விடிந்தும் விடியாத காலை பொழுதில் தூக்கம் கலையாத நேரத்தில், கையில் தேநீரோடு உறக்கம் பாதி, களைப்பு பாதியாய் இருந்தவரை அஸ்வின் வேப்பிலை அடித்து எழுப்பி விட்டிருந்தான்.
பதறிய மதிவர்தினியின் முகம் பார்த்தே சகோதரனின் கோவத்தை அறிந்துகொண்ட சித்தார்த், அன்னையை மட்டும் அழைத்து வந்துவிட்டான் அஸ்வின் இல்லத்திற்கு.
வந்தவர்கள் நேராக அஸ்வின் அறைக்கு செல்ல, “இங்க இருக்கேன்.” அடிக்குரலில் சீறியவனைப் பார்த்தவர்கள், அவன் நிலை கண்டு அரண்டுதான் போயினர்.
உறக்கத்தின் காரணமா இல்லை, கோவத்தின் காரணமா என தெரியாத அளவிற்கு சிவந்த விழிகள், கலைந்த சிகை, இரவு படுக்கைக்கு அவன் உடுத்தும் அரைக் கால்சட்டை, கையில்லாத பனியன் என பார்ப்பதற்கே பயந்து வந்தது மதிக்கு.
“செத்தார் என்னை பெற்ற அன்னை…” அன்னை காதில் முணுமுணுத்து சகோதரன் நோக்கி நடந்தான் சித்தார்த்.
“ஏன்டா அங்க இருக்க? அண்ணி எங்க?” கேள்வி கேட்டவாறே வந்தவனை சினம் கொண்டு பார்த்த அஸ்வின்,
சித்தார்த், ஆரோஹியைக் கண்ட நொடி சகோதரனை வெளியே தள்ளி கதவை அமைதியாக மூடினான்.
படபடப்போடு மகனின் பேச்சை ஜீரணிக்க முயன்றவர் எண்ணங்கள், சில நொடிகளில் எங்கெங்கோ பயணித்து சோர்ந்து போனது.
“என்ன தம்பி இது பேச்சு?” சுணங்கிப் போன குரலில் அன்னை கேட்டதும், புதல்வனை வாட்டிதான் பார்த்தது.
“தப்பா எதுவும் சொல்லல ம்மா. ஆனா கொஞ்ச நாள் அவளை உங்ககூட வச்சுக்கோங்க, நானே வந்து கூட்டிட்டு போய்க்கிறேன்.”
“உனக்கு தான் மேட்ச் எதுவும் இல்லையே அஸ்வின்.” அஸ்வின் கிரிக்கெட்டை மனதில் நினைத்து பேசுகிறானோ என சித்தார்த் கேள்வி கேட்க, ‘இல்லை’ என தலையை ஆட்டினான் அஸ்வின்.
“அவளை என்னால பாத்துக்க முடியல ம்மா. வந்து ரெண்டு நாள் கூட ஆகல, பாருங்க அதுக்குள்ள காய்ச்சல்ல படுக்க வச்சிட்டேன். இதுதான் என்னோட பொறுப்புணர்ச்சி, என்னை நம்பி வந்த பொண்ணுக்கு நான் தர்ற முதல் கிஃப்ட்.” இயலாமையில் அந்த கதவின் மீதே சாய்ந்து நின்றவன், ஆரோஹிக்கு காய்ச்சல் வந்ததைக் கூறினான்.
“இதுக்கு ஏன்டா இவ்ளோ சீன் போடுற?”
வேகமாக பேசிய சித்தார்த், “நான் கூட என்னமோ ஏதோனு…” தன்னை தீயாய் முறைக்கும் மதியையும் அஸ்வினையும் பார்த்து, அப்படியே பேச்சை நிறுத்திவிட்டான்.
இருவரையும் அப்படியே விட்டு அஸ்வின் கீழே இறங்கி செல்ல, சித்தார்த் தலையில் கொட்டி, “ஏன்டா நீ?” என்றார் கோவமாக.
“ம்மா, இது சாதாரண ஃபீவர். பயத்துல வந்தது தான?”
மதி, “டேய் அவன் மாறுனாலும் உன் வாய் சும்மா விடாது போல…”
சித்தார்த்தை தள்ளிவிட்டு ஆரோஹியை சென்று பார்த்து, அவளது உடல் வெப்பத்தை சோதித்து கீழே வந்த நேரம், அஸ்வின் தோட்டத்திலிருந்து பின்வாயில் வழியே, சமையலறை செல்வது தெரிந்து அங்கு தானும் சென்றார் மதிவர்தினி.
அன்னையை கவனிக்காமல் தான் சில நிமிடங்களுக்கு முன்பு பறித்து வந்த காய்கறிகளை நறுக்கத் துவங்கினான். அஸ்வினின் கோவத்தைப் புரிந்தவர் அமைதியாக அனைவருக்குமான காலை தேநீரை தயாரித்து, அஸ்வின் அருகில் வைத்தவர் சித்தார்த் கையில் அவனுக்கான தேநீரைக் கொடுத்து, மீண்டும் பெரிய மகன் அருகே சென்று நின்றார்.
