அம்மையப்பன் 2
அகத்தியன் நீரிலிருந்து மேலே வந்து உடை மாற்றிய பின்பும் சரவணன் அவனையே பார்த்தவாறு இருப்பதைக் கண்டு அகத்தியனின் இதழ்கள் மென்னகைத்தது..
“அடேய்.. இன்னும் எவ்வளவு நேரத்துக்குடா இப்படியே பாத்துகிட்டு இருக்க போற..” என அவன் முகத்தில் நீரை தெளிக்க.. திடுக்கிட்டு முழித்தான் சரவணன்..
ச்ச ஏண்டா.. சும்மாவே கிடுகிடுன்னு நடுங்கிக்கிட்டு கிடக்கேன்.. இதுல நீ வேற தண்ணிய தெளிக்கிற..
ஹுக்கும் இது ஒரு குளிராக்கும்.. உதகமண்டலம் அடிவாரத்துல இருந்துகிட்டு இப்படி நடுங்குறியேடா..
பின்னே உன்ன மாதிரி தவக்களையாட்டம் தண்ணிலயே கிடக்க சொல்றியா.. ஏண்டா நித்தமும் இந்த பம்பு செட்டுல தான் கிடக்க.. இன்னைக்குமா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கண்ணாலம் அதாவது உனக்கு நெனைவிருக்கா.. உன்ற அப்பாறு அருவா இல்லாத ஐய்யானாறு கணக்கா அங்க வாசல்ல நடத்துட்டு இருக்காரு.. உன்ன ஒன்னும் செய்யமாட்டாரு.. உன்றக்கூட பழகுன பாவத்துக்கு எம்பட தோளைத்தான் உறிக்க போறாரு.. என பயத்தில் புலம்பினான்..
மச்சான்.. ஐம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்டுடா.. எனக்காக இதக்கூட தாங்க மாட்டியா..
அடேய் படுபாவி.. என்ன உன்ற ஐயன்கிட்டயும் அப்பச்சிகிட்டயும் பலிக்கொடுக்காம விடமாட்ட போல.. எத்தன நாள் வஞ்சம்டா.. மொத கிளம்பு எப்படியாவது பின்வாச வழியா உள்ள ஓடிருவோம்.. பெரியம்மாவும் அத்தையும் அவங்கள சமாளிச்சுக்குவாங்க.. வெரசா கிளம்பு.. என அவனை கையோட இழுத்துக் கொண்டு சென்றான்..
மாளிகையின் பின்வாயில் வழியே இருவரும் உள்ளே நுழைய அங்கு அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார் மரகதம்..
அடேய் கூறுகெட்டவனே.. இவ்வளவு நேரஞ்செண்டா வருவ.. உன்னை எப்போ அனுப்புனே என சரவணனை பார்த்து கேட்க..
பெரிம்மா.. கண்ணாலத்த வச்சுக்கிட்டு பம்புசெட்டுல குளிக்க போயிருக்கான் உன் மருமவன்.. அவனை விட்டுப்போட்டு கூட்டிவந்த என்னபோட்டு வஞ்சிக்கிட்டு கிடக்க..
ஹக்கும் நல்லா கூட்டியாந்த.. என்ற மருமவன் நேரத்தோடு கிளம்பிருப்பான்.. நீதான் அவன பேச்சுல புடிச்சுகிட்ட.. நான் ஒரு கூறுகேட்டவ.. உன்னை போய் அனுப்பினேன் பாரு.. என மரகதம் தலையிலடிக்க.. சரவணன் காண்டானான்..
சரி விடு அத்தை.. அவன் வாயபத்தி உனக்கு தெரியாதா.. வாயாட ஆரம்பிச்சான்னா நேரம் காலமே தெரியாது என்றான்.. நல்லபிள்ளை போல்..
அடப்பாவி.. எப்படியெல்லாம் நடிக்கான்.. என சரவணன் முறைக்க.. அவனை மேலும் வெறுப்பேற்றும் வண்ணம்..
