷ்வத் என்னவோ சாதரணமாக தான் பேசினான் ஆனால் கயல்விழிக்கு அனைத்தும் காதல் பாஷைகளாகவே இருந்தது.வனிதாவின் திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அஷ்வத்திற்கு பெண்பார்க்க தொடங்கியிருந்தனர் அவர்களின் வீட்டார்.
அஷ்வத் தன் சொந்த அத்தையின் மகளான அஞ்சலியை திருமணம் செய்ய விரும்புவதாக தனது பெற்றோரிடம் நேரிடையாக கூறிவிட அனைவருக்கும் அதில் சந்தோஷம் அதனால் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.வனிதா இந்த செய்தியை தன் வீட்டில் கூற இந்த விஷயம் அறிந்த கயல்விழி தான் கோபத்தின் உச்சிக்கு சென்றாள்.
“நான் கரக்டா தான் பேசுறேன் ப்பா….எனக்கு அஷ்வத் அத்தான பிடிச்சிருக்கு…கல்யாணம் பேசுங்கனு சொல்லுறேன்….”என்று அவள் கூறுவதை செய் என்று மறை பொருள் அதில் இருந்தது.
“என்ன பேசுறோம்னு யோசிச்சு தான் பேசுறீயாடி….அந்த பையனுக்கு அவங்க அத்தை பொண்ணு மேல தான் விருப்பம்னு சொல்லி தான் கல்யாணம் பேசியிருக்காங்க…இதுல நீ என்ன பேசிக்கிட்டு இருக்க…”என்று பார்வதி கோபமாக மகளை அடிக்க வர,
“கயல்ம்மா….இது விளையாட்டு விஷயம் இல்லைடா….என்ன நடந்துனு என்கிட்ட முதல்ல சொல்லு அப்புறம் நாம பேசலாம்….”என்று குருநாதன் பதட்டமாக கூற,கயல் வனிதாவின் திருமணம் முடிந்ததில் இருந்து அஷ்வத் தன்னிடம் பேசியது அனைத்தையும் கூறி முடித்தாள்.
“அந்த பையன் உன்னை விரும்புறேன்னு சொல்லுச்சா….”என்று பார்வதி கேட்க,கயல் அமைதியாக யோசித்துவிட்டு அப்படி எதுவும் அஷ்வத் தன்னிடம் பேசவில்லை என்று கூற,
“பின்ன என்னடி அந்த பையன் உன்கிட்ட சாதாரணமா தான் பேசியிருக்கு…நீ தான் அதை தப்பர்த்தம் கற்பிச்சிருக்க…அது உன் தப்பு….”என்று பார்வதி மகளுக்கு புரிய வைக்கும் நோக்குடன் கூற,
“நான் தப்பு இல்லப்பா….ப்பா…நீங்க வாங்க ப்பா…நாம போய் பேசுவோம்….எனக்கு அஷ்வத் அத்தானை ரொம்ப பிடிக்கும்…நீங்க வாங்கப்பா…நீங்க பேசினா ஒத்துப்பாங்க….”என்று கயல் தான் பிடித்த பிடியிலேயே இருக்க,
“பளார்….பளார்….”என்ற சத்ததில் கயல் தன் கன்னங்களை பிடித்தபடி ஒரு ஓரமாய் விழுந்தாள்.
“எல்லாம் உங்களை சொல்லனும்….செல்லம் ரொம்ப கொடுக்காதீங்கனு சொன்னேன் கேட்டீங்களா…இப்ப பாருங்க…என்ன பேசுறானு…இது என்ன கடையில கிடைக்கிற பொருளாடி…நீ கேட்டவுடனே வாங்கி கொடுக்க…..வாழ்க்கை பிரச்சனை….ஒழுங்கா உள்ள போய் உன் வேலையை பாரு…..”என்று பார்வதி கயலை மிரட்டி அனுப்பி வைத்தார்.குருநாதனுக்கு அதிர்ச்சி மகள் இப்படி புரியாமல் செயல்படுகிறாளே என்று மனதளவில் நொந்து போயிருந்தார்.ஆனால் கயல் அவர்களை மேலும் நிலைகுலைய வைத்தாள் அதில் மொத்த குடும்பமும் அவளை வெறுத்து ஒதுக்கியது.
