திவ்யாவிடம் திருமணத்தைப் பற்றி பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. இந்த ஒரு மாதத்தில் மதிவர்தினி திவ்யா தம்பதியினரை சிறிதும் வற்புறுத்தவில்லை.
மாறன் தன்னால் இயன்ற மட்டும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி தீவிரமாக விசாரித்து விட்டான். எதிலும் சிறு பிசுறு கூட தட்டவில்லை. குடும்பம் எல்லாம் சரி, ஆனால் அஸ்வின்? அந்த பெரிய கேள்வி தொக்கி நிற்க, முடிவெடுக்க முடியாமல் தவித்து திண்டாடியவர்கள் முன்னே வந்து நின்றான் சித்தார்த்.
“வீட்டுக்கு வாங்க க்கா, மாப்பிள்ளை பாக்குற மாதிரி வர வேணாம். ஒரு அம்மா வீட்டுக்கு வர்ற பொண்ணு மாதிரி வாங்க. ப்ளீஸ்…”
தன்னிடம் ஒரு சகோதரன் போல் கெஞ்சி நிற்கும் சிறியவன் மனதை நோகடிக்க விரும்பாமல் இருவரும் சம்மதிக்க, அஸ்வின் இல்லம் வந்தனர். விசாலமான அந்த பெரிய வீட்டில், அந்த தம்பதிக்கு ஏகபோக வரவேற்பு.
மாலை சிற்றுண்டியை முடித்து கிளம்புகிறேன் என நின்றவர்களை, மதிவர்தினி விடவே இல்லை. இரவு உணவை முடித்துதான் செல்ல வேண்டும் என்கிற ஆணை வந்துவிட, அவரது பாசப்பிணைப்பு நிறுத்திவிட்டது.
கணவன் காதில், “பொண்ணு தரணும்னு வேணும்னே பாசமா பாத்துக்குறாங்களோ?” கிசுகிசுத்த மனைவியிடம், தானும் அதே தான் நினைக்கிறேன் என்பதை, சிரிப்பை அடக்க துடிக்கும் அவன் இதழ்கள் கூறியது.
“ஏமாற வேணாம்…” மீண்டும் அவளே கூறிக் கொள்ள, சிறிது நேரத்தில் அஸ்வின் தந்தை ராகவ் வந்தார்.
மனைவியின் ஆசையை அறிந்திருந்தவர் வந்தவர்களிடம் நலம் விசாரித்து, மாறன் வேலை பற்றிய தகவல்களை அறிந்து பொதுவான பேச்சுகளைத் தொடர, நேரம் ரெக்கை கட்டி பறந்தது. அவள் நினைத்ததை விட அந்த குடும்பம் அதிக வித்தியாசமாக இருந்தது.
சித்தார்த், ராகவ் இருவரும் அவர்கள் குடும்ப தொழிலை தான் பார்க்கின்றனர். இருவரும் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியது. மகனை தந்தை கேலி செய்வதும் தந்தையை மகன் கேலி செய்வதும், ஒருவர் பேசியதில் தவறு இருந்தால் மற்றவர் அதனை திருத்த, அதற்கு ஒரு சிறு பாச சண்டை என அந்த குடும்பம் அழகிய ஓவியமாக தெரிந்தது.
அதில் எந்தவித நடிப்போ, ஏமாற்றமோ தெரியவில்லை திவ்யாவுக்கு. மனம் ஒரு பக்கம் அந்த குடும்பத்தின் அமைதியை, தன்னுடைய வாழ்க்கையிலும் எதிர்பார்த்தது.
எது புரிந்ததோ, இல்லையோ? தாங்கள் எப்படி ஆரோஹிக்கு தகவலை எடுத்து செல்லவில்லையோ, அதேதான் இங்கும். அஸ்வினிடமும் இன்னும் திருமண பேச்சு போகவில்லை. ஆக, தங்களது சமதத்திற்காக தான் காத்திருக்கின்றனர். இதனை யோசித்த திவ்யா, எழுந்து சமையலறையில் இருந்த மதிவர்தினியிடம் சென்று, நேரடியாகவே மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டாள்.
