ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தான் வழக்கமாக செல்லும் ஜிம் சென்ற அஸ்வின், நீண்ட உடற்பயிற்சிக்கு பிறகு மூச்சு வாங்க அமர்ந்தவன், கடந்த பத்து நாட்களாக இருந்த பழக்கத்தை இன்றும் தொடர்ந்தான்.
கைப்பேசியை எடுத்து இன்றைய நாளுக்கான காலை உணவை தேட துவங்கினான். இது அவனுக்கான தினசரி வேலையாகி போனது. பல வருடங்கள் அவனது அன்னை படும்பாடு இப்பொழுது தான் மகனுக்கு புரிந்துள்ளது போல்.
ஒவ்வொரு நாளும் ஒரு வகை செய்ய வேண்டும், அன்று அவன் கேட்டது போல் இன்று அவன் மனைவி கேட்பது இல்லை.
ஆனாலும் அவளுக்காக இவனே சிரமப்பட்டே ஆனாலும், விதவிதமாக செய்யத் துவங்கினான். அவன் செய்யும் உணவினை உன்னிப்பாக பார்ப்பவள், அதனை இரண்டு கவளம் உண்டு அவன் முகம் பார்த்து சிரிப்போடு, கட்டை விரல் உயர்த்தி அதனை அங்கீகரிப்பதை பார்த்தபிறகு தான் இவன் முகத்தில் சிரிப்பே வரும்.
அதற்காகவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சமைத்துவிடுவான். இப்பொழுதும் அதே தான். சமைக்க தெரியாது என்பதை மனைவியிடம் காட்ட பிடிக்காமல், அவளுக்காகவே தினமும் காலை அரை மணி நேரத்தை இதற்கே செலவிட்டு தான் வீட்டிற்கு செல்வது.
இன்றைய உணவிற்கான தகவல்கள் அனைத்தையும் சேகரித்தவன், வீட்டிற்கு சென்று குளித்து ஆரோஹி எழுந்து வரும் முன் காலை உணவை முடித்துவிட்டான். எப்பொழுதும் போல் ஒன்பது மணிக்கு ஆரோஹி கீழே வர, இரண்டு வகையான உணவோடு ஒரு ஜூஸ் அவள் முன்னாள் நீட்டப்பட்டது.
அன்று அவள் வியந்து அஸ்வினைத் திட்டிய, அதே விலையுயர்ந்த உணவு மேஜைதான் இப்பொழுது அவளுக்கு பிடித்த இருக்கையாக மாறியது.
அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் தானும் அமர்ந்தவன் வரிசையாக உணவுகளைக் கை காட்டி, “ஹனி அண்ட் டோஸ்டட் சேஸிமி பிளாட் நூடுல்ஸ் வித் டோஸ்டட் டோஃபூ (Honey and toasted sesame flat noodles with toasted tofu), ஸ்பைசி ஜலப்பினோ மஸ்ரூம் ஸ்க்ராம்பிள்ட் எக் (spicy jalapeno mushroom scrambled egg), டாங்கி ரெட் ப்யூரிஃபைர் ஜூஸ் (tangy red purifier juice- made with tomato and beetroot)” என கூறி முடிக்க உடனே உணவில் மூழ்கினாள்.
“வாவ் கிரிக்கெட்டரே… நூடுல்ஸ் அப்டியே ஐஸ்க்ரீம் மாதிரி கரையிது. எப்படி பண்ணீங்க?” ருசியில் ஒழுங்காக பேச முடியாமல் உடனே பாராட்டினாள் கண்களை மூடி சுவையை அனுபவித்தவாறே.
“இது ஹாண்ட் மேட் ஆரூ.”
“இதுக்கு தான் சொல்றேன், நீங்க செஃப் ஆகிடுங்கனு.”
‘ம்ம்ஹ்ம்… சமைக்கவே தெரியாதவன் செஃப்… விளங்கும்!’ மனதினுள்ளே புலம்பியவன், வெளியில் அமைதியாக இருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு பேச்சே எழவில்லை. அவளோ உணவில் கவனமாக அவனோ அவளில் கவனமானான்.
இறுதியாக முகத்தை அப்படியும் இப்படியும் வைத்து அந்த சாறை குடித்தவள், “இந்த ஜூஸ மட்டும் கொஞ்சம் அவாய்ட் பண்ணிருக்கலாம்.”
“இந்த ஜூஸ் குடிக்க லஞ்சம் தான் இந்த சாப்பாடு எல்லாம் மேடம்.” அவளை கேலி செய்து தனக்கான உணவை முடித்தான்.
அவளுக்கென தனி உணவு, அவனுக்கு எளிதான தனி உணவு தான் எப்பொழுதும்.
அவனும் உண்டு முடிக்க இருவரது உணவு பாத்திரத்தையும் ஆரோஹி எடுத்து சமையலறை நுழைய, அவள் பின்னே மற்ற பாத்திரங்களை எடுத்து வந்தான் அஸ்வின்.
