வண்ண விளக்குகளும், மக்கள் கூட்டமும் நிரம்பியிருந்த அந்த மாலில் சாரை சாரையாய் மக்கள் கடைகளை படையெடுத்துக் கொண்டும், பிடித்த உணவுகளை ருசித்துக் கொண்டும் இருக்க, மாலின் நடுபகுதியில் அமைந்திருந்த விஸ்தாரமான பகுதியில் நடந்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வலிப்பு வந்தாற் போல் கை காலை வெட்டி ஆட, எங்கிருந்தோ மெல்லிய இசை கசிந்தது. முதலில் ஆடிக்கொண்டிருந்தவனுடன் மேலும் இருவர் சேர்ந்துக் கொண்டனர். இசை விரிவடைய ஆடுபவர்களும் விரிவைடைந்துக் கொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட பத்து பேர் கொண்ட அந்த குழுவின் நடுவே கருப்பு ப்ளேசர், ஜீன்ஸ் சகிதம் ஒருவன் தோன்றி ஸ்டைல்லாக நடந்து வர இசை இப்பொழுது ‘குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்’ என மாறியது.
ஸ்டைலாக நடந்து வந்தவன் சின்ன சின்ன அசைவுகளுடன் அருகிலிருந்த கடையிலிருந்து ஒரு பூ போக்கேவை எடுக்க, அங்கிருந்த சிறுவர் சிறுமியர் கூட்டம் ஒன்று “குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா” கோரஸ் பாட, சிறுவர் சிறுமியர் சூழ அவன் ஸ்டைலாக நடந்து வந்து, இதையெல்லாம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த திரிபுரசுந்தரி முன் அந்த பொக்கேவை நீட்டி “ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ் வித் யு? வில் யு லவ் மீ பேக்?” மண்டியிட்டு அவன் ப்ரபோஸ் செய்யவும், அத்தனை பேர் கூடியிருந்த கூட்டத்தில் தனக்கு மட்டும் கிடைத்த சிறப்பு கவனம், அந்த இசை, மாயாஜாலமாய் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து அவளை உணர்ச்சிவயப்பட வைக்க, கண்களில் நீர் கோர்த்தது. அவள் சொல்ல போகும் பதிலுக்காய் அவள் முன் மண்டியிட்டிருந்த மிஸ்டர் ரோமியோவும் கூடியிருந்த கூட்டமும் ஆர்வமாய் அவள் முகம் பார்த்திருக்க, “ஆமென்று” தலையசைத்து பொக்கேவை வாங்கிக் கொண்டதும் சிறுவர் சிறுமியர் கூட்டம் அவள் கையில் ஆளுக்கொரு ரோஜா பூவை கொடுத்து விட்டு ஓடிச் சென்றது
சுற்றி நின்றவர்கள் பல உணர்ச்சிவயப்பட்டு கை தட்ட, மண்டியிட்டிருந்த மிஸ்டர் ரோமியோ எழுந்து அவள் கைகளில் ஒரு மோதிரத்தை மாட்டினான். நடந்த நிகழ்வுகளை “ச்சே! என்ன ஒரு லவ்வு பா” என்று சிலாகித்து பேசிவிட்டு கூட்டம் களைந்து சென்றது!
குல்முகர் மலர் சொரியும் இதே மரத்தின் கீழ் ஓராண்டு முன்பு திரிபுரசுந்தரி இந்த காட்சியை விவரித்துக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த அமிழ்தினியனுக்கு ரட்சகன் போல் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறியது?!
அவளுக்கு வந்த காதல் ப்ரோபோசலை விவரித்துக் கொண்டிருந்த அந்த கணம் தான் அமிழ்தினியன் முதன் முதலாய் தனக்கு அவள் மேலானது ஆத்மார்த்தமான நட்பை தாண்டி, கண் மூடும் வரை தொடரும் தேவபந்தமென்பதை உணர்ந்த தருணம்!!! ஆனால் அந்த தருணத்தை நுகர்ந்து அதன் வாசத்தை உள் நிறைக்க முடியாததொரு அவஸ்தை அவன் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது!!!