“ஆரோஹி ரெண்டு வாரமா ஒரு ஆன்ட்டி கூட ஃப்ரண்ட் ஆகிட்டேன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிட்டு இருக்கா. அது நீங்க தான? அப்புறம், இந்த கவனிப்பு, உபசரிப்பு எல்லாம்…”
தயங்கி அவள் நிறுத்த அதனைப் புரிந்துகொண்ட மதி, அவள் கையில் தான் வெட்டிய ஆப்பிளை வைத்து, “சந்தேகமே வேணாம் திவ்யா, அது நான்தான். இந்த உபசரிப்பு ஆரோஹிய என் வீட்டுக்கு நீ அனுப்ப மாட்டனு சொன்னாலும் நடக்கும். இப்ப நாங்க உன்னை இங்க வர சொன்ன ரீசன், உன்னை அட்ராக்ட் பண்ணவோ, என் குடும்பம் எப்படி சந்தோசமா இருக்கு பார்னு காட்டவோ இல்ல.
ஆரோஹி சொன்னா, உங்க ரெண்டு பேர் அப்பா, அம்மா வீடும் உன் கூட பேசுறதில்லன்னு. இந்த மாதிரி நேரத்துல மனசு ஏக்கம் வர கூடாதேனு தான் வர சொன்னேன். இந்த சம்மந்தம் நடக்குதோ, இல்லையோ… நீ இதை உன் அப்பா, அம்மா வீடு மாதிரி உரிமையா நினைச்சு வரலாம்.” திவ்யாவுக்கு கண்கள் கலங்கி, வார்த்தை தடுமாற, முயன்று தன்னை கட்டுப்படுத்தி வரவேற்பறை வந்தமர்ந்து விட்டாள்.
முதலில் பழத்தை கொடுத்து உண்ண கூறியவர், அடுத்து பழச்சாற்றை எடுத்து வந்துவிட்டார். ருசியானதை எதிர்பார்த்த நாவானது அந்த இனிப்பு குறைவான, புளிப்பு சுவை உடைய உணவை எடுக்க மறுத்துவிட்டது.
ஆனாலும் அவரிடம் அழுத்தி வேண்டாம் என கூற முடியாதே என்கிற ஒரே காரணத்தால், மிடறு மிடறாக குடித்துக் கொண்டிருந்த வேளை, அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நின்றான் அஸ்வின் நாராயண்.
கையில் இரண்டு பெரிய ட்ராவல் பேக், தோளில் ஒரு கிட் பேக் வைத்து உள்ளே வந்தவனை, அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை.
புதிதாக தெரிந்த மனிதர்களிடம் முகம் கோணாமல், “வாங்க!” மனதார அழைத்தவன், எப்பொழுதும் தான் வந்தால் தன்னை பூரிப்போடு அணைக்கும் அன்னை, இன்று கண்களை விழித்து விழித்து பார்ப்பதை கண்கள் சுருங்க பார்த்தவன், அவர் அருகிலே சென்று அமர்ந்து விட்டான்.
அதோடு தன்னையே குறுகுறு என பார்க்கும் அனைவரின் பார்வையும் வித்தியாசமாக தெரிந்தது ஆணுக்கு.
“நீ என்ன அஸ்வின், இங்க பண்ற?”
துளியும் மகிழ்ச்சி இல்லாத அன்னையின் கேள்வி புதல்வனை வாட்டியது, “என்ன மதி, ஏன்டா வந்தனு கேக்குற மாதிரி இருக்கு…” குற்றம் சாட்டி, தன்னுடைய வருத்தத்தை மெல்லிய குரலில் கேட்டான்.
“அவ எப்படி அஸ்வின் அப்டி சொல்லுவா? நீ இங்க வர்றதா சொல்லவே இல்லையே, அதான் எல்லாருக்கும் ஷாக்!”
“வீட்டுல கொஞ்சம் ஆல்ட்ரேஷன்ஸ் பண்ண சொல்லிருக்கேன் ப்பா. ஒரு மாசம் மேல ஆகும், அதுவரை இங்க இருக்க வந்தேன். அதுக்கு தான் இந்த மதி ஏன் வந்தனு கேக்குறாங்க…” என்றவன் மாறனைப் பார்த்து,
“அப்பா கூட பிஸ்னஸ் பண்றிங்களா?” என கேட்டான், அவர்கள் இருவரும் யார் என்று தெரிந்துகொள்ளும் நோக்கோடு.
காரணம், வந்த கணம் முதல் அவர்கள் இருவரது பார்வையும், தன்னை அணு அணுவாக துளைத்துக் கொண்டிருந்தது அஸ்வினுக்கே சங்கடமானது.
மறுபக்கம் மாறனுக்கு என்ன பதில் கூறவென்று தெரியவில்லை, “அவங்க எனக்கு தெரிஞ்சவங்க அஸ்வின்.” தானே முந்தி பதில் கொடுத்தார் மதிவர்தினி.
