அகனெழிலன் அலுவலகத்தினுள் நுழைய அனைவரும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தனர்.
இரவே குழு உறுப்பினர்களின் பெயரை இயக்குனருக்கு அவன் மெயில் செய்திருக்கஇப்போது அவர்கள் செல்ல வேண்டிய இடங்களின் விபரங்களை நிரப்பி உரிய குழுத்தலைவரிடம் சேர்த்திருந்தனர்.
எழிலும் ஒரு குழுவிற்கு தலைமை ஏற்றிருக்க அது குறித்த விபரங்கள் தாங்கிய கோப்பு அவன் கரம் வந்து சேர்ந்தது. அவன் எதிர்பார்த்தது போலவே முன்னாள் அமைச்சர் பிரகாசத்தின் மீதான புகாரின் பெயரில் தான் இன்று அவர் வீடு மட்டுமின்றி அவரின் உறவினர்களின்இடங்களிலும் சோதனைக்கு செல்ல இருக்கின்றனர். ஆனால் இதில் அவனுக்கான சோதனை என்னவென்றால் பிரகாசத்தின் வீட்டிற்கு சென்னையில் இருந்துவரும் உயர்மட்ட மேலதிகாரிகளும் இயக்குனரும் செல்ல.., அவர் அண்ணனான அயவந்திநாதனின் வீடு மற்றும் ஏனைய இடங்களை சோதிக்கும் பொறுப்பை எழிலுக்கு வழங்கி இருந்தனர்.
நாதனிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் என்பது இவனுக்கு தெரிந்தாலும் இது தவிர்க்க முடியாதது. ஆம் மினிஸ்டரின் நெருங்கிய உறவு என்பதால் நிச்சயம் அனைவரின் வீடுகளுக்கும் செல்வர். நேர்மையாக செயல்படுவதால்இவரை விதிவிலக்காக கொள்ள முடியாது..!
இந்நேரத்திருக்கு புலனாய்வு துறையினர் ஆதியுடன் அந்தமாக அனைத்தையும் தோண்டி துருவி இருப்பவர்கள் கண்ணை நிச்சயம் நாதனின் செல்வவளம் உறுத்தியிருக்கும்அதுபோதுமே அவர் வீட்டை சோதனையிட..!!
வரி ஏய்ப்பு செய்யாமல் நியாயமான முறையில் நேர்மையாக தொழில் செய்துவரும் நபரின் வீட்டிற்கு சோதனையிட மற்றவர்கள் சென்றாலே அவர் நிலையை வரையறுக்க முடியாது.., இதில் அகனெழிலன் என்றால் சொல்லவும் வேண்டுமா? நாதன் தன் பணியின் தன்மையை எந்தளவு புரிந்து கொள்வார் என்று எழிலால் அனுமானிக்க முடியவில்லை.
அனைத்தும் முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தும் தருணத்தில் தான் முடியாது என்று விலக முடியாது இருப்பினும் ஒரு முயற்சியாக மேலதிகாரியின் முன்பு சென்று நிற்க அவரோ “என்ன மிஸ்டர் அகனெழிலன் டூ யூ வான்ட் டு ஸ்வாப்(swap)” என்று மேவாயை நீவியவாறு அழுத்தமான குரலில் கேட்க..,
அதிலே எழிலுக்கு புரிந்து போனது இது தனக்கான பரிட்சை என்பது!!
“அப்படி இல்லை சார் எப்பவும் க்ளோஸ் ரிலேஷன்ஸ்கு அசைன் பண்ண மாட்டிங்களே.., ஒரு வேலை அவர் என் மாமனார்னு உங்களுக்கு தெரியாதோன்னு ஒரு தாட் அதான் ஜஸ்ட் வான்ட் டு மேக் சூயர்”
“ஐ நியு.. ஐ நியு யூ மேன் நீங்க இங்க மாற்றலாகி வந்தப்பவே உங்களோட பேக்ரவுண்ட் என் கைக்கு வந்துடுச்சு .., I know well about your work.. Since I am going to minister’s house I want someone to replace me அதனால தான்உங்களை அங்க அசைன் பண்ணினேன்.., நன் அதர் கேன் டூ அஸ் கிரேட் அஸ் யு..!! சோ பர்சனல் வேற ப்ரொபெஷனல் வேற ஜஸ்ட் கோ அஹெட்”
‘ஓகே சர்’ என்று மேலதிகாரியின் அறையில் இருந்து வெளியேறிய அகனெழிலனின் மனம் முழுக்க நாதன் எவ்வாறு இச்சோதனையை அதிலும் தன் வரவை எதிர்கொள்வார் என்பது குறித்த சஞ்சலமே மேலோங்கியிருந்தது.
