“எப்படி சொல்லி கூப்பிட்டாலும் இதே பதில் தான் ஆரூ. நீ அம்மா வீட்டுக்கு போய் தான் ஆகணும். அன்னைக்கு என்னமோ பேய் வீடுன்னு சொன்ன, இன்னைக்கு என்னவாம்?”
தலையை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கால்பந்து போட்டியிலிருந்து திருப்பி அவனுக்கு அருகே படுத்திருக்கும் மனைவி மீது பதித்தான்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் அவனை ஏதாவது செய்து சமாதானம் செய்யும் பாவனை ஒன்றை வைத்து உதட்டை பிதுக்கினாள்.
“சரி இங்கையே இரு. அம்மாகிட்ட நீ வர மாட்டனு சொன்னதா சொல்லிடறேன்” அவன் கையிலிருந்த ரிமோட்டை கோவத்தில் பிடுங்கி அவன் பார்க்காத ஒரு சேனலை வைத்துவிட்டு குப்புற படுத்துகொண்டாள்.
அவள் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியது. அன்று ஒரு பரபரப்போடு வெளியே சென்று வந்தது அஸ்வினுக்கு பிடித்துப்போக அதற்கு பிறகு அவனே அவளை இழுத்து வெளியே சுற்ற ஆரம்பித்துவிட்டான்.
அதுவும் அவளது இருசக்கர வாகனத்தில், ஹெல்மட் உதவியோடு.
அந்த பழக்கத்தோடு அன்று இரவு இருவரும் அவர்கள் அறை இருந்த தளத்திலின் வரவேற்பறையில் இரவினை செலவழிக்க துவங்கிவிட்டனர்.
ஆளே இல்லாத வீட்டின் வரவேற்பறையில் அருகருகே படுத்திருப்பதும், கதவுள்ள அறையினுள் ஒரே கட்டிலில் படுத்திருப்பதும் அவளை பொறுத்தவரை வேறு வேறு தான்.
இதன் பொருள் ஒன்று தான் என அறிந்தாலும் ஆரோஹி அந்த லாஜிக் இல்லாத செயலை ஏற்க தயாராகவில்லை. அட முட்டாள் பெண்ணே இரண்டும் ஒன்றே என கூறி அந்த பிள்ளையை திருத்துவார் யார்?
தெரிந்த ஒருவனும் அவளுக்கு அடிமையாகிவிட்டானே… எல்லாம் இந்த எஜமானி ஆட்சி தான் அவ்வீட்டில்.
இப்பொழுது கூட அவன் அடுத்தவாரம் போட்டிக்கு சென்ற பிறகு அவன் அன்னை வீட்டில் இருக்க அஸ்வின் கூற, பெண்ணோ ஒரே பிடியாக இங்கேயே இருப்பதாக கூறுகிறாள்.
அவனை பொறுத்தவரை ஒரு வேளை உணவை கூட சரியாக உண்ண தெரியாத அஞ்சலி பாப்பா.
‘இத்தனை வருசமா இப்டி தானே இருந்தேன். இவரா வந்து பாத்தார்?’ என்கிற கோவம் அவளுக்கு. அதனாலே முதுகை காட்டி படுத்துவிட்டாள்.
கோவமேனும் பட்டுக்கொள்ளட்டுமென படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது.
இளையராஜா இசையில் பாடலை கேட்டு உறங்கிய காலம் மறைந்து அவள் குரலே அவனுக்கு எஸ்.பி.பி குரலானது. அவளும் அப்படி இப்படி அசைவதை பார்த்தவன் அவள் கையில் சுரண்டினான். அசையவில்லை அவன் மனைவி.
“ஆரூம்மா”
“பேசாதீங்க” குரல் கமறியது ஆரோஹிக்கு. பெருமூச்செறிந்தவன் அவளை ஒட்டி படுத்தான்.
“போங்க போங்க டூ”
‘அட குட்டி குரங்கே, இப்டி தான் சண்டை போடுவியா?’ மனதினுள் திட்டிக்கொண்டே கொஞ்சினான் ஆரோஹியை.
அவள் ஏதோ சொல்ல அவனுக்கு அது வசதியாகியது, இருவருக்கும் இடையே இருந்த ஒரு அடி இடைவெளியையும் குறைத்து நெருக்கமாக வர அவள் மூக்கோடு அவன் மூக்கை உரச வசதியாக இருந்தது.
‘கோவத்தை குறைக்க வழி சொல்லுவானென்று பார்த்தால் இவன் திசைதிருப்ப அல்லவா பார்க்கிறான்’ கணவனை அர்ச்சித்து முறைத்தாள் ஆரோஹி.
“ம்ம்ம் வந்துட்டேன்” என்றவரிடம், “உங்க பப்பு இங்க வேகாது. தள்ளி படுங்க” அவன் அசையும்பாடில்லை, அவள் தள்ளி படுத்தாள்.
