“ஆரூ எங்க தான்ம்மா இப்படி அவசரமா கூட்டிட்டு போற?” அவசரமாக கண்ணாடி பார்த்து தலை சீவியவனை, பொறுமை இல்லாமல் இழுத்துக்கொண்டிருந்தாள் ஆரோஹி.
அவளது இலுவைக்கு தகுந்தாற் போல் அவன் கைகளும் வர, சிகை அவன் எதிர்பார்த்தது போல் அடங்கவில்லை. சரி என ஜெல்லை எடுத்து அவசரமாக தடவினான்.
“அதெல்லாம் சொல்ல முடியாது, வாயா பேசாம…” என்றாள் இவள் கோவத்தில்.
“கொழுப்பு…” என்றவன் சட்டை பட்டன்களை போடப் பார்க்க, அவன் கையில் அடித்து அவன் செயலை நிறுத்தினாள்.
“பட்டன் போடாதீங்க, இது நல்லா இருக்கு.” அவனை விட்டு இரண்டடி பின்னால் சென்று, அவனை தலை முதல் பாதம் வரை பார்த்தாள்.
கையில்லாத வெள்ளை பனியன், அதற்கு மேல் இளநீல நிற காட்டன் ஷர்ட். அதற்கு ஏற்றாற்போல் ஜீன்ஸ், வெள்ளை ஷூ அணிந்து பார்க்கவே கண்ணைப் பறித்தான். அதுவும் தான் பார்க்கும் பார்வைக்கு ஏற்றார் போல், தன்னை அளக்கும் அவன் கண்கள் பார்த்து தன்னையே மறந்தாள் ஆரோஹி.
எளிதாக அமையும் அடர் பழுப்பு நிற கண்மணிகள் தான். ஆனாலும் அதன் வசீகரம் அப்பப்பா…! அவனுக்கும் சேர்த்து அவை பேசிவிடும். அதனாலே ஆரோஹி அவன் கண்களைப் பார்ப்பதை தவிர்த்து விடுகிறாள். பிறகு உலகை மறந்து நின்று அவன் கேலி சிரிப்பை யார் வாங்குவர்?
“என்ன ஆரூ?” மெல்லிய சிரிப்போடு அவளைக் கேட்டவனுக்கு, அவள் நிலை புரிந்துதான் போனதோ, என்னவோ?!
“இருக்காதுல…? ஒரு ஷர்ட் முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு எடுக்கிறவருக்கு இந்த ரெண்டாயிர ரூபாய் ஷர்ட் எப்படி புடிக்கும்? மாத்த எல்லாம் நேரமில்லை, டைம் ஆச்சு.” அவன் கை பிடித்து மீண்டும் இழுத்தாள்.
“ஹே… பெர்ஃப்யூம் போடலடா…”
காலை அழுத்தமாய் தரையில் ஊன்றி, அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இருபதிற்கும் மேற்பட்ட வகையில் இருந்த, வாசனை திரவியங்களை அஸ்வின் குழப்பமாக பார்க்க, அதற்கு மேல் பொறுமையில்லாத ஆரோஹி, கைக்கு அகப்பட்டதை எடுத்து அவன் மேல் தாறுமாக அடித்து, வெளியே ஒருவழியாக இழுத்து வந்துவிட்டாள்.
தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தவனை இழுத்து, ஒரு மாஸ்க்கை கையில் திணித்து, அதோடு அவன் தலையில் ஹெல்மெட்டை வைத்து மூடினாள். ஹெல்மெட்டை பார்த்ததுமே அஸ்வின் ஒரேடியாக மறுத்தான்.
“அன்னைக்கு யாருக்காவது தெரிஞ்சதா? இல்லல, வாங்க.”
“சொன்னா புரிஞ்சுக்கோடா… சரி, நீ எங்க போகலாம்னு நினைக்கிற சொல்லு, அதை பொறுத்து முடிவு பண்றேன்.”
“நாராயணா, சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சா சொல்லுன்னு நிக்கிறிங்க. வர முடியுமா, முடியாதா?”
“முடியாது” என்றான் உடனே அவளுக்கு சரியாக நின்று.
அஸ்வினை தீயாய் முறைத்தவள் மூச்சு புசுபுசுவென வெளியேறியது. “சரி, நான் போறேன்.” வாகனத்தில் ஏறி ஆரோஹி அமர,
அவளுக்கு பின் வேகமாக ஏறி அமர்ந்த அஸ்வின் அவளது தோளில் கை வைத்து, “டிராகன் மாதிரில கோவம் வருது என் பட்டாம்பூச்சிக்கு…”
“யோவ்! கைய எடுயா…” தோளில் இருந்த அவன் கையை உதறிவிட்டு சிலிர்த்தாள்.