ஹ்ம்ம் என்ன பண்ண.. என்ற தங்கச்சிக்கு இப்படியொரு பிள்ளை.. என்றவருக்கு.. அப்பொழுது தான் ஓர் விஷயம் நியாபகம் வரவும்.. “டேய் என்னடா செஞ்ச நேத்தைக்கு.. ஏன் உன்ற அம்மா உன்னை சீவக்கட்டையாள ஊட்டை சுத்தி சுத்தி அடிச்சாளாம்” என கதைக்கேட்கும் பாவனையில் கேட்க.. சரவணனின் முகம் அஷ்டகோணலாகியது..
உனக்கு யாரு பெரிம்மா இதை சொன்னது..?
ஹ்ம்ம் உன்ற தங்கச்சி தாண்டா ஊர் போறா சொல்லிக்கிட்டு திரியுறா.. சரி சேதிய சொல்லு.. என்ன பண்ண..
அந்த குந்தாணிக்கு இதே வேலையா போச்சு.. இந்நேரம் ஊரு மொத்ததுக்கும் தம்பட்டம் அடிச்சுருப்பா என உள்ளுக்குள் புலம்பியவன்.. “அது ஒன்னும் இல்ல பெரிம்மா.. நானும் அகத்தியனும் ஒரே வருஷம் தான் பொறந்தோம்.. ஒன்னாதான் படிச்சோம்.. இப்போ அவனுக்கு மட்டும் கண்ணாலம் நடக்க போகுது.. எனக்கும் போயி சாதகத்தை பாருங்கம்மான்னு சொன்னேன்.. அப்படியில்லன்னாலும் எனக்கும் கண்ணாலம் பண்ணுங்கன்னு சொன்னேன்.. அது ஒரு குத்தம்னு சீவக்கட்டை பிய்ய பிய்ய அடிச்சு தள்ளிடுச்சு என சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற.. அகத்தியனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை..
மரகதத்திற்கும் சிரிப்பு வந்தாலும் அதனை முயன்று அடக்கியவர்.. ஹோ.. துறைக்கு கண்ணாலம் கேட்குதா.. உன்ற ஐயன் தொழில மொத பாருடா.. அதுல ஏதாச்சும் உருப்படியா செய்யி.. பிறவு உன்ற தங்கச்சி கண்ணாலம் முடியட்டும்… அதுக்கப்பொறம் வேண்ணா உன் கண்ணாலம் பத்தி உன்ற அம்மைய யோசிக்க சொல்றேன்.. என சிரிக்காமல் கேலி செய்தவர்… அப்போது தான் நேரமாவதை உணர்ந்து.. ப்ச் பாரு கண்ணு.. மறுக்கா மறுக்கா கதையடிச்சு நம்ப நேரத்தை வீணாக்கிட்டான்.. நீ போயி தயராகு சாமி.. செத்த நேரத்துல கிளம்பனும்.. போ சாமி.. என அன்பொழுக கூறிச்சென்றார்..
அதுவரை அவரின் பேச்சையெல்லாம் கேட்டு விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்த சரவணனைக் கண்டு அகத்தியன் சிரிக்க.. அவனோ கொலை காண்டுடன் முறைத்துக் கொண்டிருந்தான்..
அடேய்.. சிரிக்காதடா பத்திகிட்டு வருது.. உன்ற அத்தை வர வர ஓவர் ரவுசு பண்ணுது.. கவனிச்சுக்கிறேன்.. இன்னைக்கே ஏதாச்சும் செஞ்சுடுவேன்.. உம்பட கண்ணாலம்ன்னால சும்மா விடுறன்.. வா போவோம்.. இல்ல அதுக்கும் உன்ற அத்தை என்னைத்தான் ஏசும் என முதலில் கெத்தாக கூறியவன்.. பின் புலம்பியவாரு செல்ல அகத்தியனின் புன்னகை அகலமாகியது..
எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க.. அமிர்தம் முகம் மட்டும் ஏதோ யோசனையிலே இருந்தது.. அதனைக் கவனித்த பவளமல்லி “அக்கா நீ ஏன் இப்படி இருக்கன்னு தெரியுது.. மொத நடந்ததுல இருந்து வெளிய வா.. இன்னும் மாமா பண்ணதுக்கு நீ ஒத்து ஊதிக்கிட்டு கிடந்தா அது நம்ப குடும்பத்துக்கு தான் ஆபத்தா முடிஞ்சுடும்.. என்ற புருசனப்பத்தி கவலையில்ல.. அவரு நாஞ்சொல்றத மீற மாட்டாரு.. மாமா மட்டும் வேண்டாதத தூக்கி சுமக்க பாக்குறாங்..” என பவளமல்லி கூற அமிர்தம் முகம் மெல்ல தெளிவடைந்தது..
ம்ம்ம் உண்மைதான்டி.. உன்ற மாமாவும் மறுக்கா அங்க போக மாட்டாரு.. அத்தை வாக்கு வாங்கிட்டாங்கனு சொன்னாங்.. பார்க்கலாம்.. என அமிர்தவல்லி பெருமூச்சுடன் சொல்ல.. பவளவல்லியின் மனம் நிம்மதியடைந்தது..
**********************************
ஐயா.. மருமவன் வந்துட்டாருங்.. நேரத்தோடு கிளம்பிறலாம்.. நீங்க கொஞ்சம் உட்காருங்.. என மரகதம் சொல்ல.. அம்மையப்பன் மனம் அமைதி கொண்டது..
ஹ்ம்ம்.. நான் உன்ற மருமவன எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு பின்பக்கம் வழியா அனுப்பிட்டியாக்கும் என செல்ல முறைப்புடன் கேட்க..
சமாளிப்பாக சிரித்தவர்.. அச்சோ ஐயா ஆத்தா தாம்பாளாம் எடுத்து வைக்க சொன்னாருங்.. மறந்துட்டேனுங்க ஐயா.. இதோ வரேன்ங்.. என உள்ளே ஓட.. அம்மையப்பன் புன்னகைத்தார்..
பாத்தியா உன்ற தங்கச்சிய..
ம்ம்ம்ம்.. இதென்ன புதுசாங் ஐயா.. சின்ன பிள்ளைலயிருந்து அம்மணிதானே அவனை வளர்த்தது.. ஒரு வார்த்தை கடுசா பேச விடமாட்டா.. இன்னைக்கு கேட்கவா வேணும்.. என சிரிப்புடன் சொன்னார்.. சிவநேசன்
ஜமீன் மாளிகையின் முன்னிருந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் ஊர்மக்கள் அனைவரும் கூடியிருக்க.. மேளதாளங்கள் முழங்க ஆரம்பித்தது..
ஐயா.. கிளம்பலாங்களா என அருமைகாரர் கேட்டார்.. (அருமைகாரர் என்பவர் கொங்கு மக்களில் திருமணம் செய்து வைப்பவர்… அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும்.)
இதோ என அம்மையப்பன் திரும்பி பார்க்க.. பட்டு வேஷ்டியில் தலைபாகை அணிந்து நெற்றியில் திருநீறு கீற்றுடன்.. அம்மா அக்கா அத்தை என இன்னும் பல பெண்கள் படைசூழ மென்சிரிப்புடனும், நேர்கொண்ட பார்வையுடனும் அகத்தியன் வர.. அம்மையப்பன் பாசமும் கர்வமுமாய் அவனைப் பார்த்தார்..
ஆத்தே.. நம்ம சின்னையாவ பாருங்கடி சும்மாவே மயக்குவாரு.. இன்னைக்கு பட்டு வேட்டில எம்புட்டு அழகா இருக்காரு..
அச்சோ எனக்கு மயக்கம் வருதுடி.. அயோ அயோ சிரிக்கிறாகடி..
ஹ்ம்ம் சிரிக்கிறப்ப.. பல்லு எல்லாம் எப்படி பளிச்சுனு இருக்கு பார்த்தியா..
