தனக்கு வந்த மின்னஞ்சலை பார்த்தவன், உடனே தன் நண்பனுக்கு போன் போட்டுவிட்டான். நம் ஹீரோஸ் மட்டும் தான் போலீஸ், சைபர் கிரைம் என்று எல்லா இடத்திலும் நண்பர்கள் வைத்திருப்பார்களே, அமிழ்தினியன் மட்டும் விதிவிலக்கா என்ன(?!) அவனது நெருங்கிய நண்பன் ஒருவன் சைபர் கிரைம் டிபார்ட்மன்ட்டில் வேலை செய்ய, அவனுக்கு திரிபுரசுந்தரியை பற்றி கூறாமல், தனக்கு தெரிந்த பெண்ணொருத்திக்கு வெகு நாளாய் ஒருவன் தொல்லை தருவதாய் கூறி, அவனை கண்டிபிடித்துத் தரச் சொன்னான். தேவையான தகவல்களை பெற்றபின் விரைவில் கண்டுபிடித்துத் தருவதாக அமிழ்தினியனின் நண்பன் வாக்களித்தான்.
அதன் பின்பே அவன் மனம் சற்று அமைதியடைந்தது. இதை என்றோ செய்திருக்க வேண்டும். எங்கே இந்த விஷயம் திரிபுரசுந்தரிக்கு தெரிய வந்தால் அவள் நம்பிக்கையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே செய்யாதிருந்தான். ஷேடோவை அவன் ஆராயாமல் இருந்ததற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. பத்து வருடங்களுக்கு மேலாக திரிபுரசுந்தரி அந்த ஷேடோவிடம் பேசி வருகிறாள். இதுவரை அந்த ஷேடோவிடமிருந்து தவறான ஒரு சொல்லோ, செயலோ வெளிப்பட்டதில்லை. அவளின் மனக்குறைகளை கேட்பவன்(திரிபுரசுந்தரியை பொருத்தமட்டில் கேட்பவள்), அவள் மனம் அமைதியடையும் படி ஆறுதல் உரைப்பதுடன், தக்க அறிவுரை வழங்குவான் (ள்).
ஷேடோவிடம் அவனை (ளை) பற்றிய விவரங்களை திரிபுரசுந்தரி கேட்டால், பதிலேதும் வராது. திரிபுரசுந்தரி தந்தை இறந்த சமயமும் சரி, அவள் மனமுடைந்து போன மற்ற சமயங்களிலும் சரி, ஷேடோ அவளுக்கு உற்ற வழிகாட்டியாய் மட்டுமே செயல்பட்டான்(ள்). பல முறை திரிபுரசுந்தரிக்கு அதிப்பா தான் இந்த ஷேடோவோ என்ற சந்தேகமும் வந்ததுண்டு. அவனிடம் நேரில் கேட்டுள்ளாள். அவன் ஒரே வார்த்தையாக “போடி லூசு” என்று விடுவான். பேச வேண்டுமென்றால் நேரடியாக அவளிடமே பேசி விடலாமே, அவன் ஏன் போலி வேஷம் போட போகிறான்??
அவனின் அலுவல் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஷேடோ மற்றும் ரிபுவே ஆக்கிரமித்திருக்க, அலுவல் முடியும் நேரம் அவனுக்கு பாகீரதியிடமிருந்து அழைப்பு வந்தது.
“அம்மா! “
“இனியா! கொஞ்சம் சீக்கிரம் வீடு வரைக்கும் வரியா பா” அவர் குரலில் பதற்றம் அதிகமாயிருந்தது.
“இதோ வரேன் மா” என்ன ஏதென்ற விவரங்களை கேட்டு நேரத்தை வீணடிக்காமல் “கண்டேன் சீதையை” என்பது போல் உடனே கிளம்பினான். அவன் உள்மனம் பிரச்சனை என்னவாயிருக்கும் என்பதை சற்று அனுமானித்தே வைத்திருந்தது!!
திரிபுரசுந்தரி!!
அவளால் அந்த வீட்டில் பிரச்சனை வராத நாட்களை ஒற்றைப்படையில் சொல்லிவிடலாம். யாரிடமாவது ஏதாவது வாய்விட்டு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு வருவாள். வகுப்பில் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, அந்த சமயம் உள்ளே நுழைந்த ப்ரோபசர் ஒருவர், “இப்படியா ஆட்டம் போடுவது? கொஞ்சமாவது ஒழுக்கம் வேண்டாமா? என்று கேட்டுவிட(கன்னடத்தில் கேட்க), அதுவும் இவளை பார்த்து கேட்டுவிட, இவள் சிறிதும் யோசிக்காது,”மத்தவங்க கிட்ட ஒழுக்கத்தை தேடுறதுக்கு முன்னாடி அது உங்க கிட்ட இருக்கானு தேடுங்க. நீங்க ஒழுக்கமா இருந்திருந்தா உங்க வைஃப் உங்களை விட்டு போயிருப்பாங்களா? டிவோர்சி தானே நீங்க?” என்று ஒரே போடாக போட, அவளை காலேஜை விட்டே டெர்மினேட் செய்து விடலாமா என்று காலேஜ் டிசிபிளினரி கம்மிட்டி ஆராய்ந்து, அவள் முதல் மதிப்பெண் எடுக்கும் மானவியாதலால்(??) அவளையும், பாகீரதியையும் கூப்பிட்டு ஒரு மணி நேரம் தக்க அறிவுரைகள் கூறி கண்டித்து அனுப்பினர்.
