“எங்கடா தொலைஞ்சான் அந்த ராபின்….எங்க அவன்….”என்று பல்லிடுக்கில் கத்திக் கொண்டிருக்க,அப்போது அந்த இரும்பு கதவை திறந்து கொண்டு ஓடி வந்தான் ராபின்.
“ண்ணா….இதோ இது தான் ண்ணா….அந்த பொண்ணு என்று ஒரு போட்டாவைக் காட்ட…”அதை வாங்கி பார்த்தவன் கண்களில் இருந்தது ரசனையா,இல்லை கொலை வெறியா என்று பிரித்தறிய முடியவில்லை.
“நீ செஞ்சது வரைக்கும் போதும் அடங்கி இரு….இல்லை….”என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.இனி தான் என்ன கூறினாலும் தன்னை கொன்றுவிடுவான் என்று புரிந்தது ராபினுக்கு அதனால் அவன் அமைதியாகிவிட்டான்.ஆனால் மனதில் ஒருவித வன்மம் ஓடிக் கொண்டிருந்தது.அதுவே அவர்க் அழிவின் தொடக்க புள்ளியாக இருக்கபோகிறது என்பதை அவன் அறியவில்லை.
ரத்னம் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினான்.அந்த பெண் மட்டும் ஏதாவது கூறிவிட்டாள் அவன் கட்டிக் கொண்டிருக்கும் சாம்ராஜியம் அனைத்தும் இடிந்து போகுமே.என்ன செய்வது எப்படி செய்வது என்று யோசிக்க தொடங்கினான்.
மருத்துவமனையில்,
அனன்யாவிற்கு அவசர பிரிவில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க.சத்யா அனுவின் அம்மா,அப்பாவிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.சத்யாவின் ஒரு கண் அருகில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த கயலின் மீதும் இருந்தது.அவனுக்கு புரிந்தது அவள் மிகவும் பயந்து போய் உள்ளாள் என்று.அப்போது அனு இருந்த அவசர பிரிவின் கதவு திறக்கப்பட அனைவரும் அங்கே ஓடினர்.
“டாக்டர்….என் பொண்ணுக்கு…என்ன ஆச்சு…”என்று ஆர்த்தி அழுது கொண்டே கேட்க,
“சொல்லுங்க டாக்டர்….அனு அவ….”என்று கூற முடியாமல் ராஜேஷ் தடுமாற,
“உங்க பொண்ணுக்கு அளவுக்கு அதிகமான டிரக்ஸ் கொடுத்திருக்காங்க…..”என்று கூற,
“அய்யோ….கடவுளே….”என்று ஆர்த்தி அழ தொடங்கினாள்.
“சார்…அந்த பொண்ணு…அது வேற….”என்று சத்யா குறிப்பாக மருத்துவரிடம் கண் காட்டி கேட்க,
“இல்லை….நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்கலை….ஆனா முயற்சி பண்ணியிருக்காங்க….பட் உங்க பொண்ணு போராடியிருக்கனும் தோணுது….அவனுங்க அதிகமான டிரக் கொடுத்தால இந்த பொண்ணுக்கு மூச்சு பேச்சு இல்ல..இப்போதைக்கு அவங்க ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க….அதனால பயம் இல்லை…..”என்று மருத்துவர் கூறி சென்றார்.
மருத்துவர் கூறியதைக் கேட்ட ஆர்த்தி மயக்கத்திற்கே சென்றுவிட்டாள்.ராஜேஷோ பிரம்மை பிடித்தவன் போல் நின்றுவிட்டான்.அவனுக்கு மகள் திடீர் என்று காணும் என்ற தகவலே பெரிய அச்சத்தை கொடுத்திருக்க இப்போது இவர்கள் கூறுவதைப் பார்த்தால் வெறு ஏதோ இருக்கும் போலவே என்று நினைத்தவனுக்கு கால்கள் நிற்கமுடியாமல் தடுமாற,சத்யா தான் அவனை பிடித்து அமர வைத்தது.
கயல்விழி ஆர்த்தியை பிடித்து அவளின் முகத்தில் நீரை தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தாள்.கயல்விழிக்கு மனது அனுவை மட்டுமே சுற்றி இருந்தது என்ன நடந்திருக்கும் என்று ஒரு நிலையில் இல்லாமல் அல்லாட.ஆர்த்தியை மெல்ல எழுப்பி அருகில் இருந்த நாற்காலியில் அமர செய்தவள்,ஏதோ யோசனையுடன் இருக்க,
“கயல்….”என்ற சத்யா அழைக்கவும் நிகழ்வுக்கு வந்து அவனை ஏறிட,அவனோ என் பின்னே வரும் படி கண் காட்டினான்.அதை புரிந்து அவனின் பின்னே சென்றாள்.