அவன் முகம் சூம்பி போய் சிரிப்பும் மறைந்து போனது. கோவத்தில் தள்ளி சென்று படுத்தவள் அடுத்த நொடி அவனை மீண்டும் நாடி வந்துவிட்டாள்.
நெஞ்சம் முட்ட முட்ட அவனை நிறைத்திருப்பவளுக்கு அவன் ஒரு ஒரு செயலும் எவ்வாறு பாதிக்குமென தினமும் காட்டிக்கொண்டிருக்கிறான். தொலைந்து போன அந்த சிரிப்பை திருடியவளே கொடுக்க தாராளமாக சிரித்தான்.
“இப்ப மட்டும் சிரிச்சுக்கோங்க. அது ஏன் உங்க பார்வை எனக்கு இவ்ளோ புரியிது?”
அதற்கும் சிரித்து, “அப்போ நான் எப்படி பாத்தாலும் உனக்கு புரியும்?” கேட்டான் கள்ளன்.
“ச்சீ ச்சீ பேட் பாய் நீங்க இப்படியா பேசுவீங்க?”
“ஹே நான் சோகமா இருக்குறத சொன்னேன். நீ என்னடி நினைச்ச?” அவசரப்பட்டுவிட்டோமோ என வெட்கத்தால் சிவந்தது பெண்ணின் முகம்.
முகத்தை மட்டும் சிவக்கவிட்டால் அழகில்லையே, உடலையும் சிவக்க வைக்க அவள் கையை அள்ளி தன்னோடு பிணைத்துக்கொண்டான்.
“நானும் சோகமா…” மனைவியை இடையிட்டு “நீ எந்த அர்த்தத்துல பேசுனனு எனக்கு தெரியாது பாரு… தர்ட்டி மைண்டட் ஆரூ நீ” அஸ்வின் குலுங்கி சிரித்தது ஆரோஹியின் இதயத்திற்கு சிறு நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியது. அதுவும் அந்த கண்கள்…
‘போடா நீ க்யூட்’ என செல்லமாக திட்டியும்கொண்டது.
“நான் எல்லாம் அப்டி இல்ல. ரொம்ப இன்னசன்ட் தெரியுமா, கிஸ் பண்ணா குழந்தை பிறக்கும்னு நம்பிட்டு இருந்தேன். அவ்ளோ பக்காவான 90s கிட் ஆமா…”
அஸ்வின், “அப்போ நாம இந்த ஒரு வாரத்துலையே ப்ரக்னன்ட் ஆகிருப்போமே”
தன்னுடைய கூற்றில் அட்டகாசமாக சிரிப்பவன் மார்பிலே அடித்து பார்த்தும் அவன் சிரிப்பும் நிற்கவில்லை, அவள் வெட்கமும் தூரம் நகரவில்லை.
அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல், “அம்மா கூட இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை? அம்மா ஏதாவது சொன்னாங்களா?”
“அச்சோ கண்டிப்பா இல்ல. அவங்கள எல்லாம் நான் குறை சொன்னா நான் மனுசியே இல்ல. இப்ப வர என்ன ஹார்ஷாவோ நான் வருத்தப்படுற மாதிரியோ ஒரு வார்த்தை பேசுனதில்ல”
அஸ்வின், “அப்றம் ஏன்?”
“இல்லப்பா நான் இங்கையே இருந்துக்குறேனே”
அஸ்வின், “உனக்கு தான் தனியா இருக்குறது புடிக்காது. அப்படியும் நீ சொல்றனா காரணம் இருக்கணுமே.”
ஆரோஹி, “காரணம் எல்லாம் இல்ல. இங்க எனக்கு செட் ஆகிடுச்சு. அதோ தோட்டத்துல போட்ட செடி எல்லாம் பாக்கணும். உங்களுக்காக நான் புதினா கூட இங்க ப்ரெஷா நட்டு வச்சிட்டேன். காப்பர், மேவரிக் நாம இல்லாம தனியா இருப்பாங்கள்ல”
அவளது பதிலை சிறுபிள்ளையின் பதிலாய் ஏற்றவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை, “ஹே பொண்டாட்டி உனக்கே நீ பேசுறது நியாயமா இருக்கா. எல்லாத்துக்கும் வீட்டுல ஆள் இருக்காங்க”
வாடிப்போனவள் முகத்தை மென்மையாய் வருடினான், “உன்ன எப்படிடா தனியா விட்டுட்டு போக மனசு வரும் எனக்கு?”
“நான் என்ன குழந்தையா நாராயணா இவ்ளோ யோசிக்கிறீங்க”
“உன் தேவைக்கு ஒரு வேளை சாப்பாடு கூட செஞ்சு சாப்பிட முடியுமா உன்னால?”
