“காரணமே இல்லாம அழுதனு தெரிஞ்சது கொன்னுடுவேன்” அவளை மிரட்டி பார்க்க, அவன் மிரட்டியது அவளுக்கோ சிரிப்பை வரவழைக்க அழுகையோடு சிரித்துவிட்டாள்.
அவளது அந்த மெல்லிய சிரிப்பை பார்த்ததும் தான் சித்தார்த்துக்கு உயிரே வந்தது போல் இருந்தது. இங்கு ஒரு பெண்ணை சமாதானப்படுத்தியாயிற்று, இன்னொரு பெண்?
இவள் பேசியே கொள்பவள் என்றால் அங்கு அவள் பேசாமலே மெல்ல மெல்ல உயிரை வேரோடு அறுப்பாள். இவ்விடயம் அவளுக்கு தெரியவே கூடாதென மனம் வேண்டியது. சித்தார்த் சென்றவுடன் ஆரோஹியிடம் தெளிவாக நிலவரத்தை எடுத்துரைத்தார் ராகவ்.
“சொசைட்டில நாலு பொதுமக்களுக்கு தெரியிற நிலைமைக்கு வந்த அப்றம் இந்த மாதிரி மீடியா, சோசியல் மீடியா, கிசுகிசு எல்லாம் ரொம்ப சாதாரணம். சில நேரம் உண்மை வெளி வரும், சில நேரம் நம்மளையே உடைக்கிற மாதிரி போலியான தகவல் வரும்.
உண்மைக்கு எப்படி ரியாக்ட் பண்ணாம போறோமோ அதே மாதிரி இதையும் அமைதியா கடக்குறது தான் புத்திசாலித்தனம். இதுக்கெல்லாம் நம்மளோட பீலிங்ஸ், நேரத்தை போட்டு வேஸ்ட் பண்றது நம்மளோட வாழ்க்கைக்கு நாமளே செய்வினை வந்ததுக்கு சமம்”
“உன் மாமா சொல்ற மாதிரி நாங்க நிறையா பாத்தாச்சு ரோஹி. ஏன் இவர் வேற ரிலேஷன் வச்சிருக்காருனு கூட கொஞ்ச வருஷம் முன்னாடி சொன்னாங்க. ஆனா பாரு இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்னு எனக்கு தானே தெரியும், இவருக்கு நான் வாழ்க்கை கொடுத்ததே அதிசயம். இதுல இன்னொரு பொண்ணு தானா வந்து விழுமா சொல்லு?”
அவளை தேற்றும் சாக்கில் கணவனை ஓரக்கண்ணால் சீண்டினார் மதி. இருவரின் காதல் விளையாட்டிலும் பேச்சிலும் ஆரோஹி முகத்தில் சோக ரேகை மெல்ல மறைந்து சிரிப்பு மலர்ந்தது.
“எங்களை விடு, நீயே சொல்லு அஸ்வின் பத்தின நியூஸ் பாத்து உனக்கு அவன் மேல சந்தேகம் வந்துச்சா?” அவள் வேகமாக இல்லை என தலையை ஆட்டினாள்.
“ம்ம். இவ்ளோ தான். இது உனக்கான ஒரு சின்ன எக்ஸாமா கூட எடுத்துக்கலாம். இனி இது மாதிரியோ இதை விட அதிகமாவோ உன்ன பத்தி, அஸ்வின் பத்தி பேசுவாங்க.
இப்போ செஞ்சியே அஸ்வின் மேல நம்பிக்கை வச்சு கோவத்தை காட்டாம, அது மாதிரி எல்லாத்தையும் உடைக்கிற அளவு உங்களுக்குள்ள நம்பிக்கை ஆணித்தரமா வேணும்” மெல்ல தெரிந்திருந்தது அவள் மனம்.