தன் வீட்டில் யாரும் தனக்கு உதவ மாட்டார்கள் என்று நினைத்த கயல் நேராக அஷ்வத்திடமே சென்று பேச அவனோ நான் உன்னை நேசிக்கவில்லை நல்ல தோழியாக தான் பார்த்தேன் என்று கூறினான் ஆனால் கயலுக்கு தான் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போக அவள் அஷ்வத்திடம் கெஞ்ச தொடங்க முதலில் தன்னால் முடிந்த மட்டும் கூறிப்பார்த்தவன் முடியாமல் போக இருவீட்டிலும் கூறிவிட்டான்.
அதன் விளைவு வீட்டில் பெரிய பிரச்சனை உருவானது அது இரு குடும்பத்திற்கும் மன கசப்பை உருவாக்கியது வனிதாவை புகுந்தவீட்டில் இருந்து விலக்க ராகவ் தான் அவளுக்கு துணையாக இருந்தான்.ராகவ் குடும்பத்தினர் கயலை பற்றி தரகுறைவாக பேச அது குருநாதனுக்கும்,பார்வதிக்கும் பெருத்த தலைகுனிவாகி போனது மகளால்,இது எதை பற்றியும் யோசியாமல் கயல் அவள் பிடியிலேயே இருக்க விளைவு அவளை வீட்டில் இருந்து வெளியேற்றியிருந்தார் குருநாதன்.
“எங்கு தவறினேன் நான்….மூன்று குழந்தைகளையும் நல்ல முறையில் தானே வளர்த்தேன் எப்படி ஒருவள் மட்டும் இப்படி…” என்று தன்னையே அடித்துக் கொண்டே மயங்கிவிட்டார் பார்வதி.
“எனக்கு இப்படி ஒரு மகளே இல்லைனு நினைச்சுக்குறேன்…இனி என் முகத்திலேயே முழிக்காத போ வெளியே….”என்று மனது முழுவதும் வெறுமையுடன் உடலாலும்,உள்ளத்தாலும உடைந்து போனார் குருநாதன்.வனிதாவிற்கு,நந்திதாவிற்கும் கயலின் மீது இதனால் ஒருவித வெறுப்பு உருவானது.
கேட்டவுடன் அனைத்தும் கிடைக்க பெற்றதால் இதுவும் கிடைக்கும் என்று நம்பிய கயல்விழிக்கு இது பெரிய அவமானமாக போனது.தான் செய்த செயல் தன் குடும்பத்தை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்பது எல்லாம் அவளுக்கு இரண்டாம் பட்சமாகி போனது தான் காலத்தின் கொடுமை.தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு ஆனால் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது அது தான் நடந்தது கயலின் வாழ்க்கையிலும்.
அனைவரும் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று அவர்களிடம் இருந்து பிரிந்து வந்து ஒன்றறை மாதங்கள் அவர்கள் அனைவரையும் முடிந்த மட்டும் திட்டிக் கொண்டு தான் இருந்தாள்.ஆனால் நாட்கள் செல்ல செல்ல கயலுக்கு ஏதோவொரு வெறுமை சூழ்ந்தது.தன் வீட்டை,தந்தையை மனது தேட துவங்கியது.இவ்வாறு ஒருநாள் கயல் தனது வீட்டிற்கு செல்ல அங்கு யாரும் அவள் முகத்தை கூட பார்க்கவில்லை உள்ளே வா என்றும் அழைக்கவில்லை.
