அலர் ஸ்னேஹா மயக்கமருந்து கலந்த கேக்கை சாப்பிடட்டும் என்றதும் “மேடம் என்ன பேசுறீங்க..??” என்றனர் ஒருசேர..,
“சரியாதான் பேசுறேன் சார், இப்போ இருக்க பசங்க பெரும்பாலும் பெரியவங்க சொல்றதை என்னனு கேட்ககூட தயாரா இல்லை காது கொடுத்து கேட்டாதானே நாம சொல்றது அவங்களோட நல்லதுக்கா கெட்டதுக்கான்னு புரியும்… நாம எது சொன்னாலும் உங்களுக்கு என்ன தெரியும்? வி ஆர் நாட் கிட்ஸ் அண்ட் க்நொவ் ஹவ் டு டேக் கேர் ஆப் அவர்செல்ப் அப்படின்னு ஈசியா சொல்லிட்டு போயிடுறாங்க இவங்களுக்கெல்லாம் சொல்றதைவிட அவங்க செய்யற தவறு அவங்களை எங்க கொண்டு நிறுத்த வாய்ப்பு இருக்குன்னு படமா காட்டினாதான் புரியும், நான் எத்தனை செஷன் ஸ்னேஹாவை உட்கார வச்சு கவுன்சில் பண்ணினாலும் அது இந்த ஒரு வீடியோ அளவுக்கு பயன்கொடுக்குறது சந்தேகம் தான்”
“மேம் அதுக்காக..?? அந்த பசங்க அவங்களோட நிதானத்துல இல்லை ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க.., ஐ டோன்ட் வான்ட் டு டேக் ரிஸ்க்..”
“சார் ஆனா அவங்களுக்கு ரிஸ்க் எடுக்குறது ரொம்ப பிடிச்ச விஷயம், கேட்டா அட்வஞ்சரஸ்னு சொல்லுவாங்கபட்டு தெரிஞ்சிக்கிறதை தான் விரும்புறாங்க... நீங்க ஏன் இவ்ளோ பதட்டமாகறீங்க ஜஸ்ட் ரிலாக்ஸ்”
“மேம் உங்களோட ரிலேடிவ் பெண்ணும்கூட இருக்கு அப்பவும் எப்படி உங்களால நிதானமா இருக்க முடியுது”
“சார் வேதா இப்போ இருக்க ஜெனரேஷன்ல இருந்து கொஞ்சம் வித்யாசமானவ! அதாவது அசட்டுதைரியமோ, பெற்றவர்களிடம்உங்களுக்கு என்ன தெரியும் என்ற அலட்சியமோ, அடுத்தவரை எளிதா நம்ப கூடியவளோ கிடையாது, எல்லாத்துக்கும் மேல எங்க எப்படி நடந்துக்கணும்னு சமயோஜிதமா செயல்படறவளுக்கு இந்த மாதிரி சூழல்ல அவளை எப்படி காப்பாத்திக்கணும்னு தெரியும்” என்று பெருமிதத்துடன் கூற அதுபோல தான் அங்கே நடந்தது.
ஆம் சதீஷ் ஊட்டிய கேக்கை சாப்பிட்ட ஸ்னேஹா அவனுக்கும் ஊட்டிவிட வேதாவோ அதை வாயருகே கொண்டு சென்றவள் லாவகமாக ஷாலில் மறைத்துவிட்டு உண்டதாக பேர் பண்ணி இருந்தாள். அடுத்த சில நிமிடங்களில் வேதா மயங்கி சரியும் போதே இவளும் மயங்கியது போல சரிந்திருந்தாள்.
அதை கண்ட அலர் “திஸ் இஸ் தி ரைட் டைம்!இப்போ போங்க சார்” என்றாள்.
ஸ்னேஹாவும் வேதாவும் மயங்கியதுமே முதலில் மூவரும் ஸ்னேஹாவை தூக்கிகொண்டு பார்டி ஹாலை ஒட்டி இருந்த அறைக்கு செல்ல அதற்குள் மயங்கியது போல இருந்த வேதா எழுந்து வந்து அறையின் கதவை திறந்து வெளியில் வந்தவள் அங்கே இருந்த மித்ரனை கண்டு ஒரு நொடி தயங்கி நிற்க,
“வெல்டன்” என்று வேதாவை தட்டிகொடுத்து பாராட்டியவர் தன் நண்பர்களுடன் அறையினுள் நுழைந்து ஸ்னேஹாவை மீட்டு கொண்டு வந்து அவள் பெற்றோரிடம் சேர்த்தார்கள். அதன்பின் ஐவரையும் அதே அறையினுள் கட்டி போட்டு அவர்கள் மறைவிடங்களில் வைத்திருந்த கேமராக்களை கைப்பற்றியவர்கள் தாங்கள் பொருத்திய தற்காலிக கேமராக்களையும் அகற்றி இருந்தனர்.
