இரவு வேளை தனது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி இருந்தான் சத்யா.மனது அமைதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.வீட்டின் கடிகாரம் இரவு பன்னிரெண்டு என்று நேரத்தைக் காட்டியது.ஆனால் அவனின் கண்களில் பொட்டு தூக்கமில்லை.முகத்தில் மிதமிஞ்சிய களைப்பு இருந்தது தான் ஆனால் அவனால் கண்களை மூடத்தான் முடியவில்லை.ஒருவித எரிச்சல்,மூர்க்க தனமான கோபம் இரண்டும் அவனை ஆட்டி படைக்க,
“ஆஆஆஆஆஆ…..”என்று கத்திக் கொண்டே கைகளை சுவற்றில் ஓங்கி குத்தினான்.
“ஏன்டீ…ஏன்….ஏன் என் வாழ்க்கையில திரும்பி வந்த….உன்னால நான் நிம்மதி இழந்தது பத்தாது…உன்னை பார்த்தாலே மனசு பத்திக்கிட்டு எரியுது என்ன செய்யறதுனே தெரியலையே…ஏன் இப்படி உன்னை உயிர் உருக நேசிச்சேனோ என்னை வாழவும் விடாம சாகவும்விடாம கொல்லுற…”என்று கத்திக் கொண்டிருந்த சமயம் அவனின் கைபேசி இசைத்தது.
“ப்ச் இவருக்கு வேற வேலையே இல்லை….என்னை கண்காணிக்கிறது தான் முதல் வேலையா வச்சிருப்பார் போல….இவரை….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு கைபேசியை எடுக்காமல் அனைத்து வைத்தான்.அவனது தாய்மாமா கலைவாணன் தான் அழைத்தது.ஏற்கனவே கோபத்தில் உள்ளவன் ஏதாவது வார்த்தைகளால் அவரை வதம் செய்தாலும் செய்துவிடுவான்.ஆனால் அவரும் இவனுக்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூப்பித்தார்.
“சார்….”என்றபடி அவனின் கீழ் வேலை செய்பவர் நின்றார்.
“என்ன சண்முகம் என்ன இந்த நேரத்தில….”என்று கேட்க,
“சார் உங்க மாமா போன்ல…பேசுங்க….”என்று கூறியவாரே தன் கையில் வைத்திருந்த கைபேசியை நீட்டினார்.இவரை என்று பல்லைக் கடித்துக் கொண்டு அதை வாங்கியவன்,
“யோவ்….”என்று ஆரம்பித்து அவரை வசைமாரி பொழிந்தான்.
“அச்சோ…இவரு நம்மகிட்ட தான் இப்படி கோப்படுவார்னு நினைச்சா….எல்லார்கிட்டேயும் இப்படி தான் இருப்பார் போல….பாவம் தான் இவர் மாமா….அங்க என்ன பிரச்சனையோ…இந்த சமயத்தில போன் போட்டுருக்காரு…அதை புரிஞ்சிக்காம இவரு இப்படி திட்டிக்கிட்டு இருக்காரு….”என்று மனதிற்குள் புலம்ப மட்டுமே முடிந்தது சண்முகத்தால்.
சத்யா போனில் கத்திக் கொண்டிருக்க அந்தபக்கத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை வைத்துவிட்டாரா என்று பார்க்க இணைப்பில் தான் இருந்தது.
“ப்ச்….இவரை…”என்று தலையை தட்டிக் கொண்டவன்.பேசியை அனைத்து சண்முகத்திடம் கொடுத்து அவரை அனுப்பிவிட்டு தனது கைபேசியில் இருந்து அழைத்தான்.அழைப்பு ஏற்கப்பட்டவுடன்,
“சொல்லு…”என்று இவன் சலிப்பாக கூற,மீண்டும் மறுபக்கம் மௌனம் மட்டுமே,
“ப்ச்…ஒண்ணு பேசு இல்லை வை…”என்று கத்த,அதற்கும் பதில்லை.சற்று நேரம் மௌனமாக இருவருமே இணைப்பில் இருந்தனர்.
“மாமா…”என்று சத்யா அழைக்க,
“சொல்லுடா மவனே….”என்று மறுபக்கத்தில் இருந்து குரல் சற்று கரகரப்பாக வந்தது.
