மேலும் சிலநாட்கள் கழிந்த நிலையில் அன்றைய கேஸ் ஹியரிங் முடிவடையவும் கோர்ட் ரூமில் இருந்து வெளியில் வந்தவள் அங்கு தனக்காக காத்திருந்தவர்களிடம் நான்கு நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்காக குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் ஒதுக்கி அளித்துவிட்டு தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி விரைந்தாள்.
“மேடம்.. அலர்விழி மேடம் ஒரு நிமிஷம்”என்ற குரல் அவள் நடையை தடைசெய்ய கைபேசியின் அழைப்பை துண்டித்தவாறே அலர் திரும்பவும் அங்கு அவள் முன் வந்து நின்றார் காவல் துறையின் துணை ஆய்வாளர் திரு. மித்ரன்
“கிளம்பிட்டிங்க போல, ஸாரி டு டிஸ்டர்ப் யூ”
“ஒஹ் ஹாய்… இல்லை அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைசொல்லுங்க சார் என்ன விஷயம்..??” என்றிட..,
“நான் ஒரு டூ வீக்ஸ் முன்ன பேசினேன் திரும்ப பேசிட்டு உங்களுக்கு கூப்புடுறேன் சார்..தேங்க்ஸ் அகைன் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்” எனும்போதே அவள் கைபேசி ஒலிக்க அவரிடம் இருந்து விடைபெற்று அழைப்பை ஏற்க மறுபுறம் எழிலின் குரல்…
“சொல்லு மாமா..??”
“அமுலு ஒரு எமர்ஜன்சிடி இன்னிக்கு நான் வர எப்படியும் நைட் ஆகிடும் என்னை எதிர்பார்க்காதேஅவிரனை நீ கூட்டிட்டு போயிடு”
“மாமா எனக்கும் லேட் ஆகுமே” என்றவள் உடனே ‘சரி விடுங்க நான் கதிரை கூப்பிட்டுக்க சொல்றேன்‘ என்றவள் உடனே கதிருக்கு அழைத்து தகவலை தெரிவித்தவள் வேறொரு வழக்கு தொடர்பான தகவல்கள் பெற காவல்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
வேலைகளை முடித்துக்கொண்டு மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள் வண்டியை நிறுத்தி விட்டு நாதன் வீட்டினுள் நுழைந்தாள்.
கூடத்தில் அமர்ந்திருந்த தாயம்மாள் அவளை வரவேற்க அவரிடம் சில நொடிகள் பேசி கொண்டிருந்தவள் “அம்மா எங்க அப்பத்தா..??” என்று கேட்க அவர் சமையலறையை கைகாட்டினார்.
“அம்மா.. ம்மா..” என்று அலர் சமையலறையினுள் நுழைய…, பலத்த சிந்தனையில் ஆழ்ந்தவராக இரவு உணவிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த வளர்மதி அலரின் வரவை உணராதவராக தன் போக்கில் வேலையில் அமிழ்ந்திருந்தார்.
இன்று மிகவும் சோர்ந்திருந்தவள் தன்முன் நீட்டப்பட்ட பில்டர் காபியை கண்டதும் முகம் தன்னிச்சையாக மலர, “தேங்க்ஸ் ம்மா” என்று வாங்கிசொட்டு சொட்டாக ரசித்து பருகியவள்,
வளர்மதியோ மகளின் முகத்தையே ஆராய்ந்தவாறு இருந்தவர், “இல்லை.., இன்னிக்கு தாமரை வந்திருந்தா” என்றவரின் குரல் மாற்றம் கொண்டிருக்க அதை உணராத அலர் “இவ்ளோ சீக்கிரம் தூங்கிட்டானா..??” என்று டம்ப்ளரை கழுவிக்கொண்டே கேட்க…,
“தாமரை வந்திருந்தான்னு சொன்னேன் அமுலு”
“அப்படியா என்ன திடீர்னு வந்திருக்கா..? என்ன விஷயம்”
வளர்மதி மகளை கூர்மையாக பார்த்தவாறே, “அவளுக்கு வளைகாப்பு பண்ணிக்கணும்னு ஆசையா இருக்காம் ஆனா மூணாவது குழந்தைக்கு பண்ணலாமா கூடாதான்னு தெரியலை, என்கிட்டே கேட்க வந்திருந்தா அவ கிளம்பவும் அவிரனும் அவளோடவே கிளம்பிட்டான்” என்று முடிக்கும் முன்,
“ஒஹ் தாமரை சுபி குட்டியை கூட்டிட்டு வந்திருந்தாளா..?? அதான் அப்பு அவகூடவே கிளம்பிட்டு இருப்பான் சரிம்மா அப்புறம் தாமரைக்கு என்ன சொன்னீங்க எப்போ வளைகாப்பு..??” என்று வளர்மதியிடம் இருந்து வெங்காயத்தை பெற்று அரிந்துகொண்டே கேட்க..,
“அது தெரிஞ்சு நீ என்ன பண்ணபோற..??”