ஸ்னேஹாவின் மயங்கிய தோற்றத்தை கண்டு பதறிக்கொண்டு வந்த அவள் பெற்றோர் கண்ணீர் கசிந்தோடும் விழிகளுடன் செய்வதறியாது அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முற்பட அதற்குள் அறையினுள் நுழைந்த மருத்துவர் ஸ்னேஹாவை பரிசோதிக்க தொடங்கினார்.
சிகிச்சை அளித்து முடித்தவர் இன்னும் இருபது நிமிடங்களில் கண்விழித்து விடுவாள் என்றும் அதன் பின் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை அவள் பெற்றோரிடம் அளித்துவிட்டு கிளம்பினார்.
ஸ்னேஹாவிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்த அலர் நம்பகமான நபர்களிடமே உதவி கேட்டிருந்தாள்.. அதனால் அதிகாரிகளில் இருந்து மருத்துவர் வரை ஸ்னேஹா குறித்த தகவல் அனைவரிடமும் பரமரகசியமாக வைக்கபடும்.
மருத்துவர் கிளம்பவுமே சோர்ந்து அமர்ந்திருந்த வேதாவிடம், “ஏதாவது சாப்பிடுறியா வேதா..??” என்றிட,
“ஆமா மாமி டிபன்கூட சாப்பிடலை ஸ்னேஹா கூப்பிடவும் உடனே வந்துட்டேன்”
அவளுக்காக கையோடு கொண்டு வந்திருந்த பூரி கிழங்கை அலர் கொடுக்க “வாவ் மாமி என்னோட பேவரெட்” என்று வாங்கி உண்ண தொடங்கினாள்.
அங்கே வந்த மித்ரன் “மேடம் அந்த பசங்களை கண்ட்ரோல்ல எடுத்தாச்சு இனி நோ வொரீஸ்” என்றார்.
“ரொம்ப ரொம்ப நன்றி சார் எனக்காக அன்னபிஷியலா இதுக்கு நீங்க ஒத்துகிட்டதுக்கு”
“மேம் எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, இதை அபிஷியலா கொண்டு போனா இன்னும் ஒரு வாரத்துக்கு மீடியாக்கு இதுதான் தீனின்னு எனக்கு தெரியாதா..?? சொல்ல போனா கேமரால இருந்து எல்லாமே உங்களோட பிளான் உங்களோட நல்ல நோக்கத்துல என்னாலான சின்ன உதவி இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்” என்ற மித்ரனிடம் மெல்லிய புன்னகை.
“ஓகே சார் நீங்களும் யாரும் சாப்பிட்டு இருக்கமாட்டீங்க நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு வாங்க நான் இவங்ககிட்ட பேசிட்டு வரேன் அப்புறம் அந்த பசங்களை என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணலாம்” என்றவள் எழிலுக்கு அழைத்து பேச தொடங்கினாள்.
ஸ்னேஹா கண்விழிக்கவுமே அதுநேரம் வரை தவிப்புடன் இருந்த பெற்றோரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, “ரொம்ப நன்றி மேடம் நீங்க இல்லைன்னா என் பெண்ணோட நிலை என்ன ஆகி இருக்கும், நல்ல நேரத்துல அவளை காப்பாத்தி எங்களுக்கு கொடுத்துட்டீங்க மிக்க நன்றி” என்று அங்கிருந்து நகர முற்பட,
“சார் எங்க போறீங்க உங்ககிட்ட தான் பேசணும் உட்காருங்க.. சொல்லபோனா வேதா ஸ்னேஹாவுக்கு கவுன்சில் பண்ண சொல்லிதான் என்கிட்டே வந்தா ஆனா உங்க குடும்ப விவரம் தெரிஞ்சிகிட்ட அப்புறம் தான் புரிஞ்சது நான் கவுன்சில் பண்ண வேண்டியது உங்க பொண்ணுக்கு இல்லை உங்களுக்கு தான்..!!
