தொடர்ந்து வந்தவண்ணமிருந்த அழைப்புகளை பற்களை கடித்து எடுக்காமல் வெறித்து அமர்ந்திருந்தார் ராகவ். அவர் எதிரில் பயத்தில் கையை பிசைந்த வாக்கிலே மதி அமர்ந்திருக்க, அவர்கள் புதல்வன் சித்தார்த்துக்கு தான் என்ன செய்வதென புரியவில்லை.
அஸ்வினுக்கு அத்தனை முறை அழைத்தாயிற்று, எடுக்காமல் பிடிவாதம் பிடிக்கிறான்.
திருமணத்திற்கு முன்பென்றால் ராகவ் நடவடிக்கையே வேறு, இப்பொழுது மருமகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
“மருமக எங்க?”
“தூங்கிட்டு இருக்கா ப்பா” என்றான் சித்தார்த்.
“நான் வேணும்னா அவளை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போகவா?”
“எவ்ளோ நேரம் மதி உண்மைய மறைக்க முடியும்? தெரிஞ்சு தானே ஆகணும். தெரியட்டும்” என்றார் ராகவ் கோவமாக.
“அஸ்வின் மேல தப்பிருக்காது ப்பா. இது என்ன அபீஷியல் நியூஸா இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க” தந்தை கோவத்தின் அளவு சிறிதும் பொருத்தமற்றது என தான் தோன்றியது.
“என் பையனை பத்தி எனக்கு தெரியாதாடா? அவன் அம்மாக்காக கல்யாணம் பண்ணாலும் அவனுக்காக மட்டும் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கான். அப்டிப்பட்டவன் இந்த மாதிரி சின்ன பேச்சுக்கு கூட இடம் குடுக்க கூடாதுனு கோவம்” கோவம் அடங்காமல் தன்னுடைய தொடையில் கைகளை கொண்டு குத்துக்கொண்டே பேசினார்.
“இதுக்கு தான் விஷயத்தை வெளிய சொல்லி ஒரு பங்க்ஷன் வச்சிடலாம்னு தலைப்பாடா அடிச்சிக்குட்டேன். அடங்குறானா? எந்த விசியத்துலையும் என் பேச்சை கேக்குறதே இல்ல”
“நம்பிக்கை இருக்குறவர் ஏன் இப்டி பொலம்பணுமாம்?” மதி வாய்க்குள்ளேயே முணுமுணுக்க அமைதியாக இருந்த அந்த அறையில் அவர் பேசியது ராகவுக்கு கேட்காமலா போகும்?
“நம்பிக்கை மனசுல மட்டும் இருந்தா போதும்ல? இப்போ பாரு வர்ற ஒட்டுமொத்த போன் கால்ஸ்க்கும் நான் தான் பதில் சொல்லணும், என் பையன் அப்டி இல்ல இப்டி இல்லனு”
“அதுக்குன்னு இந்த சில்லறை நியூஸ்க்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் குடுக்காதிங்க”
“டேய் உன் அண்ணன் தான் இப்போ இந்தியா ஹாட் நியூஸ். வந்துட்டான் பேச” மகனிடம் காய்ந்தார்.
“மேட்ச் நெஸ்ட் வீக் தானே மாமா ஸ்டார்ட் ஆகுது அதுக்குள்ள அவர் எப்படி ஹாட் நியூஸ் ஆனார்?”
திடீரென கேட்ட மருமகளின் குரலில் ராகவ் கண்களை மூடி திறக்க, சித்தார்த் தலையில் அடித்துக்கொண்டான், “இது ஒரு அரை வேக்காடு” என்று.
“டேய்” அன்னை தந்தை இருவரும் ஒருங்கே மகனை முறைத்தனர். அவர்களை பொறுத்தவரை ஆரோஹி அந்த வீட்டிற்கு காண கிடைக்காத பொக்கிஷம், வீட்டிற்கே செல்ல மகள்.
“உன் புருஷன் ஒரு வகைல உயிரை வாங்குனா நீ இன்னொரு வகைல எங்க உயிரை வாங்கு”
சலித்துக்கொண்டாலும் அவள் பின்னே செல்ல தான் செய்தான் அந்த நண்பன். சச்சரவாக இருந்தது சமையலறை சிறிது நேரம்.
கூறியதை போலவே சில நிமிடங்களில் அனைவருக்கும் சூடாக தேநீரை பரிமாறினாள்.
