அஸ்வின் கூறியது போல் சித்தார்த் சரியாக பத்து மணிக்கு வந்து நிற்க, அவள் விடுதிக்கு செல்லும் வழி எங்கும் அஸ்வினை பற்றிய புகார் தான். யவ்னிகா வந்ததில் இருந்து தன்னிடம் சரியாக பேசாமல் கோவமாக சென்றது வரை அனைத்தையும் ஒரே மூச்சில் புலம்பி தள்ளிவிட்டாள்.
“ரோஹி விடு. அவன் சொல்றதும் சரி தானே சின்ன க்ளூ சிக்கினாலும் ஒரு கோட்டையே கட்டிடுவாங்க மீடியா.”
ஆரோஹி, “எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை தானே, உன் அண்ணனை மாதிரி தான் நீயும் பேசுற. சரி வண்டிய நிறுத்து ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்.”
சித்தார்த் வாகனத்தை நிறுத்தவே இல்லை. “எனக்கு பசிக்கல அண்ணியாரே.”
“எனக்கு பசிக்கிதுடா.”
சித்தார்த், “அதுக்கு என்ன பண்றது? காலைல சாப்பிட்டு தான வந்த?” பேச்சினூடே ஆரோஹியின் விடுதியை இருவரும் நெருங்கியிருக்க, அவளுக்கு கோவம் ஏறியது.
“ஆமா உன் அண்ணன் தான் எனக்கு எதுவும் சமைக்காம கெளம்பிட்டாரே, என்ன சாப்பிட?”
“சமையலுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொன்னானே.”
ஆரோஹி, “பண்ணார் தான். ஆனா எனக்கு தோணல. தம்பி இங்கையே நிறுத்து” போகிற போக்கில் அவசரப்படுத்தி வேகமாக இறங்கி சென்றவள், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் வெளியில் வந்தாள்.
முகம் எல்லாம் சிரிப்பு தான், “சித்து பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. திங்ஸ் எடுத்துட்டு வந்துர்றேன்” என்றாள்.
“என்னது இனி தான் எடுக்க போறியா? ரோஹி நீ போய் ஒரு மணி நேரமாச்சு. இதோட நாலு இடத்துல பார்க்கிங் மாத்தி மாத்தி போட்டுட்டேன்.”
“அண்ணிக்காக, அண்ணனுக்காக ஒரு மணி நேரம் வெயிட் பண்றதுல உன் சொத்து அழிஞ்சா அழியட்டும் இருடா” என்றவள் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வந்ததே.
வந்தவள் வாகனத்தை நோக்கி வர, அவளை ஒரு பெண் அழைக்க, ஏதோ அவரிடம் பேசியவள் மீண்டும் வாகனத்திற்கு விரைந்தாள். வந்தவள் தன்னுடைய கைப்பையிலிருந்த பணத்தை புரட்டி எடுத்துப் பார்த்து அது போதாதென சித்தார்த்திடம் பணத்தை வாங்கினாள்.
“என்ன ஆச்சு ரோஹி?” அவள் பதட்டம் புரியாமல் அவசரமாக கேள்வி கேட்டான்.
“நான் உனக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன் சித்தார்த். ப்ளீஸ் எவ்ளோ இருக்கோ தா” அவசரப்படுத்தி வாங்கி, மொத்த பணத்தையும் சில நொடிகளுக்கு முன்னர் பேசிய அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டாள்.
அவரும் ஆரோஹி கையைப் பிடித்து ஏதோ பேசி சென்றுவிட்டார். அவளுடைய வாகனத்தை எடுக்க போன ஆரோஹியை நிறுத்தி வேறு ஆளை விட்டு எடுத்து வர அப்பொழுதே ஏற்பாடு செய்துவிட்டான் சித்தார்த்.
வாகனத்தில் ஏறிய ஆரோஹி அடுத்த தெருவில் இருக்கும் ஒரு உணவகத்தை கூறி அங்கு அவனை போகச் சொல்ல, சித்தார்த் வேறு ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினான்.
“ஓ, புது ஓட்டலா?” தலையை இல்லை என ஆட்டினான். “வா அண்ணி சொல்றேன்” உள்ளே இழுத்து சென்று தானே வகை வகையாக ஆர்டர் செய்து திரும்பினான், “யார் அவங்க?” என்ற கேள்வியோடு.