“என்ன மேடம் சொல்றீங்க..??” என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க,
“ஆமா உங்களுக்கு தான் கவுன்சில் தேவை உட்காருங்க” என்று அவர்களை தன் எதிரே அமர்த்தியவள், வேதாவை அழைத்து ஸ்னேஹாவிற்கு உணவை அளித்து பின் காணொளியை போட்டு காட்டுமாறு கூற அவளும் ஸ்னேஹாவுடன் நகர்ந்தாள்.
“உங்களுக்கு ஒரே பொண்ணு தானே அவளைவிட அப்படி என்ன சார் உங்களுக்கு வேலை முக்கியமா போயிட்டது…. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில ஓடுறீங்களே அவ என்ன பண்றா..?? எது பண்றான்னு ஒரு நாளாவது கண்காணிச்சி இருப்பீங்களா..??”
“கண்காணிக்கணுமா..??”
“நிச்சயமா அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..?? பருவத்தே பயிர் செய்! என்று பெரியவங்க சும்மா சொல்லலை, ஒரு பயிர் செழித்து வளர அதுக்கு தேவையான உரம் போட்டு நீர் பாய்ச்சினா மட்டும் போதாது உரிய நேரத்துல கண்காணிச்சு பயிர்களுக்கிடையில் அங்காங்கே முளைக்க கூடிய களைகளை பிடுங்கி ஏறிய வேண்டியதும் நம்ம பொறுப்பு தான் அப்போதான் அந்த பயிரை நாம நல்ல முறையில் அறுவடை செய்யமுடியும்.
அது போல தான் பிள்ளைகளும்! நீங்க பாசம், அன்பு காட்டினா மட்டும் போதாது அவர்கள் மீதான கண்காணிப்பும் உரிய நேரத்துல கண்டிப்பும் இல்லாம போனா அவங்க வாழ்க்கை பாழாகிடும்.
“இல்லை மேடம் சின்ன வயசுல இருந்தே அவளை நாங்க அடிச்சது இல்லை ஒரே பொண்ணுங்கிறதால கண்டிச்சும் பழக்கம் இல்லை அவ சொல்றது தான் எங்க வீட்ல சட்டம்”
“இது தான் தப்பு..!! சொல்ல போனா இங்க நீங்க பண்ணின தப்பால பாதிக்கபட்டது உங்க பொண்ணு” என்றதுமே சினேகாவின் தந்தை புரியாமல் அவளை பார்க்க,
“ஆமா சார் இப்போ எல்லாம் பெற்றோரின் கண்டிப்பு வெகுவா குறைஞ்சு போச்சு அதுவே பல குழந்தைகள் அறம் பிறழ்ந்து போகறதுக்கான காரணமாகி போகுது… ஏன்னா இன்னுமே பல குழந்தைங்க..” என்றவள் இடைநிறுத்தி,
“நான் இங்க குழந்தைங்கன்னு சொல்றது உங்க பொண்ணு வயசு இருக்க வளர்இளம் பிள்ளைகளை தான்! இங்க அந்த வயதில் இருக்கும் குழந்தைக்கு ஒரு விஷயம் புரியறதில்லை எப்பவும் தன்னோட சந்தேகத்தை குழப்பத்தை தீர்க்க தன்னோட வயதை ஒத்த நண்பனை தேடுபவர்களுக்கு அவனுக்கு மட்டும் அதை குறித்த தெளிவு எப்படி இருக்கும் அவன் நம்மை எப்படி சரியான முறையில் வழி நடத்துவான்னு சிந்திப்பதில்லை…!! “
அதற்கு காரணம் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி..!! டீன்ஏஜில் இருக்கும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் நீங்க செலுத்தாத அக்கறையும் ஒரு காரணம்
“இல்லை மேடம் நான் அவளுக்கு பிடிச்சது எல்லாமே சமைச்சி கொடுப்பேன், அவளை எந்த கேள்வியும் கேட்கமாட்டேன் உனக்கு என்ன பிடிக்குதோ செய்ன்னு சொல்லிடுவேன்”
அவரது அறியாமையை கண்டு ஒருநிமிடம் மௌனித்தவள் “அதில்லைங்க எப்பவும் குழந்தைங்களோட முதல் நண்பன் அம்மாவாகவோ அப்பாவாகவோ அதேபோல அவங்களோட முதல் நம்பிக்கை குடும்பமாகவும் இருக்கணும். நாம எது செய்தாலும் அதை அங்கீகரிக்க, நம்மை ஊக்குவிக்க, சோர்ந்து போகும் போது தட்டி கொடுக்க, தப்பு பண்ணும் போது திருத்த பெற்றவங்களும் நம்மை சார்ந்தவங்களும் இருக்காங்க என்ற நம்பிக்கை இருக்க எந்த குழந்தையும் தன்னோட சந்தோஷத்தை வேற இடத்துல தேடாது.. அப்படி தேடுறதோட காரணம் தான் இந்த மாதிரி அறியாத வயசுல காதலுக்கும் இனகவர்ச்சிக்கும் வேறுபாடு தெரியாம சிக்கி தவிக்கிறாங்க”
“மேடம் நாங்க அவ ஆசைப்பட்டது, பிடிச்சது எல்லாம் பார்த்து பார்த்து செய்யறோம், அவ கேட்கிறதை உடனே வாங்கி கொடுக்குறோம் ஆனாலும் அவ எப்படி இந்த மாதிரின்னு புரியலை” என்று அவள் அன்னை.