தாங்கள் இருவரும் உண்ட தட்டை மட்டும் கழுவி வைத்த ஆரோஹியை மீதி இருந்தவற்றை சுத்தம் செய்ய விடாமல், “நீ கெளம்பு, அம்மா அப்பயே கால் பண்ணிட்டாங்க.” என பிடிவாதமாக அனுப்பி வைத்தான்.
எதற்காக என்றெல்லாம் தெரியாமலே இருவரும் அஸ்வின் பெற்றோர் இல்லம் செல்ல, வீட்டில் ஏற்பாடாகிக் கொண்டிருந்த தடபுடலான விருந்தைப் பார்த்த அஸ்வின் விழிகள் யோசனையில் சுருங்கியது. அதோடு வீட்டின் மத்தியில் இருந்த சிறிய யாக குண்டத்தின் ஒளி வேறு, புருவம் உயர்த்த வைத்தது.
தங்களைக் கடந்து செல்ல முயன்ற ஒருவரை நிறுத்தி, “அம்மா எங்க?” என அஸ்வின் கேள்வி கேட்க, ஆரோஹி அவர் கையிலிருந்த தட்டிலிருந்து லட்டை எடுத்து ருசி பார்க்க, அஸ்வினை மறந்து தட்டை அவளிடம் நன்றாகவே நீட்டினார் அந்த மனிதர்.
“இன்னும் எடுத்துக்கோங்க ம்மா.” வீட்டின் முதல் மருமகளாக வந்தவளைப் பார்க்கும் ஆர்வம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்க, திருமணத்திற்கு அடுத்த நாள் ஆரோஹியின் எதார்த்தமான பேச்சு, அனைவரிடமும் பாரபட்சம் பாராமல் பழகும் குணம், அனைத்தையும் கவனித்தவர்கள் மனதில் இந்த பெண் தங்கமாகவே பதிந்துபோனாள்.
“வேற ஸ்வீட் இல்லையா அங்கிள்?”
“இருக்கு ம்மா, உங்களுக்கு புடிக்கும்னு பெரிய அம்மா பைன் ஆப்பிள் கேசரியும், பக்லவா ஸ்வீட்டும் பண்ணி வச்சிருக்காங்க.”
ஆரோஹிக்கு கை, கால்கள் நிற்கவில்லை, துள்ளி ஓட தயாரானவளைப் பிடித்து வீட்டினுள் நகர்ந்தான். அவனுக்கு தெரிந்துவிட்டது இனி இது அவன் வீடல்ல, அவன் மனைவியின் வீடென்று.
எப்பொழுது வந்தாலும் அஸ்வினுக்கு அங்கு கவனிப்பு பலமாகவே இருக்கும். ஆனால் கடந்த இரண்டு முறையாக அனைவரின் கவனிப்பும் இந்த பெண்ணிடம் சென்றுவிட்டது.
அதனால் தான் அவரிடமிருந்து பதிலும் வராதென தானே முடிவெடுத்தவனாய் அஸ்வின் வீட்டினுள் செல்ல, புது மாப்பிள்ளையின் தோரணையோடு பட்டு வேஷ்டி அணிந்து மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் சித்தார்த்.
“என்னடா உனக்கும் அவசர கல்யாணமா?” கேலியோடு அஸ்வின், சித்தார்த்தை நோக்கி நடக்க,
“ம்ம்ம், பண்ணிட்டாலும்…” நொந்துகொண்ட சித்தார்த், “என்னடா இன்னைக்கு அப்பா பிறந்தநாள் கூட மறந்துட்டியா?”
“மாமா பிறந்தநாளா? என்ன நீங்க, என்கிட்ட சொல்லவே இல்ல?” அஸ்வினைக் கடிந்தவள், “அங்கிள் எங்க, நான் விஷ் பண்ணிட்டு வர்றேன்.” மதி, ராகவின் அறை நோக்கி நடந்தவளை, இருவரும் எட்டிப் பிடித்து வேகமாக நிறுத்தினர்.
இருவரின் வேகத்தையும் பார்த்து பெண்ணவள் பயந்து பார்க்க, “அங்க போகாத…” என்றனர் இருவரும் ஒருசேர.
சகோதரர்களை விசித்திரமாக பார்த்தவள், “ஏன்?” என கேட்டாள்.
“அதெல்லாம் அப்டி தான்… போகாத, கிட்சன்ல ஸ்வீட் இருக்குன்னு சொன்னாங்கள்ல பாக்கலயா?” மனைவியை திசை திருப்பும் எண்ணத்தோடு அஸ்வின் பேச அவள் அசையவே இல்லை.
“இல்ல, நான் அங்கிள பாத்துட்டு போறேன்.” ஆண்கள் இருவரும் தடுப்பதன் காரணத்தை அறிந்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம், பிடிவாதமாய் மாறியிருந்தது ஆரோஹிக்கு.
மதி, ராகவ் இருவரும் பட்டு வேஷ்டி சட்டை, பட்டு புடவையோடு தங்கள் அறையை விட்டு வந்தனர்.