ஆம் சஞ்சலம் என்பதே இங்கு பொருத்தமான வார்த்தையாகும்..!!
அதுவும் சில வருடங்களுக்கு முன் அதீத மனஅழுத்தத்தின் காரணமாக ஒருமுறைலேசான மாரடைப்பு (mild attack) ஏற்பட்டு சில வாரங்கள் மருத்துவமனை வாசம் பெற்றுதிரும்பியிருப்பவர் தற்போது கடந்த சில மாதங்களாக சரண் கீர்த்தி விடயத்தில் அதிகமாக தலையிட்டு பெரும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் துரோகத்தையும் சந்தித்திருப்பவர் அடுத்ததாக சேராத இடம் சேர்ந்ததன் காரணத்தாலேயே எவ்வித தவறும் செய்யாமல் வருமான வரிச்சோதனையை சந்திக்க வேண்டிய நிர்பந்த நிலையில் நிற்கிறார்.
முதலில் நாதனின் வீட்டை சோதிக்கும் பொறுப்பு தன்னிடம் அளிக்கபட்டதில் சில நொடிகள் திகைத்திருந்தவன் மீண்டும் ஆணையை படிக்க அதில் பிரகாசம் அவர் விசுவாசிகள் சிலர் மற்றும் நாதனுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே சோதனை நடத்த ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதை கண்டுகொண்டான்.
ஆரணியில் மட்டுமே மொத்தம் பன்னிரண்டு குழுக்கள் அவற்றில் பெரும்பாலும் பிரகாசத்திற்கு சொந்தமான வீடு, தொழிற்சாலை, அலுவலகம், பண்ணை வீடு மற்றும் நெருக்கமான நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள் இருக்க நாதனுக்கு சொந்தமான சில இடங்களும் அடங்கி இருந்தது தான் எழிலுக்கு வியப்பு..!!
ஏனெனில் எப்போதுமே ஒரு புகார் வந்ததும் அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து ஊர்ஜிதபடுத்தும்துறையினர் முதலில் செல்வது நெருக்கமான உறவுகளின் வீட்டிற்கே.
ஆனால் இங்கு வேறு எந்த உறவுகள் மீதும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் அவர் மீதான புகார் தெளிவாக அமைந்திருந்தது. ஆனால் நாதன் எவ்வாறு இவ்வட்டத்தினுள் வந்தார் என்று யோசிக்கையில் தான்சில மாதங்களாகவே நாதன் பிரகாசத்துடன் நெருக்கமாக இருப்பதன் விளைவு என்று புரிபட “சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா” என்ற வரிகள் தான் எழிலுக்கு நினைவு வந்தது.
ஏனெனில் எப்போதுமே வருமான வரித்துறையினர் ஒருவர் மீது வரும் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அவர்வீட்டை சோதனையிட அனுமதி அளிக்கமாட்டார்கள். புகார் அளிக்கப்பட்ட நபரையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களைகண்காணித்து பெறப்பட்ட புகாரின்நம்பகத்தன்மையை உறுதிபடுத்தினாலும் சில நேரங்களில் சந்தேகத்திற்கு இடமிருக்கும் பட்சத்திலும் சர்ச் வாரன்ட் பிறப்பிப்பர்.
அவ்வாறு பிரகாசத்தை நெருக்கமாக கண்காணித்திருக்கும் போது கடந்தசிலமாதங்களாகவே பிரகாசத்தின் உடன் பிறந்தோரில் நாதன் மட்டுமே அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கண்டுகொண்டிருப்பர். அது கீர்த்தியின் வாழ்வு குறித்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்பதுஅடுத்தவருக்கு புரிய வாய்ப்பில்லையே..!! இதுவே அவரை சந்தேகவட்டத்தினுள் நிறுத்த போதுமானதாக இருந்து இருக்கும் என்பதை சில நிமிடங்களில் கணித்து விட்டான்.