“ஒரு விஷயம் முதல்ல நீங்க புரிஞ்சிக்கோங்க, பசங்க கேட்கிறதை வாங்கி கொடுக்கிறதுக்கு பேர் தான் பாசம்னு யார் சொன்ன..? குழந்தை நாலு பொருள் கேட்டா எட்டா வாங்கி கொடுக்குறதை முதல்ல நிறுத்துங்க… நாலு கேட்டா ஒன்னு வாங்கி கொடுங்க மத்தது வாங்க பணம் இல்லை, இன்னும் பத்து நாள் காத்திருன்னு காக்க வைச்சு வாங்கி கொடுங்க அப்போ தான் காத்திருப்பின் சுவையும் அந்த பொருளோட அருமையும் புரியும் பணத்தோட மதிப்பும் வாங்கின பொருளை தக்கவச்சிக்கனும் என்ற உணர்வும் இருக்கும்”
“அதேபோல குழந்தைங்க கேட்டாங்கன்னு வங்கி கொடுக்குறீங்களே தவிர அது அவங்களுக்கு அவசியமா, தேவையான்னு ஒரு நிமிஷம் யோசிக்கிறது இல்லை… இங்க ஆசைக்கும் தேவைக்கும் நிறைய வித்யாசம் இருக்கு..!! அதை முதல்ல குழந்தைக்கு கத்து கொடுங்க…, எல்லாத்துக்கும் மேல டெக்னாலஜி அதை சரியான புரிதல் இல்லாம அணுகும்போது அதனோட சாதகத்தைவிட பாதகம் அதிகமாகுது…”
குழந்தை கேட்குதுன்னு மொபைல் வாங்கி கொடுக்குற எந்த பெற்றோரும் அதை சரியானவயசுல வாங்கி கொடுக்கறோமான்னு யோசிக்கிறதில்லை, அதேபோல கொடுக்கும் முன்ன அதை பத்தின தெளிவை அவங்களுக்கு கொடுக்குறது இல்லை…, இப்படி அந்த குழந்தையை சரியான முறையில் வழிநடத்த தவறிட்டு நாளைக்கு அந்த குழந்தை ஒரு தப்பு பண்ணும்போது அதை மட்டுமே குறை சொல்றது எந்த விதத்துல சரி நீங்களே சொல்லுங்க” என்று கேட்க பதிலின்றி போனவர்கள் வெறுமையாய் அலரை பார்த்திருந்தனர்.
“சொல்லபோனா கூட்டு குடும்பங்கள் உடைஞ்சபிறகு பெரும்பாலான குழந்தைகள் அப்பா அம்மாவை மட்டுமே நம்பி இருக்காங்க.. ஆனா தங்களை நம்பி இருக்க குழந்தைக்காக பணத்தையும் பொருளையும் சேர்க்க வேண்டி ஓடுற எத்தனை பெத்தவங்க விலை மதிப்பே இல்லாத நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்குறீங்க சொல்லுங்க??” என்று கேட்க அவர்களிடம் கனத்த மௌனம் மட்டுமே..!!!
“உங்களை தான் கேட்கிறேன் சொல்லுங்க எத்தனை நாள் உங்க குழந்தைக்காக நேரம் ஒதுக்கி இருக்கீங்க??”
“இல்லை அவ சொல்ற விஷயம் எனக்கு புரியலை அவளுக்கு நான் சொல்றது பிடிக்கலை” என்றார் ஸ்னேஹாவின் தாய் இறங்கிய குரலில்.