“என்ன மரியாதை தேயுது…?”
வாகனத்தை உயிர்ப்பித்து சில அடி தூரம் சென்று வீட்டை விட்டு வெளியேறும் முன்பு நிறுத்தி இறங்கினாள். அஸ்வின் வாகனத்தில் அமர்ந்தவாறு விழிக்க, “நீங்க ஓட்டுங்க.” என்றாள் ஆசையாக.
மறுக்காமல் அஸ்வின் ஏறி அமர்ந்துவிட, இருவருக்கும் இடையே கணிசமான இடைவெளி விட்டுதான் ஆரோஹியும் அமர்ந்தது. செல்லும் பாதை நீண்டுகொண்டே சென்றது. ஆரோஹி வழி கூற பெருநகரின் முக்கிய பாதைகள் அல்லாது, சிறு சிறு தெருக்கள் வழியாக அவனை அழைத்துச் சென்றாள். சலிக்காமல் அவளோடு பயணித்தவனை மெட்ரோ ரயில் நிலையத்தில் வந்து நிறுத்த வைத்தாள்.
“ஆரூ…” கூட்டத்தை எண்ணி அஸ்வின் தயங்க, அவர்கள் நேரம் அங்கிருந்த வெயிட்டிங் அறையில் கூட்டம் இல்லாமல் இருக்க, அவனை அங்கு இழுத்து சென்று மாஸ்க்கை அவிழ்த்து, வின்டர் மாஸ்க் ஒன்றும் அதோடு தொப்பி ஒன்றையும் அவனிடம் ஒப்படைத்தாள்.
பரபரப்பாக சுற்றி திரிவதும் கூட ஒருவித மகிழ்ச்சியாகவே இருக்க, “கட்டுன பொண்டாட்டிகூட ஊர் சுத்த, மாறுவேஷம் போடுற ஒரே ஆள் நானா தான் இருப்பேன்.”
“கிக்கா இருக்குல்ல?” என்றாள் அவள் கேலியாக.
“உனக்கு கிக்கா இருக்கு, எனக்கு பயமா இருக்கு.” என்றான் உண்மையை ஒப்புக்கொண்டு.
“கல்யாணம் தான் ஈஸியா நடந்துடுச்சு. என் கூட இருக்க நேரமாவது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இருங்களேன், தப்பில்லையே?”
“என்னது, கல்யாணம் ரிஸ்க் இல்லையா? யார் என்னனு தெரியாம அம்மாக்காக உன் போட்டோ கூட பாக்காம ஓகே சொல்லிருக்கேன். இதை விட பெரிய ரிஸ்க் வேணுமா? நல்லவேளை நீ குட்டி பஜாரியா இருக்க, இல்லனா என் பாடு?”
“நான் பஜாரியா?” ரயிலுக்காக காத்திருந்த ஆரோஹியின் கவனம் முற்றிலும், இப்பொழுது அஸ்வின் பக்கம் திரும்பியது.
“அதான் டிக்கெட் வாங்குனப்பவே தெரிஞ்சதே…”
“அப்படி வாங்குனா தான் டைமுக்கு வண்டிய புடிக்க முடியும் கிரிக்கெட்டரே…” பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மெட்ரோ ரயில் வந்துவிட, அஸ்வினுக்கு நிம்மதி.
கூட்ட நெரிசல் அவன் எதிர்பார்த்த அளவு இல்லை. சரியாக இரண்டு நிறுத்தத்திற்கு பிறகு இருவரும் இறங்க, அவனை இழுத்து ஒரு சிறிய ஹோட்டலை கை காட்டி அங்கு உணவு வாங்கி வர, ஒரு பட்டியலையே வைத்தாள்.
“அநியாயம் பண்ற ஆரூ…”
“காலைல சாப்பிடல, பசியோட சுத்திட்டு இருக்கேன். நீங்க ஏன் இப்படி கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க?” சோகமாக மனைவி கேட்கவும், உடனே அனைத்தையும் வாங்கி வந்துவிட்டான்.
“சரி, இதெல்லாம் எப்படி சாப்பிடுவ?”
“அதுக்கும் வழி இருக்கு, வாங்க.” நேராக ஒரு கேப் பிடித்து, அவனை அவர்கள் இருவரும் முதல்முதலில் சந்தித்த அதே இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அவ்விடத்தையே மூன்று முறை சுற்றி சுற்றி வந்த ஆரோஹி, ஒரு மரத்தின் நிழலைப் பிடித்து அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தாள். தான் வந்திருக்கும் இடத்தைப் பார்வையால் அளந்தவன், நிம்மதியாக முகமூடியை அவிழ்த்தான்.