எப்போதும் மதிப்பீட்டாளர்களை கணித்து கையாள அவனுக்கு சில நீண்ட நிமிடங்களே போதுமானதாக இருக்கும்.., ஆனால்இங்கு நாதனின் குணநலன் அவனுக்கு அத்துபடி என்பதால் அவரை கையாள்வது மிக எளிது அதனால் அந்த சில நிமிடங்கள் கூட தேவைப்படாது. என்ன ஒன்றுஎப்போதும் எழில் வடக்கில் நின்றால் விருப்பமில்லைஎன்றாலும் அவனை எதிர்க்க வேண்டியே தெற்கில் நிற்பவர் எப்போதும்தன் பேச்சை முழுதாககூட காது கொடுத்து கேட்காத மனிதர் இன்று கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எண்ணியவனின் அதரங்கள் புன்னகையில் நிறைந்திட “கெட் ரெடிமாமா” என்று முனுமுனுத்தவாறே தன் அறைக்குள் நுழைய அங்கே அவன் குழுவை சேர்ந்த அனைவரும் அவன் கட்டளை வேண்டி அணிவகுத்து நின்றிருந்தனர்.
அடுத்த சில நிமிடங்களுக்கு புயலென செயல்பட்டு அனைத்து கோப்புக்களையும்சரி பார்த்து அவரவருக்கென ஒதுக்கப்பட்ட பணிகள்குறித்த ஆணையை அளித்தவன் தன் உதவியாளர்அபிஷேக்கை அழைத்து ‘மெடிக்கல் டீம்‘ என்றுகேள்வி எழுப்ப..,
“எஸ் சார், ஸ்பாட்க்கு போயிட்டு இருக்காங்க என்றவன் கூடுதல் தகவலாக காப்ஸும் ஆல்ரெடி ஆன் ஸ்பாட்” என்றான்.
‘குட் ! லெட்ஸ் ஸ்டார்ட்‘ என்று பதினைந்து பேர் கொண்ட குழுவுடன்தனக்கென ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தில் ஏறி புறப்பட்டான்.
சர்ச்சின் போது மருத்துவ குழு கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அரசு நெறிமுறைகளில் ஒன்று.., அதிகாலையே ஒருவரின் வீட்டிற்குள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்நியர்கள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வீட்டையே தலை கீழாய் புரட்டி போடுகையில் சிலரால்உணர்வுகளை கையாள முடியாமல் பல சமயங்களில் மயக்கம் முதல் அழுத்தம் காரணமாக மாரடைப்புவரை ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்தகைய தருணங்களில் மருத்துவ குழுவினரின் தேவை அதிகரிக்கும் என்பதால் இவர்களுடனே மருத்துவ குழுவும் இணைந்து கொள்ளும்.
சர்ச் போது பொருட்களையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்வார்களே தவிர கைது நடவடிக்கைகள் பெரும்பாலும் இருக்காது.. ஆயினும் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மட்டுமே காவல்துறை அதிலும் அவர்கள் சோதனை அதிகாரிகளின் பணியை பாதிக்காத வண்ணம் பார்த்துகொள்வர்.
வாகனத்தில் அமர்ந்திருந்தவனுக்குதன்னுடன் பயணிக்கும் குழுவில் ஒருவர் அவனை கண்காணிப்பர் என்பது நன்கு தெரியும்! பின்னே அடுத்தகட்ட பதவி உயர்வு பட்டியலில் அகனெழிலனின் பெயர் உள்ளது.., அந்த இடத்திற்கு அவன் தகுதியானவன் தானாஎன்று சோதிக்கும் நிகழ்வாகவும்இன்று அவனுக்கு வழங்கபட்டிருக்கும் பணி இருக்கலாம் என்பதன் அடிப்படையிலான யூகம்..!!
இன்றைய சோதனை தனக்கான அக்னிபரிட்சை என்பதால்ஒருபுறம் நேர்மையாக செயல்படுவதோடு நாதன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிருபிக்கும் பொறுப்பும் அவனுக்கு உண்டுஎன்பதால் இருமடங்கு கவனத்துடன் அகனெழிலன்.