அப்போ முதல்ல உங்க பொண்ணு என்ன சொல்ல வரான்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க அவ வயசை தாண்டி தானே நீங்களும் வந்திருக்கீங்க..?? என்று கேட்க அவர்களிடம் ஆம் என்ற தலையசைப்பு.
இங்க தான் பல பெத்தவங்க தப்பு பண்றீங்க, என்னைக்குமே உங்களோட சோஷியல் ஸ்டேடஸ், வயசு, பதவி இது எதுவும் வீட்டுக்குள்ள வரகூடாது.., அங்க நாம நம்ம குழந்தைக்கு அப்பா அம்மா மட்டுமே..!!
“அவங்க சிரிச்சா கூட சேர்ந்து சிரிச்சு, விளையாடும்போது கூட சேர்ந்து விளையாடி, ஒரு நாள் குழந்தையோட குழந்தையா மாறி இருந்து பாருங்க அவங்களோட எதிர்பார்ப்பு, ஏக்கம் என்னனு புரிய வரும்.. நீங்க அவங்ககூட நேரம் செலவிடும் போது அவங்க முகத்துல வரக்கூடிய சந்தோஷமும், குதூகலமும், சிரிப்பும் ஈடு இணை இல்லாததா இருக்கும் நிச்சயமா அது அவங்களுக்காக நீங்க வாங்கி குவிக்கிற பொருட்கள் கொடுத்துடாது”
“இதோ இவளுக்கு நாங்க அதை தான் சொல்லி கொடுத்து இருக்கோம், சரியோ தப்போ எங்களோட அனுமதி இல்லாம எங்களை ஒரு வார்த்தை கேட்காம எங்களை மீறி எதுவும் செய்யமாட்டா… அவளுக்கு அந்த நம்பிக்கையை நாங்க கொடுத்திருக்கோம்.. அவளுக்கு எந்த ஒரு கேள்வியோ குழப்பமோ இருந்தாலும் முதல்ல எங்களை தேடி தான் வருவா..”
“அவ எதிர்பார்க்கிற பதிலை நாங்க கொடுக்காத பட்சத்தில் அவளோட முடிவு சரியா தப்பான்னு ஒரு முறைக்கு பலமுறை யோசிச்சு முடிவெடுப்பா. அவளும் மொபைல் யூஸ் பண்ணுவா ஆனா அது தேவைக்காக மட்டுமே தவிர அனாவசிய மனசிதரலுக்கு அங்க இடமில்லை.., இப்போ அவ எடுத்துட்டு வந்திருக்கிறது அவ அம்மாவோட மொபைல் அவங்க பர்மிஷனோட” என்று அழுத்தி கூற ஸ்னேஹாவின் அன்னைக்கு புரிந்தது.
“அவ கஷ்டப்படக்கூடாதுன்னு பார்த்து பார்த்து வளர்த்தோம் ஆனா இன்னைக்கு அவளோட கஷ்டத்துக்கு நாங்களே காரணம் ஆகிட்டோம்”
“இல்லைம்மா என்னைக்கும் என் குழந்தை கஷ்டபடவே கூடாதுன்னு நினைக்காதிங்க… எந்த கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய தைரியத்தையும் எப்படி அதில் இருந்து மீளனும்னு கத்து கொடுங்க… ஏன்னா இப்போ உங்களோட அதீத அரவணைப்பில் வளரகூடியவங்க நாளைக்கு இந்த உலகத்தை தனியா எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும், அப்போ ஒரு கஷ்டம் வரும்போது உடஞ்சு போயிடாம திடத்தோட அதை எதிர்கொண்டு வெற்றி அடையுறதுல தான் உங்க வளர்ப்போட வெற்றி அடங்கி இருக்கு”
“புரியுது மேடம்! என் பெண் எனக்கு திரும்ப கிடைச்சிருக்கா அவளை இனி ஒருமுறை கைநழுவ விட மாட்டேன் பத்திரமா பார்த்துப்பேன்” என்றார் உறுதியாக.
அவருக்கு சிறு முறுவலை பரிசளித்த அலர்விழி ஸ்னேஹாவிடம் செல்ல அதற்குள் வேதா அவர்கள் பார்ட்டி ஹாலில் நுழைவதற்கு முன்பான காணொளியில் தொடங்கி அவர்கள் இங்கு வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் காண்பித்திருந்தாள். அதை கண்ட அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கொண்டிருக்க வேதா அவளை சமாதனபடுத்தி கொண்டிருந்தாள்.