“நீ இப்படி எல்லாம் பிளான் பண்ணி வந்தது தெரிஞ்சிருந்தா, நான் வீட்டுல சாப்பிட்டே வந்துருப்பேன்.” வகை தொகையாக உணவைப் பிரித்து வைத்து, எதை உண்பதென தெரியாமல் விழிக்கும் மனைவியைப் பார்த்து, பொறாமையாக தான் இருந்தது அஸ்வினுக்கு.
“இருக்கட்டுமே… ஒரு நாள் ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிடுவீங்கள்ல, அது இன்னைக்கா இருக்கட்டும்.” உணவை அவனுக்கும் ஊட்டி, அவளும் சாப்பிட்டு, காலை நேரத்தை ஒரு திகிலோடு முடித்தனர்.
“உங்களுக்கு இந்த இடம் ஞாபகம் இருக்கா?”
“மறக்குமா?” அவள் அருகே அமர்ந்தவன், அந்நாளின் நினைவில் சிரித்தான்.
ஆரோஹி மனம், எந்நேரமும் குளிர் பரவியிருக்கும் அவ்விடத்தை ரசிப்பது, அவள் செய்கையிலே அஸ்வினுக்கு தெரிந்தது. பார்வையை அடிக்கடி சுற்றி சுழலவிட்டாலும் அஸ்வின், ஆரோஹியை ஒரு முறை கூட அவசரப்படுத்தவில்லை.
அவள் எண்ணத்தின்படி முழுமையாக அந்த அமைதியை அனுபவிக்க விட்டான். அவள் பார்வையின் ரசனைக்கேற்ப தான் இருந்தது அந்த இடமும். பல ஏக்கர் நிலமிருக்கும் நிச்சயம். அதனை சுற்றி நாலாபுறமும் ரெடிமேட் சுவர்கள் இருந்ததன் காரணம், அவ்விடத்தையே ஆக்கிரமித்திருந்த தென்னை மரங்களும், ஒரு ஓரத்தில் பூத்துக் குலுங்கும் அடுக்குமல்லி செடிகள் பலதான். ஏனோ அந்த அடுக்குமல்லி மட்டும் அவ்விடத்திற்கு கொஞ்சம் பொருந்தாமல் இருந்தது.
அதற்காக சிரமப்பட்டு தனி பராமரிப்பும் நிகழும் போலும். என்ன பராமரித்து என்ன பயன், தினமும் சுத்தமாக இருக்கும் அவ்விடத்தில், அந்த அடுக்குமல்லி மட்டும் தரையில் எக்குத்தப்பாக சிதறிக்கிடந்தது. பறிக்கவே மாட்டார்களா என்கிற சந்தேகமும் கூட வரும், பார்ப்பவர்களுக்கு. காலார அவ்விடத்தையே சுற்றி அஸ்வின் வந்து பார்த்த பொழுது கூட, ஆரோஹி அவ்விடத்தை விட்டு நகரவில்லை. அவனைப் பார்த்துக் கொண்டு மெல்லிய சிரிப்போடு அமர்ந்திருந்தாள்.
பாக்கெட்டில் கை நுழைத்து வசீகரிப்பவனின் மெய் அழகில் மெய்மறந்து நின்றவளிடம், “தெரிஞ்சவங்க இடமா?” கேட்டான். ‘ஆமாம்’ என தலை அசைத்தவள் கிளம்பத் தயாராக,
“ம்ம்ம்… ஃபேம் வந்ததுல இருந்து ஒரு பக்கம் கிடைச்சது அதிகம்னா, இழந்ததும் இருக்கதான் செய்யிது. ஒரு சுதந்திரம் இல்லாம போச்சு. எனக்கு புடிச்ச சின்ன விஷயமா இருந்தாலும், அதை செய்ய முன்னாடி இதுக்கு என்ன என்ன சொல்ல போறாங்கனு, மீடியா பத்திதான் யோசிக்க தோனுது. சிரிக்க கூட சில மில்லிமீட்டர் தான் லிப்ஸ் விரியணுமாம்.
எங்க போனாலும் நாலு பாடிகார்ட்ஸ், கேமரா, செல்ஃபி, ஆட்டோகிராஃப் ஹ்ம்ம்… பாரு, உன் கூட வர்றதை கூட மறைச்சு செய்ய வேண்டி இருக்கு.”