“பரவால்ல ஏதோ போடுற தான். என்ன கொஞ்சம் கசக்குது” சித்தார்த் அவளிடமிருந்து அடியை வாங்கிக்கொண்டே உண்மையை மொழிந்தான்.
“இதுக்காகவே லஞ்ச் உனக்கு என் கைல இருந்து தான்” மகனை முறைத்தவர் மனைவிக்கு கண் அசைத்தார் ராகவ்.
ஆரோஹி கையை பிடித்து அவள் அருகே அமர்ந்த மதி மெல்ல தயக்கத்தோடே பேச துவங்கினார், “நான் இப்ப உன்கிட்ட ஒன்னு சொல்ல போறேன், நிதானமா யோசிச்சு இப்டி நடந்துருக்குமா, அது உண்மையா என்னனு நீயே யோசிச்சு ரியாக்ட் பண்ணனும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும்…”
அன்னையிடம் இருந்த பொறுமை அங்கிருந்த இரண்டு இளசுகளுக்கு இல்லை, ஆரோஹிக்கு அவர் பேசுவதில் ஏதோ ரகசியம் இருப்பது போல் ஆர்வம் தூள் பறக்க துவங்கியது.
அவளது இந்த ஆர்வம் கூட நல்லதல்ல என்பதை உணர்ந்த சித்தார்த் வேகமாக அன்னையை நிறுத்தினான்.
“சொல்ல வேண்டிய கல்யாண விஷயத்தையே இதோ மருமகனு ஒடைச்சிங்க, இதுக்கு ஏன் இப்டி சுத்தி வளைச்சு பேசுறீங்க” கைபேசியை எடுத்து ஆரோஹி முன்பு வைத்தான்.
“நேத்து நீ என்கிட்ட கேட்ட அதே டவுட்ட இன்னைக்கு மீடியா கேட்ருக்கு, புதுசா ஒரு பிரச்சனை. ஆனா இந்த நியூஸ் எல்லாம் யவ்னிகா ட்ரஸ்டட் பீப்பிள்ஸ் சொன்ன நியூஸ்னு சொல்றாங்க”
தொடுதிரையில் பதிந்த ஆரோஹியின் கண்கள் அச்செய்தியை உள்வாங்கிய வியப்பில் அவள் கண் எல்லாம் குளம் கட்டி கன்னம் சிவந்து போனது வேதனையில். விரல்கள் நடுங்கினாலும் செய்தியினை தொடர்ந்து படித்தவள் அழுகை அதிகமானது.
“ஆரோஹி காம் டவுன்”
“ரோஹி, நல்லா யோசிடா. எல்லாரும் ஒரே விஷயத்தை பத்தி பேசியிருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கு. நீ அழுகாத”
மாமனார் மருமகள் இருவரும் பெண்ணை சமாதானப்படுத்த முயற்சிக்க வேகமாக இரு கன்னத்தையும் துடைத்து சிரிக்க முயன்றாள். வீட்டிலுள்ளவர்களுக்காக மூளை யோசித்தாலும் மனம் கேட்க வேண்டுமே, நிற்கவே இல்லை கண்ணீர்.
இந்த செய்தியை எல்லாம் அவள் சிறிதும் எதிர்பார்த்திராத ஒன்று. அஸ்வினை பற்றி பேசியதோடு நில்லாமல் சித்தார்த் பற்றியும் அவன் சில நாட்கள் அதிகம் வெளியில் ஒரு பெண்ணோடு தென்படுவதாகவும் பல செய்திகள்.
அவர்கள் காதலர்கள், உறவில் இருப்பவர்கள் என பல வதந்திகள் வேறு. துடித்து போனாள் பெண். இதழ் கடித்து விழுங்கிய அழுகை எல்லாம் விசும்பலாய் உருமாறியது.
சகோதரனாய், நண்பனாய் நினைத்தவனோடு சேர்த்து பேச கூடாததெல்லாம் பேசி உறவையே கொச்சைப்படுத்துகிறார்களே. சில புகைப்படத்தில் ஆரோஹியின் முகம் ஒரு பக்கம் நன்றாகவே தெரிந்தது.
அதன் பிறகு தான் சித்தார்த் அவளது முக மாற்றத்தை கவனித்து கைபேசியை வாங்கி பார்க்க, இது அவர்களை சம்மந்தப்படுத்தி வந்த செய்தி என புரிந்து உடனே கைபேசியை வாங்கிக்கொண்டான்.
