வீட்டிற்குள் முழுதாக நுழையும் முன்பே புயலென தன் மேல் வந்து விழுந்த பெண்ணை பார்த்த அஸ்வினின் உடல் விறைத்துவிட, தலை தன்னாலே திரும்பி மனைவியை பார்த்தது.
தன்னுடைய கணவனை இறுக்கமாக கட்டி நிற்கும் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியாமல் போகுமா? ஆனால் வேதனையோ, எச்சரிக்கையோ ஆரோஹிக்கு சிறிதும் உருவாகவில்லை. யவ்னிகா, அஸ்வின் மார்பில் அடைக்கலமான நொடி பயத்தில் தன்னை பார்க்காமல், ஒருவித தவிப்போடு தன்னை பார்க்கும் கணவன் இருக்க அவளுக்கென்ன பயம்?
அதோடு அவன் கைகள் தன்னுடைய இறுக்கத்தை வெளியில் காட்டாமல் காற்சட்டைக்குள் ஒளித்துக்கொள்ள, அதை கண்ட ஆரோஹிக்கு உதடு வளைந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது.
இதில் யவ்னி ஏதோ அஸ்வினிடம் கூறிக் கொண்டிருக்க, தனக்கு பக்கவாட்டில் நின்ற ஆரோஹியை அவள் கவனிக்கவில்லை. ஆரோஹி மெதுவாக அவளுக்கு பின்னிருந்த இடைவெளியை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்து சைகை மொழியில் யவ்னியை அணைத்துக்கொள்ள கூற, அவன் மனைவியை தீயாய் முறைத்தான்.
கேலியாக வளைந்த அவள் இதழ்களை அசைத்து மௌனமாய், ‘ஓ, ரொமான்ஸ் பண்ண தெரியலயோ’ என கேட்க, இன்னும் அஸ்வினிடம் முறைப்பு கூடி கண்கள் சிவந்தது.
அவன் கோவம் உணர்ந்தவள் விளையாட்டை கைவிட்டு அவனை பதிலுக்கு முறைத்தாள், ‘இன்னும் என்ன கட்டிபுடிச்சிட்டு?’ என்று.
உடனே யவ்னியை தன்னைவிட்டு பிரித்தான். “யவ்னி உன்ன இங்க வர வேணாம்னு சொல்லியிருக்கேன்ல?”
யவ்னி, “நீ அலவ் பண்ணலைனா நான் இங்க வர கூடாதா அஸ்வி? நீ எனக்கு ஒரு கால் பண்ணியே மோர் தன் டூ வீக்ஸ் ஆச்சு. டூ யு க்நோ ஹொவ் மச் ஐ மிஸ்ட் யூ? நீ வரப்போறதில்லனு தெரிஞ்சு தான் நான் இங்க வந்துட்டேன்.”
அஸ்வின், “யவ்னி, லெட் மீ ஸ்பீக்.”
யவ்னி, “நோ யூ டோன்ட் ஸ்பீக். எத்தனை மிஸ்ட் கால்ஸ், எத்தனை மெசேஜ், எதுக்கும் நீ ரிப்ளை பண்ணல. நேர்ல பேசுறேன் நேர்ல பேசுறேன்னு மட்டும்தான் மெசேஜ் வருது.”
அஸ்வின் பார்வை ஆரோஹியை தீண்ட, ‘ஓ, நேரில் சென்று வேறு பேச போகிறாயா?’ என்ற கேள்வி இருக்க, நொந்து தான் போனான்.
யவ்னியும் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. “லெட்ஸ் கோ அவுட். சம்வேர் சைலன்ட்” அவனை நெருங்கி வந்து அவன் கையோடு விரல்கள் கோர்க்க, ஆரோஹி விழிகள் சுருங்கினாலும் உதட்டில் புன்னகையை மிதக்கவிட்டாள்.
அஸ்வினால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை, அவளது விரல்களை தன்னிடமிருந்து பிரித்து விலக்கி நிறுத்த, யவ்னியின் முகம் யோசனைக்கு மாறியது.