இது ட்ரைலர் மட்டுமே. இதை விட பெரிய படங்களையே ரிபு ஒட்டியிருக்கிறாள். அவளின் வாய் துடுக்கு ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் சமூக ஊடங்கங்கள் மீதான அவளது வேட்கை. காலையில் எழுந்து பல் துலக்குவதில் ஆரம்பித்து, சாப்பிடுவது, காலேஜ் செல்வது, ஷாப்பிங் செல்வது, தன் வீட்டை சுற்றி காண்பிப்பது, பெட்ரூம் டூர், வார்ட்ரோப் டூர் என்று நிமிடத்துக்கு நிமிடம் அவளின் இருப்பை சமூக ஊடங்கங்களில் தக்க வைத்துக் கொண்டே இருப்பாள்.
சில நாட்களுக்கு முன் இரவு பன்னிரண்டு மணிக்கு அமிழ்தினியனுக்கு அழைத்து நடு ரோட்டில் ஒரு ரீல்ஸ் செய்ய வேண்டும் வர முடியுமா என்று கேட்டாள். அவன் நன்றாக திட்டி விடவும், தான் மட்டும் தனியாக செய்ய போவாதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். அடித்து பிடித்து அமிழ்தினியன் கிளம்பிச் சென்றான். கண்டிப்பாக அவள் சொன்னதை செய்பவள் என்று தெரியும்.
அன்று லேசாக தூறல் வேறு போட்டுக் கொண்டிருக்க, அமிழ்த்தினியன் அங்குச் சென்ற நேரம் இரவு ரோந்து வரும் போலீஸ் வாகனம் முன்பு போலீசிடம் பேசிக்கொண்டிருந்த திரிபுரசுந்தரியை பார்த்து அவனுக்கு இதயம் தொண்டை குழியை எட்டியது! விரைந்து சென்று போலீசிடம் பேசி, தன் அலுவலக அடையாள அட்டையை காட்டி, ஒருவழியாய் சரிகட்டி அவளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது சோர்ந்தே விட்டான். அப்போது கூட நடந்ததை பற்றி துளி கவலையில்லாமல், “ச்சே! செம்ம கிளைமேட்டா இருக்கே. சூப்பரா “மேகம் கருக்காதோ” பாட்டுக்கு ரோட்டுல ஆடி ஒரு ரீல்ஸ் போடலாம்னு உன்னை கூப்பிட்டா நீ வர மாட்டேன்னு சொல்லிட்ட, அதான் மம்மிக்கு தெரியாம நான் மட்டும் ஆட கிளம்பினா, கரெக்டா முடியுற சமயம் இந்த போலீஸ் வந்துடுச்சு” என்று சலித்துக் கொண்ட அவளை பார்த்து சொல்வதறியாது வாயடைத்து நின்றான் அமிழ்தினியன்!!
நடந்த நிகழ்வுகளை கேட்டு அதிர்ந்த பாகீரதி என்றுமே செய்யாத காரியத்தை அன்று செய்தார். அவளை கை நீட்டி அடித்தார், சிறு வயதிலிருந்தே திட்டுக் கூட வாங்கி வளராத பெண் அன்று அடி வாங்கியதும், அவளின் சப்த நாடியும் ஒடுங்கியது, எதுவுமே பேசாமல் அவளறையில் சென்று அடைந்தவளை கண்டு அமிழ்தினியனும் , பாகீரதியும் கவலைக் கொண்டனர். ஏனெனில் இருவருக்குமே அவளை பற்றி அங்குலம் அங்குலமாய் தெரியும். அவள் கோபப்பட்டு எதிர்வினை ஆற்றியிருந்தால் கூட பயம் கிடையாது. சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு பேச ஆரம்பித்து விடுவாள். ஆனால் அவளின் அமைதி வர போகும் புயலுக்கான எச்சரிக்கைக் கூண்டாயிருந்தது.