“என்னம்மா பேசுறீங்க வளைகாப்பு நடத்துறாங்களா இல்லையான்னு தானே கேட்டேன், அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ல வரீங்க எனக்கு புரியலை” என்றவள், அப்போது தான் வளரின் முகத்தில் குடிகொண்டிருந்த உணர்வுகளை படித்தவள் இப்போது நன்கு திரும்பி நின்றவள்,
மகளையே ஆழ்ந்து பார்த்தவருக்கு தன் கேள்விக்கான மகளின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்த போதும் எங்கே இன்று அது மாற்றம் பெற்றுவிடாதோ என்ற சிறுநம்பிக்கையுடன் குரலை செருமியவர், “நீ எப்போ நல்ல சேதி சொல்ல போற.., அவிரனுக்கு அஞ்சு வயசு ஆகபோகுது” என்றார்.
வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தவளின் கரம் அசைவற்று அந்தரத்தில் நிற்க.., நொடியில் அவள் விழிகள் உயிர்ப்பற்று போக இதழ்களை அழுந்த கடித்து உணர்வுகளை கட்டுபடுத்தியவண்ணம் மீண்டும் நறுக்க தொடங்கினாள்.
இங்கு அலரின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த வளர்மதி மகள் பதில் கூறாமல் போக தொடர்ந்து.., “நானும் ரெண்டு வருஷமா கேட்டுட்டு இருக்கேன் எப்போ அடுத்த குழந்தையைபத்தி யோசிக்க போறன்னு.., எப்போ கேட்டாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி தள்ளி போட்டுட்டு இருக்க. இப்படியே இன்னும் எத்தனை வருஷம் போறது அவிரனுக்கு அஞ்சு வயசாக போகுது…, குழந்தை தன்னோட விளையாட்டு துணைக்கு எவ்ளோ ஏங்கி போயிருக்கான் தெரியுமா..?? சுபியை விடமாட்டேன்னு ஒரே அடம் அப்புறம் தாமரை தான் நான் பார்த்துக்குறேன் அத்தைன்னு கூட்டிட்டு போயிருக்கா” என்று கூறவும்..,
தன் செயலை நிறுத்தியவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவாறே.., “அதான் சுபி இருக்காளே அப்புறம் என்னம்மா..??” என்றிட,
“என்னது சுபி இருக்காளா !என்னடி பேசுற..?? இதுக்கு என்ன அர்த்தம்” என்று குரல் உயர்த்தி கேட்டவரின் முகம் வேதனையில் கசங்கி போயிருந்தது.
பின்னே வேதாவின் நிகழ்ச்சி தொடங்கி சரண்யாவின் நிச்சயம் வரை அனைத்து இடங்களிலும் “என்ன அலர் மாசமா இருக்காளா..?? ஒரே பேரனா..?? அடுத்த குழந்தை எப்போ..?? இந்த லேடி டாக்டரை பார்க்க சொல்லு..?? கைராசிக்காரங்க” என்ற சொந்தங்களின் இலவச ஆலோசனைகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிய அவருக்குதானே தெரியும்..!!