பல நேரங்களில் பாதாளம் வரை பாயும் பணம் இங்கும் சில நேரங்களில் பதவி உயர்வின் போது பாய்ந்தாலும் எதையும் நேர்மையுடன் செயலாற்றும் குணம் கொண்ட அகனெழிலன் ஒருநாளும் அவ்வழியை தேர்ந்தெடுத்து உயர்வு பெற்றதில்லை. செய்யும் பணியை சிறப்பாக செய்வதே தனக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுக்கும் என்பதை பெரிதும் நம்புபவன்..,
அதிலும் அரசாங்கத்திடம் மாதம் தோறும் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசு ஊழியர் என்ற தகுதியுடன் இன்னபிற வசதிகளை அனுபவித்தாலும் பணத்திற்கு விலை போககூடிய ஆட்கள் இங்கு ஏராளம். அதுபோன்றவர்களை களையெடுக்க திருடன் கையில் கொத்து சாவியை அளிப்பது போல சில நேரங்களில் அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து கண்காணித்து அவர்களை கையும் களவுமாக பிடிக்கும் நடைமுறையும் அவர்கள் துறையில் உண்டு.
அனைத்து துறைகளிலுமே புல்லுருவிகள் விரவி இருந்தாலும் பணத்திற்கு விலை போகாமல் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருப்பவனிடம் பணி நேரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
நாதனின் வீட்டு கேட்டை திறந்துகொண்டு உள்ளே செல்லவும் தோட்டத்தில் அமர்ந்திருந்த தாயம்மாள் ‘ராசா‘ என்று எழில் அருகே வந்தவர் அவன் பின்னே வந்த கூட்டத்தை கண்டு ஒரு நொடி மிரண்டு போனார்.
உடனே தன்பின்னேஇருந்த பெண் ஊழியரை அகனெழிலன் பார்க்கவும் அவன் பார்வை புரிந்தவராக அப்பெண்மணியும் தாயம்மாளிடம் சென்றார்.
வீட்டினுள் நுழைந்தவனை வெளியில் கிளம்பிகொண்டிருந்த கதிர் தான் முதலில் எதிர்கொண்டான்.., “என்ன மாமா காலையிலேயே..” என்று ஆரம்பித்தவன்அவன்பின்னே நுழைந்தவர்களை கண்டதும் தன் பேச்சை நிறுத்தி எழிலை பார்க்க..,
“மிஸ்டர் அயவந்திநாதன் வீட்ல இருக்காரா..??” என்று எழில் கேட்ட தொனியில் திகைத்தாலும் “இருக்காங்க சா.. சார் இதோ கூப்பிடுறேன்” என்றவன் உள்ளே செல்லவும் எழிலின் பின்னே வீட்டினுள் வந்தவர்களில் சிலர் ஒருநொடி ஸ்தம்பித்து போயினர்.
பின்னே நாதன் வீட்டின் வரவேற்பறையில் அலங்காரமாய் எழில் அலரின் திருமண புகைப்படமும்.., அவிரனின் முதல் பிறந்த நாளின்போது குடும்பத்துடன் இணைந்து எடுக்கப்பட்டபுகைப்படமும் வீற்றிருப்பதை கண்டு தான் அதிர்ந்து போயினர். அவர்களின் பார்வை அன்னிச்சையாய் எழில் புறம் திரும்பவும் அவர்கள் முன்னே நின்றிருந்தவன் “அபி” என்று அதிகாரமாய் குரல் கொடுக்கவும் மற்றவர்களும் தங்களை மீட்டு கொண்டனர்.