“என்ன சொன்னாலும் இப்டி பிடிவாதமா நிக்கிறத விடு மொத. நான் வர ரெண்டு மாசம் ஆகும். அது வர நீ என்ன பண்ற, ஏது பண்றனு நான் பயந்துட்டே இருக்க முடியுமா” பிடித்து வைத்திருந்த பொறுமை அவளது சிறுபிள்ளையான பதில்களில் சட்டென பறந்து கோவம் குடிகொண்டது.
கண்ணெல்லாம் நீர் படலம் உருவாக, “நீங்க வர ரெண்டு மாசம் ஆகுமா?” ஒருவித தவிப்போடு தன்னை நோக்கியவளிடம் இந்த கோவத்தை காட்டிய தன்னையே அஸ்வின் கடிந்தான்.
“அதுனால தானே ஆரூ ம்மா சொல்றேன். இன்னும் மூன்றை மாசம் தான் வேர்ல்ட்கப்க்கு டைம் இருக்கு. ரொம்ப பிராக்டிஸ் பண்ணனும். வீட்டை பத்தியே நான் யோசிக்க முடியாது. நீ அங்க இருந்தா எனக்கும் தெம்பா இருக்கும்ல”
“என்னையும் கூட்டிட்டு போறிங்களா உங்ககூட?” அவனுக்கென்ன ஆசையா இல்லை, எந்நேரமும் அவன் செல்லும் இடமெங்கும் அவளோடு உலாவர தான் அவனும் விரும்பினான். ஆனால் முடியாதே இந்த நேரத்தில்.
“நான் வேணும்னா மார்டனா டிரஸ் பண்ணி மேக்கப் எல்லாம் போடவா, உங்களுக்கும் வெளிய சொல்ல நல்லா இருக்கும்ல?” அவன் யோசனையை பார்த்து அவள் இத்தனை நாள் அரித்த கேள்வியை கேட்டுவிட்டாள்.
இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தது, “ஹே இதெல்லாம் யாருடி உன்கிட்ட சொன்னா? எங்க இருந்து உனக்கு இப்டி எல்லாம் தாட்ஸ் வருது?” அஸ்வின் கோவத்தில் எழுந்து அமர்ந்திட அவனை பார்த்துக்கொண்டே படுத்திருந்தவள் கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்தது.
“யார் சொல்லணும், நான் தான் பாக்குறேனே. கிரிக்கெட் பிளேயர்ஸ் வைப், கேர்ள் ப்ரிண்ட்ஸ், ஏன் யவ்னிகா கூட மார்டானா தானே இருந்தாங்க. நான் ஜீன்ஸ், குர்தா தாண்டி எதுவும் போட மாட்டிக்கிறேன்னு உங்களுக்கு கோவமா?”
படுத்திருந்தவள் விழி நீர் ஒரு விழி தாண்டி அவன் நாசி தொட்டு மற்றொரு கன்னம் வரை வாய்ந்தோட, அப்படியே கண்ணை மூடி முகத்தை தலையணையில் புதைத்துக்கொண்டாள்.
தனித்திருக்கும் நேரமெல்லாம் இதை பற்றி தானே சிந்தித்து தன்னையே தாழ்த்திக்கொண்டாள். அவனிடம் இதைப்பற்றி பேசவும் தயக்கம். திருமணத்தை ஏன் வெளியில் கூற தயங்குகிறான், பிடிக்கவில்லை எனவும் கணித்துவிட முடியாது.
இயல்பாக பேசுகிறான், ஆசையாக பார்க்கிறான், குழந்தையாக தாங்குகிறான். இருந்தும் வெளியே உறவை காட்ட தயக்கம் இதுவாக தான் இருக்குமோ என்கிற சந்தேகம் மெல்ல உருமாறி வலுவாக உருப்பெற்றது.
வேதனையில் கரையும் மனைவியை இலகுவாக தன்னுடைய மடிக்கு மாற்றியவன் அவளுடைய கண்ணீரை மென்மையாக துடைத்தவன் முகம் எல்லாம் வேதனை பரவி கிடந்தது .
“எப்போ இருந்து உனக்கு இப்டி ஒரு எண்ணம் ஆரூ?” பதில் சொல்ல முடியவில்லை அவளால்.
திருமணம் ஆன நாளில் இருந்தே இதே வருத்தம் என கூறி அவனையும் வாட வைக்கவா முடியும்?
“அப்போ ரொம்ப நாள் இருந்துருக்கு” அவளை படித்தவன் தானே கூற தேம்பியது பெண்.
“அழுகாத ஆரூ. உனக்கு என் மேல எவ்ளோ நம்பிக்கை இருக்குன்னு இதை விட நீ தெளிவா சொல்ல வேண்டியதில்லை”
பதறினாள், “ஐயோ நாராயணா அப்டி இல்ல”
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.