அதிலும் நாதன் நேற்று பேச்சு வாக்கில் கடையில் கண்ட ஒரு பெண் குழந்தையின் சிரிப்பு, பேச்சு நடை பற்றி பேசிக்கொண்டிருந்தவர் அவர்களின் பேத்தி பிறந்தால் அலரை போலதானே இருப்பாள் என்று வளரிடம் கேட்டிருந்தார்.
பின்னே அவிரன் குணத்தில் தாயை கொண்டிருந்தாலும் உருவத்தில் தந்தையின் மறுபதிப்பல்லவா!
பெண் குழந்தைங்க இருந்தாலே வீடே நிறைஞ்சிருக்கும்ல வளர் எப்பவும் நம்மையே சுத்திட்டு இருப்பாங்க அதிலும் அவங்களோட கொலுசு சத்தம்… என்று பேச ஆரம்பித்தவரின் முகம் அவர் மகளின் குழந்தை பருவத்தை எண்ணியவாறு மகிழ்ச்சியில் மிளிர்ந்திருக்க அதைகண்ட வளர்மதியின் மனமும் அவர் எண்ணம் ஈடேறும் நாள் எந்நாளோ என்று எதிர்பார்க்க தொடங்கிவிட்டது.
அதிலும் அவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களில் வளர்மதி கர்ப்பம் தரிக்கவில்லை எனவுமே அடுத்த மாதமேவளர்மதியை மருத்தவரிடம் அழைத்து சென்ற மனிதர் இப்போது அவிரன் இருக்கவும் எதை பற்றிய சிந்தனையும் இன்றி அமைதியாக இருக்கிறார், இதே அவிரனின் தங்கைக்கான ஏக்கம் அவருக்கு தெரிய வரும் வேளையில் அவரை சமாளிப்பது மிகவும் கடினம் என்பதால் மகளிடம் பேசி தீர்வு காண அவர் முனைகையில் மகளின் விட்டேர்த்தியான பதில் அவர் கோபத்தை கிளறிவும்..,
“சொல்லு அமுலு சுபி இருக்கான்னா அதுக்கு என்ன அர்த்தம்..!!” என்று மீண்டும் அழுத்தத்துடன் கேட்க..,
“ஹ்ம்ம் எங்களுக்கு ஒரே குழந்தை போதும்னு அர்த்தம்மா”அலர்விழி திடமான குரலில் கூற,
“என்னது ஒரே குழந்தை போதுமா..?? என்ன பேசுற நீ..!! எதுக்கு இப்படி ஒரு முடிவு..?? யாரை கேட்டு எடுத்த? ஏதாவது பிரச்சனையா..?” என்று மகளை கூர்ந்து பார்த்தவர் தொடர்ந்து,
‘ஏன்டி ஒருவேளை இதுலயும் எதாவது புரட்சி பண்ண போறியா..?? இல்லை நீ இன்னொரு குழந்தை பெத்துக்காமஇந்தியாவோட ஜனத்தொகையை குறைக்க போறியா..?? இப்பவே பார்க்கிறவங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிடாங்க”என்று மகளை பற்றி நன்கு அறிந்தவராக அவர் பேசிக்கொண்டேபோக..,
“ம்மா ஒரு குழந்தை போதும்னு இருந்தா ஏதாவது பிரச்சனையாதான் இருக்கனுமா..?? அப்படி எல்லாம் ஒன்னுமில்லை ஊர்ல உலகத்துல இருக்கிறவங்க கேட்கிறதுக்காகஎல்லாம் நான் பெத்துக்க முடியாதும்மா..” என்று சீறவும்,
“அலர் புரியாம பேசாத உன்னோட இந்த வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேரும் பிறந்துட்டீங்க…, தம்பியோ தங்கையோ ஒரு துணை இல்லாம குழந்தை தனித்து வளரும் சூழல் அந்த குழந்தையோட மனசை எவ்ளோ பாதிக்கும் தெரியுமா..?? அதுலயும் இப்போ கூட்டு குடும்பமும் இல்லாம போயிடுச்சி எல்லாருக்கும் தனி தனி கூடாகிடுச்சிஅதுல குழந்தையை அடைச்சி வைக்கறீங்க” என்றிட..,