இரவு தூக்கமின்மையால் அவதிப்பட்டிருந்த அஸ்வின் உடலுக்கும் அந்த தேநீர் தேவைப்பட, யோசனை இல்லாமல் எடுத்து அமைதியாக அருந்தினான்.
“எனக்கு பொறுப்பு இருக்கு ம்மா. அந்த பொறுப்பு இதுதான்னு புரிஞ்சுக்குற பக்குவம் கூட இல்லனு தோனுது. முன்ன பின்ன தெரியாத இடம், புரியாத சொந்தம். இப்படிப்பட்ட இடத்துல அவளோட அத்தியாவசிய தேவை எதுனு தெரிஞ்சு செய்யாம இருந்தாலும், அவளோட பயம் என்னனு தெரிஞ்சும் லூசு மாதிரி பண்ணி வச்சிருக்கேன்.
நைட் படுக்க போகுற நேரம் கூட, பாருங்க கை இன்னும் நடுங்குதுனு காமிச்ச பொண்ண, கிண்டல் பண்ணிட்டு நான் தூங்கிட்டேன். கொஞ்சம் யோசிச்சு நிதானமா இருந்தா அப்போவே அவளை கவனிச்சிருக்கலாம்ல?” நிதானம் இல்லாமல் பேசும் மகனை அவன் கை பிடித்து நிறுத்தினார் மதி.
“தெரிஞ்சு நீ பண்ணல அஸ்வின். ஏதோ எதேச்சையா நடந்துருச்சு, அவளுக்கு இப்டி நடக்கும்னு வேணும்னே பண்ணுவியா? ஏன்டா தேவை இல்லாம ரொம்ப யோசிக்கிற?”
“யோசிக்காம? அவ நைட் வந்து நின்னதை நீங்க பாக்கணும், முகம் எல்லாம் கருத்து, கண்ணை கூட தொறக்க முடியாம இருந்தா. இதெல்லாம் தெரியாம நான் நிம்மதியா தூங்கிட்டு இருந்துருக்கேன்.
நீங்க அவளை கூட்டிட்டு போங்க. நான் மென்டலி எல்லாத்துக்கும் என்னை ரெடி பண்ணிட்டு அவளை கூட்டிட்டு போய்க்கிறேன்.”
மதி, “டேய், அதுக்கு சேர்த்து தான் நைட் தூங்காம பாத்துக்கிட்டல, அப்டியும் மனசு ஆறலைனா இன்னும் ரெண்டு நாள் நீ தூங்காத. அதுக்குன்னு உன் பொண்டாட்டிய நாங்க பாத்துக்கணுமா?”
அவள் ஏதோ செய்யட்டுமென அப்படியே சென்றவன் உறுதி, அன்னையாய் மதியும் அறிந்தே இருக்க, முதல் முறை இவன் திருமணத்தில் நிதானித்திருக்கலாம் என்கிற எண்ணம் வந்தது மதிக்கு.
அன்னையிடம் பேசிவிட்டு அறைக்கு சென்ற அஸ்வின் மனம், ஒரு நிலையில்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்க, இவ்விடம் இந்நேரத்தில் அவனுக்கு வசதியான இருப்பிடமாக தோன்றாமல் போக உடனே குளித்து தயாரானான்.
கண்ணில் பட்ட அனைத்து கிரிக்கெட் தொடர்பான பொருட்களை எல்லாம், எடுத்து தன்னுடைய கிட் பேகில் போட்டு கீழே இறங்கினான். தன்னை தொடரும் பார்வைகளை உணர்ந்தவன் நிற்காது நடக்க, மகனின் வேகத்தை உணர்ந்தவராக மதி, அஸ்வினை அழைத்துப் பார்த்தார்.
“அஸ்வின் சாப்பிட்டு போகலாம்.”
நிற்கவே இல்லை மகன், “அஸ்வின்!” தன் பங்கிற்கு சித்தார்த் அழைத்தும் அசையவில்லை, அந்த கல்நெஞ்சுகாரனின் மனம்.
“கிரிக்கெட்டரே…” அவ்வளவு தான், பள்ளத்தில் விழுந்து சிக்கிய பந்தாக நின்றுவிட்டான் அஸ்வின் நாராயண்.
கழுத்து சுளுக்கும் வேகத்தில் திரும்பியவன் கண்கள் அவள் பூ முகத்தை, அணு அணுவாக ஆராய்ந்து அவளது நலனை மட்டுமே தேடியது. நேற்றை விட இன்று நிறையவே தெளிந்திருந்தது முகம். எழுந்த உடனே சிகையை எல்லாம் சீராக வாரி முகத்தைக்கூட, குளிர்ந்த நீரில் அலம்பியிருப்பாள் போல், சிவந்து காணப்பட்டது.
“கோல்ட் வாட்டர்ல ஃபேஸ் வாஷ் பண்ணியா?” கோவமாக கேட்டவன் அவளை நோக்கி வந்திருக்க, பெண் அசையவே இல்லை.