பதில் கூற முடியாமல் சில முறை அமைதி காத்தவள் அவனது தொடர் நச்சரிப்பில், “என்னோட ஹாஸ்டல்ல வேலை செய்ற அக்கா. அவங்க பொண்ணுக்கு சிக்ஸ் மந்த்ஸ் முன்னாடி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. நேர்வ் டாமேஜ். ஒரு பக்கம் சுத்தமா வேலை செய்யல. அதோட கோமா வேற. சேர்த்து வச்ச எல்லாம் செலவு பண்ணிட்டாங்க. இப்போ பரவால்ல அந்த பொண்ணுக்கு, ஆனாலும் இன்னும் மாத்திரை மருந்துனு செலவு இருக்க தானே செய்யும், அதான் என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் பண்ணேன்.”
“அதுக்குன்னு இருக்குற எல்லாத்தையும் புரட்டி குடுக்கணுமா? பாரு உன் வால்ட்ல பத்து ரூபா கூட இல்ல” பெருமையாக இருந்தது அவள் செயல், ஆனாலும் தன்னை பற்றியும் யோசிக்க வேண்டுமே என்ற கோவம் கேள்வியை முன்னிறுத்தியது.
“பணம் என்ன சித்தார்த் பணம். ஒரு கால் பண்ணா ஒடனே எனக்காக நீ வந்து நிப்ப, அவங்களுக்கு யாரும் இல்லடா. பணத்தால சந்தோசத்தை வாங்க முடியாதுனு சொல்றதெல்லாம் கதை தான். அதே பணம் இல்லாம வாழ்க்கைல எவ்ளோ சந்தோசத்தை இழந்திருக்காங்கனு பணம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தான் தெரியும்.”
“சரி, ஒர்க் போக போறியா?” என்றான்.
ஆரோஹி, “ஏன் உன் அண்ணன் என்னை வச்சு சாப்பாடு போட மாட்டாரா?” இடக்காக கேள்வி கேட்டவளை பாவமாக பார்த்தான்.
“எனக்கு கொஞ்ச நாள் ஃப்ரியா இருக்கனும். சோ பேப்பர் போட்டுட்டேன்.”
“அப்போ நம்ம ஆபீஸ் வர்றியா?”
“போடா, நான் ஆண்ட்டி கூட ஜாலியா கதை பேசி, கார்டெனிங் பண்ணி, ஷாப்பிங் போக போறேன்” இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உணவு வர, அதனை அருந்திய ஆரோஹிக்கு அந்த சுவை அவ்வளவு பிடித்துப் போனது.
“எப்படி இந்த கடை இத்தனை நாள் என் கண்ணுல படாம போச்சு?” என புலம்பியபடியே ஒரு உணவை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தான் எழுந்ததே.
“உன் அண்ணன் ஒரு சீஸ் கூட பாஸ்தால போட்டு தர மாட்டேங்கிறார். இங்க பார் தொட்டாலே சீஸ் தான். பேசாம உன் அண்ணனை டிவோர்ஸ் பண்ணிட்டு இந்த ஹோட்டல் செஃப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
“அதெப்படி அண்ணி என்னோட பொண்டாட்டிய நீ கல்யாணம் பண்ணுவ?” சாவகாசமாக காபி குடித்தபடி சித்தார்த் பதில் தர, ஆரோஹிக்கு ஏகத்திற்கும் புரையேறியது.
அவன் கூறியதை ஜீரணிக்கவே அவளுக்கு சில பல நொடிகள் தேவைப்பட்டது. புரிந்து தெளிந்து அவள் வர, அவளை சிரிப்போடு பார்த்திருந்தான் சித்தார்த்.
“டேய், கல்யாணமே பண்ணிட்டியா?”
“குடும்பமே நடத்திட்டேன்” என்றவன் அவ்விடமே அதிர சிரிக்க, கையில் கிடைத்த ஸ்பூனை அவன் மேல் எறிந்து அவனை அடக்கினாள் ஆரோஹி.
“அசிங்கமா இல்ல, பெத்தவங்கள விட்டு கல்யாணம் பண்ணதும் இல்லாம குடும்பமே நடத்தியிருக்க. ஒர்ஸ்ட் நீ. இரு இப்போவே ஆண்ட்டிக்கு…. இல்ல இல்ல அங்கிள்க்கு கால் பண்றேன்” கைபேசியை எடுத்து பேசப் போனவளை பிடித்து நிறுத்தினான்.