“ஓ… ஓகே ஓகே… மா, நான் திங்ஸ் எல்லாம் ரூம்ல வச்சிட்டு வர்றேன்.”
அவன் கண்ணை விட்டு மறைந்ததும் உடனே சரணடைந்துவிட்டார் மதி, திவ்யாவிடம், “இவன் இப்டி திடீர்னு வருவான்னு தெரியாதும்மா.”
“பரவால்ல ஆன்ட்டி, நீங்க சொன்ன மாதிரி சாதாரண அஸ்வினை, இன்னைக்கு பாக்க எங்களுக்கு வாய்ப்பு கெடைச்சதா நினைச்சுக்குவோம்.”
மிக சாதாரணமாக பேசும் திவ்யாவைப் பார்க்க அனைவருக்கும் வியப்பு, முக்கியமாக அவள் கணவனுக்கு. உன்னிப்பாக அவள் முகத்தைப் பார்த்தவன் விழிகள் விரிந்தது, தான் கண்ட புரிதலில். மெல்லிய அன்பின் ரேகை சிரிப்பாய் மாறி கண்கள் விண்மீனாய் ஜொலித்தது.
கணவனின் பார்வை தன் மேல் மாறாமல் விழுவதை பார்த்தவள், கண் அசைத்து மாறனை அருகே அழைக்க, எழுந்து வந்தவனிடம், “என்னோட ஆரோஹிக்கு ஒரு நல்ல…” அவள் பார்வை இனிப்பை ருசி பார்க்க கொடுக்க, அதற்கு தந்தை, மகன் இருவரும் அந்த கிண்ணத்தினுள் கையை விட்டு, சிறுபிள்ளை போல் சண்டையிட்டு நின்றனர்.
“நல்ல குடும்பம் கிடைக்கும்னு தோனுது…”
“இல்ல ம்மா…”
தடுத்து பேச வந்த கணவன் கையைப் பிடித்து, “ப்ளீஸ் மாறா… நம்ம பக்கம் இருந்து எதுவும் பண்ண வேணாம். நாம கெளம்புறப்போ அவங்ககிட்ட பேசிட்டு போகலாமா, எனக்காக…?”
“போடி… என்ன ஆஃப் பண்ண ஆவூனா என் கையை கெட்டியா புடிச்சிட்டு…”
சலிப்போடு நகர்ந்தவனின் கையை மீண்டும் இழுத்து, “பதில் சொல்லிட்டு போங்க மாறா.” மெல்லிய குரலில் கெஞ்சினாள்.
“நம்ம ஆரோஹி வாழ போற வீட்டை பாக்க வேணாம்?” கண்களை சுற்றி சுழல விட்டவள் பார்வையில், ராகவிடம் சித்தார்த், கைப்பேசியில் ஏதோ காட்டிக் கொண்டிருக்க,யாரும் தங்களை பார்க்கவில்லை என உணர்ந்து
அந்த நொடியைப் பயன்படுத்தி பற்றியிருந்த மாறனின் உள்ளங்கையில், முத்தம் ஒன்றை கொடுத்து அவன் கையை விடுவித்தாள்.
“ரொம்ப கொடும படுத்துறடி…” முணுமுணுத்தவன் வேகமாக சித்தார்த்திடம், “சித்தார்த் வீட்டை சுத்தி காமிக்கிறேன்னு சொன்ன?” சமையலறையில் இருந்து இவர்களைப் பார்த்த மதிக்கே அதிர்ச்சி தான்.
சித்தார்த்தை இழுத்து மாறன் அங்கிருந்து நகர, ராகவ் தானும் மனைவியைக் காண சென்றுவிட்டார்.
தானும் அவர்களோடு கலந்திட தான் ஆசை, ஆனால் உடல் அசைந்து கொடுக்கவில்லை.
சாய்வாக அமர்ந்தவள் தனக்கு முன்னிருந்த ஒரு நாளிதழை எடுத்து ஆராய துவங்க, அந்த விலையுயர்ந்த சோபா கூட அவளுக்கு வசதியாக இல்லை. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தது போலும்.
“ஆர் யூ ஆல்ரைட்?” இதமான குரல் சற்று தொலைவில் கேட்கவும், தலையை உயர்த்தி பார்த்தவள் அஸ்வினை எதிர்பார்க்கவில்லை.