தாயின் கேள்வியில் அதுநேரம் வரை கொண்டிருந்த சீற்றம் மறைந்து வலி நிறைந்த விழிகளுடன் அன்னையை ஏறிட்டு பார்த்த அவளுக்கா தெரியாது..?? தனித்து வளரும் சூழல் குழந்தையின் வளர்ச்சியில் எத்தகைய பங்கு வகிக்கும் என்று ! அதிலும் குடும்பநல வழக்குகளை எடுத்து நடத்துபவள் எத்தனை பேருக்கு கவுன்சிலிங் அளித்திருப்பாள் குறிப்பாக குழந்தைகளை முன்னிறுத்தி எத்தனை தம்பதிகளின் பிரிவை தவிர்த்திருப்பவள் அவளுக்கா தன் பிள்ளையின் ஏக்கமும் ஆதங்கமும் புரியாது.. ஆனாலும் அவளின் நிலை…!! அதை எவ்வாறு தாயிடம் விளக்க என்று புரியாது தவித்தவள்,
“இப்போ என்ன தான்மா சொல்லவரீங்க எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க…” என்று பொறுமை இழந்த அலர் ஆற்றாமையில் குரல் உயர்த்திவிட்டாள்.
“என்ன சொல்ல சொல்ற? தாமரை வந்திருந்தப்போ தான் மல்லிகா அக்காவும் வந்திருந்தாங்க தாமரை கிட்ட எப்போ டேட் கொடுத்திருக்காங்கன்னு கேட்டுட்டு அடுத்த கேள்வி என்னைதான் கேட்குறாங்க… அலருக்கும் தாமரைக்கும் ஒருவாரம் முன்ன பின்னதானே கல்யாணமாச்சு அவளுக்கு இன்னும் அடுத்தது தங்கலையா ஏன் நீங்கடாக்டரை பார்க்கலையான்னு கேட்டதுமில்லாம நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு என்னை கேட்கிறாங்க, இதுக்கு நான் என்ன பதில் சொல்ல..?” என்று அவர் ஆற்றாமையுடன் முடிக்க..
வளர்மதி கூறியதை கேட்ட அலருக்குமே யாரோ தன்னை விமர்சித்ததை கேட்டு சினம் தலைதூக்க, “ஏன்ம்மா இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா.., எப்போபாரு ஊர் நியாயம் பேசிக்கிட்டு ஏதோ நான் நாளைக்கே பிள்ளை பெத்து கொடுத்ததும் இவங்கதான் முன்ன வந்து வளர்த்து கொடுக்குற மாதிரி பேசுறாங்க…நீங்களும் இதையெல்லாம் பெருசா எடுத்துட்டு எதுக்கு இப்படி கேட்டுட்டு இருக்கீங்க” என்று தாயின் வாடிய முகத்தை நிமிர்த்திட..,
அவரோ கண்களில் திரண்டிருந்த நீருடன், “அப்போ எனக்கு அக்கறை இருக்ககூடாதா அமுலு, அவங்களை விடு நான் எதுவும் கேட்கவும் கூடாதா..?? எப்போ கேட்டாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொல்ற, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாவே வார்த்தை மாறாம இதை சொல்லி தான் என்னை ஏமாத்திட்டு இருக்க..” என்று குரலில் வலியோடு அவர் கூற..,
‘ப்ச் என்னம்மா இது..?’ என்று தாயின் கண்களை துடைத்தவள் “உங்களை ஏமாத்தி நான் என்ன பண்ண போறேன் சொல்லுங்க?அதெல்லாம் கடவுள் கையில இருக்கும்மா அவர் எப்போ கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்போ தான் கொடுப்பாரு நம்ம கையில் எதுவும் இல்லை.. புரிஞ்சிக்கோங்க” என்று தாயிடம் கூறியவளுக்கு மட்டுமே தெரியும் அடுத்த குழந்தையின் வரவு கடவுள் மனது வைப்பதால் இல்லை தன்னவன் மனது வைத்தால் மட்டுமே சாத்தியம் என்று..!!