“என் ரிபு அவ. அவளுக்கு எப்படி ஒருத்தன்???” உள்ளுக்குள் பல்லை கடித்தவன் அழுத்தமாய் அமர்ந்திருக்க, அவள் தொடர்ந்துக்கொண்டிருந்தாள், “எப்படி இருந்துச்சு தெரியுமா அந்த மொமன்ட்? அப்படியே நான் என்னையே ஒரு ராணி மாதிரி ஃபீல் பண்ணினேன். என்னால அந்த இடத்துல நோ சொல்லவே முடியல. அதான் எஸ் சொல்லிட்டேன். அவன் ஒகே தான்னு நினைக்கிறேன். பெரிய பணக்கார வீட்டு பையன், பந்தா இல்லாம பழகுவான். நீ கண்டிப்பா அவனை பார்க்கணும், உனக்கும் கண்டிப்பா பிடிக்கும், ஏன்னா எனக்கு அவனை பிடிச்சிருக்குதே!!!”
எனக்கு பிடித்தால் உனக்கும் பிடிக்கும்,நீயும் நானும் வெவ்வேறல்ல, என்னுடைய நீட்சி தான் நீ, என்று கூறுபவளிடம் பத்தொன்பது வயதில் உனக்கு வந்திருக்கும் இது காதலே அல்ல, அவன் காதலை சொன்ன விதமும் அதனால் உனக்கு அந்த நொடியில் ஏற்பட்ட கவன ஈர்ப்பும் தான் என்பதை சொன்னால் புரியமா?! எதையும் வார்த்தைகளால் சொல்லியே புரிய வைத்துவிட்டால் பிரசங்கம் செய்தே உலக நாடுகளின் சண்டையை கூட நிறுத்திவிட முடியுமே? சொல்லி புரிகிற பக்குவமும் அவளிடம் இல்லை, கேட்டு திருந்துகிற தன்மை கொண்டவளும் இல்லை! இதை வேறு வழியில் தான் தகர்த்தெறிய வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான்!முடிவெடுத்ததை நிறைவேற்றவும் செய்தான்!!
அவளை காலேஜில் கொண்டு விடுபவன், காலேஜ் முடியும் சமயம், அவளை ஏதோவொரு காரணம் சொல்லி அவனுடன் தக்க வைத்துக் கொள்வான். அவன் அழைத்தும் அவள் போகாமல் இருப்பாளா என்ன? நேரில் அவர்கள் இருவரும் சந்திப்பதை தவிர்த்த அவனால் அலைபேசியில் நுழைந்து தடுக்க முடியாதே! அங்கு அவர்களின் காதல் நன்றாகவே வளர்ந்தது.
பாகீரதி இனியனை அழைத்து, “இனியா! ரிபு நடவடிக்கைல ஏதோ மாற்றம் தெரியுது. நான் கேட்டா, கேட்டதுக்காகவே அவ செஞ்சிட்டு இருக்கிறதை அதிகமா செய்வா. நீ தான் கொஞ்சம் என்னனு பார்க்கணும். ஏதாவது செய்ய போய் அது நிரந்தர அழிக்க முடியாத வடுவா மாறிட கூடாது இனியா” அவர் குரலின் துக்கம் அவன் மனதை சூழ்ந்துக் கொண்டது.
‘தாய் அறியாத சூலா’ என்பார்களே உண்மை தான், எதுவோ சரியில்லை என்பதை அந்த தாய் மனம் கண்டுகொண்டதே, வியந்தபடி அமிழ்தினியன் அவருக்கு ஆறுதல் உரைத்தான்.
அன்று காலையிலேயே இனியனுக்கு அழைத்தவள், “இன்னைக்கு நீ வர வேண்டாம் அதிப்பா. நான் இன்னைக்கு காலேஜ் போகலை”
“ஏன் காலேஜ் போகலை?”