“உனக்கு அனுவை பத்தி என்ன எல்லாம் தெரியுமோ சொல்லு….”என்று அனுவை பற்றி அவளுக்கு தெரிந்த விடயங்களை கூறினாள்.அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட சத்யாவின் மூளை சில கணக்குகளை போட்டுக் கொண்டது.அதற்குள் அந்த இடத்திற்கு சண்முகம் வர அவரிடம் வந்தவன்,
“என்ன சண்முகம் ஏதாவது கிடைச்சுதா….”என்று கேட்க,
“சார் ஆட்டோ புதுசு சார்….இன்னும் ரிஜிஸ்டர் பண்ணல…..ஆட்டோ ஸ்டான்டுல விசாரிக்க சொல்லிருக்கேன் சார்….”என்றவர் சத்யாவிடம் ஒரு கோப்பை நீட்ட அதை வாங்கியவன்,
“வெயிட் பண்ணுங்க…வரேன்….”என்றுவிட்டு நேராக ராஜேஷிடம் சென்று கம்பளைண்ட் எழுதி கேட்க,ஆர்த்தியோ வேண்டாம் என்று மறுத்தாள்.
“வேணாம் சார்…என் பொண்ணு நல்ல படியா கிடைச்சா போதும்….எங்களால போலீஸ் கேஸுனு அலையமுடியாது….அவ பயந்துடுவா….வேண்டாம் விட்டுருங்க….”என்று கெஞ்ச,ராஜேஷூம் அதையே கூற,அதுவரை அமைதியாக இருந்த கயல் இருவரின் பேச்சை கேட்டு கொதித்து எழுந்துவிட்டாள்.
“நீங்கெல்லாம் என்ன படிச்சிருக்கீங்க….உங்க பொண்ணு மாட்டியிருக்கிறது ஏதோ பெரிய கும்பல் கிட்ட….அது கூட புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க….உங்களுக்கு எல்லாம் பணம் அது மட்டும் தான் முக்கியம் இல்ல….உங்க பொண்ணு என்ன பண்ணுறானு கூட பார்க்க நேரமில்லை….நீங்கெல்லாம்….ச்சை….இதே மாதிரி திரும்ப நடந்தா எங்க போவீங்க….”என்று அவள் கத்த,
“கயல் அமைதியா இரு…..நான் பார்த்துக்குறேன்…..”என்று சத்யா அவளை அடக்கினான்.அவளுக்கு மனது ஆறவேயில்லை.தன்னையே சுற்றி வரும் அனு இன்று இப்படி இருக்க இவர்களும் தானே ஒரு காரணம்.
“இங்க பாருங்க ராஜேஷ்…..அவங்க நினைச்சிருந்தா என்ன வேணா செய்திருக்கலாம் ஆனா ஏன் அவங்க அனுவை வேற இடத்துக்கு கூட்டிக்கிட்டு போகனும்…இதுல வேற எதுவோ இருக்கு….இதனால உங்க பொண்ணுக்கு இன்னும் ஆபத்து இருக்கு….அதை புரிஞ்சிக்குங்க….”என்றவன் ராஜேஷிடம் பேசியே கையெழுத்து வாங்கியிருந்தான்.சண்முகத்திடம் கம்பிளைன்ட் அடங்கிய பைலை கொடுத்துவிட்டு மேலும் சிலவற்றை சொல்லி அவரை பார்க்கும்படி கூறி அனுப்பினான்.
“நீங்க எதுக்கும் பயப்பாடதீங்க….பார்த்துக்கலாம்…”என்று சத்யா ராஜேஷிடம் கூறிவிட்டு கயலை பார்க்க அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.இவ வேற அப்பப்ப ஏதோ யோசனையிலேயே இருக்கா என்னனு தான் புரியமாட்டேங்குது.
“இவளை பார்க்கவே கூடாதுனு நினைச்சேன்…ஆனா….”என்று தலையை உலுக்கிக் கொண்டவன்,அவளின் அருகே நெருங்கி,
“கயல்….”