ஆம் அடுத்த குழந்தையின் வரவை தவிர்த்து கொண்டிருப்பவன் அகனெழிலனே ! இப்போதுகூட அவனது கரைகாணாத காதலுக்காகவும் பேரன்பிற்காகவும்ஒன்று என்ன பத்து பிள்ளைகள் பெற்று கொள்ளகூட அவள் தயார் ஆனால் அதற்கு தன்னவன் மனது வைக்க வேண்டுமே ! அவன் துணையின்றி அவள் எங்கிருந்து பிள்ளை பெறுவது?
வானமெனும் கூரையின் கீழ் எதை பற்றியும் அவனிடம் சர்வ சாதாரணமாக உரையாடுபவளுக்கு குழந்தை பற்றி பேச நினைக்கையில் மட்டும்அச்சம் சத்தமின்றி கவ்விக்கொள்ள அதுவரை அலர் கொண்டிருக்கும் தைரியம் மொத்தமும் வடிந்துபோகும்.குழந்தை குறித்து எழிலனிடம் அவள் வார்த்தை கொண்டு வடிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை… என்றும் அலரவளின் விழிமொழி அறிந்து செயலாற்றுபவனிடம் இருந்து தன் ஆசையை மறைக்க அவள்தான் பெரும்பாடுபட்டு போவாள்.
பல நேரங்கள்எழிலின் முகத்தையே ஆழ்ந்து பார்ப்பவள் பேச வந்ததை பேசாமல்சென்றுவிடுவாள்.செல்லும் வழியில் தவறாமல் கடவுளிடம் வேண்டுதலும் வைத்து விடுவாள்.
ஆம் மன்னவன் மனம் இளக வேண்டும் என்பதே அலரின் அன்றாட வேண்டுதலாக இருக்கிறது என்பதை அன்னை அறிவாரா..?? அல்லது வளரிடம் கூறினால் அவர் எந்தளவு அவர்களை புரிந்து கொள்வார் என்பது குறித்த உறுதி அலருக்கு கிடையாது..
‘ம்மா..‘ என்று இம்முறை அழுத்தமாக அன்னையை அழைத்தவள், “இங்க பாரும்மா இப்போதைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை போதும் இன்னொன்னு பிறக்கும்போது பிறக்கட்டும்” என்று வெறுமையான குரலில் கூற என்றும் இல்லாத உறுதியும் வெறுமையும் மகளின் குரலில் இருப்பதை அறிந்ததாயின் மனம் பதறிபோனது.
“அவிரனை நினைச்சு பாருடாமா உனக்கு எதாவது பிரச்சனையா இருந்தா சொல்லுடாக்டரை பார்க்கலாம் உனக்கு சுகபிரசவம் தானே ஆச்சு ..!! ஒருவேளை ஆபரேஷனாகி எதாவது சிக்கல் இருந்திருந்தா உன்ன திரும்ப கஷ்டப்பட வேண்டாம்னு நினைக்கலாம் ஆனா..” என்று மீண்டும் மகளின் முகம் பார்த்தவர்
“இவ்ளோ வருஷம் ஆகியும் குழந்தை தங்கலைன்னும் போது.. எதுக்கும் நீங்க ரெண்டு பேரும் டாக்டர் சுஷீலாவை பார்த்துட்டு வந்துடு…..” என்று அவர் முடிக்கும் முன்பே,
“ம்மாஆஆஆஅ…, போதும் நிறுத்துங்க” என்ற மகளை வளர் திகைப்புடன் பார்த்திருக்க,
அவளோ நெற்றியை அழுத்தமாக பிடித்துக்கொண்டே, “போதும்மாநிறுத்துங்க, என்று சலித்துகொண்டவள்,
“இங்க பாருங்கம்மா யாரையும் பார்க்கனும்னு எங்களுக்கு அவசியமில்லை” என்று மூச்சு காற்றை இழுத்துவிட்டு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தவள்,
“உங்களுக்கு என்ன பிரச்சனை? இப்போ அவிரனுக்கு துணை வேணும் அதானே!வேணும்னா ஒருகுழந்தையை தத்தெடுத்து கொடுத்துடுறேன் போதுமா?” என்று அவர் தலையில் இடியை இறக்க அதிர்ச்சியில் கரத்தில் இருந்த பாத்திரம் நழுவி கீழேவிழ பேச்சின்றி ஸ்தம்பித்து போனார் வளர்மதி.