“நான் அவன் கூட வெளிய போக போறேன். லவ் பண்ண ஆரம்பிச்சதுலேர்ந்து எங்கேயுமே போகலைனு ஃபீல் பண்றான். அதான் இன்னைக்கு ஒரு செம்ம இடத்துக்கு போறோம். என்னனு தெரிஞ்சா நீ எக்சைட் ஆயிடுவ” என்றபடி அலைபேசியை வைத்துவிட, அங்கே அவன் கொதி நிலையில் இருந்தான்.
சிறிது நேரத்தில் அவன் போனுக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தாள். ஒரு சின்ன பத்துக்கு பத்து அறை, அந்த அறையின் சுவர் முழுவதும் ஏதேதோ அர்த்தமற்ற படங்கள், திரிபுரசுந்தரியும் மிஸ்டர் ரோமியோவும் நிற்க, அவர்களுக்கு பின்னால் ஒருவன் கிளவுஸ் போட்டுக் கொண்டு கைகளில் ஒரு சின்ன டிரில்லிங் மெஷின் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு நின்றான். கீழே கேப்ஷனில் “Yippi! Gonna do couple tattoo!! Feeling exited!!!” என்றிந்தது.
அவனது கட்டைவிரல் ரேகையும் இவளது கட்டை விரல் ரேகையும் பதிவு செய்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து அதன் ஓரத்தில் இவளுக்கு அவனது இனிஷியலும், அவனுக்கு இவளது இனிசியலும் வருமாறு டிசைன் தெரிவு செய்திருந்தனர்.
டேட்டூவை போட அவள் கைகளை நீட்ட, “பேப்ஸ்! நான் உன் நெஞ்சத்தை தொட்டிருக்கிறதா நினைச்சிட்டு இருந்தேன், அப்படியில்லை போலவே ஒரு நண்பனா கைப்பிடிக்கிற உரிமை மட்டும் தான் இருக்குது போல?! நண்பனா யார் வேணா உன் கையை பிடிக்கலாமே?!”
கண்களில் கொஞ்சம் காதல், கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் ஏக்கம் சரிபாதி அளவில் சேர்த்து அவன் கடலை வருக்க, அவன் வறுத்த கடலையில் அவள் இதயம் கருகியது!! இருந்தாலும் மார்பு பக்கம் டேட்டூ போட அவளை ஏதோவொன்று தடுத்தது. அமிழ்தினியன் முகம் அவள் மனதில் தோன்றி மறைந்தது. கடைசியில் தன் காதல் நாயகனின் முகமே பெரிய அளவில் என்லார்ஜ் ஆகி நிற்க, சரியென்று ஒப்புக்கொண்டாள். மனசுக்குள் ஒரு அரிப்பு இருந்துக் கொண்டே இருந்தது. டேட்டூ போடப் போவதை அதிப்பாவிடம் சொல்லியிருக்கக் கூடாதோ, இப்பொழுது அவன் கேட்டால் அவனிடம் என்னவென்று சொல்லுவாள்!! சங்கடமாய் உணர்ந்தாள்!!!
டேட்டூ போடும் அறைக்குள் நுழையும் சமயம் சரியாய் அவள் அலைபேசி அலறியது. கூப்பிட்டது அபி! வழக்கத்துக்கு மாறாய் இன்று ஏன் இவன் கூப்பிடுகிறான் என்ற சந்தேகத்துக்கு நடுவே தானாய் அவள் கைகள் அழைப்பை ஏற்றிருந்தது.
“ரிபு! இனியனுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சாம். நீ உடனே கிளம்பி ஃபோர்டிஸ் வா”
அழுது அரற்றி விட்டாள் திரிபுரசுந்தரி! அங்கிருந்தவர்கள் அவளை வித்தியாசமாய் பார்க்க, அந்த மிஸ்டர் ரோமியா அரண்டு விட்டான். அவளைக் கொண்டு வந்து ஹாஸ்பிடல் விட்டவன் அவளுடனே இருந்தான்.
அமிழ்தினியனை பார்த்த பின்பே அழுகையை நிறுத்தினாள்! கையில் மட்டும் சின்ன சின்ன காயங்களுடன் கட்டுப் போடப்பட்டிருக்க, அவன் முகம் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது! ஒரு சிட்டிகை கூடுதலாய் மகிழ்ச்சி இருந்ததென்றே கூற முடியும்!!