ஹ்ம்ம் அப்படியே அடுக்கிவச்சாப்புல இருக்கு.. கட்டிக்கபோறவ கொடுத்து வச்சவத்தேன்.. நாம இப்படியே தூரமா நின்னு ஏங்கத்தான் முடியும்.. என இளம்பெண்கள் மெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர்..
யக்கா.. எல்லா கண்ணும் நம்ம தம்பி மேலத்தான் இருக்கு.. அவனுக்கு எம்புட்டு சுத்திப்போட்டாலும் தாங்காது போலயே.. என பவளமல்லி கவலைக் கொள்ள..
ஹ்ம்ம்.. ஆமாடி.. அதுவும் சில சிறுக்கிங்க கண்ண பாரு.. அப்படியே முழுங்குறாப்புல பாக்குதுங்க.. கண்ணுல கொல்லிக்கட்டைய வைக்க.. என அமிர்தவல்லியும் அவள் பங்கிற்கு புலம்பித்தள்ளினாள்..
அகத்தியனிற்கு அக்காள்களின் புலம்பல் சிரிப்பை வரவைத்தாலும்.. அதில் தன் மேல் உள்ள அன்பைக் கண்டு அவன் உள்ளம் என்றும் போல் இன்றும் நெகிழ்ந்தது..
அக்கா என்பவள் இன்னொரு அம்மா என்ற பொன்மொழி அகத்தியன் விஷயத்தில் முற்றிலும் உண்மையே.. சிறுவயதிலிருந்து அவனை இருவரும் போட்டி போட்டிக்கொண்டு பார்த்துக் கொள்வார்கள்.. யார் அவனை தூக்கி வைத்துக்கொள்வது என குடும்பி பிடி சண்டையே நடக்கும்.. வேதவள்ளியை விட அகத்தியன் அதிகம் இருந்தது மரகதத்திடமும் அவனின் அக்காள்களிடமும் தான்.. ரொம்ப வருடத்திற்கு பிறகு வேதவள்ளி கர்ப்பம் தரித்திருந்ததால் அவருக்கு நிறைய அசவுகரியம் இருந்தது.. பெட் ரெஸ்டில் தான் இருந்தார்.. ஆனாலும் பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு.. அவருக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை.. அதனால் அவன் பிறந்ததிலிருந்தே பெரும்பாலும் அவர்கள் மூவரும் தான் அவனை வளர்த்தார்கள்..
*************************************
இணைசீர் செய்ய ஆரம்பிச்சுடலாம்ங்க அய்யா..
மாப்பிளையோட அக்கா வாங்கம்மணி.. என அருமைகாரர் அழைக்க.. அமிர்தவல்லி முன் வந்தார்.. அவரின் தலையில் சும்மாடு வைத்து அதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்க அதனை மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியால் மூடிவைத்தார்..
“பிறகு வெற்றிலை பாக்கை கொடுத்து இதை உங்க மடியில கட்டிக்குங்க அம்மணி”.. என்றவர்.. கூறைப்புடவையை கொசுவ மடிப்பாக மடித்து ஒரு புறத்தை அகத்தியனின் கரத்தில் கொடுத்தவர் மறுபுறத்தை அமிர்தவள்ளியின் கரத்தில் கொடுத்தார்.. இந்த புடவையைத்தான் மணப்பெண் திருமணத்தின் போது அணியவேண்டும்.. இதன் பெயர் தான் இணைசீர்..
மேளதாளம் முழங்க மணப்பெண்ணின் வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு ஊர்கோலமாய் அனைவரும் சென்றனர்..
அமிர்தவள்ளி திருநாவுக்கரசுவின் நான்கு வயது புதல்வன் அமுதனும் பட்டு வேஷ்டி சட்டையில்.. குதித்துக் கொண்டிருந்தான்.. அதுவும் அந்த பட்டு வேஷ்டிக்கு அவன் செய்த அலம்பல் இருக்கே.. அதை நினைத்தால் இப்பொழுதும் அனைவர் முகமும் புன்னகையில் மிளிர்ந்தது..