“ஆங்….சொல்லு சத்யா…”என்றவள் சற்று என்று தன்னை தட்டிக் கொண்டு,
“ஆங் என் வீட்டுக்கு தான் வா……”என்று அவனும் அவளை போலவே கூற,கயல் திருதிருத்தாள்.அதை பார்த்தவனுக்கு இதழோரம் சிரிப்பில் விரிந்தது ஆனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு,
“வா….இப்போதைக்கு உன்னை அழைச்சிட்டு போற எண்ணமெல்லாம் இல்ல….”என்று அவன் கூற,கயலுக்கு தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
“அப்ப எப்போ அழைச்சுட்டு போவாராம் இவரு…”என்று மனதிற்குள் கவுண்டரும் கொடுத்துக் கொண்டாள்.பின்னே வெளியில் சொன்னாள் யார் அவனிடம் அரை வாங்குவது அது மட்டும் நம் கயல் சுதாரிப்பு தான்.ஆனால் அவளின் விதியோ அவளை அவனிடம் சிக்க வைக்க பக்கவாக திட்டம் போட்டிருப்பதை அவள் அறியவில்லை.
சத்யாவும்,கயலும் இப்போது மருத்துவமனை வராண்டாவில் நின்றிருந்தனர்.
“ச்சு….உன்னை பார்த்தாலே நான்….”என்று கூறி தன் தலையை தட்டிக் கொண்டான்.கயலோ தன் கன்னங்களை இரு கையாலும் மூடிக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அய்யோ….எனக்கு வாய் சரியில்லை போல….இவருக்கிட்ட வாங்கி வாங்கியே கன்னம் பழுக்க போகுது….”என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.
“உன்கிட்ட சொன்னேன் பாரு….என்னை சொல்லனும்….என்னவோ பண்ணு….”என்று கத்திவிட்டு அவன் சென்றுவிட்டான்.கயல்விழிக்கு இப்போது எதை பற்றியும் சிந்திக்கும் நிலையில் இல்லை.அவளின் மூளை முழுவதும் அனு மட்டுமே நிறைந்திருந்தாள்.சத்யா கத்திவிட்டு சென்றவுடன் கயல் அவசர சிகிச்சை பிரிவின் முன் அமர்ந்திருந்த ஆர்த்தியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.அங்கு யாருக்கும் தூக்கம் என்பது இல்லை.உள்ளே போராடும் ஒரு உயிருக்காக வெளியில் பல உயிர்கள் துடித்துக் கொண்டிருந்தன.
சத்யா தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தான்.ஆனால் மனதில் கயலின் நினைவு தான் அவனை வாட்டியது.நான் ஏன் அவளை பத்தி கவலை படனும்.எனக்கு ஏன் புத்தி அவளை பார்த்தவுடனே மழுங்கி போயிடுது தான் தெரியலை.ஆனா அவளுக்கு திமிரு,திமிரு நான் அவ்வளவு சொல்லியும் கேட்க கூடாதுனே இருப்பா திமிருபிடிச்சவ என்று தன் வீடு வரும் வரை கயல்விழியை திட்டி தீர்த்தான்.
தன் வீட்டிற்கு வந்ததும் வேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அமர்ந்தான்.இப்போது அவனது மனதில் அனன்யாவின் கேஸ் பற்றிய எண்ணங்களே இருந்தது.முதலில் கயல்விழி கூறிய விபரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் மனதில் கொண்டு வந்தவன்,அந்த ஆடவனை பற்றி கயல் கூறியதையும் தன் மனதில் நோட் செய்து கொண்டான்.
இப்போது அனுவின் கைபேசியை ஓபன் செய்து ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினான்.மருத்துவமனையில் அவளை அனுமதிக்கும் போதே அவளின் உடைமைகள் சத்யாவின் கையில் வந்திருந்தன.அதனால் அவளுடைய கை பையில் வைத்திருந்த பேசியும் அவனிற்கு கிடைத்திருந்தது.அதில் ஏதாவது புகைபடம் கிடைக்கிறதா என்று பார்த்தவனுக்கு அவன் நினைத்தை போல எதுவும் கிடைக்கவில்லை.ஒரு குறுஞ் செய்தியும் இல்லை.அதில் பதிவாகியிருந்த நம்பர்களை குறித்துக் கொண்டு,தனக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் சில தகவல்களை திரட்டி தருமாறு கூறினான்.