“ஏன் ஒருமாதிரி பேசுற….நான் ஏதோ கோபத்தில இருந்தேன்….அதான்….”என்று சத்யா தன் செயலுக்கான விளக்கத்தை கொடுக்க,
“நான் கேட்கவேயில்லையே…..”என்று அவர் கூற,
“சரி சொல்லு…எதுக்கு போன் போட்ட…”என்றான் நிதானமாக,
“ம்ம்ம்….இப்ப கொஞ்சம் பரவாயில்லையாடா….”என்று அவர் அக்கறையாக வினவ,கேட்டுக் கொண்டிருந்த சத்யாவிற்கு தான் உள்ளம் அடைத்தது.தான் இவ்வளவு பேசியும் தன் மீது அக்கறை காட்டுகிறாரே இவரை போல் ஒருவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ஆனால் ஏன் என் மனது இவரை போல் தன்னிடம் அக்கறை காட்டுபவரிகளின் பக்கம் போகாமல் தன்னை வஞ்சித்தவளின் அருகேயே போகிறது என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான்.
“அதை நான் சொல்லுறேன்டா மவனே….ஏனா நீ இன்னும் அவளை மறந்து வெளியில வரலை….”என்று அவனின் நாடிதுடிப்பை சரியாக பிடித்தார் கலைவாணன்.
“யோவ் மாமா….நீ ஏதாவது மந்திரம் தந்திரம் கத்து வச்சிருக்கியா….என் மனசுல நினைச்சதெல்லாம் கரட்டா சொல்லுற….”என்று சத்யா சற்று சிரித்துவிட்டான்.
“ம்ம்ம்….மாய மந்திரம் எல்லாம் படிக்கலை ஆனா என் மகனை நான் படிச்சிருக்கேன்…..எனக்கு அவனோட ஒவ்வொரு நடவடிக்கையும் அத்துபடி…..”என்று கூற,
“அது என்னவோ உண்மை தான்….அம்மாவை விட நீ தான் என்னை கரட்டா புரிஞ்சி தெரிஞ்சி வச்சிருக்க…..”என்று கூறினான்.
“உனக்கு என்னை கண்காணிக்கிறதே வேலையா போச்சு….எனக்கு என்ன செய்யனும்னு தெரியும் உன் வேலையை பாரு….”என்று மட்டுபட்டிருந்த கோபம் மீண்டும் துடித்தெழுந்தது.
“நான் என் வேலையை தான் பார்த்துகிட்டு இருக்கேன் சத்யா….நீ எனக்கு பதில் சொல்லு….”என்றவரின் குரல் தோணி மாறியிருந்தது.
“ப்ச்…..அவளை இங்க பார்த்தவுடனே எனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்திடுச்சு…அதான் அவளை நாலு காட்டு காட்டினேன்….வேறெதும் இல்லை….”என்று சத்யா கூற,
“உன்கிட்டேந்து இதை நான் எதிர்பார்க்கல சத்யா….”என்று கலைவாணன் கண்டிப்புடன் கூற,இப்போது சத்யா மௌனமாக இருந்தான்.என்ன இருந்தாலும் அவன் செய்தது தவறு தானே அதுவும் மக்களை காக்க வேண்டியவனே இப்படி செய்தது அவனுக்குமே சற்று உறுத்தல் தான்.என்ன தான் மூளை தவறு என்று கூறினாலும் மனது வேறாக இருக்க பலமுறை தன் மூளை கூறியதை கேட்டவன் இன்று மனது சொல்படி கேட்டுவிட்டான்.
“ப்ச் விடு மாமா….சும்மா மிரட்டினேன் அவ்வளவு தான்….அவ செஞ்சதுக்கு அவளை கொன்னு தான் போடனும்…நான் மிரட்டிட்டு தான் வந்திருக்கேன் அதுக்கே இப்படி கோச்சிக்கிற….”என்று சத்யாவும் பதிலுக்கு பேச,
“ஹம்….டேய்…அவ தப்பு பண்ணிட்டானு தான் அவளை உன் வாழ்க்கையிலிருந்து நகரத்தினேன்….இப்ப நீயே எதுக்கு திருப்பியும் அவளை உன் வாழ்க்கைக்குள்ள கொண்டுவர….சத்யா நான் சொல்லுறத கேளு….”என்று கலைவாணன் கூற,
“நீ சொல்லுறத தான் பிறந்ததிலேந்து நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்….”என்று சத்யா சற்று சலிப்பாகவே கூற,
“டேய் மகனே….உன் மனசுல இன்னமும் அந்த பொண்ணு இருக்காளா….”என்று அவர் சத்யாவின் நாடியை சரியாக பிடிக்க,
“அவளை பத்தி பேசாத எரிச்சலா இருக்கு…”
“ம்ம் இப்ப கூட உன்னால அவ என் மனசுல இல்லைனு திடமா சொல்லமுடியல இல்ல…..”என்று அவர் விடாமல் கேட்க,சத்யா சற்று திணறி தான் போனான்.அவர் கேட்பது சரி தானே என்னால் ஏன் அவ்வாறு கூற முடியவில்லை என்று சுய அலசலில் இருக்க,கலைவாணன் தொடர்ந்தார்,
“சத்யா….உனக்கு புத்திமதி சொல்லுற நிலை எல்லாம் நீ கடந்து வந்துட்ட….இப்ப நீ ஒரு காவல் அதிகாரி….உனக்கு எது தேவையோ அதை நீ தேர்ந்தெடுக்கலாம் உனக்கு முழு உரிமை இருக்கு….அதுக்கு நான் என்னைக்குமே குறுக்க நிக்க மாட்டேன்….”