ப்பா.. நேக்கு மாமா மாதி தான் வேணும்.. இது வேணாம்.. என அவனின் சட்டை ட்ரவுசரை பார்த்து அழுகையோ அழுகை.. கடைசியில் அகத்தியன் தான் சமாதானம் செய்து.. அவனுக்கெடுத்த மாதிரி பட்டு வேஷ்டி எடுத்துக் கொடுத்தான்.. அதனால் தான் அய்யா சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்..
பிள்ளையார் கோவிலில் இருவர்களனைவரும் வந்த சில நிமிடங்களில் பெண்வீட்டினர் மேள தாளத்தோடு சொந்தங்கள் படை சூழ.. மாப்பிள்ளையை அழைக்க வந்தனர்..
பெண்ணின் தந்தை ராமநாதன் “வாங்க.. வாங்க மாமா.. வாங்க மச்சான்.. வாங்க மாப்பிளை” என அனைவரையும் முறை வைத்து மாலையிட்டு அழைக்க.. அங்குள்ளோரும் பதில் மரியாதை செலுத்தினர்..
வாங்க மாமா.. வாங்க மாப்பிளை.. என பெண்ணின் அண்ணனான அரவிந்தன் அவன் பங்கிற்கு அனைவரையும் அழைத்து அகத்தியனை பார்த்து சிநேகமாய் சிரித்தான்..
என்ன அண்ணே சும்மா பாத்துக்கிட்டு இருக்கீங்.. மாப்பிளைக்கு நீங்க எதும் மரியாதை செய்ய மாட்டிங்களா என சரவணன் வம்பிழுத்தான்..
என்னடா இப்படி சொல்லிப்போட்ட.. இப்போ நாங்க என்ன மரியாதைடா செய்யல.. நான் வேணும்னா மாப்பிளைய தோளுல தூக்கிகிட்டு போகட்டா.. என்றவன்.. சரவணா நீ மரியாதன்னு சொன்னதும்தான் நியாபகம் வருது.. என்னடா உங்கம்மா உன்னைய சீவக்கட்டையால வெலுத்துட்டாங்களாம்.. உண்மையா என அரவிந்தன் சிரிப்புடன் கேட்க..
சரவணன் தன் தங்கையை நினைத்து பல்லைக் கடித்தான்..
அண்ணே நம்மள எகத்தாளம் பண்ணுறாரு மச்சான்.. நீ கொஞ்ச மாப்புள கெத்த காமிடா.. அப்போ தான் மாப்புள வூட பாத்து ஒரு பயம் வரும்.. என மேற்கொண்டு அலப்பறை கூட்ட.. அம்மையப்பன் மீசையை முறுக்கியவாறு அவனை ஓர் பார்வை பார்த்தார்..
ஆத்தே மீசை முறைக்குறாரே என உள்ளுக்குள் நடுங்கியவன் வெளியே எதுவும் நடக்காதது போல பக்கத்தில் நின்றவனிடம் பேச ஆரம்பித்தான்.. இதையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அகத்தியனும் அரவிந்தனும் வாய்விட்டு சிரிக்க.. சரவணன் யாருமறியாமல் இருவரையும் முறைத்தான்..
அம்மயப்பன் தன் பேரனின் சிரிப்பை வாஞ்சையாக பார்த்தார்.. அதோடு இச்சிரிப்பு எதிர்காலத்திலும் நிலைத்திருக்க வேண்டும் என அவர் மனம் அவசர வேண்டுதலையும் வைத்தது..
“சரி வாங்க.. கோயிலுக்கு போலாம்..”
இருப்பக்க மேள தாளங்களும் போட்டி போட்டுகொண்டு தங்கள் கைவரிசையை காண்பிக்க.. அவ்விடமே அவர்களின் இசையில் அதிர்ந்து தான் போனது..
*************************************
மேட்டுப்பாளையத்தின் ஜமீன் வம்சத்தாருக்கு சொந்தமான அவர்களின் குலதெய்வம் அம்மையும் அப்பனும் வீற்றிருந்த கோவிலில் தான் அகத்தியன் அன்பழகி திருமணம் நடைபெற உள்ளது..