“ஹாப்பி பர்த்டே மாமா! இவர் சொல்லவே இல்ல, இன்னைக்கு உங்க பர்த்டேனு. ஒரு கிஃப்ட் கூட வாங்கல.” வருத்தமாக கூறியவள் இறுதியாக கணவனை முறைத்து நின்றாள்.
அஸ்வினுக்கு சங்கடமாக இருந்தது.
“உங்கள பாத்து அஸ்வினுக்கு உலகமே மறந்து போச்சு போல. இல்லனா எங்க இருந்தாலும் அப்பாக்கு முதல் விஷ் அஸ்வின் தான்.”
அஸ்வின் தந்தையை நெருங்கி, “சாரி ப்பா…” என்றதோடு தந்தையை அணைத்து, மறவாமல் தன்னுடைய வாழ்த்தையும் கூறி விலகி நின்றான்.
“ஏன்டா இவ்ளோ ஃபீல் பண்ற? விடு… இதையும் மறக்குற அளவுக்கு உன் கல்யாண வாழ்க்கை அமையிறத விட, இந்த விஷ் எல்லாம் எனக்கு பெருசா படல.” என்ற தந்தைக்கு அளவளாவிய மகிழ்ச்சி தான் மகனின் செயல்.
மதிக்கும் அதே மகிழ்ச்சி தான். “டேய் மகனே, மறந்துட்டு சமாளிக்காத… உன் அப்பா காலைல இருந்து உன்னோட ஒரு கால்காக தான் வெயிட் பண்ணிட்டே இருந்தார்.”
ஆரோஹி, “இவர் இப்டி தான் அத்தை, நான் பத்து நாளா என்னோட ஸ்கூட்டிய ஹாஸ்டல்ல இருந்து எடுத்துட்டு வர கேக்குறேன். செய்யவே மாட்டிக்கிறார், நல்லா ரெண்டு திட்டுங்க அத்தை, என் பங்குக்கும் சேத்து.”
போலியாக ஆச்சரியப்பட்ட மதி, “இது வேறயாமா? ஒரு வாரம் சாப்பாடு போடாத. சொன்ன பேச்ச, தானா கேப்பான்.”
“அப்டியே அவ போட்டுட்டாலும்…” அஸ்வின் முணுமுணுக்க, அமைதியாக அவன் கையில் கிள்ளி முறைத்தாள்.
மகன் சன்னமான சிரிப்போடு தந்தையைப் பார்த்து, “ஏன் ப்பா, பார்ட்டி அரேன்ஞ் பண்ணத கூட என்கிட்ட சொல்லல?” போலியான கோவத்தோடு கேட்டான்.
மதி, ராகவ் இருவருக்கும் இதில் துளி கூட வருத்தம் தெரியவில்லை. பொதுவாக ராகவ் பிறந்தநாளை பல வருடங்களாகவே, தொழில் முறை நண்பர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்து, தொழில் வட்டாரத்தை வலுவாக்கிக் கொள்வார். ஆனால் இம்முறை அது இல்லை என கேள்விப்பட்டதும் நம்பவே முடியவில்லை அஸ்வினால்.
“பார்ட்டி எல்லாம் வைப்பிங்களா மாமா?”
“எப்பவும் நடக்கும் ஆரூ.” என்ற அஸ்வின் பெற்றோரிடம் மீண்டும் வந்து, “என்ன ரீசன் ப்பா?” தீவிரமாக கேட்டான்.
“விடேன்டா…” மதி அவ்விடம் விட்டு அகலப்பார்க்க, அவரை பிடித்து வைத்தான் மைந்தன்.
இவன் விடப்போவதில்லை என அறிந்தவர், “உங்க கல்யாணம் முடிஞ்சதும் நடக்குற முதல் ஃபங்ஷன், என் பையனோட மருமகளும் வந்து முன்னாடி நிக்கணும். நீ மட்டும் தனியா வந்து நிக்கவா இவ்ளோ பாடு பட்டேன்? இவன் உங்க கல்யாண விஷயத்தையே வெளிய தெரிய கூடதுன்னு சொல்லிட்டான்.” மதிக்கு, மருமகளை உலகிற்கே காட்டிவிடும் வேகம் அதிகமிருக்க, மகனோ அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு நிறுத்திய கோவம் அவன் மேல்.
“எனக்காக யோசிக்காதிங்க அத்தை, நீங்க எப்பவும் பண்றதை பாருங்க அத்தை. நான் நைட் வேணும்னா ஹாஸ்டல் போய்க்கிறேன்.”
மருமகளின் பேச்சு பிடிக்காத ராகவ் உடனே அவளை இடையிட்டு, “இல்ல ம்மா… என் வீட்டு விசேஷம், அது சின்னதோ பெருசோ, என் குடும்பம் மொத்தமும் என் பக்கத்துல நிக்கணும். என் குடும்பம்னு நான் சொல்றது நீயும்தான் ம்மா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.