“அதில்லைடா….உனக்கான இணைய தேர்ந்தெடுக்கும் போது நீ கவனமா இரு….எனக்கு இதை வேற எப்படி சொல்லுறதுனு தெரியலை…இருந்தாலும் சொல்லம இருக்கவும் முடியலை…..”என்று கலைவாணன் பீடிகை போட,
“என்ன சொல்ல போற….இனி கயலை பத்தி யோசிக்காம நீ உன் வாழ்க்கையை அடுத்த கட்டம் எடுத்துட்டு போனு தான சொல்லபோற…”என்று அவரின் மகன் என்று நிரூபித்தான்.
“ம்ம்…அதுவும் தான்….அதோட ஒருவேளை உனக்கு அந்த பொண்ணு தான்….”என்று அவர் கூறும் முன்,
“மாமா…..வேற ஏதாவது பேசு….அவளை பத்தி பேசினா நான் என் கண்ட்ரோல்ல இருக்க மாட்டேங்குறேன்….”என்று சத்யா தன் உள்ளத்தை மறையாது கூறினான்.
“அது தான் தப்புனு நான் சொல்லுறேன்….நமக்கு ஒத்துவராதுனு நாம முடிவு பண்ணிட்டா நாம அதை திரும்பியும் பார்க்கக் கூடாது….அது நமக்கும் நல்லதுக்கு இல்லை அவங்களுக்கும் நல்லதுக்கு இல்லை….உனக்கு புரியும் நினைக்கிறேன்….ஒருவேளை அவளுக்கு கல்யாணம்….”என்று அவர் முடிக்கும் முன்,
“அதெல்லாம் இன்னும் ஆகலை…எல்லாம் விசாரிச்சிட்டேன்….இங்க தான் இரண்டு வருஷமா வேலை பார்க்குறா…”என்று சத்யா கூற,
“ஏன்டா குற்றவாளியை பிடிக்க சொன்னா….நீ என்ன பண்ணிகிட்டு இருக்க…”என்று கலை கோபம் போல கேட்க,சத்யாவின் முகத்தில் மென்னகை.அதை உணர்ந்து கொண்ட மனிதருக்கு உள்ளுக்குள் சற்று வருத்தம் தான் இன்னும் தன் மகன் பழைய நினைவில் இருந்து வெளிவரவில்லையே என்று.
“இனி நான் அவ பக்கம் கூட திரும்ப மாட்டேன்….நீ பயப்படாம இரு….”என்று சத்யா அவரின் உள்ளம் அறிந்து கூறினான்.
“அப்ப அம்மா உனக்கு பொண்ணு பார்த்திருக்கா…..பார்த்து பிடிச்சிருந்தா ஓகே….சொல்லு….”என்று அவர் கிடுக்குபிடி போட,அதில் எல்லாம் சிக்குபவனா அவன்,
“பார்க்கலாம்….பார்க்கலாம்….ஓகே வைக்குறேன்….எனக்கு வேலை இருக்கு….”என்று விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.அவரை பற்றி நன்கு அறிந்தவன் அவன் ஒருவனே.அதே போல் அவனை பற்றி முழுமையாக அறிந்தது அவர் ஒருவரே.
கைபேசியை வைத்த சத்யாவிற்கு மனது முழுவதும் தன் தாய்மாமனின் நினைவு தான்.அதே போல் கலைவாணனிற்கும் சத்யாவின் நினைவு தான்.