மணபொண்ண அழைச்சுட்டு வாங்க என அருமைகாரரின் குரல் ஓங்கியொலிக்க.. சலசலவென என கேட்டுக்கொண்டிருந்த மெல்லிய சப்தம் அனைத்தும் சற்று நேரம் நிற்க.. அப்பொழுது சலங்கையொலி போல கேட்ட கொலுசின் சப்தம் மட்டும் அகத்தியனின் செவியை நிறைக்க மெல்ல சப்தம் வந்த திசையை நோக்கினான்..
சிவப்பு வர்ண கூறபுடவையில் தங்க நகைகள் அணிந்து முகத்தில் குடிகொண்டிருந்த மென்னகையுடன்.. செம்மை படிந்த கண்ணங்களுமாய்.. மாநிறத்தில் தேவதையென நடந்து வந்தாள்.. அன்பழகி..
பெரிதான அலங்காரமில்லை.. எப்பொழுதும் வீட்டில் போட்டிருக்கும் ஜடையுடன் அதில் மல்லி கனகாம்பரம் போன்ற மலர்ச்சரம் சுற்றி.. மெலிதாக பவுடர் பூசி.. கண்ணில் மையிட்டு.. தீற்றாத புருவங்கள் இரண்டும் இயற்க்கையாகவே வளைந்திருக்க.. அவர்களின் மத்தியில் முக்கோண வடிவதில்லான பொட்டிட்டு அதற்கு கீழ் குங்குமம் சிறு கீற்றாய் மின்ன.. எளிமையில் விழிகளுக்கு இனிமையாய் வந்திருந்தவளைக் கண்டு அகத்தியனின் மனதினுள் நேசம் ஊற்றெடுத்தது.. இதுவரை எந்த பெண்ணையும் ஏறேடுத்து பாராதவன்.. தனக்கு மனைவியாக போகிறவளை உரிமையுடன் பார்வையிட்டு கொண்டிருந்தான்..
மச்சான் தங்கச்சி உனக்கு தாண்டா.. அதையேன் இப்படி முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு கிடக்க.. என சரவணன் கேலி செய்ய.. மற்றவன் பொய்யாய் முறைத்தான்..
அன்பழகி அவன் அருகே வந்து நின்றாள்.. அருமைக்காரர் இருவரிடமும் பூமாலை கொடுத்து, மாத்திக்க சொன்னார்.. முதலில் அகத்தியன் அவளுக்கு மாலையிட.. ஓர் நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்தது போல அகத்தியனின் விழிகள் அவள் விழிகளுடன் பின்னி பிணைந்து கொள்ள.. அதன் வீரியம் தாங்காது நொடியில் பார்வையை தாழ்த்தியவள்.. வெட்கம் சுமந்த முகத்துடன் தன்னவனுக்கு மாலையிட்டாள்..
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு..
என அருமைகாரர் மங்களவாழ்த்து பாடி.. திருமாங்கள்யத்தை எடுத்துக் கொடுக்க.. தன் குடும்பத்தினர் அனைவரையும் ஓர் பார்வை பார்த்தவன்.. குலதெய்வமான அம்மை அப்பனையும் மனதில் வேண்டிக்கொண்டு அன்பழகியின் கழுத்தில் தாலி கட்டினான்..
அவன் மனமோ ஏழேழு ஜென்மத்துக்கும் இப்பந்தம் நிலைக்க வேண்டும் என்றும்.. எங்கள் வாழ்வின் இறுதி வரை நாங்கள் ஒன்றாகவும்.. தங்களின் இல்லறம் நல்லபடியாக சிறக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது..
இவர்கள் இல்லறத்தின் காலமும் மகிழ்ச்சியின் காலமும் சில வருடங்கள் தான் என்றும்.. பிற்காலத்தில் ஒரு யட்சனியின் கரத்தில் தன் வாழ்க்கையும், தன் குடும்பமும் சிக்கிக்கொள்ள போகிறது என்றும்.. என பாவம் அவனுக்கு தெரியவில்லை..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.