“இதோ சார்” என்று அபிஷேக் அவனிடம்ஆணையை கொடுக்க அங்கேவந்த நாதன்,
“என்.. என்ன…யார் நீங்க எல்லாம்..?? எதுக்கு வந்திருக்கீங்க..??” என்று பதட்டத்துடன் கேட்க..,
“ஐ ஆம் அகனெழிலன் ஃப்ரம்..”என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டவன்,
‘உங்க வீட்டை சர்ச் பண்ணனும் அதுக்கான வாரன்ட்’ என்று நாதனிடம் ஆணையை நீட்ட..,
சர்ச்சா என்ற நாதனுக்கோ அவ்வார்த்தையின் அர்த்தம் புரிபட்ட அடுத்த நொடியேஉள்ளுக்குள் மெல்லிய படபடப்பு உண்டாகவும் எழிலின் அருகே நின்றிருந்த அபிஷேக்கிடம் “நா.. நான் ப்ராப்பர் டேக்ஸ் பேயர்.. எல்லாத்துக்கும் கணக்கு சரியா இருக்கு அப்புறம் என்ன சர்ச்..?? இது யாரோ பண்ணின சூழ்ச்சி…?? ” என்று முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்துக்கொண்டே கூற..,
அபியோ அவருக்கு பதில் அளிக்காமல் எழிலை தான் பார்த்துகொண்டு நின்றான்..,
உரியவரிடம் சர்ச் வாரண்ட்டை கொடுத்த பின் அவரிடம் இருந்து சோதனைக்கான அனுமதி இவர்களுக்கு தேவை இல்லை என்பதால் அடுத்த நொடி ‘சர்ச்‘ என்று எழில் உரக்க ஆணை பிறப்பிக்கவும் அனைவரும் புற்றில் இருந்து கிளம்பிய ஈசலாக நாதனின் வீட்டை ஆக்கிரமிக்க தொடங்கினர்..,
“யாரை கேட்டு உள்ளே போறீங்க எல்லாரும் வெளில போங்க..” என்று வழக்கமாக மதிப்பீட்டாளர்களுக்கு (assessee) இருக்கும் முதற்கட்ட அதிர்ச்சியில் நாதன் அவர்களை தடுக்க பார்க்க.., எழிலின் கட்டளையை ஏற்று அறைகளுக்குள் அனைவரும் புகுந்திருக்க நாதனின் வார்த்தையை மதிக்கத்தான் அங்கு ஆள் இல்லை.
“எல்லாம் நான் சொல்றேன்.., நீங்க முதல்ல உட்காருங்க சார்” என்ற குரல் கேட்கவும் திரும்பியவர் கண்ணில் அங்கு நாற்காலியில் தோரனையாய்அமர்ந்திருந்த எழில் அகப்பட ..,
“எது சார்ரா..? டேய் உன் வேலைதானா இது..??” என்று கண்களிலே கனலை கக்கியவர், “நான் என் பொண்ணு.. ப்ச் என் லாயர்கிட்ட இப்பவே பேசுறேன்” என்று கைபேசியை எடுக்க..,
அடுத்த நொடிய ‘சீல்‘ என்றான் எழில்.
உடனே பணியாளர்களுள் ஒருவர், “சார் சர்ச் முடியும்வரை நீங்க யாரையும் தொடர்பு கொள்ளமுடியாது” என்றவாறு நாதனின் கைபேசியை பற்றியவர் கதிரிடமிருந்து பெற்று கவரில் போட்டு சீல் செய்தவர் அடுத்து அனைத்து தொலை தொடர்பு சாதனைகளையும் துண்டித்திருந்தார்.
இதையெல்லாம் காணவும்நாதனின் கோபம் பன்மடங்காகிட , “எல்லாரையும் வெளியே போக சொல்லு நான் யார் தெரியுமா..??” என்று எழிலிடம் எகிறினார்.
“நீங்க தான் மிஸ்டர் அயவந்திநாதன்னு ஒருமுறைக்கு நாலு முறை செக் பண்ணின அப்புறம் தான் இங்க வந்திருக்கோம்” என்ற எழிலின் முகத்தில் கடுமை விரவியிருக்க..,
“டேய் என்ன நெனச்சிட்டு இரு..” என்று முடிக்கும் முன்னமே ‘அபி‘ என்று கர்ஜித்திருந்தான் அகனெழிலன்.