அவன் போட்டோ கூட இந்த பொண்ணு போன்ல இல்லை.எல்லாமே பக்கவா பிளான் பண்ணிருக்காங்க.இந்த பொண்ணு தான் போய் மாட்டியிருக்கு.அவனோட பிளான் வேற எதுவோ இந்த பொண்ணை கடத்தி விக்க பார்த்திருப்பாங்களோ இல்லை வேற ஏதாவதா????என்று பலவாறு சிந்தனை செய்தவன்.பின் தன் போலீஸ் மூளைபடி சிந்திக்க தொடங்கினான்,
“அவன் அளவு தெரியாம டிரக்ஸை கொடுத்திருக்கனும் அதுல இந்த பொண்ணுக்கு மூச்சு இல்லாம போயிருக்கும்….இந்த பொண்ணு இறந்துட்டானு நினைச்சு தான் எங்கோ தூக்கிட்டு போக நினைச்சிருப்பான்……அப்படி போகும் போது நான் பின்னாடி வரது தெரிஞ்சதும் அவன் பொண்ணை விட்டு போயிட்டான்….அப்ப கண்டிப்பா அவன் அனுவை திரும்பியும் தூக்க முயற்சி செய்வான்…”என்று நினைத்தவன் மருத்துவமனை வாயிலிலும் இரு காவலர்களை ரோந்து பணி செய்வது போல் இருக்க உத்தரவிட்டான்.ஏற்கனவே அனு இருக்கும் அறையின் முன் இரு காவலர்களை இருக்க சொல்லிவிட்டு தான் வந்திருந்தான்.
காலை ஒன்பது மணிக்கெல்லாம் சத்யா மருத்துவமனையில் இருந்தான்.கயல்விழி ஆர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.ராஜேஷ் சில மருந்துகள் வாங்க சென்றிருந்தான்.அப்போது அனுவின் அறையில் இருந்த வெளியில் வந்த நர்ஸ்,
“சார் அவங்க கண்முழிச்சிட்டாங்க…”என்று விட்டு உடனே மருத்துவருக்கு தகவல் கொடுத்தார்.மருத்துவர் வந்து அனுவை ஒருமுறை பரிசோதித்துவிட்டு வெளியில் வந்து,
“கண் முழுச்சிட்டாங்க,ஒவ்வொருத்தரா போய் பாருங்க…அப்புறம் அவங்களை ரொம்ப ஸ்டிரெயின் பண்ண வேண்டாம்….”என்று சத்யாவை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.
அனு விழித்துவிட்டாள் என்றவுடன் முதலில் ஆர்த்தியும்,ராஜேஷும் தான் போய் பார்த்தனர்.கயல்விழியும்,சத்யாவும் வெளியில் நின்று கொண்டனர்.சற்று நேரத்திற்கு எல்லாம் ராஜேஷ் வெளியில் வந்து வாயை மூடிக் கொண்டு அழ தொடங்க,கயலுக்கு பதட்டமானது அவள் வேகமாக அறைக்குள் போக முற்பட அவளின் கையை பிடித்து தடுத்த சத்யா,
“வெயிட் பண்ணு….நீ பதறி அந்த பொண்ணையும் பதற வச்சிடாத….”என்று கூற,
“இல்லை….நான் பார்க்கனும் விடுங்க….”என்று அவனின் கையை எடுத்துவிட்டு உள்ளே நுழைந்துவிட்டாள்.அங்கு ஆர்த்தியோ அனுவின் கைகளை பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள்.அனுவின் பார்வையோ எங்கோ வெறித்த வண்ணம் இருந்தது.அதைக் கண்ட கயலுக்கு உள்ளம் நடுங்கியது இருந்தும் தன்னை திடப் படுத்திக் கொண்டு அனுவின் அருகே நெருங்கியவள் அனுவின் தோள்களில் கை வைக்க,அவளை திரும்பி பார்த்த அனு கண்கள் கலங்க,
“கயலக்கா….”என்று மிக மெல்லியதாக அழைக்க,அவளின் அந்த அழைப்பே கயலுக்கு ஏதோ உடல் முழுவதும் ஒரு வலியை பரவ செய்ய அவளை மென்மையாக அனைத்துக் கொண்டாள்.அனுவின் கை,கால்கள் எல்லாம் நடுங்கியது.ஒரு கட்டத்தில் அந்த நடுக்கம் அதிகரிக்க,
“அய்யோ…டாக்டர்….என் பொண்ணுக்கு ஏதோ பண்ணுதே….அனும்மா….அம்மாவை பாருடா….”என்று ஒருபுறம் கத்த,சற்று நேரத்திற்கு அந்த இடம் மீண்டும் பரபரப்பானது.ஆர்த்தி,ராஜேஷின் கைகளை பிடித்தபடி அழுது கொண்டிருக்க,சத்யாவோ கயலை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் முறைத்துக் கொண்டிருந்தான்.