அலரோ தாயின் நிலை அறிந்தாலும் இன்னும் சிலநொடிகள் அங்கிருந்தாலும் தான் உடைந்து போவது உறுதி என்பதை அறிந்தவளாக இமைமீற துடித்த நீரை உள்ளிழுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அன்னையிடம் பதில் அளிக்க முடியாமல் வெளிவர துடித்த கண்ணீரை இமை சிமிட்டி உள்ளிழுத்து கொண்டே கூடத்திற்கு வர அங்கு ‘என்னடி அலரு இம்புட்டு சீக்கிரம் கிளம்புற இரு சாப்ட்டுட்டு போவ.. ராசாக்கும் ஃபோனை போடு வரட்டும்‘ என்ற தாயம்மாளின் குரலுக்குகூட செவிசாய்க்காமல் வெளியேறி இருந்தாள்.
வாயிலை கடந்து சாலைக்கு வந்து தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கண்களை இறுக்கமாக மூடி துடித்த இதழ்களை பற்கள் கொண்டு அழுத்தி கட்டுபடுத்த முயன்றும் அன்றைய எழிலின் முகமே அகத்தில் தோன்றி அவளை வதைக்க சட்டென விழிகளை திறந்தவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை மட்டுபடுத்த.., அவள் பார்வையோ இலக்கற்று சாலையை வெறிக்க தொடங்கியது.
எதிரில் வானமகள் இருள் போர்வை போர்த்தியிருக்க சாலையில் ஆங்காங்கே ஒளிர்ந்திருந்த விளக்குகளை தவிர வேறு ஒளி இல்லாமல் போக தலை உயர்த்தி சில நொடிகள் கவிழ்ந்திருந்த இருளை வெறித்த வண்ணம் இருக்க அவள் மனமோ அன்னை கூறிய வார்த்தைகளை அசைபோட தொடங்கிட அடுத்து என்ன என்பதை எண்ணி பார்க்ககூட முடியாமல் அலரின்விழிகளில் அச்சம் அதிகரித்தது.
‘அமுலு‘ என்ற தாயின் குரல் அருகே கேட்கவும்தன்னிலை மீண்டவள் அவசரமாக வாகனத்தை கிளப்பி புயல் வேகத்தில் செலுத்த தொடங்கினாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் நேரே வெற்றியின் வீட்டின் முன் சென்று வாகனத்தை நிறுத்தியவள்வழி நெடுகிலும் மனம் நிலைகொள்ளாமல் துடித்து தவித்ததில் வண்டியில் இருந்து இறங்கிய மறுநொடி படபடத்த நெஞ்சை அழுத்தி பிடித்தவாறு கேட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.
அப்போது தான் ஆட்டம் பாட்டம் என்று வீட்டையே களேபரமாக்கி விளையாடி களைத்திருந்த குழந்தைகளை அமர வைத்து அவர்களுக்கு சிற்றுண்டியும்பருக பாலும் அளித்து கொண்டிருந்தாள் தாமரைசெல்வி.
வெளியில் வாகனசத்தம் கேட்கவும் வெற்றியின் தாய், “வெற்றி வர லேட் ஆகும்னு சொன்னானே இந்நேரத்துக்கு யாரா இருக்கும் போய் பாரு செல்வி..” என்றவாறே சுபிக்கு ஊட்ட..,
“இதோ பார்க்கிறேன் அத்தை” என்று இடுப்பை பிடித்துகொண்டு எழுந்து மெல்ல வெளியில் வந்தவள் அலர்விழி வருவதை கண்டு ‘அலர் தான் அத்தை‘ என்று வெளியில் இருந்தே குரல் கொடுத்து விட்டு ‘வாடி..‘ என்றவாறு அவளை நோக்கி சென்றாள்.