அவளது அவஸ்தையை படி இறங்கி வரும் பொழுதே கவனித்தவன், அருகில் யாரும் இல்லாததைப் பார்த்து சற்று வேகத்தை கூட்டி விரைந்தான். கண்கள் மொத்தமும் உண்மையான இரக்கம் கொண்டு, தான் முன் பின் பேசாத பெண் என்றும் பாராமல் கேட்டு வைத்தவனை, அசையாது பார்த்த திவ்யா தலையை ஆட்டினாள், “குட்!” என்று.
ஆனால் அஸ்வின் மனதிற்கு அவள் பதில் திருப்தியைக் கொடுக்கவில்லை.
“ப்ளீஸ்… ஃபீல் ப்ரீ. அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க.” என்றான் இரண்டே அடி தூரத்தில் இருந்த விருந்தினர் அறையை கை காட்டி.
அவள் முகத்தில் தெரிந்த வேதனை அத்தகையது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகு வலி ஒரு பக்கம், கால்களில் வீக்கம் ஒரு பக்கம் என சோர்ந்து தான் இருந்தாள்.
“இல்ல… இல்ல… இது எனக்கு நார்மல் தான், கொஞ்ச நேரத்துல சரியாகிடும். ஜஸ்ட் நார்மல் கால் வலி தான்.” அவனுக்கு புரிய வைக்க முயன்றாள் திவ்யா.
சிறிதும் யோசிக்கவில்லை, அங்கிருந்த ஒரு ஓட்டோமேனை நகர்த்தி அவள் கால்களுக்கு வாகாக வைத்து, “கால் நீட்டிக்கோங்க.” என்றான்.
அவனது இச்செயலில் விழி விரிய விக்கித்து நின்றாள் திவ்யா. எத்தனை பெரிய மனிதன், சிறிதும் செருக்கு இல்லாமல் இந்த வேலையை செய்கிறான். அதுவும் ஒரு மூன்றாம் நபருக்கு. ஒரே செயலில் அவளை தன்னுடைய குணத்தால் கட்டி போட்டு விட்டான் அந்த ஆடவன்.
நன்றி நவிழ்ந்து காலை அவள் நீட்டி அமர்ந்த பிறகு சற்று நிம்மதியாக இருந்தது. அன்னையைத் தேடி சமையலறை சென்றவன், “ம்மா, கொஞ்சம் ஹாட் வாட்டர் வச்சு தரீங்களா?”
அன்னை சரி எனவும் தன்னறை சென்றவன் ஐஸ் பேக் எடுத்து வந்து, சூடு நீரை அதில் நிரப்பி நேராக திவ்யாவிடம் சென்று நீட்டினான். என்னவென்று விழித்தவளிடம், “ஹாட் வாட்டர் பேக், யூஸ் பண்ணிக்கோங்க.” மறுக்காமல் அவள் வாங்கிய பிறகே அகன்றான்.
அவன் சென்ற சில நிமிடங்களில் மாறன் அங்கு வந்துவிட, அவன் பின்னால் வந்த அஸ்வின் மேல் தான் இருவரது கவனமும் அதிகமிருந்தது. இரவு உணவை முடித்த அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகவை அழைத்து வெளியே வந்த மாறனைத் தொடர்ந்து அமைதியாக மதிவர்தினியும் வந்தார்.
வெளியே வந்து ஐந்து நிமிடங்கள் மேல் ஆகியும் பேச தயங்கி நின்ற மாறனிடம், “முடிவை இப்ப எடுக்க உங்களை வர சொல்லல தம்பி.” விளக்கினார் ராகவ்.
“அது ஒன்னுமில்ல சார், அரசல் புரசலா அஸ்வின் ஒரு பொண்ணு லவ் பண்றார்னு டெய்லி பாத்துட்டே தான் இருக்கோம். லாஸ்ட் வீக் கூட, மும்பைல மேட்ச் முடிச்சிட்டு அந்த பொண்ணை அவர் மீட் பண்ணதா சொல்றாங்க. இப்டி இருக்க ஒருத்தர் எப்படி ஆரோஹிய கல்யாணம் பண்ணுவார்?” அவன் கேள்வியில் மறைந்திருந்த பொருளை, அந்த இரண்டு பெரியவர்களும் உடனே கண்டு கொண்டனர்.
“அப்போ உங்களுக்கு சரியா?”
தலை தாழ்த்தி தலையை ஆட்டியவன், “திவ்யாக்கு அஸ்வினை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா அதே மாதிரி அவரோட காதலை பிரிக்கிறதா நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றா. ப்ளீஸ்… அவர் சம்மதம் இருந்தா மட்டும் சொல்லுங்க, நாங்களும் ஆரோஹிக்கிட்ட பேசுறோம்.”