ஆனாலும் முகத்தின் வாட்டம் மட்டுப்படவில்லை, “அவங்க பேசுறது தப்பு தானே த்தை, சித்துவ நான் ஒரு பிரதர், ஃப்ரண்ட் மாதிரி நினைச்சு வெளிய போனேன். இத்தனைக்கும் அவன் மனசுல வேற…”
உண்மையை உரைக்க வந்தவள் சட்டென சுதாரித்துவிட்டு, “வேற பொண்ணு இருந்தா அவங்க ரிலேஷன் என்னாகும்னு யோசிக்க மாட்டாங்களா, ஏன் சித்தார்த் அவர் ஃப்ரண்ட் கூட எங்கையும் வெளிய போனாலும் அதுக்கு தப்பான அர்த்தம் தானா? எழுதுரத்துல உண்மை, பொய், அவங்க மனசு எதையும் பாக்க மாட்டாங்களா?” மனந்தங்களாய் கேட்டவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
“எந்த காலத்துல ம்மா இருக்க? ரெண்டு பேர் மனசை கொன்னு, ஆயிரம் பேர் கவனத்தை திருப்புனா தான் ஒருத்தன் குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். அந்த ஒரு வேலை சாப்பாடு போட அவன் இந்த மாதிரி எத்தனை மனசை வேணாலும் கொல்லுவான். அவன் பொழப்பு அப்டி. பணம் பத்தும் செய்யும், நாம தான் எல்லாத்தையும் கடந்து வரணும்”
கணவன் கூறியதை ஆமோதித்தார் மதியும், “நேத்து போன மாதிரியே சித்து கூட தாராளமா போ. உண்மை வெளிய தெரிய வர்ற நேரம் தானா வரும். அவங்க மாற மாட்டாங்க, அதே மாதிரி உன்னையும் நீ இவங்களுக்காக மாதிக்காத. எப்பவும் கேர் ப்ரீயா இருக்க ஆரோஹி தான் எங்களுக்கு வேணும்”
ஒருவழியாக ஆரோஹியை சமாதானம் செய்து இரண்டே நாட்களில் அவளை ஓரளவிற்கு மாற்றிவிட்டனர். ஓரளவிற்கு தான்.
பேச வேண்டியவன் பேசாமல், ஆறுதல் தராமல் ஓரளவிற்கு மேல் மனம் சமன்பட மறுத்தது. எதிலும் லயித்து போகாமல், ஒரே தோழியின் வளைகாப்பு, அவள் ஆவலாய் எதிர்பார்த்த ஒரு விசேஷம்.
கண் முன்னே அனைவரும் அதற்கு தான் ஆயத்தமாகியிருக்க, ஒரு உடையை கூட தேர்ந்தெடுக்காமல் கடமையே என அங்கும் இங்கும் காரணமில்லாமல் அலைந்தது அவள் கால்கள்.
அவள் கால்கள் வீட்டினை அளந்தால், அவள் மனமோ ஆயிரம் வினாவை தேடி தனதாக்கி பிதற்றியது.
உரியவன் குரல் கேட்டே பல நாள் ஆகியது. விழாவிற்கும் வரப்போவதில்லை என்பது சித்தார்த் மூலம் வந்த தூது. எதிர்பார்த்தே இருந்ததால் பேதைக்கு ஏமாற்றம் இல்லை, மாறாக ஏக்கம் அதிகம் கூடியது.
இன்னும் ஒரு மாதம் ஆகும் அவன் வீடு வர, அவன் ஸ்பரிசம் உணர முப்பது நாட்களுக்கு மேல் ஆகும். அவன் பார்வை தீண்ட பல நூறு மணி நேரங்கள் ஆகும். பித்தானவள் சிந்தை எல்லாம் அவனை மட்டுமே தேடியது.
கைபேசியை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அழைத்து பேசிவிடலாமா என தாவும் மனதினை பிடித்து வைக்க வேண்டியுள்ளது. “உன் அண்ணன் பேசுனாரா, பேசுனா என்கிட்ட தரியா?”
அவளும் கேட்டு சோர்ந்து போனது தான் மிச்சம். சகோதரனுக்கு கூட அழைப்பு வருவது நின்றுவிட்டது. இந்த ஒரு வாரத்தில் இருந்த மாற்றம் அஸ்வினை பற்றி பரவிய செய்தி போலியானதென்பது மட்டுமே.
அதில் கூட மகிழ்ச்சியடைய அவள் மனம் விரும்பவில்லை. இதை காரணம் வைத்தாவது அவனோடு சண்டையிடலாமே என்கிற அல்ப மகிழ்ச்சிக்கு கூட ஆயுள் குறைவு தான் போல.
அழைப்பில்லா அவள் குரலில் பல்லாயிரம் ரூபத்தில் கானாவில் வந்து இம்சித்தான் அவள் நாராயணன். கனவில் பேசி, கனவில் சிணுங்கி, கனவில் அணைத்து, கனவிலே விடைபெற்றான். பித்தானவள் தான் அந்த கனவிலிருந்து வெளிவராமல் நிஜத்திலும் உலா வர வேண்டியிருந்தது.