அங்கு கேட்டை திறந்து நுழைந்தவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்ட மறுநொடியே மனம் மீண்டும் குரங்காய் மாறி அன்றைய நொடிகளை அலசிட அலரின் விழிகளை இதுநேரம் வரை இமை மீறிட துடித்து துளிர்த்திருந்த நீரை நடுங்கும் இதழ்களை கொண்டு அழுந்த சேர்த்து கட்டுபடுத்த போராடியவள் ஒரு கட்டத்தில் தோற்க அலரின் விழிகளிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோட தொடங்கியது.
வாயிலை கடந்து இறங்கிய தாமரை அலர்விழியின் கண்ணீர் சுமந்த முகத்தை காணவும் அவள் நடை தடைபட்டு போகதோழியின் முகத்தை ஆராயந்தவாறே போர்டிக்கோவிலேயே நின்று விட்டாள்.
அலரின் சிவந்த முகமும் கலங்கிய விழிகளின் அலைப்புறுதலையும் கண்ட தாமரைக்கு நன்கு தெரியும், எதையும் எவரையும் நிமிர்வுடன் எதிர்கொள்ளும் தோழியின் பலகீனமும் அவளின் விலை மதிப்பில்லாத கண்ணீருக்கும் என்றும் சொந்தமானவர்கள் இரு ஆடவர்கள் மட்டுமே என்பது..!!
இங்கு அவளின் பலம்பலகீனம் இரண்டும் அவர்களே! பலநேரங்களில் இருவருக்கிடையில் மத்தளமாக இடிபடுபவளின் நிலை உண்மையில் பரிதாபத்துக்குறியது தான்..!!
இருவரில் அவளின்இன்றைய நிலைக்கு யார் காரணமாக இருக்ககூடும் என்று யோசித்து கொண்டு நின்றவளுக்கு நாதனா எழிலா என்பது புரிபடாது போக புறங்கையால் கன்னம் தாண்டி கழுத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவாறே தன்னை நெருங்கியவளிடம், ‘என்னடிஆச்சு‘ என்று நேரடியாக கேட்க..,
திடீரென கேட்ட குரலில் திகைத்து விழித்தவள் தாமரையின் பார்வை தன் மீது ஆழமாய் பதிவதை கண்டு கண்களை நன்கு துடைத்து விட்டவாறே “என்ன ஆச்சு ஒன்னுமில்லையே.., கண்ணுல பூச்சி அடிச்சிடுச்சி” என்று கரகரத்த குரலில் கூறியவள் வீட்டினுள் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பார்வையை திருப்பி இருந்தாள்.
பூச்சியா..? என்று புருவம் நெறிபட அவள் முகத்தில் தன் விழிகளை ஓடவிட அலர்விழியோ “அவி எங்கே..??” என்று கேட்டவாறே தாமரையை தவிர்த்து குழந்தைகளை பார்ப்பதை கண்டதுமே தாமரைக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துபோனது.
புரியவுமே தோழியின் மீது கோபம் சுறுசுறுவென ஏற…, மேடிட்டிருந்த வயிற்றின் மீது ஒற்றை கரம் பதித்து இடையில் ஒரு கரம் தாங்கி நின்றிருந்தவளின் மூச்சுகாற்று பலமாக வெளி வர தொடங்கியது…,
தாமரையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை திருப்பிய அலர் மீண்டும் காரிருளை வெறிக்க, “என்ன ஆச்சுன்னு கேட்டேன்டி” என்று அழுத்தமாக தாமரையின் வார்த்தைகள் வந்து விழுந்தது.
அதேநேரம் “என்ன அலரு இங்கயே நின்னுட்ட..?? உள்ள வா” என்று சுபியை இடுப்பில் சுமந்து கொண்டு வெளியில் வந்த வெற்றியின் அன்னை அழைக்கவும்..,
“இன்னும் இல்லைமா சொன்னாலும் கேட்காம சித்துவும் அவனும்டிவில பொம்மை படம் போட்டா தான் சாப்பிடுவோம்னு உட்காந்துட்டாங்க நேரமாகும் நீ உள்ள வந்து உட்காரு” என்றார்.