அவள் முதுகை வருடி கொடுத்த அலர், “இங்க பாரு ஸ்னேஹா உனக்கு ஒண்ணுமில்லை நாங்க பக்கத்துல இருந்து நீ மயங்கினதுமே உன்னை கூட்டிட்டு வந்துட்டோம், எதை நெனச்சும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை”
‘இல்..இல்லை..’ என்றவாறே வேதாவை பார்த்தவள் “என்னால ஹாசினிக்கும் ஏதாவது ஆகி இருந்தா, நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்” எனும்போதே குற்றஉணர்வில் கதறியிருந்தாள்.
“இதோ பாரு சதீஷ் சேப்ட்டர் இன்னையோட முடிஞ்சது இனி அவனால உனக்கு எந்த தொந்தரவும் வராம இருக்க நான் பொறுப்பு..!! எதை பத்தியும் யோசிக்காம படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும் புரிஞ்சதா..?? அம்மா அப்பா நமக்கு சுதந்திரம் கொடுக்கிறது தப்பான வழியில போகவோ, கட்டுபாடு இல்லாம சுத்தவோ, நினைச்சதை எல்லாம் செய்யறதுக்காவோ கிடையாது. பெற்றவர்கள் நம்மமேல வச்சி இருக்க கூடிய அதீத நம்பிக்கையை என்னைக்கும் உடைச்சிடகூடாது”
“என்னைக்கு உனக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தால உன்னுடைய சந்தோஷத்தையும், நிம்மதியையும் இழக்குறியோ அன்னைக்கு அந்த சுதந்திரமே அர்த்தம் இல்லாததா ஆகிடும் அதை முதலில் புரிஞ்சிக்க..!!” எனவுமே ஸ்னேஹாவும் புரிந்ததாக தலையசைக்க அதூரமாக அணைத்துகொண்ட அலர்,
“உனக்கு கொடுக்கபட்டிருக்கும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து பொறுப்புணர்வோட நடக்கணும் அதுதான் அந்த நம்பிக்கைக்கும் சுதந்திரத்துக்கும் நாம கொடுக்கிற மரியாதை… எதுவா இருந்தாலும் அப்பா அம்மாகிட்ட மனசுவிட்டு பேசு பேசினா தீராத பிரச்சனை எதுவும் இல்லைடா..!! என்ன முதல்ல திட்டுவாங்க இல்லை அடிப்பாங்க என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அப்பா அம்மா உன்னை கண்டிக்க அவங்களுக்கு உரிமை இல்லையா ஸ்னேஹா..???” என்று கேட்க,
ஆம் என்று தலையசைத்தாள்.
“ஒன்னு புரிஞ்சிக்கோ ஸ்னேஹா கண்டிப்பும் அன்பின் வெளிபாடு தான்..!! ஆனா பெத்தவங்க கண்டிப்புக்கு பயந்து அப்பா அம்மாகிட்ட பொய் சொல்லி ஆள் அட்ரெஸ்சே தெரியாதவனை கண்மூடிதனமா நம்பி வந்ததன் மூலமா உன் வாழ்க்கையை மிக பெரிய கேள்விகுறியா மாற்றி இருப்ப ஆனா உனக்கு கிடைச்ச பிரெண்ட் உன்னை அப்படி எல்லாம் விட்டுடலை உனக்காக இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து உன்னை திருத்தனும்னு ரொம்ப பாடுபட்டிருக்கா.. ஒரு பெரிய ஸ்டெப் எடுக்கும் முன்ன யோசிச்சு செயல்படு.. இதுக்கு முன்ன எப்படியோ அட்லீஸ்ட் இனிமேல் அவளுக்காகவாவது உன்னை மாத்திக்க ட்ரை பண்ணு… நீ மாறுவன்னு நம்புறேன்” என்று தட்டி கொடுத்தவள்,
“இது தப்பு பண்ற வயசு தான்டா, ஆனா அந்த தப்புல இருந்து பாடம் கத்துகிட்டு உன்னை திருத்திட்டு இன்னொருமுறை அதே தப்பை ரீபீட் பண்ணாம இருந்தாலே போதும்” என்றவள் பெற்றோருடன் அவளை அனுப்பி விட்டு அவளை அழைத்த மாணவர்களை மறுவாழ்வு மையத்தில் (ரீஹேப் சென்டர்) சேர்க்க சொன்னவள் வேதாவுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.