“அஸ்வி…”
“யவ்னி மீட் மை வைப், ஆரோஹி.”
ஆரோஹியை காட்டி நொடியில் உண்மையை உடைத்தவன் ஒரு பெண்ணின் நம்பிக்கையை உடைத்த வேதனையில் வீட்டினுள் அமைதியாக நகர, ஆரோஹிக்கு அவன் வேதனை புரிந்தது. யவ்னியின் பார்வை ஆரோஹியில் நிலைத்திருக்க, சிரிப்பதா வேண்டாமா என்று கூட யோசனை வந்தது.
“ப்ளீஸ் உள்ள வாங்க” ஆரோஹி அவளை உள்ளே அழைக்க, யவ்னி கால்கள் பின்னால் நகர்ந்தது.
ஆரோஹி உடனே அவள் நிலை புரிந்தவளாய், “யவ்னி ப்ளீஸ், அவர் கூட உள்ள வந்து பேசுங்க” யவ்னியின் தலை எல்லா பக்கமும் ஆடியது. கண்கள் கலங்கி முகமே செத்துவிட்டது. அவளது வேதனை உணர்ந்தவள் உள்ளே எட்டிப் பார்க்க, அஸ்வின் வரவேற்பறையில் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தான்.
“கிரிக்கெட்டரே… அவங்ககிட்ட வந்து பேசுங்களேன். அவங்க முகமே சரியில்ல” பயத்தில் வந்து அவனை அழைக்க, அஸ்வின் எதுவும் பேசாது மௌனம் காத்தான்.
விழிகளில் வேதனை சுமந்து நின்றவளை பார்க்க விரைந்தாள் ஆரோஹி. யவ்னிக்கு கால்களில் வலுவில்லாமல் நிற்கவும் முடியவில்லை, போகவும் முடியவில்லை.
“அஸ்வி… அஸ்வின் இது உண்மையா?” கண்கள் கலங்கி அவன் உள்ளே சென்றதைக் கூட மறந்து கேள்வி எழுப்பினாள்.
ஆரோஹி அவளது வேதனையை பார்க்க இயலாதவளாய், “அவங்களுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் நாராயணா, வாங்க” அஸ்வினை இழுத்து வந்து அவள் முன்பு நிறுத்தினாள்.
“யவ்னி ப்ளீஸ் காம் டவுன்.”
“எப்படி அஸ்வின் காம் ஆகுறது? இதை என்கிட்ட, இத்தனை நாள் உங்க கூட சுத்திட்டு இருந்த என்கிட்ட சொல்ல கூட உங்களுக்கு தோனலயா? இது தான் ரீசன்னு சொல்லிருந்தா கூட பைத்தியம் மாதிரி உங்களுக்கு கால் பண்ணி நான் டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டேனே.”
இனி இங்கு நின்று அழுது புலம்பி நின்றாலும் அதில் ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்தவள் அவன் பதிலை கூட எதிர்பாராது திரும்பி நடக்க, அஸ்வினுக்கு முன்னால் ஆரோஹி அவளை பிடித்து நிறுத்த பார்த்தாள்.
ஒரு பெண் இத்தனை சோகத்தோடு அதுவும் தன் கணவனால் இரவில் வெளியேறுவதில் சிறிதும் விருப்பமில்லாமல் அவள் பின்னே நடந்தாள். “யவ்னிகா நில்லுங்களேன், அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க. அஸ்வின் பேசுங்க” யவ்னிகாவை தடுத்தவள் அஸ்வினிடம் திரும்பி சற்று கோவமாக பார்க்க, அவனோ அசையவில்லை.
யவ்னிகா பார்வை அஸ்வினை தீண்டியது. “ரூம் போய்ட்டு ஒரு டெக்ஸ்ட் பண்ணு.”
