அம்மையப்பன் 3
வருடம் 2018..
ஐயா.. ஐயா.. அப்பத்தா.. அம்மத்தா.. பெரியத்தை.. சின்னத்தை.. அப்பாறு.. எல்லாரும் வாங்க.. வாங்க.. இங்க பாருங்க.. நான்தான் என்ற கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்.. என துள்ளிக் குத்திக் கத்திக்கொண்டிருந்தாள்.. பதினாறு வயது பாவை..
அவளின் சத்தத்தில் அம்மாளிகையில் உள்ள அனைவரும்.. கூடத்திற்க்கு வந்தனர்..
நீண்ட கருங்ககூந்தலை இரட்டை ஜடையில் பின்னி.. இருக்கி கட்டிருக்க.. அதுவே அவளின் முதுகின் வரை நீண்டிருந்தது.. பிள்ளை மனம் மாறா முகத்தில்.. குடிகொண்டிருந்த களைப்பையும் மீறி.. துருதுரு விழிகள் பளப்பளக்க.. வாய்க்கொள்ளா சிரிப்புடன்.. தன் கையில் உள்ள ரிப்போர்ட் கார்டை காட்டியவாறு துள்ளிக்கொண்டிருந்தாள்.. கார்குழலி..
அப்போது அவள் தந்தை அங்கு வர.. சட்டென அவரிடம் விரைந்து.. அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்..
ஐயா.. இங்க பாருங்.. நான்தான் இந்த தடவை மொத ரேங்.. என மகிழ்ச்சியுடன்.. ரிப்போர்ட் கார்டை காண்பித்தாள்..
ஆரு.. இவங்க.. என்ற செல்ல அம்மணி ஆச்சே.. என அவள் தலையை பாசமும் பெருமிதமுமாக வருடிக்கொடுத்தான் அகத்தியன் அம்மையப்பன்..
வெண்ணிற வேஷ்டி சட்டையில்.. லேசான தாடியுடன்.. கருமையும் வெண்மையும் நிறைந்த சிகைகள் சிரத்தை அலங்கரிக்க.. நாற்பது வயதினில்.. ஓங்குதாங்கான தோற்றதுடன். முன்னிலும் கம்பீரமாய்.. பார்ப்பவர் மனதை கொள்ளைக் கொள்ளும் வகையில் நின்றிருந்தான்.. அகத்தியன் அம்மையப்பன்..
அவன் முகத்தில் குடிகொண்டிருந்த வசீகர சிரிப்பு என்றும் போல் இன்றும் அவனை மேலும் அழகனாக்கியது.. ஆனால் அதனோடு ஓர் வலியும் இருக்க.. அவனைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்கே அதனை கண்டு கொள்ள முடியும்..
தகப்பனும் மகளும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க.. சுற்றியுள்ளோர் அதனை மனம் கணக்க.. விழிகள் பணிக்க பார்த்து கொண்டிருந்தனர்..
அம்மணி உன்ற அம்மாகிட்ட இந்த சேதிய சொல்லிட்டியா..
அச்சோ.. மறந்துட்டேனுங் ஐயா.. என லேசாக தலையில் தட்டிக்கொண்டவள்.. தன் தாயை நோக்கி சென்றாள்..
அம்மா.. இங்க பாருங்.. இந்த தடவை நான்தான் மொத மார்க் எடுத்துருக்கேன்.. எல்லாரும் கையெல்லாம் தட்டுனாங்க தெரியுமா.. என விழிகளை உருட்டி மகிழ்ச்சியாக குழலி கூறிகொண்டிருக்க.. எதிரில் புகைப்பட சட்டத்தில் பூமாலையின் நடுவே முகத்தில் குடிகொண்டிருந்த தெய்வீக சிரிப்புடன் வீற்றிருந்தாள் அன்பழகி..
குழலி அன்பழகியின் போட்டோ முன் நின்று பேசுவதைக் கண்ட பேச்சியம்மை.. தொண்டையினுள் இருந்து வெளிவந்த கேவலை யாருக்கும் காட்ட மனமின்றி வேக வேகமாக உள்ளே சென்றார்..
அவரின் நிலைதான் அங்குள்ளோர் அனைவருக்கும்.. ஆனால் அகத்தியனுக்காக தங்களின் வேதனையையும் வருத்தத்தையையும் மனதிலேயே புதைத்து.. வெளியே புன்னகை என்ற முகமூடியுடன் நின்றுக்கொண்டிருந்தார்கள்..