“எத்தனை பேர் உங்கள கூப்பிட்டுட்டே இருக்காங்க, என்னனு திரும்பி கேக்க மாட்டிங்களா?” கோவமாக அவள் தன்னை மீண்டும் கேள்வி கேட்டது அஸ்வினுக்கு திருப்தியாக இல்லை.
அவள் கேள்வியை உதாசினம் செய்தவன் அன்னை, சகோதரன் என யாரையும் பார்க்கவில்லை. கை நீட்டி அவள் நெற்றியை நோக்கி செல்ல, திடுக்கிட்டு ஆரோஹி கண் மூடி பின்னால் சாய அவனுக்கு கோவம் வந்துவிட்டது.
“ப்ச்! என்ன இப்ப உனக்கு? ஃபீவர் எப்படி இருக்குன்னு செக் பண்ண கூடாதா நான்?” அவனது அச்செயலில் எந்த தவறெண்ணமும் இல்லாவிட்டாலும், அவளுள் ஒரு கூச்சம். அவளை சுற்றி இருந்தவர்களின் பார்வை என ஆரோஹிக்கு சங்கடம் தான்.
“நல்லா இருக்கேன்.” கண் திறந்து அவனுக்கு பதில் கொடுத்தவள், சங்கடத்தோடு கண்களை சுழற்றி சுற்றத்தை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
“அதனால என்ன?” அலட்சியமான புறக்கணிப்போடு அவளை நெருங்கி, அவள் உடலின் சூட்டை தான் சோதித்த பிறகே நிம்மதியடைந்தான்.
“பரவால்ல, ஆனா அதுக்குன்னு ஒடனே உன் வேலைய பாத்துருக்க? கோல்ட் வாட்டர்லயா இந்த மாதிரி நேரத்துல முகம் கழுவணும்? மறுபடியும் காய்ச்சல் வந்தா ஹாஸ்பிடல்ல பெட் ரெஸ்ட்னு சொல்லிட்டு தான் நேத்து டாக்டர் கெளம்புனது. என்ன ரெடியா?”
அஸ்வின், “தூங்க யார் அங்க கூட்டிட்டு போவாங்க? கைல நரம்பு ஊசி போட்டு பாட்டில் பாட்டிலா க்ளுகோஸ் ஏத்துவாங்க மேடம்.”
வேண்டவே வேண்டாம் என பாவமாய் தலையை ஆட்டியவள், “இது சாதாரண ஃபீவர் தான் நாராயணா…” மெதுவாக மொழிந்தாள். “இந்த நாராயணாவுக்காகவே ஹாஸ்பிடல் தான் உனக்கு.”
உள்ளுக்குள் அவள் சகஜமானதில் நிம்மதியும் அவன் பெயர் அழைப்பில் சிரிப்பும், ஒருங்கே அமைதியைத் தந்தாலும் கேலியை மட்டுமே அவளிடம் வைத்தான்.
இருவருக்கும் அவர்கள் உலகில் அவர்களைத் தவிர யாவரும் மறந்து போயினர்.
“ரோஹி உனக்கு காபி போடவா இல்ல, சாப்புடுறீயா ம்மா?” மதி இருவரின் இடையில் இடையிட்டு கேட்கவும் தான், இருவரும் அவரைப் பார்த்தனர்.
மகன் மேல் பதிந்திருந்த அவரது பார்வையின் கேலி, அவன் செய்யவிருந்த காரியத்தை நினைவுபடுத்தியது. அதோடு நிறுத்தாமல், “நீ கெளம்பு அஸ்வின், நேரமாச்சுல…” என்றார் அவனை விரட்டும் எண்ணத்தோடு.
“அத்தை நல்லா ஸ்ட்ராங்கா ஒரு காபி, முடிஞ்சா பெரிய மக்ல போட்டு தாங்க.”
“ம்மா நில்லுங்க.” அன்னையை நிறுத்தி, “ரெண்டு நாளைக்கு லைட்டான சாப்பாடு தான் அவளுக்கு குடுக்கணும்.”
மதி, “அதெல்லாம் முடியாது, நான் என்னவோ குடுக்குறேன். என் மருமக, என் பொறுப்புனு தான நீ சொன்ன? அப்போ என் இஷ்டபடியே விடணும், நடுல வந்து இது தப்பு, அது சரினு கிளாஸ் எடுக்குற வேலை இங்க இருக்க கூடாது. கெளம்புடா நீ…”
கறாராக மகனிடம் பேசி செல்லும் அன்னையை வியப்போடு அஸ்வின் பார்க்க சித்தார்த், ஆரோஹிக்கு சிரிப்பு.
அவள் சிரிப்பதைப் பார்த்த அஸ்வின் மனைவியை முறைக்க, “நான் காபி போட ஆன்ட்டிகிட்ட கிளாஸ் போறேன். உங்க காபி ரொம்பவே சுமார்.” மெதுவாக நழுவி அந்த மீன் ஓடியது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.