தனக்கு பதில் கொடுக்க அவன் விரும்பவில்லை என்பது அழுத்தமாய் அவன் அமைதி காப்பதிலே தெரிய, தன்னுடைய வாகனத்தை நெருங்கியவள் இதயம் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
“யவ்னிகா இங்க சிச்சுவேஷன் கொஞ்சம் ஹார்டா இருந்துச்சு. அவாய்ட் பண்ண முடியாத சூழ்நிலைல தான் எங்க கல்யாணமே நடந்துச்சு” அதை கேட்ட யவ்னிகா அஸ்வினை மீண்டும் பார்க்க, அவன் கண்களில் இருந்த அந்நியத்தன்மை அதற்கு மேலும் அவளை அங்கு நிற்கவிடவில்லை.
யவ்னிகா சென்றவுடன் அஸ்வின் கோவத்தோடு வீட்டினுள் நுழைய, அவனை முறைத்துக் கொண்டு பின்னால் வந்த ஆரோஹி, “கிரிக்கெட்டரே, நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க.”
அவனோ அவளை விட அதீத கோவத்தில், “யாருடி தப்பு பண்றா? உன்கிட்ட கேட்டாளா அவ உங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுனு? இல்ல நான் தான் சொல்ல சொன்னேனா?”
“ஏன் அதான உண்மை. அதை சொல்ல கூடாதா அவங்ககிட்ட?” அவனது கோவத்திற்கு கட்டுப்படாமல் அதே குரல் அவளிடம்.
“உண்மைனா அதை எவன்கிட்ட வேணாலும் சொல்லுவியா? சம்மந்தப்பட்ட நானே அமைதியா நிக்கும்போது உன்ன யார் தேவையில்லாம வந்து ஆஜர் ஆக சொன்னது. எனக்கு தெரியாதா அவளை பத்தி? என்ன பேசி அவளை சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும்.”
“ஸீ இதை தான் நான் சொன்னேன். நீங்க பேசியிருந்தா பிரச்சனை இல்லையே. நமக்கு கல்யாணம் ஆனதை தவிர வேற ஒரு வார்த்தை நீங்க பேசல.”
“வேற சொல்ல என்ன இருக்கு?” என்றான் கோவமாக.
“அவங்கள லவ் பண்ணிட்டு…”
அஸ்வின், “ஸ்டாப் இட் ஆரோஹி. தட் வாஸ் நாட் லவ். ஒவ்வொருத்தர்கிட்டையும் நான் இதை மைக் போட்டு அனௌன்ஸ் பண்ணனுமா?” அவன் கத்தியதில் அரண்டு போன பாவை அசையாது நின்றுவிட்டாள்.
அவளது பயம் உணர்ந்தும் சமாதானம் செய்ய வரவில்லை அவன். கோவத்தை தாண்டி ஒரு சோகம், குற்றவுணர்ச்சி ஆணின் மனதை ஆட்கொண்டது.
“சாரி. ஆனா இத்தனை நாள் உங்களுக்குள்ள ரிலேஷன் இருந்தது உண்மை தான? விடிய விடிய தூங்காம ஒருத்தரோட லைக்ஸ் டிஸ்லைக்ஸ், எதிர்காலம் பத்தி எல்லாம் பேசியிருப்பீங்களே. அந்த பேச்சு எதுவும் அர்த்தமில்லாததுனு என்ன முன்னாடி நிக்க வச்சு சொன்ன மாதிரி, அதுக்கு ஒரு ரீசன் இது தான்னும் சொல்ல வேண்டியதும் உங்க கடமை தானே?”
அஸ்வின், “கிழிச்சோம்” சீற்றமாக கூறியவன் வேகமாக ஆரோஹியை நெருங்கி நிற்க, இருவருக்குமேயான அந்த சில இன்ச் மட்டும் இருந்த இடைவெளி பெண்ணின் மனதினை படபடக்க செய்தது.
பலவிதமான உணர்வுகளை சுமந்து தன்னை பார்த்த விழிகளில் கூர்மையாய் பார்வையை நிலைத்தவன், “இப்போ உன் கண்ணுல இருக்கே இந்த எமோஷன், பீல் இது எதுவுமே அவளை நெருங்கி நான் நின்னப்போ வரலடி அவளுக்கு.”