அவர் கூறியது போல தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த அவிரன் தாயின் வரவைகூட உணராது சித்துவுடன் ஒரே சோபாவில் அமர்ந்து கொறித்து கொண்டிருந்தான்.
“இருக்கட்டும் பெரியம்மா நான் கொஞ்ச நேரம்தாமரைகிட்ட பேசிட்டு வரேன்” என்று கூறி விட்டவளுக்கு எவ்வாறு தோழியை எதிர்கொள்வது என்ற சஞ்சலமே முதன்மையாக முட்டி நின்றது.
“சரிடா…” என்றவர் பிள்ளைகளை கவனிக்க சென்றிட அதற்குள் தாமரை வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த மாடிபடி வளைவில் போடபட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்திருந்தாள்.
‘நீ சொல்லாட்டி எனக்கு தெரியாதா..? எப்படியும் வெற்றிகரமா அத்தையை சமாளிச்சிருப்பன்னு தெரியும்மாமாவும் அங்க இருந்தாரா..? உன்னை ஒன்னும் கேட்கலையா அவர்கிட்டஎன்ன சொல்லி தப்பிச்சிட்டு வந்த..??” என்று அலரை பார்வையால் கூறுபோட்டுக் கொண்டே தாமரை கேட்க..,
ஷாலின் நுனியை திருகி கொண்டே காரிருளை வெறித்த அலரிடம் கனத்த மௌனம் ..!!
“என்னமேடம் ரொம்ப சைலெண்டா இருக்கீங்க.., அப்போ மட்டும் யார் சொன்னதையும் காதுல வாங்காம என்ன பேச்சி பேசி புதுமை படைக்கிறேன்னு கிளம்புனீங்க…! ஆனா இப்போ கேட்ட கேள்விக்குகூட பதில் வரமாட்டேங்குது” என்று நக்கலாக கேட்டவளுக்குமே அவள் நிற்கும் கோலம் கண்டு மிதமிஞ்சிய கோபமே!
“எப்படி பேச்சு வரும் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி தானேடி இப்போ உன் நிலைமை..!!” என்று கூறவுமே விலுக்கென தலை திருப்பி தாமரையை பார்த்தவளின் விழிகளில் பலவித உணர்வுகள் போட்டி போட அதை கண்ட தாமரைக்குமே மனம் கனத்துதான் போனது.
தோழியின் நிலை புரிபட்டாலும் .. இன்று அவர்கள் வீட்டில் நடந்ததை எண்ணி பார்த்தவள், “பாவம்டி அத்தை மல்லிகா சித்தி திடீர்னு அப்படி கேட்கவும் என்ன பதில் சொல்லன்னு புரியாம எப்படி நின்னாங்க தெரியுமா..?? அதுவும் என்னை கம்பேர் பண்ணி பேசினது ஒரு அம்மாக்கு எவ்ளோ வலி கொடுக்கும்னு தெரியுமா? நீ பண்ணின ஒரு முட்டாள்தனம் இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா” என்று கடிந்தவள் தொடர்ந்து,
“இப்பவும் சொல்றேன் நீ அண்ணன் கிட்ட பேசுறியா..?? இல்லை நான் பேசட்டா..??” என்று பொறுமை இழந்து கேட்க அதுநேரம் வரை விடைத்த நாசியுடன் இதழ் துடிக்க கரகரவென்று இறங்கிய கண்ணீரை துடைக்கவும் மறந்து அவளையே வெறித்து கொண்டிருந்தவள்மெல்லிய குரலில்“அப்பா வீட்ல இல்லை…, அம்மா மட்டும் தான் இருந்தாங்கஅம்மாகிட்ட குழந்தை தத்தெடுத்து கொடுக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்று தழுதழுத்தவாறு கூற..,
“என்னதூஊஉ..?? என்று நாற்காலியில் இருந்து எழுந்துவிட்ட தாமரை முகத்தில் எல்லையில்லா சீற்றம்!