அதை எதிர்பாராத நாதனின் உடல் அதிர உடனே எழிலை பார்க்க அங்கு வந்த அபிஷேக்கோ, “சார் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட்.., எங்க வேலையை பார்க்க விடுங்க..நீங்க கோப்அப் பண்ணலைன்னா..” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட்டு,
“வெளில தான் காப்ஸ் இருக்காங்க” என்று தயக்கத்தோடு கூற நாதனும் ஜன்னல் வழியே பார்க்க அங்கு போலீசார் நிற்பது தெரியவும் அமைதியாய் எழிலின் முன் அமர்ந்தவர் உள்ளமோ ‘போலிசை காட்டி மிரட்ட பார்க்கிறானா..??’ என்று எரிமலையாய் சீறத்தொடங்கியது.
அவர் அமரவும், “ஆமா என் வேலை தான்” என்று புன்னகைமுகமாய் தன் அடையாள அட்டையை எடுத்து காட்டியவன், “உங்களோட பெர்சனல் எமோஷன்ஸ் எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிட்டு எங்களுக்கு கோஆபரேட் பண்ணிங்கன்னாநாங்க வந்த வேலையை சிக்கிரம் முடிச்சிடுவோம்” என்று அழுத்தமான குரலில் கூற..,
அதன் பின்பே எழில் அவனின் பணியின் நிமித்தம் வந்துள்ளான் என்பதே அவருக்கு பிடிபட.., சற்றுமுன் ஆளுமையுடன் கூடிய அவன் கட்டளைக்கு பணிந்து அனைவரும் சென்றது நினைவில் எழ கோபம் களைந்து அவரும் தணிந்த குரலில் “நா.. நான் ஒழுங்கா வரி கட்டிடுவேனே அப்புறம் எதுக்கு..என் வீட்டுக்கு ரெய்ட்க்கு வந்திருக்கீங்க”
எழிலுக்கோ என்ன முயன்றும் குரலில் எள்ளல் பரவுவதை தடுக்க முடியாமல் போக, “நீங்க தானே முன்னாள் அமைச்சர் பிரகாசத்துடன் பிறந்த அண்ணன் அப்போ அந்த ஒரு தகுதி போதுமே உங்க வீட்டுக்கு சோதனைக்கு வர” என்று சாய்ந்தமர்ந்தான்.
அவர்கள் நடத்தும் சோதனையின் வீரியம் அவரை சென்று தாக்காமல் இருக்க வேண்டுமானால் அவர் கவனம் முழுதும் அவனிடமே குவித்து வைத்திருக்க படவேண்டும். அப்போது தான்அவர்கள் சோதனையிடும் முறையை முதல் முறை நேரில் காணும் நாதனும் பதற மாட்டார். அதனால் அவரை கையாளும் விதமாக அவரிடம் பேச்சை வளர்க்க தொடங்கி இருந்தான்.
ஏற்கனவே பிரகாசத்தின் மீது கட்டுகடங்காத கோபத்தில் இருப்பவருக்கு இப்போதைய அவரின் நிலையும் பிரகாசத்தால் என்பதை அறியவும் மிதமிஞ்சிய சீற்றமே.
“அவன் அய்யோக்கியனா இருந்தா அதுக்காக அடுத்தவங்களும் அப்படிதான் இருப்பாங்கன்னு நீங்களா எப்படி சார் முடிவு பண்ணுவிங்க..??” என்று நீங்கா கோபத்துடனும் ஆற்றமையுடனும்கேட்டவரிடத்தில் அவரை அறியாமலே எழிலுக்கான மரியாதை பன்மை வந்து சேர்ந்திருந்தது.
எழிலும் நாதனும் சரிக்கு சரி அமர்ந்து உரையாடுவதை கண்டு பதைபதைத்து போன வளர் “தம்பி என்ன ஆச்சு யார் இவங்க எல்லாம்..?? இங்க வீட்ல என்ன பண்றாங்க” எனவும்…,
நாதனிடம் இருந்து பார்வையை திருப்பிய எழில் கதிரை பார்க்க.., அதை புரிந்து கொண்டவனாக உடனே வளர்மதியை தனியே அழைத்து சென்றான்.