கலைவாணன் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தவர்.அவர் பணியில் இருந்த போதே ஒரு விபத்தில் தன் தாய்,தந்தையை இழந்துவிட தன் ஒற்றை தங்கை அமர்தாவிற்கு தாயாகவும்,தந்தையாகவும் இருந்து வழி நடத்தினார்.அமிர்தா பிறந்ததிலிருந்தே மிக பொறுப்பானவர் அதனால் தன் அண்ணனிற்கு எந்தவித கஷ்டமும் கொடுக்காமல் அவருக்கு உறுதுணையாக இருப்பார்.
கலைவாணன் தன் தங்கைக்கு தன் சிறுவயது நண்பனான சங்கரலிங்கத்தை திருமணம் செய்து வைத்தார்.சங்கரலிங்கம் குடும்பம் கோவையில் வலமான குடும்பம்.லிங்காவின் குடும்பத்தார் பணத்தைவிட மனிதனை மதிப்பவர்கள் அதனால் கலைவாணனிற்கு தங்கையை நல்ல இடத்தில் வாழ்க்கை அமைத்து கொடுத்தில் அத்தனை நிம்மதி.
அதன்பின் அவர் தன் வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காகவே தான் வாழ தொடங்கினார்.தனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார்.ஏனோ தனக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் என்று அவருக்கு மனதில் தோன்றவில்லை.அமிர்தாவும்,லிங்காவும் பலதடவை கூறி பார்த்தும் தன் முடிவிலிருந்து அவர் மாறவில்லை.அமிர்தாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து பிறந்தவன் தான் சத்யா.
கலைவாணனிற்கு சத்யா என்றால் உயிர்.அதேபோல் சத்யாவிற்கும் கலைவாணன் என்றால் உயிர்.இருவரும் நல்ல நண்பர்கள் போல தான் பழகுவார்கள்.சத்யாவின் பொறுப்பு முழுவதும் கலைவாணன் தான் பார்த்துக் கொண்டார்.லிங்காவும்,அமிர்தாவும் இதில் பெரும்பாலும் தலையிடமாட்டார்கள்.அவர்களுக்கு கலைவாணனின் மீது அவ்வளவு நம்பிக்கை அவர் தங்கள் மகனை நல்ல முறையில் கொண்டுவருவார் என்று.அவர்கள் நினைத்ததை போல் தான் சத்யாவும் வளர்ந்தான்.சிறு வயதிலேயே மிகவும் பொறுப்பாக இருப்பான்.
சத்யாவின் குடும்பம் வலமான குடும்பம் தான் என்றாலும் அவன் மிக சாதாரணமாக தான் வெளியில் அனைவரிடமும் பழகுவான்.அவனிடம் இருக்கும் திறமையை மெல்ல மெருகேற்றி இருந்தார் கலைவாணன்.அவனுக்கு காவல் துறையில் சேர விருப்பம் இருப்பதை அறிந்து அவனிற்கு தேவையான அனைத்தும் செய்து கொடுத்தார்.
அனைத்தும் நல்லவிதமாக போய் கொண்டிருந்த போது தான் கயல்விழி சத்யாவின் வாழ்வில் வந்தது.கலைவாணனிற்கு சற்று ஆச்சரியம் தான் சத்யா தன் காதலை பற்றி முதன் முதலில் அவரிடம் தான் பகிர்ந்திருந்தான்.அவருக்கு மனதில் ஒரு பயம் எங்கே மகன் காதல் என்றுவிட்டு தனது கனவை விட்டுவானோ என்று.ஆனால் அதை அவனிடம் கூறவில்லை.
“நீ பயப்படாத மாமா….எனக்கு எந்தளவுக்கு என் கயல் முக்கியமோ அதே அளவுக்கு என் கனவும் முக்கியம்….”என்று சத்யா தெளிவாக சொல்லிவிட அதன் பிறகே மனிதர் முழுமனதாக சந்தோஷித்தார்.ஆனால் இருவரின் சந்தோஷத்திற்கு காலம் மிக குறைவு போல அடுத்த ஓராண்டில் சத்யாவை அவர் கண்டது மிகவும் மோசமான நிலையில் தான்.