அகத்தியனுக்கு அக்காட்சியை காணக்காண நெஞ்சம் அடைத்தாலும்.. நிதர்சனம் புரிந்து.. கலங்கிய மனதை கட்டுப்படுத்தினான்..
தகப்பனிடம் ஒப்பித்தது போல் தாயிடமும் இன்று நடந்த அனைத்தையும் சொல்லிய பின்னே அவள் மற்றவர்களை பார்த்தாள்..
ம்ம்ம்ம் இதுக்குத்தான் போன தடவை அம்புட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியாக்கும்.. என மரகதம் நொடித்துக் கொள்ள.. குழலி அம்மத்தா என சலுகையாக அவர் தோளில் சாய்ந்தாள்..
நல்லா சொல்லுங்க அத்தை.. எம்புட்டு அழுகை.. எல்லாம் இந்த மொத மார்க்குக்குத்தானே..
கார்குழலி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.. படிப்பில் அதிக ஆர்வமுண்டு.. எப்பொழுதும் அவள் தான் முதல் மதிப்பெண் எடுப்பாள்.. போன தடவை உடல்நிலை சரியில்லாததால் சரியாக பரீட்சை எழுத முடியவில்லை.. அதனால் இரண்டாம் மதிப்பெண் எடுக்க.. அது தாங்காது வீட்டினுள் வந்து ஒரே அழுகை.. யார் சமாதானமும் எடுபடவில்லை..
அம்மணி இங்க பாருத்தா.. படிப்பு அறிவ வளத்துக்கதானே தவிர மொத மார்க்குக்காக இல்லை.. மொத அத புரிஞ்சுக்கோ.. புரிஞ்சு படிச்சாலே மார்க்கு தானா வரும் சாமி.. நீ பின்னாடி காலேஜு சேர்ந்ததுக்கப்புறம் உன்ற மார்க்க பத்தி எல்லாம் கேட்கமாட்டாங்க.. நீ அதுல இருந்து எவ்வளவு புரிஞ்சு வச்சுருக்கேனுதான் பாப்பாங்க.. என பலவாறு அகத்தியன் சமாதானம் செய்யவும் தான்.. அவள் அழுகை மட்டுப்பட்டது..
சின்னத்தை.. நான் இனிமே மார்க்குக்கு எல்லாம் அழ மாட்டேன்.. என அவரிடம் முகம் சுருக்கியவள்..
ஐயா.. இன்னைக்கு அந்த கீதாகிட்ட அதான் ஐயா.. போன தடவை மொத ரேங் வாங்குனாளே… அவகிட்ட டீச்சரு கேள்வி கேட்டாங்க.. அவளுக்கு தெரியவேயில்ல.. ஆனா நான் கரெக்ட்டா சொன்னதும்.. எல்லாரையும் டீச்சரு க்ளாப் பண்ண சொன்னாங்.. என முகம் மின்ன கூறினாள்..
யாத்தே போதும் அம்மணி.. வந்ததுல இருந்து எதுவும் குடிக்க கூட இல்லை.. போத்தா போயி உடம்பு கழுவி உடுப்பு மாத்திட்டு வா.. அப்பத்தா.. உனக்கு பிடிச்ச கருப்பட்டி சேவு செஞ்சிருக்கேன்.. போ சாமி.. என வேதவல்லி அவள் முடி ஒதுக்கி கொஞ்ச..
அரிசிமாவு, கருப்பு உளுந்து மாவினை சூடான எண்ணெயில் வறுத்து, கருப்பட்டி பாகில் கலந்து.. உடைத்த மிளகு சேர்ந்து செய்யப்பட்ட.. சிறிது உரைப்பும் அதிக இனிப்பும் நிறைந்த சேவின் சுவையை நினைத்தாலே.. குழலியின் நாவில் எச்சில் ஊறியது..
அப்பத்தா நான் அப்பொறம் மாத்திக்கிறேன்.. இப்போ கொஞ்சோண்டு கொடுங்களேன் என பூனைக்குட்டியாய் அவரை ஒரசினாள்..
அம்மணி.. என அகத்தியன் சிறு சிரிப்புடன் அழைக்க.. செல்ல சிணுங்களுடன்.. தன் பையை எடுத்துக் கொண்டு வேகமாக தன் அறைக்கு சென்றாள்..
*************************************
அம்மணி எம்புட்டு நேரம் இப்படியே அழுதுகிட்டு இருக்க போற.. என்றார் அம்மையப்பன்..