“ஒரு விஷயம் கிடைக்க ஒரு விஷயத்தை இழக்கதான் செய்யணும். உங்க பின்னாடி நூறு பேர் இருக்காங்க, நீங்க செய்ற ஒரு சின்ன விஷயத்தை ரசிக்க, கோடி பேர் இருக்காங்கனு யோசிச்சா, இதெல்லாம் பெருசா இருக்காது.”
“இப்போ இதெல்லாம் உனக்கு பெருசா இருக்காது. நாளைக்கே நீதான் என்னோட வொய்ஃப்னு வெளிய தெரிஞ்சா, அப்புறம் உனக்கும் நான் ஒரு வேலியை போடுவேன். அப்போ இதே மாதிரி இருக்கியானு பாக்குறேன்.” என்றான் சிரிப்போடு. பாப்போம் என சவால் விட்டவள் ரயிலில் அவனோடு ஏறினாள்.
சென்னை மாநகரில் கூட்டத்திற்கா பஞ்சம். அதிகமாகவே இருந்த கூட்டத்தில் முதலில் அஸ்வினை விட்டு, அவன் சட்டையைப் பிடித்தபடியே வந்த ஆரோஹியை ஒரு பக்கமும், அவள் கணவனை ஒரு பக்கமும் சற்று தள்ளி நிறுத்திவிட்டது அந்த கூட்டம். அவனை நோக்கி வரவிருந்தவளை அவனே நிறுத்தினான் கண் அசைவிலே. அடுத்த நிறுத்தத்தில் கூட்டம் அதிகமானதே தவிர, குறையும்படி தெரியவில்லை. ஆரோஹிக்கும் திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்திருக்க, அவள் சிரிப்பு சத்தம் அங்கிருந்த பலரின் கவனத்தை ஈர்த்தது.
சிலர் விசித்திரமாக, சிலர் முக சுளிப்போடு. அதற்கெல்லாம் அசருபவள் இல்லையே ஆரோஹி. அவள் அவளாகவே இருக்க, அவளது இயல்பை மற்றவர் போல் அல்லாமல் ஒருவித ரசிப்புத் தன்மையோடு, அணுஅணுவாய் அஸ்வின் கண்கள் ருசித்தது. அந்த இடைவெளியில் அஸ்வினுக்கு சித்தார்த்தின் அழைப்பு வர எடுத்தான்.
“சொல்லுடா”
“ரோஹி எங்கடா? நானும் பத்து நிமிசமா கால் பண்ணிட்டே இருக்கேன். லைன் பிஸினு வருது?”
“அப்போ இன்னும் ஒரு மணி நேரமாகும்.” அஸ்வின் சிரிப்பே சித்தார்த்துக்கு உறுதியாய் கூறிவிட,
“சரிடா, நான் பர்த்டே விஷ் பண்ணேன்னு சொல்லிடு. ஈவ்னிங் பேசுறேன், மீட்டிங் இருக்கு மொபைல் ஆஃப் பண்ணிடுவேன். இல்லனா விஷ் பண்ணலன்னு மேடம்க்கு கோவம் வரும்.” தகவல் எல்லாம் கொடுத்து சித்தார்த் இணைப்பைத் துண்டித்தான்.
மனைவியின் சிரித்த முகத்தைத் தாண்டி ஆரோஹியை அஸ்வின் பார்வை அளந்தது. எப்பொழுதும் அணியும் குர்தா இல்லை. பாதம் வரை நீண்டிருந்த அந்த பீச் நிற உடையை, அனார்கலி என அறிந்துகொள்ள முடிந்தது.
கண்களில் சற்று அழுத்தமாக போட்டிருந்த மை, என்றும் இல்லாமல் கண்களில் தெரிவது போல் செய்திருந்த ஒப்பனை, கழுத்தில் அவன் அணிவித்திருந்த தாலியோடு ஒரு மெல்லிய தங்க சங்கிலி.
‘இதையெல்லாம் ஏன் கவனிக்க தவறினேன்? என்னவளின் பிறந்தநாளில் நானே முதலில் வாழ்த்தை பரிமாறாமல்…?’ வருத்தம் மேவேரி தொண்டையை அடைத்தாலும், நேரமிருக்கிறதே என நினைவூட்டியது சிந்தை. சிரமப்பட்டு கூட்டத்தினை விலக்கி மனைவியை அடைந்தவன் அவளை ஒட்டி நின்றான். தோழியிடம் பேசிக்கொண்டிருந்த ஆரோஹிக்கு, வந்தது அஸ்வின் என தெரிந்தாலும், தோழியோடு அவள் குழந்தையைப் பற்றிய தீவிர பேச்சு வார்த்தையில் இருந்த காரணத்தினால், அஸ்வின் பார்வை சில நொடிகள் பிறகே உரைத்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.