இந்த செய்திகள் நேற்று இரவில் இவர்கள் வெளியே சென்று வந்ததிலிருந்து பரவ துவங்கியது.
சித்தார்த் அஸ்வினின் சகோதரனாகவும், தொழில் துறையில் உள்ள அழகும் அறிவும்மிக்க இளைஞனாகவும் ஊடங்கங்களுக்கு அதிகமாகவே பழக்கப்பட்டவன், அதன் தாக்கம் தான் அவன் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் இவர்களின் ஆர்வமும் ஆனது.
இதற்கு அவன் பழக்கப்பட்டிருந்தாலும் அந்த செய்தி அவளை எவ்வகையில் தாக்கும் என்பதே அவன் பயந்த ஒன்று. அவளுக்கு தெரிய கூடாதென தான் முதலில் அஸ்வின் சார்ந்த செய்தியை வைக்க, தொடர்ந்து படித்தவளுக்கு அவளை பற்றிய செய்தியும் வர நொறுங்கி தான் போனாள்.
“இதை யார் உன்ன பாக்க சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றவனுக்கே அந்த வார்த்தை ஆறுதல் வழங்கவில்லை, “ம்மா… அவள அழுக வேணாம்னு சொல்லுங்க”
“நாங்க சும்மா தான்த்தை வெளிய போவோம், அவங்க ஏன் இப்டி எல்லாம் சொல்றாங்க?” அவர் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு பிதற்றினாள்.
மதிக்கோ ஒன்றும் புரியவில்லை, அஸ்வினை பற்றிய தகவல்களை மட்டுமே கேட்டு ராகவ், மதி தம்பதி கோவத்தில் இருக்க இந்த தகவல் அவர்களுக்கு புதிது. விசயம் தெரியாமல் அவளிடமும் பேச முடியாமலும் சித்தார்த்தை பார்க்க இவர்கள் இருவரும் நேற்று இரவு வெளியே சென்ற புகைப்படம் ஒன்று இருந்ததை பார்க்கவும் புரிந்துவிட்டது.
ஆரோஹிக்கோ அவர் மௌனம் மேலும் ஒரு அடியாக விழுந்தது, “மாமா, ஐ ஸ்வேர் நாங்க சும்மா வெளிய சாப்பிட போனோம், இல்ல இல்ல அடிக்கடி உங்ககிட்ட பொய் சொல்லிட்டு போயிருக்கோம் அத்தை”
அவள் வாயை அடைத்து, “ரோஹி இதெல்லாம் நீ எதுக்கு என்கிட்ட சொல்லணும் என் பசங்கள பத்தி எனக்கு தெரியும், இதெல்லாம் ஒரு விஷயமா எடுத்துக்குட்டு அழுவியா?” அதட்டினாள் தான் இவள் அமைதியாவாள் என சற்று குரலை உயர்த்தினார்.
ஆனாலும் அவள் மனம் ஆறவில்லை, “அஸ்வின் என்ன எதுவும் தப்பா நினைப்பாரா அத்தை? அதுனால தான் காலைல நான் கால் பண்ணப்ப அவர் எடுக்கலயா? சித்து உன் அண்ணாகிட்ட சொல்லேன் இதெல்லாம் பொய்னு” கண்கள் சுருங்க இறைஞ்சினாள் சித்துவிடம்.
“அண்ணின்னு கூட பாக்க மாட்டேன் ரோஹி அறைஞ்சிடுவேன் இப்டி எல்லாம் பேசுனா. என் அண்ணனுக்கு தெரியும் அவன் தம்பி பதியும் அவன் வைப் பத்தியும். இந்த மாதிரி சில…” சிகையை அழுத்தமாக கோதி கோவத்தை அடக்கினான்.
“சித்தார்த் ரூம் போ” மகனின் கோவம் உணர்ந்து ராகவ் அவனை அப்புறப்படுத்த முயல மகனோ திமிறினான் இன்னும்.
“ரூம்க்கு போகல வெளிய போறேன். வேலை ஒன்னு இருக்கு” சிலிர்த்துக்கொண்டு நின்றான்.
“சொன்னதை செய், நான் பாத்துக்குறேன்” தந்தை கோவம் உணர்ந்து ஆரோஹியை பார்த்தான்.
இரு ஆண்களின் கோவத்தை கண்டு சிறு குழந்தை போல் விழி விரித்து அமைதியாக அமர்ந்திருந்தாள் அவன் அன்னையின் கையை இறுக்கமாக பிடித்து.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.