மாறன் கூறுவதும் சரியாக பட, அவனிடம் பேச வந்த மதிவர்தினியை தடுத்துவிட்டார். நேரம் ஆவதால் மனைவியை அழைத்து செல்லவிருந்த இருவரையும், இருசக்கர வாகனத்தில் வேண்டாம் என தங்கள் காரினை கொடுத்து அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.
மனம் நிறைந்து வந்த திவ்யாவுக்கு அன்று இரவு தான், ஆரோஹியின் எதிர்காலம் பற்றிய கவலை இல்லாது நிம்மதியாக உறங்கினாள்.
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்று வீட்டில் அனைவரும் இருந்த நேரம் அஸ்வினிடம், “உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கோம் அஸ்வின்.” என மதி தகவல் கொடுத்தது தான் தாமதம், உடனே குதிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இதுக்கு தான் இந்த வீட்டு பக்கமே எட்டி பாக்காம இருந்தேன். உங்க வேலைய காமிச்சிட்டீங்க பாருங்க, ப்பா என்ன ப்பா இது?” அன்னையிடம் எகிறியவன், தந்தையிடம் திரும்பி நியாயம் கேட்டு நின்றான்.
“அவளை எதுக்கு அஸ்வின் கத்துற? ஆமா பொண்ணு பாத்துருக்கோம், நீயே சொல்லு என்ன பண்ணலாம்?” அவனது ஆத்திரத்தை எதிர்பார்த்தே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, நிதானமாகவே அவனை கையாள முடிவெடுத்து அமைதியாக பேசினார்.
அஸ்வின், “என்ன பண்ணலாம்னா? அது உங்க பிரச்சனை. எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், ஏன் அவங்க சொல்லிருப்பாங்களே யவ்னிகாவ நான் டேட் பண்றத…”
ராகவ், “எஸ், நீ டேட் பண்ற, அவ்ளோ தான். சோ அதை, அந்த பொண்ணையும் மறந்துடு. நாங்க பாத்திருக்குற பொண்ணை பாரு, உனக்கு புடிக்கும்.”
சித்தார்த், “ஆமாடா அஸ்வின் நான் போட்டோ பாத்தேன், அழகா இருக்காங்க. எனக்கு என்னவோ எங்க வேவ் லென்த் நல்லா இருக்கும்னு தோனுது.” ஆரோஹியின் சேட்டைகளை, கேட்டு தெரிந்து கொண்ட சித்தார்த்துக்கு பல நாட்களாகவே இதே எண்ணம் தான்.
சகோதரனை அதட்டி தந்தையிடம் திரும்பினான், “நீங்க பண்றது உங்களுக்கே சரியா இருக்காப்பா? முப்பது வருஷம் முன்னாடி, நீங்களே லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவிங்களாம். ஆனா நான் இப்ப எனக்கு புடிச்ச லைஃப்ப சூஸ் பண்ண கூடாதா?”
“ஏன்டா, நான் எப்படிப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணி வந்துருக்கேன். அவளுக்கும் நீ பாத்திருக்க பொண்ணுக்கும் எவ்ளோ வித்தியாசம்? என்ன மதி ம்மா?”
மனைவியை இந்த நிலையிலும் காதல் பொங்க பார்க்கும் தந்தை மேல், எப்பொழுதும் எழும் அதே பொறாமை புதல்வனுக்கு இப்பொழுதுமே எழத்தான் செய்தது. “ராகவ்!” மதியின் அதட்டலில் அசடு வழிந்தார் ராகவ்.
“யவ்னி ரொம்ப நல்ல பொண்ணு ப்பா. அம்மா மாதிரி தான்…”
ராகவ், “உடனே அம்மா கார்ட் எடுத்துட்டு வர கூடாது அஸ்வின். நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்னா, நம்ம குடும்பத்துக்கு அவ செட் ஆவா, என்னை நல்ல பாத்துக்குவா, நாள பின்ன எங்களுக்கு நடுல பெருசா எந்த மனஸ்தாபமும் வராதுனு, எனக்கும் என் குடும்பத்துக்கும் நம்பிக்கை இருந்துச்சு.
நான் அந்த நம்பிக்கையை அவங்களுக்கு குடுத்தேன். நீ எங்களுக்கு அப்டி என்னடா செஞ்சிருக்க?”
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.