“எப்பவும் மாட்டு வண்டி மாதிரி தானே ஓட்டுவ? எப்படி டா ஆச்சு?”
“நான் மாட்டு வண்டி மாதிரி தான் ஒட்டுன்னேன். அவனவன் ஜெட் மாதிரி ஓட்டிட்டு போறானே?! அதான் மாட்டு வண்டி குடை சாய்ஞ்சிருச்சு”
“நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?”
“நான் கூட பயந்துட்டேன்!! கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்து இஞ்க்ஷன் போட்டுட்டு போனாங்களா, தலை கிறு கிறுனு சுத்துறாப்ல இருந்துச்சு. அப்போ தலை விரி கோலத்துல ஒரு பேய் அழுதுட்டே ஓடி வந்ததை பார்த்து பயந்தே போயிட்டேன்”
அவன் முதுகில் இரண்டு அடிகளை போட்டவள், “ஏன்டா நான் உனக்கு பேய் மாதிரி தெரியுறேனா?”
“ச்சேச்சே பேய் மாதிரியெல்லாம் இல்லை! நம்ம இஞ்சிமொரப்பா தான் இதுன்னு புரிஞ்சிடுச்சு. பேயா இருந்தா இன்னும் கொஞ்சம் அழகா இருந்திருக்குமே”
அவன் தலையில் நறுக்கென்று கொட்டு விழுந்தும் அவன் ஏகாந்தமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.
“ஏன் அதிப்பா ? தலையில எதுவும் அடிபடலையே? இன்னைக்கு ஏதோ வித்தியாசமா நடந்துகிற மாதிரி இருக்குதே?!”
“ஹ்ம்ம்..எனக்கும் அப்படி தான் தோணுது. டாக்டர் சரியா என்னை செக் பண்ணலைன்னு நினைக்கிறன். ஏம்பா நீ வார்ட் பாய் தானே? கொஞ்சம் டாக்டரை வர சொல்றியா?” இவர்கள் பின்னால் நின்றுக் கொண்டிருந்த மிஸ்டர் ரோமியோவை பார்த்து அமிழ்தினியன் சொல்ல, அவன் திருதிருவென்று முழிக்க, திரிபுரசுந்தரி பக்கென்று சிரித்து விட்டாள்.
“அதிப்பா! அவன் வார்ட் பாய் இல்லை, அவன் தான் சொன்னேனே என்னோட….”
அவளை முடிக்க விடாமல் இடைவெட்டிய அமிழ்தினியன், “ஓ! சாரி பாஸ்! நீங்க வேற ஹாஸ்பிடல் ஸ்டாப்ஸ் போல கிரீன் ட்ரெஸ் போட்டிருந்தீங்களா? அதான் தப்பா நினைச்சுட்டேன். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். ரிபு சொல்லியிருக்கா நீங்க ரொம்ப ஃப்ரீ டைப்னு அப்படி தானே பாஸ்?!”
ஆமாம் என்பது போல் மண்டையை ஆட்டினான்.
“பாஸ் ப்ளீஸ் கொஞ்சம் டாக்டரை கூட்டிட்டு வர முடியுங்களா?”
மிஸ்டர் ரோமியோ கடுப்புடன் அங்கிருந்து நகர, அமிழ்தினியனுக்குள் உற்சாகம் குமிழிட்டது! மறுபக்கம் குற்றவுணர்ச்சி குத்திக் கொன்றது!! இதையெல்லாம் தான் செய்வது அவள் மேல் தனக்குள்ள காதலை உணர்ந்ததாலா ? அவள் மேல் தான் கொண்டிருப்பதை எப்படி காதல் என்ற வரையறைக்குள் மட்டுமே அடக்கி வர முடியும்? காதல் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அவர்கள் இருவரின் உறவை எழுதிவிட முடியுமா? காதலிப்பதனால் மட்டுமே அவளை காக்க நினைக்கிறான் என்று முடித்து விட முடியுமா? கை பிடித்து உடன் செல்லும் நண்பனாக, அவளை காத்து நிற்கும் தந்தையாக, அவளை மடி தாங்கும் தாயாக என்று எல்லாமுமாக இருக்கும் அவன், அவள் தவறு செய்யும் போது எப்படி பார்த்துக் கொண்டு, அதற்கொரு கற்பிதங்கள் கற்பித்துக் கொண்டு தள்ளி நிற்க முடியும்?