வளைகாப்பு விழா நாளும் விடிந்து வீடே பரபரப்பாக இருந்தது.
பதினோரு வகையான கலவை சாதம், குலுங்க குலுங்க சிரிக்கும் கண்ணாடி வளையல்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என வகை வகையாக வயதிற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு பரிசு காகிதங்களில் ஒளிந்திருக்கும் பரிசு பொருட்கள், பஞ்சமே இல்லாமல் நாவோடு மனதையும் இனிக்க வைக்கும் பலகாரங்கள் என வீடே தேவலோக மயம் தான்.
‘யாரென்றே தெரியாத பெண்ணிற்கு எதற்கு இந்த பகட்டு விழா?’ கூட்டத்தில் அதிகம் பேசப்பட்ட கேள்விக்கு விடை கொடுக்க பெரியவர்கள் மாறனை மாப்பிள்ளையாகி அனைவர் முன்பும் அழைக்க, திவ்யாவை சித்தார்த் அவ்விடமே கேட்கும்படி அத்தனை அக்கா போட்டான். மூட வைத்தது அனைவரின் வாயினை.
சுவாரஸ்யமே இல்லாமல் சாதாரண ஒரு சுடிதாரோடு அமர்ந்திருந்த மருமகள் கையில் கனமான புடவை ஒன்றை வைத்தார் மதி.
“அத்தை மூட் இல்ல” என்றாள்.
“உன்ன இன்னைக்கு முக்கியமான சொந்தத்துக்கு அறிமுகப்படுத்த போறேன். இவ்ளோ சிம்பிளா வந்து நிப்பியா?”
“பரவால்ல போங்க இதுவே போதும்” என்றுவிட்டாள்.
திருமண நாளில் கூட சாதாரண சுடிதார் அணிந்து அவசரத்தில் சிறு முக அலங்காரம் கூட அவளுக்கில்லை. இன்று தான் எடுத்து கொடுத்த பட்டுபுடவையில் முகம் எல்லாம் பூரிப்போடு கழுத்து நிறைய நகை என பார்க்கவே மனம் நிறைந்து போனது மாறனுக்கு.
விழியோரம் துளிர்த்த கண்ணீரை கூட வேகமாக துடைத்துக்கொண்டான். சித்தார்த்தின் கேமரா ஆரோஹி வசமானது. தோழியை விதவிதமான கோணைங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்தவளை சீண்டவே சித்தார்த் இழுத்து சென்று தோட்டத்தில் தன்னை வைத்து புகைப்படம் எடுக்க கூறி நச்சரித்துவிட்டான்.
அவனிடமிருந்து தப்பித்து ஓடியவளை, “இந்த ஒரே ஒரு பிக். இதுக்கு மேல கேக்க மாட்டேன்”
“உயிரை வாங்குறடா” சலித்துக்கொண்டே திரும்பியவள் காமெராவை நேரே வைத்து கண்களை சுருக்கி வியூ பைண்டர் என்னும் காட்சிப்பேழை வழியாக பார்க்க, அங்கு சித்தார்த் பதிலாக கொள்ளைகொள்ளும் சிரித்த முகத்தோடு நின்றிருந்தான்.
உறைந்த அவள் உடல் கண்ணை கூட சுருக்கத்திலிருந்து விடுவிக்கவில்லை. அவனென்று வந்துவிட்டால் அவனை மனதில் சுமக்கும் அவள் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறாள் அவளுக்கு.
அவள் கனவில் பார்த்து அனுதினமும் பிரமித்த தோற்றம் இன்று கண் முன்னே.
அதே கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கண்களில் ஆயிரம் ஆசையை தாங்கி நிற்கிறது. அவனே தன்னை வந்து இறுக்கமாக அணைத்தது போல் உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை.
தெம்பை வரவழைத்து காமெராவை கீழிறக்கியவள் கைகளில் நெகிழ துவங்கிய காமெராவை வேகமாக சித்தார்த் பிடித்துக்கொண்டான்.
“ஏன்டா உங்க காதலுக்கு என்னோட காமெராவை ஏன்டா பலியாக்குறிங்க” அவன் புலம்பலை கேட்கும் நிலை இருவருக்கும் இல்லை.
இனங்கிய மனம் சாரலில் நனைந்து குளிரில் நடுங்கியது. வலுவிழந்து அவனை பார்த்தவளிடம் புருவம் உயர்த்தி என்ன என்றான்.