தன்னிலை மறந்து கயல்,கயல் என்று புலம்பிக் கொண்டிருந்தவனை பார்த்த கலைவாணனிற்கு உயிரே விட்டு போனது.சத்யாவின் நண்பன் நவீன் தான் அவருக்கு அனைத்தையும் கூற கொதித்து எழுந்துவிட்டார் மனிதர்.நவீனின் மூலம் கயலை பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டவர் அவளை தனியே அழைத்து இனி நீ என் மகனின் வாழ்வில் வராதே என்று மிரட்டி அனுப்பினார்.அதே சமயம் சத்யாவையும் இடமாற்றம் செய்தார்.
சத்யாவினால் கயலின் நினைவுகளில் இருந்து அவ்வளவு எளிதாக மீள முடியவில்லை.அவன் அடிக்கடி அவளை பார்க்க முனைய அவனை கலைவாணன் தான் மிகவும் கடினப்பட்டு அடக்கினார்.சத்யாவின் இந்நிலையைக் கண்டு அமிர்தாவும்,லிங்காவும் மிகவும் மனதொடிந்து போயினர்.ஆக அனைவரையும் தேற்றும் பொறுப்பு கலைவாணனின் தலையில் விழுந்தது.
முதலில் அமிர்தாவையும்,லிங்காவையும் ஒரளவிற்கு தேற்றியவர் சத்யாவை தேற்றுவதில் தான் மிகவும் கடினப்பட்டு போனார்.இதில் அமிர்தா,
“என் பிள்ளையை இப்படி செஞ்சிட்டு போயிட்டாளே பாவி….”என்று கயலை வசைபாடி கொண்டே இருக்க,சத்யா மனதளவில் மேலும் பின் தங்கி தான் போனான்.
சத்யாவின் நிலை மோசம் அடைவதை உணர்ந்தவர் அவனை நல்ல மனநில மருத்துவரிடம் காட்டினார்.அவனோ எதிலேயும் பற்று அற்றவனாக இருக்க ஒருநிலைக்கு மேல் முடியாமல் விட்டார் ஒரு அறை,
“என்னடா…என்ன நினைச்சுக்கிட்டு இருக்க….ஆங்….இங்க உனக்காக நாங்க எல்லாம் உயிரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கோம் நீ என்னடானா….ஏதோ செத்தவன் மாதிரி அலையிற….எவளோ ஒருத்தி உன்னை ஏமாத்திட்டா….இப்படி தான் உடைஞ்சு போவியா….இவ்வளவு தானா நீ….என் வளர்ப்பு அவ்வளவு தான்னு எனக்கு காமிச்சிட்ட டா….நல்லது….ரொம்ப நல்லது….உன் மேல எவ்வளவு கனவு எல்லாம் வச்சிருந்தேன்…எல்லாம் போச்சு…”என்று கலைவாணன் அழுதேவிட சத்யா தன் தவறை உணர்ந்தான்.
திடமான மனிதரைக் கூட இந்த அன்பு சாய்த்துவிடும் என்பார்களே அதே போல் தான் கலைவாணனையும் சத்யாவின் மீது அவர் வைத்திருந்த அன்பு சாய்த்திருந்தது.தன் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்க அவரோ எனக்கு என் பழைய சத்யா மீண்டும் வர வேண்டும் என்று கூற வந்தான் அவருக்காக மட்டும் அல்லாது அவனுக்காவும் வந்தான்.இதோ முழு மனிதனாக,சிறந்த காவலனாக வந்துவிட்டான் அவரின் சத்யன்.
கலைவாணன் அவரின் நினைவில் இருந்து மீண்ட நேரம் சத்யாவும் அவனின் நினைவுகளில் இருந்து மீண்டிருந்தான்.
“எவ்வளவு கஷடப்பட்டிருக்காரு மாமா அவருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்????என் நலன் மட்டுமே அவரின் நலன் என்று வாழும் மனிதருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்????முடிந்த மட்டும் அவர் கூறுவதை கேட்டு நடந்தால் கூட அவருக்கு நான் செய்யும் பெரிய உபகாரம்….ஆம் அது தான் சரியானது…..”என்று தனக்குள் ஒரு முடிவுடன் கூறிக் கொண்டான் சத்யா.
“இனி கயல்விழி என்பவள் என் வாழ்க்கையில் இல்லை….இல்லவே….இல்லை….”என்று ஒரு முடிவை எடுத்துக் கொண்டு தான் விழிகள் மூடினான்.ஆனால் அவன் எடுத்த முடிவுகள் எல்லாம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது.அதுவும் கயல்விழி அவனை தேடி காவல் நிலையத்திற்கே வந்து நிற்கவும் அனைத்தும் மறந்து போனது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.