ஆரோஹிக்கு அவன் பேசுவது, செய்வது எதுவும் பிடிபடவில்லை. பிடித்தம் உள்ளது ஆனால் பிரியத்தோடு இணைந்த வசியம் வளரவில்லை என்கிறானா?
“நீ சொன்னியே ஏதேதோ பேசுனோம்னு, அப்படி எதுவும் நடக்கல. நம்ம எதிர்காலம் இப்படி எல்லாம் இருக்கணும்னு அவளும் என்கிட்ட கேக்கல, நம்ம வயசான காலத்துல இப்படி அப்படி செட்டில் ஆகணும்னு நானும் அவகிட்ட சொல்லல.
எங்களுக்குள்ள நடந்த டாக்ஸ் எல்லாம் ஆட் (விளம்பரம்), பிராண்ட், சினிமா, ஸ்போர்ட்ஸ், ட்ரிப் பத்தி தான். பசி தூக்கம் மறந்து விடிய விடிய கதை பேசுனதில்ல, ஒருத்தர் உடையிற நேரம் இன்னொருத்தர் தாங்கியும் நிக்கல, கடைசி வரை உன் கூடவே இருப்பேன்னு நம்பிக்கை தரவும் இல்ல. இது தான் எங்களோட ரிலேஷன். அழுதுட்டு போனாளே அவளுக்கும் இது தெரியும்.”
ஆரோஹி, “இப்பவரைக்கும் நீங்க சொல்றதுல தான் நிக்கிறிங்க அஸ்வின். ஏதோ ஒரு விசேஷத்துல, கோவில்ல ரெண்டு நிமிஷம் பழகுன குழந்தை அழுதாலே அதை சமாதானம் பண்ணி சிரிக்க வச்சு நகருறோம். இது அதை விட பெரிய பந்தம். ஒரு சாலிட் எக்ஸ்ப்லனேஷன் குடுக்காம தப்பிக்கிறது எவ்ளோ பெரிய தப்புனு நான் சொல்லி உங்களுக்கு புரியணும்னு இல்லையே. நான் சொன்னா அதுக்கும் என்ன திட்டுறீங்க.”
அஸ்வின், “இந்த நேரம், இடம், சூழ்நிலை அதுக்கு ஏத்தது இல்ல. யவ்னிகா கிட்ட நான் கண்டிப்பா பேசுவேன். மன்னிப்பு கேக்க பேசுவேன். நம்ம கல்யாணம் நடந்ததை முன்னாடியே அவளுக்கு சொல்லாத காரணத்துக்கு மன்னிப்பு கேப்பேன், நீ நினைக்கிற மாதிரி விளக்கம் குடுக்க இல்ல.”
அஸ்வினை அடிக்க வேண்டும் போல் இருந்தது ஆரோஹிக்கு. ஏனோ யவ்னிகா கண்ணீருக்கு அவன் பதில் சரியாகப் படவில்லை. “போங்க நீங்க பேசுறது எனக்கு புடிக்கவே இல்ல. விளக்கம் குடுக்குறதுல என்ன தப்பாகிட போகுது?”
“என் கல்யாணம் நானா இஷ்டப்பட்டு பண்ணதில்ல, என் அம்மா சொல்லி வலுக்கட்டாயமா நடந்ததுன்னு அவகிட்ட சொல்ல சொல்றியா? நான் இருக்க பீல்ட் சின்ன வட்டம் இல்ல. சின்ன விஷயம் நடந்தாலும் பெருசா போகும். இதை அப்படியே வெளிய பரப்பிவிட்டு தேவையில்லாத பிரச்சனை ஆகும். சரி அதை கூட நான் பேஸ் பண்ணிக்குவேன். இப்போ நீயே அவளுக்கு க்ளூ குடுத்து வச்சிருக்க.