இருவரும் சந்தேகப்பட்டது போலவே திரிபுரசுந்தரி மறுநாள் முதல் பாகீரதியிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். அமிழ்தினியன் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவன் இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுக்க கொடுக்க, அவள் “எனக்குனு யாருமே இல்லை. நீ கூட என் பக்கம் இல்லை. நான் செத்து போறேன்” என்று உணர்ச்சி மிரட்டல் விட (Emotional blackmail) அமிழ்தினியன் சற்றே இந்த விஷயத்தை ஒத்தி போட்டான். பாகீரதியும் போராடி பார்த்து விட்டார். திரிபுரசுந்தரி அசைந்து கொடுப்பதாயில்லை.
இப்படி திரிபுரசுந்தரியின் திருவிளையாடல்கள் பல அரங்கேறியிருக்க, இன்று என்ன காத்திருக்கிறதோ என்று யோசித்தபடி சென்றான்.
வீட்டில் பாகீரதியுடன் அமிழ்தினியனின் அம்மா சந்திராவும் இருந்தார். கையை பிசைந்துக் கொண்டு பதற்றமாக நின்றார், “என்னாச்சு மா? பாகீமா போன் பண்ணினாங்க. அவங்க எங்க?”
“உள்ளே தான் படுத்திருக்கா தம்பி. அவளுக்கு…இது மெனோபாஸ் டைம் பா. கொஞ்ச நாளாவே சரியா சாப்பிடுறதில்லை போல. ஹீமோக்ளோபின் ரொம்ப குறைஞ்சுடுச்சு. போன வாரம் டாக்டர் போய் பார்த்துட்டு தான் வந்தா. அதோட தான் வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தா. டீச்சர் வேலை வேற கேட்கவா வேணும். நின்னுட்டே இருக்கணுமே! இன்னைக்கு வேலை முடிச்சு வந்ததும் , அப்படியே…..கொட கொடனு கொட்ட ஆரம்பிச்சுடுச்சாம் பா. உனக்கு போன் போட்டுட்டு அடுத்து என் கிட்ட சொன்னா. உங்க அப்பா வேற ஊர்ல இல்லை. அதான்…..” என்ன தான் பிள்ளை என்றாலும் தன் மாதாந்திர நாட்கள் பற்றியோ, தன் வலிகள் பற்றியோ அவனுக்கு தெரியாதவாறு மறைத்து மறைத்தே செய்து பழக்கம். ஆம்பளை புள்ளை கிட்ட போய் இதையெல்லாம் பேச முடியுமா?! என்பது அவரின் கருத்து. இன்று பாகீரதியின் நிலைமையை விவரிக்க அவர் படாத பாடு பட்டுவிட்டார்.
“அம்மா! ஆம்பளை புள்ளைங்க கிட்ட தான் முதல இந்த மாதிரி விஷயங்களை பேசணும். அதை புரிஞ்சிக்கோங்க. பாகீமாவால நடந்து வர முடியுமா? நான் காருக்கு தூக்கிட்டு போகட்டுமா?”
“இல்லை தம்பி. அவ வந்திருவா. நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு. நான் அவளை கூட்டிட்டு வந்துடுறேன்”
பக்கத்தில் இருந்த பெருநிறுவன மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பாகீரதியை சேர்த்துவிட்டு, திரிபுரசுந்தரிக்கு தகவல் தெரிவித்தான்.அவள் ‘ஓ’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டாலும், அடுத்த அரை மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்து விட்டாள். திரிபுரசுந்தரியின் தம்பி அபினவ், அவள் படிக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன், அவனுக்கு தகவல் தெரிவிக்க அவனை அழைக்க அவனது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதிகமான உதிரப்போக்கினால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டதாகவும், கர்ப்பப்பையில் சிறு கட்டி இருப்பதும் தான் இந்த அதீத வலிக்கு காரணம் என்றும் மருத்துவர் கூறிவிட, இரண்டு யுனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.
அமிழ்தினியனை பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி “சுந்தரி வந்துவிட்டாளா?” என்பதே.
“நான் போன் பண்ணி கூப்பிட்ட உடனே வந்துட்டா. ரொம்ப டென்ஷனா வேற இருக்கா. வெளிய இருந்து கண்ணாடி வழியா உங்களை பார்த்துட்டே தான் இருந்தா தெரியுமா?”
பாகீரதி பலகீனமான புன்னகை ஒன்றை உதிர்த்தார். “உன் ஃப்ரெண்டை நீ என்னைக்கு விட்டு கொடுத்திருக்க?”
“உன் பொண்ணெல்லாம் வந்துட்டா, உன் பையனை தான் ஆளையே காணோம்” சந்திரா சலித்துக் கொள்ள, இனியன் அவரை கடிந்துக் கொண்டான். “அம்மா! இப்போ எதுக்கு அதை பேசிட்டு. அவன் காலேஜ்ல ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ் இருந்திருக்கும் மா”
பாகீரதியின் முகம் இருண்டது.
“இல்லை இனியா. அவனை பற்றி நானே உன் கிட்ட பேசணும்னு நினைச்சிட்டுருந்தேன். அவன் இப்ப எல்லாம்….”