“டிபிக்கல் சீரியல் பொண்ணு மாதிரி பேசாத ரோஹி. இங்க பேச வேணாம். நான் உனக்கு அப்றம் தெளிவா சொல்றேன். இங்க உன்ன கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு. கெளம்பலாமா?” என்றான் பார்வையை அவள் பின்னே வைத்து.
வந்ததில் இருந்து ஆரோஹியும் கவனித்து தான் வருகிறாள் அவன் பார்வை தன்னை தொட்டுக்கொண்டே இருப்பதாய், ஆனால் அதன் அர்த்தம் அவள் திரும்பி பார்த்த பிறகு தான் தெரிகிறது. அவன் இருந்த இடத்திலிருந்து பார்த்தால் சமையலறை கொஞ்சம் தெரிகிறது.
ஏக்கம் அதிகம் கண்களிலே வழிந்தது, இதழ் சிரிப்பில் மலர்த்திருந்தாலும் முகம் எங்கும் சோகம் மட்டுமே.
அவனை அப்படிப்பட்ட நிலையில் பார்க்க விரும்பாதவள் தனக்கு உணவை எடுத்து வந்து வைத்தவரை அழைத்து, உடனே தங்களுக்கு சமைத்தவரை பார்க்க வேண்டும் என கூற, முதலில் மறுத்தவர்கள் பிறகு உள்ளே சென்று ஒரு பெண்ணை அனுப்பி வைத்தனர். ஆரோஹி சித்தார்த்தை பார்க்க, இல்லை என தலையை ஆட்டினான்.
“நான் தான் மேம் உங்க ஆர்டர் ரெடி பண்ணேன். என்னாச்சு, ஏதாவது பிராப்ளமா?”
“பொய் சொல்லாதீங்க. செஃப் வேணும், இல்லனா பெரிய பஞ்சாயத்து ஆகும்.”
ஆரோஹி பேசுவது அவ்விடத்திற்கே கேட்க, சுற்றி இருந்த அனைவரும் அவர்களை பார்ப்பது உணர்ந்து சித்தார்த் கூட ஆரோஹியை தடுக்க பார்த்தான்.
அவள் அசராமல் நின்று நினைத்ததை சாதித்துவிட்டாள். முன்னர் வந்த பெண் போய் வேறொரு பெண் வந்து நிற்க, சித்தார்த்தை ஆரோஹி பார்க்க, தலையை ஆரோஹி பக்கம் கூட திருப்பவில்லை, குடித்து முடித்த குவளையில் தான் அவன் பார்வை இருந்தது.
ஆனால் அவன் மூச்சு சீரற்று இருக்க, புரிந்து போனது அந்த பெண்ணின் சிறு வாசமே தன்னுடைய மைத்துனனை எவ்வளவு பாதிக்கிறதென.
வந்தவள் பார்வையில் சிறு தடுமாற்றமும் இல்லை, வெறுமை பெரும்பங்கு வகித்தது. அவனையும் அந்நியப்படுத்தாமல் பொதுவான பார்வை, பொதுவான கேள்வி, “எஸ்” என்று.
தனக்கு நேர் சித்தார்த் அமர்ந்திருக்க, இருவருக்கும் இடையே இருந்த இருக்கையில் அந்த பெண்ணை அமர வைத்து ஆரோஹி கேட்ட கேள்விகள், பரிமாறிய தகவல்கள் என மொத்தமும் உணவை பற்றியதே.
அப்பெண் சோர்ந்து போய், வேலை இருப்பதாக கூறி பார்த்தும் அசையவில்லை ஆரோஹி. சித்தார்த் தலையை கவிழ்த்தி அந்த மேஜையில் படுத்துவிட்டான்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகே அப்பெண்ணிற்கு விடுதலை வழங்கி, இருவரும் மீண்டும் பயணத்தை துவங்கினர்.
“ரொம்ப நல்ல பொண்ணுடா, அழகும் இருக்கு திறமையும் இருக்கு. நல்லா பேசுறா, ஆனா ரொம்ப சோகம் கண்ணுல. இன்னும் ஏன் வீட்டுல பேச மாட்டேங்கிற?”
பார்வை சாலையில் இருக்க, “அவளோட கால பாத்தியா ரோஹி?” ஆரோஹிக்கு வந்த கேள்விக்கு விடை தேடி தேடி தோற்று போனவள் சித்தார்த்தை பார்க்க, விருட்டென கண்ணீரை துடைத்தான்.
***
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.