கல்யாணம் ஆகிடுச்சு விலகிடலாம்னு இல்லாம இதையே ஒரு சாக்கா வச்சு என்னை நெருங்க நினைச்சா என்ன பண்றது? ஒரு வார்த்தை பேசுனாலும் ஆயிரம் தடவை யோசிச்சு பேசணும். இப்ப அவகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல எனக்கு.” தலையில் கை வைத்து வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்தவனின் பேச்சை கேட்ட பிறகுதான், அப்படியும் இருக்குமோ என்று தோன்றியது. தன்னை போல பிறரையும் எண்ணியது தவறோ என்று தான் தோன்றியது.
“சரி விடு நீ போய் தூங்கு” என்றான் தான் இன்னும் அவ்விடம் விட்டு அசையாமல். ஆரோஹிக்கு இருந்த தூக்கம் எல்லாம் எங்கோ ஓடியிருந்தது.
அவஸ்தையில் சைகையில் தாறுமாறாக விளையாடிய அவளது விரல்கள், முகத்தில் தெரிந்த சோர்வு என அவன் மனைவியும் எங்கும் நகராது நின்றுவிட, அவளை பார்த்தவன் அவளுக்காக தன்னுடைய அறை நோக்கிச் செல்ல, அவனை பின்தொடர்ந்து படியேறினாள் ஆரோஹி.
அறைக்குள் செல்லவிருந்தவளை, “ஆரோஹி” என்று அஸ்வின் அழைக்க, நின்றாள்.
“நாளைக்கு மார்னிங் ரெடியா இரு. சித்தார்த் வருவான். அவன் கூட போய் உன்னோட வண்டிய எடுத்துக்கோ. ஒர்க் போகிறதா இருந்தா போகலாம்” அவன் பேசுவதை கேட்டு அமைதியாக தலையை ஆட்டினாள்.
“நான் நாளைக்கு மும்பை கிளம்புறேன், வர ஒன் மந்த் ஆகும்.”
“எப்போ?” வேகமாக கேள்வி கேட்டாள்.
“நைன்க்கு பிளைட். சோ செவென்க்கு கெளம்பிடுவேன்” நிற்காமல் அஸ்வின் உள்ளே சென்றுவிட்டான்.
மறுநாள் காலை அஸ்வின் கிளம்பி வரும்பொழுது, அவனுக்கு முன்பு அவன் மனைவி படியிறங்கி கொண்டிருந்தாள்.
‘தூக்கத்துல எந்திரிச்சு நடக்குறாளோ?’ சந்தேகத்தோடு வேகமாக அழைத்து, “என்ன?” என கேட்டான்.
“நீங்க கெளம்புறீங்கல அதான் உங்களுக்கு பாய் சொல்ல அலாரம் வச்சு வந்தேன்” என்றாள் கண்களை கசக்கியபடியே.
சிரிப்பு இதழோரம் மலர, “சரி போய் படு. உனக்கு சாப்பாடு எல்லாம் செஞ்சு குடுக்க ஆள் வந்துடுவாங்க. இல்லனா சித்தார்த் கூட அங்க அம்மா வீட்டுக்கு போய்டு” அவளோடு பேசியபடியே தனக்காக தேநீரை போட, அதை அவன் மனைவி எடுத்துக்கொண்டாள்.
“பிரஷ் பண்ணாம… என்ன இது?” என அஸ்வின் முறைக்க, தேநீரை அருந்தியபடியே விழிகளை மட்டும் உயர்த்தி அவனை பார்த்து பார்வையாலே கெஞ்சினாள்.
நேரமானதால் தானும் வேகமாக ஒரு தேநீரை குடித்து வாகனத்தை நோக்கி விரைந்தான். அவன் பின்னே வால் பிடித்து வந்தவள், அவன் ஏதாவது பேசிவிட மாட்டானா என்கிற ஏக்கத்தோடு தான் இருந்தாள்.
அவள் கணவன் பல யோசனைகளோடு மனைவியின் சிந்தனைகளை படிக்காமல் கிளம்பி சென்றுவிட, சோர்ந்து தான் போனாள் பாவை.