“எதுக்குடி இங்க வந்து நிக்குற….உன்னால நாங்க பட்டது போதாத….இன்னும் என்ன இருக்குனு இங்க வந்து நிக்குற…போயிடுமா தாயே போயிடு…”என்று பார்வதி அவளை வாசலிலேயே அனுப்பிவிட்டார்.கயலின் தங்கை நந்திதா வெளியில் வந்து,
“க்கா…ப்ளீஸ் க்கா போயிடுக்கா….அப்பாக்கு இப்ப தான் உடம்பு கொஞ்சம் தேறி வருது….நீ இப்படி கலாட்டா பண்ணாத….திரும்பியும் வந்து பிரச்சனை பண்ணாதக்கா….இப்ப தான் கொஞ்ச நாள் முன்ன தான் வனிதாக்கா அவங்க வீட்டுக்கு போனாங்க….ப்ளீஸ்க்கா போயிடு….”என்று கைகளை கூப்பிவிட கயலுக்கு மனதில் நடுக்கம் பிறந்தது தன் தந்தையை நினைத்து,
“என்ன நந்து அப்பாக்கு என்ன….”என்று நடுங்கிய படி கேட்க,அவளின் கைகளை உதறிவிட்டவள்,
“எல்லாம் உன்னால தான் நீ செஞ்ச காரியத்தால தான்….வனிக்கா வீட்டுல எப்படி எல்லாம் பேசிட்டாங்க தெரியுமா….அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்து நாங்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா…போ போ…இனி நீ இங்க வராத….போ…எனக்கு என் அப்பா,அம்மா வேணும் போ…”என்று அழ,அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கயலை ஒருமாதிரி பார்த்துவிட்டு சென்றனர்.கயலோ தன் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என்று நந்திதா கூறியதிலேயே மூளை மறத்து நின்றுவிட்டாள்.
“நந்திதா….”என்று பார்வதி அழைக்க,
“வரேன் ம்மா….”என்று கூறிவிட்டு உள்ளே ஓடியவள் வாசல் கதவையும் அடைத்துவிட்டாள்.இனி கயல்விழி என்பவளுக்கு அந்த வீட்டில் மட்டுமல்ல உள்ளத்திலேயேயும் இடம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
முதல் முறையாக கயலுக்கு வாழ்க்கை அதன் பாடத்தை புகட்டிய நாள் அதுவாக தான் இருக்கும்.தன் குடுபத்தில் நேசித்தவர்கள் தன்னை வெறுத்து ஒதுக்க தனிமை அவளை வாட்ட தொடங்கியது.அதில் தனியே வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என்று ஒருமுறை அவள் மாட்ட அதில் இருந்து விடுபட போராடும் போது தான் அவள் இதுவரை கண்டது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இனி காணப்போவது பாதுகாப்பற்ற வாழ்க்கை என்பதே பெண்ணிற்கு புரிந்தது.புரிந்து என்ன பயன் வீட்டில் பெரியவர்கள் கூறும் போது பெரிதாக தெரியாத ஒன்று இன்று தனியே நிற்கும் போது பயமுறுத்தியது.
அன்றிலிருந்து இதோ இன்றுவரை கயல்விழி என்பவள் முற்றிலும் மாறிவிட்டாள்.செய்த தவறுக்கு தினமும் அனைவரிடமும் மன்னிப்பை யாசிக்கிறாள் ஆனால் யாரும் அவளுக்கு மன்னிப்பை வழங்க முன்வரவில்லை.பயம் என்றால் என்ன என்பதை அறியாதவள் இன்று எதைக் கண்டாலும் பயந்து நடுங்குகிறாள்.ஆனால் தனது பலவீனத்தை மற்றவர்களிடம் காட்டமாட்டாள்.தனியே இந்த உலகை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை தான் ஆனாலும் செய்த தவறை திருத்திக் கொண்டும் அனைவரிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டும் வாழ்க்கையில் தனியாக போராடுகிறாள்.ஒரு பெண் தனியாக இருப்பதில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்று நன்கு புரிந்து கொண்டாள்.இனி வாழ்க்கையில் அனைத்திற்கும் யோசித்து பெரியவர்களின் ஆலோசனை படிதான் நடக்க வேண்டும் என்று கயல்விழி புரிந்து கொண்டாள்.
ஆனால் அவள் செய்த மற்றொரு மிகப்பெரிய தவறு அவளின் வாழ்க்கையே மாற்ற போகிறது பாவம் கயல்விழி அப்போது அறியவில்லை.இனி தான் அவள் வாழ்க்கையில் பல சூறாவளிகளை காணப்போகிறாள்.இதுவரை தனியாக கடந்து வந்தவளை இந்த சூறாவளி முற்றிலுமாக நிலைகுலை செய்யப்போகிறது.முன்னாட்களில் நாம் செய்யும் சில காரியங்கள் பின்னாட்களில் நம்மை தாக்கும் என்பது விதி அதை யாராலும் மாற்ற முடியாது அதில் கயல்விழி மட்டும் விதி விலக்கா என்ன.