வேற என்ன பண்ண சொல்லுறீங் மாமா.. என்னால அழுவ மட்டும்தானே முடியும்.. என புலம்பலுடன் சொன்னார் பேச்சியம்மை.. மேலும்
எல்லாம் அந்த சோசியர் சொன்ன கணக்கா தான் நடக்குது.. வாழ வேண்டிய வயசுல என்ற சாமி வாழ்க்கைய தொலைச்சுட்டு நிக்குதே.. போக வேண்டிய நாமெல்லாம் குத்துக்கல்லாட்டம் இருக்க.. வாழவேண்டிய இளம்குருத்தா மேல போகணும்.. குழலி புள்ள ஒவ்வொரு தடவையும் அவ அம்மைகிட்ட போட்டோவ பாத்து பேசுறத பாக்கும் போது.. என் உசிரு கருகுதே.. நம்ம வீட்டு மக்க செஞ்ச பாவம்.. அவன் தலையில தான் விடியும் சொன்னது சரியா போச்சே.. அவன் பிள்ளை அம்மா இல்லாம படுற பாடு எல்லாம்.. யார் தவிச்ச தவிப்போ.. இன்னும் அவன் பாக்க வேண்டியத நினைச்சா எங்குலையே நடுங்குதே.. எஞ்சாமி எப்படி இதெல்லாம் தாங்க போறானோ.. என ஒப்பாரி வைத்தவர்.. சட்டென கோபமாகி.. தன் கணவரை பார்வையால் எரிக்க ஆரம்பித்தார்..
எல்லாத்துக்கும் நீங்களும் உன்ற மவளும் தான் காரணம்.. அந்த புள்ளய இங்கன கூட்டி வாங்கன்னு நான் அம்புட்டு சொல்லியும் கவுரவம் பாரம்பரியம்ன்னு பேசி அந்த பிள்ளைய அனாமத்தா விட்டிங்களே.. அந்த பாவம்தாம் இப்போ நம்ம குடும்பத்தை ஆட்டுது.. இந்த குடும்பத்துக்கான அடுத்த வாரிசு.. இப்போ கேள்வி குறியா நிக்குதுங் மாமா.. என்ற பேரன் இன்னொரு கண்ணாலம் வேணாம்ன்னு சாமியார் கணக்கா சுத்திகிட்டு திரியிரானே.. என படபடப் பட்டாசாய் பொரிந்தார்..
அம்மையப்பன் அமைதியாக நின்றார்.. ஓர் வருடம் முன்பு அவரே தன் கண்களால் அப்பெண்ணையும் அவர் பிள்ளைகளையும் பார்த்தாரே.. பார்த்தவுடன் அவரின் உடலில் ஓடிய நடுக்கத்தை இன்றளவும் அவர் உணர்கிறார்.. அதோடு அவர் இதயமும் கலங்கி துடித்ததே.. அதை என்றும் அவரால் மறக்க முடியாது.. அவள் மட்டும் இக்குடும்பத்தில் காலடி எடுத்து வைத்தால்.. என்ற எண்ணமே அம்மையப்பனை கதிகலங்க வைத்தது..
உண்மைதான் அம்மணி.. அவளை நம்ம வூட்டுக்கு கூட்டியாந்துருக்கணும்.. தப்பு பண்ணிட்டோம் அதுக்கான பலனை அனுபவிச்சு தான் ஆகணும்.. என ஓய்ந்து போன குரலில் அம்மையப்பன் கூற.. பேச்சியம்மை பதறினார்..
மாமா விடுங்.. நான் ஒரு கிறுக்கச்சி.. தேவையில்லாம பேசி உங்களையும் நோகாடிச்சுட்டேனேனுங்.. விடுங் நடக்குறது நடக்கட்டும்.. அந்த புள்ளக்கிட்ட போகாத வரை பிரச்சனை இல்லன்னு தான சொன்னாங்.. பாத்துக்கிடலாம் மாமா.. என பேச்சியம்மை தன் கணவனை சமாதானம் செய்தார்..
ஆனால் அம்மையப்பன் சமாதானம் ஆகவில்லை.. என்றைக்கு இருந்தாலும் அவள் இம்மாளிகைக்கு வந்தே தீருவாள் என அவர் மனம் உறுதியாக கூறியது.. அது அவருக்கு விருப்பமா இல்லையா என அவரின் ஆழ்மனதுக்குத் தான் தெரியும்..