அவனின் மனம் இத்தனை போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, அவனின் போராட்டங்களை திரிபுரசுந்தரியே ஒரு முடிவுக்கு கொண்டு வந்தாள். அடுத்த இரண்டே நாளில் அவனிடம் வந்தாள், அழுது சிவந்த கண்களுடன்! அந்த மிஸ்டர் ரோமியோவுக்கும் தனக்கும் எல்லாம் முடிந்து விட்டதென அறிவித்தாள்!
“போன வாரம் தான் லவ் பண்றேன்னு வந்து நின்ன, இப்போ ப்ரேக் அப்னு வந்து நிக்குற?”
“அது அப்படி தான். ஏன் என்னனு கேட்காத. ப்ளீஸ்”
அவள் காதல் முறிவு நல்ல செய்தி தான் என்றாலும் ஏன் என்ற கேள்வி அவனை குடைந்தது!
இரண்டு நாட்களாக சிவந்த கண்களுடன் திரிந்த அவளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அவளை சிரிக்க வைக்க பெரிதும் முயற்சித்தான். அவளுடனான நேரத்தை அதிகரித்தான். அவளை எப்படி இதிலிருந்து வெளியே மீட்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அவள் அதை முற்றிலும் மறந்திருந்தாள். அவனுக்கு தான் எல்லாமே உணர்வுகளின் போராட்டமாய் இருந்தது. அவளுக்கு எல்லாமே டேக் இட் ஈசி பாலிசி தான்!
“அதிப்பா! இன்னைக்கு நைட் நான் ஃப்ரெண்ட்ஸ்க்கு ட்ரீட் கொடுக்க போறேன்”
“ட்ரீட்டா? எதுக்கு?”
“ம்ச்….அதை சொன்னா நீ எப்படியும் பூமர் மாதிரி பேசுவ. அதனால எதுக்குனு நீயும் கேட்காத நானும் சொல்லல. உன் கிட்ட சொல்லாம என்னால போக முடியாது, அதனால தான் சொல்லிட்டு போறேன்”
அவன் கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாக அவளை பார்க்க, “சரி சரி! சொல்றேன். ப்ரேக் அப் பார்ட்டி”
தான் கேட்டது சரி தானா என்று அவனால் நம்ப முடியவில்லை.
“என்னது?”
“ப்ரேக் அப் பார்ட்டி பா. என் லவ் புட்டிகிச்சுல அதுக்கு பார்ட்டி”
வாயடைத்து நின்றான் அமிழ்தினியன்!!
அன்றிரவு மற்றுமொரு பேரிடியை அவன் தலையில் இறக்கினாள் அவள்!
—————————————————————————————————————-
அவர்கள் எப்பொழுதும் அமரும் குல்ம்கர் மரத்தடியில் அமர்ந்து இதையெல்லாம் இன்று யோசித்துக் கொண்டிருந்தவனின் எண்ணங்களை அவன் அலைபேசி கலைத்தது! ஷேடோவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது! அமிழ்தினியன் அழைத்த போது அழைப்பை ஏற்காத ஷேடோ இப்பொழுது மெசேஜ் செய்திருப்பதை எண்ணி குழம்பியவன் மெசேஜை பார்க்க, அதில் ஓரிடத்தின் லொகேஷன் பகிரப்பட்டிருந்தது! திரிபுரசுந்தரி இருக்கும் இடம் தான் யூகிக்க பெரும் பிராயத்தனம் தேவையில்லை! வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான், அவள் இடம் இருக்கும் இடம் நோக்கி, அவன் நினைவுகள் மட்டும் பின்னோக்கி…….