சொக்கு போடி போட்டு மயக்குவதெல்லாம் என்ன மாயை, ஒரே கண்ணசைவில் உடலின் செயல்பாட்டையே மாற்றுவதல்லவோ மாயை, காதல் மாயை. அவன் கேள்வியில் இத்தனை நேரம் இருந்தது போல் காட்டிக்கொண்ட தைரியமெல்லாம் இடிந்து விழுந்தது.
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான்.
ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்.
அஸ்வினுக்கோ புரியவில்லை அவளது செயல், கூச்சம் கொள்கிறாளோ என எண்ணி ஏன் என்றான் தலையை அசைத்தே சந்தேகமாக. இதழ் துடிக்க கைகளை அகலமாக விரித்து காட்டினாள்.
அவளது அன்பினில் உடல் சிலிர்த்தவன் தலை குனிந்து இதழ் கடித்து சிரித்து, அதே வெட்கத்தோடு சுற்றம் பார்த்தான்.
வீட்டினுள் இருந்த அதே கூட்டம் இல்லை என்றாலும் குறைந்தது பத்து பேர் இருந்தனர், அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மேல் தான், என்ன செய்கின்றனர் என்கிற ஒரு வினோத வேடிக்கை எண்ணம்.
இவர்களுக்காக அவனது பட்டாம்பூச்சியின் கட்டளையை செய்யாமல் செல்வது பிறவு பிழையாகிவிடுமே.
குறுகி விரித்த கையை அகலமாக விரித்து அவளை பார்த்து தன்னோடு அடைக்கலமாக்க தலை அசைத்து அழைத்தான்.
சிகரத்திலிருந்த நீரானது மேடு பள்ளம் பாராது சேர வேண்டிய மண்ணை சேர்வது போல் இறுகிய பாறையாகிய அவன் மார்பினில் சட்டென வந்து சேர்ந்தாள்.
பூவை எதிர்பார்த்தவனுக்கு பூ மழையே பெய்தது போல் அத்தனை பிரகாசம் முகத்தினில்.
அத்தனை கெடுபுடி அவனுக்கு அங்கு இந்திய அணியினில். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையை சந்திக்க நேர்வது போல் கடந்த ஒரு வாரமாக யவ்னிகா வித விதமாக அவளும் அவள் தந்தையும் அவனை தினம் வந்து சந்தித்து அவன் மனதினை மாற்ற முயற்சிக்க, அசைந்துகொடுக்கவே இல்லை அவன்.
கோவத்தை மொத்தம் காட்டி அவர்கள் பரப்பிய செய்தியை ஒரே நாளில் அவர்களே பரப்பிய செய்தியை திரும்பப்பெற செய்தான்.
இது தான் இனி அவன் வாழ்க்கை, இவள் தான் அவன் மனைவி என்பதையும் தெள்ளத்தெளிவாக உண்மையை உரைத்து வந்தான்.
இதன் நடுவே சித்தார்த், ஆரோஹி பற்றிய செய்தி அவனை சென்று சேர சில நாட்கள் பிடித்தது.
விஷயம் அறிந்த உடனே மேலிடத்தில் சண்டையிட்டு மனைவியை காண அவளுக்காகவே மட்டும் வந்துவிட்டான்.
அவன் எதிர்பார்த்தது போல் அவள் முகத்தில் ஒளியே இல்லை. பெரிய வாதம் கண்ணில் தென்பட்டது, உடல் மெலிந்து கன்னங்கள் சதைப்பற்றை இழந்து காணப்பட்டது.
“ஏன் போன் பண்ணல?” என அவள் கேட்க,
“நீ ஏன்டா இவ்ளோ டல்லா இருக்க?” பதில் கேள்வி வைத்தான் அவன்.
“என் மேல கோவமா இருக்கீங்களா நாராயணா?”
மனைவியின் கேள்வியில் அவளை தன்னை விட்டு பிரித்து நிறுத்தினான், “இப்பயே பதில் சொல்லனுமா?”
அவளிடம் கேட்டுக்கொண்டே தன்னுடைய கைக்குட்டையை காற்சட்டையிலிருந்து எடுத்து அவள் கண்ணீரை துடைத்தான். அதனை வாங்கி கண்களை அழுத்தமாக துடைத்தவள், ‘ம்ம்’ என பதில் வேண்டி நின்றாள்.
“எனக்கு பதில் சொல்லுற மூட் இல்ல. இது என்ன டிரஸ்? வேற மாத்து” என்றான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.