*************************************
சாமி.. வாய்யா.. இத கொஞ்சம் வவுத்துக்குள்ள போட்டுட்டு போ.. என மாலை பலகாரம் சாப்பிட அகத்தியனை அழைத்தார்.. வேதவல்லி.
ஹ்ம்ம் இதோ வரேன்னுங் அம்மா.. என அவன் எழ.. போன் இசைத்தது..
அய்யா.. நம்ம ஜவுளிக்கடையில இன்னைக்கு வந்த சரக்குல.. ஒரு பண்டல் மூட்டையில் மட்டும் நிறைய டேமஜ் துணிங்க இருக்குங் அய்யா.. என அக்கடையின் மேற்பார்வையாளர் சொல்ல.. அகத்தியனின் புருவம் சுருங்கியது..
சரி அதை ஒதுக்கி வச்சுட்டு மத்தத மறுக்கா செக் பண்ணிக்கோங்க.. நமக்கு துணி அனுப்புற சூரத் காரங்களுக்கு பிராப்பர் மெயில் அனுப்பிட்டு பண்டல ரிட்டர்ன் அனுப்பிடுங்க.. சாயங்காலம் அமுதன் வருவான்.. மத்தத அவன்கிட்ட கேட்டுக்கோங்..
சரிங்க ய்யா.. வச்சுடுறேன்னுங்.. என அவர் போனை வைக்கவும்.. அடுத்த கால் வந்தது..
சார்.. நம்ம இரும்பு ஆளையில உள்ள காலியிடத்துக்கு இன்டெர்வியூ வச்சதுல நாற்பது பேர் செலக்ட் ஆகிருக்காங் சார்.. அவங்கள எப்போ வேலைக்கு வர சொல்லனும்..
வர முதல் தேதில இருந்து வர சொல்லிடு கபிலா.. அப்பொறம் எல்லாருக்கும் மூனு வருஷத்துக்கு அக்ரீமெண்ட் போட்டுடு.. என போனை வைத்தான்..
மொத அத தூக்கிப்போடு சாமி.. இல்லன்னா சும்மா சும்மா அடிச்சுட்டு கிடக்கும்.. என பொறுமையிழந்து கூறினார் அமிர்தவல்லி..
பண்ணா நமக்குத்தான்ங்கக்கா நஷ்டம்.. என்றான் மென்சிரிப்புடன்..
என்ன நஷ்டமோ.. போ சாமி.. நம்மகிட்ட இல்லாத சொத்தா.. பணமா.. நீ உனக்குன்னு ரைஸ் மில்லு, ஜவுளிக்கடை.. கரும்பாலை, இரும்பாலை, ஹோட்டலு, தேயிலை தோட்டம், சவுக்கு தோப்பு, ஊட்டில ரெசார்ட்ன்னு.. அத்தனையும் ஆரம்பிச்சு இப்போ நிக்ககூட நேரமில்லாம ஓடிக்கிட்டு கிடக்க.. ஏதோ உன்ற மவளுக்காக மட்டும் ராத்திரிக்கு நேரத்தோட வூட்டுக்கு வர.. என மரகதம்.. ஒப்பாரி வைக்காத குறையாய் கூறிகொண்டிருந்தார்..
அத்தை.. அப்பாறுங்கிட்ட இருக்கிற சொத்தே போதும்னு ஐயன் நினைக்கலையே… அவரும் தனக்குன்னு தனியா ஒன்ன உருவாக்குன்னாருள்ள.. அத்தை..
ஆமா சாமி.. என்ற அண்ணே அவன் ஆசைப்பட்ட தொழிலு தொடங்குனாங்க தான்.. ஆனா கோவை மேட்டுப்பாளையத்துல.. ஒன்னு ரெண்டோட நிப்பாட்டிட்டு நம்ம குடும்ப சொத்தையும் பாத்துக்கிட்டு இருந்தாங்.. ஆனா நீ கோயம்பத்தூர், ஊட்டி, குன்னுர், கோத்தகிரின்னு கேரளா வரைக்கும் ஒவ்வொன்னா ஆரம்பிச்சுக்கிட்டு இங்கன உள்ளதையும் பாத்துக்கிட்டு கிடக்க.. ஒன்னால ஒரு வா சோறு நிம்மதியா சாப்புட முடியுதா சாமி.. வட்டில கை வச்சாலே எட்டு போனு வருது என கோபமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தார்..