கயல்விழிக்கு அனுவின் அழுகையும்,கலங்கிய முகமும் மனதை பிசைந்தது.சின்ன பட்டாம்பூச்சி போல் திரிந்தவள் இன்று நினைக்கவே முடியவில்லை அவளால்.அப்போது அனுவின் அறையில் இருந்து வந்த மருத்துவர்,
“இங்க கயல்ன்றது யாரு….”என்று கேட்க,கயல் வேகமாக எழுந்து,
“நான் தான் சார்….”என்று கூற,
“உங்களை தான் கூப்பிடுது அந்த பொண்ணு….”என்றவர் மற்றவர்களிடம்,
“டிரக்ஸ் டோஸேஜ் அதிகம் அதனால அவங்களுக்கு கொஞ்ச நாளைக்கு இப்படி கை,கால் எல்லாம் நடுங்க தான் செய்யும்….கொஞ்சம் கவனமா இருங்க….”என்றுவிட்டு சென்றார்.
கயல் அனுவின் அறையின் உள் நுழைய அவளை பார்த்தவுடன் அனு தன் கைகளை உயர்த்த முயன்று தோற்றாள்.அதை புரிந்த கயல் வேகமாக அனுவை நெருங்கி அவளின் கைகளை பிடித்துக் கொண்டு,
“அனு என்னடா இது….ஒண்ணுமில்ல…நீ பிரேவ் கேர்ள்….இப்படி பயப்படக் கூடாது….தைரியமா இருக்கனும்…”என்று ஆறுதல் கூற,அவளுடன் உள்ளே வந்த ஆர்த்தியும்,ராஜேஷூம் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.தங்கள் மகள் தங்களை விட மூன்றாம் நபரை தேடும் அளவிற்கு தாங்கள் விட்டுவிட்டோமே என்று தங்களுக்குள்ளே வெட்கி தான் போயினர்.
“க்கா….க்கா….”என்ற வார்த்தையை தவிர அவளுக்கு வார்த்தை வரவில்லை.மனதெங்கும்,அன்றை நாளின் கொடிய பிம்பங்கள் அவளின் கண் முன்னே தோன்றி அவளை அச்சுறுத்த,மீண்டும் கை,கால்கள் நடுங்க தொடங்கியது.அவளின் கை,கால்களை சூடுபிடிக்க கயல் தேய்க்க,அதைக் கண்ட ஆர்த்தியும் ஓடி வந்து தேய்து கொண்டே,
“அனு அழாதடா…இனி அம்மா உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் அழாதடா….ப்ளீஸ்….”என்று அழுதாள்.கயல் அனுவின் தோம்பிக் கொண்டிருந்த முதுகை மெல்ல நீவிவிட மெல்ல மெல்ல அவளின் நடுக்கம் குறைந்தது.ஆனால் கண்களில் மிதமிஞ்சிய பயம் அப்பிக்கிடந்தது.
“அம்மா பக்கத்திலேயே இருக்கேன்….நீ தூங்கு…”என்று ஆர்த்தி கூற,அவளை ஒரு வெற்று பார்வை பார்த்தவள்,
“நீங்க வேணாம் கயலக்கா இருக்கட்டும்….”என்று அழுத்தமாக அனு கூற அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.
“என்ன…என்ன சொன்ன அனு…..பெத்தவளை விட அந்த கயல் உனக்கு பெரிசா போயிட்டாளா…ஆங்…”என்று ஆர்த்தி கோபமாக கத்தியவள்,
“ஏய் கயல் நீ இங்கிருந்து கிளம்பு என் பொண்ணை எனக்கு பார்த்துக்க தெரியும்….நீ போ….”என்று கயலை கிளப்ப பார்க்க,சத்யா கோபமாக கயலின் அருகே வந்து பேசவர,அவனின் கைகளை பிடித்த கயல் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
“என்ன பார்த்தீங்க….ஆங்….என்ன பார்த்தீங்கனு கேட்டேன்….”என்று அனுவும் அவளைத் தான்டி கத்த ஆர்த்தி சம்பித்து நின்றுவிட்டாள்.அதன் பிறகு அனன்யாவின் குரல் மட்டுமே அவ்வளவு பலவீனத்திலும் ஓங்கி ஒலித்தது.தன் மனதில் உள்ள அனைத்து பாரங்களையும் அனு என்பவள் இறக்கி வைக்க அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனதில் பாரம் ஏறிய உணர்வு.