“வெல்” என்று மேஜையில் கரம் கோர்த்தவன், “இதை நீங்க அவருக்காக எதை பத்தியும் விசாரிக்காம வரிஞ்சி கட்டிட்டு வருமுன்ன யோசிச்சிருக்கணும் சார்.., ஆழம் தெரியாம காலை விட்டா இப்படிதான் ஆகும் அதிலும் அந்தாளு… என்றவன் நிதானித்து சாரி அவரை மாதிரி ஆட்களை நெருங்கும் முன்ன எவ்வளவு யோசிச்சிருக்கணும்‘ என்று நிதானத்துடன் அழுத்தமாக வந்து விழுந்தது எழிலின் வார்த்தைகள்.
பின்னே இந்நேரத்திற்கு பிரகாசம் மற்றும் நாதனின் வீட்டில் சோதனை நடப்பது ஊடகத்துறையினரால் உலகுக்கே அறிவிக்க பட்டிருப்பதை அறிந்திருப்பவனுக்கு எப்போதும் மானம், கௌரவம் என்று பேசிக்கொண்டிருக்கும் மனிதரை உடன் பிறந்தவன் நிறுத்தியிருக்கும் நிலையில் எழிலின் கோபம் மொத்தமும் மாமனாரின் மீதே திரும்பியிருந்தது.
எழில் பேசிய வார்த்தைகள் மிகவும் குறைவானதாக இருந்தாலும் அது நாதனிடம் ஏற்படுத்திய தாக்கம் மும்மடங்காக இருக்கவும்சில நொடிகளில் அவருக்கு மீண்டும் வியர்க்க தொடங்கியது..,
“அது அது நான் கீ.. கீர்த்திகாக தான்..” என்று திணறியவருக்குமே தன் தவறு புரிந்தது.., கொள்கை ரீதியாக தம்பியை ஒதுக்கி வைத்திருந்தவர், பல மாதங்களுக்கு முன் ஒருநாள் அதிகாலையே தம்பி மனைவி கண்ணீரும் கம்பலையுமாக, காப்பாத்துங்க என்றதில் எதையும் யோசிக்காமல் ஆராயாமல் அத்தனை அவசரமாக செயல்பட்டிருந்தார்.
கொஞ்சம் நிதானித்து கீர்த்தி அங்கே செல்லவேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்திருந்தால் அப்போதே தம்பியின் முகத்திரை கிழிபட்டு நாதன் தலையிடாமல் இன்று இந்த நிலையில் நிற்காமல் போயிருப்பார்… இப்போது அதை நினைக்கையில் அவருக்குதன் முட்டாள்தனம் மெல்ல பிடிபட ஆரம்பித்தது.
அதோடு சேர்த்து அன்று சரண் புறம் நின்று எழில் பேசியவை அனைத்தும் அவர் நினைவில் எழவும் முதல்முறை எழிலுக்கு பதிலளிக்க வார்த்தை வற்றி போயிருந்தது நாதனிடம்..!! கைகளை பிசைந்து கொண்டு அவனை பார்க்க..,
நாதனின் உணர்வுகளை அவதானித்திருந்த அகனெழிலனுக்கு இப்போது அவர் மனம் செல்லும் பாதை திருப்தியளிக்க அவரிடம் சோதனையின் போது பெறப்படும் முதல் கையெழுத்தை பெற்றுகொண்டான். காலை உணவுடன் வந்த வளர் எழிலிடம் “தம்பி நீங்களும் வாங்க சாப்பிட” என்றழைக்க..,
“நோ தேங்க்ஸ்..அவரை சாப்பிட சொல்லுங்க” என்றவாறு தன்முன் சமர்பிக்கபட்டிருந்த ஆவணங்களை எடுத்துகொண்டு அதை சரி பார்த்தவண்ணம் நாதனின் அறையினுள் நுழைந்தான்.
செல்லும் எழிலையே ஆச்சர்யத்துடன் நாதன் பார்த்துகொண்டிருக்க.., “என்னங்க சாப்பிடுங்க” என்று வளர்மதி அவருக்கு பரிமாற தட்டில் என்ன விழுகிறது என்றே புரியாமல் உண்டு முடித்து மாத்திரைகளையும் விழுங்கி இருந்தார்.