அப்போது கீழே வந்த குழலி.. அம்மத்தா எப்போ பாத்தாலும் என்ற ஐயாவை ஏசிக்கிட்டே இருக்கிங்.. போங்.. நானே என்ற ஐயனுக்கு பலகாரம் கொடுத்துக்குறேன்.. என அவரை முகம் சுருக்கி அதட்டியவள்.. தகப்பன் அருகே அமர்ந்து.. ஐயா நீங்.. போன் பேசுங்.. நா என்ற கையால உங்களுக்கு ஊட்டிவிடுறேன்னுங்.. என கூறியவள்.. அங்கிருந்த மிளகாய் பஜ்ஜியை எடுத்து அவனுக்கு பிடித்த தேங்காய் சட்டினியில் குழைத்து அவன் வாயருகே நீட்ட.. அகத்தியன் உள்ளம் நெகிழ.. மகள் தந்ததை உண்டான்.. மிளகாயின் காரம் அமிர்தம் போல் அவன் தொண்டை குழியினுள் இறங்கியது..
அதனைக் கண்டு அவன் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து தான் போனார்கள்.. வேதவல்லிக்கும் மரகதத்திற்கும் தங்களின் பேத்தியைக் கண்டு அவ்வளவு பெருமை.. குழலி ஏழு வயதினில் தாயை பறிகொடுத்து.. ஒருவாரம் அன்பழகியை கேட்டு அழுதாலும்.. தாய் இனி வரமாட்டாள் என்ற நிதர்சனம் புரிந்து நடந்துக் கொண்டாள்.. மேலும் அச்சிறுவயதிலேயே தந்தையின் வேதனை புரிந்து அகத்தியனோடே சுற்றிக்கொண்டிருப்பாள்.. அவனும் தன் துக்கத்தை விலக்கி மகளுக்காவே வாழத் தொடங்கினான்.. தொழிலில் தன்னை புகுத்தி மேலும் மேலும் வளரத் தொடங்கினான்.. என்னதான் வேலை நிமித்தம் வெளியே சுற்றினாலும் இரவு உணவிற்கு முன்பே வீட்டிற்கு வந்துவிடுவான்.. அவனே தன் கையால் மகளுக்கு சாப்பாடு ஊட்ட.. அவளோ அன்றைய நாள் நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்புவிப்பாள்.. அந்நேரம் அவர்களுக்கான நேரம்.. தந்தையும் மகளும் மட்டுமே தங்கள் உலகில் சஞ்சரிக்கும் மிக மிக அழகான நேரம்..
அகத்தியனுக்கு அன்றைய நாளின் மொத்த களைப்பும், அழுத்தமும் தன் மகவின் மொழியில் அவளுடனான நேரத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும்.. அவன் வெளியூர் செல்லும் நாட்கள் எல்லாம் வீடியோ காலில் பேசிக்கொள்வார்கள்.. கார்குழலி தகப்பனே.. தன் அனைத்தும் என நினைத்து வளர்ந்து கொண்டிருக்கிறாள்.. மறந்தும் கூட தாய் இல்லையே என நினைத்து அவள் வருந்தும் அளவிற்கு.. அகத்தியனும் சரி மற்றவர்களும் சரி ஒரு நொடிக்கூட விட்டதில்லை.. அமிர்தவல்லியும் பவளமல்லியும் தங்கள் பிள்ளைகளை விட அவள் மேல் அதிகம் பாசம் வைத்துள்ளார்கள்..
ஹ்ம்ம் நீ இப்படி உன்ற ஐயனுக்கு கொடி புடிக்கிறதாலதான்.. அவன் தொழிலு தொழிலுன்னு வெளியவே சுத்திகிட்டு கிடக்கான்.. என பவளமல்லி பெருமையாக நொடித்துக்கொள்ள..
ஐயா இன்னும் கொஞ்ச நாளு மட்டும் நீங்க பாத்துக்கோங்க.. நா இன்னும் கொஞ்சம் பெரியவளா ஆனதும்.. நானும் உங்களுக்கு உதவி செய்றேன்.. நீங்க கவலைப்படாதீங் ஐயா.. அப்போ இன்னும் நிறைய ஊருல நம்ம தொழில விரிவு படுத்தலாம்.. என அகத்தியனுக்கு ஆதரவாக பேசிய குழலி.. நாக்கை நீட்டி கண்ணை உருட்டி.. பவளமல்லியிடம் அழகு காட்டி சிரிக்க.. அனைவரின் மனமும் நிறைந்து போனது..
அகத்தியனோ மீசையை முறுக்கி விட்டவாறு தன் மகளை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..