மறுபுறம் அதிகாலையே லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித்துறையின் உயர்மட்ட ஆட்கள் பல வாகனங்களில் படையெடுத்து பிரகாசத்தின் வீட்டின் முன் குவிந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வீட்டை சுற்றி காவலுக்கு நின்று சட்ட ஒழுங்கு சீர்கேட்டு நடவடிக்கைகளை களையும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
கட்சியின் முக்கிய புள்ளி என்பதாலும் ஏற்கனவே இவர் மீதுஆட்கடத்தல், மிரட்டல், அடிதடி, கொலை என்று பலதரப்பட்ட வழக்குள்இருந்தாலும் இதுநாள் வரை அனைத்திலும் குற்றம் நிருபிக்கபடாமல்சாதூர்யமாகதப்பித்து கொண்டிருப்பவர் என்பதாலும் ஊடகத்தினருக்கு அவர்மீது ஒரு கண் உண்டு.
இப்போது தொக்காக வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியிருப்பவர் வீட்டில் வருமான வரி சோதனை என்றால் சும்மாவா விடுவார்கள்..?? அனைத்து ஊடவியலாளர்களும் பிரகாசத்தின் வீட்டின்முன்குவிய அவர்களை கட்டுபடுத்துவதே பெரும்பாடு ஆகிப்போனது காவல் துறையினருக்கு.
அவர் வீட்டின் இருமருங்கிலும் பேரிக்கார்டுகள் எனப்படும் தற்காலிக தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் வரவை தடுத்திருந்தனர். அதிலும் அதிகாரிகள் அவர் வீட்டில் நுழைந்த சில மணித்துளிகளில் விடயம் காட்டுத்தீயாக பரவி கட்சியின் தொண்டர்கள் அங்கு குவிந்து கோஷம் எழுப்ப தொடங்கியிருந்தனர், அவர்களை சில மீட்டர் தொலைவிலேயே காவல் துறையினர் கட்டுபடுத்தி கைது செய்திருந்தனர்.
வழக்கம்போல அதிகாலையே எழுந்து பூஜை அறையில் அமர்ந்திருந்த பிரகாசத்தின் வீட்டினுள் நுழைந்த அதிகாரிகளை கண்டு பதைபதைத்து போன தீபிகா உடனே சென்று பிரகாசத்தை அழைக்கவும் வெளியில் வந்து பார்த்தவரின் முகத்தில் ஈயாடவில்லை.
எப்போதுமே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பதவி கிடைக்காத சொந்த கட்சியினரே இது போன்ற புகார்களில் சிக்க வைக்க முயல்வது உண்டு அதனால் பிரகாசத்திற்கு இத்துறையிலும் ஆட்கள் உண்டு… ரெய்ட் வரும்முன் அவருக்கு தகவல் அளித்துவிடுவார்கள்.
ஆனால் இம்முறை சர்ச் வருவது குறித்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கபட்டிருந்ததன் விளைவு அவரால் தகவல் பெற முடியவில்லை. அப்படியே பெற்றிருந்தாலும் எதையும் மறைக்க முனைந்திருக்க மாட்டார். ஆம் இப்போது பொது வாழ்வில் இருந்து தன்னை அடியோடு விளக்கி கொண்டிருப்பவர் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகள் அவரை முற்றிலுமாக புரட்டி போட்டிருக்க.., எதற்கு இந்த வாழ்வு என்று விரக்தியின் விளிம்பு நிலையில் நின்றிருப்பவரை இச்சோதனை பெரிதாக ஸ்தம்பித்துவிட செய்யவில்லை.
எதற்காக யாருக்காக ஓடி ஓடி அனைத்தையும் சேர்த்தாரோ இன்று அது அர்த்தமற்று போகஎதன் மீதும் பற்று அற்றவராகி போனார். அதிலும் வீட்டினுள் நுழைந்த அதிகாரிகள் அவர் ஆவணங்களையும் பொருட்களையும் பதுக்கி வைத்திருந்த இடங்களுக்கு சரியாக சென்று அனைத்து பொருட்களையும் கைப்பற்ற எதையும் உணரும் திறன் இல்லாதவராக அமர்ந்திருந்தார்.
இனி இழப்பதற்கு என்ன..!! பெரிதாக உள்ளது என்ற விட்டேர்தியான மனநிலையில் இருந்தவர் முன் நீட்டிய காகிதத்தில் கேட்ட இடத்தில் எல்லாம் கையெப்பம் போட்டு கொடுத்தார்.